"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam
Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
பஞ்சமா பாதகங்கள்
- (அல்லது, ஐந்து மகா அநியாயங்கள்)
"�சிறிலங்காவின் சட்டம், சிறிலங்காவின் நீதி, சிறிலங்காவின் அரசியல் யாப்பு, சிறிலங்காவின் ஜனநாயக வழிமுறை, சிறிலங்காவின் ஆளும் சிங்களத் தலைமைகள் - இந்த ஐந்து சக்திகளும் தமிழினத்திற்குப் �பஞ்ச மா பாதகங்களைப்� புரிந்து வருகின்றன... முன்னர் உள்ளூருக்குள் ஒப்பந்தங்கள்! பின்னர் அண்டைநாடான இந்தியாவுடன் ஒப்பந்தங்கள்!! இப்போது உலக நாடுகள் பலவற்றின் வாழ்த்துக்களுடனும் நோர்வே நாட்டின் அனுசரணையுடனும், ஒப்பந்தமும் பேச்சு வார்த்தைகளும்- - - -.!!!"
22 August 2005
�போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து நேரடிப் பேச்சு வார்த்தைகளை � ஆரம்பிப்பதற்கு. சிறிலங்கா அரசு விடுத்த அழைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்� என்று கடந்த வார இறுதியில் செய்திகள் வெளியாகியிருந்தன. �இன்னும் இரண்டு வாரங்களில் சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகும்.� என்று நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனும் தெரிவித்திருக்கின்றார். இதனையடுத்து இலங்கைத் தீவில் மீண்டும் சமாதானத்திற்கான விடிவெள்ளி தோன்றி விட்டது, என்கின்ற வகையில் செய்திகளும், அரசியல் ஆய்வுகளும் வெளிவர ஆரம்பித்து விட்டன. மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ள இந்த வேதாள ஆய்வுகள் திரும்பவும் கீழே இறக்கப்படுவதற்கு முதல், நாம் எம்முடைய கருத்துக்கள் சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றோம்.
இப்போது நடைபெற இருப்பது சமாதானப் பேச்சு வார்த்தைகள் அல்ல! இது போர் நிறுத்த உடன் படிக்கை குறித்த பேச்சு வார்த்தைகளாகவே அமைய இருக்கின்றது. அதாவது போர் நிறுத்த உடன்படிக்கையை சீரான முறையில் அமல்படுத்துவது தொடர்பாகவும் சிறிலங்கா அரச போர்நிறுத்த விதிகளை நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பது தொடர்பாகவும், விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது அழுத்தம் கொடுக்க கூடும்.!இப்போது நடைபெறப் போகின்ற பேச்சு வார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் வாழ்க்கையானது, இயல்பு நிலைக்கு முற்றாகத் திரும்பும் என்றோ, அல்லது தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் �தமிழ்த் துரோகக் குழுக்களின் ஆயுதங்களை முற்றாக களைதல், உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தமிழ் மக்களின் குடியிருப்புக்களை இன்னமும் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றி அங்கே எமது மக்களை மீளவும் குடியேற்றுதல், கருணா என்கின்ற செயலற்ற முகமூடியின் பின்னால் ஒளிந்து கொண்டு சிறிலங்கா இராணுவத்தினர் செய்து வருகின்ற தொடர் கொலைகள் போன்றவற்றிற்கு முடிவு கட்ட முனைதல், தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் புரிந்த, புரிந்து வருகின்ற வன்முறைகளுக்கு முடிவுகட்டுதல், - என்பவை போன்ற போர்நிறுத்த மீறல்களுக்கு முற்றாக முடிவு கட்டுவதற்கு இந்தப் பேச்சு வார்த்தைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடும்.! உண்மையில் இவை மிக முக்கியமாவை என்றே நாமும் கருதுகின்றோம்.!
தமிழீழ மக்களின் தற்போதைய வாழ்க்கையானது, ஓரளவிற்காவது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்த புதிய பேச்சு வார்த்தைகள் அடித்தளமாக அமைந்தால்(?) அதில் எமக்கு மகிழ்ச்சிதான்.!
