Valentine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற �காதலர்
தினம்� இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப் படுத்தப்பட்ட
பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம்
காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள்
மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக
அறிகிறோம். இந்த 2006ம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால்
அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து
அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது
ஓர் உபரியான தகவல்!
Valentine's தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால்,
பலவிதமான தகவல்களை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் பல
உறுதிப்படுத்தப்படாமல் செவி வழித் தகவல்களாகவும் இருக்கின்றன. சில
உறுதிப்படுத்தப்பட்டு ஆவணங்களாகவும் உள்ளன. இவை குறித்துச்
சுருக்கமாக ஆய்வதோடு உலகின் பல இனங்களையும் நமது தமிழினம் உட்பட
இக்காதலர் தினம் அல்லது இந்தக் காதல் எவ்வளவு பாதித்துள்ளது,
அல்லது பாடுபடுத்தியுள்ளது என்பதையும் நாம் குறிப்ப்pட
விழைகின்றோம்.
ரோம் நகரத்தில் கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டிளவில்
மத நம்பிக்கையற்ற சடங்காகக் காதலர் தினம் உருவாகியது என்று பலர்
கருதுகின்றார்கள். ஆட்டு மந்தைகளையும் அவைகளின் இடையர்களையும்
தொடர்ந்து ஓநாய்கள் தாக்கி வந்தமையால்- இந்த இடையர்களின் நல்வாழ்வு
கருதி ஒரு சடங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மணமாகாத இளம் பெண்களின்
பெயர்களை தனித்தனியே சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியில் இட்டு
ஒவ்வொரு இளைஞனும் தனக்கென ஒரு சீட்டை எடுப்பான்.
தேர்ந்தெடுக்கப்படுகின்ற இளம்பெண்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த
இளைஞர்களுடன் ஓர் ஆண்டு காலம் சேர்ந்து வாழ்வார்கள் இந்த சடங்கு
பெப்ரவரி மாத மத்தியில் நடைபெற்று வந்தது.
இந்த நடைமுறையைப் பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மாற்றியமைத்து
சீட்டுக்களில் இளம் பெண்களின் பெயர்களுக்கு பதிலாக புனிதர்களின்
பெயர்களை இட்டு இப் புனிதர்களின் பெயர்களை தெரிவு செய்யும்
இளைஞர்கள் அப்புனிதர்களைப் போலவே வாழ வேண்டும் என்று விதிமுறையை
கொண்டு வந்தன. இந்தப் புதுமுறை வெற்றி யளிக்கவில்லை.
Valentine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன.
பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக
உள்வாங்கப்பட்டிருக்கலாம் புனித வலண்டைன் என்கின்ற கிறிஸ்தவ
பாதிரியார் செய்து வந்த பிரசாரம் காரணமாக மக்கள் இராணுவத்தில்
சேரவேயில்லை என்றும் இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ்
வலன்டைன் பாதிரியாரை சிறையில் அடைத்ததன் விளைவாக சிறையில் வலன்டைன்
பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த
விதம் குறித்தும் பல உபகதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல
காதலர்களுக்கு துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி
வைத்தபடியால் அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக
அறியப்பட்டார். பின்னளில் புனித வலன்டைன் தினம் காதல் தினமாக
அறியப்பட்டது.
இதே வேளை பெப்ரவரி 14ம் திகதியில்தான் பறவைகள் இனவிருத்தியல் ஈடுபட
ஆரம்பிக்கின்றன என்று பொதுவாக ஐரோப்பியர்கள் நம்புவதுண்டு. இது
குறித்துக் கவிதைகள் பலவும் உண்டு. தவிரவும்
Saint Valentine�s
தினம் குறித்து சேக்ஸ்பியரும் குறிப்பிடுகின்றார்.
சீனர்களின் பண்பாட்டில் கூட காதலர் தினம் முக்கிய இடம்
வகிக்கின்றது.
The Night of Seven என்ற அழைக்கப்படும்
இத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதம் ஏழாம் திகதியன்று
கொண்டாடப்படுகின்றது.
