Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >சாதி

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

சாதி

6 July 2005

"‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"

[see also  Caste & the Tamil Nation - Brahmins, Non Brahmins & Dalits ]
 


இன்றைய காலகட்டத்தில் ‘மதம்’ என்கின்ற சொல் ‘பிரச்சனைக்குரிய விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்ற’ சொல்லாக அர்த்தம் பெற்று வருகின்றதோ என்கின்ற ஐயமும், அச்சமும் எமக்கு உண்டு. ‘மதம்’ என்பது வேறு, ‘கடவுள் என்பது வேறு!’ ‘மத நம்பிக்கை என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு!’ என்பது போலத்தான் இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

எதைப் பற்றியும் தர்க்கிக்கலாம், ஆனால் மதம் குறித்தோ, கடவுள் குறித்தோ தர்க்கிக்கக் கூடாது என்கின்ற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதைப் பற்றி நாம் அறிவோம்.

ஆனால் பௌத்த பேரினவாதம் குறித்து நாம் வன்மையாகக் கண்டித்துக் கட்டுரை எழுதுவதற்குக் கைதட்டல் கிடைப்பது போல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதினால் ‘எது கிடைக்குமோ’ என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. சிங்கள-பௌத்த பேரினவாதம் குறித்து கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு நான் ஒரு ஈழத் தமிழன் என்பது ஒரு தகுதியாக இருக்கின்றது.

அதுபோல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதுவதற்கு, பிறக்கும்போது சைவனாகவும,; பின்னர் இந்துவாகவும் மதமாற்றம் செய்து கொண்ட எண்ணற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியே போதும் என்ற தைரியமும் எனக்கு உண்டு.

ஒரு விடயத்தை மிக முக்கியமான விடயத்தை இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வலியுறுத்திச் சொல்லிவிட விரும்புகின்றோம். எவர் மனத்தையும் புண் படுத்தும் நோக்கமோ அல்லது எவரது நம்பிக்கையையும் விமர்சிக்கும் நோக்கமோ எமக்கு கிடையாது. எந்த மதத்தையோ, கடவுளையோ, உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் முயலவில்லை. எமது எண்ணமும் அதுவல்ல!

நடந்ததை, நடப்பதை நாம் உங்களுக்குச் சொல்ல வருகின்றோம். அவ்வளவுதான்! அதனை உங்கள் சிந்தனையில் நிறுத்தி இனிமேல் நடக்க வேண்டியது என்ன என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். சிந்தனையில் சீர்திருத்த மாற்றம் வராமல் செயலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாமும் நம்புகின்றோம்.

இன்றைய தினம், குறிப்பாக இந்தியாவில், இந்துக்களின் பேரினவாதத்தை ‘இந்துத்துவம்’ என்று தாழ்த்தப் பட்டவர்கள் சொல்கிறார்கள். ’அப்படியில்லை’ இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளின் தொகுப்புத்தான் இந்துத்துவம்- என்று இந்துமதத் தீவிர சிந்தனையுள்ளவர்கள் வாதிடுகின்றார்கள். இந்து மதத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இன்று சாதிப் பாகுபாடு இருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், இந்த வருண சாதி வேறுபாடுகளை இந்துமத வேதங்களே அறுதியிட்டுக் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.

நான்கு வருண உருவாக்கம் குறித்துப் பேசுகின்ற ‘இருக்கு வேதத்தின்’ புருஷ சூக்தத்தில், புருஷன் என்கின்ற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் தோற்றுவிக்கப் பட்டதாகக் கதையாடல் அமைக்கப் பட்டுள்ளது. படைப்புக் கடவுள் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணனும், நெஞ்சில் இருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து இவர்கள் மூவருக்கும் சேவை செய்யும் அடிமையாக சூத்திரன் என்பவனும் உருவாக்கப் பட்டார்கள். இந்த சூத்திர சாதியை சேர்ந்தவர்கள்தான் திராவிடர்கள் என்பது பின்னால் விளக்கப் படுகின்றது.

