தமிழீழத்தின் தேசியத்
திருநாளான மாவீரர் தினம் நெருங்கி வருகி
ன்ற இவ்வேளையில், அத்தினத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டாடி, வணங்கி
மாவீரர்களைப் போற்றுகின்ற செயற்பாடுகளைத் தமிழீழ மக்களும், புலம்பெயர்
வாழ் தமிழீழ மக்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர்,
கடந்த ஆண்டு தன்னுடைய மாவீரர் நாள் பேருரையின்போது,
'சிங்களப்
பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு
பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து
வைத்திருக்க்pன்றது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று,
சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென்று, இன்றைய நாளில் நாம்
தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்"
என்று
தெரிவித்திருந்தார். தமிழீழத் தனியரசை நோக்கிய போராட்டப் பாதை கடந்த
ஆண்டு சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் சுருக்கமாகத்
தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
எதிரான பொய்ப் பரப்புரை ஒன்றை சிங்கள அரசும், குறிப்பிட்ட உலக
நாடுகளும் கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்திருந்தன. 'சிங்கள அரசு
நல்லதொரு சமாதானத் தீர்வைத் தரும். தமிழீழ மக்களுக்கு இது நல்லதொரு
வாய்ப்பு" - என்ற கருத்தியல் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பிழையான
கருத்தியல் ஊடாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, தவறான
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அதாவது 'நல்லதொரு சமாதானத்
தீர்வையும், நல்லதொரு வாய்ப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறவிட்டு
நிற்கின்றார்கள்" - என்கின்ற குற்றச்சாட்டுத்தான் கடந்த ஆண்டின்
நிலைமையாக இருந்தது.
ஆனால் கடந்த ஓராண்டில், 'சிங்கள அரசின் சமாதானத் தீர்வு - தமிழ்
மக்களுக்கு நல்வாய்ப்பு" - என்ற கருத்தியல் ஒரு பொய்மை, அது ஒரு மாயை
என்ற விடயம் உலகிற்கு விளங்க வைக்கப்பட்டுள்ளது. 'சிங்கள அரசு ஒரு
பேரினவாத அரசு" என்பதும், 'அது சொல்வதெல்லாம் பொய்" என்பதும், 'அது
உண்மையில் சமாதானத் தீர்வைத் தராது என்பதும்" இன்று உலகிற்குத்
தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களும், மனித உரிமை
அமைப்புக்களும், வெளிநாட்டு அரசியல்வாதிகளும் இன்று இவ்வாறு
தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.
இங்கே ஒரு முக்கிய விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 'தமிழீழத்
தனியரசை நோக்கிய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரத்தோடு, முனைப்போடு
செயல்படுத்துகின்றோம்" என்ற கருத்தின் அர்த்த பரிமாணத்தை
விளங்கிக்கொண்டால், இந்த விடுதலைப் போராட்டம் எவ்வளவு சரியாக
நகர்த்திக் கொண்டு செல்லப்படுகின்றது என்பது புலனாகும்.
கடந்த ஓராண்டுக்
காலத்தில், சிறிலங்கா அரசு, மிகப் பாரிய ஆயுதக் கொள்வனவைச் செய்து, உலக
நாடுகள் பலவற்றின் நிதி உதவி, ஆயுத உதவி, நிபுணத்துவ உதவி என்பவற்றின்
உதவிகளோடு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப்
போராட்டத்தை முற்றாக நசுக்கி விடுகின்ற செயற்பாடுகளில் முழு மூச்சாக
இறங்கியிருந்தது.
இப்போதும் சிறிலங்கா அரசு
இதனைத்தான் செய்து வருகின்றது. எதிர்காலத்திலும் அது இதனைத்தான் செய்ய
முனையும்.
ஆனால், இவ்வளவிற்கும் அப்பால், இந்த விடுதலைப் போராட்டத்தை அடக்க
முடியாது, ஒடுக்க முடியாது என்பது தொடர்ந்தும் நிரூபிக்கப்பட்டு
வருகின்றது. சிங்களப் பேரினவாத அரசு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு
எதிராகப் பெரிய போரை நடாத்துகின்றது. கிழக்கைக் கட்டுப்படுத்திவிட்டு,
வடக்கையும் முழுமையாகக் கைப்பற்றி அழிக்கலாம் என்று சிங்கள அரசு
செயல்பட முனைந்த போதும், அதனால் நினைத்த மாதிரி செயல்பட முடியாமல்
உள்ளது. அநுராதபுரத்திலும், முகமாலையிலும் பாரிய இழப் புக்களைச் சிங்கள
அரசு சந்தித்து நிற்கின்றது.
