Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்

15  August 2007

"..சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்ற தமிழின அழிப்பு நிலையை மேற்குலகம் (தான்) கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடியதற்கான வாய்ப்பினைத்தான் இன்று தேடி அலைகின்றது..."


கடந்தவாரம் இலங்கைக்குச் சென்றிருந்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு, உலகிலேயே மிகவும் மோசமான, ஆபத்தான இடமாக சிறிலங்காதான் உள்ளது, என்று கூறி சிறிலங்காவைச் சாடியுள்ளார்.

அத்தோடு, திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் சிறிலங்கா அரசாங்கமானது, மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள், துஷ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துலகம் தொடர்பிலான சிறிலங்கா மீதான நல்ல கருதுகோளுக்கு, அதுவே வகை செய்யும் - என்று சிறிலங்காவிற்குப் புத்திமதியும் வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரே இவ்வாறு சிறிலங்கா அரசைக் கடிந்துரைத்த செய்தி வெளியாகியவுடன், புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உருவாகியுள்ளதோ என்று எண்ணுமளவிற்குப் பல கருத்துக்கள் இப்போது முன் வைக்கப்பட்டு வருகின்றன.

மேற்குலகம் இனிமேல் சிறிலங்காமீது கடுமையாக நடந்து கொள்ளக் கூடும் என்றும் சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். இலங்கைப் பிரச்சனையில் அக்கறை கொண்டு செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் இதே விதமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.

தமிழ் மக்கள் மீது, சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்கள் காரணமாகத்தான் ஜோன் ஹோல்ம்ஸ், இலங்கைக்கு விஜயம் செய்தார் என்று நாம் கருதவில்லை. இவருடைய விஜயத்திற்கு வேறு உள்நோக்கம் இருக்கின்றது என்றும், அது தமிழ் மக்களின் நலன் சார்ந்து இருக்கவில்லை என்றும்தான் நாம் கருதுகின்றேர்ம்.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தன. மிக அண்மைக் காலமாக அரச சார்பற்ற நிறுவனங்களும், அவற்றைச் சார்ந்த அமைப்புக்களும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துக்கூறிப் புகார் செய்து வருவதும் அதிகரித்தே வந்துள்ளது. இது மேற்குலகத்திற்கும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் பெரிய அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்ததன் காரணமாகத்தான் ஜோன் ஹோல்ம்ஸின் இலங்கைக்கான இந்த விஜயம் உருவானது.

ஆகவே சிறிலங்கா அரசு இவை குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுப்பது போல், ஒரு திட்டத்தைக் கொடுத்தால் மேற்குலகம் அதனை வரவேற்றுப் பாராட்டையும் வழங்கும். அதாவது சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்ற தமிழின அழிப்பு நிலையை மேற்குலகம் (தான்) கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடியதற்கான வாய்ப்பினைத்தான் இன்று தேடி அலைகின்றது. இதனடிப்படையில்தான் ஜோன் ஹோல்ம்ஸின் விஜயமும் அமைகின்றது.

இதனை ஜோன் ஹோல்ம்ஸ் அவர்களுடைய அறிக்கையே வெளிப்படுத்தி நிற்கின்றது. அவர் இவ்வாறு கூறியிருந்தார்:-

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை அமைப்பது குறித்து (சிறிலங்கா அரசு) பரிசீலிக்க வேண்டும். அனைத்துலம் தொடர்பிலான சிறிலங்கா மீதான நல்ல கருதுகோளுக்கு அதுவே வகை செய்யும் என்று ஜோன் ஹேல்ம்ஸ் தெரிவித்திருந்தார்.

அதாவது, சிறிலங்கா அரசு மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு ஒன்றை அமைப்பது குறித்துப் பரிசீலித்தால் அது சிறிலங்காவிற்கு உலக மட்டத்தில் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று ஜோன் ஹோல்ம்ஸ் கூறுகின்றார்.

இதன் உட்கருத்து என்னவென்றால், சிறிலங்கா அரசு இப்படி ஏதாவது செய்வதாகக் காட்டினால்தான் மேற்குலகம் பிரச்சனை ஏதும் இல்லை என்று சொல்லிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்பதாகும்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், இப்போது புதிதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று மேற்குலகம் சொல்லுவது படுமோசமான முரண் நிலையாகும்.

