| 
 தமிழ் நாட்டில் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள 
சட்டப் பேரவைத் தேர்தல் குறித்தும் அத்தேர்தலில் எந்தக் கட்சிக் கூட்டணி வெற்றி பெற 
வாய்ப்பிருக்கின்றது என்பது குறித்தும், எந்தக் கட்;சி எத்தனை சதவீத வக்குகளைப் 
பெறும் அல்ல பிரிக்கும் என்பது குறித்தும், இப்போது பல அரசியல் ஆய்வுகள் 
எழுதப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து அரசியல் 
ஆரூடம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. என்பதை நாம் முதலில் 
தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தமிழக அரசியலில் மறைந்து கிடக்கும் சில 
விடயங்கள் குறித்தும் வெளிவராத சில உண்மைகள் குறித்தும், சில கருத்துக்களை இத் 
தேர்தல் காலச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தர்க்கிப்பதுவே எமது நோக்கமாகும்!. 
 
கொள்கைகளுக்காக அல்லது பொது இலட்சியங்களுக்காக தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தக் கூடிய 
காலம் மலையேறிப் போய் இப்போது தொகுதிகளுக்காகத் தேர்தல் கூட்டணிகள் 
உருவாக்கப்படுகின்ற காலம் உருவாகியுள்ள வேளை இது!. தமிழ் நாட்டில் உள்ள 
சாதிக்கட்சிகள், சமயக்கட்சிகள் அரசியலில் காலடி எடுத்து வைப்பதற்குரிய அடிப்படைத் 
தகுதியை தரக்கூடிய திரைப்;பட உலகைச் சார்ந்த நடிகர்களின் கட்சிகள் என்று சகல 
தரப்பினரும் களம் இறங்கியிருக்கின்ற ஜனநாயகத்திற்கான காலம் இது! இந்த ஜனநாயகக் 
கட்சிகள் தாம் பெறக்கூடிய முப்பது சதவீத வாக்குகளிலிருந்து ஒரு சதவீதத்திற்கும் 
குறைவான வாக்குகள் வரை கணக்கிட்டுப் பார்த்து பேரம் பேசி கூட்டுச் சேர்க்கின்ற 
வேளையும் இதுதான்!. பொதுமக்களின் நலனை தவிர மற்றைய எல்லா விடயங்களையும் கணக்கிட்டு 
காய் நகர்தும் காலமும் இதுதான்!. 
 
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான 
அ.தி.மு.கவுடன் வைகோவின் ம.தி.மு.கவும் தொல். திருமாவளவனின் விடுதலைச் 
சிறுத்தைகளும் இணைந்துள்ளமையானது, தேர்தல் பரபரப்புக்களை அதிகமாக்கியுள்ளது என்பது 
உண்மைதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் 
இந்தத் தேர்தல் கூட்டணி குறித்து அக்கறை காட்டுவதிலும் வியப்பில்லைதான்!. 
 
�அடுத்த ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள்?� என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது 
இயல்பான ஒன்றுதான்! தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக மீண்டும் வருவதனையே செல்வி 
ஜெயலலிதா முனைப்பாக விரும்பி செயல்படுவார் என்பதில் எமக்கு ஐயம் ஏதும் இல்லை. ஆனால் 
அதே முனைப்பையும் விருப்பத்தையும் தான் முதலமைச்சராக வருவதற்கோ அல்லது தனது கட்சி 
கூட்டணி ஆட்சியமைப்பதையோ கலைஞர் கருணாநிதி கொண்டிருக்கின்றாரா? என்பதில் தான் 
எமக்கு ஐயம் உள்ளது. 
 
தானோ அல்லது தனது கட்சிக் கூட்டணியோ ஆட்சியமைப்பதை முக்கிய இலட்சியமாகக் கருதாத 
கட்சித் தலைவர்களும் இருப்பார்களா? என்று நேயர்கள் எண்ணக் கூடும். இங்கே சில 
வித்தியாசமான கருத்துக்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 
 
மற்றைய கட்சித் தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு விடயத்தில் கலைஞர் 
கருணாநிதி வித்தியாசப்படுகின்றார். தி.மு.கவின் தலைவரான கருணாநிதி தேர்தலில் வெற்றி 
பெறுவதையும் ஆட்சி அமைப்பதையும் தான் முதலமைச்சராக வருவதையும் விட அப்பால் தூர 
நோக்கில் சிந்தித்துச் செயல்படுபவராக இருக்கின்றார் என்பதை நாம் அவதானிக்கின்றோம். 
அவர் அமைக்கின்ற தேர்தல் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவதை முதல் நோக்காகக் கொண்டு 
உருவாக்கப்படுவதில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கலைஞர் கருணாநிதிக்கு 
இரண்டாம் பட்ச விருப்புத்தான்! 
 
