Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (NAZI)

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (Nazi) நாசிக்களும்!

4 June 2007


இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும்படியான கோரச் செயல் ஒன்றை, அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில், தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.

 அன்று 97,000க்கும் மேற்பட்ட நூல்களும், கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர்.

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப்பட்ட 1981 யூன் மாதம் முதலாம் திகதிக்கு முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்கித்த பின்னர், இவற்றிற்கு முன்னோடியாக - ஏன் வழிகாட்டியாகவும் இருந்த - ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக, தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து, எமக்குக் கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.

1933ம் ஆண்டு K.M. செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில், இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் ‘யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத்’ தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள்.

அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த (High Court Judge) திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும், திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஒரு வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும், 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.

1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் (Main Street) உள்ள ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த நூல் நிலையம், இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப்பட்டன. குதூகல விழா (carnival ), இந்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் (Lottery Tickets) போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் (Long) அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று பிற்காலத்தில், யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி, சிங்களக் காடையர்களால், நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டபோது, வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று, இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான K.S. நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும், 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம் -Ceylon Daily News - tamilnation.org  மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி, நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் ‘யு சுப்பையா ரூ சன்ஸ’; கடை உட்படப் பல கடைகளை உடைத்தும், எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும், வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில்தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிக விரைவில் நூல் நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு, அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில், நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில், ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

“குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள்” என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்தப் பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்தவில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைப் பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது, சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ, நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்களப் பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும், ஹிட்லரின் நாசிச் (NAZI - NATIONAL Socialist Party of Germany) சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் - குடியுரிமைச் சட்டம் - இலங்கை.

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை, வீதியோரங்களில், பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு, மே மாதம் 10ம் திகதியன்று, ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம், பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள், அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். “ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள்.” நாசிக்களின் இதே காரணத்தைத்தான், சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். அன்றைய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்குப் பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம்தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும், வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதேயில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இக்கட்டுரைக்கு tamilnation.org,  சங்கம் போன்ற இணையத் தளங்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் பெரிதும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் Sri Lanka: Witness to History என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home