| 
			  புரிந்துணர்வு 
			ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழீழ 
			விடுதலைப்புலிகள்
			
			அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மிக முக்கியமான அந்த 
			அறிக்கையில் உள்ள சில விடயங்களைத் தர்க்கிப்பதன் மூலம், கருத்துக்கள் 
			சிலவற்றை முன்வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! 
			 
			சிறிலங்காவின் அரசுகளுக்கும், தமிழர் தேசத்தின் 
			பிரதிநிதிகளுக்குமிடையில், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுப் பேச்சு 
			வார்த்தைகள் நடைபெற்றமை என்பதானது இதுதான் முதல் தடவையல்ல! 
			 
			இலங்கைத்தீவு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து, பல 
			தடவைகள், இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. 
			இவ்வகையான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றமையானது, ஓர் உண்மையைத் 
			தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. அதாவது, கடந்த ஐம்பது ஆண்டு காலமாக, 
			இந்த இரண்டு தரப்பினரிடையே இனத்துவ முரண்பாடு உள்ளது என்ற யதார்த்த 
			நிலையையே இந்த ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் 
			சுட்டிக்காட்டுகின்றன. 
			 
			அத்தோடு, இன்னுமொரு உண்மையும் இந்த ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் 
			ஊடாகப் புலப்படுகின்றது. இவ்வாறு மீண்டும், மீண்டும் ஒப்பந்தங்களும், 
			பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றமையானது, இனத்துவ முரண்பாட்டிற்கு 
			இன்னும் ஒரு தீர்வு எட்டப்படவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுவதாக 
			உள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த ஐம்பது ஆண்டுக் காலத்தில், இந்த 
			முரண்பாடுகள் பெரிதாகப் பரிமாணம் எடுத்து வந்துள்ளதையும் நாம் 
			காணக்கூடியதாக உள்ளது. 
			 
			சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறை காரணமாகவும், 
			ஒடுக்குமுறை காரணமாகவும்தான், இந்த இனத்துவ முரண்பாடு விரிவடைந்து 
			வந்துள்ளதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. சிங்கள அரசுகளின் இத்தகைய 
			அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் அமைதி வழிப் 
			போராட்டங்களைத்தான் ஆரம்பத்தில் மேற்கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் 
			சிங்கள அரசுகள் தம்முடைய இராணுவப்பலத்தின் ஊடாக, தமிழ் மக்களுடைய 
			நீதியான அமைதி வழிப்போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கின. தமிழ் 
			மக்களுடைய அமைதி வழிப்போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாகப் 
			பரிணமிப்பதற்கு, சிங்கள அரசுகளின் வன்முறைகளும், ஜனநாயக விரோதப் 
			போக்குமே காரணமாக அமைந்தன. 
			 
			தமிழ் மக்களுடைய அமைதி வழிப் போராட்டக் காலத்தின் போது உருவாகிய 
			ஒப்பந்தங்களும், சிங்கள அரசுகளால் கிழித்தெறியப்பட்டு, நடைமுறைப் 
			படுத்தப்படாமல் போயின. ஆயுதப் போராட்டம் பரிமணித்த காலப்பகுதிகளில் 
			நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. 
			 
			எப்போதும் தமிழர் தரப்புத்தான் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான 
			முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதையும் நாம் 
			சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 2000ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 
			அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகள், 
			ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தினைப் பிரகடனம் செய்தார்கள். பின்னர் 
			2001ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு 
			முன்னரும்-மீண்டும் ஒருமுறை தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை, 
			ஒருதலைப் பட்சமாகப் பிரகடனம் செய்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 
			தம்முடைய இராணுவ நடவடிக்கைகளில் பாரிய வெற்றிகளைப் பெற்று, தமிழர் 
			தாயகத்தின் பாரிய பிரதேசங்களை மீட்டெடுத்த பின்னர் சமபலத்தின் 
			அடிப்படையில் பிரகடனம் செய்த இந்த யுத்த நிறுத்தப்பிரகடனம்தான் 
			நோர்வேயின் அனுசரணையோடு தற்போதைய யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு 
			வழிவகுத்தது. 
			 