அப்படியென்றால் திமுக தலைவர் கருணநிதியின் முக்கிய முதன்மையான இலட்சியம் என்ன? 
 
அறிஞர் அண்ணாத்துரையின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையைப் 
பொறுப்பெடுத்துக் கொண்ட கலைஞர் கருணாநிதி மெல்ல மெல்ல அந்தக் கட்சியின் சர்வ 
அதிகாரத்தையும் தன் கையகப் படுத்திய பின்னர் தனது குடும்பத்துக்குள்ளேயே அந்த 
அதிகாரத்தையும், அது தரக்கூடிய சக்தியையும் ஒரு சேரக்குவித்து வைப்பதில் பெரு 
வெற்றியடைந்து விட்டார். தனக்கு எதிராகவோ அல்லது தனது குடும்ப அங்கத்தினர்களுக்கு 
எதிராகவோ எழுகின்ற அல்லது பின்னாளில் எழக்கூடிய சக்திகளை இனம் கண்டு அச்சக்திகளை 
நசுக்கி விடுவதிலோ அல்லது அச்சக்திகளை தன் கட்சியை விட்டு வெளியேற்றி விடுவதிலோ 
கருணாநிதி என்றும் பின் நின்றதில்லை. எடுத்துக்காட்டாக திரு எம்.ஜி ராமச்சந்திரன் 
அவர்களைத் திமுக விலிலிருந்து வெளியேற்றியதைக் கூறலாம். திரு எம்ஜிஆரை திமுக 
விலிருந்து வெளியேற்றியதானது கருணாநிதி செய்திட்ட இமாயலத் தவறு என்று பலர் 
வாதிட்டிருந்தாலும் திமுக என்ற தன் கட்சிக்குள்ளேயே வேறொரு சக்தி வளர்ந்து அது 
தனக்கு எதிராகவும் தன் குடும்ப அங்கத்தினர்களுக்கும் எதிராகவும் கிளம்புவதை 
வேரறுத்து விடும் நோக்கோடுதான் கருணாநிதி அன்று எம்ஜிஆரை கட்சியை விட்டு 
வெளியேற்றினார். திரு எம் ஜி ஆர் தனிக்கட்சி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றித்தான் 
இறக்கம்வரைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்தார் என்பதும் உண்மைதான். 
ஆயினும் தனது குடும்பத்தை மிகப் பெரிய அதிகார சக்தியாக எதிர்காலத்தில் வளர்த்து விட 
வேண்டும் என்ற தன்னுடைய தூரநோக்க இலட்சியத்தை அடைவதில் இன்று கருணாநிதி 
குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு வெற்றியடைந்து விட்டார் என்றுதான் கூறவவேண்டும். 
 
இந்தக் தர்க்கத்திற்கு ஆதரவாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டலாம். 2001ம் ஆண்டு 
நடைபெற்ற தமிழக சட்டக் பேரவைத் தேர்தலில் திமுக இ மதவாதத்திற்குப் பெயர்போன 
பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்தக் கூட்டணி தேர்தலில் 
தோல்வியடைந்தால் தி.மு.கவிற்கு எந்தவிதமான வெளிப்படையான அரசியல் இலாபமும் 
கிட்டவில்லை. பா.ஜகட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது கருணாநிதி போட்ட தப்புக்கணக்கு 
என்றுதான் பலரும் கருத்து வெளியிட்டிருந்தார்கள். திமுகவிற்கு கிடைத்திட்ட பெரிய 
தோல்வி இது! என்றுதான் பொதுவான அபிப்பிராயமும் இருந்தது. ஆனால் பின்னரங்கில் 
நடைபெற்ற விடயம் என்ன? 
 
