Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > கலைகின்ற வேடங்கள்

Selected Writings by Sanmugam Sabesan

கலைகின்ற வேடங்கள்
28 June 2004
இவ் ஆய்வு 28.06.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
'தமிழ்க்குரல்' வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது


இலங்கைத்தீவில் சமாதானத்திற்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் விட சமாதானத்தைக் குழப்புவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளே முன்னணியில் இருக்கின்றன என்ற சுடுகின்ற உண்மையின் யதார்த்தத்தை நாம் இப்போது காணக்கூடியதாக உள்ளது. சிங்களத் தலைமைகள் யாவும் தமிழர் நலனுக்கும் உரிமைக்கும் தமிழ்தேசியத்திற்கும் எதிராகவும், எதிரிகளாகவும் எப்பொழுதுமே செயற்பட்டு வந்துள்ளதையும் நாம் அறிவோம்.

ஆனால் தற்போதைய நிலவரம், இன்னுமொரு முக்கியமான உண்மையையும் வெளிக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஐம்பத்திஐந்து ஆண்டு கால அரசியல் வரலாற்றில் மாறிமாறி அரசமைத்த சிங்களக் கட்சிகள் யாவும், தமிழர் விரோத எண்ணங்களைச் செயற்படுத்துவதிலேயே முனைந்திருந்தன. அதேவேளை, எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட சிங்களக் கட்சிகள், தமிழர் நலனுக்கு ஆதரவாகச் செயல்படும் தோற்றத்தையே காட்டி வந்துள்ளன.

சிங்களக் கட்சிகளின் ஆட்சி கைமாறும் போதும் அவை தொடர்ந்து இதே 'சிங்கள அரசியல் நிலைப்பாட்டையே" கடைப்பிடித்து வந்தன. அதாவது, ஆட்சி அமைக்கும் கட்சி தமிழர் விரோத செயற்பாடுகளையும் எதிர்க்கட்சி தமிழர் ஆதரவு கருத்துக்களையும் (மட்டும்) வெளிப்படுத்தி வருவதில் எந்த வித மாற்றமும் அண்மைக் காலம் வரை ஏற்பட்டிருக்க வில்லை. ஆளும் சிங்களக்கட்சி - அது எதுவாக இருந்தாலும் - தமிழர் நலனுக்கு எதிர்! சிங்கள எதிர்க்கட்சி - அது எதுவாக இருந்தாலும் - அப்போதைக்கு அது தமிழர் நலனுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிக்கும் கட்சி! அண்மைக் காலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பல இராணுவ வெற்றிகளை அடைந்து, இலங்கைத்தீவில் சிங்களத்திற்கும், தமிழீழத்திற்கும் ஓர் இராணுவச்சமநிலை ஏற்பட்டபோது, நிலைமை மாறியது. ஈழத்தமிழர் நலன் குறித்தும், சமாதானம் குறித்தும் பேச வேண்டிய கட்டாயம் ஆளுகின்ற சிங்கள அரசிற்கு ஏற்பட்டது. இந்த வேளையில், சிங்கள அரசு தமிழர் நலன் குறித்துப் பேசுகின்ற அரசாகவும், சிங்கள எதிர்க்கட்சி தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுகின்ற சக்தியாகவும் மாறுகின்ற தோற்றம் ஏற்பட்டது.

இந்த வெளிப்படைத் தோற்ற மாறுதல், உண்மையில் சிங்களப் பௌத்த பேரினவாதக் கொள்கைக்கும், செயற்பாட்டிற்கும், நன்மை செய்வதாகவே அமைந்தது. அடிப்படையான சிங்களப் பேரினவாதக் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் தமிழீழ மக்களுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வு விரைவில் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடே கிடைத்துவிடும் என்றும், உள்ளுரிலும் வெளியூரிலும் நம்பிக்கையும் பலமாக எழுந்தது.

அதன் அடிப்படையில், முன்னர் சந்திரிக்கா அம்மையார் ஒரு சமாதானத் தேவதையாகவும், பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு சமாதானத் தூதுவராகவும் பாத்;திரமேற்று நடித்தார்கள். சமாதானத்திற்கான மயக்கம் ஒன்றில் மக்களும், மற்றவர்களும் கிறங்கிக் கிடக்கையில், காலமும் பயனின்றிக் கடந்து சென்றது.

