Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >   பொய்மை உணர்த்தும் உண்மை!
 


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 பொய்மை உணர்த்தும் உண்மை!
6 February 2006


சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வைத்து தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு எதிரான செயல்களாகும் - என்று உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக 'மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டிருந்த இந்தப் பணியாளர்கள் எந்தவித இன்னல்களுக்கும் ஆளாகாமல் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்ற நியாயமான எதிர்பார்ப்பும், ஏக்கமும் எம்மவர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளன.

போரும், ஆழிப்பேரலையும் தந்துவிட்ட அனர்த்தங்கள் காரணமாக மிகக் கடினமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற எம் மக்களுக்குத் தொடர்ந்தும் அரும் பணி ஆற்றி வருகின்ற, தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் எவ்விதமான ஆபத்துக்களுக்கும் ஆளாகக் கூடாது என்பதோடு இவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டியதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும், என்று உலகளாவிய வகையில் வேண்டுகோள்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சிறிலங்கா அரசும், அதன் நிர்வாகமும் உரிய முறையில் செயலாற்றுவதாக எமக்குத் தோன்றவில்லை.! அத்தோடு இவர்களின் அணுகுமுறைகளும், அறிக்கைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே எழுந்துள்ள பல சந்தேகங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமைகின்றன.

சிறிலங்காவின் வெளி விவகார அமைச்சர் மற்றும் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஆலோசகர் போன்றோர் அவசர அவசரமாகத் தெரிவித்த கருத்துக்கள், நியாயமான விசாரணைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பைச் சீர் குலைத்துள்ளதோடு நீதி நிலை நிறுத்தப்படும் என்ற எண்ணத்தையும் சிதறடிப்பதாகவே அமைந்துள்ளன.

இந்த துயரமான சம்பவங்கள் ஊடாக யதார்த்த நிலை மட்டுமல்லாது, ஒளித்து மறைத்து வைக்கப்பட்டுள்ள சமாதான விரோதச் சிந்தனைகளும் வெளிவந்திருப்பதை நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.

சில விடயங்களையும், சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்து சிந்திப்பது இக் காலகட்டத்தில் மிக அத்தியாவசியமானதாகும் என்றே நாம் கருதுகின்றோம்.

‘தமிழர் புனர்வாழ்வுக் கழகம்’ என்கின்ற இத்தொண்டு நிறுவனம் பல்லாண்டு காலமாக இலங்கைத்தீவில் ஆற்றி வருகின்ற பணிகள் அளப்பரியன. பெயரில் மட்டும் ‘தமிழர்’ என்ற சொல் இருந்தாலும் புனர் வாழ்வுக் கழகம் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என இனம் கடந்து பணியாற்றி வருகின்ற உன்னதமான தொண்டு நிறுவனமாகும்.

அது மொழி கடந்து இனம் கடந்து, மதம் கடந்து தனது நற்பணிகளை இலங்கைத்தீவில் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. இரண்டு தசாப்த காலப்போரின் போதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தக் காலத்தின் போதும், தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஆற்றிய, ஆற்றி வருகின்ற உன்னதமான பணிகள் போற்றுதற்குரியவை.

அத்தோடு மட்டுமல்லாது போர்க்காலத்தின் போது தமிழ் மக்கள் பசியால் பிணியால் வாடி மடிவதைத் தடுப்பதற்காகப் புனர் வாழ்வுக்கழகம் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகள் அளப்பரியவை. பின்னர் சமாதானத்திற்கான காலம் என்று அழைக்கப்பட்ட நான்காண்டுக் காலத்தின் போது சமாதானத்தின் பயனை தமிழ் மக்கள் பெறாமல் தவித்திட்டபோது பல பாரிய புனருத்தாரணத் திட்டங்களை மேற்கொண்டு எமது மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் முன்னின்று உழைத்ததும் இதே புனர் வாழ்வுக்கழகம்தான்!

 ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் மேற்கொண்ட பணிகளின் பலன்கள் சகல இன மக்களையும் சென்றடைந்தன. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் தன்னலமற்ற பணியாளர்களின் சேவையாலும் மனித நேயம் மிக்க புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் பங்களிப்பாலும் இன்று புனர் வாழ்வுக்கழகம் ஓர் ஆலமரமாக வளர்ந்து, மக்களை வாழ வைக்கும் மரமாக திகழ்கின்றது.!

ஆனால் மக்களை வாழ வைக்கும் இந்த ஆலமரத்தை வெட்டி அழிக்கும் பணியில் ‘சில புண்ணியவான்கள்’ ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் பணியின் தற்போதைய கதாநாயகனாக சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர விளங்கி வருவதை எமது நேயர்கள் அறிவீர்கள்.

அண்மையில் அமெரிக்கா சென்று தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகப் பல முயற்சிகளை மங்கள சமரவீர மேற்கொண்டார். ஆனால் அவர் ஈற்றில் வெறும் கையோடுதான் நாடு திரும்ப நேரிட்டது.

அமெரிக்காவில் மங்கள சமரவீர மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அமெரிக்காவில் தடை செய் முயன்றதுமாகும்!. ஆனால் அமெரிக்காவில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு மிக்க மதிப்பு உள்ளதோடு மட்டுமல்லாமல் அங்கே தமிழர் புனர் வாழ்வுக்கழகம் புனர்வாழ்வுப் பணிகளுக்காக மேற் கொள்கின்ற நிதி சேரிப்புக்கு அமெரிக்கா அரசாங்கம் வரி விலக்கும் அளித்துள்ளது.

அத்துடன் மட்டுமல்லாது இத்தகைய தொண்டால் நிறுவனங்ககளுக்குரிய கணக்கு விபரங்களைச் சிறப்பாகப் பேணி வருவதற்குரிய உயர் அங்கீகாரத்தையும் அமெரிக்க அரசு தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.

மங்கள சமரவீரவின் முயற்சியில் உள்ள முரண்பாட்டை நாம் இங்கே கவனிக்க வேண்டும். அமைச்சர் மங்கள சமரவீரவின் முந்தைய முதலாளியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் மகத்தான பணிகளைப் பாராட்டிக் கடந்த ஆண்டு விருது ஒன்றை அளித்திருந்தார்.

அதுவும் சாதாரண விருது அல்ல! தமிழர் புனர் வாழ்வுக் கழகம் மேற்கொண்ட திட்டங்களின் எதிர்பார்த்த இலக்கைவிட இரண்டு மடங்கு அதிகமான இலக்கை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு அந்த விருதினை அளித்துக் கௌரவித்திருந்தார்.

ஆனால் புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகர அமைச்சரான மங்கள சமரவீர தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய முயல்க்pன்றார். ஆறுமாதங்களுக்குள் சிறிலங்கா அரசின் கொள்கைகள் மாறி விட்டனவா?

இது கூடப் பரவாயில்லை! தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள், சிpறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்துக் கடத்தப்பட்ட உடனேயே மங்கள சமரவீர ஓர் அறிக்கையினை விடுக்கின்றார். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் ஒரு நாடகம் என்று இக் கடத்தல் சம்பவம் குறித்து அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கின்றார்.

எமக்குள் எழுகின்ற கேள்வி இதுதான்!

தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து காவல்துறை முறையான விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து நீதியை நிலைநாட்டும் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அரசு தெரிவித்திருப்பது உண்மையானால் இந்த முறையான விசாரணைகள் முடிவதற்கு முன்னால் முந்திரிக்கொட்டை போல் மங்கள சமரவீர ஏன் தனது முடிவான கருத்தை தெரிவிக்க வெண்டும்?

மங்கள சமரவீரவின் அரசு சொல்கின்றது. முறையான விசாரணைகள் நடாத்தப்படும் என்று . ஆனால் அந்த முறையான விசாரணைகள் நடாத்தப்படுவதற்கு முன்னால் சிறிலங்காவின வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர சொல்கின்றார். ‘இக்கடத்தல் சம்பவம் ஒரு நாடகம்’ என்று.

