Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தேவை:  புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும்

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தேவை:  புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும்

15 August  2006


தமிழீழப் பகுதிகளில் மீண்டும் ஒரு போர் முழுஅளவில் ஆரம்பிக்கக்கூடிய சாத்த்யக்கூறுகள் தோன்றியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 11.08.2006 முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலிருந்து பளை மற்றும் ஆனையிறவு பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் பாரிய படை நகர்வொன்றை ஆரம்பித்தனர். இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

முகமாலையில் இராணுவத்தினரின் சோதனை நிலையப்பகுதிகளைக் கைப்பற்றி அவற்றை அழித்துவிட்டு ஏ-9 வீதியூடாக விடுதலைப்புலிகள் தென்மராட்சிக்குள் முன்னேறியதாகவும் புலிகளின் ஓர் அணி வேலணைப்பகுதிக்குள் தரையிறங்கி ஊர்காவற்துறைக்குள் நுழைந்ததாகவும் இன்னமொரு அணி மண்டைதீவுத் தாக்குதல் தளத்தை அழித்துவிட்டு தளம் திரும்பியுள்ளதாகவும் மிருசுவில் கொடிகாமம் யாழ்புற நகர்ப்பகுதிகளான அரியாலை மணியம் தோட்டம் பகுதிகளிலும் மோதல்கள் வெடித்துள்ளதாகவும் உள்ளுர் செய்திகள் தெரிவித்திருந்தன. வடமராட்சி கிழக்கில் நாகர் கோவில் பகுதியிலும் ஷெல் தாக்கதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது.

சிறிலங்கா அரசானது தமிழ்ப் பொதுமக்களை வகை தொகையின்றி கொன்று குவிப்பதற்காக இந்த இராணுவ நடவடிக்கைகளைப் பயள்படுத்துகின்றது என்ற உண்மை இப்போது வெளிப்படையாகி விட்டது. இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலைச் சிறுவர் இல்ல வளாகத்தின்மீது சிறிலங்கா வான்படையின் கிபிர் வானூர்திகள் நடாத்திய குண்டுத் தாக்குதல்களின் பொது ஐம்பதுக்கும் அதிகமான மாணவிகள் கோரமாக கொல்லப்பட்டுள்ளதோடு அறுபதுக்கும் அதிகமான சிறுமிகள் படுகாயங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

செஞ்சோலைச் சிறுவர் வளாகத்தினுள் மட்டும் பதினாறு குண்டுகளை இவ்விமானங்கள் வீசியதாக அறிய வந்துள்ளது. கற்பனை செய்து பார்க்கவும் முடியாத இப்படுகொலைகள் இன்று உலகையே உலுக்கி விட்டன. இதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பிலிப் நேரியார் தேவாயத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ்ப் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுக் தாக்கதலை நடாத்தியதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 54 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். தமிழினப் படுகொலைகளைச் செய்து தமிழினத்தை அழித்தால்தான் யுத்தம் வெற்றி பெற்றதாகக் கருத முடியும் என்று எண்ணி சிறிலங்கா அரசு செயல்பட்டு வருகின்றது. அவர்களின் போர்க்கள முன்னேற்பாடுகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.

இக்கட்டுரையின் நோக்கம் போர்க்கள நிலவரங்களை ஆராய்வது அல்ல- என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகின்றோம். சமாதானக் காலம் என்றும் சமாதானத்திற்கான காலம் என்றும் கூறப்பட்டு வந்த கடந்த நாலரை ஆண்டு காலம் தமிழ் மக்களுக்குரிய சமாதானத்தையோ தீர்வையோ பெற்றுத் தரவில்லை. மாறாக அழித்தொழிக்கும் செயற்பாடுகளைத்தான் இந்தக் காலப்பகுதிக்குள் சிறிலங்கா அரசுகள் செய்து வந்திருக்கின்றன. போர் என்பது மிகக் கொடூரமான ஒன்று. போரை எவரும் விரும்பாமல் இருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் ஓர் இன மக்கள் மீது பேரினவாதமானது வலிந்து கொடிய போர்களை தொடர்ந்து திணித்து வருகின்றபோது அந்த இன மக்கள் தாம் போராடாத காரணத்தினால் தொடர்ந்து அழிக்கப் பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த இன மக்கள் தாம் போராடாமல் அழிவதை விட போராடி வாழ்வதையே ஏற்றுக் கொள்வார்கள். இதனடிப்படையில் சில தர்க்கங்களை முன்வைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபரான சந்திரிக்கா அம்மையார் பதவியேற்ற காலத்திலிருந்தே போருக்கான பணிகளும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. சந்திரிக்கா அம்மையாரின் முன்னோடிகளும் தமிழ் மக்கள் மீதான போர்களை நடாத்தியிருந்தாலும் சந்திரிக்கா அம்மையார் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கான நீண்ட திட்டங்களை தனக்கே உரிய தொலைநோக்குப் பார்வை?

