Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தியாக தீபம் திலீபன்

Selected Writings by Sanmugam Sabesan

தியாக தீபம் திலீபன்

20 September 2004

இவ் ஆய்வு 20.09.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது

"..தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன?  "இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்." "


'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" - என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் பதினேழாவது நினைவாண்டுத் தினம் நெருங்குகின்ற இவ்வேளையில், நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி அவனது வரலாற்றை எண்ணிப் பார்க்க விழைகின்றோம்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நல்லு}ர்க் கந்தசாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம் அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை!

 பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம், எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை அந்த விழிப்புணர்வின் தேவையை நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல-அவசியமானதும் கூட!

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தமிழீழத்தவரின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக, நேரடியாக தலையிட்ட போது எமது மக்கள் நெஞ்சங்களிலே இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய இரட்சகனாகவே தோன்றியது. 'அகிம்சை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அகிம்சை என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நவஇந்தியா தனது அரசியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது" என்ற பிரமையை அல்லது மாயையை இந்தியா ஆட்சி பீடங்கள் தோற்றுவித்திருக்கினறன.

 அகிம்சை என்ற தத்துவத்தின் உயர்வான கொள்கைகளும், நீதிகளும் உண்மையாகவே பேணப்படுகின்றன என்று இந்திய பொது மக்கள் மட்டுமல்ல, தமிழீழப் பொதுமக்களும் மனமார நம்பினார்கள். அகிம்சைக் கோட்பாட்டின் மூலம் நீதியை வென்றெடுக்கலாம். நியாயத்தை நிலைநாட்டலாம் என்று நம்மவர்களும் நம்பியிருந்த காலம் அது!

அகிம்சை என்ற கோட்பாடு குறித்தோ அல்லது அகிம்சை என்ற தத்துவம் குறித்தோ இப்போது தர்க்கிப்பது அல்ல எமது நோக்கம்! அகிம்சை என்ற கோட்பாடு சரியா- பிழையா அல்லது சரிவருமா-சரிவராதா என்று விவாதிப்பதற்கும் நாம் இப்போது முன்வரவில்லை.

நாம் சொல்ல விழைவது அல்லது வற்புறுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நவ இந்தியா செயற்பட்டு வருவதாக இந்திய அரசுகள் பறைசாற்றி வந்தாலும் அவை உண்மையில் அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன - வந்திருக்கின்றன என்பதுதான்!

 அதாவது மகாத்மா காந்தியின் அகிம்சை வாதத் தத்துவத்தைத் தனது அடிப்டை அரசியல் கொள்கையாக வரித்திருப்பதாக, இந்தியா மேலோட்டமாக முழங்கி வந்தாலும் உண்மையில் இந்தியா தனது அகிம்சைத் தத்தவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது-வருகின்றது என்பதை நாம் இங்கே வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகின்றோம்! நாம் இங்கே வெறும் வாயால் வலியுறுத்திக் கூறுவதை, தனது உடலால் உயிரால் வலியுறுத்திக் காட்டி நிரூவித்தவன்தான் எமது தியாகச் செம்மல் திலீபன்.

'சிங்கள அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்;டங்களை அகிம்சைப் போராட்டங்களை நடாத்தி எமது உரிமைகளை வென்றெடுப்போம்" என்று இன்று யராவது கருத்து வெளியிட்டால் அது நகைப்புக்கு இடமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதனை வரலாறு காட்டி நிற்கின்றது. அதனை நமது மக்களும் பட்டறிவினால் உண்ந்துள்ளார்கள். சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எதிராக நடாத்தப்படும் அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாது என்பதை அகிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எம்மவர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள்!

ஆனால் அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியா மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையோ வித்தியாசமானது.

அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியா மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையோ வித்தியாசமானது.

அகிம்சைப் போராட்டங்களை-சாத்வீகப் போராட்டங்களை-உண்ணாவிரத போராட்டங்களை இந்தியா மதிக்கும். ஏனென்றால் இந்தியாவின் அடிப்படைத் தத்துவம்-ஆன்மீக தத்துவம்-உயர்வான தத்துவம்-யாவுமே அகிம்சைக் கோட்பாடுதான்.! ஆகவே சிங்கள இனவெறி அரசுகள் எமது அகிம்சைப் போராட்டங்களை அலட்சியம் செய்து வன்முறையால் அடக்கியது போல் இந்தியா செய்யாது! அது எமது அகிம்சைப் பேராட்டங்களைச் செவி மடுக்கும்! போராட்ட நியாயங்களுக்குத் தலைவணங்கும் என்று எமது தமிழினம் சத்தியமாகவே நம்பியது. அந்த நம்பிக்கையில் தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்கவும் எமது தமிழினம் தயாராக நின்றிருந்த வேளை அந்த 1987!

அந்த வேளையில் தான் எமது இனத்தின் விடுதலைக்கான பாதை, எந்தத் திசை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக தனியொருவனாக ஒரு புலி வீரன் புறப்பட்டான். அதற்காக அவன் அன்று ஏந்திய ஆயுதம் இந்தியாவின் அதே அகிம்சை ஆயுதம்!

