"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam
Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
நிதி குறித்த (சிறிலங்காவின்) நீதி?
[see also
Sri Lanka President Kumaratunga & Sri Lanka Chief Justice Sarath Silva
- Two Minds but a Single Thought?]
"இந்த உச்சமன்றத் தீர்ப்பு ஜே.வி.பியிற்கு கிடைத்த வெற்றி அல்ல! இத்தீர்ப்பு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகும்."
19 July 2005
சில வாரங்களுக்கு முன்பு அதாவது 24-06-2005 அன்று கடற்கோள் நிவாரணப் பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டதை அடுத்து இவ்விடயம் குறித்து நாம் எமது பார்வையைத் தந்திருந்தோம். அதன்போது நாம் பல விடயங்களை தர்க்கித்திருந்த போதும் முடிவாக சில சந்தேகங்களைத் தெரிவித்து வினாக்களை எழுப்பியிருந்தோம். நாம் சந்தேகித்த விதமாகவே சம்பவங்கள் நடைபெற்றிருப்பது எமக்கு வருத்தத்தையே தருகின்றது.
அன்றைய தினம் நாம் பின்வருமாறு வினாக்களை விடுத்திருந்தோம்.
இந்தப் பொதுக்கட்டமைப்பினை முறையாக அமல்படுத்துவதற்கு அம்மையாரின் அரசிற்கு வலு இருக்கின்றதா? வலு இல்லாவிட்டாலும் விருப்பமாவது இருக்கின்றதா?
சரியாக மூன்று வாரங்களுக்கு பின்னர் அதாவது 15.02.2005 அன்று சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் பொதுக்கட்டமைப்புக்கு ஓர் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39பேர் தாக்கல் செய்த பொதுக்கட்டமைப்புக்கு எதிரான மனு தொடர்பாக இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்குச் சட்டச் சிக்கல்களையும், அரசியல் நெருக்கடியையும், தோற்றுவித்துள்ளது என்று பல அரசியல் ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். அது மட்டுமல்லாது பொதுவாக பரவலாக ஏன் பெரும்பான்மையாகக் கூட இந்தக் கருத்துக்களைத்தான் பலரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களும் இக்கருத்துக்களைத்தான் பிரதிபலித்து வருகின்றன.
ஆனால் எம்மால் இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இந்த உச்சமன்றத் தீர்ப்பு ஜே.வி.பியிற்கு கிடைத்த வெற்றி அல்ல! இத்தீர்ப்பு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகும்.
இவ்வாறு நாம் கருதுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை நாம் தர்க்கிக்க விழைகின்றோம்.
முதலில் சிறிலங்காவின் நீதித்துறை குறித்துச் சில கருத்துக்களை நாம் முன்வைக்க விரும்புகின்றோம். இலங்கைத்தீவு பிரித்தானிய அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றைய தினம் வரை சிறிலங்காவின் நீதித்துறையானது தமிழ் மக்கள் மீது ஒரு பாரபட்சமான போக்கையே கடைபிடித்து வந்திருக்கிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழர்கள் தொடுத்த எத்தனையோ வழக்குகள் இன்னம் கிடப்பில் போடப்பட்ட வண்ணமே உள்ளன. சிறிலங்கா இராணுவமும், அரசும் செய்திட்ட தமிழின அழிப்புகள், பாலியல் பலாத்காரங்கள,; சட்டமீறல்கள் குறித்த வழக்குகள் ஆண்டாண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதையே நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.
ஆனால் தமிழரின் நலனுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த ஒரு வழக்கையும் சிறிலங்காவின் நீதித்துறை உடனடியாகவே கவனத்துக்கு எடுத்துக்கொண்டு �தக்கதொரு� தீர்வையும் வழங்கி வருவதையும் வரலாறு சுட்டிக்காட்டும்.
இன்று சந்திரிக்காவிற்கு அரசியல் நெருக்கடியை உண்டாக்கியதாக கருதப்படும் இந்தத் தீர்ப்பினை வழங்கிய தலைமை நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி யார்? என்பதை முதலில் கருத்தில் கொள்வோம்.
சிறிலங்காவின் தலைமை நீதிமன்றத்தின் இன்றைய பிரதம நீதிபதியாக சரத்என்டி சில்வா என்பவரை சந்திரிக்கா அம்மையாhர் முன்னர் நியமித்தபோது இது ஒரு முறைக்கேடான நியமனம் என்று ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் ஒரு போராட்டத்தை தொடங்கியது. பின்னர் அந்தப் போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைவிட்டது. பிரதம நீதிபதியான சரத் என் டி சில்வா �ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தீவிர விசுவாசி�. அவர் ஜனாதிபதியின் கையாள் என்ற குற்றச்சாட்டுக்கள் அப்போது சான்றுகளுடன் முன் வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது தடவையாக சிறிலங்காவின் ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் பதவி ஏற்றுக் கொண்டார் ஆனால் பின்னர் அதாவது ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு தடவை ஆனால் இம்முறை மிக இரகசியமாக, அந்தரங்கமாக அம்மையார் பதவிப் பிரமானம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் பதவிக்கால எல்லையை நீடிப்பதற்காக சட்டத்தின் ஓட்டைகளுக்கூடாக செய்யப்பட்டதாக கருதப்படும் இந்தக் கருமத்தை ஜனாதிபதியின் அரசியல் எதிர்கால நலனுக்காகச் செய்தவர்தான் இந்த பிரதம நீதிபதியான சரத் என் டி சில்வா!.
ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் �இப்படிப்பட்ட� விசுவாசியான இந்தப் பிரதம நீதிபதியான சரத் என். டி சில்வா இன்று ஜனாதிபதி அம்மையாருக்கு ஒரு சட்டச் சிக்கலையும் அரசியல் நெருக்கடியையும் தோற்றுவிக்கும் விதத்தில் நடந்துள்ளார்.?
இல்லை!-ஜனாதிபதி அம்மையாரின் அதிவிசுவாசியான பிரதம நீதிபதி சரத் என் டி சில்வா இன்ற இந்தத் தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு மிகப்பெரிய ஓர் உதவியை செய்து விட்டார்.
ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தனது சொந்த விருப்பத்திற்கு மாறாக உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகக் கையெழுத்திட்ட கடற்கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது அம்மையாருக்கு இல்லை. இந்த வாய்ப்பை சந்திரிக்காவின் விசுவாசியான சிறிலங்காவின் பிரதம நீதிபதி சரத் என் டி சில்வா வழங்கியுள்ளார்.
சந்திரிக்கா அம்மையாருக்கு தேவைப்பட்ட கால அவகாசத்தை கால இழுத்தடிப்பை இன்று சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியுள்ளது. ஜே வி பியினரின் எதிர்ப்பையே தனக்கு சாதகமாக மாற்றிய சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் காய் நகர்த்தல் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் நாம் தெரிவித்திருந்த கருத்துக்களை மீண்டும் எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அன்றைய தினம் நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.
�--- இணக்கப்பாட்டைக் காண்பதற்குரிய காலத்தையும் அம்மையாரின் அரசு இழுத்தடிக்கக் கூடும். காலத்தை செயல்பாடு எதுவுமின்றி வீணே இழுத்தடிக்கும் கைங்காரியத்தில் அம்மையார் கை தேர்ந்தவர். கால இழுத்தடிப்புக்குரிய வாய்ப்பு பன்முகப்பட்ட நிலையற்ற அரசியல் காலம் கட்டவிழித்து விடப்பட்டுள்ள சிங்கள-பௌத்தப் பேரினவாதம் அரசை எந்தவிதமாவது கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கும் - சுயநலக்கட்சி அரசியல்வாதம் - இவற்றிற்கிடையே அந்தப் பொதுக்கட்டமைப்பு செயல்பட வாய்ப்பிருக்கின்றதா? என்ற கேள்வியும் பெரிதாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இவ்வாறு நாம் மூன்று வாரங்களுக்கு முன்னர் சந்தேகம் தெரிவித்திருந்தோம்.
அன்புக்குரிய நேயர்களே! பிரதம நீதிபதி சரத் என் டி சில்வா அவர்களை உள்ளடங்கிய நீதிபதிக்குழு வழங்கிய இந்த இடைக்காலத் தடை உத்தரவில் மேலும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. �கூறப்பட்டுள்ளன� என்று சொல்வதையும் விட �உறுதிப் படுத்தப்பட்டுள்ளன� என்று கூறுவதே பொருத்தமானதாகும். அவை வருமாறு:-
1. நாட்டின் தலைவி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு எந்த ஒரு பிரிவினருடனும் ஒப்பந்தங்களைச் செய்வதற்குப் பூரண அதிகாரம் உண்டு.2. அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்கமும் தேவையான வகையில் எந்த பிரிவினருடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு சுதந்திரங்களைக் கொண்டது.
இந்த வசனங்களின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அவர் செய்யக் கூடிய ஒப்பந்தங்களையும் உச்ச நீதிமன்றம் மீள் உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும் சொல்லப்படுகின்ற வசனங்கள் பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தம் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
அத்தோடு �2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு விரோதமானது அல்ல� என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால்,
�பொதுக் கட்டமைப்பு நிதியம் பிரதேச செயலகத்தின் தலைமையகம் கிளிநொச்சியில் செயல்படுவது மீளமைப்புத் திட்டங்ககளுக்குப் பிரதேசக் குழுக்கள் ஒப்புதல் அளிப்பது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் சிக்கல்கள் இருப்பதனால் பொதுக்கட்டமைப்புக்கு ஓர் இடைக்காலத் தடை உத்தரவை சிறிலங்காவின் உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.�
இதில் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் நலன் கருதியே இந்த முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் தெரிவிக்கின்ற, ஒப்புக் கொள்கின்ற முக்கிய கருத்தான விடுதலைப் புலிகளுக்கென்ற ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசம் உண்டு என்பதை இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. பிரதேச செயலகத்தின் தலைமையகம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கிளிநொச்சியில் செயல்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தடைக்கு காரணம் கூறுகின்றது.