			நாம் முன்னர் தர்க்க்த்து வந்தமைபோல், ஐந்து ஆண்டுக்காலத்தை மட்டும் 
			பூர்த்தி செய்துள்ள இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தம், வேறு எதனையும் 
			பூர்த்தி செய்யவில்லை. எனினும், தமிழீழ விடுதலைக்கான போராட்ட நகர்வில், 
			இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒரு 
			தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. 
			 
			அதனுடைய தனித்துவமான அம்சங்கள் வருமாறு: 
			 
			� முன்னைய ஒப்பந்தங்கள் மற்றும் சமாதான முயற்சிகளைப் போல் அல்லாது, 
			இம்முறை சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன், இந்தப் புரிந்துணர்வு 
			ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 
			 
			� தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சிறிலங்காவின் அரசியல் 
			யாப்பின் எல்லைகளுக்கு அப்பால், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
			வரையப்பட்டது. 
			 
			� இந்த ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட தமிழர் 
			தாயகம், அதன் தனித்துவமான மக்கள், அவர்களுக்குரிய பாதுகாப்புப்படை, 
			காவல்துறை, நீதித்துறை போன்ற தனித்துவமான அம்சங்கள் ஏற்றுக் 
			கொள்ளப்பட்டு, தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை யதார்த்த அரசு உள்ளது 
			என்ற உண்மையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
			 
			� இப்படிப்பட்ட ஒரு நடைமுறை, யதார்த்தத் தமிழ்அரசு பிரிதொரு அரசான 
			சிறிலங்கா அரசோடு உடன்பாடு ஒன்றினை எட்டக்கூடிய தகுதியும் திறனும் 
			கொண்டதாக உள்ளது என்ற உண்மையும் இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
			 
			� மேலும் இந்த ஒப்பந்தம் இரண்டு தரப்பினரின் படை வலுச் சமநிலையின் 
			அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டது. 
			 
			� இனத்துவ முரண்பாடு உள்ளது என்ற உண்மை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
			மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
			 
			� இந்த இனத்துவ முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அரசு, தமிழீழ 
			விடுதலைப்புலிகளோடுதான் பேச வேண்டும் என்ற யதார்த்தத்தை இந்தப் 
			புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்தியுள்ளது. 
			 
			� �சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேசுவதன் மூலமே இனத்துவ 
			முரண்பாட்டிற்குத் தீர்வு கிட்ட முடியும்� என்ற கூற்றானது �தமிழ் 
			மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே� என்ற யதார்த்ததை, 
			உண்மையை ஏற்றுக் கொள்வதாக உள்ளது. 
			 
			புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுள்ள இந்தத் தனித்துவமான அம்சங்கள், 
			தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நகர்வில் முக்கியமான இடத்தை 
			வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. 
			 
			இன்று எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டு, நடைமுறையில் 
			செயலற்றுப் போயிருக்கின்ற இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், 
			எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய விடுதலைக்கு உதவுகின்ற காரணிகளில் ஒன்றாக 
			விளங்கக் கூடும்.! இந்த முக்கிய விடயத்தைப் பின்னர் தர்க்கிப்போம். 
			 
			போர்நிறுத்த ஒபபந்தத்தின் அடிப்படை நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக 
			இடம் பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறித்துச் சில விடயங்களை இவ் 
			வேளையில் தர்க்கிக்க விழைகின்றோம். சிறிலங்கா அரசுடன் நடைபெற்ற எட்டுப் 
			பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சில தலையாய 
			விடயங்களை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்கள். 
			 சுமார் 
			முப்பது ஆண்டு காலமாக தொடர்ந்து தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 
			மோசமான போர்களின் காரணமாகத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மாபெரும் 
			மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை, அனைத்து 
			அமைதிப் பேச்சு வார்த்தைகளின் போதும், தமிழீழ விடுதலைப்புலிகள் 
			வலியுறுத்தி வந்துள்ளார்கள். 
			 தமிழர் தாயகப்பகுதியில் இயல்பு நிலை ஏற்படுத்தபட 
			வேண்டியதன் அவசியத்தையும், நியாயத்தையும் இந்தப் பேச்சுவார்த்கைளின் 
			போது விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளார்கள். 
			அத்தோடு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் 
			ஆக்கிரமிப்பும், இராணுவ கெடுபிடிகளும் நீங்காவிட்டால் அமைதிப் 
			பேச்சுக்களுக்கான சாதகமான, உகந்த புறநிலை ஏற்பட முடியாது என்பதையும் 
			நேரடி சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் வலியுறுத்தி 
			வந்திருந்தார்கள். 
			 
