தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவர்கள் சிறிலங்காவின் தலைநகரான
கொழும்பில், மக்கள் நடமாட்டம் செறிந்த பகுதியில் வைத்து படுகொலை
செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தின நள்ளிரவு
பிரார்த்தனையின்போது மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில்
நிறைந்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் மத்தியில் வைத்து நாடாளுமன்ற
உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்தவகையில்,
மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அரச அதிபராக பதவியேற்ற பின்பு, படுகொலை
செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆவார்.!
சிறிலங்கா இராணுவத்தினராலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும்
ஒட்டுக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற
ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராகத் துணிந்து குரல்
கொடுத்து வந்தவர் ரவிராஜ்! சிறிலங்கா அரசின் பயங்கரவாத
நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களையும் ரவிராஜ் மிகக் கடுமையாக
விமர்சித்து வந்துள்ளார். ஏ-9 வீதி மூட்பட்டதற்காக அதிபர்
ராஜபக்சவையும, அவரது அரசாங்கத்தையும் அரச பேச்சாளர் ரம்புக்வெலவையும்
ரவிராஜ் கண்டித்தே வந்துள்ளார். தமிழ் மக்களைச் சாகடிக்க வேண்டும்
என்பதுதான் மகிந்த ராஜபக்ச அரசின் எண்ணமாகும். என்று ரவிராஜ் அவர்கள்
வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். மூன்று மொழிகளிலும்
தனக்கிருந்த புலமையை நன்கு பயன்படுத்தி நடாளுமன்றத்திலும்,
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது மக்களின் விடிவுக்காக ரவிராஜ்
அவர்கள் குரல் கொடுத்து வந்தார்.
இன்று அந்தக் குரலை சிறிலங்கா அரச பயங்கரவாதம் மௌனப்படுத்தி விட்டது.
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் கொலை குறித்து துப்புத்
துலக்குவதற்கும், கொலையாளிகளை கண்டுபிடித்து நீதியை
நிலைநாட்டுவதற்கும், வெளி நாட்டு உதவிகளையும் பெறப்போவதாக சிறிலங்கா
அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆரம்ப ஆர்ப்பாட்டம் விரைவிலேயே
அடங்கிவிடும். மாமனிதர்கள் குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம்
போன்றவர்கள் உட்படப் பல கொலைகளுக்கான விசாரணைகள் கூடப் பின்னாளில் கொலை
செய்யப்பட்டு விட்டன. கொலையாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு
வரப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. 1983ம் ஆண்டு நடைபெற்ற
தமிழினப் படுகொலைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சோனி விசாரணைக்
குழுவிற்கும் அதன் விசாரணைக்கும் என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது.
சன்சோனி அவர்களும் காலமாகி விட்டார்.
சிறிலங்காவின் அரசுகள் அன்றிலிருந்து இன்றுவரை ஜனநாயக விழுமியங்களுக்கு
எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது. அவற்றிற்கு சட்டமும்,
நீதியும், ஜனநாயகமும் ஒரு பொருட்டாக இருந்ததேயில்லை. கடந்த ஐம்து
ஆண்டுகாலத்தில் சிறிலங்கா அரசுகள் செயற்பட்ட விதங்கள் இவற்றைத்
தொடர்ந்தும் நிரூபித்தே வந்துள்ளன. தமிழ்ப் பகுதிகளுக்கு சிங்களப்
படைகளை அனுப்பி அவற்றை அங்கே நிலைகொள்ள வைத்து அரச பயங்கரவாதத்தை
நிலைநாட்டியது. ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த தமிழ் அரசியல் வாதிகளை
அடித்து துன்புறுத்திக் கொடுமைப் படுத்தியது அவர்களை சிறையில்
தள்ளியது. இப்போது சிறிலங்கா அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தமிழ்
அரசியல்வாதிகளைக் கொலை செய்து வருகின்றது.
இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் சுட்டிகாட்ட விழைகின்றோம். ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் யாவருமே அந்த
அரசின் உறுப்பினர்கள்தான். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆளும் கட்சியை
சார்ந்தவர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் அவர்கள் யாவரும் அரசை வழிநடத்துகின்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் அந்த அரசின் அங்கமேயாவர்கள்! சிறிலங்கா
அரச பயங்கரவாதமானது தன்னுடைய எதிர்க்கட்சி அங்கத்தவர்களைக் கொலை
செய்யும் பட்சத்தில் அது ஜனநாயக விழுமியங்களையும் கொலை செய்கின்றது.
மக்களின் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்ற ஓர் அரசானது அந்த மக்களைக்
கொன்று குவிப்பதற்கும் தயங்காது. அதனைத்தான் சிறிலங்கா அரசு
தொடர்ந்தும் செய்து வருகின்றது.
இந்தக் கருத்துக்களை சற்று ஆழமாக சிந்தித்து பார்ப்போம். தமிழ்
மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கொலை செய்யப்படுவதும், தமிழ்
பொதுமக்கள் கொலை செய்யப்படுவதும் ஒரு விடயத்தை தெளிவாகச் சுட்டிக்
காட்டுகின்றன. அதாவது அமைதிவழியூடாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி தமிழர்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்பதைத்தான் இத்தகைய கொலைகள்
தெளிவாக்கியுள்ளன.
அதாவது சிறிலங்கா அரசுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி முறையான தீர்வு
ஒன்றைக் காண்பது என்பது ஒரு மாiயாகும் என்பதே இதன் உட்கருத்தாகும்!
ஆயினும் கடந்த தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளில்
கலந்து கொண்டமைக்குக் காரணம் சிறிலங்கா அரசு மீது நம்பிக்கை அல்ல
என்பதையும், சர்வதேச நாடுகள் மீது புலிகள் கொண்டுள்ள நம்பிக்கையும்
எதிர்பார்ப்பும்தான் என்பதையும், இந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்
நீண்டகாலம் தொடர்ந்து வராது என்பதையும் நாம் ஏற்னவே தர்க்கித்து
விட்டோம்.
இன்று வேறு சில கருத்துக்களை நாம் முன்வைத்து தர்க்கிக்க விழைகின்றோம்.
மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராக வந்து ஓராண்டு ஆகின்ற இந்த
காலவேளைக்குள் அவரும் அவருடைய அரசும் சில செய்திகளை இந்தியா உட்படச்
சர்வதேசத்திற்குத் தெரிவித்து விட்டன. அந்தச் செய்திகளை
உணர்த்துவதற்காக, மகிந்த ராஜபக்சவின் அரசு சில செயற்பாடுகளை நடாத்திக்
காட்டியுள்ளது.
� இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உடைப்பில் போட்டுள்ளது.
� போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவருகின்றது.
� மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும, தொடர்ந்தும்
தமிழ்ப்பொதுமக்களைக் குறி வைத்து தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
� தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள்,
பொதுநலத் தொண்டர்கள், மாணவமாணவிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கொலை
செய்தும் வருகின்றது.
� ஏ-9 நெடுஞ்சாலையை மூடி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பட்டினிக்
கொடுமையின் விளிம்பிற்குத் தள்ளி விட்டிருக்கின்றது.
� மேற்கூறிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நயமான விதங்களில் சர்வதேசம்
கேட்டுக் கொண்ட போதும் சிறிலங்கா அரசு அவற்றை அலட்சியம் செய்து
வருகின்றது.
� சர்வதேச உறுப்பினர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவினர் நிலை
கொண்டிருந்த இடங்களின் மீது பலமுறை தாக்குதல்களை சிறிலங்கா அரசு
நடாத்தியுள்ளது. (நல்லவேளையாக இதுவரை சர்வதேச உறுப்பினர்கள் காயப்படவோ
கொல்லப்படவோ இல்லை.)
