"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன்-மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா
உருவாகுமா உறவு?
4 May 2005
�தமிழீழப் பிரச்சனை தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டில், இறுக்கம் தளர்ந்து, மாற்றம் ஒன்று வரக்கூடும்� என்ற கருத்துப்பட சில செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. �தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு சீர்பட்டு, புதுப்பிக்கப் படக்கூடும்� என்றும் இச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது, கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலும், அதன் அரசியல் பின்னணியின் அடிப்படையிலும், இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உறவின் முக்கியத்துவம் குறித்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.
ஒரு நாட்டின் அரசியல் கட்சிகளின் ஆட்சி கைமாறும்போது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை, என்பதுதான் உண்மை. அதிலும் அந்த நாடு, ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான விடயமாகவே இருக்கும். எனினும் அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது புவியியல் பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்து சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில விடயங்களைத் தர்க்கிக்க விரும்புகின்றோம்.
திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், அவர் தமிழ் போராளி இயக்கங்களுக்கு ஆதரவும், இராணுவ பயிற்சியும் கொடுத்து வந்தார் என்பது வெளிப்படையான இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு சிறிலங்கா அரசு மீது அரசியல் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தார். இந்திரா காந்தியின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கரணமாக தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள்.
அப்படியென்றால் அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கும் பின்னாளில் இந்தியா கொண்டிருக்கும் வெளிவிவகாரக் கொள்கைக்கும்-(முக்கியமாக ஈழத்தமிழ் மக்கள் பிரச்சனையில்) வித்தியாசம் இருக்கின்றதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால் கூர்ந்து சிந்தித்து பார்த்தால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.
அன்றைய சிறிலங்கா அரசு - ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசு - இந்திய எதிர்ப்புப் போக்கை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் அரசோ அன்று ஒரு வல்லரசாக திகழ்ந்த சோவியத் ரஷ்யாவுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கையில் அதிகரித்து வருவதை தனக்கு ஓர் அச்சுறுத்தலாகவே அன்றைய இந்திய அரசு கருத்pயது.அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில் தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாக ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை பயன் படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கி தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
�ஈழத்தமிழர் போராட்டமானது ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசிற்குத் தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம் ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசு இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும்� - என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் வெளி வந்தது.அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியேகச் செயலாளர் ஆவர். அவர் இலங்கை அரசையும் தமிழர் பிரச்சனையையும் தமிழ்ப் போராளிகள் இயக்கங்களைப் பற்றி இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விபரித்து எழுதியுள்ளார். அவர் எழுதியிருந்த விடயங்களில் சிலவற்றை நாம் இப்போது சுட்டிக் காட்டியிருந்தோம்.
தவிரவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும், அவரது பிரத்தியேகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டிருக்கின்றார். �ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட தமிழீழ விடுதலைப்; புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும் கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும் கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள்.எதிர்காலத்தில் புலிகள் இந்தியாவின் அழுத்தத்திற்குப் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட இயக்கமாக வளர்ந்து வருகின்றது� என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் எண்ணங்களை பிரத்தியேகச் செயலாளர் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்.
எனவே தன்னுடைய பிராந்திய மேலாண்மை கருதியும், பெருளாதார முன்னேற்றம் கருதியும், இந்தியா இடப் பக்கமும் சாயும், வலப்பக்கமும் சாயும் அப்படி இந்தியா எப்பக்கம் சாய்ந்தாலும் அதில் இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை இருக்கும். அதுவே இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை வாதமுமாகும்.
அந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று இலங்கைத் தீவின் அரசியல் இராணுவக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் சமபங்காளிகளாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. �தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே�-என்கின்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்ட விடயமாகி விட்டது. இந்த நிலையில் தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாகும்.
18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற இடத்தில் முதன் முதலாக தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முன்பு தேசியத் தலைவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரை �சுதுமலைப் பிரகடனம்� என்று பெயர் பெற்றது.
�இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தராது� என்பதையும் இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது என்பதையும் அன்று சொன்ன தலைவர் இன்னுமொரு விடயத்தையும் மிகவும் வலியுறுத்தியிருந்தார். �நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல,� என்று தமது நிலைப்பாட்டை அன்று தெளிவாக கூறியிருந்தார்.இந்தக் கூற்றையும் அதிலிருக்கும் அடிப்டையான நேர்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப்பிரிவினரதும், அன்றைய இந்திய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும் பின்னாளில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அடிப்படையில் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற திடமான, தெளிவான, சிந்தனை தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்தது.
