"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
மனித உரிமை ஆணையாளரின் வருகையால் விளைந்த,
மனித உரிமை மீறல்கள்15 October 2007
"...மேற்குலகத்தினூடாகத் தமக்கு ஏதேனும் பிரச்சனைகள், அழுத்தங்கள் என்று சிலவேளைகளில் வந்தால், தன்னுடைய(!) நாட்டின் கேந்திர ஸ்தானத்தை வைத்து, மேற்குலகிற்கு எதிரானவர்களோடு உறவாடுவதன் மூலம் இவர்களையும் எதிர்க்க முடியும் என்பதுவும் மகிந்தவின் கணிப்பு. இந்தக் கணிப்புக்களின் அடிப்படையில்தான் மகிந்த ராஜபக்ச செயல்படுகின்றார்...
...இப்போது தமிழினம் ஏதோ வலுவிழந்து விட்டது என்று சர்வதேசம் நினைத்துக் கொண்டு, மீண்டும் எம்மைக் கண்டு கொள்ளாமல் நிற்க முனைகின்றது.... புலம் பெயர் தமிழர்களாகிய நாம் ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைகின்றபோது, அரசுகளையும் திருப்புவதற்கான ஆற்றலும் நம்மிடையே இருப்பதை நாம் உணர்வோம்...."
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்களின் இலங்கை விஜயம், மிக நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கிப் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்து, முறையிட்டு, தமது கவலைகளைத் தெரிவிக்க முயன்ற பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், லூயிஸ் ஆர்பர் அம்மையாரை முறையாகச் சந்திக்க முடியாதவாறு பல தடைகளைச் சிறிலங்கா அரசு உருவாக்கியது.
கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மேற்கொண்ட விஜயங்களின்போது, பாரிய கெடுபிடி நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது. ஓர் இராணுவச் சர்வாதிகார நாட்டில் நடைபெறக் கூடிய அராஜகச் செயல்கள், லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின்போது, இலங்கையில் நடைபெற்றிருப்பதை ஊடகங்கள் வெளிக் கொண்டு வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயம் மற்றும் அதன் பின்னணி ஊடாகச் சில முக்கிய கருதுக்களை முன் வைத்துத் தர்க்கிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
மகிந்தவின் அரசும், அவருடைய கட்சியினரும், அவர்களோடு இணைந்துள்ள மற்றைய சிங்களப் பேரினவாதிகளும் தொடர்ச்சியாகச் சில கருத்துக்களைக் கூறிக்கொண்டு வருகின்றார்கள். இலங்கை இனப் பிரச்சனையில், எவராவது ஓரளவிற்காவது நியாயமாகப் பேசப் புறப்பட்டால், அவர்களை மிகக் கடுமையாக, மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் இவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.இலங்கை இனப் பிரச்சனை குறித்து, ஓரளவிற்காகவது நியாயமாகப் பேசுபவர்கள் எவராக இருந்தாலும் - அதாவது அவர்கள் சர்வதேச நாடுகளின் முக்கியமான பிரமுகர்களாக இருந்தாலும்கூட - அவர்களைச் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது சிங்களக் கடும்போக்காளர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். உடனே சிறிலங்காவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும் என்றும் ஜோன் ஹோல்ம்சை விமர்சித்திருந்தார்.
இத்தனைக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் சிpறிலங்கா அரசைப் பெரிதாகக் குற்றம் சாட்டிப் பேசவில்லை. அவர் சிறிலங்கா அரசின் நலன் சார்ந்து பேசிவிட்டு, சிறிலங்கா அரசிற்குச் சார்பாகச் சந்திப்புக்களை நடாத்திவிட்டு, உலக அரங்கில் சிறிலங்காவிற்கு நல்ல பெயர் கிடைப்பதற்கான �அறிவுரைகளைத்தான் � வழங்கி விட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவற்றைக்கூடச் சிங்களப் பேரினவாதத்தால் சகித்துக் கொள்ள - ஏற்றுக் கொள்ள - முடியவில்லை.
லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை வருகைக்கான சில தினங்களுக்கு முன்னராக - (07-10-2007) அன்று சிறிலங்காவின் சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகையான ஐலண்ட் (Island)> �TREADING THROUGH THE MINEFIELDS� என்ற தலைப்பில், நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.ஐலண்ட் பத்திரிகையில் வெளிவருகின்ற அரசியல் கருத்துக்கள், உண்மையில் சிறிலங்கா அரசின் கருத்துக்கள்தான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மையாகும். அந்தக் கட்டுரையில் �விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கும் சர்வதேச MAFIA குற்றவாளிகள் குழு� - (INTENATIONAL MAFIA FOR THE PRESERvATION OF THE LTTE)- என்று
குறிப்பிட்டுப் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளை திட்டி எழுதப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் அரச சார்புப் பேரினவாதப் பத்திரிகையான ஐலண்ட் மூலம், விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கின்ற சர்வதேச MAFIA என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில், அமெரிக்கத் தூதுவர் பிளேக் (BLAKE), பிரிட்டி~ தூதுவர் சில்கொட் (CHILCOTT), மற்றும் ஜேர்மன் தூதுவர் ஆகியோர் அடங்குவர்.
இவர்களை MAFIA கும்பல் என்று, சிங்களப் பேரினவாதம் திட்டுகின்ற அளவிற்கு, இந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
இந்த வெளிநாட்டுத் தூதுவர்கள், இலங்கைப் பிரச்சனை குறித்து வெளியிட்ட சில கருத்துக்கள்தான் சிங்களப் பேரினவாதத்தைக் கோபமுறச் செய்துள்ளது. அப்படி அவர்கள் சொன்ன கருத்துக்கள்தான் என்ன?
�அமெரிக்காவும், நிதி வழங்கும் நாடுகளும், இலங்கைப் பிரச்சனைக்கு ஒரு இராணுவத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத்தான் ஒரு தீர்வை அடைய முடியும் என்று நாம் நம்புகின்றோம்���.. இலங்கையின் யாப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். நாட்டில் சிலரை மட்டும் அந்நியப்படுத்தாமல், பாரபட்சமில்லாமல், எல்லோரும் சமமாக, சகல உரிமைகளோடு வாழக்கூடியது போன்று புதிதாக ஒரு யாப்பை சிpறிலங்கா அரசு உருவாக்க வேண்டும்����. சிறிலங்கா அரசு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். சமாதானத் தீர்வு ஒன்றைக் காண்பது மூலம் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு 2011ம் ஆண்டில் நோபல் பரிசு கிடைக்க வேண்டும்����.. �
- இவ்வாறு இந்த மேற்குலகத் தூதுவர்கள் சொன்ன கருத்துக்கள்தான், சிங்களப் பேரினவாத அரசைக் கோபமுறச் செய்துள்ளது. அத்தோடு இன்னுமொரு விடயமும், சிங்களப் பேரினவாதிகளை மிகுந்த கோபமுறச் செய்துள்ளது. �ஒற்றையாட்சி மூலமாக, இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது� என்று ஒரே குரலில் இந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் (வௌவேறு சந்தர்ப்பங்களில்) தெரிவித்த கருத்தும், சிங்களப் பேரினவாதிகளைக் கொதித்தெழச் செய்துள்ளது.
தாங்கள் நம்பியும், தங்கியும் இருக்கின்ற அமெரிக்காவின், பிரித்தானியாவின், ஜேர்மனியின் அரச தூதுவர்களையும், அவர்களது நாடுகளையும் MAFIA கும்பல் என்று தூற்றுகின்ற அளவிற்கு, சிங்களப் பேரினவாதம் மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுத்துத் தலை விரித்தாடுகின்றது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை! (போகின்ற போக்கில், திரு ஆனந்தசங்கரி அவர்களையும், இந்தக் கட்டுரையில் சாடியிருப்பதும் ஒரு நகை முரணாகும்!�பிரபாகரனை எதிப்பவர் என்பதால் மட்டும், ஆனந்தசங்கரியின் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது � என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரி போன்றோருக்கு விரைவில் எத்தகைய கதி (மோட்சம்?) சிறிலங்கா அரசால் வழங்கப்படவிருக்கின்றது என்பதற்கு, ஐலண்ட் பத்திரிகையின் இந்தக் கட்டுரை நிமித்தக் குறியாக விளங்குகின்றது).
நாம் இதுவரை தர்க்கித்த விடயங்களின் ஊடாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்களின் இலங்கைக்iகான விஜயம் குறித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றோம்.
லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வரவேண்டியதற்கான அவசியத்தை எற்படுத்தியது சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, அவற்றைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, அழுத்தம் கொடுத்து வந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும்தான்! மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில், பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகப் புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில வருமாறு:
� அரச சார்பற்ற தொண்டர்கள் மீதான வன்முறைகள்.
� மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான சித்திரவதைகள், கொலைகள்.
� ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள், அச்சுறுத்தல்கள்.