இத்தகைய செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா அரசானது தனது சிங்கள பௌத்த
பேரினவாதக் கொள்கைகளை சர்வதேசத்திற்கு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னர் சாத்வீக முறையில், ஜனநாயக ரீதியில் தமது போராட்டத்தை
முன்னெடுத்த தமிழ் தலைவர்களை வன்முறை கொண்டு அடித்து துவைத்துவிட்டு
தமிழினத்தைப் பார்த்து சிரித்தது. சிறிலங்கா அரசு! இன்றும் அதே வகையான
செயற்பாடுகளைச் செய்து கொண்டு சர்வதேசத்தைப் பார்த்து சிரிக்கின்றது
சிறிலங்கா அரசு!
சர்வதேசம் தனது போக்கினை முழுமையாக மாற்றவேண்டிய நேரம் வந்தாகி விட்டது
என்பதைத்தான் நாம் இப்போது வலியுறுத்த விழைகின்றோம். கடந்த
சிலமாதங்களில் சர்வதேசத்தின் சிந்தனைகளில் உள்ளுர மாற்றங்கள்
ஏற்பட்டிருப்பதையும், அவை ஓரளவு வெளிப்படத் தொடங்கியிருப்பதையும் நாம்
சுட்டிக் காட்டியிருந்தோம். சர்வதேசம் முழுமையாக யதார்த்தத்தின் பக்கம்
திரும்புவதற்கு இன்னும் அதிககாலம் எடுக்காது என்பதையும் நாம் ஏற்கனவே
குறிப்பிட்டிருந்தோம்.! அந்தக்காலம் இப்போது வந்துவிட்டது என்பதைத்தான்
நாம் இப்போது சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
�சர்வதேசம் விழித்தெழ வேண்டும்� என்று கோருவதற்கு நாம் முன்வரவில்லை.
மிகத்தயவு கூர்ந்து வேறு எவரும் அவ்வாறு கேட்டுக் கொள்ள முன்வரவும்
வேண்டாம்.! சர்வதேசம் விழித்தெழுந்து சிலகாலமாகி விட்டது. அதற்கேற்ப
அதனுடைய அடுத்த கட்ட நகர்வைத் துரிதப்படுத்துவதற்கான செயற்பாடுகளில்
இறங்க வேண்டும் என்றுதான் நாம் இப்வேளையில் கேட்டுக்கொள்கின்றோம்.
சர்வதேசம் உள்ளுர நல்ல சமிக்ஞைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற
தற்போதைய நிலையில் இருந்து நகர்ந்து, வெளிப்படையாகத் தங்கள்
கருத்துக்களைத் தெரிவிக்கும் நிலைப்பாட்டை உடனே எடுக்க வேண்டும்.
அத்தோடு அக்கருத்துக்களுக்குச் செயலுருவாக்கம் கொடுக்கும்
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலங்கைப் பிரச்சனையில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இன்று
சர்வதேசம் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம் இன்று
நடாத்துகின்ற தாக்குதல்களை, சர்வதேசம் மீது நடாத்தப்படுகின்ற
தாக்குதல்களாகத்தான் கருத வேண்டும். சர்வதேசம் இதுவரை காலமும்
சிறிலங்கா அரசுகளைத் தட்டி கொடுத்து வந்துள்ள காரணத்தினால்தான் தீட்டிய
மரத்தினிலேயே கூர்பார்க்கும் வேலையை சிறிலங்கா அரசு தொடங்கியுள்ளது.
தமிழர்களுடைய பிரச்சனைகளைத் சர்வதேசத்திற்குச் சொல்லக்கூடிய வலுவுடைய
மாமனிதர் ரவிராஜ் போன்றோரை அடையாளம் கண்டு குறி வைத்துக் கொல்கின்றது.