இந்த ஆண்டு சந்திரிகா அம்மையாரின் அரசியல் கூட்டணி இறுதிப் பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைத்த போது, சமாதான முன்னெடுப்புக்கள் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டதும், அதற்கிணங்க பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்தடிக்கப் படுவதும் கண்கூடாக நடைபெற்றன. சந்திரிக்கா அம்மையாரின் சமாதானத் தோற்றம் குறித்து, நம்பிக்கை ஏற்படாமல் போனதற்கு அம்மையாரின் கடந்த கால தமிழர் விரோத செயற்பாடுகள் காரணமாக அமைந்தது மட்டுமல்லாது, இன்னொரு காரணமும் அம்மையாருக்கு எதிராக இருந்தது.

அது ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சமாதான முன்னெடுப்புகளின் மீது, சராசரி மக்கள் கொண்ட நம்பிக்கையுமாகும். முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியும் அதன் ஆட்சியும் தமிழரின் தேசியப் பிரச்சனையையும், அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளையும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்கும் - என்று பெரும்பான்மையோர் இயல்பாக நம்பியிருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

கடந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டு கால வரலாற்றில் ஆட்சி அமைத்த சிங்களக் கட்சிகளும் அதே வேளை எதிர்க்கட்சிகளாக செயற்பட்ட சிங்கள கட்சிகளும் அடிப்படையில் தமிழர் நலனுக்கு எதிரான சிங்கள-பௌத்த பேரினவாதக் கட்சிகளே! தாங்கள் சார்ந்து நிற்கின்ற கட்சிகளின் அதிகாரத்திற்காக, அவை பிரிந்து நின்று மோதினாலும்,அவை தங்கள் அடிப்படைக் கொள்கையில் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழரின் உரிமைக்கும் தேசிய நலனுக்கும் எதிராகவும் தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் இருந்து, இந்த சிங்களக் கட்சிகள் என்றுமே தடம் புரண்டதில்லை. எத்தனை வித்தியாசமான அரிதாரங்களைப் பூசி, விதம் விதமான பாத்திரங்களை ஏற்று இந்தச் சிங்களக் கட்சிகள் நடித்தாலும் தங்களது அடிப்படையான சிங்கள-பௌத்த பேரினவாதக் கொள்கையில் இருந்து இவைகள் என்றுமே மாறியதில்லை.

இந்தக் கசப்பான உண்மையை நாம் நெடுங்காலமாகவே வலியுறுத்தி வந்தமையையும், தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதையும் நேயர்கள் அறிவீர்கள். கடந்த சில வாரங்களில் வெளி வந்துள்ள சில உண்மைத் தகவல்கள் எம்முடைய தர்க்கத்திற்கு வலுவூட்டுவதாகவே அமைந்துள்ளன. சிறிலங்காவின் சிங்களத் தலைமைகள், தமிழினத்துக்கு நீதியான, நியாயமான நிரந்தரமான, கௌரவமான தீர்வை, சமாதானப் பேச்சுக்கள் ஊடாக தரமாட்டது"- என்பதை, கடந்த வாரச் செய்திகள் நிரூபித்து நிற்கின்றன.

பிரதேசவாதத்தை முன்னிறுத்தித் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை மழுங்கடிப்பதற்கும், பொதுத்தேர்தல் நேரத்தில், தமிழினத்தின் ஏகோபித்த இறையாணையை சிதறடிக்கவும், கருணா என்ற துரோக சக்தி பயன்படுத்தப்பட்டது. கருணாவின் துரோகத்திற்கு துணையாகவும், உந்து சக்தியாகவும் இருந்து உதவியதில், சிங்களத்தின் இரண்டு தலைமைகளுமே காரணமாக இருந்திருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிப்படையாகியுள்ளது.

சந்திரிக்கா அம்மையாரும், ரணில் விக்கிரமசிங்க அவர்களும், சிங்கள -பௌத்த பேரினவாத அடிப்படையின் இரண்டு தோற்றங்களே! இந்த இரண்டு தோற்றங்களின் வித்தியாசமான வெளிக்காட்டலின் ஊடாகத்தான், சிங்கள -பௌத்தப் பேரினவாதம் உறுதியாகவும். பலமாகவும் உயிர் வாழ்ந்து வருகின்றது. தமக்குள் பதவிக்காகவும்-அதிகாரத்திற்காகவும்-அரசியல் எதிர்காலத்திற்காகவும் - இவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், சிங்கள-பௌத்தப் பேரினவாதத்தின் நலனுக்காகவும், அதன் ஆளுமைக்காகவும் எதையும் செய்வதற்கு இவர்கள் தயங்கியதில்லை.

