Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  புலத்தின் களம்
 


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

  புலத்தின் களம்
24 October 2005

" இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால், நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும், மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம!' . வெற்றியும் காணுவோம்."


சிறிலங்காவின் அரசுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, வெளிப்படையாக இராணுவ ரீதியான யுத்தங்களைக் கடந்த மூன்றரை ஆண்டு காலமாக நடாத்த விட்டாலும் வேறொரு போரைத் தொடர்ந்து நடாத்தியே வருகின்றன. இந்தப் போர் நடைபெறுகின்ற களம் வேறு, போரின் வகையும் வேறு!! சிறிலங்காவின் அரசுகள் நடாத்தி வருகின்ற இந்தப் போர் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் ஒற்றுமையையும், பலத்தையும் குறி வைத்து மேற் கொள்ளப்படுகின்ற போராகும். இந்த நிழல் யுத்தம் குறித்தும் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

போர் ஓய்ந்து விட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலும் தமிழீழ பிரதேசங்களில் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. அவை தமிழ்த்தேசத்தின் ஆன்மாவின் உணர்வையே வெளிப்படுத்தியும் வருகின்றன. தமிழ் பேசும் மக்களாகிய எம்மவரது அடிப்படை வாழ்வுரிமையையும், சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பனவற்றின் அடிப்படையில் தமிழீழ மக்களையும் அவர்களது இறைமைக்கான பேராட்டத்தையும் சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்று இத்தேசியஎழுச்சி நிகழ்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் எதுவும் சிங்கள அரசுகளால் முன் வைக்கப்பட வில்லை. தமிழீழ மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதற்குரிய எந்த விதமான உருப்படியான செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசுகள் மேற்கொள்ளவுமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனைத் திட்டத்தையும் உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பு திட்டத்தையும் சிங்கள பேரினவாதம் வரவேற்கவில்லை.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் தமிழீழ மக்கள் தங்களுடைய இறையாண்மையை வலியுறுத்தி பல எழுச்சி நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக நடாத்தி வருகின்றார்கள். இப்போது தமிழீழ மக்கள் தமது வேட்கையின் வெளிப்பாட்டை சர்வதேச கமூகத்தின் பார்வைக்கு வைத்து வருவதை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

இந்தவேளையில் நாம் இன்னுமொரு கருத்தைத் தர்க்கிக்க வரும்புகின்றோம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதவது ‘சமாதானத்திற்கான’ காலத்தில் ஆட்சி செய்த எந்த ஒரு சிங்கள அரசும் தமிழரின் தேசியப் பிரச்சனைக்குரிய தீர்வு குறித்து திட்டவட்டமான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. அதாவது ‘இதுதான் தமிழரின் பிரச்சனை! இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நாம் இந்த விதமான திட்டங்களை முன்வைக்கின்றோம்!!!. இத்திட்டங்களை நாம் இந்த வகையில் முன்னெடுத்து நிறைவேற்றப் போகின்றோம்.’- என்று எந்தவிதமான செயல்திட்டத்தையும் சிங்கள அரசுகள் முன்வைக்கவேயில்லை.

எந்த ஒரு செயல் திட்டத்தையும் முன்வைக்க முடியாத இவர்களா ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்றவும் துணிவார்கள்? அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனங்களில் கூட சிங்களத்தின் பிரதான கட்சிகள் ஒரு தெளிவான திட்டத்தை முன்வைக்கவில்லை என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். ‘தமிழரின் தேசியப் பிரச்சனை’ எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும். என்பதில் காட்டுகின்ற அக்கறையை விட தமிழரின் தேசியப் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படக் கூடாது - என்பதில்தான் சிங்களக் கட்சிகள் முக்கிய கவனத்தைச் செலுத்தி உள்ளன.

உதாரணத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளரும்  சிறிலங்காவின் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை கீழ்வரும் விடயங்களைத் தெரிவிக்கின்றது.

• தமிழர் தாயகம் - சுயநிர்ணய உரிமை - தன்னாட்சி நிர்வாக யோசனைகள் யாவும் நிராகரிக்கப்படும்.

• சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறையின் கீழ்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

• தற்போது நடைமுறையிலிருக்கும் யுத்தநிறுத்த உடன்படிக்கை மீளாய்வு செய்யப்படும்.

• இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிடுதற்கு எதிர்ப்பு.

• ஆழிப்பேரலை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காகக் கைச் சாத்திடப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்புத் திட்டம் கைவிடப்படும்.

• தமிழீழ விடுதலைப்புலிகள் பிரிவினைக் கோரிக்கையை கைவிட வேண்டும்.

• தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களையும் கைவிடவேண்டும்.

• தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதித் தீர்வுக்கு இணங்க வேண்டும்.

• இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிடக்கூடாத அதேவேளையில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இருக்கவேண்டும்.

• இந்திய அரசுடன் இது தொடர்பாக விரைவில் பேச்சுக்கள் ஆரம்பமாகும்.

மேற்கூறிய யாவும் சிறிலங்காவின் அரச அதிபராக வரக்கூடிய திரு மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் அறிக்கையாகும்.

ஆனால் ஒன்றை மட்டும் இவ்வேளையில் எமது நேயர்களுக்குச் சொல்லி வைக்க விழைகின்றோம். மகிந்த ராஜபக்ஸவின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதாகும்!மிகத்தெளிவாக ஒரு சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சியின் சிந்தனையை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் சிறிலங்காவின் அதிபராக வருகின்ற பட்சத்தில் அவருடன் ஆரம்பிக்கூடிய சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பதை அவர் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லாமல் தெளிவுபடுத்தி விட்டார். எத்தகைய ஒரு நேர்மையான எதிரி! பாராட்டுகின்றோம் அவரை!!

ஆனால் இந்த ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றாரே, அவர் குறித்துத்தான் நாம் ஐயமும் அச்சமும் கொள்கின்றோம். அவர் எதையுமே வெளிப்படையாக சொல்லமாட்டார். செய்யவும் மாட்டார். தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்வார். ஆனால் அது எத்தகைய பிரச்சனை என்பதைத் தெளிவு படுத்த மாட்டார். பிரச்சனையை தீர்க்கப் போகின்றேன் என்று சொல்வார். ஆனால் எப்படி தீர்க்க போகின்றேன் என்று சொல்ல மாட்டார். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டம் தன்னிடம் உண்டு என்று ரணில் சொல்வார். ஆனால் அது என்ன திட்டம் என்று வெளிப்படுத்த மாட்டார். (அப்படி ஒரு திட்டம் அவரிடம் இல்லை என்பதுதான் எனது எண்ணம்.)

ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்த போதும் அது கட்டம் கட்டமாக நகர்வது போல் தோன்றித் தேங்கி நின்ற போதும் நாம் தொடர்ந்து ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை தர்க்கித்தே வந்திருக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்கவின் சமாதானப்பேச்சு வார்த்தை வெறுமனே இழுபடுமே தவிர எந்தவிதமான உருப்படியான பலனையும் தராது - என்பதையும் தொடர்ந்து நாம் தர்க்கித்து வந்த காரணத்தால் பலத்த விமர்சனங்களும் எம்முன் வைக்கப்பட்டு வந்ததையும் நேயர்கள் அறிவீர்கள்.

பல போர்களை வென்று பாரிய தமிழீழ பிரதேசங்களை சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து பலத்தின் அடிப்படையில் சமாதானத்திற்கான நேசக்கரங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் நீட்டிய நேரம் அது!. சிங்கள பேரினவாதத்தின் குணங்களையும,  செயல்களையும் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யார்தான் நன்கறிவார்? 

ஆயினும், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை, சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்மானிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் ஓர் உத்தமமான முடிவை அன்று எடுத்தார்கள். அதனை செயல்படுத்துவதற்காக பொறுமை மிக்க மிக நீண்ட நெகிழ்ச்சிப் போக்கினையும் மேற்கொண்டார்கள். அவை யாவையும் பயனற்றுப் போனபின்னர்தான் சமாதானப் பேச்சு வார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக புலிகள் விலகிக் கொண்டார்கள்.

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வது என்பதானது சமாதானத்திற்கு எதிரானது அல்ல! சமாதான பேச்சு வார்த்தைகள் உரிய முறையில் சீராக நடைபெற வேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியில் கொடுக்கப்படுகின்ற நேர்மையான அழுத்தமேயாகும்!.