இந்த நான்கு வருணத்தையும் (நான்கு சாதி அமைப்புக்களையும்) தாண்டியவர்கள் மிகக் கேவலமாக சண்டாளர்கள்- தீண்டத் தகாதவர்கள் என அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்படுகின்றார்கள். இவர்கள் ‘தலித்துக்கள்’ என்று இப்போது குறிக்கப் படுகின்றார்கள். ‘தலித்’ என்ற சொல் எப்படி வந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத் தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தார்கள். அந்த அட்டவணையில் வந்த சாதியினரை (ளுஉhநனரடநன ஊயளவந) (ஷெடியூல்ட் காஸ்ற்) அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய ‘தலித்’ என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டது. ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதிமக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது.

மேற்கூறிய நான்கு வருணங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட தலித்துக்கள் ‘புருஷன்’ என்கின்ற உடலுக்கே அப்பாற் பட்டவர்களாகத் தள்ளி வைக்கப்பட்டனர். நடைமுறையில் ஊருக்கு வெளியே இவர்களுக்காகச் சேரிகள் உருவாக்கப் பட்டன. இவர்களைத் தொட்டாலும், பார்த்தாலும் தீட்டுக் கற்பிக்கப் பட்டது. மலம் அகற்றுதல், சவம் காவுதல், பறையடித்தல் முதலான தொழில்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டன.

 கடும் உடலுழைப்பு இவர்களுக்கென்றானது. இவர்களின் கடும் உழைப்பிற்கு ஈடாக உயிர் வாழ்வதற்கு தேவையான மிகவும் குறைந்தபட்ச ஊதியமே இவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. திருவிழா முதலிய சடங்குகளிலும் இவர்கள் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டு, கடும் உடல் உழைப்பைச் செய்யும் பணிகள்; அங்கும் இவர்களுக்கு கொடுக்கப் பட்டன. மேலாடை அணியக் கூடாது. குடிசைகளுக்கு ஓடு வேயக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. சைக்கிளில் செல்லக் கூடாது பொதுச்சாலைகள், பொதுச் சுடுகாடுகள், பொது இடங்கள் போன்றவற்றை இந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது’ என்ற விதிகள் பிறப்பிக்கப் பட்டன.

பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம் தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப் பட்டது.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த மட்டில், சங்க காலத்தின்போது இப்போதுள்ளது போல இறுக்கமான சாதிப் பிரிவினைகளும், தீண்டாமையும் நிலவ வில்லையென்றாலும், சங்ககாலத்திலேயே ஒரு சாரார் ‘இழிசனர்’ என்று ஒதுக்கப்பட்டதற்கும், அவர்களது பேச்சுவழமையை ‘இழிசனர் மொழி’ என்றும், தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்றும் தள்ளி வைக்கப்பட்டதற்கும் தக்க சான்றுகள் உண்டு. தமிழ் மொழி தரப்படுத்தப்பட்ட காலத்தில், செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தமிழ் கொடுந்தமிழாக ஒதுக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சமூகத்திலும் வருண சாதிக் கோட்பாடுகளும், தீண்டாமையும் வேர் கொள்ள ஆரம்பித்தன. கிறிஸ்துவுக்கு பின் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் இத்தீண்டாமை இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றுகள் பல உண்டு. நந்தனார் கதையோடு, திருநாவுக்கரசரின் பதிகங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் பிற இந்திய சமூகங்களைப் போல சத்திரிய வர்ணம் கிடையாது. சூத்திர வர்ணங்களில் ஒருவரான வேளாளர் இங்கே பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலான ஆதிக்க சக்திகளாக விளங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலவுடைமை ஆதிக்கம் இவ்விரு சாதியினிடமே குவிந்திருந்தன என்று (டீரசவழn ளுவநin) பேர்ட்டன் ஸ்டெய்ன் போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிறுவுகின்றார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழரிடையே பார்ப்பனிய மேலாதிக்கம் இல்லாதிருந்த போதும் மேல் சாதியினரிடம் பார்ப்பனிய கொள்கைகள் ஊறிப்போய் ஆதிக்கம் செலுத்தின என்பதே உண்மையாகும்.

பிரபல சிந்தனையாளரான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா தனது ஆய்வு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகின்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் இராமன்-இராவணன் போர் குறித்து அவர் குறிப்பிடுகின்றார். அது சைவத் தமிழனுக்கும், ஆரிய இந்துவுக்கும் நடந்த போரைக் காட்டுகின்றது. அவரது கூற்றின்;படி:

“ஆரிய இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாட்டின்படி வடஇந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கையிழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப் பட்டார்கள். பார்ப்பனர்கள், திராவிடர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள். தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் தலித் பகுஜன்களின் தலைவர்களாக இருந்து வந்தார்கள்.

