சிறிலங்கா
அரசும், தமிழீழ விடுதலைப்புலிகளும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த பெப்ருவரி
மாதம் 22ம் திகதியோடு ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்றன.
இந்தவேளையில், ஒரு கருத்து உலகளாவிய வகையில் தமிழ் மக்களிடையே நிலவி
வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று ஐந்து
ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில், விடுதலைப் போராட்டத்திற்கான �உலக
அங்கீகாரம்� கிடைத்துவிடும் என்ற கருத்து ஒன்று உலகத் தமிழர்களிடையே
விதைக்கப்பட்டதன் விளைவாக எம்மவரிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று
எழுந்திருக்கிறது.
இந்தக் கருத்துமிகப் பிழையானது என்பதையும் இந்தக் கருத்து ஒரு மாயை
என்பதையும், இந்தக் கருத்து ஒரு புனைந்து விடப்பட்ட புரளி என்பதையும்,
தர்க்க ரீதியாக வெளிப் படுத்துவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இந்தத் தர்க்கங்களின் ஊடாக சம கால அரசியல் நிலை குறித்துச் சில
கருத்துக்களை முன் வைப்பது இக்கட்டுரையின் அடிப்படை எண்ணமுமாகும்.!
முதலில் இந்தக் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்தும் அதன்
சில சரத்துக்கள் குறித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.
இவை சில அடிப்படைத் தெளிவுகளைத் தரக்கூடும்.
2002 ஆண்டு பெப்ருவரி மாதம் 22ம் திகதியன்று கைச்சாத்திடப்பட்ட இந்தப்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னுரை
(Preamble) ஒரு அடிப்படை விடயத்தை
தெளிவாக்குகிறது. அது வருமாறு:
�இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு
பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஒன்றைக் காண்பதுவே சிறிலங்கா ஜனநாயகச்
சோசலிசக் குடியரசினதும் (GOSL ) தமிழீழ
விடுதலைப் புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான
நோக்கமாகும்.
இவ்வாறு ஒட்டுமொத்தமான நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ள இந்த முன்னுரை,
இதனை நிறைவேற்றும் பொருட்டு, பகைமை நிலையை முடிவுக்கு கொண்டு வந்து
அதன் ஊடாக சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
ஆனால் இன்று பகைமை நிலை முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.! அதன்
காரணமாக, இன்று சாதகமான சூழ்நிலையும் உருவாக்கப்பட வில்லை.
�புரிந்துணர்வு ஒப்பந்தம், என்றும், �யுத்த நிறுத்த ஒப்பந்தம்� என்றும்
அழைக்கப்படுகின்ற இவ் ஒப்பந்தத்தின் சரத்துக்களை அக்குவேறு ஆணி வேறாக
பிரித்து ஆரயாயப் போகாமல் சில முக்கிய வியடங்களை மட்டும் கருத்தில்
கொள்வது போதுமானதாகும்.
இந்த ஒப்பந்தத்தின் சில முக்கியமான சரத்துக்கள் சிறிலங்கா அரசை மட்டும்
கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டவையாகும். அதில் ஒரு சரத்தான 1.2.டீ
என்பதானது, �விமானக்குண்டு வீசுசுத் தாக்குதல்கள் நடாத்தப் படக்கூடாது�
என்பதை வலியுறுத்தியுள்ளது. இது சிறிலங்கா அரசைக் குறித்து வரையப்பட்ட
சரத்தாகும். இன்று மகிந்த ராஜபக்சவின் அரசு இந்தச் சரத்தை வெளிப்படையாக
அப்பட்டமாக தொடர்ந்தும் மீறி வருகின்றது.
இன்னுமொரு சரத்தான 1.3 வேறொரு முக்கிய விடயத்தை குறிக்கின்றது. அது
வருமாறு:
சிறிலங்கா இறைமையையும், நில ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்ற தமது
சட்டரீதியான பணியை மேற்கொள்கின்ற சிறிலங்காவின் ஆயுதப்படையினர், தமிழீழ
விடுதலைப் புலிகள் மீதான வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்
கூடாது.
இதனையும் சிறிலங்காப் படைகள் மீறிவருவது, எல்லோரும் அறிந்த விடயமாகும்.
