Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தடைகளுக்கு நன்றி

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தடைகளுக்கு நன்றி

18 July 2006


இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் பலவிதமான தடைகளையும் அரசியல் அழுத்தங்களையும் சந்தித்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல இனவிடுதலைக்காகவும் தேசிய விடுதலக்காகவும் நடைபெறுகின்ற பல விடுதலைப் போராட்டங்கள் கூட இவ்வாறான பல தடைகளையும் அழுத்தங்களையும் எதிர்நோக்கியிருப்பதை நாம் காண முடிகின்றது.

உலக வரலாற்றில் வெற்றி பெற்ற விடுதலைப் போராட்டங்களை ஒப்பு நோக்கும்போது அந்த போராட்டங்களும் இவ்வாறான பல தடைகளையும் அழுத்தங்களையும் எதிர்கொண்ட பின்தான் வெற்றி பெற்று விடுதலை அடைந்தமையையும் நாம் காணக் கூடியதாக உள்ளது.

ஒரு விடுதலைப் போராட்டம் என்பதானது தனது இலக்கு குறித்த சரியான பாதையில் பயணிக்கும் போதுதான் இவ்வாறான எதிர்ப்புக்களைச் சந்திக்க நேர்ந்துள்ளதை போராட்ட வரலாறும் சுட்டிக் காட்டும். அந்த வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதானது தனது இலக்கு குறித்த மிகச்சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதைத்தான் இத்தகைய தடைகளும் அழுத்தங்களும் சான்று பகருகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான தடைகளும் அழுத்தங்களும் போராட்டம் சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நின்று விடாது இந்த விடுதலைப் போராட்டம் மேலும் வீறு கொண்டு எழுந்து மிகப் பெரும் வேகத்தில் முன்னேறுவதற்கும் அடிப்படையில் உதவப் போகின்றது என்பதையும் எதிர்காலம் சுட்டிக் காட்டும். இந்த விடயம் குறித்துச் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம். தடைகள் எவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு உதவுகின்றன என்பது குறித்து சிந்திப்போம்.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஓர் உள்ளுர்ப் பிரச்சனை என்றும் அதில் உலக நாடுகள் தலையிடக்கூடாது என்றும் முன்னைய சிறிலங்கா அரசுகள் கூறி வந்த காலமும் ஒன்றிருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசுகள் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக தமிழீழ விடுதலைப் போராட்டம் வலுப்பெற்று தமிழர் தாயக மண்ணின் பெரும்பாலான பிரதேசங்களை மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலே புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் சக்தியாகவும் உருவாகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவ்வாறு புதிய பரிமாணங்களை எடுத்து வருவதை உணர்ந்த பின்புதான் சிங்கள பௌத்த இனவாத அரசுகள் வெளிநாடுகளின் தலையீட்டை கோர ஆரம்பித்தன. தமிழர்களின் தரப்பு பலமாக இருந்த காரணத்தினால் தான் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின.

இச்சந்தர்ப்பத்தில் நாம் எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ள கருத்தை மீண்டும் கூறுவது பொருத்தமானதாகும். அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்ற எந்த ஒரு சமாதானப் பேச்சுக்களும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த நியாயமான நிரந்தரமான, கௌரவமான, நேர்மையான சமாதானத் தீர்வை பெற்றுத் தரவில்லை.

போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட சரத்துகளும் அமலாக்கப்படாமல் பயன் அற்றவையாகப் போயின. ஒரு விடயம் மட்டும் வெளிப்படையாகியது . தமிழர்கள் தரப்பு பலவீனமாக இருந்தபோதும் சரி பலமுள்ளதாக இருக்கின்ற போதும் சரி எந்தச் சமாதானப் பேச்சுக்களும் முழுமையாக நிறைவு பெறுவதற்கு எந்தச் சிங்கள அரசுகளும் உடன்படப்போவதில்லை என்ற கருத்து மீண்டும் மீண்டும் நிரூபணமாகியது. இந்தக்கருத்தை நாம் கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல்வேறு கட்டங்களில் தர்க்கித்தே வந்துள்ளோம்.

தமிழீழ தேசியத் தலைமையானது மிகச் சரியான மிகத்தெளிவான கருத்தை முன்வைத்தது. சமாதான பேச்சுவார்த்தைகள் ஊடாக உரிய உகந்த சமாதானத் தீர்வை அடைய நாம் விரும்புவதாலும் அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாலும் நாம நேசக்கரங்களை நீட்டி சிறிலங்கா அரசுடன் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க விழைகின்றோம், என்று தமிழீழ தேசியத்தலைமை தெளிவாக தெரிவித்திருந்தது.

 அதேவேளையில் சிறீலங்கா அரசின் இழுத்தடிப்புச் செயல்களின் போதும் முன்னுக்கு பின் முரணான கொள்கை விளக்கங்களின் போதும் தமிழீழ தேசியத் தலைமை தனது அதிருப்தியையும் கவலையையும் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தே வந்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு சரியான முறையில் நகர்ந்து செல்லவேண்டும் என்பதற்காக உரிய அழுத்தங்களை மட்டுமல்லாது நீண்ட நெகிழ்ச்சிப் போக்கினையும் தமிழர்களின் தேசியத்தலைமை கடைப்பிடித்தது.