இப்போது சில பார்ப்பனர்கள் இராவணனும் ஒரு பார்ப்பனனே என்று சொல்ல முயல்கிறாhர்கள். இது முட்டாள்த் தனமானது. இராவணன் ஒரு பேராற்றல் மிக்க தலித் அரசன். அவன் ஒரு தீவிர சைவன்.

தீவிர சைவப் பற்றாளன். பார்ப்பனியத்திலிருந்து சைவத்தைப் பிரிக்கவும், தனித்துவமான தலித் சைவத்தை உருவாக்கவும், இராவணன் முயற்சித்தான். இலங்கையில் இராவணனின் ஆற்றல் மிக்க ஆட்சியைத் தோற்கடித்துப் பார்ப்பன ஆட்சியை உருவாக்க ஆரியர்கள் திட்டமிட்டார்கள். எனவே தென்னிந்தியாமீது படையெடுத்து தாக்குதல் நடத்த முனைந்தார்கள் இராமனுக்கு அந்த பொறுப்புக் கொடுக்கப் பட்டது.

தென்னிந்தியாவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதோடு பெண்களை அடிமையாக்குவதற்கும் இராமாயணக் கதை அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் சமூகத்தை பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பே இராமாயணமாகும்.

இராவணன் வீழ்ச்சியுற்றதோடு தெற்குப் பகுதிகள் முழுமையான பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. இராவணன் இறந்தபிறகு பல பார்ப்பன ரிஷிகள் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலை புகுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். திராவிடப் பகுதியில் தாய்வழிச் சமூகம் நிலை பெற்றிருந்ததை மாற்றி ஆணாதிக்க தந்தைவழிச் சமூகமாக அதனை ஆரியர்கள் மாற்றினார்கள்.

சைவசமயத் தேவாரப் பதிகங்கள் இராவணனை உயர்த்திப் பாடுவதை நாமும் அறிவோம். ‘இராவணன் மேலது நீறு’ என்று தொடங்கி எத்தனையோ தேவாரங்கள் இராவணன் குறித்தும், இலங்கை அரசு குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை நேயர்களுக்கு இங்கு தருகின்றோம்.

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்’

‘வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

‘கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்’

‘இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்’

‘எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்’

‘பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்’

‘சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான்’

இப்படியெல்லாம் பாடிப் புகழ்ந்தவர்கள் மேலும் சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள். தமிழின் அவசியம் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் நாயன்மார்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
(ஆனால் இன்றோ இசைப்பாடல் என்றால் தெலுங்கில் இருப்பதே மரியாதை!)

‘திருநெறிய தமிழ்’ என்றும், ‘ஞானத்தமிழ்’ என்றும் ‘பேசும் தமிழ்’ என்றும், ‘உன்னைத் தமிழில் பாடுவதற்கென்றே என்னை நலம் செய்தாய்’
என்றும் பாடிவிட்டுப் போனார்கள்.
(ஆனால் இன்று கோவில்களில் தமிழ் எங்கே?)

இன்றைய தினம் இந்தியாவைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் படுகின்ற இன்னல்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர்களது துன்பங்களும், துயரங்களும் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான்.

இந்தியாவில் ‘கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம்’ ஒரிஸா மாநிலம் உட்பட இரண்டு மாநிலங்களில் சட்டரீதியாக அமுலாக்கப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கொண்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் இக்கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார்.

 தேர்தல் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அவர் கருதியதனால்தான் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார். பார்ப்பனியப் பெண்மணியும் இந்துத்துவ ஆதரவாளருமான செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலாக்க விரும்பியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆயினும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களைச் சற்று தர்க்கிக்க விழைகின்றோம்.

இந்துத்துவ தீவிரவாதம் காரணமாக, அன்று அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டுப் பின்னர் அங்கே இராமர் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்காக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் இது ஒரு பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் எமது நேயர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒருமுறை இராமன் ஒரு போர்த் தலைவனாகச் சித்தரிக்கப் படுகின்றான்.

