Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > எதிர்பார்ப்பு - ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

Selected Writings by Sanmugam Sabesan

எதிர்பார்ப்பு - ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம்

16 May 2004

 


இந்தியப் பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் கொண்டு வந்துள்ள ஆட்சி மாற்றம், பலருடைய புருவங்களை உயர்த்தியுள்ளது. திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, அறுதிப் பெரும்பான்மையினை பெறாது விட்டாலும், அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாகத் திகழ்கின்றது.

கம்யூனிஷ்ட் மற்றும் சில வட இந்திய அரசியல் கட்சிகளின். ஆதரவுடன் காங்கிரஸ் கட்சிக் கூட்டணியே இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், எம்மவர்கள் மத்தியில் - குறிப்பாகப் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் - ஒரு கேள்வி பெரிதாக எழுந்துள்ளதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்வியானது இலங்கைப் பத்திரிகைகள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் பூதாகரமாகப் பெரிதுபடுத்தப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்கின்றோhம்! இன்றைய தினம் இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வதிலேயே எம்மவர்களில் பலர் தங்கள் மூளைகளைக் கசக்கிப் பிழிந்து களைத்துப் போவதையும் நாம் கவனிக்கின்றோம்.

'திருமதி சோனியா காந்தி அவர்களின் புதிய அரசு ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு - விடிவை - விமோசனத்தைப் பெற்றுத் தருமா?"

இந்தக் கேள்விக்குரிய - அல்லது எதிர்பார்ப்புக்குரிய அல்லது அங்கலாய்ப்புக்குரிய பதிலை இன்று எம்மவர்களில் பலர் எதிர்பார்த்து ஏங்கியிருப்பதனை இன்று உலக ஊடகங்கள் ஊடாக நாம் அவதானிக்கக் கூடியதாக இருப்பது என்னவோ உண்மைதான்!

இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தேடுவதற்கு முதல் 'இந்தக் கேள்வியே அவசியம்தானா?" - என்ற வினாவிற்கு விடை தேடுவதுதான் எமக்கு முக்கியமானதாகப்படுகின்றது. அதன் அடிப்படையில் இவ்விடயத்தைத் தர்க்கிப்பதோடு மட்டுமல்லாது வேறு சில கருத்துக்களையும் முன்வைத்து விவாதிக்க விழைகின்றோம்.

ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக அடிமைப்பட்டு வாழ்ந்த காரணத்தினாலோ என்னவோ எம்மில் பலரின் மரபணுக்களில் அடிமைச் சிந்தனை என்பது வேரோடிப்போய்விட்டது என்று எண்ணி வருந்திச் சிந்திக்கின்றோம். உள்ளுரோ, உள்நாடோ, வெளியூரோ, வெளிநாடோ எதுவாக இருந்தாலும் அந்த அந்த நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் எமது ஈழத் திருநாட்டிற்கு உதவுமா அல்லது உதைக்குமா என்று எண்ணி அங்காலய்ப்பது மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த வேளையில் சில கருத்துக்களை எமது நேயர்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போரட்டம் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும், திருப்புமுனைகளையும், தியாகங்களையும் சந்தித்துத்தான் முன்னேறி வந்திருக்கின்றது - வருகின்றது அன்று ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட எம்மின மக்கள் ஓர் இரவில் அகதிகளாக அல்லல் உற்று இடம்பெயர்ந்தபோது எந்த உலக நாடும் உதவிக்கரம் நீட்டி ஓடி வரவில்லை.

 ஆனால் இன்றோ ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் நிதியுதவி செய்வதற்காக தமிழீழத்தின் கதவுகளைத் தட்டி நிற்கின்றன. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்கும்படி சிறிலங்கா அரசை இந்த நாடுகள் இன்று வற்புறுத்தி நிற்கின்றன.

