Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, இலங்கைக்கு உகந்ததா?

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை,
 இலங்கைக்கு உகந்ததா?

12 July 2006


சிறிலங்காவின் புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த கடந்த ஏழு மாத காலத்தில் அவர் சமாதானத்திற்கு எதிரான சகல செயற்பாடுகளையும் செய்து வந்துள்ளதைத்தான் நாம் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் தலையான பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய எந்த விதமான தீர்வுத்திட்டத்தையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை. மாறாக சமாதானத்தீர்வு ஒன்றிற்கு எதிராகத்தான் மகிந்த செயற்பட்டு வருகின்றார். அவருடைய கடும்போக்குச் சிந்தனையின் செயல்வடிவமாக, தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற வன்முறைகளை நாம் தினமும் காணக்கூடியதாக உள்ளது. அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு சமாதானத் தீர்வு ஒன்றில் நம்பிக்கை இல்லை என்பதும் அவருக்கு இராணுவத்தீர்வு ஒன்றில்தான் அசையாத நம்பிக்கை உண்டு என்பதும் அவருடைய உரைகளில் இருந்தும், அரச வன்முறைகளிலிருந்தும் புலனாகி வருகின்றது.

மகிந்த ராஜபக்சவின் முன்னோடியான, முன்னாள் அரச அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க கூட்டாட்சி ஊடாக, சமாதானத் தீர்வு என்று சிறிது காலம் பேசி வந்துள்ளார். சந்திரிக்கா கூட்டாட்சி குறித்து உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றாலும், கள யதார்த்தத்தையும், நிலைமையின் தீவிரத்தையும் சற்று உள்வாங்கியவராக இருந்தார். ஆனால் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்ச ஒற்றையாட்சி என்ற சொற்பதத்தை விட்டு இறங்கி வரவும் தயாராக இல்லை. இந்த வேளையில் திரு ஆனந்த சங்கரி போன்றோர், இந்திய சமஷ்டி ஆட்சி முறை குறித்துப் பேசி, குட்டையை இன்னும் குழப்பி வருவதையும் நாம் காண்கின்றோம்.

கடும் போக்காளரான மகிந்த ராஜபக்ச சமஷ்டி ஆட்சி குறித்து சிந்திக்க போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும் �இந்த இந்திய சமஷ்டி ஆட்சி முறை� என்பது தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய உகந்த தீர்வா, என்பது குறித்து நாம் சிறிது சிந்திப்பது இவ்வேளையில் பொருத்தமானதாகும். இன்னும் சில மாதங்களில் வேறு சிலரும் இந்திய சமஷ்டி ஆட்சி முறை குறித்துப் பல கருத்துக்களை முன் வைப்பதற்கு வரவுள்ளார்கள் என்பதனால் இது குறித்துச் சில கருத்துக்களை தர்க்க ரீதியாக அணுக முனைவோம்.

�இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது உண்மையிலேயே ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறையா�- என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஏனென்றால் அது அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டதாகும். இது குறித்துச் சில விடயங்களைச் சுருக்கமாக தர்க்கிக்க விழைகின்றோம்.

உபகண்டம் என்று சொல்லக் கூடிய இந்தியாவின் விரிந்து பரந்துள்ள பாரிய நிலப்பரப்பானது பலவேறு மொழிகளைப் பேசுகின்ற தேசிய இனங்களை மாநில ரீதியாகக் கொண்டிருந்தாலும், அங்கே மத்தியிலேயேதான் அதிகாரம் அமைந்துள்ளது. மத்திய அரசு மாநில அரசைக் கலைக்கமுடியும். சர்க்காரியா கமிஷன் அதிகாரப் பரவலாக்கலைச் சிபாரிசு செய்திருந்தாலும் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்களில் மாநில அரசே இறுதி முடிவுகளை எடுக்கும். மொழிவழி மாநிலங்களாக ஆட்சியின் சில அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவின் சமஷ்டி ஆட்சிமுறை என்பது அடிப்படையில் ஓர் ஒற்றை ஆட்சிமுறை தான். இந்திமொழி மசோதாவை ஓர் உதாரணத்திற்கு காட்டலாம்.