 ஊடாக வகுத்து வந்திருந்தார். இதன் காரணமாக அதிபர் ராஜபக்சவிற்கும் ஒரு தெளிவான பேரினவாதப்பார்வை இருந்தது. தான் பதவிக்கு வந்தபின்பு போரை தமிழ் மக்கள் மீது எவ்வாறு வலிந்து திணிப்பது என்பது குறித்து அவருடைய சிந்தனையும் தெளிவாகவே இருந்தது. தன்னுடைய கூட்டணிக் கட்சிக்குள் பல முரண்பாடுகள் இருந்தபோதும் தமிழர்கள் மீதான யுத்தம் ஒன்றிலும் இராணுவத் தீர்விலும் மகிந்த ராஜபக்ச உறுதியாகவே இருந்திருக்கின்றார். அதன் அடிப்படையில்தான் கடந்த எட்டு மாத காலத்தில் மகிந்தவின் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.

கடந்த நாலரை ஆண்டு காலப்பகுதியில் சமாதானப் பேச்சுக்கள் ஊடாக தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாமல் இருக்கின்றன. சுனாமி ஆழிப்பேரலை அழிவிற்கான நிதி நிவாரணமும் தமிழ் மக்களுக்குச் போய்ச்சேராமல் முடக்கப் பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் சில உலகநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்த தடைகள் மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது பேரினவாத உறவுகளுக்கும் மிகுந்த உற்சாகத்தை தந்தன.

ஆகவே கட்டம் கட்டமாக தமிழ் மக்கள் மீது அடக்கு முறை நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டார். நிழல் யுத்தம், மறைமுக யுத்தம், மென்தீவிர யுத்தம், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்று இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்குப் பல பெயர்கள் இடப்பட்டிருந்தாலும் இவற்றின் உள்நோக்கு தமிழ் மக்களை அழித்தொழிப்பதேயாகும். இதன் அடிப்படையில்தான் மாவிலாறு அணைக்கட்டு இராணுவ நடவடிக்கையும், தற்போதைய இராணுவ நடவடிக்கையும் மகிந்தவால் மேற்கொள்ளப்பட்டன.

ஆகவே இன்று போர் வெடித்து விட்டதற்கான முழுப்பொறுப்பை அதிபர் ராஜபக்ச மட்டுமல்ல சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு ஒரு சமாதானத்தீரவு கிடைக்காமல் போனதற்கும் அவர்கள் மீது தொடர்ந்து அரச பயங்கரவாதமும் பெரும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதற்கும் காரணம் சிறிலங்கா அரசு மட்டுமல்ல இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகளும்தான். இதனை நாம் வெளிப்படையாகவே சொல்கின்றோம்.

சமாதானப்பேச்சு வார்த்தைகளுக்கு உதவி செய்வதாக சர்வதேச உலகம் கூறியபோது தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசத்திற்கு உரிய மரியாதை கொடுத்தார்கள். ஆனால் சர்வதேச உலகத்தின் சில நாடுகள் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக வேட்கைகளைப் புறம் தள்ளி அலட்சியப்படுத்தினார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தம்முடைய இராணுவ சமநிலையூடாக சிறிலங்கா அரசின் சமபங்காளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சமாதானப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்கள்.

