Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வர

Selected Writings by Sanmugam Sabesan

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

தொல் தமிழர் முருகனிலிருந்து
- நல்லூர்க் கந்தன் வரை

20 September 2004

இவ் ஆய்வுக்கட்டுரை மீள்பிரசுரமாக வெளிவருகிறது


ஈழச் சைவத் தமிழ் மக்களிடையே மிகப் பிரபல்யமான புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது.

நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் கொடியேற்ற நாளில் இருந்து இறுதி நாள் உற்சவமான பூங்காவனத் திருநாள் வரை, உலவுகின்ற அந்த உற்சாகமான குது}கலப்பக்தி கலந்த நாட்கள் எம்மவர் மனதில் என்றென்றும் நினைவில் நின்று நிழலாடுகின்ற விடயமாகும். ஆனால் அன்று மயில் ஏறி மூன்று உலகமும் வலம் வந்ததாக சொல்லப்பட்ட முருகன்-பின்னர் சிங்கள இராணுவ அடக்குமுறையின் கீழ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுக் கிடந்த காலமும் வந்தது. அவனைத் தொழுது வணங்கிய நாட்கள் தான்-இப்போது அவனை விட்டு விட்டு ஐந்து கண்டங்களையும் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பது, காலத்தின் கட்டாயக் கட்டளையோ-யாரறிவார்.

எது எப்படியாக இருந்தாலும் முருகனைத் தமிழ்க்கடவுள் என்றுதான் சைவ சமயத்தவர்கள் கூறுவார்கள்! முத்தமிழ் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகன் இருப்பான் என்று தமிழ்ப் பக்தி இலக்கியமும் கூறும்.! தமிழ் மொழியே முருகன் தான் என்றும், அதனால் தமிழுக்குக் கண்போன்ற உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு என்பது போல, முருகனுக்கும் பன்னிரண்டு கண்கள் என்றும் ஒப்பிடப்படுவதுண்டு. தமிழ் எழுத்துக்களை மூன்று இனமாக பிரித்து, அவற்றில் ஒவ்வோர் எழுத்தாக தெரிந்து எடுத்து 'முருகு" என்று அழைத்தார்கள். முருகு என்றால் இளமை-அழகு-பெருமை-உயர்வு என்று பொருளாகும் என்று தமிழ் அகராதி கூறும்.

மூன்றாகப் பிரித்த ஒவ்வொரு இனத்திற்கும் ஆறு எழுத்துக்கள் உள்ளன. கசடதபற - நயனணமற - யறளவழர என்று எல்லாமாகப் பதினெட்டு எழுத்துக்கள்.! முருகனின் சிரங்களும்-கரங்களும் சேர்ந்தால் பதினெட்டு! தமிழ் மொழியின் மெய் எழுத்துக்களும் பதினெட்டுத்தான். அது மட்டுமல்ல-தமிழில் ஓர் இனச்சொற்கள் ஆறு! முருகனின் முகங்களும் ஆறுதான்.

இவை எல்லாவற்றையும் விட தமிழ்க்கடவுளான முருகனைப்போல் தீவிரவாதியான-புரட்சிக்காரனான-போர்க்கடவுளும், சைவசமயத்தில், வேறு எவரும் கிடையாது, என்று துணிந்து கூறலாம்.

படைப்புக்கடவுளான பிரம்மனுக்கு, ஓம் என்ற பிரணவபொருளுக்கு அர்த்தம் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தவன் முருகன் என்றும் அதன் காரணமாகப் படைப்புத் தொழிலையும் அவனே ஏற்றான் என்றும் சைவ சமய நூல்கள் கூறும்.! அது மட்டுமல்ல, ஓம் என்ற பிரணவபொருளுக்கு அர்த்தம் கேட்ட தன் தந்தை சிவபெருமானையே தன் சீடனாக மாற்றி-உபதேசம் செய்து-தகப்பன் சாமியாக விளங்கியவன்தான் இந்தத் தமிழ்க் கடவுள் என்றும் பக்தி இலக்கியம் பறை சாற்றும்.

 ஆனால் இப்போதோ இந்த ஓம் ஆங்கில AUM ஆக, சமஸ்கிருத ஓமாக எம்மவர்கள் இல்லங்களை அலங்கரிப்பது இன்றைய இழிநிலையாகும். முருகன் தமிழ்க்கடவுள் மட்டுமல்ல ஒரு போர்க் கடவுளும் கூட. அதனால் தான் முருகன் வீற்றிருக்கும் தளங்களைகூட படை வீடுகள் என்று இன்றுவரை தமிழகம் அழைத்து வருகிறது.