அதனையே அவர் அன்றைய தினம் தெளிவு படுத்தியிருந்தார். அது மட்டுமல்லாது மூன்றாண்டுகளுக்கு முன்பு- அதாவது 2002ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் இந்தியாவுடனான நட்புறவு குறித்துத் தேசியத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசோடு தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு வார்;த்தைகளை ஆரம்பித்தபோது அச்சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குரிய களமாக இந்தியாவைத் தெரிவு செய்வதில் இயக்கம் தெரிவித்த விருப்பம் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அதனை தனது உள்ளுர் அரசியல் குழப்பம் காரணமாக இந்தியா தவற விட்டதனை நேயர்களும் அறிவீர்கள்.
�தனது பிராந்திய மேலாண்மைக்கு விடுதலைப் புலிகளால் பங்கம் ஏற்பட்டு விடும்� என்று 1987ல் தேவையற்ற அச்சம் கொண்ட இந்தியா, இன்று தனது பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் சிறிலங்கா அரசே காரணமாக அமைந்து வருவதையும் கருத்தில் கொள்ளக் கூடும் தற்போது ஜப்பான் போன்ற நாடுகளின் ஊடாக மறைமுகமாகவும். வெளிப்படையாகவும் அமெரிக்கா தனது பிராந்திய மேலாண்மையை நிலைநாட்ட வருவதையும் இந்தியா புரிந்து கொள்ளாமல் இல்லை. அதேபோல் பாகிஸ்தான்,- ஈராக்- அப்கானிஸ்தான் என்று இந்தியாவைச் சுற்றிலும் சிறிது சிறிதாக அமெரிக்கா தனது பிராந்திய மேலாண்மையை வளர்த்து வருவதையும் நாம் காண்கின்றோம்.
வரலாற்று ரீதியாக ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்து வந்துள்ளது. ஆனால் சிங்கள தேசமும் இந்தியாவும் தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ளதைத்தான் வரலாறு காட்டி நிற்கின்றது. இலங்கைக்குப் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட இதே இந்திய வெறுப்புணர்வைத்தான் சிங்களத் தலைமைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக இராணுவ உதவிகள் ரீதியாக சிறிலங்கா தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் பல இந்திய எதிர்ப்பு நாடுகளாகவே இருந்துள்ளன. சீனாவையும் பாகிஸ்தானையும் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டலாம். முன்னர் வல்லரசாக இருந்த ரஷ்யாவோடு இந்தியா நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்த காலத்தில் சிறிலங்கா அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றது.
இந்தியாமீதும், இந்திய மக்கள் மீதும் சிங்கள மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி பரம்பரை பரம்பரையாகவே தொடர்ந்து வருகின்றது. வருந்தத்தக்க வகையில் இந்த துவேஷ உணர்ச்சியானது சாதாரண சிங்கள பொதுமக்களிடமும் பலமாக விதைக்கப்பட்டு விட்டது. 1985ல் இந்தியாவும், சிறிலங்காவும் கலந்து கொண்ட (வுநளவ) கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சிறிலங்கா வென்றது. சுpறிலங்கா அணி இந்திய அணியை வெற்றி கொண்டதை கொண்டாடும் முகமாக அடுத்த நாளை நாடு தழுவிய பொதுவிடுமுறை தினமாக சிறிலங்கா அரசு அறிவித்ததை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஈழத் தமிழினத்தை கலந்து கொள்ளாமல் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இரு அரசுகளும் கைச்சாத்திட முயன்ற போது. சிங்களப்பகுதிகளில் கடும் எதிர்ப்பு தோன்றியதன் காரணம் என்ன? பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இந்தியா சம்பந்தப்படக் கூடாது என்ற இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
அன்று இந்தியா வரக்கூடாது என்று கூக்குரல் இட்ட அதே சிங்கள சக்திகள் இன்று இந்தியா வரவேண்டும் என்று கெஞ்சுவதன் காரணம் மனமாற்றம் அல்ல. தமிழினத்தின் பலத்தை உரிமைப் போராட்டத்தை எந்த வகையிலாவது நசுக்கி விடவேண்டும் என்ற பரிதவிப்புத்தான்.
இப்படிப்பட்ட பின்புலத்தில் சிறிலங்கா குறித்த இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை நாம் தர்க்கிக்க விரும்புகின்றோம்.