ஆனால் குறிப்பிட்ட சில உலகநாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களின் வேட்கைக்கு எதிராக நடந்து கொண்டார்கள். இங்கே நீதி கேட்டு நின்றது தமிழினமே தவிர சிங்கள அரசு அல்ல. ஆனால் இந்தக் குறிப்பிட்ட உலக நாடுகள் மேற்கொண்ட பாராபட்சமான முட்டாள்தனமான நடவடிக்கையால் சிங்கள பேரினவாதம் உற்சாகம் பெற்றது. தொடர்ந்தும் தமிழின அழிப்பில் இறங்கியது.

இந்த உலகநாடுகள் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக முன்னர் கடைப்பிடித்து வந்த அணுகுமுறைகள் கூட கறைபடிந்த அணுகுமுறைகள்தான். அந்த கறைபடிந்த பாராபட்சமான நடவடிக்கைகள் சிறிலங்காவின் முன்னைய அரசுகளுக்கும் உற்சாகமளித்திருந்தன.

சந்திரிக்கா அம்மையாரின் அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் காரணமாக சுமார் ஐந்து லட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவிலேயே பாரிய இடப்பெயர்வை மேற்கொண்டபோது இந்த உலகநாடுகள் மௌனம் சாதித்தன. தமிழ் மக்களின் வரலாற்றில் இடம் பெற்ற இந்த மிகப்பபெரிய அவலத்தை களைவதற்கோ அல்லது அனுதாபம் தெரிவிப்பதற்கோ இந்த உலகநாடுகள் அன்று முன்வரவில்லை. ஓரு மனிதாபிமான சமிக்கையைக்கூட இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகள் வெளிப்படுத்தவில்லை.

இதன் காரணமாக துணிவும் உற்சாசமும் கொண்ட சிறிலங்கா அரசு ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இடம் பெயர்வுகளாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் தமிழீழ மக்கள் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அப்போதும் இந்த உலக நாடுகள் மௌனம் சாதித்தன!!

சண்டையை நிறுத்துங்கள்! பேச்சு வார்த்தையை ஆரம்பியுங்கள் என்று ஏன் இந்த உலக நாடுகள் அன்று சொல்லவில்லை? பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகள் கொல்லப்பட்டு காயமுற்று இடம்பெயர்ந்து பட்டினி கிடந்து நோயுற்று உறவிழந்து உடமையிழந்து தெருவோரங்களில் மரநிழல்களில் வாழ்வுக்குப் போராடிய அந்தவேளைகளில் ஏன் இந்த உலகநாடுகள் சண்டையை நிறுத்துங்கள் என்ற சிறிலங்கா அரசிடம் சொல்லவில்லை?

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் உடனடியாக நேரடிச் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். உலகநாடுகளாகிய நாம் அதற்கு உதவி செய்வதற்கு முன்வருகின்றோம் என்று ஏன் இந்த உலக நாடுகள் அன்று சொல்லவில்லை?? ஏன் அன்று இந்த உலக நாடுகள் எமது மக்களின் நலன்மீது அக்கறை கூடக் காட்டவில்லை?

ஏனென்றால் அன்று தமிழர்கள் தரப்பு பலவீனமாகி விட்டது என்றும் தமிழர்களின் உரிமைப் போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது என்றும் இந்த உலகநாடுகள் நம்பின. தம்முடைய பிராந்திய நலன் கருதி தம்முடையக பொருளாதார நலன் கருதி தம்முடைய உலகமயமாக்கல் கொள்கை கருதி சிறிலங்காவின் சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கு உலக நாடுகள் அசைந்து கொடுத்தன. சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக சர்வதேசம் மௌனமாக இருந்தது.

இன்று இதே உலக நாடுகள் சண்டையை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தையை ஆரம்பியுங்கள் என்று தினமும் கூக்குரல் இடுகின்றன. காரணம் வலிந்து போரைத் தொடங்கியதன் காரணமாக வாங்கிக்கட்டிக் கொண்டிருப்பது சிறிலங்கா அரசு என்ற காரணத்தினால்தான்!