� ஆட்கடத்தல், காணாமல் போதல், அவர்களின் விடுதலைக்காகப் பணம் அறவிடுதல், அவர்களைக் கொலை செய்தல்.
� அரசு மற்றும் அரச ஆதரவுத் தமிழ் ஒட்டுக் குழுக்கள் மேற்கொண்டுவரும் கொலைகள்.
� நீதிக்குப் புறம்பான கைதுகள், சித்திரவதைகள்.
� பொதுமக்கள் மற்றும் அவர்களது வாழ்விடங்கள் மீது நடாத்தப்படும் எறிகணை, வான்குண்டுத் தாக்குதல்கள்.
� இராணுவ நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களைப் பலவந்தமாக வெளியேற்றுதல்.
இவற்றோடு மேலும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பல மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச மன்னிப்புச்சபையும் தகுந்த அழுத்தங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரிவுக்குக் கொடுத்திருந்தன.
இப்படியெல்லாம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிந்து வைத்திருந்தும், உருப்படியான நடவடிக்கைகள் எதையுமே மேற்கொண்டிராத ஐக்கிய நாடுகள் சபை, மேற்கூறிய அழுத்தங்கள் காரணமாகத் தனது ஆணையாளர் ஒருவரை �நிலைமைகளைக் கண்டறிந்து வருவதற்காக�, இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த மனித உரிமை ஆணையாளர்கள், விடயங்கள் எதுவும் தெரியாமல், சந்திர மண்டலத்திலிருந்து இலங்கைக்கு வரவில்லை. சகல மனித உரிமை மீறல்களையும் நன்கு தெரிந்து, நன்கு புரிந்து கொண்டுதான் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகின்றார்கள். இலங்கைக்கு வந்து பலரைக் கேட்டுத்தான் மனித உரிமை மீறல்களை அறிந்து கொள்ள வேண்டிய அறியாமையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அதைக் கூடக் கேட்கமுடியாத, செய்யமுடியாத நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர்கள் இலங்கை வந்துவிட்டுப் போகின்றார்கள்.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விஜயம் செய்யுமாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் லூயிஸ் ஆர்பர் அம்மையாருக்கு அழைப்பு விடுத்திருந்த போதும், மகிந்த ராஜபக்சவின் அரசு லூயிஸ் ஆர்பர் அம்மையாரைக் கிளிநொச்சி செல்ல முடியாமல் தடுத்துவிட்டது. கிழக்கு மாகாணத்திற்குச் செல்லவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள், கொழும்பில், லூயிஸ் ஆர்பர் அம்மையாரைச் சந்திக்க முனைந்தபோது, சிறிலங்காக் காவல் துறையினர் கடுமையான கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.லூயிஸ் ஆர்பர் அம்மையார் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, யாழ் அரச அதிபர் அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தார்கள். ஆனால் அவர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்கள் லூயிஸ் ஆர்பர் அம்மையாரை சந்திக்க முடியாதவாறு தடுத்தவண்ணம் இருந்தார்கள். யாழ் அரச அதிபர் செயலகத்திற்குள் ஊடகவியலாளர்கள் செல்வதையும் சிறிலங்கா இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
யாழ் நல்லூர்க் கோயில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு, லூயிஸ் ஆர்பர் அம்மையார் சென்றபோது, அலுவலக நுழைவாயிலில் காத்திருந்த இரண்டு ஊடகவியலாளர்களை சிறிலங்கா இராணுவம் பலவந்தமாக வெளியேற்ற்pயது. யாழ் பிராதான வீதியில் உள்ள யாழ் ஆயர் அவர்களின் இல்லத்திற்கு லூயிஸ் ஆர்பர் அம்மையார் செல்லவிருந்த காரணத்தால், அந்த வீதியில் பாரிய தடைகளை இராணுவத்தினர் ஏற்படுத்திப் பொது மக்களும் ஊடகவியலாளர்களும் அங்கே செல்வதை தடுக்க முனைந்தார்கள்.
லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் பயணம் குறித்த செய்திகளைச் சேகரிக்கக் கூடாது என்று சிறிலங்கா இரணுவத்தினர் பகிரங்க எச்சரிக்கைகளையும் ஊடகவியலாளர்களுக்கு விடுத்திருந்தனர். லூயிஸ் ஆர்பர் அம்மையாரைப் பார்க்க வந்த பொதுமக்கள் அனைவரையும் சிறிலங்கா இராணுவம் வீடியோ மூலம் படமெடுத்து தனது அச்சுறுத்தலை வெளிப்படுத்தியது.