'போர்" என்பது விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமேயாகும். போர்
மட்டும்தான் விடுதலைப் போராட்டம் என்று எண்ணுவது தவறானதாகும்! அதேபோல்
நிலங்களைத் தக்க வைப்பதன் மூலம், அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியைக்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் மட்டும்தான், ஒரு விடுதலைப்
போராட்டத்தை வளர்க்க முடியும் என்று எண்ணுவது ஒரு மாயையாகும்!
உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொண்டால், அங்கே தாலிபான்களை
முற்றாக அழித்து விட்டதாகவும், எல்லா நிலங்களையும் அவர்களிடமிருந்து
பறித்தெடுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மீண்டும் தாலிபான்கள்
ஏதோ ஒரு பகுதியில் நிலை கொண்டு போராடி வருகின்றார்கள். இப்போது இது ஒரு
பெரிய பிரச்சனையாக எழுந்து வருகின்றது. அடிப்படைப் பிரச்சனையைத்
தீர்க்காமல், அடக்கு முறையை மட்டும் கையாண்டால், மீண்டும் மீண்டும்
சிக்கல்கள் புதிய வடிவங்களில் எழுந்து கொண்டேயிருக்கும் என்பதற்கு
ஆப்கானிஸ்தான் பிரச்சனை ஓர் உதாரணமாகும்.
ஆகவே தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில், போரில் வெற்றி பெறுகின்ற
முக்கியத்திற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான
கருத்தியலில் வெற்றி பெறுவதும் மிக முக்கியமானதாகும். எம்மைப் பொறுத்த
வரையில், எமது போராட்டத்திற்கான கருத்தியல், கணிசமான அளவு இந்த
ஓராண்டுக் காலத்தில் பெற்றி பெற்றுள்ளது என்றுதான் கருதுகின்றோம்.
சிங்கள அரசு ஒரு பேரினவாத
அரசு என்பதும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை அது ஒரு போதும்
சமாதானப் பேச்சுக்கள் ஊடாகத் தீர்க்காது என்பதும், மனித உரிமை மீறல்கள்
மற்றும் இராணுவ நடவடிக்கைகள் ஊடாகத் தமிழ் மக்களை ஒடுக்கி,
அழிப்பதிலேயே சிங்கள அரசு முனைப்பாக இருக்கின்றது என்பதும், இன்று உலக
அரங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஊடாகத்தான் தமிழீழ விடுதலைப்
போராட்டத்திற்கான நியாயம் என்பது அதிக அளவில்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தான் கடந்த ஓராண்டு நிகழ்வுகள்
சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகக் கடந்த ஆண்டு, இந்த
வேளை இருந்த கருத்தியலுக்கு எதிராகவும், அதேவேளை போராட்டத்தை
நசுக்குவதற்காகச் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ
நடவடிக்கைகளுக்கு ஊடாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டு
நியாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்தது போல்,
தமிழீழ விடுதலைக்கான போராட்டம்- சுதந்திரத் தமிழீழத் தனியரசை
நிறுவுவதற்கான போராட்டம்- மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்
நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு, உலக மட்டத்தில் கருத்தியல்
ரீதியாக, இந்தத் தீவிரத்தன்மை, மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றது.
இதற்கான அறுவடை எப்போது என்பதைத் தமிழீழத் தேசியத் தலைவர்தான்
நிர்ணயிப்பார்.
சமீப காலமாகச் சிங்கள தேசத்தின் படுமோசமான எதிர்வினைகள் குறித்துப்
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் கவலையும், சஞ்சலமும் அடைந்து வருவதை நாம்
அறிகின்றோம். இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள
வேண்டும். எது வலுவாக இருக்கின்றதோ, அதற்கான எதிர்வினைதான் படுமோசமாக
இருக்கும். இன்று சிங்கள தேசத்தின் எதிர்வினைகள் இவ்வாறு படுமோசமாக
இருப்பதற்கான காரணம், விடுதலைப் போராட்டதிற்கான கருத்தியல் பலப்பட்டு
வருவதுதான்!.