இதேவேளை இந்தியாவின் சமஷ்டி ஆட்சியின் அரசியல் பரிணாம நகர்வு குறித்தும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவின் சமஷ்டி ஆட்சியானது இன்றைய காலகட்டத்தில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கடந்து செல்வதை நாம் காண்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசுகள் வலுப்பெற்று வருகின்றன. முன்னரைப் போல் ஒரு கட்சியின் ஆட்சியாக மத்திய அரசு இல்லை. முன்னர் ஒரு கட்சி ஆட்சியில் செய்தவற்றை (செய்த தவற்றை) இப்போது மத்திய அரசு செய்ய முடியாது. தாயக கோட்பாட்டில் வெளிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை மத்திய அரசு செய்ய முடியாது. இந்தியாவின் ஊடகத்துறையும், நீதித்துறையும் பல குறைகளைக் கடந்து மெதுவாக வலுப்பெற்று வருவதையும் நாம் இப்போது காண்கின்றோம். சுருக்கமாக சொன்னால் அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையை கொண்டுள்ள இந்திய சமஷ்டி ஆட்சிமுறை தனது ஒற்றையாட்சித் தன்மைமை மெதுவாக இழந்து வருகின்றது என்று கூறலாம்.

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறை அல்ல என்ற கருத்தைத் தர்க் கித்த நாம் அதேவேளை, தற்போது இந்தியா தனது ஒற்றை ஆட்சிக்குரிய தன்மையை அதுவாக இழந்து முழுமையான அல்லது ஓரளவு முழுமையான சமஷ்டி ஆட்சிமுறையை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதையும் சுட்டிக் காட்டித் தர்க்கித்திருந்தோம். இரண்டு வேறு தளங்களில் இருந்து இக்கருத்துக்களை நாம் தர்க்கித்து இருந்தமைக்கு காரணம் உண்டு!

இந்தியாவையும் இலங்கையையும் சமஷ்டி ரீதியல் ஒப்பிட முடியாது என்பதையும் அப்படி ஒப்பிட முனைவது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் மேற்கூறிய விடயங்களைத் தர்க்கித்திருந்தோம்.

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை ஏன் இலங்கைக்கு பொருந்தி வராது என்பது குறித்து மேலும் சில முக்கிய காரணிகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும்.

இன்று இந்தியாவில் அமையக் கூடிய மத்திய அரசு ஒரு கட்சி ஆட்சியாக இல்லை. ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தின் கட்சி ஆட்சியாகவோ அல்ல பெரும்பான்மை இனத்தவர்கள் சேர்ந்த கட்சிகளின் ஆட்சியாகவோதான் அரசு அமைவதற்குரிய நிலைமை உள்ளது!

இந்தியாவின் சிறுபான்மையினருக்கு எதிராகச் சட்டத்தை மாற்றுவதற்கு முடியாது. ஆனால் இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை மற்ற இனத்திற்கு எதிராச் சட்டத்தை மாற்றும், மாற்றியும் உள்ளது. இந்திய சமஷ்டி ஆட்சி முறை அதாவது பல்லின மொழிகளைப் பேசுகின்ற பல தேசிய இனங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறையானது ஒரு தனிப் பெரும்பான்மை இனம் செய்யக்கூடிய அராஜகங்களைத் தடுத்து நிறுத்தும். அந்த நிலைமை இலங்கைச் சமஷ்டியில் ஏற்படாது.

இந்தியா சுதந்திரம் அடைந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளையும், இடர்களையும் சந்தித்தபோதும் ஒப்பீட்டளவில் தன்னகத்தே உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்க முயன்றதில்லை. இந்தியா தன் தேசத்தின் முழு மக்களுக்குரிய வளர்ச் சியை நோக்கியே நகர்ந்து வந்துள்ளது. மாறாக இலங்கை அரசு இலங்கைத் தீவில் வாழுகின்ற ஒரு தேசிய இனமான தமிழினத்தை அழிக்கின்ற இன அழிப்புச் செயல்களிலும் அந்த இன மக்களின் பொருளாதார வளர்ச் சிகளை அழிப்பதற்குரிய செயல்களிலும் தான் ஈடுபட்டு வந்துள்ளது.

தனிப் பெரும்பான்மையினரின் ஆட்சி இல்லாத இந்தியாவில் நீதித்துறை ஒப்பீட்டளவில் மதிப்புக்குரிய வகையில் செயல்பட்டு வருகின்றது. ஆனால் சிறிலங்காவின்  நீதித்துறை மட்டுமல்ல அதன் அரசும் நீதிக்குப் புறம்பான செயல்களை மட்டுமே புரிந்து வருகின்றன. ஓர் உதாரணத்திற்கு சுனாமி நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு சிறிலங்காவின் நீதித்துறை விதித்த இடைக் காலத் தடையைக் குறிப்பிடலாம்.