			ஆனால் சிறிலங்கா அரசு அசைந்து கொடுக்கவில்லை.! 
			 
			அசைந்து கொடுக்காத சிறிலங்கா அரசை அசைத்து, இசைய வைத்து, தமிழர் 
			தாயகத்தின் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பல 
			பிரேரணைகளையும், கட்டமைப்பு ஆலோசனைகளையும் விடுதலைப் புலிகள் 
			வழங்கினார்கள். ஆனால் இந்தப் பிரேரணைகளில் சிலவற்றை கொள்கையளவில் 
			ஏற்றுக் கொண்ட சிறிலங்கா அரசு பின்னர், அவற்றை நிறைவேற்றாது புறம் 
			தள்ளியது. அதற்குச் சிறிலங்காவின் அரசியல் அமைப்பை, அரசு காரணம் 
			காட்டியது. 
			 
			ஆனால் நாம் முன்னர் கூறியபடி, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதன் 
			காரணமாக எழுந்த பேச்சு வார்த்தைகளும், சிறிலங்காவின் அரசியல் அமைப்பின் 
			எல்லைகளுக்கு அப்பால்தான் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றைக் 
			கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு, அவற்றிற்குரிய 
			செயற்பாட்டுத் திட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தமையானது, 
			முன்னுக்குப்பின் முரணான விடயமாகும். 
			 
			ஆனால், சமாதானப்பேச்சு வார்த்தைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் 
			பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் பல திட்டங்களையும் 
			அவற்றைச் செயல்படுத்துவதற்கான உபகுழுக்களையும் உருவாக்கினார்கள். 
			 
			தமிழர் தாயகப் பகுதியில், தூய மனிதாபிமான அடிப்படையில், இயல்பு 
			நிலையைக் கொண்டு வரும் பொருட்டு, வடக்கு-கிழக்குக்கான �உடனடிப் 
			புனர்வாழ்வுக்கான உபகுழு (ளுஐர்சுN)� உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த 
			உபகுழு, சிறிலங்கா அரசினால் செயலிழக்கப்பட்டது. 
			 
			இதனையடுத்து, தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கு முகம் 
			கொடுத்து, அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான புறநிலையைத் 
			தோற்றுவிக்கும் பொருட்டு, �இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான 
			(ஐளுபுயு) வரைவு ஒன்றை விடுதலைப் புலிகள் சமர்ப்பித்தார்கள். இதனை 
			நிராகரிக்கும் வகையில் சிறிலங்காவின் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா 
			குமாரதுங்க சிறிலங்காவின் பாராளுமன்றத்தையே கலைத்து விட்டார். 
			 
			2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுனாமி ஆழிப்பேரலையானது, 
			இலங்கைத்தீவுக்குப் பாரிய அனர்த்தத்தைக் கொண்டு வந்தது. மிகப்பெரிய 
			அளவில் தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப் பட்டார்கள். இந்த மாபெரும் 
			மனிதநேய நெருக்கடிக்கு முகம் கொடுத்து, தமிழர் தாயகப் பகுதியில் 
			சர்வதேச உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் �பொதுக்கட்டமைப்பு 
			(வுழுஆளு) உடன் படிக்கை� எட்டப்பட்டது. 
			 
