"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings - P.Nedumaran - பழ. நெடுமாறன்
'ராஜிவின் தவறான கொள்கையைக்
கைகழுவுக'
ஈழத்தமிழர் பிரச்சினையில் புதிய அணுகுமுறை தேவை
16 July 2006 [courtesy தென் செய்தி]
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் சிங்கள இராணுவத்தினாலும் துரோகப் படைகளாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரிகோணமலையிலிருந்து தமிழர்களை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக 5000த்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உயிர்தப்பி ஓடிவந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து தப்பி வருவதற்கு வழிஇல்லாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் சகோதரத் தமிழர்களுக்கு சிங்கள வெறியரால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து தமிழகம் பொங்கி எழுந்தது. கடந்த ஜூன் 16ம் தேதியன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. இதைத் தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிடும் படி இந்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.. முதலமைச்சரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்துப் பேசினார். இதன் பின்னர் பிரதமரின் சார்பில் அவரது பிரதம ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழகம் வந்து முதலமைச்சரை வந்து சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அவர் தமிழகம் வரவும் இல்லை, முதலமைச்சரைச் சந்திக்கவும் இல்லை. அதற்குப் பதிலாக சூலை 3ம் தேதியன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புவுக்குச் சென்று குடியரசுத் தலைவர் இராசபக்சேவைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப் படுத்துவது குறித்தும் இனப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்தும் இருவரும் பேசியதாக அறிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினையைத் தமிழ் நாட்டு மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த பிரச்சினை என்பதை டெல்லியில் இருப்பவர்கள் கொஞ்சமும் உணரவில்லை என்பதையும் அதை உணர்த்தவேண்டிய நிலையில் உள்ள தமிழக முதலமைச்சர் தனது கடமையில் முற்றிலும் தவறிவிட்டார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள கலைஞர் கருணாநிதி அவர்கள் டில்லி ஆளும் கூட்டணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் வயதாலும் அனுபவத்தாலும் மிகவும் மூத்தவர். ஆனால் அதற்குரிய மரியாதையை டில்லி அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. பிரதமரோடு முதலமைச்சர் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து பேசியபிறகு அவரைச் சந்திப்பதற்கு டில்லியில் இருந்து மூத்த அமைச்சர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு அதிகாரியை அனுப்புவதாக டில்லி கூறியது. அந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புவுக்கு அனுப்பப்பட்டபோது அவர் சென்னைக்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் பிறகு கொழும்பு சென்றிருக்க வேண்டும். அவரும் அதைச் செய்யவில்லை. அப்படியானால் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு டில்லி அளிக்கும் மரியாதை இதுதானா? ஈழப்பிரச்சினையை முக்கியமாக பிரச்சினையாக டில்லி கருதவில்லை என்பதும் இதன்மூலம் தெரிகிறது. ஈழப்பிரச்சினையை டில்லி கையாளும் விதத்தில் உள்ள கோளாறு என்பது இப்போது திடீரென்று ஏற்பட்டது அல்ல. பிரதமராக ராசீவ் காந்தி இருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.
இந்திராவின் அணுகுமுறை
பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர் கையாண்ட விதம் முற்றிலும் வேறுவகையானது. 1983ம் ஆண்டு சூலை மாதம் கொழும்புவில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுமையுமே கொதித்து எழுந்தது. அப்போது பிரதமர் இந்திரா உறுதியான சில நடவடிக்கைகளை மேற் கொண்டார். அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுடன் அவர் பேசவில்லை. மாறாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ், மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழுத் தலைவர் ஜி. பார்த்த சாரதி ஆகிய இருவரையும் கொழும்புக்கு அனுப்பி ஜெயவர்த்தனாவை எச்சரிக்கச் செய்தார். இலங்கை போன்ற சிறு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் குறித்துப் பேசுவ தற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை பிரதமர் இந்திரா அனுப்பியது ஏன்? ஈழத் தமிழர் பிரச்சினையை சிறுபிரச்சினையைாக இந்தியா கருதவில்லை அதை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இந்தியா கருதுகிறது என்பதை சிங்கள அரசுக்கும் உலக நாடுகளுக்கும் உணர்த்துவதற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக கலவரங்களை நிறுத்தாவிடில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேருமென ஜெயவர்த்தனாவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கலவரம் உடனே நின்றது. அதுமட்டுமல்ல கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கொழும்பு நகரில் தவித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பத்திரமாக யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு இந்திய அரசு இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்தது. அதன் மூலம் அவர்கள் பத்திரமாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்கள். பிரதமர் இந்திரா காலத்தில் இலங்கைப் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட அணுகு முறை என்பது கீழ்கண்ட அம்சங்களை முக்கியமானதாகக் கொண்டிருந்தது. 