சரத்து 1.8 தமிழ்த்துணை இராணுவக் குழுக்கள் பற்றி வரையறுத்துள்ளது. அது
வருமாறு:-
�யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் தினத்திலிருந்து முப்பது
நாட்களுக்குள், தமிழ்த் துணை இராணுவக் குழுக்களை சிறிலங்கா அரசு
ஆயுதமற்றவர்களாக்கும். ..�
இவ்விடயம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படாதது மட்டுமன்றி, கடந்த ஆண்டு
மீளவும் ஜெனிவாப் பேச்சு வார்த்தைகளின் போது வலியுறுத்தப் பட்டது.
ஆனால் சிறிலங்கா அரசு இதனை அமல்படுத்தாதது மட்டுமன்றி துணைக் குழுக்களை
விரிவுபடுத்தியும் வருகின்றது.
கடைசியாக இன்னுமொரு சரத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சரத்து 1.9
இவ்வாறு கூறுகிறது.:-
இரண்டு தரப்பினரது படைகளும் சரத்து 1.4 மற்றும் 1.5 ஆகியவற்றில்
கூறப்பட்டுள்ளபடி, ஆரம்பத்தில் இருந்த தத்தமது கட்டுப்பாட்டுப்
பிரதேசங்களுக்குள் இருக்க வேண்டும்.
இந்த சரத்தை முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டு, இன்று மகிந்த
ராஜபக்சவின் படைகள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றன.
இன்று இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள
வேளையில் சில வெளிப்படையான உண்மைகள் முரசறைந்து நின்கின்றன. இந்த யுத்த
நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு முழுமையாக மீறி வெளிப்படையான
யுத்தம் ஒன்றைத் தமிழர் தேசம் மீது மேற்கொண்டு வருகின்றது என்பதானது
ஒரு உண்மையாகும். அத்தோடு எந்த நோக்கத்திற்காக இந்த ஒப்பந்தம்
கைச்சாத்திப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது, அதாவது பகைமை நிலைமை
முடிவுக்கு கொண்டுவர முடியாது போயுள்ளது. அதன் காரணமாக பேச்சுவார்த்தை
மூலமாக எந்தவிதமான ஒரு தீர்வும், இந்த ஒப்பந்தம் ஊடாக பெற முடியாமல்
போயிற்று.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் ரணில்
விக்கிரமசிங்கவின் முன்னைய அரசோ, அல்லது மகிந்த ராஜபக்சவின் இன்றைய
அரசோ முன்வைக்க வில்லை. இப்போது டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி
போன்றோரின் குறைந்த பட்சக் கோரிக்கைகள் குறித்து மகிந்த ராஜபக்ச
கரிசனமாகப் பேசத் தொடங்கியுள்ளார். அந்த குறைந்த பட்சக் கோரிக்கைகள்
குறித்து விரிவாக பேசுவதற்கும் மகிந்த ராஜபக்ச தயாராக இல்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளோ ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார
சபைக்குரிய ஆலோசனை வரைவைத் தயாரித்து வழங்கியிருந்தார்கள். அதனை
சிறிலங்காவின் அதிகார மையம் கிடப்பில் போட்டது. பின்னர் ஆழிப்பேரலை
அனர்த்தம் வந்தபோது நிவாரண திட்டங்களை மேற்கொள்வதற்குரிய
பொதுக்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்குரிய பொதுக்கட்டமைப்புத்
திட்டம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கினார்கள். சிறிலங்காவின்
உயர் நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடையை விதித்தது.
கடந்த வாரம் BBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த
செவ்வியொன்றில் சிறிலங்காவின் அரச அதிபர் புரிந்துணர்வு
ஒப்பந்தத்திற்கு எதிரான தனது கருத்தை வெளியிட்டுள்ளார். �புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசு கையெழுத்திட்டமையானது மிகத் தவறான விடயம்
என்பதை நாங்கள் இப்போது உணர்ந்துள்ளோம்�- என்று வெளிப்படையாகவே மகிந்த
சொல்லியுள்ளார்.
ஆகவே நடைமுறையில் மட்டுமல்ல கொள்கையளவிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இன்று இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது என்றோ செத்து விட்டது.
இதனை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் தினப் பேருரையின்
போது தெளிவாக குறிப்ப்ட்டு விட்டார்.