இந்த உலகநாடுகள் தாம் உள்ளுர உணர்ந்து கொண்ட, உள்ளுரப் புரிந்துகொண்ட, உள்ளுர ஏற்றுக் கொண்டும் உள்ள உண்மையையும் யதார்த்தத்தையும் வெளிப்படையாக சொல்ல முன்வரவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலச் சமாதானப் பேச்சு வார்த்தைகளில்- அதாவது அப்படி ஏதாவது நடந்தால் இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகள் பங்கேற்க முடியாத நிலை வரக்கூடும். அத்தோடு மட்டுமல்லாது தங்களடைய (ஒன்றுக்கும் உதவாத) அபிப்பிராயங்களையும் சொல்லமுடியாத நிலையும் ஏற்படக்கூடும்.

சிங்கள ஊடகங்களும் சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளும் தொடர்ந்து போர் முழக்கம் செய்து வருகின்றார்கள். இஸ்ரேல் இப்போது லெபனானில் தாக்குவது போல் சிறிலங்கா அரசுத் தமிழ்ப் பகுதிகளில் தாக்கவேண்டும் என்று கடும்போக்காகப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். இஸ்ரேல் ஒப்புக்காவது லெபனான் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு போகும்படி அறிவித்தும் வான்மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசியும் வருகின்றது. ஆனால் சிறிலங்கா அரசோ யுத்தம் நடக்காத பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் வளாகத்திற்குக் குண்டுகளை வீசி சின்னஞ்சிறு உயிர்களை காவு கொண்டும் காயப்படுத்தியும் வருகின்றது. இன்று இந்தப் பாதகமான படுகொலைகளுக்கான சமபொறுப்பினை சிறிலங்காவுடன் சேர்ந்து இந்த உலகநாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தவேளையில் ஒரு வரலாற்று உண்மையை நாம் நினைவுக்கு கொண்டு வந்து அதனை நிகழ்காலச் சம்பவங்களோடு ஒப்பு நோக்க விழைக்ன்றோம். யாழ்ப்பாணத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது தமிழ்ப் பொதுமக்களைப் பாரிய அளவில் கொன்றொழித்து அதனூடே யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதையே சிறிலங்கா அரசு விரும்பியிருந்தது. அந்த வேளையில் மக்களுக்கு கேடயமாக விடுதலைப்புலிகள் செயல்பட்டு தமிழ் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு சென்றார்கள். மிகப் பாரிய இடப் பெயர்வாக அது அமைந்த போதும் எமது மக்களை விடுதலைப் புலிகள் காப்பாற்றினார்கள். இடப்பெயர்வுக்காக புலிகள் அப்போது விமர்சிக்கப்பட்டாலும் அந்த இடப்பெயர்வு மிகச் சரியான நடவடிக்கை என்று பிறகு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இன்று சிறிலங்கா இராணுவம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தான் என்ன? யாழ் குடா நாட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போக விடாமல் சிறிலங்கா இராணுவம் தடுத்து வருகின்றது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு போகாமல் இருப்பதற்காக ஊரடங்குச் சட்டத்தை இராணுவம் அமலாக்கி வருகின்றது. விடுதலைப் புலிகள் தமது மக்களுக்கு கேடயமாக விளங்குபவர்கள். ஆனால் சிறிலங்கா இராணுவமோ தமிழ் மக்களை தம்முடைய கேடயமாக உபயோகித்து வருகின்றது. இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற இந்தப் பாதுகாப்புப் பிரச்சனைக்குரிய சம பொறுப்பினையும் உலகநாடுகள் சிறிலங்காவுடன் சேர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.

போரா, சமாதானமா என்பதைத் தீர்மானிக்கும் சமபொறுப்பினையும் சிறிலங்காவும் சம்பந்தப்பட்ட உலகநாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மீது தேவையற்ற தடைகளையும், அழுத்தங்களையும் விதித்துவிட்டு இப்போது வெறும் அறிவித்தல்களை மட்டும் விடுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. சர்வதேசம் புதியபார்வையையும் புதிய அணுகுமுறையையும் கைக்கொள்ள வேண்டும். அது உடனே உருவாக வேண்டும்.

ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனை சம்பந்தமாக சர்வதேசம் புதிய பார்வையையும், புதிய அணுகுமுறையையும் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் சர்வதேசம் வெட்கித் தலைகுனிய வேண்டி வரும். ஈழத்தமிழினம் தன்னைத்தானே முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் உடையது என்பதை அப்போது முழு உலகும் தெரிந்து கொள்ளும்!
 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home