இதைத் தவிர வேறு சில சரித்திர நிகழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய தேசமென்பது மிகப் பெரிய போராட்டத்தின் பின்பு, எத்தனையோ இழப்புக்களுக்கு பின்பு, வேதனைகளின் பின்பு தனது சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியா தனது சுதந்திரத்திற்காக கொடுத்த காலத்தின் விலையும் பெரிதுதான். மிகப்பெரிய போராட்டத்தின்  மூலம் என்னவோ அங்கே போhராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடாத்தப் படாமலேயே மொழி வழி ரீதியாக மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப் பட்டன.

ஆனால் இலங்கைத்தீவு அப்படியல்ல! ஒப்பீட்டளவில் இலங்கைத்தீவு இரத்தம் சிந்தாமலேயே சுதந்திரத்தைப் பெற்றது. அங்கே இரத்தம் சிந்தியவர்கள் இன்னொரு தேசிய இனமான தமிழர்கள்தான்! அவர்கள் இரத்தம் சிந்தியது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகுதான். தமிழர்களை இரத்தம் சிந்த வைத்தது, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றிட்ட சிங்களப் பேரினவாத இனம்தான்!.

ஒருபுறம் இந்திய தேசமானது கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் பலதேசிய இனங்களோடு குறிப்பிடத் தக்க வளர்ச் சியை நோக்கி வளர முற்பட்டபோது இலங்கைத்தீவில் பெரும் பான்மைச் சிங்கள இனம் கடந்த ஆண்டுகளாக மற்றைய தேசிய இனமான தமிழினத்தை அழித்தொழிப்பதையே முன்னெடுத்து வந்துள்ளதை நாம் மேற்கூறிய கருத்தோடு மீண்டும் இணைத்துப் பார்ப்பது பொருத்தமானதாகும்!

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை பற்றித் திருஆனந்தசங்கரி போன்றோர் புலம்பிக்கொண்டிருக்கின்ற இதே வேளையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட 13வது சட்டத்திருத்தமான வடக்கு கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பை இரத்து செய்வதற்காக மகிந்த ராஜபக்சவும் அவரது கூட்டணியான ஜேவிபி யினரும் முயன்று வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய தேசம் என்பதானது இரண்டு தேசிய இனங்களையும், இரண்டு மொழிகளையும் மட்டும் கொண்ட தேசமல்ல! பல்வேறு மொழி பேசுகின்ற பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசமாகும். அத்தோடு தன் இச்சையாக ஒரு பெரும் பான்மைத் தேசிய இனம் மற்றைய தேசிய இனம் ஒன்றை அழித்து விடுவதற்கு முயல முடியாது. அதற்கு மற்றைய சிறுபான்மைத் தேசிய இனங்களும் இடம் கொடுக்காது ஆகவே அடிப்டையில் இந்திய தேசமும், அது எதிர் கொள்கின்ற பிரச்சனைகளும் இலங்கைத்தீவும், அது எதிர் கொள்கின்ற பிரச்சனைகளும் எதிர்மாறானவை. ஆகவே இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பதானது இலங்கையின் பிரச்சனையைத் தீர்க்காது! மாறாக பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்! இது நாமெல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்.

ஆகவே இந்தியாவில் உனள் ஆட்சி முறையை மீறி அதற்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. கொடுக்க கூடாது என்ற சிந்தனை முற்றிலும் மூடத்தனமானதாகும். இந்தச் சிந்தனை முதலில் மாறவேண்டும். இன்று இந்தியாவே பாரிய அதிகாரப் பரவலாக்கலை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்கின்ற யதார்த்தத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய சமஷ்டி ஆட்சிமுறை ஈழத்தமிழர்களுக்கு பொருந்தி வராது.!