கருணாநிதியின் குடும்ப அங்கத்தவரான முரசொலிமாறன் பா.ஜ.கட்சியின் மத்திய அரசில் 
மந்திரியாக பதவி பெற்றார். இதனூடாகத் தமது ஊடக மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் 
பாரிய அளவில் மாறன் குடும்பம் ஊடாக கருணாநிதி வளர்த்து விட்டார். தமிழ் 
நாட்டிலிருந்து வெளிவருகின்ற காலச்சுவடு சிற்றிதழ் மேலும் சில விடயங்களை தெளிவாக்கி 
எழுதியுள்ளதை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகின்றோம். 
 
�மாறன் குடும்பம் போல இந்தியாவில் பலவேறு கால கட்டங்களில் பல்வேறு 
குடும்பங்களுக்குப் பரந்துபட்ட அதிகார வீச்சும் பணபலமும் இருந்துள்ளன. எனவே இதனை 
ஒரு பேராபத்தாக பார்க்க முடியாது. ஆனால் மாறன் குடும்பத்தின் அரசியல் அதிகாரம் 
வலுவான ஊடக அதிகாரத்துடன் இணைந்துள்ளது இது தனிக் கவனிப்புக்குரிய செய்தி . . இன்று 
தமிழக கேபிள் வலைப்பின்னல், சன் ரிவி, சன் மியூசிக் சன்நியூஸ், கேரிவி என்ற 
இக்ககுடும்பத்தின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்று வருகின்றது. இன்று உலகெங்கும் 
தமிழர் வாழும் பகுதிகளில் சன் ரிவி நுழைந்துள்ளது. அத்தோடு கேரளம், கர்நாடகம், 
ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் சூரியா, கிரண், தேஜா, ஜெமினி, ஆதித்தியா போன்ற சன் 
ரிவியின் சானல்கள் இயங்கி வருக்pன்றன. வங்காளத்திலும் இப்போது புதிய சானல் ஒன்று 
தொடங்கப்படவுள்ளது. 
 
அச்சு ஊடகங்களைப் பொறுத்தவரையில் குங்குமம,; தினகரன் போன்றவை இக்குடும்பத்த்pன் 
வசம் உள்ளன. பல நாடுகளில் அச்சு ஊடகத்தையும், காட்சி ஊடகத்தையும் ஒரே குழுமம் 
நடாத்துவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஊடக ஆதிக்கத்தைத் தடுப்பதற்குப் பல 
விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அவுஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் ஊடகத்துறை 
குறித்துப் பல கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உண்டு. இது போன்ற பாதுகாப்புச் சட்டங்கள் 
நமக்கும் அவசியம் தேவை. இதைப் பற்றிய விரிவான விவாதமும் செயற்பாடும் மிக அவசியம். 
ஏனெனில் நாம் அறிந்தவரையில் உலக அளவில் எந்த ஜனநாயக நாட்டிலும் எந்த ஒரு 
குடும்பத்திடமும் இத்தகைய அரசியல் மற்றும் ஊடக அதிகாரம் ஒரு சேர இல்லை.� 
 
(நன்றி-கண்ணன்-காலச்சுவடு-ஆகஸ்ட் 2005) 
 
இது கருணாநிதியின் முக்கிய இலட்சியத்தையும் அதை அடைவது குறித்து அவர் போடும் 
கணக்கினையும் கோடிட்டுக் காட்டுகின்றது அல்லவா? 
 
வைகோ மீதான கருணாநிதியின் உறவையும், உறவின்மையையும் இதே தளத்தில் வைத்துத் 
தர்க்க்pக்க விரும்புகின்றோம். 
 
1993ம் ஆண்டு நவம்பர் மாதம் திமுகவிலிருந்து வை.கோ வெளியேற்றப்பட்டார். 
காட்டுத்தீயாக இச்செய்தி தமிழகமெங்கும் பரவியது. வைகோ திமுகவிலிருந்து 
வெளியேற்றப்பட்டதைக் கண்டிதது சில தொண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள். தமிழகம் 
பரபரப்பாகியது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கொலை முயற்சிப்பழியை வைகோ மீது கருணாநிதி 
சுமத்தினார். அப்போது எழுத்தாளர் வாசந்திக்குக் கருணாநிதி அளித்த பேட்டியில் 
இருந்து சில பகுதிகளைத் தருகின்றோம்.  
 