கடந்த ஜெனிவாப் பேச்சுக்களுக்குப் பின்னர், இணைத் தலைமை நாடுகளின்
தூதுவர்கள் சிறிலங்கா அரசுடன் நேரடியாகவும் சந்தித்து
பேசியியருந்தார்கள். அதற்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்றுள்ள
மாமனிதர் ரவிராஜின் படுகொலையானது, சிறிலங்கா அரசாங்கத்தின்
உள்நோக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. அமைதி வழி மூலம் சிறிலங்காவோடு
பேசி தீர்வு ஒன்றைக் காணலாம் என்றால் சிறிலங்காவோ ஆயுதம் தாங்காத
அரசியல்வாதிகளையும், அறிவுஜீவிகளையும் கொலை செய்கின்றது. ஆகவே ஆயுதம்
இல்லாவிட்டால் என்ன கதி என்ற எண்ணமும் எழுகின்றது அல்லவா?
சர்வதேசம் இதுவரை காட்டி வந்த கையாலாகாத் தன்மைதான் சிறிலங்காவின்
இந்தத் துணிவுகளுக்குக் காரணம் என்றால் சர்வதேச சமூகம் இங்கு ஏன் தேவை?
என்ற கேள்வி எழுவதில் என்ன பிழை இருக்கக் கூடும்?
சிறிலங்காப் பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் யாவும், சண்டியர்களின்
நடவடிக்கைகள் போல் இருப்பதுவும் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால்
அவர்களுக்குள் நகரச் சண்டியர்கள், கிராமத்துச் சண்டியர்கள் என்று
இருவகை உண்டு. சட்டம் நீதிக்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு,
தாம் விரும்பியவற்றையே செய்வது நகரச் சண்டியர்கள் வகை. இதற்கு உதாரணமாக
சந்திரிக்கா அம்மையாரைச் சொல்லலாம். சட்டம் நீதிக்குப் பயப்படமாட்டேன்
என்பதை வெளிப்படையாகப் பறைதட்டிக் கொண்டு தாம் விரும்பியவற்றைச்
செய்வது கிராமத்து சண்டியர்கள் வகை. இதற்கு நல்ல உதாரணமாக அதிபர்
மகிந்த ராஜபக்ச விளங்குகின்றார்.
அடிப்படையில் சிறிலங்கா சர்வதேசத்தை எதிர்க்ககூடிய நாடு இல்லை. ஆனால்
இதுவே எதிர்க்கத் துணிந்தால்(?) வேறு எந்த நாடுதான் துணியாது?
பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் நகரவேண்டும் என்று சர்வதேசம்
விரும்புகிறது. ஆனால் சிறிலங்கா அரசோ பிரகடனப்படுத்தப்படாத யுத்தம்
ஒன்றை நடாத்தி வருவதன் மூலம் பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையைக்
குலைத்து வருகின்றது. தவிரவும், எதிர்வரும் மாவீரர் தினத்துக்கு
முன்னர், மிகப்பாரிய யுத்தமுன்னெடுப்பை சிறிலங்கா மேற்கொள்ள கூடும்
என்றும் அதன் மூலம் விடுதலைப் புலிகள்மீது வலிந்து போரைத் திணித்து,
சமாதானப் பேச்சுக்களை முற்றாக குழப்பி விடுவதற்கு ராஜபக்ச அரசு
திட்டமிட்டுள்ளதாகவும் �செய்திகள்� கசிந்துள்ளன.
ஆகவே சர்வதேசம் சரியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய வேளை இதுவாகும்.
சர்வதேச உறுப்பினர்களையும், சிறிலங்கா அரசு கொல்லத் தொடங்குவதற்கு
முன்னர் சர்வதேசம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். சர்வதேசத்தின்
மனமாற்றம் வெளிப்படையாச் செயல் உருவாக்கம் பெற வேண்டும். இவற்றைச்
சர்வதேசம் உரிய வகையில் உடனேயே செய்யும் என்பதுதான் எமது
எதிர்பார்ப்புமாகும். இல்லாவிட்டால் மாமனிதர் ரவிராஜ் போன்றோரின்
கொலைகளுக்கு மறைமுக உடந்தையாக நிற்கின்ற பழியையும், மற்றப் பழிகளோடு
சேர்த்து சர்வதேசம் சிலுவையாகச் சுமக்க வேண்டி வரும்.
|