பலமொழிகளைப் பேசுகின்ற, பல இனங்களைச் சார்ந்த, பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் அரசு தன்னை இந்த மக்களின் பிரதிநிதியாகக் கருதிச் செயற்படுகிறது அதுவே முறையானதாகும். பல்லின மொழி பண்பாட்டை ஒருங்கிணைத்துப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தியா அதே உள்நாட்டுப் பார்வையை தனது அண்டை நாடுகளிடமும் காட்ட வேண்டும்.ஆனால் இந்தியாவோ தனது அண்டை நாடான இலங்கைத் தீவின் பிரச்சனைகளை சிங்கள தேசத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கின்றது.
ஆகவே இந்தியாவின் கொள்கையானது தமிழர் நலனையும், சிங்களவர் நலனையும் சமமாகச் சீர்கொண்டு பார்க்காமல் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பால், சார்பாகச் செயற்படுகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கைத்தீவின் இரண்டு இனங்களுக்கும் பொதுவானதாகவே அமைய வேண்டும். இந்த மாற்றம் இந்தியாவிடம் ஏற்படவேண்டும்.
தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தை சற்று ஆழமாக கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தால் தான் இந்தியாவின் பிராந்திய மேலாண்மை ஓரளவிற்காவது காப்பாற்றப் பட்டுள்ளது.இன்று தமிழர் தேசம் தமது நிலப்பரப்புக்களைத் தம்மிடையே தக்க வைத்துக் கொண்டிருப்பதனால்தான் இந்தப்பகுதிகளுக்குள் இந்திய விரோத நாடுகளின் சக்திகள் புகமுடியாமல் இருக்கின்றன. இன்று தமிழர் தேசம் தனது நிலப்பரப்பை தக்க வைக்காமல் போயிருந்தால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு சிறிலங்கா அரசு எப்போதோ குத்தகைக்கு கொடுத்து விட்டிருக்கும். இப்போது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப் படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு இலங்கைத்தீவின் கரையோரப் பகுதிகளில் இந்திய விரோத சக்திகள்தான் குடியிருந்திருக்கும்.
எனவே உருவாக வேண்டும் ஓர் உறவு.!
நீண்டகாலமாகவே இந்தியா குறித்த தங்கள் நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவு படுத்தி வந்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் இந்தியாவுடனான ஆத்மார்த்த நட்பினை வேண்டி தமிழர் தலைமை நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றது. இந்தியா போன்ற ஒரு பிராந்திய முக்கியத்துவம் பல உண்டுதான் மறுக்கவில்லை.அதேபோல் இலங்கைத்தீவில் வாழும் தேசிய இனமான தமிழினத்தினை இன்று ஒரு பலம் பொருந்திய இனமாக மாற்றிய மாபெரும் சக்தியாக விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்குகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைதான். இப்படிப்பட்ட நிலையில் இந்தியா கருத்தில் கொள்ளக்கூடிய பலகேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகவும் விரிவாகவும் விடையிறுத்தே வந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்ற விடயங்கள் தான் என்ன?
�இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை�.
�இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டின் இந்திய மக்களுக்கும் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல.�
�இந்தியாவின் தேசிய நலனுன்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருக்க போவதில்லை.�
�இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படுபவர்கள் அல்ல.�
�இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.�
�இந்தியாவின் பிராந்திய அரசியல் களத்தில் குழப்பம் எதையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.�
மாறாக விடுதலைப்புலிகள் விரும்புவது என்ன?
�இந்தியாவுடன் நல்லுறவை பேணவே விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்கள்.
இந்தியாவை ஒரு நட்புச்சக்தியாக, நேசசக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்.�
�இந்தியாவுடன் நட்புறவோடு இணங்கி செயற்பட விடுதலைப்புலிகள் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள்.�
�இப்படிப்பட்ட சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.�
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந் நியாயமான வேண்டுகோளை இந்தியா ஏற்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளில் இந்தியா இறங்க வேண்டும். இந்த விடயங்களில் மேலும் தெளிவு தேவைப்படும் பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே இந்தியா புலிகளை இராஜ தந்திர ரீதியாக அணுக வேண்டும்.
இதுவே ஈழத் தமிழினத்தினதும், அதன் தலைமையினதும் கோரிக்கையாகும்.
உருவாகட்டும் ஓர் உறவு!