அப்படியென்றால் எமது கேள்வி ஒன்றே ஒன்றுதான்! ஏன் இந்தக் கடத்தல் நாடகத்தை சிறிலங்கா அரசு செய்கின்றது என்பதுதான் எமது கேள்வி!

எம்முடைய கேள்வியை நியாயப்படுத்துவது போல்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் புதிய ஆலோசகரான கொட்டக தெனியவின் அறிக்கையும் அமைந்துள்ளது. கொட்டகதெனிய சொல்கின்றார் ‘தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் பணியாளர்களின் கடத்தலுக்கு சிறிலங்கா அரசாகங்கம் பொறுப்பில்லை’ என்று!

அப்படியென்றால் முறையான விதத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என்று வாக்குறுதிகளை ஏன் அரசு அளிக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா? ஒருபுறம் முறையான விசாரணை நடைபெறும் என்று கூறிக்கொண்ட மறுபுறம் விசாரணைக்கு முன்பே த{ர்ப்புக்களையும்(!) கூறிக்கொண்டு இருந்தால் இங்கே நீதி எவ்வாறு கிட்டும்.?

இங்கே கிடைக்கக் கூடிய நீதி இந்தப்பொய்மைகள் வெளியாவது மட்டும்தான் என்று நாம் எண்ணுகின்றோம். இந்தப் பொய்மைகள் உணர்த்துகின்ற உண்மைகள் என்னவென்றால் இங்கே நீதி இல்லை நியாயம் கிட்டாது என்கின்ற யதார்த்தங்களைத்தான்.!

இந்தக் கடத்தல் செயல்களுக்கு சிறிலங்கா அரசோ, அல்லது அதனுடைய இராணுவமோ, அல்லது இவையிரண்டின் அனுசரணையோடு இயங்குகின்ற ஒட்டுக்குழுக்களோ காரணம் இல்லை என்றால் நீதியான விசாரணையை அரசு உடனே நடாத்தி முடிக்க வேண்டும் அதை விடுத்து விசாரணைகள் ஆரம்பமாகு முன்னரேயே தீர்ப்புகளைச் சொல்வதானது, உண்மையான நியாயமான விசாரணைக்கு ஏற்புடைத்தாகாது.

கண்முன்னே நடந்தவற்றை ‘பொய்’ என்றும் ‘நாடகம்’ என்றும் இந்தப்புதிய அரசு திரித்துக் கூறுமென்றால் எதிர் காலத்தில் சமாதான விடயங்களில் எத்தனை தில்லுமுல்லுக்கள் நடைபெறும் என்பதை எம்மால் ஊகிக்கவே முடிகின்றது.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். போர்க்காலங்களில் கருத்து முரண்பாடு உட்படப் பல முரண்பாடுகளை சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினர்களும் எதிர் கொள்வது எதிர் பார்க்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் சமாதானக் காலத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்படுவது நேர்மையின்மையைச் சுட்டிக்காட்டும்.! மங்கள சமரவீர போன்றவர்களின் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு எதிரான முரண்பாடுகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளை நிலை குலைய வைக்கும் என்பதை நாம் இப்போதே சொல்லி வைக்க விழைகின்றோம். ஏனெனில் இது இந்தப் புதிய சிங்கள அரசின் நேர்மையின்மையை இப்போதே சுட்டிக்காட்டுகின்றது!

