"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் -மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
ஆத்திரக்காரனுக்கு- - - -!
17 March 2005
"சமாதானத் தீர்வுக்காக அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும்� என்று ஆரம்பித்து, ஜனாதிபதிப் பதவியை ஒழித்து, அதன் சகல அதிகாரங்களையும் பிரதம மந்திரியான தானே பெற்றுக் கொள்ளும் வரை அம்மையார் ஓய மாட்டார்."
உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான பீற்றர் ஹெரால்டிற்கு எதிராகக் கடந்தவாரம் ஜனதா விமுக்தி பெரமுன கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டம், பல விடயங்களைத் தெளிவு படுத்திவிட்டது என்றே ஒப்புக்கொள்ள வேண்டும். உலகவங்கியின் பிரதிநிதி திரு பீற்றர் ஹெரால்ட், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டத்தை, �ஜனதா விமுக்தி பெரமுனவும்�, �நாட்டைக் காக்கும் மக்கள் முன்னணியும் நடாத்தி உள்ளன.
பீற்றர் ஹெரால்டின் பத்திரிகைச் செவ்வியும், ஜே.வி.பியின் எதிர்ப்பும், பின்னர் பீற்றர் ஹெரால்ட் வெளியிட்ட சமாளிப்பான அறிக்கையும், �சமாதானத் தீர்வு� ஒன்று தமிழ் மக்களுக்கு கிட்டுமா என்ற ஐயப்பாட்டை மேலும் வலுவாக்குவதாகவே அமைந்துள்ளது.
ஜே.வி.பி.யினரை ஆத்திரமூட்டக் கூடிய விதத்தில் அப்படி என்னதான் பீற்றர் ஹெரால்ட் கூறிவிட்டார்.? �விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில், பிரதேசம் ஒன்று இருப்பதாகவும், சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்படவில்லை என்றும், அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் சமாதான செயலகங்களை வழி நடத்திச் செல்கின்றதாகவும்� என்று தான் தான் கூறியதாக அவர் தன்னுடைய விளக்க அறிக்கையில் பின்னர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை, ஓர் உத்தியோக பூர்வமற்ற அரசு- என்றுதான் சொல்லவில்லை, என்றும், மேலும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்து, ஜே.வி.பி.யினர் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர். இந்த எதிர்ப்புக்காக அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் காரணங்கள் சுவையானதாகும்.
கீழ்வரும் காரணங்களை ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளார்கள்.
1. தற்போது அமுலில் இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் சட்டபூர்வமானது அல்ல.
2. இதன் அடிப்படையில், �புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி�- என்றதும் தவறானது ஆகும்.
3. இலங்கை அரசியல் யாப்பில்,�புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி�- என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
4. பீற்றர் ஹெரால்ட்டின் கருத்து, �தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை வழங்குகின்ற� விதத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
5. இது நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அபாயகரமாக உள்ளது.
இவ்வகையான காரணங்களை முன்வைத்து, தமது எதிர்ப்பினை நியாயப்படுத்த முனைகின்ற ஜனதா விமுக்தி பெரமுனவினர், சில காட்டமான கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். அவை வருமாறு:-
1. பீற்றர் ஹெரால்ட் பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும்.
2. பீற்றர் ஹெரால்ட்டை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
3. இவ்விடயம் தொடர்பாக உலக வங்கி தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.
இவ்வளவு ஆத்திரமும், ஆவேசமும் வருவதற்கு அடிப்படைக் காரணமாக எது இருக்க முடியும்? இந்தக் கேள்விக்குரிய பதில், வேறு ஒரு இடத்தில் ஒளிந்திருக்கிறது. உலக வங்கியின் பிரதிநிதி ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த இந்தச் செவ்வியில் சொல்லப்பட்ட சொற் பிரயோகங்களை அக்குவேறு-ஆணிவேறாக அலசிப்பார்த்துக் கண்டனம் தெரிவித்த ஜே.வி.பி.யினர், தமக்கு உண்மையில் ஆத்திரத்தை விளைவித்த விடயம் குறித்து பெரிதாகக் கண்டனம் தெரிவிக்க வில்லை! அந்த விடயம் என்ன?
உலகவங்கியின் பிரதிநிதி, ஊடகத்திற்குத் தந்த செவ்வியின் போது, ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு இருந்தார். அந்த விடயத்தைக் கூறும்போதுதான், �தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி�- என்ற சொற்றொடரை அவர் உபயோகித்து இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், ஆழிப்பேரலை அனர்த்தத்தினால், பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானப் பணிகளுக்கு உலக வங்கி 600 கோடி ரூபாய்களை வழங்கப் போவதாக, உலகவங்கியின் பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் தெரிவித்திருந்தார். இந்த நிதியுதவி விடயம் தான், ஜே.வி.பி.யின் ஆத்திரத்திற்கும், ஆவேசத்திற்கும் அடித்தளமாக அமைந்து விட்டது.