இதுவரை முருகக்கடவுள் குறித்து பக்தி இலக்கியமும், புராணக் கதைகளும் கூறியவற்றை தந்தோம். இனி முருகன் குறித்த ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் இங்கு தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

குமரி நாட்டு தமிழ் மக்கள் தத்தம் அறிவுநிலைக்கு ஏற்ப மூவகை மதநிலைகளைக் கொண்டிருந்தார்கள். அவை சிறுதெய்வ வணக்கம், பெரும் தேவ மதம், கடவுள் சமயம் என வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்த காலம் தோரயமாக கிறிஸ்துவுக்கு முன்பு 1,500 ஆண்டுகள் என இப்போது மதிப்பிடப்படுகின்றது. அவர்களுடைய மதம் கொலை வேள்விச் சிறு தெய்வவணக்கமாக இருந்தது. தமிழரோடு தொடர்பு கொண்ட பின்னரே சிவமதத்தையும் - திருமால் மதத்தையும் ஆரியர்கள் தழுவினர். ஆகையால் ஆரியரது வேதாகமம் இதிகாச புராணக் கதைகளை நம்பி அவையே சிவநெறிக்கும், திருமால் நெறிக்கும் அவற்றின் சித்தாந்தங்களுக்கும் மூலம் எனக் கூறுவது தவறானது என்று மொழி ஞாயிறு தேவ நேயப்பவாணர் தனது ஆய்வு மூலம் விளக்குகின்றார்.

பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள், தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன்(சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள். சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும். வேட்டைத்தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள். குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும். குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த து}ண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது. கந்து என்றால் து}ண், கந்தம் என்றால் பெருந்து}ண் என்று பொருள். 'கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்" என்ற புறநானு}ற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்கு காட்டலாம்.

குறிஞ்சி நிலப்பறவையாகிய மயிலை முருகன் ஊர்தியாகக் கொண்டமையால் மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. தோகையுடைய மயிலைக் குறிக்கும் திரிபுச் சொல்தான் ஆங்கிலத்தில் Peacock என்று உருவாகியதாக ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் கீற் (Skeat) கூறுகின்றார். தோகை என்ற தமிழ்ச்சொல் பெர்சியன் மொழியில் தோவுஸ் (Tawus) எனவும், இலத்தீனில் போவு எனவும் பழைய ஆங்கிலத்தில் PEA எனவும் மாறியது. ஆண்பறவையைக் குறிக்கும் cock என்ற சொல்லுடன் தோகை என்னும் தமிழின் திரிபான இந்த Pea சேர்ந்து PEACOCK என்னும் சொல் பின்னர் ஆங்கிலத்தில் உருவாகியது. ஆதாரத்திற்கு Skeat,  Oxford ஆங்கில அகராதி-முனைவர் அரசேந்திரனின் உலகம் பரவிய தமிழின் வேர் போன்ற நூல்களைக் குறிப்பிட விழைகின்றேன்.

குறிஞ்சி நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் கொடி என்று பொருள் படும் வள்ளி முருகனின் தேவியாக வழிபடப்பட்டாள். வள்ளி பற்றிய குறிப்புகளை சங்க இலக்கியத்தில் நிறைய காணக்கூடியதாக இருக்கிறது. வள்ளியை பற்றிய முதல் குறிப்பு தொல்காப்பியப்புறத் திணைஇயலில் கிடைத்துள்ளது. கொடிநிலை - கந்தழி - வள்ளி என்ற வடு நீங்கு சிறப்பின் என்ற நூற்பா முருக வழிபாட்டையும், வள்ளியையும் சுட்டி நிற்கி;றது. முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல் - என்று நற்றிணையின் 83வது பாடலடி குறிப்பிட்டு காட்டுகின்றது. இந்த பாடல் நற்றிணையில் இடம் பெற்றிருந்தாலும், இது குறி;ப்பிடுகின்ற வள்ளி-முருகன் செய்தி காலத்தால் பழைமையானதாகும். சிலப்பதிகாரக் குன்றக் குரவையும,; வள்ளி பற்றிய வழிபாட்டு நிலையை விவரித்துள்ளது.