அழிக்கும் கடவுளான சிவனை இந்த இந்துத்துவ வாதிகள் முன்னிறுத்த வில்லை. மாறாக முன்னர் திராவிடர்களையும், சைவ மக்களையும் அழித்த இராமன் இப்போது முன்னிறுத்தப் படுகின்றான். மிக மோசமான மதவாதக் கோஷங்களும், வன்முறைகளும் முன் வைக்கப்பட்டன. இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிறிஸ்துவ மதம் மீதும் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த மூன்று மதங்களையும் சார்ந்தவர்களிடையே உள்ள முறுகல் நிலை அதிகரித்து வருகின்றது. இதைவிட இன்னுமொரு விடயமும் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

அதுதான் தலித் மக்களின் மதமாற்றம்!

இந்துத்துவத்தின் கொடுமையால் மிகக் கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்தும், அனுபவித்து வருகின்ற கோடிக்கணக்கான தலித் மக்களில் கணிசமானோர் மதம் மாறத் தொடங்கியிருப்பதனை நாம் காணக் கூடியதாக உள்ளது. இவர்கள் இப்படி மதம் மாறுவதற்குரிய காரணம் என்ன? மற்ற மதங்களில், அதன் கோட்பாடுகளில், வழிகாட்டுதலில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? அல்லது தாம் இறந்த பின்னர் சொர்க்கத்தை அடைவதற்கு இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ துணை செய்யும் என்பதா?

இல்லை! இல்லவே இல்லை!!

தாங்கள் வாழ்ந்து வருகின்ற இந்த தற்போதைய நரக வாழ்க்கையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேட்கை! செத்த பின்பு சொர்க்கத்திற்கு போவது அல்ல! அவர்களால் சாதி மாற முடியவில்லை. அதனால் சமயம் மாறுகிறார்கள்.!!

இந்த மதமாற்றத்தைத் தடுக்கா விட்டால் இந்துத்துவம் ஆட்டம் காணத் தொடங்கி விடும். இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும் இந்துத்துவ பேரினவாதக் கோஷங்களும்!

இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான மக்களை வர்ணாசிரமத்தின் - சாதியின்- அடிப்படையின் கீழ் வைத்து ஒடுக்குகின்ற நிலைமை மாற வேண்டும். அதற்கு பிரிந்து கிடக்கின்ற சகல தலித் பிரிவுகளும், தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்பதே எமது அவா! சாதி என்பது பார்;ப்பனியம் கொண்டு வந்த ஒரு சதியாகும். சாதிப் பிரிவுக்கும், சாதி அடக்கு முறைக்கும் எதிராக மக்கள் சக்தி ஒன்றிணைய வேண்டும். இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற உலக மகாநாடு ஒன்றில் பல தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. அவற்றுள் ஒன்று இந்தச் சாதி பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சொல்வது என்பதாகும்!

‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே!

இந்தியாவின் இந்துத்துவ வாதம் குறித்தும், சாதிவெறி குறித்தும் தர்க்கித்த நாம், தமிழீழம் கண்ட சாதிக் கொடுமைகளை ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கே இழைத்த அநாகரிகத் தீமைகளையும் மறந்து விடவில்லை! இன்னொரு இனத்தின் அடக்கு முறைக்குப் போராடுகின்ற மக்கள் தமது முன்னோர்கள், தம்மின மக்களுக்கே செய்திட்ட வரலாற்றுக் கொடுமைகளை மறக்கக் கூடாது!

இவை குறித்த விரிவான ஆய்வினை எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கு விரும்புகின்றோம்.! இவை குறித்து இன்னும் ஆழமாக பரவலாக ஆய்வினைச் செய்வதே எமது எண்ணமுமாகும். இன்றைய தினம் நாம் கூறியவற்றை கருத்துக்கள் என்று சொல்வதைவிட நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். வழமைபோல் சீர் தூக்கி பார்க்கின்ற பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.!!

இன்றைய இந்தக்கட்டுரையை எழுதப் பல ஆய்வு நூல்கள் உதவின. முக்கியமாக ‘ஆட்சியல் இந்துத்துவம்’இ ‘இந்துத்துவம்-ஒரு பன்முக ஆய்வு’இ ‘நான் ஏன் இந்து அல்ல’இ ‘உலகமயம் எதிர்ப்பு-அரசியல் தலித்துக்கள்’, ‘Making India Hindu’, ‘Indian Middle Class’ ‘Why go for conversion’ போன்ற நூல்களுடன் சில விவரண ஒளிநாடாக்களும் உதவியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home