இன்று இவ்வாறு உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டுள்ள மன மாற்றத்திற்குக் காரணம் என்ன? அந்த நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களா? இல்லை இல்லவே இல்லை! அதற்குரிய அடிப்படைக் காரணமும் முதன்மைக் காரணமும் தமிழீழத்திலே தான் உள்ளது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடாத்திச் செல்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று மிகப்பெரிய பலம்மிக்க சக்தியாகச் செயல்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் இராணுவப் பலமும் அரசியல் பலமும் ஒருங்கே கொண்டதொரு விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திகழ்கின்றது. தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை, சுதந்திரப் போரட்டத்தை இனிமேல் ஒடுக்கவோ தடுக்கவோ முடியாது என்ற யதார்த்த நிலையை இன்று சிறீலங்கா அரசு மட்டுமல்ல, அதற்கு ஆதரவாகச் செயல்பட்ட உலக நாடுகளும் உணர்ந்து நிற்கின்றன.

அதன் அடிப்படையிலேயே இந்த மன மாற்றத்திற்கான காரணிகளை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே சிறிலங்காவில் அரசுகள் மாறினாலும் சரி, இந்தியாவில் அரசுகள் மாறினாலும் சரி, உலக நாடுகளில் பல அரசுகள் மாறினாலும் சரி, இல்லை செவ்வாய்க் கிரகத்திலும் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும் சரி தமிழீழம் பலமாக இருக்கும் வரையில் அவை பாதிப்பைத் தரப்போவதில்லை என்பதே நிதர்சனமாகும். அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தன்னிகர் இல்லாத் தலைமையும் பலத்துடன் இருப்பதானது தமிழீழத்திற்கு வளமான வாழ்வைப் பெற்றுத்தரும்.

எனினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தர்க்க ரீதியாக நாம் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமான ஒன்றுதான்! இவ்விடயங்கள் குறித்து எமக்குத் தெளிவான பார்வை இருந்தால் எதிர்காலச் சலசலப்புகள் குறித்து நாம் கவலைப்பட வேண்டி வராது!

ஓருநாட்டின் அரசியல் கட்சிகளின் ஆட்சி கை மாறும் போது பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதுதான் உண்மை! அதிலும் அந்த நாடு ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது அரிதான விடயமாகவே இருக்கும். எனினும் அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது புவிவியல், பொருளாதாரவியல் ரீதியாகவும் கவனித்துச் சிந்திக்க வேண்டும்.

திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அவர் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆதரவும் இராணுவப் பயிற்சியும் கொடுத்து வந்தார் என்பது வெளிப்படையான இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திரா காந்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்ததோடு, சிறிலங்கா அரசு மீது அரசியல் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தார். இந்திரா காந்தியின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்பையும் கொண்டிருந்தார்கள்.

அப்படியென்றால், அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் பின்னாளில் இந்தியா கொண்டிருக்கும் வெளிவிவகாரக் கொள்கைக்கும் (முக்கியமாக ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில்) வித்தியாசம் இருக்கின்றதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால் கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.

அன்றைய சிறிலங்கா அரசு - ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசு - இந்திய எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது பாகிஸ்தான் - சீனா - அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தது.

இந்திரா காந்தியின் அரசோ, அன்று வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ரஷ்யாவுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கையில் அதிகரித்து வருவதை தனக்கு ஒர் அச்சுறுத்தலாகவே அன்றைய இந்திய அரசு கருதியது. அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில் தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு இந்தியாவிற்குக் கிடைத்த வரப் பிரசாதமாக ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனைப் பயன்படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கி, தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

~ஈழத்தமிழர் போராட்டமானது, ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசிற்குத் தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசு இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும் என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு அவருடைய அரசியல் வாழ்க்கைச் சரிதம் குறித்த ஒரு புத்தகம் வெளிவந்தது.

அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் ஆவார். அவர் இலங்கை அரசு குறித்தும், தமிழர் பிரச்சனை குறித்தும், தமிழ்ப் போராளி இயக்கங்கள் குறித்தும் இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விபரித்து எழுதியுள்ளார். அவர் எழுதியிருந்த விடயங்களில் சிலவற்றையே நாம் இப்போது சுட்டிக் காட்டியிருந்தோம்.

தவிரவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும் அவரது தனிப்பட்ட செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டிருக்கின்றார். 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும்இ கொள்கைப்பிடிப்பு உள்ளவர்களாகவும், கட்டுக் கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில் புலிகள் இந்தியாவின் அழுத்தத்திற்குப் பணியமாட்டார்கள். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட இயக்கமாக வளர்ந்து வருகின்றது" என்று மறைந்த பாராதப் பிரதமர் இந்திரா காந்தியின் எண்ணங்களை தனிப்பட்ட செயலாளர் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்.

எனவே தன்னுடைய பிராந்திய மேலாண்மை கருதியும், பொருளாதார முன்னேற்றம் கருதியும் இந்தியா இடப் பக்கமும் சாயும், வலப்பக்கமும் சாயும்! அப்படி இந்தியா எப்பக்கம் சாய்ந்தாலும் அதில் இந்தியாவின் நலனுக்கே முன்னுரிமை இருக்கும். அதுவே இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கையின் அடிப்படைவாதமுமாகும்.

அந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இன்று இலங்கைத்தீவின் அரசியல் - இராணுவக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசும் சம பங்காளிகளாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. 'தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே" என்கின்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்ட விடயமாகிவிட்டது. இந்த நிலையில் தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாகும்.

மதவாதத்தை முன்வைத்து ஆட்சி நடாத்திய முன்னைய அரசான பி.ஜே.பி கூட்டணி, ஈழத்தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்பட்டதை நாம் அறிவோம். இலங்கைத்தீவின் அரசியல் களம் இந்த ஏப்பிரல் மாதம் மாற்றம் அடைந்துள்ள இந்த வேளையில், மே மாத மாற்றத்தோடு அரசுக்கு வரும் சோனியா காந்தி அவர்களின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்யாமல், மறைமுகமான பங்களிப்பினை செய்யக்கூடும் என்பதே இப்போதைய நோக்காக இருக்கின்றது.

'சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு, தமிழகத்து திராவிடக்கட்சிகள் தேர்தல் கூட்டு வைக்கும் காலம் எதிர்காலத்தில் ஏற்படலாம்" என்று நாம் 2002ம் ஆண்டு கூறியபோது, அதனை ஏற்க மறுத்துப் பல வலுவான காரணிகளை அன்பர்கள் பலர் எமக்கு கூறியிருந்தார்கள். ஆயினும், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை" என்பதையே, இந்த வெற்றி பெற்ற கூட்டணி நிரூபித்து நிற்கின்றது. இதன் அடிப்படையிலேயே, சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், இலங்கைப்பிரச்சனை குறித்த இந்திய அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என அன்று தர்க்கித்திருந்தோம்.

இந்தக் கருத்துக்களை பின்புலமாக வைத்துக்கொண்டு, ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திரு.லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களுடைய தற்போதைய அறிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ள விளைகின்றோம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், கதிர்காமர் அவர்கள் கூறிய சில கருத்துக்கள், ஸ்ரீலங்கா அரசின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையின் அமுலாக்கம் குறித்தே பேச்சுவார்தைகளின் முதல்கட்டம் அமைய வேண்டும்" - என்ற எதிர்பார்ப்பில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வேளையில், கதிர்காமர் அவர்கள் இத்தன்னாட்சி அதிகாரசபைத்திட்டம் குறித்து, காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். 'இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத்திட்டத்தை ஏற்பது, ஸ்ரீலங்கா போன்ற இறையாண்மையுள்ள நாட்டிற்கு, கடினமான ஒன்றாகும். எதிர்காலத்தனியரசு ஒன்றிற்கான திட்டந்தான் இது" - என்று கதிர்காமர் கூறிய கருத்து, சமாதானப் பேச்சு முயற்சிகளில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவாதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, 'சோனியா காந்தி பிரதமராக வரும்பட்சத்தில், தலைவர் பிரபாகரன் அவர்களை நாடு கடத்தும் கோரிக்கையை இந்தியா முன்வைக்கக் கூடும் என்ற", என்ற கருத்துப்பட கதிர்காமர் பேசியுள்ளார். இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அவசர அவசரமாக பி.ஜே.பி அரசைச் சந்தித்து ஸ்ரீலங்கா அரசுக்கான ஆதரவை கோரிவந்தவர்தான் கதிர்காமர் அவர்கள்!