அதனைத்தான் கருணா விவகாரத்தில் இவர்கள் இருவரும்-சந்திரிக்கா அம்மையாரும் ரணில் விக்கிரமசிங்கவும் - செய்திருக்கின்றார்கள். அந்த வகையில், இந்த வேடங்கள் இவர்களுக்கு மிகவும் பொருந்தியே அமைந்துள்ளன, அமைந்தும் வருகின்றன. கருணாவின் விவகாரத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியும், சந்திரிக்கா அம்மையாரின் தற்போதைய அரசும், கருணாவின் தமிழினத் துரோகத்திற்கு துணை போயிருக்கின்றன.

பிரதேசவாதத்தை முன்னிறுத்தியும், தமிழ்த் தேசியத்தின் இறையாண்மையைத் தடுப்பதற்கும் முயன்ற கருணாவின் முயற்சிகள் தமிழீழத் தேசியத் தலைமையின் நுட்பமான தீர்க்கதரிசனமான அரசியல் -இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுக்குநூறாயின. தமிழீழத் தேசியத் தலைமை தகுந்த காரணங்களுக்காகப் பொறுமை காத்துத் தக்க நேரத்தில், தகுந்த நடவடிக்கைகளை எடுத்தது. அதன் மூலம் கருணா என்கின்ற தமிழ்த்துரோக சக்தி முன்னெடுத்த பிரதேச வாதம் தோற்றோடிப்போனது மட்டுமல்லாது, பொதுத்தேர்தல் சமயத்தில் தமிழ் மக்கள் தங்களது இறையாணையை தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கும் வழி வகுத்தது.

தமிழீழத் தேசியத் தலைமையின் பொறுப்புணர்வான இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், யுத்த நிறுத்தம் தொடர்ந்து பேணப்படுவதற்கும் அடித்தளமாகவும் அமைந்தது.

ஒரு நெருக்கடியான - சலசலப்பான சந்தர்ப்பத்தில் தமிழீழ தேசியத் தலைமை ஒரே ஒர காய் நகர்த்தலின் மூலம் பல தடைகளை வெட்டி எறிந்தமையை இந்த வேளையில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் சமாதான காலம் என்பது அந்த விடுதலைப் போராட்டத்திலும் அந்த விடுதலைப்போராட்டத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகத்தான் இருந்துள்ளது என்பதை, நாம் வரலாற்றில் இருந்து படிக்க முடிகின்றது. இப்படிப்பட்ட காலத்தில்தான் வெளிச்சக்திகள் ஊடுருவுகின்றன. சமாதானக் காலம் காட்டுகின்ற போலியான அமைதித்தோற்றத்தால், மக்கள் மனநிலையிலும் தளம்பல் நிலை உருவாகும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு விடுதலை இயக்கத்தையும் அதன் போராட்டத்தின் உறுதியையும் கட்டிக்காத்து, எழுச்சி கொள்ள வைப்பதற்கு ஒரு மகத்தான தலைமை வேண்டும்.

அப்படிப்பட்ட தலைமை ஒன்று இந்த தமிழினத்திற்குக் கிடைத்துள்ளது. உலக வரலாற்றில், மிக மிக அரிதாகவே கிடைக்கப் பெறுகின்ற இத்தகைய தலைமை இன்று ஈழத்தமிழினத்திற்குக் கிடைத்திருப்பதனால் தான் துரோகம், கை விடுகை, இழப்பு போன்றவற்றை எமது விடுதலைப் போராட்டம் சந்தித்திருந்த போதிலும், மீண்டும் எழுச்சியுடனும் பலத்துடனும் எழுந்து நிற்க முடிகின்றது.

போர்க்காலத்தில் மட்டுமல்ல, சமாதானக் காலத்திலும் கடுமையான அச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் தமிழீழ விடுதலைப்போராட்டம் பலமுறை சந்தித்திருந்த போதிலும், மீண்டும் எழுச்சியுடனம் பலத்துடனும் எழுந்து நிற்க முடிகின்றது.

போர்க்காலத்தில் மட்டுமல்ல, சமாதானக் காலத்திலும் கடுமையான அச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நேர்கொண்டு வருகின்றது. தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இவற்றை மதிநுட்பத்துடன் தீர்க்க தரிசனத்துடனும் எதிர்கொண்டு, தக்க வழிகளைக் கையாண்டு வருகின்றார். இத்தகைய தலைமையின் கீழ், தமிழினம் இனி ஒரு போதும் ஏமாறவோ தோற்கவோ தயாராக இல்லை என்ற நிதர்சனத்தை, வரும்காலம் நிரூபித்துக் காட்டும்.