இவ்வாறாகப் பல மனித உரிமை மீறல்களை, லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின்போது சிறிலங்கா அரசு புரிந்துள்ளது.
அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயம் காரணமாக, மேலும் பல மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. இவர்களைப் போன்றவர்கள் இலங்கைக்கு வருவதால், மக்கள் மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அந்த அளவுக்கு சிறிலங்கா அரசின் பேரினவாதம் மூர்க்கமாகவும், ஐ.நா. சபை போன்ற ஸ்தாபனங்கள் பலவீனமாகவும் உள்ளன.
சிறிலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபை போன்ற ஸ்தாபனங்களுக்கே மரியாதை தராமல் நடந்து கொள்கின்றது. இவர்களுக்கே மரியாதை தராத சிறிலங்கா அரசு தமிழ் மக்களை என்ன பாடுபடுத்தும் என்பதுதான் இங்கே எமது கருத்தியலாக உள்ளது.
அதாவது உள்ளூரத் தங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற வேற்று நாட்டவர்களும், ஐ.நா. சபை போன்ற ஸ்தாபனங்களும் மனித உரிமைகள் விடயம் சம்பந்தமாக இலங்கை வருகின்ற போது, அவர்களுக்கு எதிராகத்தான் சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. அவர்களை மதிப்பதும் இல்லை. மரியாதை தருவதும் இல்லை.
சிறிலங்கா அரசின் இத்தகைய போக்குக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளவற்றில், மிக முக்கிய காரணியாக ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். �இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சி மூலமாத் தீர்வு காணமுடியாது� - என்று மேற்குலகம் சொல்லி வருவதுதான் சிறிலங்காவின் பேரினவாத அரசின் இத்தகைய மரியாதையின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
இவற்றின் ஊடாக வெளிப்படுகின்ற உண்மை என்னவென்றால் - சிறிலங்கா அரசுகள் ஊடாகத் தமிழர்களுக்கு ஒரு நீதியான, நியாயமான தீர்வு எதுவும் கிட்டாது என்பதுதான்! தான் தங்கியிருக்கின்ற சர்வதேசத்தையே மதிக்காத சிங்கள அரசா, தமிழர்களுக்கான உரிமைகளைக் கொடுக்கப் போகின்றது?
அதாவது, ஐக்கிய நாடுகள் சபை இன்றைக்கு மதிப்பிழந்து போய்த்தான் உள்ளது. இன்று ஐக்கிய நாடுகள் சபையை சிறிலங்கா போன்ற ஒரு சின்னஞ் சிறிய நாடே தூக்கி எறிகின்ற அளவுக்குத்தான் ஐக்கிய நாடுகள் சபையும், மற்றைய மனித உரிமை அமைப்புக்களும் இருப்பது ஒரு சோகமான விடயம்.
மிகச் சிறிய நாடான சிறிலங்காவே ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் இருக்கின்றபோது, இவர்கள் மிகப் பெரிய நாடுகளின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பார்கள் என்கின்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா? ஐக்கிய நாடுகள் சபை, சிங்கள அரசுகளுக்குக் கொடுக்கக்கூடிய அழுத்தங்கள்தான் என்ன? அப்படியே நாளை இவர்கள் அழுத்தங்களைப் போட்டாலும், அதனைக் காலம் கடந்த விடயமாகத்தான் கருத வேண்டும்.
சிறிலங்கா போன்ற சிறிய, சாதாரண நாடொன்றில்கூட செயல்பட முடியாதவர்கள் என்கின்ற அளவிற்கு, ஐக்கிய நாடுகள் சபை இன்று தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொண்டு விட்டது. இன்று சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையில், மற்றும் பல மேற்குலக நாடுகளில் �கடன் � வாங்கிக் கொண்டு, அதனூடே வாழ்ந்து வருகின்றது. ஓருவனிடம் கடன் வாங்குகின்றவன், தனக்குக் கடன் தருகின்றவனிடமே சண்டித்தனம் செய்து கொண்டு நிற்கின்றான். ஈரான் போன்ற நாடுகளுக்காவது வலு உண்டு. சிறிலங்காவுக்கு ஏது வலு? இவ்வளவும் தெரிந்தே சிறிலங்கா சண்டித்தனம் செய்து கொண்டு நிற்பதற்கான அடித்தளம் என்ன?