			ஆனால் இந்த உடன்படிக்கையையும், அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி, 
			சிறிலங்காவின் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 
			 
			சர்வதேசத்தின் அனுசரணையுடன் ஆரம்பமாகிய சமாதானப் பேச்சு வார்த்தைகளின் 
			ஒவ்வொரு கட்டத்திலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இதயசுத்தியுடன் 
			செயற்பட்டு வந்ததையும், ஆனால் சிறிலங்கா அரசோ அடிப்படை மனிதநேயம் கூட 
			இல்லாமல் இயல்பு வாழ்விற்கும் சமாதானத்திற்கும் எதிரான செயற்பாடுகளையே 
			மேற்கொண்டு வந்ததையும் இந்தச் சம்பவங்கள் பகிரங்கமாகவே நிரூபித்து 
			நிற்கின்றன. 
			 
			ஆனால் சர்வதேசம், நடுநிலையில் நின்று நேர்மையான நடவடிக்கைகளை 
			எடுக்காமல் இருந்ததானது, நிலைமைகளை மிகவும் மோசமாக்கியது. அத்தோடு, 
			தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, 
			தேவையற்ற அழுத்தங்களையும், தடைகளையும் சர்வதேசம் மேற்கொள்ள 
			முனைந்ததானது, சிறிலங்காவின் பேரினவாதச் செயற்பாடுகளுக்கு இசைவாக 
			அமைந்தது. 
			 
			தமிழ் மக்களுடைய மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கே இவ்வளவு 
			அலட்சியம் காட்டி வருகின்ற சிறிலங்கா அரசுகள், தமிழ் மக்களின் தேசியப் 
			பிரச்சனையை எவ்வாறு தீர்த்து வைக்க முன்வரும் என்ற கேள்வி இன்று 
			எல்லோர் மனங்களிலும் எழுந்து நிற்கின்றது. 
			 
			மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு, சிறிலங்கா 
			அரசு வெளிப்படையாகவே யுத்தநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மகிந்த 
			பதவிக்கு வந்தபின்பு, ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 
			போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும், துணை 
			இராணுவக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாகவும் சிறிலங்கா அரசு 
			உறுதியளித்திருந்தது. ஆனால் இவற்றை முறையாக அமல்படுத்தாதது 
			மட்டுமல்லாது, தமிழர் தாயகப்பகுதிகளில் மிகவும் மோசமான இராணுவ 
			நடவடிக்கைகளை மகிந்தவின் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. 
			 
			பொருளாதாரத்தடை, உணவு, மருந்துத்தடை, பயணத்தடை என்பவற்றோடு கொலைகள், 
			காணாமற் போதல்கள், விமானக் குண்டுத்தாக்குதல்கள், யுத்த அனர்த்தங்கள் 
			போன்றவற்றிற்கும் இன்று தமிழர் தேசம் முகம் கொடுத்து வருகின்றது. இன்று 
			சுமார் ஆறு இலட்சம் தமிழ்ப் பொது மக்கள் திறந்த வெளிச் 
			சிறைச்சாலையினுள் அடைக்கப்பட்டுள்ளதோடு, மூன்று இலட்சத்திற்கும் 
			மேற்பட்ட தமிழ் மக்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள். 
			 
			இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமும், பின்னர் சமாதானப்பேச்சு வார்த்தைகளும் 
			ஆரம்பமானபோது, இவை குறித்துத் தமிழரிடம் நம்பிக்கை ஏற்பட்டமைக்குக் 
			காரணம் இருந்தது. அந்த நம்பிக்கை சர்வதேச சமூகம் அளித்த ஆதரவினை 
			ஒட்டியே எழுந்தது. சிறிலங்காவின் அரசுகளினதும், அவற்றின் சிங்கள 
			தலைமைகளிடமும் தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக 
			சர்வதேச கமூகத்தின் நேர்மையில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த 
			படியால்தான், யுத்த நிறுத்த அமலாக்கம் குறித்தும், சமாதானப் 
			பேச்சுக்கள் குறித்தும், தமிழ் மக்கள் அன்று நம்பிக்கை 
			கொண்டிருந்தார்கள். 
			 
			ஆனால் இன்று சர்வதேசம் சிறிலங்கா அரசின்மீது காத்திரமான நடவடிக்கைகளi 
			எடுக்கத் தவறி விட்டது. மாறாக வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு 
			வருகின்றது. சர்வதேசம் தன்னுடைய நடுநிலையான தன்மையாலும், ஆக்கபூர்வமான 
			பங்குபற்றுதலாலும்தான் நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும். 
			மாறாகச் சர்வதேசம் தமிழர் தரப்பை பலவீனப்படுத்த முனைவதானது அதனுடைய 
			நேர்மைத் தன்மைமீது சந்தேகத்தை எழுப்புவதாகவே அமைகின்றது. 
			 