தவிரவும், �இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள்தான்�- என்ற கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் முன்னரும் வேறு சந்தர்ப்பங்களில் இக்கருத்தை வலியுறுத்தி வந்துள்ள போதிலும் இக்கட்டுரையின் சாரம்சம் கருதி இக்கருத்தை மீளவும் வலியுறுத்த முனைகின்றோம். இன்று தமிழீழத்தி ற்கு உரித்தான கடற்பரப்பின் பெரும் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் இந்தியாவின் கடற்பிராந்திய நலன் பாதுகாப்பாக உள்ளது. மாறாக இக்கடற்பிராந்தியம் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தால் அப்பகுதிகளின் கடற்கரைப் பிரதேசங்களை வேறு அந்நிய சக்திகள் குத்தகைக்கு எடுத்திருக்கும். அடிப்படையில் இந்திய விரோதப் போக்கைக் கொண்டிருக்கின்ற சிறிலங்கா அரசுகள் இந்தக் கடற்கரைப் பகுதிகளை இந்திய விரோத சக்திகளான சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும். தவிரவும் சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது ஒரு வெளிப்படையான விடயமாகும். இந்தியா-சீனா யுத்தத்தின் போதும், இந்தியா-பாக்கிஸ்தான் யுத்தத்தின் போதும் சிறிலங்கா அரசுகள் இந்திய நலனுக்கு எதிரான கோட்பாட்டையும், செயற்பாடுகளையும் கொண்டிருந்தன. ஒரு காலகட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் இறக்குமதியையும் வணிகப் பொருட்களின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்தமையும் நாம் அறிவோம்.

அத்தோடு மட்டுமல்லாது, இந்தியாவின் பூகோள நலன் தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். இது வரலாற்று ரீதியாக உண்மையுமாகும். அடிப்படையில் சிங்கள தேசமக்கள் இந்திய நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில் தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக உள்ளார்கள். சிறிலங்கா அரசு இந்தியா மீது கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை விளக்குவதற்கு மேலும் ஒரு எளிய உதாரணத்தைச் சுட்டி காட்டலாம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவின் ஆட் சிக்காலத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிறிலங்காக் குழு இந்தியக் குழுவினரை வென்றதை கொண்டாடும் விதமாக ஒரு நாளை பொது விடுமுறை தினமாகவே ஜேஆர் அறிவித்திருந்தது ஓர் எளிய உதாரணமாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து இன்றுவரை சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கி வந்துள்ளன. தமிழ் மக்கள் இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஐம்பது ஆண்டு காலமாக நடாத்திய போராட்டத்தின் பின்பு ஜனநாயக ரீதியாக தமிழீழமே தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். தமிழீழம் தான் சரியான தீர்வாகும் என்ற கருத்தை தமிழ் மக்கள் மட்டும் கொண்டிருக்கவில்லை. சிங்களப் பேரினவாத சக்திகளின் அரச பயங்கரவாதச் செயற்பாடுகளும் இக்கருத்தை உறுதி செய்வதாகவே அமைந்து வருகின்றன. இன்று உலக நாடுகள் பலவும் இலங்கைச் சமாதான பேச்சக்களில் ஈடுபட்டுள்ள போதிலும், உருப்படியான எந்த தீர்வையும் சிறிலங்கா அரசுகள் முன்வைக்கவில்லை மாறாக இராணுவத் தீர்வு ஒன்றை குறிவைத்துத்தான் சிறிலங்கா அரசுகள் காய்களை நகர்த்தி வந்துள்ளன.

தமிழீழத் தேசியத்தலைவர் பன்னெடுங் காலமாகவே ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார். �தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமி ழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல் போனால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க நேரிடும்� என்று தேசியத் தலைவர் உறுதியாக தெரிவித்து வந்துள்ளார்.

இதன் அடிப்படையில் முத்தாய்ப்பாக ஒரு விடயத்தைச் சொல்லி வைக்க விழைகின்றோம். கடந்த ஆண்டு (2005) மாவீரர் தினப்பேருரையின் போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறிலங்காவின் புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு ஓர் உறுதியான, இறுதியான அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார். இன்று சமாதானக் காலம் முடிந்துபோய் வெறுமனே சமஷ்டி ஆட்சி முறையைப் பற்றிச் சிலர் வாய்ச்சப்பிக் கதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழீழத் தேசியத் தலைவரின் அவசர வேண்டுகோளை நாம் நினைவில் கொள்வது பொருத்தமானதாகும். ஏனென்றால் அதற்குரிய காலம் கனிந்து வந்து விட்டது என்றுதான் நாம் கருதுகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த இறுதியான, உறுதியான அவசர வேண்டுகோள் வருமாறு:

�பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்க தயாராக இல்லை. ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான உறுதியான அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கை கடைப்பிடித்து காலத்தை இழுத்தடிக்க புதிய அரசாங்கம் முற்படுமானால், நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் (அதாவது இந்த ஆண்டில்) தீவிரப்படுத்துவோம்!�

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home