மேற்கூறிய விடயங்களை நாம் பல கருத்துத் தளங்களில் வைத்துத் தர்க்கித்து வந்த போதும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே அவை சரியான தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பது வருந்தத்தக்க உண்மையேயாகும். சமாதானப்பேச்சு வார்த்தைக் காலங்களை நீடிப்பததன் மூலம் அதனூடே ஏராளமான எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும் தமிழ் மக்களிடையே மிகக் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி அவர்களுடைய விடுதலை வேட்கை உணர்வை நீர்த்துப் போக வைப்பதற்காக, சிறீலங்கா அரசுகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. என்ற எமது தர்க்கமும் பெரிதாக எடுபடவில்லை.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் நகர்ந்து செல்கின்றன என்ற மாயக்கருத்தை சிங்கள அரசுகளும் அவற்றின் ஊடகங்களும் பரப்பி வந்தது ஒரு புறம் இருக்க இவற்றிற்கு தெரிந்தோ தெரியாமலோ தமிழ் ஊடகங்களும் துணை போனது ஒரு வருந்தத்தக்க, ஆனால் உண்மையான விடயமுமாகும். சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த பரபரப்பான செய்திகள் வெளிவரும்போது அவற்றிற்கு தனி முக்கியத்துவம் தரும் வகையில் செய்திகளும், செவ்விகளும, கட்டுரைகளும் வெளியாகின. சிறீலங்கா அரசுகளின் எதிர்பார்ப்புகளுக்கு இசைந்த வகையில் நற்செய்திகளை நாடி நின்ற நல்மனம் கொண்ட புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் இவற்றை விருப்பமுடன் உள்வாங்கினார்கள்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்கின்ற காலத்தின் ஊடாக விடுதலைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து நீர்த்துப் போகச் செய்கின்ற ஏகாதிபத்திய ஒடுக்கு முறையாளர்களின் எண்ணங்கள் செயலுருவாக்கம் பெற்றன. ஆயினும் தமிழீழத் தேசியத் தலைமை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மிகச்சரியான முறையில் முன்னெடுத்தது அவற்றைத் தடுப்பதற்காக வெளியரங்கில் தடைகளும், அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு புறத்தில் தமிழீழ மக்களைக் குறிவைத்து அதற்காகத் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தேவையற்ற தடைகளும் அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளையில் சிறீலங்கா அரசு தன்னை வழமையான தமிழின அழிப்பை உத்தியோகபூர்வமற்ற முறையிலும் உத்தியோக பூர்வமான முறையிலும் ஆரம்பித்தது. இவைகள் காரணமாக உலகதமிழினம் மீண்டும் சிலிர்த்தெழுந்தது. மேற்குலகம் தமிழ்மக்களுக்கு நீதியையும் சமாதானத்தீர்iவும் நன்மையையும் பெற்றுத்தந்து உதவும் என்று புலம் பெயர்ந்த தமிழ்ஈழ மக்கள் நம்பினார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் நடுநிலை பிறழ்ந்த ஒருபக்க சார்பான நடவடிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் எதிர்பர்ர்ப்பை முற்றாக குலைத்து விட்டன. சிறிலங்கா அரசுகளின் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் தேவையற்ற தடைகளும், அழுத்தங்களும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்ீன் சமீபத்திய தேக்க உணர்வுகளை மறையச்செய்தன.

இதற்காக தடைகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இன்று உலகளாவழய வகையில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் சிறீலங்கா அரசின் தமிழின அளிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல உலக நாடுகள் தமிழீழ விடுலைப்புலிகள் மீது விதித்து வருகின்ற தேவையற்ற, அநாவசியமான தடைகளுக்கும், அழுத்தங்களுக்கும் எதிராகவும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தடைகளே உங்களுக்கு நன்றி

தமிழீழ மக்கள் இன்று புலம் பெயர்ந்து பல உலகநாடுகளில் செறிவாக வாழகின்றார்கள் தற்காலத் தொழில்நுட்பமும் தொலைத்தொடர்பு சாதனங்களும் தூரதேசப் பயணங்களுக்கான முன்னேற்றங்களும் எமது மக்களை உறவு ரீதியாக நட்பு ரீதியாக தொழில் ரீதியாக உதவி வருகின்றன. ஆனால் உலக நாடுகள் இன்று அநாவசியமான ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக விதித்து வருகின்ற தடைகள் உலகெல்லாம் புலம் பெயர்ந்த எமது தமிழீழ மக்களை இன்று உணர்வு ரீதியாக முழுமையாக ஒருங்கிணைக்கின்ற பணியைச் செய்து வருகின்றன. இன்று இந்த உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்று நினைத்து போடுகின்ற தடைகள் ஈற்றில் போராட்டத்தை உசுப்பி விடுவதற்கான பணிகளைத்தான் செய்து வருகின்றன.