			சர்வதேசத்தின் இத்தகைய நிலைபடபாடு காரணமாக மகிந்த ராஜபக்ச உற்சாகம் 
			கொண்டு, போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். பயங்கரவாதத்தை 
			முற்றாக ஒழித்துக் கட்டுவேன். என்று அறைகூவல் விடுத்துக் கெகாண்டு 
			தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சியில் 
			இறங்கி வருகின்றார். 
			 
			மகிந்த ராஜபக்சவின் இந்தத் திட்டம் எவ்வாறு படுதோல்வியில் முடியப் 
			போகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக, வரலாற்றில் இருந்து சில 
			நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். 
			 
			1979ம் ஆண்டு, ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஒரு பகிரங்க அறைகூவலை விடுத்தார். 
			�தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகளை முற்றாக 
			அழித்தொழிப்போம்� என்று ஜே.ஆர் ஜெயவர்த்தனா முழங்கினார். 1979ம் ஆண்டு 
			ஜீலை மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜே.ஆர் கொண்டு வந்தார். 
			1979ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள்-அதாவது ஆறுமாத 
			காலத்துக்குள் �தமிழ்ப்பயங்கரவாதிகளை� முற்றாக அழித்தொழிக்கும்படி 
			ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது படைகளுக்கு கட்டளையிட்டார். 
			 
			சிறிலங்காப் பொலிசுக்கும், இராணுவத்தினருக்கும் அளவு கடந்த அதிகாரங்கள் 
			வழங்கப்பட்டன. எவரையும் கைது செய்யலாம். கைது குறித்துக் கேள்வி கேட்க 
			முடியாது. பதினெட்டு மாத காலத்திற்கு வழக்கு தொடுக்காமல் காவலில் 
			வைத்திருக்கலாம். காவலில் இருக்கும்போது செத்தால் கேள்வியோ விசாரணையோ 
			கிடையாது- என்கின்ற நிலைமை உருவாகியது. 
			 
			1979ம் ஆண்டு ஜீலை மாதம் 14ம் திகதியன்று ஜே.ஆர்.ஜெயவர்த்னா, தன்னுடைய 
			மருமகனாகிய பிரிகேடியர் திஸ்ச வீரதுங்கவை, கட்டளைத் தளபதியாக, 
			யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 
			ஜீலை 13ம் திகதியன்று, ஆனைக்கோட்டை காவல் நிலைய அதிகாரியான கருணாரட்ன 
			என்பவர் இன்பம், செல்வரத்தினம் ஆகியோரை கைது செய்தார். அதற்கு 
			அடுத்தநாளான 14ம் திகதியன்று பரமேஸ்வரன் ராஜேஸ்வரன், சுபாஸ், 
			பாலேந்திரா ஆகியோரையும் கருணா ரட்னா கைது செய்தார். இவர்கள் அனைவரும் 
			சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இந்திரராஜா என்பவர் 
			காயங்களுடன் மருத்துவமனையில் ஜீலை 14ம் திகதி இறந்தார். 
			 
			தனிநாடு கோருகின்ற தமிழ் இளைஞர்களை கைது செய்து கொல்கின்ற வேட்டையில் 
			சிறிலங்கா இராணுவமும, பொலிசாரும் சேர்ந்து நடாத்தின. அன்றைய தினம் 
			தனிநாடு கோரிப் போராடிய இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பதுக்குள் 
			தான் இருந்தது என்று கணிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜே.ஆரின் இந்தப் 
			பயங்கரவாதிகள் ஒழிப்பின் நடவடிக்iயின் பின்னர்தான் தமிழ்ப்போராளிகளின் 
			எண்ணிக்கை பல்லாயிரக் கணக்காக பெருகியது. 
			 