முருக வழிபாட்டின் தொன்மையை நம் ஆராயப் புகுமிடத்து, முருக-வள்ளி இணைப்புக் குறித்தும் சேர்ந்து ஆராய வேண்டும். முருகன் புதிய கற்கால வேட்கைத் தெய்வம். அதாவது வேட்டையாடி உணவைத் தேடும் நாகரிகத்தைக் குறித்த தெய்வம் என்றும் வள்ளி உணவைச் சேகரித்து உண்ணும் நாகாPகத்தினைக் குறித்த தெய்வம் என்றும் ஆய்வாளர் பி.எல் சாமி குறிப்பிடுவார். அதாவது முருகனும் வள்ளியும் இணைந்தது, வேட்டை நாகரிகமும் உணவு சேகரிப்பு நாகரிகமும் கலந்த ஒன்றாகும்.

உணவு சேகரிப்பு நாகரிக காலத்தில் தானே விளைந்த வள்ளிக்கிழங்கு முதலியவற்றை மனிதன் உண்டு வந்தான். இவ்வாறு கிடைத்த வள்ளிக்கிழங்கையே ஆதி மனிதன் செழிப்பிற்கும், உற்பத்திக்கும் அறிகுறியாக கொண்டான். இதுவே பின்னர் செழிப்புத் தெய்வமாகவும், வள்ளியாகவும் உருப்பெற்றது.

ஆனால் முருகனோ சீற்றத்திற்குரிய கடவுள். இதனால்தான் இவனை சாந்தப்படுத்த முன்னாளில் பலி முதலியன தரப்பட்டன. முருகன் 'சீற்றத்து உழுகெழு குரிசில்" என்று புறநானு}றும், சினமிகு முருகன் என்று அகநானு}றும் 'முருகு உறம் முன்பொடு கடுஞ்சினம்" என்று நற்றிணையும் பாடுகின்றன. ஆனால் முருகனின் பரிணாம வளர்ச்சியில் பின்னாளில் காதல் தெய்வமாகவும் அவன் பாத்திரம் வகித்துள்ளான். காதலரை ஒன்று சேர்க்கும் கடவுளர்களாக-முருகன்-வள்ளி விளங்கி உள்ளார்கள் என்பதற்கு சிலப்பதிகாரமும்-பரிபாடலும் வெளிப்படையான சான்றுகள் ஆகும்.

பண்டைத்தமிழகம் தாய்வழிச்சமூக அமைப்பைக் கொண்டது. பண்டைத் தமிழகத்துச் சமூக நிகழ்வுகளில் வீரமும், காதலும் பெரிதாக இடம் பெற்றிருந்தன. புறம்-அறம் என்று சங்க இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் முதன்மைப்படுத்தியுள்ளன. வீரத்திற்கு தாய்வழிச்சமூக அமைப்பில் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை ஆவாள். ஆண்வழித் தலைமையில் போர்த் தெய்வமாக முருகன் உருவெடுத்தபோது கொற்றவை முருகனின் தாயாக ஆக்கப் பெற்றாள். இவ்வாறே காதல் வள்ளி முருகனின் மனைவியாக ஆக்கப் பெற்றாள். வள்ளி முருகன் இணைப்பு எளிதாக நிகழ்ந்து விட்ட ஒன்று அல்ல, என்ற தொல்தமிழர் சமய ஆய்வு நூல் குறிப்பிடுகின்றது. பெரும் போராட்டத்திற்கு பின்னரே இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. வள்ளி கதைப்பாடலில் வள்ளிக்கும், முருகனுக்கும் ஏற்படும் தர்க்கமும், போராட்டமும் வேடர்களுக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட போர்களும் வள்ளி வழிபாட்டு மரபிற்கும்-முருக வழிபாட்டு மரபிற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தைத்தான் குறியீடாக்கி உள்ளன.

இனி சற்று ஆழமாக-முருகு வழிபாடு குறித்து பக்க சார்பின்றி சில விடயங்களை ஆராயப் புகுவோம்.