ஆகவே இங்கே ஐந்து ஆண்டுப் பூர்த்தி என்பது எங்கே வருகிறது? ஒன்றுமே
நிறைவேற்ற முடியாத ஒன்று, எதனைப் பூர்த்தி செய்து விட்டுள்ளது?
இவ்வகையான ஒப்பந்தங்கள் ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகள்
கழிந்தாலும் எத்தகைய அங்கீகாரத்தையும் பெற்றுத் தராது. இவ்வாறு உலகம்
அங்கீகாரத்தை தரும் என்று கருதியதே மிகப்பிழையான ஒன்றாகும். இப்பபடிப்
பட்ட ஒப்பந்தங்கள் ஊடாக அங்கீகாரம் வரும் என்பதுவும் உலக வழக்கில்லை.
நாம் முன்னர் சொன்னபடி இந்தக் கருத்தியல் மிகப்பிழையான ஒன்றாகும்.
இப்படிப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக அங்கீகாரம் வரும் என்பதுவும் உலக
வழக்கில்லை! நாம் முன்னர் சொன்னபடி இந்தக் கருத்தியல் மிகப்பிழையான
ஒன்றாகும். இதுஒரு மாயை! இது வேண்டுமென்றே புனைந்து விடப்பட்டுள்ள ஒரு
புரளி! இதில் உலகத் தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் எமது
தாழ்மையான அதேவேளை நேர்மையான வேண்டுகோளாகும்.!
உதாரணத்திற்கு பொதுவான சில விடயங்களை சுட்டிக் காட்ட விழைகின்றோம்.!
ஒடுக்கப் பட்டு வருகின்ற மக்கள் தங்களுடைய விடுதலையை அடைவதற்குரிய
போராட்டத்தினை அங்கீகரிக்கும் போக்கு பொதுவாக உலகத்தில் உண்டு. ஐக்க்ய
நாடுகள் சபையை பொறுத்த வரையில் தன்னாட்சி உரிமைக்கான குறிப்பிடப்பட்ட
போராட்டங்களை அங்கிகரித்த போக்கும் உண்டு. ஆனால் அவை நடைமுறைப்
படுத்தப்படாமல் கிடப்பிலேயே இருப்பதைத்தான் வரலாற்றில் காண
முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள்
நடைமுறையில் அமல் படுத்தப் படுவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை
சொல்லிவருகின்ற விடயங்களும் கருத்துக்களும் செயற்படுத்தப்படாமல்
இருப்பதையும் நாம் சுட்டிக்காட்ட முடியும். செயலற்ற ஒப்பந்தங்கள்
பேரளவில் மட்டும் கையெழுத்திடப்பட்டுக் கிடப்பதாலோ, அல்லது ஒரளவிற்கு
செயற்படுவதனால் மட்டுமோ அங்கீகாரம் எதுவும் கிடைத்து விடப்போவதில்i.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கிடைத்துள்ள முக்கியமான பலன்,
சிங்கள பௌத்த பேரினவாதத்தை உலகினருக்கு தோலுரித்துக் காட்டியதேயாகும்.
வேறு எந்த விதமான பலனையும் தமிழர்கள் பெற்று விடாதவாறு சிங்களத்
தலைமைகள் இடையூறாகவே இருந்து வந்துள்ளன.
மகிந்த ராஜபக்ச, முழுமை நிறைந்த தீர்வுத் திட்டம் ஒன்றை ஒருபோதுமே
வைக்கப் போவதில்லை. முழுமையான தீர்வுத் திட்டம் என்பதானது தமிழர் தாயக
செயற்பாட்டை ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும். அதனை ஒருபோதும் சிங்களப்
பௌத்த பேரினவாதியான மகிந்த ராஜபக்ச செய்ய மாட்டார்.