அந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த �பெருமை� சர்வதேசத்தையே சாரும். அமெரிக்காவின் சிந்தனையின்படி, எல்லாவற்றையும் �பயங்கரவாதம்� என்பதற்குள், சர்வதேசம் பொதுமைப்படுத்தியதால் வந்த வினைதான் இது! நியாயமான விடுதலைப் போராட்டங்களுக்கும் இதன் மூலம் �பயங்கரவாத முத்திரை� குத்தப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து சர்வதேசம் குரல் எழுப்புகின்றபோது, �இது பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை� - என்று மேற்குலகின் அதே பல்லவியை மகிந்தின் அரசும் பாடுகின்றது. சர்வதேசம் தேவையற்ற விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை மேற்கொண்டதும், தடைகளை விதித்ததும், கடைசியில் சிறிலங்காவின் சிங்கள பௌத்தப் பேரினவாதச் செயற்பாடுகளுக்கும் அதனுடைய மனித உரிமை மீறல்களுக்குமே வழி வகுக்க உதவின.
அத்தோடு �சர்வதேசம் என்பது, அதன் நலன் சார்ந்து, பொருளாதாரம், கேந்திர முக்கியத்துவம் என்று அதன் தேவை கருதிச் செயற்படுமே தவிர, சாதாரண மனிதர்களுடைய உயிர்கள், உரிமைகள், பற்றிப் பெரிதும் அக்கறைப்படாது� - என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் (சரியான) கணிப்பாகவும் உள்ளது.
மேற்குலகத்தினூடாகத் தமக்கு ஏதேனும் பிரச்சனைகள், அழுத்தங்கள் என்று சிலவேளைகளில் வந்தால், தன்னுடைய(!) நாட்டின் கேந்திர ஸ்தானத்தை வைத்து, மேற்குலகிற்கு எதிரானவர்களோடு உறவாடுவதன் மூலம் இவர்களையும் எதிர்க்க முடியும் என்பதுவும் மகிந்தவின் கணிப்பு. இந்தக் கணிப்புக்களின் அடிப்படையில்தான் மகிந்த ராஜபக்ச செயல்படுகின்றார்.
இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால், சர்வதேசம் தனக்கு எதிராக, ஒரு கட்டத்திற்கு மேல் போகாது என்று மகிந்த உறுதியாக நம்புகின்றார் என்பதேயாகும். அந்த உறுதியான நம்பிக்கைக்கு ஊடாக இருப்பது, தாங்கள் பொதுவாக அமெரிக்காவிற்குச் சார்பாக இருப்பதுவும், மீறினால் சீனா போன்ற வேறு தேசங்களிடம் தாங்கள் போகலாம் என்ற அவரது நம்பிக்கையும்தான்! இதற்கான விளைவுகள் எப்படியிருக்கும் என்பதுதான் அவருக்கு தெரியாது!
இவ்வாறு இன்று இலங்கைப் பிரச்சனையில் சர்வதேசத்தின் தன்னல நாடகங்கள் அரங்கேறியுள்ள வேளையில், புலம் பெயர் தமிழர்களாகிய நாம் மிகத் தெளிவாக, விழிப்பாக இருந்து, எமது தேசியத்திற்கான கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இதுவரை காலமும் தமிழ் மக்களின் பலத்தினால்தான் நிற்கின்ற ஒரு விடுதலைப் போராட்டமாகும். தமிழினம் போர் முனைகளில் வெற்றி பெற்று, சிங்கள ஆக்கிரமிப்புக்களை முறியடிக்கும் வரைக்கும் உலகம் தமிழினத்தைக் கண்டு கொள்ளவில்லை. தமிழினத்தைத் தேடி வரவில்லை.
இப்போது தமிழினம் ஏதோ வலுவிழந்து விட்டது என்று சர்வதேசம் நினைத்துக் கொண்டு, மீண்டும் எம்மைக் கண்டு கொள்ளாமல் நிற்க முனைகின்றது. நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, வலுவாக நிற்பதன் மூலம் பெரிய வெற்றிகளை அடைய முடியும். சிறிலங்கா அரசிற்கு ஒரு மிகப் பாரிய படிப்பினையைத் தமிழினம் கொடுக்க்pன்றபோது சர்வதேசம் தன்பாட்டிற்குத் தமிழினத்தின் பக்கம் வரும்.
புலம் பெயர் தமிழர்களாகிய நாம் ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைகின்றபோது, அரசுகளையும் திருப்புவதற்கான ஆற்றலும் நம்மிடையே இருப்பதை நாம் உணர்வோம். அதற்கு நாங்கள் முதலில் முழுமையாக ஒன்று சேர வேண்டும்.