இன்று இலங்கைத்தீவில் பல முக்கியமான விடயங்கள் தேக்க நிலையை அடைந்திருப்பதனை காணுகின்றோம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு போயுள்ளன. பாராளுமன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் நடை பெறுவதில்லை. சமாதானப் பேச்சுக்களை நிபந்தனையாகக் கொண்ட நிதி உதவியும் வந்து சேர முடியாமல் இருக்கின்றது. இவை காரணமாக நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. சுமார் ஓராண்டுக்கு முன்னர் நிதி உதவி வழங்கும் நாடுகள் வழங்குவதாக உறுதியளித்த 4.5 அமெரிக்க பில்லியன் டொலர்கள் இந்த ஆண்டு ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற டீசுருளுநுடுடுளு கூட்டத்தின் போதும் கையளிக்கப்படவில்லை. காரணம், நாம் முன்னர் கூறியபடி பேச்சு வார்த்தை இல்லையென்றால் நிதி உதவியும் இல்லை என்ற நிபந்தனைதான்.!

நிலைமை இவ்வாறு மிக மோசமாக இருக்கையில் இதனை இன்னும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில்தான் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. கருணா விவகாரத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட சமாதான விரோத நடவடிக்கைகளோடு அரச ஊடகங்கள் மேற்கொண்ட விசமத்தனமான பொய்ப்பிரசாரங்களும் நிலைமையை மிகவும் சீர் குலைத்துள்ளன. இவை யாவும் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளன.

அத்துடன் கருணா விவகாரத்தை பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்ற அராஜக நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஆணிவேரையே அறுத்து வருகின்றன. கிழக்கில் நடைபெற்று வருகின்ற கொலைகளும், மனித உரிமை மீறல்களும், கொலைப் பயமுறுத்தல்களும் இன்று சிறிலங்கா இராணுவத்தின் அனுசரணையுடனேயே நடைபெற்று வருகின்றன. கருணாவின் துரோகம் நசுக்கப்பட்டு அவரும் அவரைச் சேர்ந்த சிலரும் தப்பியோடிவிட்ட பின்பு இன்று கிழக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே கருணாவின் குழுவில் இருப்பதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது. ஆயுத பலமும் ஆட்பலமும் மனோபலமும் இல்லாத இச்சிறிய துரோகக் குழுவுக்கு ஆதரவு கொடுத்து அதனை முன்னிறுத்தி சிறிலங்கா இராணுவமே இத்தகைய அராஜகச் செயல்களை புரிந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினதும், சிறிலங்கா இராணுவத்தினதும் இத்தகைய நாசகார நயவஞ்சக செயல்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாது போர்நிறுத்த உடன்படிக்கைக்கும் ஆப்பு வைத்து உடைக்கின்றது. இன்றைய தினம் ஜனாதிபதி சந்திரிக்கா மீதும் அவரது அரசு மீதும் எவரும் நம்பிக்கை கொள்ள முடியாதவாறுதான் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதொரு வாய்ப்புத் தோன்றாத நிலையில் தன்னுடைய தற்போதைய அரசு வலுவில்லாமல் இருக்கும் நிலையில் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஒரு சாட்டுக்காகவாவது ஆரம்பிக்க முடியாத நிலையில் சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது.

 மீண்டும் ஒரு யுத்தத்தை தமிழீழ மக்கள் மீது வலிந்து ஆரம்பிப்பதுதான் சந்திரிக்கா அம்மையாருக்கு தெரிந்த ஒரே ஒரு வழியாக உள்ளது. ஒரு யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் சிங்கள மக்களைத் திசை திருப்பித் தனது அரசியல் எதிர்காலத்திற்கு புதிய அத்திவாரம் ஒன்றை இடுவதோடு மட்டுமல்லாது, தன்னுடைய தமிழின விரோதக் கொள்கையைச் செயல்படுத்துகின்ற இரட்டைத் திருப்தியும் இதனால் அம்மையாருக்கு ஏற்படக்கூடும்.

ஆனால் தமிழீழத் தேசியத் தலைமையும், தமிழீழமும் இவற்றிற்கு முகம் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கின்றது. புதிய அலை பொங்கி எழுகின்ற போது அதன் எழுச்சிக்குத் தோள் கொடுக்க உலக தமிழினம் இப்போதே தயாராக வேண்டும்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home