சிறிலங்காவின் அரச அதிபரான மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப்
புலிகளுடனான ஒப்பந்தத்தை மட்டும் உடைக்க வில்லை. ஐக்கிய தேசியக்
கட்சியுடனான ஒப்பந்தம் உடைபடுவதற்கும் மகிந்தவே காரணமாக இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது, தனது கட்சிக்குள்ளும், தனது அரசாங்கதிற்குள்ளும் பல
அதிரடி மாறுதல்களையும் மகிந்த மேற்கொண்டு வருகின்றார். தன்னுடைய
அமைச்சரவையிலிருந்த மூன்று முக்கிய அமைச்சர்களை பதவியில் இருந்து
நீக்கியுள்ளார். அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களைத் தன்னுடைய
கட்சிக்குள் உள்வாங்கி வருகின்றார். இச்செயற்பாடுகள் ஒரு விடயத்தை
தெளிவாக்குகின்றன. தனது கட்சிக்குள் செல்வாக்கு உள்ளவர்களை வெளியேற்ற
முயல்வதாகவும், அதேவேளை செல்வாக்கற்ற ஐக்கிய தேசியக்கட்சி
உறுப்பினர்களை அவர் உள்வாங்குவதாவும் மகிந்த தனது கட்சியையும்,
அரசாங்கத்தையும் தனது மற்றும் தனது குடும்பத்தாருடைய
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே செய்து வருகின்றார் என்பது
தெளிவாகின்றது. மெல்ல மெல்ல அவருடைய குடும்ப உறுப்பினர்களும், மிக
நெருக்கமானவர்களும் முக்கிய அரசுப் பொறுப்புகளை ஏற்று வருதையும் நாம்
பார்க்கின்றோம்.
இங்கே ஐக்கிய தேசியக் கட்சியின் இரட்டை நிலையையும் நாம்
சுட்டிகாட்டியாக வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை மகிந்த ராஜபக்ச
உடைக்கின்றார். ஆனால் மகிந்த கொண்டு வருகின்ற அவசரகாலச் சட்ட
நீடிப்பிற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு கொடுத்து வருகின்றது. இதற்கான
அடிப்டைக் காரணம் வேறு எதுவுமில்லை. இது சிங்கள பௌத்த பேரினவாதச்
சிந்தனைக்கான ஆதரவு என்பதுதான் காரணம். தமக்குள் எவ்வளவு போட்டியும்
பொறாமையும் இருந்தாலும் கொள்கையளவில் தமது பேரினவாத சிந்தனைக்கு
ஆதரவாகத்தான் சிங்களக் கட்சிகள் செயற்படும் என்பதற்கு இது ஒரு நல்ல
உதாரணம். சந்திரிக்கா குமாரதுங்க இருந்தாலும் சரி, மகிந்த ராஜபக்சவாக
இருந்தாலும் சரி, இவர்கள் செய்வது ஒன்றேதான். அதனை அவரவர்கள் தங்களுடைய
பாணியில் செய்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் சுயநலப் போக்கையும், பதவி
ஆசையையும் நாம் இங்கே கட்டாயம் சுட்டி காட்ட வேண்டும். நாம் இதுவரை
தர்க்கித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகுவதற்கு சிறிலங்கா அரசு
தரப்பில் பல ஐக்க்ய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அன்று
சம்பந்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் பின்னர் சமாதானப் பேச்சு
வார்த்தைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஆனால் இன்றோ தமது
சுயநலத்திற்காகவும், பதவிகளுக்காகவும் இன்று இவர்கள் கட்சிமாறி மகிந்த
ராஜபக்சவுடன் சேருகின்றார்கள். இப்படிப் பட்டவர்களா பொது நலன்கருதி
சமாதானத்தீர்வு ஒன்றைக் கொண்டு வருவார்கள்?. சிங்களப் பேரினவாதத்தோடு
இன்று கைகோர்த்து கொண்டு நிற்கும் இவர்களா சமாதானப் பேச்சுவார்த்தைகளை
அன்று முறையாகக் கொண்டு சென்றிருப்பார்கள்.? புரிந்துணர்வு ஒப்பந்தம்
வருவதற்கு அன்றைய அரசு சார்பில் முக்கியமாக இருந்த இவர்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்க்க்ன்ற இன்றைய அரசோடு இன்று
கூடிக்குலவி வருகின்றார்கள். சுயநலமும், பதவி ஆசையும், பேரினவாதச்
சிந்தனையும் கொண்ட இந்த இரண்டு சிங்களக் கட்சிகள் ஊடாக
தமிழர்களுக்குரிய தீர்வு சமாதான முறையில் வருவதற்கு இப்போதைக்கு
வழியில்லை.