தமிழர்களாகிய எம்முடைய சமய வரலாற்றில் முருக வழிபாடு குறித்து ஆராய்ந்தால் அது இரண்டு தளங்களில் இயங்கியதை நாம் அறிய முடிகின்றது. ஒன்று தமிழ் மரபிற்குட்பட்ட முருக வழிபாடு. இரண்டாவது தமிழ் மரபும், ஆரிய மரபும் இணைந்து செறிவுற்ற நிலையில் உள்ள முருக வழிபாடு. சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்ற முருகன் குறித்த செய்திகளும் வேலன் வெறியாடல்-குரவையாடல் முதலியனவும் தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் நிகழ்த்தப் பெற்ற முருக வழிபாடுகளாகும். சங்கக்கால இறுதிப்பகுதியில் முருக வழிபாட்டில் வைதீக ஆரிய மரபுகள் சேர்ந்தன. சிவசக்தி ஆகியோரின் மகனாக முருகன் உருவாகுவதும் தெய்வயானையை முருகன் திருமணம் செய்வதும், முருகன் சுப்பிரமணியனாகவும், கார்த்திகேயனாகவும் அறிமுகப்படுத்தப்படுவதும் அவனை ஒரு ஆரியக்கடவுளாக உள்வாங்கின. எமது நல்லு}ர்க்கந்தன் இன்று ஒரு தமிழ் ஆரியக் கலவையன கடவுள்தான்!.

தமிழருடைய வரலாற்றில் தமிழ்முருக மரபிற்கும், ஆரிய முருக மரபிற்கான போராட்ட அடையாளங்களை ஆங்காங்கே காணமுடிகின்றது. ஆரிய மரபிற்கு எதிராக- தமிழ் மரபிற்கு உட்பட்ட முருகனை முன்னிறுத்தும் போராட்டத்தை அருணகிரி நாதர் நடாத்தியுள்ளார். தமிழ் மரபில் உள் முருகக் கடவுள் பின்வரும் குணங்களை உடையவனாக காணப்படுகின்றான்.

ஒன்று: இளமை காதல் நோய் தருபவன், காதலரை சேர்ப்பவன், காதல் நோய் தீர்ப்பவன் காதல் கடவுள்.

இரண்டு: சீற்றம், வலிமையுடையவன், போர்க்குணம் மிக்கவன், போர்க்கடவுள்.

இந்த இரண்டு முருகப்பண்புகளும், தமிழ் இலக்கிய மரபாகிய அகம் புறம் என்ற இரண்டு மரபுகளை அடியொற்றியவையாக அமைந்துள்ளன.

முருகனது இத்தகைய குணங்கள் தமிழரது சமூகப் படிமலர்ச்சியல் வேட்டைச் சமூகத்திலிருந்து தொடங்கி வேளாண் சமூகம் வரையில் படிப்படியாக உருப்பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர் நா. வானமாமலை கருதுகின்றார்.

பின்னாளில் முருகன் ஆரியக் கடவுளர்களுடன் இணைக்கப்படுவதை நாம் காண்கின்றோம். திருமுருகாற்றுப்படையில் தமிழ்க்கடவுளான முருகன் ஆரியக் கடவுளான கார்த்திகேயனுடன் இணைந்தமை தெளிவாகின்றது. திருமுருகாற்றுப்படையில் நம் முருக வழிபாட்டின் இரண்டு வேறு நிலைகளைக் காணமுடிகிறது. தமிழருக்கே உரிய பழைய வழிபாடும், வேத வழிப்பட்ட வழிபாட்டு முறையும் இடம் பெறுதலை இ;ங்கே நாம் அவதானிக்கலாம்.

தமிழ்ச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்ற தமிழ் மரபிற்கு உட்பட்ட முருக வழிபாட்டுக் கூறுகள் சிந்து வெளி முத்திரைகளில் காணக் கூடியதாக உள்ளது. முருக வழிபாட்டை மேற் கொண்ட வேளிர்கள் பற்றிய தொன்மத்தை விளக்கின்ற முத்திரைகளை ஆய்வாளர் பி.எல் சாமி ஆராய்ந்துள்ளார். சங்க இலக்கிய முருக வழிபாட்டுக் கூறுகளையும், சிந்து வெளி நாகரிக முருகு வழிபாட்டு கூறுகளையும் இணைத்து ஆய்வுகள் வெளி வந்துள்ளன. இந்த வழிபாட்டு முறைகள் பல்வேறு வடிவங்களில் தமிழ்ச் சமூகத்தில் இருந்து வருவதை இந்த ஆய்வுகள் நிருபித்துள்ளன.