தமிழீழ விடுதலைப் போராட்ட விடயத்தில், சிங்கள அரசு விடுதலைப் புலிகளைத்
திட்டுவதோடு மட்டும் நின்று விடவில்லை. சிங்கள அரசு இது சம்பந்தமாக அரச
சார்பற்ற நிறுவனங்களைத் திட்டுகின்றது. உலக நாடுகளைத் திட்டுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையையும் திட்டித் தீர்க்கின்றது. இவைகள்
தமிழர்களுக்கு ஆதரவாகப் பெரிதாக செயல்படாமல் இருக்கின்ற போதும், இவைகள்
மீது, சிங்களப் பேரினவாத அரசு கடும் கோபத்துடன் இருக்கின்றது. தமிழீழத்
தனியரசுக்கான கருத்தியல், உலக மட்டத்தில் வலுவடைந்து வருவதுதான்
சிறிலங்கா அரசின் இத்தகைய கோபத்திற்கும், எதிர்வினைகளுக்கும் காரணமாக
உள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான கருத்தியல் பலப்பட்டு வருகின்ற அதே
வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்தோடும் இருந்து
வருகின்றார்கள். விடுதலைப் புலிகள் புதிதாக வான்படை ஒன்றை
உருவாக்கியதானது, அவர்கள் தங்களது பலத்தைத் தக்க வைப்பதோடு, அதனை
மேலும் வலுப்படுத்திப் புதிய பரிமாணங்களை அடையும் ஆற்றல் உள்ளவர்கள்
என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
தேவை கருதித் தென் தமிழீழத்தில் தந்திரோபாயப் பின்நகர்வுகளை மேற்கொண்ட
போதும், அநுராதபுர விமானப் படைத்தளத் தாக்குதல், முகமாலைச் சண்டை
போன்றவை விடுதலைப் புலிகள் பலமாக இருப்பதைத்தான் காட்டுகின்றன.
பலவீனமாக இருந்தால் எதிரி அடித்துப் பிடித்துக்கொண்டே போயிருப்பான்.
பலம் என்பது நிலத்தைத் தக்க வைப்பதோ, தொடர்ந்து சண்டை பிடித்துக்
கொண்டு நிற்பதோ மட்டும் அல்ல! பலம் என்பது மனரீதியாக, உளவியல் ரீதியாக,
கொண்ட கொள்கையை விடாது, எப்போதும் எந்த வேளையிலும் போராடுவதற்குத்
தயாராக இருப்பதுதான்! மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்!
பலம் என்பது நிலம் இருக்கின்றதோ, இல்லையோ என்பதில் அல்ல! பலம் என்பது
உறுதியிலும், வீரத்திலும், பயமின்மையிலும்தான் இருக்கின்றது. இவ்வளவும்
தமிழீழ விடுதலைப் புலிகளிடமும், தமிழீழ மக்களிடமும் இருக்கின்றன.
ஆனால் -- -- --
புலம் பெயர் வாழ் தமிழர்களிடையே ஒரு சாரார் மட்டும் சற்று
விதிவிலக்காகாகப் பயம் கொண்டிருப்பது, மனதிற்கு வருத்தத்தை
அளிக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மனதளவில் மட்டும்
ஆதரவிருந்தால் போதாது. சொல்லில், செயலில் அந்த ஆதரவு தெரிய வேண்டும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் 'பயம்", 'பயம்" என்று சொல்லிக்கொண்டு
பதுங்கிக் கிடப்பது மட்டுமல்லாது, பயத்தை ஊக்குவிக்கின்ற
செயற்பாடுகளிலும் இறங்கி நிற்பதானது, துரோகத்தனத்திலும் கேவலமானதாகும்.
நாம் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டே வருகின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்து, வலுவுடன்
தீவிரப்படுத்தப்படுகின்ற போதுதான், அதற்கு எதிரான கடுமையான எதிர்
விளைவுகள் உருவாகும். அழுத்தங்கள், தடைகள், கைதுகள், சிறைகள் என்று
இந்த எதிர்வினைகள் கூடிக்கொண்டே போகும். தமிழீழ விடுதலைப் போராட்டம்
பலவீனமாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய எதிர்வினைகள் எதுவும் பெரிதாக
இருக்காது.
இங்கே எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி, ஒரு கேள்வியையும்
கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
எம்முடைய மக்களுக்கான, நியாயமான, சுதந்திரப் போராட்டத்திற்குப் பக்க
பலமாக, உறுதுணையாக நின்று அதனை மேலும் தீவிரப்படுத்துவதற்கான எமது
தார்மீகக் கடமையைச் செய்யப் போகின்றோமா அல்லது 'பயம்", 'பயம்" என்று
சொல்லிக் கொண்டு, விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்க வைக்கும் கேவலமான
துரோகத்தனத்திற்குத் துணை போகப் போகிறோமா?
பயம், பலவீனம், துரோகத்தனம்- என்ற இந்த மூன்று விடயங்களுக்கும் பொதுவான
ஓர் உதாரணமாகக் கருணாவை எடுத்துக் காட்டலாம்.
'கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைவன்" என்று தன்னைத்தானே அழைத்துக்
கொண்டு, 'தன்னுடைய மக்களைக் காப்பாற்றப் போகின்றேன், பெரிதாக ஏதோ
செய்து வெட்டிப் புடுங்கப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு நின்ற
கருணா, இன்று சாதித்ததுதான் என்ன?