இன்று இந்திய அரசாங்கத்தை சோனியா காந்தியின் அரசியல் கூட்டணி அமைக்கப்போகின்ற நிலையில், தமிழர்களுக்கு எதிராக இந்தியாவை நோக்க வைக்கின்ற முயற்சியில் கதிர்காமர் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையானது தற்போதைய காலகட்டத்தில் இலங்கைப்பிரச்சனையை எவ்வாறு அணுகக்கூடும் என்று நாம் இப்போது முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் கதிர்காமர் அவர்களின் இந்த 'நாடு கடத்தும்'  புரளியை நாம் சிந்திக்க வேண்டும்.

இந்திய ஆட்சி மாறிய உடனேயே இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் கதிர்காமர் அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்திய அரசின் நிலைப்பாடு மாறப்போகின்றது என்ற உள்ளுணர்வுதான் இவ்வாறு கதிர்காமர் அவர்களை அவசரப்படுத்தியதோ என்னவோ?

முன்பு ஆட்சியிலிருந்த பி.ஜே.பி அரசானது ஒரு மதவாத அரசாக விளங்கியது. இப்போது ஸ்ரீலங்காவில் ஆட்சி அமைத்துள்ள அரசும் ஒரு மதவாத அரசாகும். மதங்கள் வேறுபட்டதாக இருந்தாலும் அடிப்படை மதவாதக் கொள்கையிலும் தீவிரத்திலும் இவை ஒத்துப்போகக் கூடியவை. முதலாளித்துவமும், முதலாளித்துவமும் ஒத்துப் போகின்றதுபோல் மதவாதமும் தனக்குள் ஒத்துப் போகும்.

ஆனால், சோனியா காந்தியின் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவிருக்கும் ஆட்சி மதசார்பற்ற அரசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தவிரவும் விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையும், 'எந்த மதத்திற்கும் முதலிடம் வழங்கப்பட மாட்டாது" என்றே குறிப்பிட்டு நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இராணுவப்பலமும் அரசியல்பலமும் பொருந்தி, ஸ்ரீலங்கா அரசோடு சமபங்காளியாக இருக்கும் நிலை உருவாகியள்ளது. இப்படியான நிலை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இருப்பதனை உணர்ந்து கொண்ட கதிர்காமர் அவர்களின் மூளை, இப்போது முன்னைவிட அதிகமாக செயற்பட தொடங்கியிருக்கிறது போலும்!

இன்றைய யதார்த்த நிலையை சரியாகப் புரிந்து அதற்கேற்ற தகுந்த நடவடிக்கைகளை சோனியா காந்தியின் அரசு எடுக்குமென்று நாமும் உளமார விரும்புகின்றோம். இந்த அணுகு முறையானது சோனியா காந்தியின் தமிழக செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதோடு, ஈழத் தமிழர்களோடும் ஓர் எழுதப்படாத புரிந்துணர்வ ஒப்பந்தத்தை உருவாக்கும். கதிர்காமர் போன்றோர் ஏற்படுத்தும் சலசலப்புகளுக்கு இந்தியா மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களும் இடம்கொடுக்கக் கூடாது என்பதே எமது அவா ஆகும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home