இழந்த உரிமையைப் பெறுவதற்காகப் போராடியதற்காக, தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட, இரண்டு தசாப்த காலப்போருக்கும், தம்மீது மேற்கொள்ளப்பட்ட உணவு-மருந்து-பொருளாதாரத் தடைகளுக்கும் முகம் கொடுத்த ஈழத்தமிழினம், இன்று ஆழிப்பேரலை அனர்த்தங்களையும் எதிர்கொண்டுள்ளது. இந்த வேளையிலும், சிங்கள-பௌத்தப் பேரினவாத சக்திகள், தம்முடைய இன வெறித்தன்மையை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை, என்பதை இவர்களது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இத்தனைக்கும் இவர்கள் சந்திரிக்கா, அம்மையாரின் அரசியல் கூட்டணிச் சகாக்கள்! இன்றைய ஆளும் கட்சியினர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, சந்திரிக்கா அம்மையாரின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனதா விமுக்தி பெரமுனவிற்கும் இடையே ஒரு �தேர்தல் கூட்டு ஒப்பந்தம்� ஏற்பட்டது. இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தை �ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒப்பந்தமாகச் சித்தரித்துப் புகழும் பணியில், அம்மையாரின் விசுவாசிகள் ஈடுபட்டார்கள். �இந்தச் சரித்திரப் புகழ்வாய்ந்த ஒப்பந்தத்தின் பலனைத் தமிழர்கள் தவற விட்டுவிடக் கூடாது� என்று அம்மையாரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரைப் பத்திரிகைகள், அன்று அறிவுரை கூறியதையும் நேயர்கள் மறந்திருக்க மாட்டீர்கள்! அப்போது கீழ்வரும் சில கருத்துக்களை நாம் வலியுறுத்தியிருந்தோம்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒப்பந்தம் என்று சந்திரிகா அம்மையாரின் ஏரிக்கரைப் பத்திரிகைகள் கூறுகின்ற இந்த ஒப்பந்தம், ஒரு வெறும் தேர்தல் ஒப்பந்தமேயாகும்.இதில் தமிழினத்தின் தேசியப்பிரச்சனை தீருவதற்குரிய எந்தவிதமான தெளிவான திட்டமும் இல்லை. மாறாக, தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும், தெளிவின்மையையுமே இந்த ஒப்பந்தம் தெளிவாக்குகின்றது. ஜனாதிபதி அதிகாரத்தை ஒழித்து, மறுபடியும் பாராளுமன்றத்திற்கு சர்வ அதிகாரங்களையும் வழங்குவது குறித்து இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. இது ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு புதியதொரு அரசியல் பாதையை அமைத்துக் கொடுப்பதற்குரிய திட்டமேயாகும்.!
�பதவியையும், அதிகாரத்தையும் சுயநல அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சிறிலங்காவின் பராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது� - என்ற கருத்தை இவ்வேளையில் நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். அடுத்த தடவை ஜனாதிபதிப் பதவியை அடைய முடியாதவராக இருக்கின்ற சந்திரிக்காவுக்கு இந்தத் தேர்தல் ஒரு வரப்பிரசாதம்! எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கூட அவர் எதிர்பார்த்துக் காத்து நிற்கமாட்டார்.ஒரே ஒரு ஆசனத்தின் மூலம் பெரும்பான்மையைப் பெற்று, ஆட்சியை அமைக்க முடியுமானால், அதுவே அம்மையாருக்குப் போதுமானது. �சமாதான பேச்சு வாத்தைகள் ஊடே இறுதித் தீர்வைக் காண வேண்டுமானால், தற்போதைய அரசியல் யாப்பை மாற்றவேண்டும், - அதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட சகல கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்� என்று பிரசாரம் செய்யத் தொடங்கி விடுவார். சமாதானத் தீர்வுக்காக அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும்� என்று ஆரம்பித்து, ஜனாதிபதிப் பதவியை ஒழித்து, அதன் சகல அதிகாரங்களையும் பிரதம மந்திரியான தானே பெற்றுக் கொள்ளும் வரை அம்மையார் ஓய மாட்டார்.
சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன, இத்தேர்தல் மூலம் சிங்கள அரசியலில் இன்னும் ஆழக் கால் பதிக்கக் கூடிய வாய்;ப்புக்கள் உண்டு. அதுவே அக்கட்சிக்கு வெற்றியுமாகும்! �ஜனதா விமுக்தி பெரமுன ஆழக்கால் பதிக்குமா? இல்லை அகலக்கால் வைக்குமா?� என்பது இன்னுமொரு முக்கியமான கேள்வியாகும்.
இவ்வாறு சில கருத்துக்களை அன்று நாம் தெரிவித்திருந்தோம். அன்று நாம் ஐயப்பட்டது போலவே, நிலைமைகள் உருவாகி வருவதும் வருத்தத்தையே அளிக்கின்றது.