ஜப்பானியர்களின் பண்பாட்டில் சூரியக்
காலக் கணக்கின்படி ஜீலை ஏழாம் திகதியன்று காதலர் தினம் சற்று
வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிரேசில் நாட்டில்
ஆண்நண்பர் பெண்நண்பர் என்ற பெயரில் ஜீன் 12ம் திகதி காதலர் தினம்
கொண்டாடப்படுகின்றது. கொலம்பியா நாட்டின் செப்டெம்பர் மாதத்து
மூன்றாவது வெள்ளிக்கிழமையிலும் நட்பு மற்றம் காதலர் தினம் என்ற
பெயரில் காதல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தகவல்கள் எடுத்துக்காட்டாக தரப்படுகின்றன.
இவையெல்லாம் இருக்கட்டும். தமிழர் வாழ்வில் ��காதலர் தினம்� என்ற
ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் காதல் என்ற ஒன்று இல்லையா?
என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும்,
இகழ்ந்தும் பேசி வருவதோடு அது வெள்ளைக் காரனின் பண்பாடு என்று
ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம்
உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான்
திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா?
என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.
உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில் காதலர் தின விடயத்தில்
மேல்நாட்டவனுக்கு தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான்! அந்த அளவிற்கு
காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தொல்தமிழன். சங்ககால
இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும்
காதலும் காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை
ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப்
பார்ப்போம்.!
தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பொருள் இலக்கியம் அகம் - புறம்
என்கின்ற இரண்டு தனிக்கூறுகளைக் கொண்டது. இந்த இரண்டு திணைகளைப்
பற்றிக் கூறுகின்ற பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் தமிழ் மொழி தவிர
உலகின் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இந்தப் பொருள் இலக்கண
இலக்கிய நூல்கள் தமிழரின் சமுதாய வாழ்வை அணுகி நுணுகி ஆய்ந்து
எழுதப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம்
குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது
�ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த
பேரின்பம். . .� என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். சமுதாயத்தில்
ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் - கணவன் - மனைவி -
உறவு என்பன அகம் எனப்படும். குடும்பத்தின் புறம் சார்ந்த கடமைகளான
கொடை வீரம் போர் ஆட்சி என்பன புறம் எனப்படும். அகப்பொருளின் பாடு
பொருள் ஆண் பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக
உயிர்களுக்கெல்லாம் உரியது. உடைமையது இன்பம் தருவது. இது
குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.
எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது
தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
-தொல்காப்பியம் பொருளதிகாரம் - நூற்பா 27
உலக மக்களின் இனப்பெருக்கத்திற்கும் உலக வாழ்வின் பண்பு
மேற்பாட்டிற்கும் வழி வகுக்கின்ற அகப்பொருள் சங்க இலக்கியப்
பாடல்களில் சிறப்பிடம் பெறுகிறது. 2,381 சங்க இலக்கியப்
பாடல்களில், 1862 பாடல்கள் அகத்தினைப் பற்றிக் கூறுகின்றன. சங்க
இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்கள் அகப்
பொருளைப் பாடியவர்கள் ஆவார்கள். இதன் மூலம் சங்கக் காலத்துச்
சான்றோர் அகப்பொருள் இலக்கியத்திற்கு தந்த சிறப்பையும்
முதன்மையையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. மகன் - தாய் - அண்ணன்-
தம்பி ஆகியோரிடத்து ஒவ்வொரு நிiயினரும் அன்பு என்னும் காதல்
காட்டப்படுகின்றது. குறுந்தொகையில் இக்காதல் தலைவன்
தலைவியிடத்தும், தலைவி தோழியிடத்தும், செவிலி நற்றாயிடத்தும்,
தலைவன் பாங்கனிடத்தும், ஒருவர் மற்றொருவரிடத்தும் காட்டுகின்ற
அன்பின் விளக்கமாக அமைந்துள்ளது.
தொல்காப்பியத்தில் வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால்
அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள்
கூறுவார்கள். பத்துவிதமான திருமணங்கள் சங்க காலத்தில் நடந்ததாக
நாம் அறியக்கூடியதாக உள்ளது.
1. களவுமணம்
2. தொன்றியல் மரபின் மன்றல்
3. பரிசல் கொடுத்து மணத்தல்
4. சேவை மணம்
5. திணைக் கலப்பு மணம்
6. ஏறு தழுவி மணமுடித்தல்
7. மடலேறி மணமுடித்தல்
8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்
9. துணல்கையாடி மணத்தல்
10. பலதார மணம்
இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.
களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை ஒரு நீண்ட பரிணாம
வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில்
தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த
சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.
தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில்
மேற்கொண்டுள்ளார். முதலாவது-முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது.
இரண்டாவது தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்தவரையில் அதன்
பொருள் விளக்கத்தை தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார்.
ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள்
விளதக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.
களவுக்காதல் வாழ்வை பலதுறைகளாக அமைத்துச் சுவைபட சங்கப்புலவர்கள்
பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த எங்கோ
பிறந்த தலைவனும் தலைவியும் எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில்
எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை
இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு
சந்தித்து மனமொன்றிய காதலர்கள் மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு
முன்பு சந்தித்த இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி கொள்வது
இடந்தலைப்பாடு என்று அழைக்கப் பட்டது. அந்தக் களவுக்கூடல் தலைவனின்
தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது �பாங்கற் கூட்டம்� என்றும்
தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது �பாங்கியற் கூட்டம்�
என்றும் வழங்கப்பட்டது.
வேட்கை மிகுதியால் களவுக் காதலர்கள் இரவிலும் பகலிலும் தோழியின்
துணையால் சந்தித்து அளவாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும்
காதலர் கூடல் பகற்குறி என்றும் இரவில் நடைபெறும் களவுக் கூடல்
இரவுக்குறி, என்றும் வழங்கப்பட்டது.
இங்கே ஒரு விடயத்தை நேயர்கள் கவனிக்க வேண்டும். சங்க காலத்து
களவுக்காதல் கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு
என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு
கவனிக்கத் தக்கது.
ஆகவே அக் களவுக்காதல் புனிதமனது.
சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது. போற்றியது. கற்பு
வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது.
சங்கக் காலக் களவுக்காதலின் நெறியை குறித்து �களவொழுக்கம் தூயது,
களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர்,
களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்� என்று டாக்டர்-வ. சு.
ப. மாணிக்கம் அவர்கள் கூறியதை இங்கே நினைவு கூறுகின்றோம்.
களவுக் காதலர் மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லறம் இனிது
நடத்தலைப் பற்றிக் கூறுவது கற்பொழுக்கம் ஆகும். அகத்தினை கூறும்
தூய்மையான அறங்களுள் தலையானது களவு வழிப்பட்ட கற்பு
வாழ்க்கையாகும்.
�காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி,
ஆற்றலுள் பேராற்றல், அடிப்டையுள் பேரடிப்படை எல்லோருக்கும் உரியது.
நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள்
அறிந்திருந்தார்கள்� என்று ஆய்வாளர் டாக்டர் வ சு ப மாணிக்கம்
அவர்கள் குறிப்பிடுகின்றார்.
காதலால் ஒருமித்து சேர்ந்து வாழ்ந்தவர்களில் மத்தியில் பிரச்சனைகள்
ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டபோது அதனை தடுப்பதற்காக பின்னாளில்
திருமணம் என்ற சடங்கு அறிமுகம் படுத்தப் பட்டது. அதனை
தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.
�பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப�
.இங்கே அய்யர் என்று சொல்லப்படுபவர்கள் நீங்கள் நினைப்பது போல்
பிராமணர் அல்லர்! சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக பெரிவர்களாக
சான்றோர்களாக அறியப்பட்டவர்களை ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை அய்யன்
என்று தொல்காப்பியர் காலச் சமுதாயம் அழைத்தது. அதேபோல் கரணம்
என்பதற்கு அர்த்தம் திருமணச் சடங்காகும்.
அதாவது காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வாழ்வில் பிரிவு
வரக்கூடாது என்பதற்காக பின்னாளில் ஊர்கூடி திருமணச்சடங்கை
நடாத்தியது. அதன் காரணமாக இல்வாழ்க்கையில் இணைந்தவர்கள்
சமுதாயத்திற்கும் பொறுப்பாகவும், அச்சமுதாயம் அவர்களுக்கு
பொறுப்பாகவும் இருக்கின்ற சூழ்நிலை உருவாகியது. எனவே களவு முறையில்
தோன்றும் பொய்யையும் வழுவையும் �கரணம்� தடுக்கும் என்றும்
தடுப்பதற்காகவே கரணத்தை அமைத்தனர் என்னும் கட்டுப்பாட்டுத்தன்மை
சமிழ் சமுதாயத்தில் பின்னர் உருவாயிற்று.
தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்கு
காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார்.
அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட காமத்துப்பாலில் நளினமும்
இனிமையும் கூட இருப்பதை நேயர்கள் அறிவீர்கள். நறுக்குத்
தெறித்தாற்போல் காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் வள்ளுவர்
கூறினாலும் அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்தாக உள்ளது.
�யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்� - திருக்குறள் 1094
என்ற குறளில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிர்
நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக நிலத்தை
நோக்கினாள். தலைவன் பாராதவிடத்து தலைவி அவனை நோக்கி மெல்லப்
புன்முறுவல் செய்தாள். தலைவனுக்கு தனது உள்ள-விருப்பை தனது மலரும்
முகத்தினால் வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய
புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் அவள் தன்னை மனப்பூர்வமாக
விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் என்று பார்வையினூடே
காதலை படர விடுகின்றார் வள்ளுவர்.
வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ வேறு விதப்
பார்வையினால் தன் காதலை வெளபபடுத்துகின்றாள். தலைவனை நேரடியாக
நோக்காது வேறொரு பொருளை நோக்குவதுபோல் முகம் காட்டிக்கொண்டு
ஒருவிழிப்பார்வையால் தலைவனை நோக்கித்தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை
�குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்.� � குறள் 1095
என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாக சொல்லி காதல் இன்பத்தை
வெளிக்கொண்டு வருகிறார்.
பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை பின்னர் ஆரியர்
ஆக்கிரமிப்பின் பின்னர் மறையத் தொடங்கியது பெண்ணடிமை மிக்க
சடங்குகளும் வாழ்க்கை முறைகளும் தமிழன் வாழ்வைச் சீரழிக்க
ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில் காதல் எவ்வவளவு வலுவாக
இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை தௌளு தமிழில்
தேனூறும் சொல்பரப்பி கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி
ராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியை கம்பன் தனது கம்பராமாணயணத்தில்
காட்டுகின்றான்.
வில்லை முறித்து சீதையை மணப்பதற்காக ராமன் வருகின்றான். வில்லை
முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி ராமாயணம்.
கம்பனின் இராமாயணத்திலோ வில்லை
முறிக்க வரும் இராமனை மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள்.
இராமனும் அவளை நோக்குகின்றாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர்
முதல் தடவையாக பார்க்கின்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக்
குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை
ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது. இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை
உள்ளத்தில் இராமனும் குடிபுகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின்
அடிப்படையான புதுமுகம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப்
படுகின்றது அதனை கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்
�எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.�
�பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர் �
- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590 , 592)
தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை எனவே கம்பர் இராமயணத்தை
தமிழாக்கி தமிழருக்குள் கொண்டு வரும்போது இப்படி இடையில் ஒரு காதல்
காட்சியை புகுத்தி இராமன் சீதைத் திருமணத்தை ஒரு காதல் வீரத்
திருமணமாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது.
இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டல்லவா?
இன்று நாம் புலம் பெயர்ந்துள்ள வெளிநாடுகளில் காதல் அடையாளமாகக்
கொடுக்கப்படும் மலர்கள் எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு
வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை தமிழ்நாட்டில் மலர்கள்
மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும்கூட
முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.
அன்புக்குரிய நேயர்களே! தமிழனின் கடல்போன்ற காதல் வாழ்வைச்
சொல்வதற்காக முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல
முனைந்தோம். இந்தக் கட்டுரைக்கு சங்கக் காலப்பாடல்கள்,
தொல்காப்பியம், திருக்குறள், கம்ராமாயணம் போன்றவற்றோடு சங்க
இலக்கியத்pல் காதல் மெய்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை
காட்டும் காதல்வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின. இது உங்கள் காதல்
தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்று நம்புகின்றோம்.
|