கருணாவோடு முன்னர் சேர்ந்து இயங்கிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தை,
அவரை வைத்துக்கொண்டே சிறிலங்கா அரசாங்கம் உழுது தள்ளியது. எந்த
மக்களின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாரோ, அந்த மக்களைக்
கருணாவின் உதவியோடு சிறிலங்கா அரசு அடித்து விரட்டி அகதிகளாக்கியது.
இன்று அவர்களோ உண்ண
உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், உறங்க உறைவிடம் இல்லாமல் தங்களது
வாழ்க்கையையே பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கின்றார்கள். ஆனால் கருணாவோ
பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு, தனக்கும், தனது குடும்பத்திற்கும்
வெளிநாட்டில் அகதி அந்தஸ்து கேட்டுக் கொண்டு, கண்ணீர் வடித்துக் கொண்டு
நிற்கின்றார். பொது வாழ்க்கை என்று முழங்கிய கருணா, இன்று தன்னுடைய தனி
வாழ்வுக்காகத் தஞ்சம் தேடி அலைகின்றார்.
ஏனென்றால், கருணாவிற்குப் பயம்! தமிழரின் பொது எதிரியான சிங்கள அரசோடு
போராடப் பயம்! கருணாவிற்குப் பலமும் இல்லை. துணிவும் இல்லை.
போராடுவதற்குத் தேவையான உறுதியும் இல்லை. இன்று எஞ்சி நிற்பதெல்லாம்
அவருடைய துரோகம்தான்! அவருடைய பயம்தான்!
புலம்பெயர் வாழ் தமிழர்களாகிய நாம், எமது மக்களின் சுதந்திரப்
போராட்டத்திற்கு ஆதரவான எமது பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய வேளை
இதுவாகும்! இவற்றை நாம் சரியான முறையில் செய்ய வேண்டுமானால், இந்தப்
'பயம், சஞ்சலம்" போன்றவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும். பயம்
அழுத்தம், தடை, கைது, சிறை என்று நாம் எண்ணிக் கொண்டேயிருப்போமானால்,
விடுதலைப் பணி ஆற்ற முடியாது. இவற்றுற்குள்ளால் இருந்து, நாம்
நிமிர்ந்து எழ வேண்டும்.
எந்தச் சிங்கள அரசும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையைச் சமாதானப்
பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்க்காது என்பதும், எந்த ஒரு நியாயமான
தீர்வையும் அது தராது என்பதும் வெட்ட வெளிச்சமான, தெட்டத் தெளிவான
விடயமாகும். ஆயினும் கடந்த முறை சர்வதேசம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு,
உரிய மதிப்பளித்து, தமிழர் தலைமை பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது.
ஆனால் சர்வதேசம் வெளியில்
சட்டம், நீதி, நியாயம் என்று பேசிக் கொண்டு உள்@ர, இரகசியமாகச்
சமாதானத் தீர்வுக்கு எதிராக, தமிழீழ மக்களுக்கு எதிராக முரண் நிலையில்
நின்று செயற்பட்டது. கடந்த பேச்சு வார்த்தைகளால் தீர்வு காணப்பட
முடியாததற்கான நேரடிப் பொறுப்பையும், தார்மீகப் பொறுப்பையும் சர்வதேசமே
ஏற்க வேண்டும். சர்வதேச அரசுகள் நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை.
ஆகவே சர்வதேசத்தின் அரசியல்வாதிகள், அவர்களின் அரசுகள் ஆகியோரிடையே
மட்டும் பரப்புரை செய்வதற்கும் அப்பால், அந்த நாட்டு வெகுசன மக்கள்,
அவர்களுடைய ஊடகங்கள் ஊடாகவும், தமிழீழ ஆதரவுக்கான அடுத்த கட்டப்
பரப்புரை பெரிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே சில
மட்டங்களில், இவை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அடுத்த கட்டப்
பரிமாணத்திற்கு இவை நகர்ந்து செல்வதற்கான பாரிய செயற்பாடுகள் உடனே மேற்
கொள்ளப் படவேண்டும்.
இத்தகைய பரப்புரைச் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வழி ஒன்று
உண்டு. தேவையற்ற சஞ்சலத்தையும், பயத்தையும் புறம் தள்ளி விட்டு, புலம்
பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருமுகப்பட்டு,
ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். இந்த ஒருங்கிணைவின் ஊடாக, எமது
விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். போராடினால்தான்
நியாயம் கிடைக்கும்!.
ஆகவே அஞ்சற்க!
|