இந்த முரண்பாடுகளுக்கிடையில் உள்ள ஓர் அடிப்படை விடயத்தை நாம் சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராகப் பல பரப்புரைகளையும், செயல்பாடுகளையும் முன்னர் செய்து வந்தவர்தான் இந்த சந்திரிக்கா அம்மையார். ஆனால் இன்றைய தினம் இதே யுத்த நிறுத்த ஒப்பந்தம்தான் அவருடைய அரசியல் நலனுக்கு உதவப் போகிறது.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குள் வைத்துக் கொண்டே அவர்கள் மீது வலிந்து ஒரு யுத்தத்தை திணிப்பதுவே அம்மையாரின் நோக்கமாகும்.
மிக அண்மைக் காலமாக சிறிலங்கா இராணுவமும், அதன் புலனாய்வுப் பிரிவும் பாரிய அளவில் யுத்த நிறுத்த மீறல்களைப் புரிந்து வருகின்றன. பல விடுதலைப் புலிப்போராளிகள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் வருவதானது ஒரு தொடர்கதையாகத் தொடர்கிறது. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நெகிழ்ச்சி;ப் போக்கினையே கடைப்பிடித்து வருகிறார்கள். இரண்டு தசாப்த காலமாக சிறிலங்கா அரச பயங்கரவாதம் போர்கள் கெடுபிடிகள் தந்திட்ட இன்னல்களுக்கும் ஆழிப்பேரலை தந்திட்ட அழிவுகளுக்கும் முகம் கொடுத்த எமது தமிழீழ மக்களுக்கு இந்த சமாதானப் பேச்சுக்களின் ஊடாக எந்த விதமான உருப்படியான பலனையும் சிங்கள அரசுகள் தந்து விடவில்ல. மாறாக தமிழ்த் தேசத்தின் மீது வலிந்து ஒரு யுத்தத்தை திணிக்கும் முயற்சிகளிலேயே சிறிலங்கா அரசு முனைப்புக் காட்டி வருகின்றது.
இன்று சந்திரிக்கா அம்மையாரின் எதிர்கால அரசியல் நலனக்காக ஓர் அருமையான கால அவகாசத்தை சிறிலங்கா உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆழிப்பேரலை தந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் உடனடியாக மீளவேண்டும் என்கின்ற அடிப்படை மனிதாபிமான உணர்வு கூட சிறிலங்காவின் நீதித்துறைக்கு இல்லை. ஆழிப்பேரலை அனர்த்தங்கள் ஏற்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது கூட நீதித்துறைக்கு ஒரு பொருட்டாக இல்லை. அதேபோல் சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் தத்தமது சொந்த அரசியல் இலாபத்திற்காக அதிகார ஆசைக்காகச் செயற்பட்டு வருவதையே நாம் காண்கின்றோம்.
தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக கடமையுண்டு.! தமிழீழ மக்களின் புனர்வாழ்வு புனருத்தாரணத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் தமிழீழ மக்களின் தேசிய பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரமான, நீதியான, கௌரவமான தீர்வினை அடைவதற்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.சமாதான பேச்சுக்கள் ஊடாக நீதியான தீர்வு வரவேண்டும் என்பதற்காக நெகிழ்ச்சிப் போக்கினை விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள் ஆனால் சிறிலங்காவின் சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் நலன் குறித்து சிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் அவர்கள் மீது யுத்தம் ஒன்றையும் வலிந்து திணிக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகையில் பொருத்தமான அடுத்த கட்ட நகர்வு ஒன்றினை விடுதலைப் புலிகள் எடுக்க வேண்டி வரலாம். அது அவ்வனம் ஆகையில் தமிழ்த் தேசியத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய தார்மீக கடமை புலம் பெயர்ந்திட்ட தமிழர்களாகிய எமக்கும் உண்டு.
மூன்று வாரங்களுக்கு முன்பு நாம் கூறியிருந்த ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். மூன்று வாரங்களுக்கு முன்பு பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப் பட்டபோது நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.
�இந்த உடன்படிக்கையில் புலிகள் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு ஒரு வாய்ப்பையும், இப் பொதுக்கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயற்படுவதற்காக சிறிலங்கா அரசிற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கியிருக்கின்றார்கள் என்று நாம் கருத்து தெரிவித்திருந்தோம்.�
அன்புக்;குரிய நேயர்களே!
இன்று இலங்கைத்தீவின் யதார்த்த நிலையை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் அறியும். சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் தொடர்ந்து தமிழீழ மக்களுக்கு புரிந்து வருகின்ற அநீதி குறித்தும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும். சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக நியாயமான, நிரந்தரமான தீர்வு கிட்டவேண்டும் என்று உலக நாடுகள் விரும்புவதில் தப்பில்லை. ஆனால் சமாதானத்தின் பெயரால் ஓர் இன மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது நீதியாகாது. உண்மை தெரிந்தும் உறங்குவது போல் பாவனை செய்வதும் நீதியாகாது.!! சிறிலங்காவின் நீதித்துறையின் �தரத்திற்கு� சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் கீழிறங்கி விடலாகாது என்பதே எமது வேண்டுகோளுமாகும்.!