Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >பாரதியார் - பாரதி யார்?

Selected Writings by Sanmugam Sabesan

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

பாரதியார் - பாரதி யார்?

13 September 2004

இவ் ஆய்வு 13.09.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது

 


செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி!

பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை."

'காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.!

பாரதியார் - பாரதி யார்? அவரது சில சிந்தனைகளையும், கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்!

 'தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.
'தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.

'ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ
'ரௌத்திரம் பழகு" என்றார். '

நுப் போல் வளை" என்றாள் ஒளவை.
இவரோ 'கிளை பல தாங்கேல்" என்றார். '

தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை.
'தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி.

'போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை.
'போர்த்தொழில் பழகு" என்றார் இவர்.

'மீதூண் விரும்பேல்" என்றாள் அவள்.
'ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.

'போர்த் தொழில் புரியேல்" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் 'போர்த் தொழில் பழகு" என்று சொல்லி வைத்தான்.

இருந்தும் 'ஈவது விலக்கேல்" 'ஈகைத்திறன்" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.

ஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ்த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம்.

இவன் தான் பாரதி.

கருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.

மூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:-

'நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல்.

சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட மாஸப்பொருத்தம், பஷப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

சவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும், கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.

'காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.

'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன" என்றும், 'ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.

ஆனால் பி.ஏ, எம்.ஏ பாPட்சைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?

 'பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திhPகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன? வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன?

பாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் 'ஒருவனே தேவன்" என்பதையோ, கடவுள் இப்படியன், இவ்வண்ணத்தன், இந் நிறத்தன்" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை.

 பாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால், தேசியப்பாடல்களையோ, தோத்திரப்பாடல்களையோ வேதாந்த பாடல்களையோ, இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்;காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.

'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர்
பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம்
பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)

இந்தப்பாட்டில், செத்தபிறகு வாழ்வு உண்டென்றோ, சிவலோகம், வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.

'மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்படவேண்டும்"

இவ்வாறு 'வேண்டும்" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.

'வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது" 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" என்று 'அறிவே தெய்வம்" என்ற பாட்டில் பாடுகின்றான்.

'ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்தில் விடுதலையுண்டு, நிலையுண்டு"

என்று 'ஜீவன் முத்தி" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.

பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.

'தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.

ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!

"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்."

அதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும், ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். 'தமிழில் எழுத்துக் குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் 'தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து! அவற்றில் இருந்து சில வசனங்கள்:

'பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்."

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்"

என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.

'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"

தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.

ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி!

அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.

இந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home