(நன்றி-தீராநதி-பெப்ரவரி 2006) 
 
கருணாநிதி கீழ்வருமாறு கூறியதை வாசந்தி ஒலி நாடாவில் பதிவு செய்தார். 
 
�இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைத்தால் சந்தோசப்படுவோம். ஆனால் தமிழீழத்திற்கு 
ஆதரவாகக் கோசம் போடமாட்டோம். ஆனால் இந்த ஆள் (வைகோ) தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை 
ஏற்படுத்துகின்றார். வெளிப்படையாகத் தமிழீழத்திற்கு ஆதரவாக தடைசெய்யப்பட்டுள்ள 
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றார். 
 
இவ்வாறு வாசந்திக்குப் பேட்டியளித்த கருணாநிதி முன் அவர் கூட்டிய பத்திரிகையாளர் 
கூட்டத்தின் போதும் வைகோ குறித்துக் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். வைகோவை 
திமுகவின் தலைமைப் பதவியில் அமர்த்துவதற்காக தன்னை கொலை செய்வதற்கு விடுதலைப் 
புலிகள் திட்டமிட்டிருப்பதாகத் தனக்கு இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து செய்தி 
வந்திருப்பதாக் கருணாநிதி தெரிவித்தார். �இப்படிப்பட்ட தகவல் கிடைத்ததும், வைகோவை 
நேரடியாக விளக்கம் கேட்காமல் பத்திரிகையாளர் கூட்டம் மூலம் இதனைத் தெரிவித்தது ஏன்? 
என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதியால் ஏன் உரிய பதிலை சொல்ல முடியவில்லை. 
வைகோவை ஏன் கேட்க வேண்டும்.? புலனாய்வுத்துறைத் தகவலை இலேசாக எடுக்கக் கூடாது 
என்பதனால் மக்களிடம் போக வேண்டியதாயிற்று� என்றுதான் கருணாநிதி பதிலளித்தார். 
 
�கருணாநிதியின் குற்றச்சாட்டினைப் பத்திரிகையுலகமும் பொதுமக்களும் பரவலாக ஏற்றுக் 
கொள்ளவில்லை.� வைகோவின் அதிகர்த்து வருகின்ற செல்வக்கு கருணாநிதியயை 
அச்சுறுத்துகின்றது. தமக்குபின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயார்pத்து 
வருபவருக்கு வைகோ ஒரு நீ;க்கப்பட வேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்.- என்றுதான் 
அந்த 1993ம் ஆண்டிலேயே பரவலாகக் கருதப்பட்டது. 
 
கடைசி நேரத்தில் திமுக, மதிமுக கூட்டணி பிரிவது ஒன்றும் புதிதல்ல! கடந்த 2001ம் 
ஆண்டு தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது சங்கரன் கோயில் தொகுதி மதிமுகவிற்குத் 
தரப்படாததால் திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறினார். அன்றிலிருந்து இன்றுவரை 
தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவைப் பொறுத்தவரையில் ஓர் இறுக்கமான நிலைப்பாட்டைத்தான் 
கருணாநிதி கொண்டிருக்கின்றார். அதற்கு ஒரு தொலை நோக்குப் பார்வைதான் காரணமாக 
உள்ளது. 
 
தனது மறைவிற்குப் பின்னர் தனது கட்சி உடையாமல் கட்டுக்கோப்புடன் ஸ்டாலினின் 
தலைமையின் கீழ் செயல்படவேண்டும் என்று கருணாநிதி விரும்புகின்றார். அப்படியென்றால் 
அத்தகைய வேளையில் தனது கட்சிக் கூட்டணியில் வேறு செல்வாக்கான தலைவர்கள் இருக்கக் 
கூடாது. முக்கியமாக வைகோ இருக்கக் கூடாது. தனது மறைவின்போது வைகோ திமுக கூட்டணியில் 
இருந்தால் பிறகு நடக்க கூடிய அதிகாரப் போட்டியில் கணிசமான திமுக தலைவர்களையும் 
தொண்டர்களையும் வைகோ தன்பக்கம் இழுத்துக் கொண்டு வெளிச் செல்வதற்கு வாய்ப்பு 
அதிகம். அதனடிப்படையில்தான் கருணாநிதியின் கணக்கு அமைகின்றது. 
 