மனித உரிமை மீறல்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் து~ப்பிரயோகங்கள் மீதான விசாரணை குறித்தும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டுள்ளார். இங்கே மனித உரிமை மீறல்களையும் (அதிகார) து~பிரயோகங்களையும் செய்து வருவதே சிறிலங்கா அரசுதான்! ஆனால் சிறிலங்கா அரசுதான் இவை குறித்து விசாரணைகளை நடாத்த வேண்டும் என்று ஜோன் ஹோல்ம்ஸ் விரும்புகிறார். இது கொலைகாரனையே நீதிபதியாக நியமிப்பது போல்தான் உள்ளது.

இதைத்தவிர ஜோன் ஹோல்ம்ஸ் அவர்களுடைய இன்னுமொரு செயற்பாடு (அல்லது செயற்பாட்டின்மை) தமிழ் மக்களின் முதுகில் குத்துவதாகவே அமைந்து விட்டது. இன்று இலங்கைத் தீவிற்கு இனப்பிரச்சனை முரண்பாடுகள் குறித்துப் பேசுவதற்கு, உத்தியோகபூர்வமாக வருபவர்கள் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று முறையாகத் தமிழ் மக்களைச் சந்திக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிக்கு வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதற்கான அதிகாரமும் உண்டு. சரியாகச் சொல்லப் போனால், இந்த அதிகாரிகள் இயல்பாகவே சென்று தமிழ் மக்களைச் சந்திக்கலாம். ஆனால் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் சிறிலங்காவின் படைத்துறை கூட்டி வைத்திருந்த தமிழ் மக்களை மட்டும் சந்தித்துவிட்டு சில கண்துடைப்புச் சந்திப்புக்களை நடாத்தி விட்டுச் சென்றிருக்கின்றார்.

இன்று இலங்கைப் பிரச்சனைக்குரிய தீர்வில் சம பங்காளியாக உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை ஜோன் ஹோல்ம்ஸ் சந்தித்துப் பேசவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குச் சென்று அவர் அங்குள்ள தமிழ் மக்களைச் சந்திக்கவில்லை. அப்பகுதிகளில் உள்ள நிலைமைகளைக் கண்டறிந்து கொள்ளவதற்குக்கூட எந்தவித முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

ஆகவே ஒரு பக்கத்தை முற்றாக ஓரம் கட்டிவிட்டு, சிங்கள அரசுக்குச் சார்பாகச் சந்திப்புக்களை மேற்கொண்டுவிட்டு, தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கின்றோம் என்று மேற்குலகம் சொல்லிக் கொண்டு நிற்பது ஒரு வேடிக்கையான அதேவேளை வேதனையான விடயமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜோன் ஹோல்ம்ஸ் திட்டமிட்டுத் தமிழ் மக்களின் முதுகில் குத்தியது மட்டுமல்லாது, போகின்ற போக்கில் அபாண்டமான குற்றச்சாட்டொன்றையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். சிறார்களைப் படையணியில் சேர்த்தல் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று ஜோன் ஹோல்ம்ஸ் சொல்கின்றார். இது ஓர் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது மேற்குலகத்திற்கும் தெரியும். ஆனாலும் மேற்குலகம் திருப்பித்திருப்பி அதனையே சொல்லி வருகின்றது. இப்படிப் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சொல்லிச் சென்ற ஜோன் ஹோல்ம்ஸ், மகிந்த ராஜபக்ச அரசின் தமிழின அழிப்புக் காரணமாக பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தகுந்த போசாக்குள்ள உணவு கிடைக்காததால் நலிவுற்று அழிவதையும், சிங்கள அரசால் தமிழ் மாணவர்கள் குண்டு வீசி அழிக்கப்படுவதையும் காரணத்தோடு மறந்து போய்விட்டார்.