இராணுவத்தீர்வை முன்வைக்கின்ற மகிந்த ராஜபக்ச, அரசியல் நிர்வாகத்
திட்டங்கள் ஊடாகவும் தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்திருக்கின்றார்.
இப்போது அவர் கிழக்கை மூன்று பகுதிகளாக அதாவது திருகோணமலை, அம்பாறை,
மட்டக்களப்பு என்று பிரிக்கின்றார். இங்கே இன்னுமொரு விடயத்தையும்
மகிந்த செய்வதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும். மட்டக்களப்பை
பொறுத்தவரையில், அதிகார மையம் மட்டக்களப்பில் அமைய வேண்டும். ஆனால்
மகிந்தவோ அதிகார மையத்தை கல்முனையில் வைப்பதற்கு முனைகின்றார்.
தாயகப்பகுதிகளைப் பிரிக்க முனைவதோடு மட்டுமல்லாது, அதிகார மையங்களையும்
மகிந்த வேறு எங்கோ கொண்டுபோய் வைக்க முனைகிறார்.
இங்கே விலகி நின்ற ஒரு முக்கியமான கருத்தைத் தர்க்கிக்க விழைகின்றோம்.
கருணா கிழக்கின் நன்மைக்காக, நலனுக்காக போராடுவதாகச் சொல்கின்றார்.
ஆனால் அவரை வைத்துக்கொண்டே(?) மகிந்த கிழக்கை மூன்று கூறுகளாக பிரிக்க
முயல்கின்றார். இது கருணா சொல்கின்ற கிழக்கின் நலனுக்கே எதிரான
ஒன்றாகும். கருணா தன்னையும் மேலும் கூறுகளாக உடைத்துக் கொள்கிறார்.
இங்கே ஒரு விடயம் தெளிவாகின்றது. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்
பிரசேங்களாகும் .இவற்றைப் பிரித்தால் எவருக்குமே உரிமை கிட்டாது
என்பதுதான் அந்த விடயமாகும்.!
சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, போரை வெல்வதற்காகப்
படைக்கலன்களை மட்டுமே நம்பியிருக்கின்றார். அதற்காக பல்லாயிரம் கோடி
ரூபாய்களைச் செலவழித்து பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பெரும்
தொகையான போர்க்கருவிகளைத் தொடர்ந்தும் வாங்கி வருகின்றார். எவ்வாறு
அவருக்கு தமிழர்களின் நலன்குறித்து அக்கறையில்லையோ, அதேபோல் தனது
போரின் வெற்றி தோல்வி குறித்தும் அவருக்கு அக்கறையில்லை, என்பதே
விசித்திரமான உண்மையாகும். போர் தொடர்ந்து நடைபெற்றால்தான் அவருடைய
ஆட்சியும் தொடர்ந்து நடக்கும். அவருக்கு தனது பதவியும், தனது நலனும்
தனது குடும்பத்தின் நலனும் மட்டுமே முக்கியமானதாகும். போர் ஊடாகத்
தமிழர்களைக் கொன்றறொழிப்பதோடு அவர் இன்னுமொரு விடயத்தையும் சேர்த்தே
செய்கின்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அவரும்
அவருடைய அரசும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக செய்து வருவதை நாம்
காண்கின்றோம். இந்தப் போர்வையின் கீழ் அவர் தமிழ் மக்களை மட்டுமல்ல,
சிங்கள மக்களையும் துன்புறுத்தியே வருகின்றார். அவருடைய இலக்கு
தமிழர்களை அழிப்பது மட்டுமல்லாது, தனக்கு எதிரான சிங்களவர்களையும்
அழிப்பதாக அமைக்ன்றது. இந்த வகையில் சிங்களப் பொதுமக்கள் ஏமாளிகளாக
இருப்பதையும் நாம் சுட்டிகாட்ட விழைகின்றோம்.