கடந்த மூன்றாண்டு காலமாக நாம் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் பலன் - அல்லது - பயன் குறித்துச் சற்று - எதிர்மறையான - கருத்துக்களையே கூறி வந்துள்ளமை என்பது உண்மைதான்.! அவற்றைத் தமிழ் பேசும் ஊடகங்கள் - தங்களுடைய கண்டனத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளமையையும் நாம் கண்டறிந்தோம். ஆனால் எம்முடைய நிலையில் இருந்து எம்மால் மாற முடியவில்லை. அதற்குக் காரணம் இந்தச் சிங்கள பௌத்த பேரினவாதிகள் மீது நாம் கொண்டிருந்த தர்க்கரீதியான, வரலாற்று ரீதியான கருத்துக்கள்தான்.! நாம் கொண்டிருந்த கருத்துக்களும், தெரிவித்து இருந்த தர்க்கங்களும், இன்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அப்படியே நடைபெற்று உள்ளன. அவற்றிற்கு நாம் உரிமை பாராட்டவோ, அல்லது பெருமை கொள்ளவோ நாம் முன்வரவில்லை.! ஏனென்றால் அதற்கு எமக்குத் தகுதியோ, உரிமையோ இல்லை என்பதுதான் உண்மை!
தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து இப்போது ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முதல் நாம் சில தர்க்கங்களை நேயர்களாகிய உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம். அவற்றை சீர் தூக்கி பார்க்கும்படி வழமைபோல் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.!
எந்தவிதமான சமாதான முன்னேற்பாடுகள் மூலமாகவோ, அல்லது சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகவோ தமிழீழ மக்களுக்கு ஒரு நியாயமான நிரந்தரமான, நீதியான, கௌரவமான, தீர்வு ஒன்று கிடைத்து விடும் என்று நாம் எப்போதும் நம்பியதில்லை. அதற்குரிய காரணங்களை நாம் சுமார் பதினைந்து ஆண்டு காலமாகவே அதாவது முன்னைய ஜனாதிபதி பிரேமதாசா காலத்திலிருந்தே ஊடகங்கள் ஊடாகத் தர்க்கித்து வந்திருக்கின்றோம்.
ஆனால் பரபரப்புச் செய்திகளுக்கும், செவ்விகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வருகின்ற எமது தமிழ் ஊடகங்ககள் எம்முடைய தர்க்கங்களைச் சற்றேனும் சட்டை செய்யவில்லை என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மையாகும். அது இன்றும் தொடர்கின்றது என்பது இன்னுமொரு வேதனையான விடயமாகும்.!
இன்றைய இந்தக் காலகட்டத்தில் நாம் ஐந்து விடயங்களை ஐந்து முக்கியமான விடயங்களை மட்டும் -தர்க்கிக்க விழைகின்றோம்.
�எத்தனை எத்தனை சமாதானப்பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அவற்றிற்கு எத்தனை எத்தனை வெளிநாட்டு அரசுகளும் வல்லரசுகளும், ஆதரவு அளித்தாலும் ஒரு விதமான பயனும் தமிழீழ மக்களுக்கு கிடைக்க போவதில்லை.� என்பதனை நாம் மீ;ண்டும் மீண்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். இதற்கு ஐந்து முக்கிய விடயங்களை நாம் இங்கே முன்வைக்கின்றோம்.
ஏனென்றால் இந்த ஐந்து முக்க்pய விடயங்களும் தமிழீழ மக்களுக்கு எதிராக இருப்பதனை இப்போது மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
சிறிலங்கா அரசின் தற்போதைய யாப்பின் ஊடாகவும், யாப்பிற்கு அப்பாற்பட்ட முயற்சிகள் ஊடாகவும், ஐந்து வகையான செயற்பாடுகளைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத அரசுகளும், அரசியல்வாதிகளும் செய்து வருவதை நாம் இன்றைய தினம் தர்க்கிக்க விழைகின்றோம். சரியாகச் சொல்லப் போனால், சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் வன்முறைகளை நாம், ஐந்து பிரிவுக்குள் அடக்க முனைகின்றோம் என்பதுதான் உண்மை. இவற்றை நாம் விரித்துச் சொல்லப்போனால், அவை �அடுத்த யுகத்திற்கும்� தொடர்ந்து விடக்கூடும் என்ற அச்சமும் எமக்கு உண்டு.
சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தொடர்ந்து ஆளப்பட்டு வருகின்ற �சுதந்திர(?)� இலங்கையின் வரலாறு சில விடயங்களைச் சுட்டி நிற்கின்றது. இலங்கைத் தீவில் வாழுகின்ற இன்னொரு தேசிய இனமான தமிழினத்தை ஏற்றுக் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ சிங்கள பௌத்தப் பேரினவாதம் தயாராக இல்லை என்பதையே இலங்கைத் தீவின் வரலாறு நிரூபித்து நிற்கின்றது. இந்த நவீன யுகத்தில், சகல சனநாயக நாடுகளால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு தான் ஆளுகின்ற நாட்டில் நடைமுறைப் படுத்துவதில்லை.
�சட்டம், நீதி, அரசியல் யாப்பு, ஜனநாயக வழிமுறை, ஆளும் சிங்களத் தலைமைகள்-இந்த ஐந்து சக்திகளும் தமிழ் மக்களுக்கு எதிராகவே இயங்கியும் இயக்கப்பட்டும் வருகின்றன.
சிறிலங்காவின் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கின்றது. எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
சிறிலங்காவின் �நீதி� தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் நீதித்துறை இந்த எதிர்ப்புத் தன்மையை நடைமுறைப் படுத்துகின்றது.
சிறிலங்காவின் அரசியல் யாப்பானது தமிழ்த் தேசியத்திற்கும், தமிழினத்துக்கும் எதிரான சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்குரிய ஒரு யாப்பாகும். இந்த அரசியல் யாப்பு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களுக்கும் கீழாக நடாத்துவதற்காக உபயோகப் படுகின்றது.
சிறிலங்காவின் ஜனநாயக வழி முறைகள் யாவும். எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும், அடக்குவதற்குமே பயன் படுத்தப்படுகின்றன. �பெரும்பான்மையோருக்கே சகலதும்� என்ற கோட்பாட்டுக்கு, சிறிலங்காவின் சனநாயக வழிமுறைகள் செயல் வடிவம் கொடுக்கின்றன.
ஆளுகின்ற- ஆண்ட- சிங்கள தலைமைகள் யாவும், சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனையின் வாரிசுகளாகவே விளங்கினார்கள். அதனால்தான் ஐம்பது ஆண்டு காலத்துக்கும் மேலாக, சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களுக்கு, அரசியல் ரீதியாகத் தீர்வு எதுவும் கிடைக்காமல் போயிற்று.
�சிறிலங்காவின் சட்டம், சிறிலங்காவின் நீதி, சிறிலங்காவின் அரசியல் யாப்பு, சிறிலங்காவின் ஜனநாயக வழிமுறை, சிறிலங்காவின் ஆளும் சிங்களத் தலைமைகள் - இந்த ஐந்து சக்திகளும் தமிழினத்திற்குப் �பஞ்ச மா பாதகங்களைப்� புரிந்து வருகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு, கள நிலைக்கு ஏற்றவாறு, உள்ளூர் - வெளியூர் அரசியல் - மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு, இந்த ஐந்து சக்திகளில் ஏதாவது ஒரு சக்தி பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. சிலவேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகளைக் கூட்டாக இணைத்தும் பௌத்த பேரினவாதம் வெற்றி கொண்டிருக்கின்றது.
முன்னர் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து வீசப்பட்டதற்கும் கைச்சாத்திடப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் செயல் வடிவம் பெறாமல் நடை முறைப்படுத்தப் படாமல் கிடப்பில் போடப் பட்டிருப்பதற்கும் இந்த ஐந்து சக்திகள்தான் காரணம்.!
முன்னர் இலங்கைத்தீவின் இனத் தலைவர்கள் அதாவது சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலைவர்களும் வேறு நாட்டின் தயவோ, உதவியோ அனுசரணையோ இல்லாது தமக்குள்ளேயே அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டார்கள். அவற்றை இந்த ஐந்து சக்திகளும் விழுங்கி விட்டன.