இப்படியாக சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஒரு தேக்கமான நிலைக்கு கொண்டு வந்தவர்தான் சிறிலங்காவின் முன்னைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள். ஆகையால் ரணில் விக்கிரமசிங்க குறித்துத்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  சிறிலங்காவின் அரசு அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பயன் எதையும் தராத நீண்ட சமாதானப் பேச்சுக்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதே நமது நம்பிக்கையுமாகும். சிங்கள பேரினவாதத்தின் அரிதாரம் பூசிய முகம்தான் ரணில் விக்கிரமசிங்க.

சிங்களத்தின் இந்த இரண்டு முக்கிய சக்திகள் குறித்து விரிவாக நாம் தர்க்க்pத்தமைக்கு முக்கிய காரணங்கள் உண்டு. உள்நாட்டில் இச்சக்திகள் வித்தியாசமான செயற்பாடுகளை தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற போதிலும், வெளிநாடுகளில் இச்சக்திகள் ஒரே நோக்க்pல் ஒருமித்த செயற்பாடுகளைத்தான் அன்றும் இன்றும் மேற்கொண்டு வருகின்றன.

புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சிதைப்பதற்கான முயற்சிகளை சிங்களதேசத்தின் சகல அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதைத்தான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

சமாதானத்திற்கான காலத்தின்போதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு அச்சுறுத்தல்கள் எழக்கூடும். இத்தகைய காலத்தின்போதுதான் அந்நிய சக்திகள் ஊடுருவும். இந்தச் சமாதானக்காலம் தரக்கூடிய பொய்யான அமைதியால் மக்களிடையே ஏற்படும் தளர்வு நிலை காரணமாகவும் ஒரு விடுதலைப் போராட்டம் பலமிழக்கச் செய்யப்படும். இந்த வேளைதான் புலம்பெயர்ந்த தமிழீழ மககளின் ஒருமித்த சிந்தனையைக் குழப்புவதற்கும் சரியான தருணமுமாகும்.!

இந்த செயற்பாடுகளைத்தான் சிங்கள பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் செய்து வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் ஒருங்குசேர கருணா என்பவர் துரோகம் இழைத்தபோது மிகவும் அதிகமாகக் கலங்கிப் போனவர்கள் எமது புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள்தான்.!

கருணாவின் துரோகச் செயலுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து அதனை பூதாகரமாகப் பெருப்பித்துக் காட்டுவதில் சிறிலங்கா அரசும், அதன் ஊடகங்களும் பெரிய வெற்றியை பெற்றன. தமிழீழத் தேசியத் தலைமை இந்தத் துரோகத்தை அமைதியாக அதே வேளை அநாயாசமாகக் கையாண்டு முடிவுக்கு கொண்டு வரும் வரைக்கும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தமது நிம்மதியை இழந்து நின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

அதனால்தான் கருணா என்கின்ற கண்கட்டு வித்தையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் எமது கூரையை பிரித்து திருடன் உள்ளிறங்கப் போகின்றான் என்று நாம் அச் சந்தர்ப்பத்தில் தர்க்கித்து இருந்தோம்.

இது ஒரு உதாரணம் மட்டுமே! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முனையும்போதோ அல்லது தடை விதிக்கும்போதோ சம்பந்தப்பட்ட சக்திகள் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மனவலிமையைக் குழப்பும் நோக்கோடும் செயல்பட்டமை, அத்தோடு மட்டுமல்லாது துரோகச் சக்திகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் தமிழீழ மக்கள் மனதிலும் சலசலப்பையும், தளர்வையும் உண்டாக்குவதற்கும் இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள்.

இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால், நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும், மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம்! . வெற்றியும் காணுவோம்.

எந்த ஓர் அழுத்தத்தை விதிப்பதன் மூலமோ, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி வலிமை இழக்கச் செய்து விடலாம் என்கின்ற எண்ணம் பைத்தியக்காரத்தமானது. புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும், வலிமையையும் தக்க வைத்திருப்போம். தமிழீழத் தேசியத் தலைமையின் வழி காட்டலில் விடியலைக் காண்போம். கலங்கற்க.
 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home