விவாதத்திற்காக ஒரு கேள்வியை நாம் முன்வைக்க விழைகின்றோம். படையில் சேரப்பட்டு சாவது ஒரு குற்றம் என்றால், சாப்பாடு இல்லாமல் சாவதும், அரச குண்டு வீச்சுக்களால் உடல் சிதறி இறப்பதும் குற்றம் இல்லையா? அடக்கி ஒடுக்கப்படுகின்ற சமுதாயம் படையில் சேர்ந்து சாவதிலாவது ஒரு தார்மீக நியாயம் உண்டு. அவர்கள் தாங்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டு வருவதனால் போராடுகின்றார்கள். ஆனால் பட்டினி கிடந்து சாவதில் என்ன நியாயம்? எவ்வளவோ பொது நிதியைச் செலவழித்து உல்லாசப் பயணம் போல், இலங்கை வந்து போயுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஜோன் ஹோல்ம்ஸ் ஏன் இது பற்றிப் பேசவில்லை.? ஏனென்றால், அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தமிழ் மக்களின் நலனில் அக்கறையில்லை. இவரைத் தொடர்ந்து இன்னும் ஐக்கிய நாடுகள் சபையின் நாலைந்து உறுப்பினர்கள் இலங்கைக்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளப் போகிறார்களாம்! உள்@ரச் சிறிலங்கா அரசு மகிழக்கூடிய விடயங்கள்தாம் இவை!

சிலருக்குச் சில கற்பனைகள் வரக்கூடும். இதோ இவர் வந்திட்டார், அதோ அவர் வரப்போகின்றார், இவர் இப்படிச் சொல்லிப்போட்டார், அவர் அப்படிச் சொல்லப்போகிறார், இனிப் பிரச்சனைகள் எல்லாம் தீரப்போகின்றன - என்று நம்மில் சிலர் நம்பக்கூடும். சரியாகச் சொல்லப்போனால் பிரச்சனைகள் தீராமல் போவதற்கு இப்படி உல்லாசமாக வந்து போகின்றவர்களும், அவர்களுடைய அறிக்கைகளும், அவர்களை அனுப்பி வைக்கின்ற சம்பந்தப்பட்ட மேற்குலகமும்தான் வெளிப்படையான காரணகர்த்தாக்கள்!

இங்கே தமிழீழ மக்களின் பிரச்சனை தீராதற்கு இன்னுமொரு ஆழமான முதன்மையான காரணம் ஒன்றுண்டு. மேற்குலமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தமிழீழ மக்களின் அடிப்படையான பிரச்சனையைக் கருத்தில் எடுக்கவே இல்லை. அடிப்படையான பிரச்சனையைக் கருத்தில் எடுக்காமல், அதனை நியாயபூர்வமாக அணுகாமல் இலங்கைப் பிரச்சனை தீராது.

அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பது எவ்வாறு??

மிகச் சுருக்கமாகக் கூறுவது என்றால், தமிழர்களுக்குத் தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும், அந்தத் தாயகப்பகுதிகளில் தமிழர்களுக்குச் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும், தமிழர்கள் தங்களது தாயகத்திலே, தங்களைத் தாங்களே ஆட்சி செய்வதற்கான உரிமை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதும்தான் அடிப்படைப் பிரச்சனைக்குரிய தீர்வாகும்.

இதனை ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்தமாகத்தான் இந்திய -இலங்கை ஒப்பந்தம் அமைந்திருந்தது. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைக் கருத்தில் எடுக்கவில்லை. அதன் விளைவாகத்தான் ஒப்பந்தம் உடைந்து போயிற்று.

இந்த அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்காமல் இப்போது வேறு ஏதோ பிரச்சனைகளைப் பற்றி மேற்குலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் பேசிக்கொண்டு நிற்கின்றன. இன்று எழுந்துள்ள சகல பிரச்சனைகளும் இந்த அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் போனதால்தான் எழுந்திருக்கின்றன. அடிப்படைப் பிரச்சனை தீர்க்கப்பட்டால் மற்றைய பிரச்சனைகள் இயல்பாகவே தீரும்.