பின்னாளில் அண்டைய வல்லரசு நாடான இந்தியாவின் தலையீட்டுடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏனோ - தானோ என்று, அவசரத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் அது. இவ்ஒப்பந்தம் ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டமாக்கப்பட்டு சிறிலங்காவின் அரசியல் யாப்பிலும் இடம் பெற்றது. ஆனால் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படாமல் எப்படிச் சீரழிந்து போயிற்று என்பதற்கான காரணங்களை நாம் எம்மவர் வாயிலாக கேட்கத் தேவையில்லாதவாறு இந்தியாவே வெளிப்படுத்தியிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை குறித்த வழக்குகளுக்கும், புலன் ஆய்வுகளுக்கும் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரியின் பெயர் கார்த்திகேயன். அவர்; விடுதலைப் புலிகளுக்கும்-இந்தியப் படையினருக்கும் இடையே போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் காலப் பகுதியில் தமிழீழப் பகுதிகளைச் சுற்றி பார்த்த இந்திய மத்திய அமைச்சர் அவைச் செயலாளருக்கு ஓர் அறிக்கையை கையளித்தார். அந்த அறிக்கை சுமார் 45 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாகும்.
அந்த உத்தியோகபூர்வ அறிக்கையின் ஊடாகப் பல பரிந்துரைகளைக் கார்த்திகேயன் வழங்கியிருந்தார். அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியப்படைகள் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும். அந்தப் பரிந்துரைக்குக் காரணிகளாகக் கார்த்திகேயன் பல விடயங்களை குறிப்பிட்டு இருந்தார். அவற்றில் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
�இந்திய படைகள் தமிழ் மக்களின் முழுமையான வெறுப்பைச் சம்பாதித்து விட்டது.�
�மக்கள் ஆதரவு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டும்தான் உண்டு�.
�இந்திய படைகள் இப்போது ஆக்கிரமிப்புப் படையாக மாறி விட்டன.�
இதைத்தவிர இலங்கை இந்திய ஒப்பந்தம் செயல் படுத்தப்படாமல் இருப்பதையும் கார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார். �சட்டத்திருத்தத்தின் பிரகாரம் வடகிழக்கு மகாகாண சபைக்கு வழங்கியிருக்க வேண்டிய அதிகாரங்களில் மிகச் சொற்பம் கூட சிறிலங்கா அரசு வழங்க வில்லை � � என்று ஒப்பந்தம் சீரழிந்து போனதைத் தனது அறிக்கையின் ஊடாகக் கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
ஆகவே சிறிலங்காவின் சட்டத்தை திருத்துவதாகவோ, ஏன் அரசியல் யாப்பை திருத்துவதாலோ கூட எதுவித பயனும் கிடைக்கப் போவதில்லை என்பது கண்கூடாக விளங்குகின்றது. சிறிலங்காவின் அரசியல் யாப்புத் திருத்தப்பட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டப் போவதில்லை. ஆகவே சிறிலங்காவின் அரசியல் யாப்பு திருத்தப்பட்டவுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற வாதத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முன்னர் உள்ளூருக்குள் ஒப்பந்தங்கள்! பின்னர் அண்டைநாடான இந்தியாவுடன் ஒப்பந்தங்கள்!! இப்போது உலக நாடுகள் பலவற்றின் வாழ்த்துக்களுடனும் நோர்வே நாட்டின் அனுசரணையுடனும், ஒப்பந்தமும் பேச்சு வார்த்தைகளும்- - - -.!!!
தற்போதைய முயற்சிகளால் பலன் ஏதும் கிடைத்தால் அது பின்வரும் பலனாகத்தான் இருக்கமுடியும். சிங்களப் பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனையையும் தீர்த்து வைக்காது. - என்கின்ற உண்மை வெளியாகின்ற பலனாகத்தான் அது இருக்க முடியும். சம்பந்தப்பட்ட உலக நாடுகள் இந்த உண்மையின் தரிசனத்தை விரைவிலேயே காண வேண்டும் என்பதுதான் எமது அவா! இந்தப் பலன்தான் இந்தப் பேச்சுக்கள் ஊடாக வரக்கூடும்! அந்த வேளையிலாவது இந்த உலக நாடுகள் சரியான முடிவுகளை எடுத்துக் காட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வுகளும் இதனை நோக்கித்தான் இருக்கும் என்பதும் எமது சிந்தனைகளுள் ஒன்றாகும்.