பிற்காலத்தில் சங்ககால அரசுகள் உருவான போது சிறுசிறு தலைவர்கள் பலரையும் வென்று வேந்தர்களும், குறுநில மன்னர்களும் உருவான சூழ்நிலையில் முருகன்-அந்த மன்னர்களின் வீர மாண்புடன் இணைத்துக் காட்டிக் கூறப்படுகின்றன. செல்வக் கடுங்கோ வழியாதன், சோழன் இராச சூயம், பெருநற்கிள்ளி, பாரி, காரி, இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், கரிகாலன், நன்னன் போன்ற பல மன்னர்களின் வீரத்திற்கு முருகனின் வீரம் இணையாக்கப்பட்டது. உவமையுமாக்கப் பட்டது. இதனை புறநானு}று, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம் போன்றவற்றில் நாம் காணமுடிகின்றது. 'உறவினில் நான் ஆட முருகன் நீ வேண்டும்" என்று தமிழ்த் திரைப்படப்பாடலும் காதலைப் பச்சையாகச் சொல்கின்றது.

இவ்வாறாகச் சிந்து வெளி நாகரிகம் தொடங்கி இன்றுவரை முருகு வழிபாட்டுக்கூறுகள் தமிழர் சமய வரலாற்றினில் தென்படுவதை நாம் அறிய முடிகின்றது. இடையில் முருகன் ஆரிய வைதிக சமய ஆதிக்கத்திற்கு உட்பட்டதால் தொல் தமிழர் வழிபாடு சிதைந்தும், உருமாறியும் போயின. தமிழனின் தனிக்கடவுளாக விளங்கி வந்த முருகனுக்கு பிற்காலத்தில் ஒரு தமையனாரும் புதிதாக புகுத்தப்பட்டார். அவர்தான் விநாயக கடவுள். தமிழகத்தில் பல்லவர் காலத்தில் தான் அதாவது கிறிஸ்துவிற்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டளவில் விநாயகர் வழிபாடு கொண்டு வரப்பட்டது.

நரசிம்ம பல்லவன் காலத்தில் அவனது தளபதியான பரஞ்சோதியால் வாதாபியில் இருந்து விநாயகர் வழிபாடு கொண்டு வரப்பட்டது. பின்னாளில் இதே பரஞ்சோதி சைவ சமயத்து நாயன்மார்களில் ஒருவராக சிறுத்தொண்டர் நாயனராக- சமயப்பணி மாற்றும் பொருட்டு தேவேந்திரனின் மகளான தெய்வானையை முருகனுக்கு மணம் செய்விக்கப்பட்டு ஆரிய இந்தத் திருமண வழக்கமும் சைவத் தமிழரிடையே புகுத்தப்பட்டது. விநாயகர் முதலாமிடத்தை பிடிக்க தமிழ்க்கடவுள் மேலும் பின் தள்ளப்பட்டார். ஆயினும் இந்த ஆரிய ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலும் தமிழரின் தொன்மம் சிறிதளவு உள்ளது என்பதை நாம் நினைக்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இப்போது உள்ளோம்.

தமிழ்க்கடவுளின் நிலை இவ்வாறு இருக்க, தமிழர்களின் வாழ்;விற்கு இன்னும் விடிவு வராதா, என்ற கேள்வியும் இன்று பெரிதாக எழுந்துதான் உள்ளது. தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காக வேட்கை தணியும் நாள் எந்நாளோ? மாறி மாறி வருகின்ற சிங்கள அரசுகள் தமிழர் தரப்பு நியாயத்தை நீதியை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ? அந்தக் காலம் கனிந்து வரட்டும் என்று இந்த போராட்டக் காலத்தில் வருகின்ற தேரோட்ட நாளில் நாமும் வேண்டிக் கொள்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே! முருகன் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதுவகற்கு எமக்கு பல நூல்கள் பேருதவியாக இருந்தன. குறிப்பாக தமிழர் நாகரிகமும் பண்பாடும், தமிழர்மதம், தொல்தமிழர் சமயம், தமிழர் வரலாறு, ஒப்பியன் மொழிநூல், புறநானு}று, சிலப்பதிகாரம், தமிழறிவோம், மற்றும் வரலாற்று நோக்கில் சங்க இலக்கிய பழ மரபுக்கதைகளும் தொன்மங்களும் போன்ற நூலகள் பல அரிய தகவல்களைத் தந்தன. பல ஆய்வுகளின் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அடியேனின் பணிவான நன்றிகள்!

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home