கருணாநிதியின் அரசியல் கணக்கு என்பது தூரநோக்குப் பார்வையில் போடப்படுகின்றது 
என்றால் வைகோவின் காய் நகர்த்தவோ குறுகிய காலத்திற்குள் வரக்கூடிய வெற்றிகளையும், 
நன்மைகளையும் முன்வைத்து மேற் கொள்ளப்படுகின்றது. �துரோகிப்பட்டம்� சூட்டித் தன்னை 
கட்சியில் இருந்து வெளியேற்றிய கருணாநிதியுடனேயே வைகோ இணைந்து கொள்ள முடியுமானால் 
விரோதியாகத் தன்னை நினைத்து சிறைக்கனுப்பிய செல்வி ஜெயலலிதாவோடு இணைந்து கொள்வதில் 
வைகோவிற்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? 
 
எவ்வளவுதான் ஆற்றலும் கவர்ச்சியும் இருந்தாலும், இன்றைய நிலையில் தேர்தல் ரீதியாகத் 
தனது பலத்தை நிரூபித்து தனது கட்சியை அடுத்த கட்ட உயர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய 
நிலையில் தான் வைகோ உள்ளார். 1993ம் ஆண்டில் ஆரம்பிக்;கப்பட்ட அவரது மதிமுக 
பரவலாகத் தமிழ் நாட்டிலும் மத்திய அரசின் சில அதிகார மையங்களிலும் சில 
செல்வாக்குகளை அடைந்திருப்பது என்பது உண்மைதான் என்றாலும், அவரும் அவரது கட்சியும் 
இன்னும் ஆழமாக வேரூன்ற வேண்டிய காலம் வந்து விட்டது. முக்கியமாகத் தமிழ் நாட்டுச் 
சட்டப் பேரவையில் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டிய தேவையும் வைகோவிற்கு உள்ளது. 
அதற்கேற்பவே அவர் தனது அரசியல் காய்களை நகர்த்த முனைகின்றார். 
 
வைகோவைப் பொறுத்தவரையில் இந்தச் சட்டசபை தேர்தலில் தனது கட்சி அதிக தொகுதிகளில் 
வெற்றி பெற்று அதே வேளை ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வரும் பட்சத்தில் மிகுந்த 
செல்வாக்கோடு திமுகவின் அதிகார மையத்தைக் குலைக்கும் முயற்சியை மேற் கொள்ள 
முடியும். அதற்கேற்ப இந்த முயற்சிக்குச் செல்வி ஜெயலலிதாவின் உதவியும் வைகோவிற்கு 
தங்குதடையின்றிக் கிட்டக் கூடும். 
 
தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக அமைந்து திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் 
கருணாநிதியின் அதிகாரம் ஸ்டாலின் கைக்கு மாறுகின்ற வேளையில் அதிருப்தி அடைகின்ற 
திமுக பிரமுகர்களைத் தன்பக்கம் இழுக்கின்ற கடினமான முயற்சிகளை வைகோ மேற்கொள்ளக் 
கூடும். எது எப்படியிருப்பினும் இந்தக் குறுகிய கால குழப்ப நிலைகள் தனது கட்சியை 
அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு போகமுடியும் என்று நினைத்துத்தான் வைகோ தனது 
அரசியல் காய்களை நகர்த்தக் கூடும். 
 
கருணாநிதியின் கணக்கா, அல்லது வைகோவின் காய் நகர்த்தலா, வெற்றி பெறப்போகின்றது 
என்பது மே மாதம் தெரிந்து விடும். ஆனால் நாம் இக் கட்டுரையின் ஊடாகத் 
தெரிவித்திருந்த அடிப்படைக் காரணிகள் மாற்றம் பெற்று சாதாரணத் தமிழ்ப்பொதுமகனின் 
பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நாம் நம்பவில்லை. 
 
தமிழ் நாட்டுச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழீழ மக்களின் விடுதலைப்; 
போராட்டத்திற்கு எத்தகைய தாக்கங்களைக் கொண்டு வரும் என்று நாம் தர்க்கிக்காமல் 
விட்டதற்குக் காரணம் உண்டு. தமிழ் நாட்டுத் தேர்தலின் முடிவிலோ, இந்திய 
நாடாளுமன்றத் தேர்தலின் முடிவிலோ, அல்லது வேறு எந்த நாட்டின் தேர்தலின் முடிவிலோ 
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தங்கியிருக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம்.  |