அதற்காக தடைகளே உங்களுக்கு எமது நன்றி

அதேவேளையில் இன்னமொரு முக்கியமான மிக முக்கியமான விடயத்தைப் புலம் பெயர்ந்த எமது இரத்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். எந்த ஒரு உலக நாட்டின் ஆதரவையும் எதிர்பார்த்து தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகவில்லை. விடுதலைப் போராட்ட வரலாற்றை கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கிய விடயம் புலப்படும். பெரும்பாலான விடுதலைப் போராட்டங்களுக்கு மேற்குலகம் எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளது.

அதற்காக விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பமாகாமல் இருந்ததில்லை. தங்களது போராட்டங்கiளில் வெற்றியை பெறாமல் இருந்ததுமில்லை. இப்படிப்பட்ட விடுதலைப் போராட்டங்களைத் தேவையற்றுத் தடை செய்யப் புகுந்ததன் காரணமாகவே இவ்விடுதலை இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்ததைப் போரியல் வரலாறும் சுட்டிக் காட்டும். நீதியை எதிர்பார்த்தது நிற்கின்ற ஓர் இனத்தின் மீது மீண்டும் மீண்டும் அநீதி இழைக்கப்படும்போது போராட்டம் வலுப்பெறுவதை தடுக்க முடியாது. முன்னர் சிறீலங்காவில் ஆயுதம் போராட்டத்தை தடை செய்யும் முகமாகப் பயங்கரவாதச் தடைச்சட்டம் (PTA) கொண்டு வரப்பட்ட பின்னர்தான் ஆயதப் போராட்டம் புதிய பரிமாணங்களைக் கண்டது என்பதையும் ஓர் உதாரணமாக கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான வெளிநாடுகளின் தடைகளும் அதே விளைவுகளைத்தர் கொண்டுவந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் அதற்காக தடைகளுக்கு எமது நன்றி.

இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சனை குறித்து புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம். இது குறித்து நாம் முன்னரும் பலதடவைகள் தர்க்கத்து வந்துள்ள போதும் அதனை மீண்டும் ஞாபகப்படுத்துவதானது இக்கட்டுரையின் நோக்கத்தோடு ஒத்துப்போகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்மீது தேவையற்ற தடைகளையும் அழுத்தங்களையும் விதித்து வருகின்ற மேற்குலகம் இன்னம் சிறிது கடும் பொக்கைக் காட்டி விட்டு சற்று நெகிழ்சிச்தன்மையை கடைப்பிடிக்ககூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த நெகிழ்ச்சித்தன்மை மேலும் நீடித்து விடுதலைப் புலிகளின் மீதான தடைகளும், அழுத்தங்களும் மெதுவாக விலக்கிக் கொள்ளப்படுவதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

பொதுவாக நம்மவரையெல்லாம் மகிழ்ச்சி கொள்ள வைக்கக் கூடிய அந்த நேரத்தில்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று நாம் இப்போதேயே கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் அந்த வேளையில்தான் தமிழர் பிரச்சனையை தீர்க்காத ஒரு பொருத்தமற்ற தீர்வுத் திட்டம் ஒன்றை இந்த உலக நாடுகள் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்க கூடும். என்று நாம் ஐயப்படுகின்றோம். இப்படிப் பொருத்தமற்ற தீர்வுத் திட்டம் ஒன்றைப் பின்னாளில் திணித்து விடுவதற்காகத்தான் தேவையற்ற தடைகளையும், அழுத்தங்களையும் இந்த உலகநாடுகள் முன்னதாகவே பிரயோகிக்கக் கூடும். என்றும் நாம் தொடர்ந்தும் தர்க்கித்து வந்துள்ளதை வாசகர்கள் அறிவீர்கள்.

ஆகவே தடைகள் விலக்கப்படும்போது புதிதாக ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டு காலம் உருவாக்கிய மயக்க நிலை எதிர் காலத்தில் தடைகள் நீக்கப்படும்போது மீண்டும் வரக்கூடும். அது குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் இது முன்னைய சமாதானத்திற்கான காலத்தையும் விட ஆபத்தானது.

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு என்பதானது மிக உயர்ந்தது என்பது மட்டுமல்ல தனித்துவமானதும் ஆகும். போராளிகளின் தியாகங்கள் எவ்வாறு ஒப்பிடமுடியாத உயர்வானதோ, அதேபோல புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அர்ப்பணிப்பும் இன்னொரு வகையில் ஒப்பிட முடியாத உயர்ந்ததாகும். போராளிகள் விலை மதிக்கமுடியாத தமது உயிர்களை தமது மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்பார்கள். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் போராட்டத்தின் வெற்றிக்காக தாம் வாழுகின்ற வாழ்க்கையை தொடர்ந்தும் அர்ப்ணித்து வருகிறார்கள், வருவார்கள், வருங்காலம் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மகத்துவத்தை பறை சாற்றும் காலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home