ஆனால் மேற்குலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனையைக் கருத்தில் எடுக்க மறுத்து, அதனை மிதித்துக்கொண்டு அடிப்படைப் பிரச்சனையின் பக்க விளைவுப் பிரச்சனைகள் குறித்துப் பேசிக்கொண்டு நிற்கின்றன. இந்தப் பக்க விளைவுப் பிரச்சனைகளையும் இவை தீர்க்கப்போவதில்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற தங்களுடைய நிலைப்பாட்டை, மேற்குலகம் வெளிப்படுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல், ஏதோ சிங்கள அரசாங்கம் மேற்குலகிற்கு நியாயத்தை சொல்வது போல் ஏதாவது ஒன்றைச் செய்தால் போதும் என்ற அளவில்தான் இன்று மேற்குலகம் செயல்பட்டு வருகின்றது. அதாவது சிங்கள அரசு இங்கே ஒரு நாடகமாடி ஏதோ தாம் நியாயமாக நடப்பது போல் நடித்துக் காட்டவேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றதா, இல்லை உண்மையாக பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று விரும்புகின்றதா என்ற கேள்வியே இன்று பலமாக எழுந்துள்ளது.

இன்றைய சிங்கள அரசு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்து விட்டது. சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டையும் கைவிட்டு விட்டது. ஏ-9 நெடுஞ்சாலையை மூடித் தமிழ் மக்களின் போக்குவரத்தை மூடியுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து வருகின்றது. ஆக்கிரமித்த இடங்களில் புத்த கோவில்களைக் கட்டியும், புத்த மதச் சின்னங்களை நிர்மாணித்தும் வருகின்றது. விமானக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் தமிழ் மக்களைக் கொன்றும், காயப்படுத்தியும் வருகின்றது. தொடர்ந்தும் வெளிப்படையாக மனித உரிமை மீறல்களையும், ஆட்கடத்தல்களையும், கொலைகளையும் செய்து வருகின்றது. உயர் பாதுகாப்பு வலையம் என்று சொல்லி மேலும் தமிழர்களைச் சிங்கள அரசு கலைத்து வருகின்றது. இதற்குச் சிறிலங்காவின் சட்டத்துறையும், நீதித்துறையும் துணையாக நிற்கின்றன.

சிங்கள அரசு எதையுமே நியாயமாகச் செய்யாது என்பதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாக, மடு வீதியைத் திறந்து விடுவதாக முன்னர் சொல்லிவிட்டு இப்போது மறுத்து நிற்பதைச் சுட்டிக்காட்டலாம். மடுத்திருவிழாவை முன்னிட்டு சுமார் 800 மீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கியுள்ள சூனியப் பிரதேசத்தில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகளும், சிறிலங்கா இராணுவமும் இணங்கியிருந்தனர். இதில் தமக்குரிய அரைவாசிப் பகுதியை விடுதலைப்புலிகள் சுத்திகரித்து விட்டனர்.

ஆனால் சிறிலங்கா இராணுவமோ செஞ்சிலுவைச் சங்கம் அங்கே சேவையில் ஈடுபடவேண்டும் என்று புது நிபந்தனையை விதித்து, தமது பக்கக் கண்ணி வெடிகளை அகற்றாமல் அடம் பிடித்து நிற்கின்றது. சிறிலங்கா இராணுவத்திற்கு இந்த வீதியைத் திறக்க வேண்டுமென்று நீண்ட காலத்திற்கு முன்னரேயே தெரியும். இதற்குப் பாதுகாப்பு அமைச்சு முன்னர் இணங்கி விட்டு இப்போது கடைசி நேரத்தில் நடைமுறைச் சாத்தியம் இல்லாத விடயத்தைச் சொல்லி வீதித் திறப்பை நிறுத்தி வைத்துள்ளது.

சிறிலங்கா அரசின் இத்தகைய செயல்கள் யாவற்றையுமே பார்த்துக் கொண்டு நிற்கின்ற மேற்குலகம் என்ன செய்கின்றது?

அது விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதும், அவர்களின் ஆதரவாளர்களைக் கைது செய்வதுமான செய்கைகளை செய்கின்றது. மேற்குலகத்தின் இந்தச் செய்கைகள் காரணமாக, சிங்கள அரசு மேலும் மேலும் உற்சாகமடைந்து, தனது தமிழினப் படுகொலைகளைத் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றது.