அது மட்டுமல்லாது, புதிய அரச அதிபர் மகிந்த ரஜபக்சவின் அரசு ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான பல செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை நாம் கவலையுடன் அவதானிக்கின்றோம். அவசரகாலச்சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவது ஓர் உதாரணமாகும். இங்கே யதார்த்தமான ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சமாதானத்திற்கான காலம் என்று நாம் மீண்டும் அழைக்கின்ற இக்காலகட்டத்தில் அவசர காலகட்டத்தை சிறிலங்கா அரசு நீடித்த வருகின்றது. அவசரகாலச் சட்டத்தின் கொடுமைகளை அனுபவிப்பது சிங்கள மக்களல்ல! அவசரகாலச் சட்டத்தின் கொடுமைகளைத் தொடர்ந்தும் அனுபவித்து வருவது தமிழ் மக்கள்தான்! எனவே அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பதானது சமாதானக் காலத்தின் ஊடேயேயும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற வன்முறையாகும்.!

இச் செயல்கள் யாவும் சமாதானக் காலத்தின்போது செய்யப்படவேண்டிய செயல்கள் அல்ல! இச்செயல்பாடுகள் மகிந்த ராஜபக்சவின் புதிய அரசின்மீது எமக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்றன.

கடந்தவாரம் திடீரென ஒரு வெடிகுண்டுப் புரளி ஒன்று கிளப்பப்பட்டு சிறிலங்காவின் பாராளுமன்றக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கையென்றால், இந்த வெடிகுண்டுப் புரளி ஓய்ந்த பின்னரும் பாராளுமன்றக் கூட்டம் ஆரம்பமாகாமல் ஒத்திவைக்கப்பட்டமைதான்! ஒரு புரளிக்காகவே பாராளுமன்றத்தை இரு வார காலத்திற்கு ஓர் அரசு ஒத்தி வைக்குமானால் இந்த அரசு தனது நாட்டை எவ்வாறு எதிர்காலத்தில் ஆளக் கூடும் என்றுதான் நாம் கவலைப்படுகின்றோம்.

தமிழர் புனர் வாழ்வுக்கழத்தின் பணியாளர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டு உள்ளுரிலும் சர்வதேசத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ள வேளையில் வெடிகுண்டுப்புரளி எழுவதும் பாராளுமன்றக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதும் எத்தகைய பொய்மைகளை அம்பலப்படுத்துகின்றன என்பதை நாம் சிந்திக்க கூடியதாக உள்ளது.

இந்தவேளையில் விபரீதமான ஒரு சிந்தனை எம்முள் எழுவதையும் எம்மால் தடுக்க முடியவில்லை. கடத்தப்பட்டவர்கள் தமிழர்களாக அல்லாது சிங்களவர்களாக இருந்திருந்தால் சிங்கள அரசின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும் என்பதையும் நாம் ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றோம்!

இங்கே ஒரு விடயம் தெரிவிக்கபட வேண்டும் புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் அவரது அரசு இருக்கின்றதா இல்லையா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும். அவரது கட்டுப்பாட்டுக்குள் கீழ்தான் அரச இயந்திரம் செயல்படுகின்றது என்றால் இந்தக் கடத்தல் செயலுக்கு அரச அதிபர் பொறுப்பேற்று அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லை மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டுக்குள் அவரது அரசு இல்லையென்றால் அந்த அதிபரோடு பேசுவதில் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்!

ஆனால் இங்கே ஒரு விடயம் தெளிவாக இருக்கின்றது! சிங்கள அரசுகளுக்கு போர்க்காலத்திலும் நேர்மையில்லை சமாதானக் காலத்திலும் நேர்மையில்லை என்கின்ற விடயம் தான் அது.

இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கும், பொய்மைகளுக்கும் துரோகங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும், நேர்மையின்மைகளுக்கும் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்காவின் புதிய அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கக் கூடும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இனியாவது முறையாக அமல் படுத்துவதன் மூலம் சமாதானப் பேச்சு வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குச் சந்தர்ப்பங்கள் எழக்கூடும். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகின்ற செயல்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கின்ற செயல்தான்!

ஜனநாயக மரபுகளையும், விழுமியங்களையும் விடுதலைப்புலிகள் இயக்கம் மதிப்பதனால் மகிந்த ராஜபக்சவின் அரசு தனது பொய்மைகளைக் களைவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு - இறுதியாக வழங்கப்படவும் கூடும்!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home