			ஜே.ஆரின் பின்னர் வந்த சிறிலங்காவின் அரச தலைவர்களும், ஜே.ஆரைப் போலவே 
			பேசினார்கள். செயல்பட்டார்கள். ஜே.ஆர், பிரேமதாசா, சந்திரிக்கா என்று 
			எல்லோரும் �தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு� எதிராகப் பெரிய படைகளை நடாத்தி 
			வெற்றி கண்டு விட்டதாக சொன்னார்கள். ஆனால் ஈற்றில் என்னதான் நடந்தது.? 
			 
			ஜே.ஆரின் படையெடுப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெருமளவு 
			போராளிகளைச் சேர்த்து வைப்பதற்கு உதவியது. பிரேமதாசாவும், 
			சந்திரிக்காவும் தங்கள் பங்கிற்கு, ஆட்டிலெறி உட்படக் பாரிய 
			படைக்கலன்களை தமிழீழ விடுதலைப் போராட்டதிற்குப் பெற்றுத் தந்தார்கள். 
			இப்போது அதிபர் மகிந்த ராஜபக்ச, �தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு� எதிராக, 
			தன்னுடைய முன்னோரின் பாணியில் போரைத் தொடங்க உள்ளார். பயங்கரவாதத் 
			தடைச்சட்டத்தையும் மீளக் கொண்டு வந்துள்ளார். 
			 
			மகிந்த ராஜபக்ச தன்னுடைய முன்னோரைப் பின்பற்றி தமிழீழப் 
			போராட்டத்திற்குப் பெற்றுத்தரப் போவது என்ன? 
			  
			 
			இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதப் போக்கால் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
			சாகடிக்கப்பட்டதோடு சமாதானப்பேச்சு வார்த்தைகளின்போது 
			ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களும், செயல் இழக்கப்பட்டுள்ளன. 
			சமாதானத்திற்குப் போகும் தமிழர்களைப் படைபலம் கொண்டு அழிக்கப் போவது 
			சிறிலங்காவின் வாடிக்கையாகி விட்டது. இன்று இத்தகைய அநியாயங்களைத் 
			தெரிந்து கொண்டும் உணர்ந்து கொண்டும் கூட, உலகம் மௌனமாகக் கண்மூடி 
			நிற்கின்றது. ஆனால் இந்த யதார்த்தத்தை உலக அரங்கிற்கு வெளிப்படையாகக் 
			கொண்டு சென்றதும் இதே சிறிலங்காதான்! 
			 
			தனக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சர்வதேசத்தை இன்று இக்கட்டான நிலைக்கு 
			கொண்ட வந்துவிட்ட அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது அடுத்த கட்ட 
			நடவடிக்கைகள் மூலம் சர்வதேசத்தை சரியான முறையில் செயலாற்ற வைப்பார் 
			என்றெ நம்புகின்றோம். அதாவது தன்னுடைய சிங்கள-பௌத்தப் பேரினவாத 
			நடவடிக்கைகளின் மூலம் மகிந்தவே, சர்வதேசத்தின் மௌனத்தைக் கலைக்கப் 
			போகின்றார். 
			 
			மகிந்தவின் முன்னோர்கள் நடாத்திய �பயங்கரவாத அழிப்புப் போர்கள்� 
			காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய வளர்ச்சி பெற்று தமிழர் 
			தாயகத்தின் பெரும் பகுதியை மீட்டெடுத்து, நிர்வகித்தும் வருகின்றது. 
			இது மகிந்தவின் முன்னோர்கள் பெற்றுத் தந்த விடயங்களாகும். 
			 ஆனால் 
			மகிந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தருவதற்கு ஒன்றே ஒன்றுதான் 
			பாக்கியுள்ளது. அதைத்தான் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திடமிருந்து 
			பெற்றுத்தரப் போகின்றார். அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான 
			சர்வதேசத்தின் அங்கீகாரம்! 
			 
			மகிந்தவின் பேரினவாதப் போர்க்கால நடவடிக்கைகள் இந்த அங்கீகாரத்தைப் 
			பெற்றுத் தரப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. மகிந்தவின் 
			முன்னோடிகளின் காலத்தைப் போல், இனி வருவது மகிந்தவின் காலம்! 
   |