இவையெல்லாம் மேற்குலகின் நம்பத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை. மேற்குலகம் மீதும், அவர்களது ராஜதந்திரம் மீதும் இன்று தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இப்போது மேற்குலகத்தின் மீதோ அல்லது அவர்களது நடவடிக்கைகளில் உள்ள நியாயத்தில் (?) மீதோ தமிழ் பேசும் மக்கள் எந்தவிதமான நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு மேற்குலகத்தின் மீது இனி நம்பிக்கை வரவேண்டுமென்றால் நியாயமான, காத்திரமான செயல் வடிவங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். தமிழர்களுக்கு மேற்குலகத்தின் வெறும் அறிக்கைகள் தேவையில்லை. முறையான அழுத்தங்களை செயல்வடிவில் சிங்கள அரசுமீது மேற்குலகம் பிரயோகிக்க வேண்டும். தனது அடிப்படைச் சிந்தனையில் மேற்குலகம் சில மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். அவற்றிற்கு வெளிப்படையாகச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

நாம் முன்னர் விளக்கியிருந்த, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, சிறிலங்கா அரசு மீது முறையான அழுத்தங்களை மேற்குலகம் பிரயோகிக்க வேண்டும்.

தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, மேற்குலகம் உடனடியாக நீக்க வேண்டும். பாதிக்கப்பட்டிருப்பது தமிழர் தரப்பாக இருக்கையில் அவர்களது பிரதிநிதிகள் மீது தேவையற்ற நியாயமற்ற அழுத்தங்களை மேற்குலகம் பிரயோகிப்பது முறையற்றதாகும்.

சிறிலங்கா அரசினால் தமிழர்களின் தாயகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அழிப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும் மேற்குலகம் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விடயங்களை மேற்குலகம் செய்யாமல் இருந்து கொண்டு சமாதானம், அமைதி என்று சும்மா பேசிக் கொண்டிருப்பதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மாறாக, சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கு மேற்குலகம் துணை போவதற்கே இது வழிவகுக்கும். இவ்வளவு காலமும் சிங்கள அரசுகள் செய்திட்ட தவறுகளுக்காக, அவர்கள் தண்டிக்கப்பட்டதற்கான எந்தவித சான்றுகளும் இதுவரை இல்லை.

புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம், மேற்குலகத்தை இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் - தெளிவில் - அணுக வேண்டும். நாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகள், எமது பிரச்சனையை, எமது மக்களின் பிரச்சனையை சரியான முறையில் அணுகவில்லை. அங்கே நடப்பது என்னவென்று நன்றாக தெரிந்து கொண்டும் மேற்குலகம் இன்று நடித்து வருகின்றது. அதனுடைய முகத்திரை அகற்றப்பட வேண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று காத்திரமான வகையில் விடுதலைப் போராட்டத்திற்குப் பக்க பலமாக நிற்கின்றார்கள். தொடர்ந்தும் போராட்டம் வலுப்பெற்று நகர்கின்றபோது, புலம் பெயர்ந்த மக்கள் முழுமையாகவும், மேலதிகமாகவும் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இன்று மேற்குலக அரசுகள் இலங்கைப் பிரச்சனையில் பிழையான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தபோதும், மேற்குலகில் வாழும் பொதுமக்கள் - அதாவது சாதாரணமாக உலக அரசியல் நாட்டம் இல்லாத அந்த நாட்டுப் பொதுமக்கள் - இதுவரை இலங்கைத்தீவில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருந்தவர்கள் - இன்று அங்கே என்ன நடக்கின்றது என்பது குறித்து விழிப்பு அடைந்து வருகின்றார்கள். இவர்கள் மேலும் தொடர்ந்து விழிப்படைந்து வருவதற்கான பணியை, அதற்கான பரப்புரையைப் புலம் பெயர் தமிழர்கள் பல்வேறு வழிகளில் ஏற்கனவே செய்து கொண்டும் வருகின்றார்கள்.

இது காலப்போக்கில் நல்ல பயனைத் தருமாகையால், இந்தப் பணியில் சகல புலம் பெயர் தமிழர்களும் முனைப்போடு ஈடுபடவேண்டும் என்பதே எமது வேண்டுகோளுமாகும்!

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home