இன்று ஆயுதக் கொள்வனவிற்காகப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மகிந்த
ராஜபக்ச செலவழிப்பதோடு மட்டுமல்லாது, முன்னர் எப்போதும் இல்லாத
அளவிற்கு மிகப்பெரிய மந்திரி சபையையும் அமைத்து நாட்டிற்குப் பாரிய
செலவினத்தையும் அவர் ஏற்படுத்தி வருகின்றார். இன்று தமிழ் மக்கள்
பொருளாதார தடைகள் ஊடாகப் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கையில்,
அடிமட்டத்துச் சிங்கள மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுகளுக்கு
ஆளாகிக் கடின வாழ்வை நடாத்தி வருகின்றார்கள். மகிந்த ராஜபக்ச தன்னுடைய
சிங்கள மக்களின் நலன் குறித்தே கவலைப்பட வில்லை. அதனால் அவர் தன்னுடைய
மக்களுக்கே ஒழுங்கான ஆட்சியைத் தரமுடியாமல் இருக்கின்றார்.
அந்த வகையில் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னுடைய சிங்கள
நாட்டையே அரசாளுவதற்குத் தகுதி அற்றவர் ஆவார்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான �முகமது
பின் துக்ளக்� என்ற திரைப்படம் மகிந்த ராஜபக்சவின் இன்றைய ஆட்சியை
அதாவது வன்முறைக் கோமாளி ஆட்சியை சித்தரித்துக் காட்டுவதாகவே எடுத்துக்
கொள்ளலாம். எல்லோரையும் தன் கட்சிக்குள் இழுத்து அவர்கள் எல்லோரையும்
உதவிப் பிரதம மந்திரிகளாகத் துக்ளக் நியமித்தது போலத்தான் மகிந்தவும்
இன்று செயல் படுகின்றார். கஷ்டடப்படும் மக்களுக்கு வாக்குறதிகளை
மட்டும் அளியுங்கள்! வேறு ஒன்றையும் கொடுக்க வேண்டாம் என்று துக்ளக்
கூறுவதைப் போலத்தான் மகிந்தவும் இன்று நடந்து கொள்கின்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இந்த
வேளையில் காலத்தின் தேவை கருதிப் புரிந்துணர்வு ஒப்பந்த நிலை
குறித்தும், தற்போதைய அரசியல் நிலை குறித்தும, சில தர்க்கங்களை மன்
வைத்தோம். இந்த ஐந்து ஆண்டு நிறைவுக்கு முன்னரோ அல்லது அதற்
குப்பின்னரோ போர் வெடிக்க கூடும் ஆனால் நாம் சொல்ல வந்தது இது அல்ல!
போர் நிறுத்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து விட்டது என்ற ஒரே
ஒரு காரணத்திற்காக மட்டும் போராட்டத்திற்கான அங்கீகாரம் வந்து விடாது
என்பதுதான்!
ஐந்து வருட காலம் தேவையில்லை. மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே தமிழீழ
விடுதiலைப் போராட்டதிற்கான அங்கீகாரம் கிடைப்பதற்குரிய வழிகள் உண்டு.
அதற்குரிய செயற்பாட்டை நாம்- அதாவது புலம் பெயரந்த தமிழீழ மக்களும்,
தமிழக மக்களும்- முன்னெடுத்தால் அங்கீகாரம் நம்மை நாடியே ஓடி வரும்.!
நாம் முன்னரும் பலதடவைகள் கூறிய கருத்தை இப்போதும் மீண்டும் கூறக்
கடமைப் பட்டிருக்கின்றோம்.
தமிழழ விடுதலைப் போராட்டத்திற்கு மௌனமாக இருந்து ஆதரவு கொடுக்கின்ற
பெரும்பான்மையான எமது உறவுகள், தமது ஆதரவை வெளிப்படையாகவே காட்ட
வேண்டிய காலம் வந்துவிட்டது. புலம் பெயர்ந்த அனைத்துத் தமிழ் மக்களும்,
தமிழக மக்களும் ஒருங்கிணைந்து ஒரே குரலில், தமிழீழ விடுதலைப்
போராட்டதிற்கான எமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் பட்சத்தில்,
அதற்குரிய அங்கீகாரம் நம்மைத் தேடியே வரும்!. அப்போது அரசியல் வாதிகளை
நாம் தேடிப் போக வேண்டி வராது. அவர்களே நம்மைத் தேடி வருவார்கள்.
எம்முடைய போராட்டத்திற்கான அங்கீகாரத்தோடு! நம்மை பலப்படுத்துவதில்
தான் வெற்றியே இருக்கின்றது! அது வேறு எங்கும் இல்லை.!! எம்முள்ளேயே
உள்ளது!!
|