இன்று கூட இந்தியாவின் அழுத்தம்-இங்கிலாந்தின் அழுத்தம் அமெரிக்காவின் அழுத்தம் - என்று பிரச்சார அழுத்தங்கள் பரப்புரை அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை நம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் தியாகி திலீபன் ஒரு செய்தியை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தான். அந்த பிரகடனத்தைச் செய்வதற்கு அதனை நிரூபணம் செய்வதற்கு அவன் தன்னையே தாரை வார்த்தான்.

அவன் சொன்ன- செய்தி என்ன?

'இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்."

திலீபன் போராடினான்! சாவை சந்தித்தான். ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான். அகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணா விரதமிருந்தான்! போராட்டத்திற்கு பசித்தது.-அவனே உணவானான். இலங்கை-இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டு போராடமுடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

 தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும், தமிழீழ பிரதேசத்தில் சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன் தமிழ்க்கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்படவேண்டும்| என்ற கோரிக்கைகளை முன் வைத்து செப்டெம்பர் மாதம் 15ந் திகதி 1987ம் ஆண்டு திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தான். நவஇந்தியாவிடம் நீதி கேட்டு அவன் தன் அகிம்சை போராட்டத்தை தொடங்கினான்.

இந்த ஐந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல. ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை. இவற்றை நிறைவேற்றுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய தியாகி திலீபனின் மனஉறுதியை பற்றி கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ள வரை உறுதியோடு போராடுகின்ற உளவலிமையுள்ள இலட்சிய உறுதி!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது ஒரு சொட்டு தண்ணீரையும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள வேண்டும்| என்று திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு தமிழீழ தேசிய தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது தமிழ் நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்பு சாதனங்களை இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொhடர்புச் சாதனங்களை இந்திய அரசு திரும்பத் தரும் வரைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீர் அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தலைவர் பிரபாகரன் உடனேயே ஆரம்பித்தார்.

அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணா விரதப்போராட்டத்தை ஒரு நாள் கழித்தாலாவது ஆரம்பிக்கும்படி இயக்க பிரமுகர்களும் போராளிகளும் தiலைவரை கெஞ்சினார்கள். அந்த ஒரு நாள் அவகாசத்தில் தமிழக மக்களுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து அறிவித்த பின்னர் தலைவர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாமே- என்று கூட அவர்கள் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டமாக மறுத்துவிட்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்குக் கூறிய பதில் இது தான்.

'இல்லை நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம். எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம் இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத்தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தரும் வரைக்கும் அல்லது எனது உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்".

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள், தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. தவைர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.

இந்த இலட்சிய உறுதிதான் தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை அவன் அடுத்த ஆண்டில் 1987ல் நடாத்தினான். 'ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றேன் என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தை தொடரலாம்" என்று தலைவர் பிரபாகரன் திலீபனை கேட்டுக் கொண்டார்.

அதற்கு திலீபன் தலைவனிடம் பதில் கேள்வி கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே நீங்களும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள் என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?".

உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான். அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம் உணர்ந்திருந்தது - தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில் திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனல்தான் அவன் உண்ணாவிரதம் இருந்தபோதே அவன் மீது இரங்கற்பா பாடப்பட்டது, அவன் உயிரோடிருந்த போதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.

'திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா - அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா" எனக் குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.

விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன்
கண்ணேதிரே இந்த கட்டிலிலே முடிகின்றான்
பத்தோடு ஒன்றா - இவன் பாடையிலே போவதற்கு
சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ

தாலாட்டுப்பாட்டில் தமிழ்தந்த தாய்க்குலமே
போராட்டவீரன் போய் முடியப்போகின்றான்-
போய் முடியப்போகின்றான்..
போய் முடியப் போகின்றான்..

என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப் பாடியதை கால வெள்ளம் அழித்திடுமா என்ன?

அன்புக்குரிய நேயர்களே!

இப்போது மீண்டும் ஒரு சமாதானத்திற்கான காலம்! இப்போதும் ஒரு குழப்பம்! இந்திய அரசு தமிழர்களுக்கு ஏதும் பெற்றுத் தரும்-என்று நம்மவர்கள் கொண்டிருந்த எண்ணம் பிழையானது-என்பதை நிரூபிக்க ஓர் உயிர் சாவை சந்தித்தது. அச்சாவு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியது. இப்போது-சிறிலங்கா அரசு ஏதேனும் தரும் என்ற எண்ணம் முளைவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சிந்தனைக்குரிய பதிலை முன்னோடி உதாரணமாகத் தியாகி திலீபன் தந்துள்ளான்.- மீண்டும் ஓர் உதாரணம் எமக்கு வேண்டாம்.

புலிக்கு பசித்தால் புல்லைச் சாப்பிடாதுதான்! ஆனால் அது புல்லையும் ஓர் ஆயுதமாக பாவிக்கும். பேரினவாதம் எமக்கு எதையும் தந்துவிடாது என்பதைத் தியாகி திலீபனின் தியாகத்தினு}டாக நாம் கண்டு கொண்டுள்ளோம். என் அன்புத் தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்- விழிப்பாக இருங்கள் என்று சொன்ன திலீபன் அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்படவேண்டும் என்பதற்காக தன்விழி மூடி வீரச்சாவடைந்தான்.

அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்காலகட்டத்தில் நாமும் விழிப்பாக இருந்து எமது தேசியத் தலைமையை பலப்படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். தியாகி திலீபனுக்கு எனது சிரம் தாழ்த்த்pய அக வணக்கம்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home