கடந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலான அரசியல் வரலாறு, பல படிப்பினைகளை எமக்குத் தந்திருக்கின்றது. அவற்றில் முக்கியமான ஒன்றை இவ்வேளையில் எண்ணிப் பார்;ப்பது பொருத்தமானதாக இருக்கும். சிங்கள இனவாதத்தை வெளிப்டையாக காட்டி, ஆட்சியைக் கைப்பற்றிய சிங்களத் தலைமைகள் ஒரு வகை என்றால், தமிழர்களுக்குச் சம உரிமையைத் தந்து இனப்பிரச்சனையைத் தீர்ப்போம்�-என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிய சிங்களத் தலைமைகள் இன்னொரு வகை என்பதையும் வரலாறு சுட்டி நிற்கின்றது. இந்த இரண்டு வகையினராலும் தமிழினத்திற்கு எந்த விதமான விமோசனமும் கிடைக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
நாம் கூறிவந்த இன்னுமொரு கருத்தையும் மேற்கோள் காட்டுவது இப்போதைய நிலையில் பொருத்தமானதாக இருக்கக்கூடும்! �ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து, அவர்மீது சில அரசியல் அழுத்தங்களை உலகநாடுகள் கொடுத்து வந்துள்ள போதும், அவை அடிப்படை நியாயத்தை, உண்மையைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கவில்லை� என்ற எமது கருத்தையும் நாம் தர்க்கித்தே வந்துள்ளோம்.
ஜனதிபதி சந்திரிக்கா அம்மையாரின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்துப் பல உலகநாடுகள் விசனம் தெரிவித்திருந்தாலும், அவை உலகமயமாக்கும் பொருளாதாரக் கொள்கையின் நலனை ஒட்டியே அமைந்துள்ளன. அந்தப் பொருளாதாரக் கண்ணாடியூடாகவே இந்த உலகநாடுகள் இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து, கரிசனம் காட்டியுள்ளன.இந்த உலகநாடுகள், சிறிலங்கா ஜனாதிபதி கொண்டுள்ள அளவு கடந்த ஜனநாயகத்திற்கு எதிரான அதிகாரங்களையோ, அல்லது சிறிலங்காவின் மனிதாபிமானமற்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உருவமான அரசியல் யாப்பையோ, விமர்சனம் செய்யவில்லை! கடந்த ஐம்பது ஆண்டு காலத்துக்கும் மேலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள்; தமிழினத்தின் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாதங்கள் குறித்து ஒரு சொல்லேனும் சொல்லவில்லை, இந்த உலகநாடுகள்.!
�சிறிலங்காவின் முன்னால் பிரதமரான, ரணில் விக்கிரமசிங்க அவர்களும், தமிழினத்தின் தேசியப் பிரச்சனையை, சிங்களத்தின் பொருளாதாரப் பிரச்சனை என்ற கண்ணாடியூடாகத்தான் நோக்கி வருகின்றார்� என்பதையும் நாம் சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றோம்.
ஆகவே ஜனாதிபதி சந்திரிக்காவோ, அல்லது பழைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவோ அல்லது உலகமயமாக்கப் பொருளாதாரத்திலும், பிராந்திய ஏகாதிபத்தியத்திலும் அக்கறை கொண்டுள்ள குறி;ப்பிட்ட உலகநாடுகளோ ஈழத்தமிழினத்தின் தேசியப்பிரச்சனை, நீதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை: என்பதை நாம் மீண்டும் இன்றைய தினம் வலியுறுத்துகின்றோம்.
அண்மைக் காலத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வன்முறைச் சம்பவங்களை சிறிலங்கா இராணுவம் மீண்டும் ஆரம்பித்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான படுகொலைகளையும், தாக்குதல்களையும் அதிகரித்திருப்பதோடு தமிழ்ப் பொதுமக்கள் மீதான அராஜகச் செயல்களையும் சிறிலங்கா இராணுவம் புரிந்து வருகின்றது. �சமாதானக் காலத்திற்கான� பயனையோ, பலனையோ தமிழீழ மக்கள் இன்னும் பெற்றுக் கொள்ளாத நிலையில் �சுனாமி� ஆழிப்பேரலை அனர்த்தங்களினாலும் எமது மக்கள் அல்லல்பட்டு நிற்கின்ற இவ்வேளையில் எமது மக்கள் மீது வலிந்து ஒரு யுத்தத்தை திணிக்கின்ற முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியிருக்கின்றதோ என்று ஐயப்படுகின்ற வகையில், சிறிலங்கா அரசினதும் அதன் படையினரதும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. ஆளும் கட்சியின் அரசியல் கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளும், தமிழ் விரோதப்போக்கும் நிலைமை இன்னும் மோசமாகப் போகக்கூடும் என்பதையே காட்டுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்கள் மேற்கொண்டு வருகின்ற உரிமைப் போராட்டம், அடிப்படையில் சுயவலிமை கொண்டதாக இருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் �வலிமையே வாழ்வு தரும்� என்ற சொல்லாக்கம் எவ்வளவு உண்மையானது என்பதையும் நாம் உணரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் தமிழீழத் தலைமையின் கரங்களுக்கு வலுச்சேர்ப்பதன் மூலம் தமிழீழ மக்களின் வாழ்வினை மேம்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய எமக்கு உண்டு என்பதைத்தான் காலம் காட்டி நிற்கின்றது.