1. இந்தியாவின் செல்வாக்குக் உட்பட்ட ஒருபகுதியே இலங்கை. 2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்சினையில் தலையிட அமெரிக்காஇ பிரிட்டன் போன்ற வல்லரசுகளும்இ பாகிஸ்தான்இ இஸ்ரேல்இ சீனா போன்ற இந்திய எதிரி நாடுகளும் தயங்கின. 3. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண ஜெயவர்த்தனா முயலவேண்டுமே தவிர இராணுவ தீர்வுகாண இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. 4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது இராணுவ ரீதியான உதவி அளிக்க முன்வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும். 5. திரிகோணமலை மாவட்டத்தி லேயோ இலங்கையின் எந்தப் பகுதியிலோ அந்நிய இராணுவத்தளம் எதுவும் அமைவதை இந்தியா எதிர்க்கும். 6. கிழக்கு மாநிலத்தில் குறிப்பாக திரிகோணமலை மாவட்டத்தின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாச்சாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அதாவது இப்பகுதியில் சிங்களரைக் குடியேற்றி தமிழரை சிறுபான்மையினராக்கும் சிங்கள அரசின் முயற்சியை இந்தியா கடுமையாகக் எதிர்த்தது. 7. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் சிங்கள அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் போராளிகளின் இயக்கங்களைப் பயன்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டது. பிரதமர் இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக ஈழத்தமிழர் நலன்களுக்கும் இந்திய நலன்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது. பிரதமர் இந்திரா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை ஜெயவர்த்தனா விரும்பவில்லை. ஆனாலும் இந்தியாவுடன் மோதிக்கொள்ளும் துணிவு அவருக்கு ஏற்படவில்லை. எனவே ஜி. பார்த்தசாரதி அவர்களின் முயற்சியின் பேரில் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. தமிழர் பிரதிநிதிகளும் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசினார்கள். ஓராண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற இந்த மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படமுடியவில்லை. இறுதியாக இந்தியா உருவாக்கிய அனெக்சர் சி திட்டம் தமிழர் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை ஏற்பதற்கு ஜெயவர்த்தனா தயக்கம் காட்டினார். ஆனால் பார்த்தசாரதி அவர்களின் நிர்பந்தத்தின் பிறகு வேண்டா வெறுப்பாக ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார்.
ராஜீவ் தவறான கொள்கை
இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இந்திரா திடீரென படுகொலைச் செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜிவ் பொறுப்பேற்றப்பிறகு ஜி. பார்த்தசாரதி முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டார். வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ரொமேஷ் பண்டாரி ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக மாறினார். அவர் ஆலோசனை யின் படியே ராஜீவ் செயல்பட்டார். போதாக்குறைக்கு இலங்கையில் இருந்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் தவறான யோசனைகளை ராஜீவுக்குத் தெரிவித்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட குழப்பங்கள் அத்தனைக்கும் மேற்கண்ட இருஅதிகாரிகளே காரணமாக இருந்தனர். ராஜீவ் காந்தியின் காலத்தில் இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்பது உறுதியற்றதாகவும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் முற்றிலும் பொறுத்தம் இல்லாததாகவும் அமைந்தது. ராஜீவ் கொள்கையின் விளைவாக கீழ்கண்ட நான்கு விளைவுகள் ஏற்பட்டன. அ. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும்இ சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஈழத்தமிழர் பிரச்சினைக் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் சிங்கள அரசின் கருத்து எதுவோ அதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆ. சுயநிர்ணய உரிமை உள்ள தாயகம் பெறுவதற்காக ஈழத்தமிழர்கள் நடத்தியப் போராட்டம் அங்கீகாரமற்றதாகவும்இ அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என சிங்கள அரசு வர்ணித்தபோது அதை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. இ. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளை தடுக்க ராஜீவ் அரசினால் முடியவில்லை. ஈ. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலியச் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது. மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மாறும் அபாயகரமான நிலையைத் தடுத்து நிறுத்த முற்றிலுமாக தவறியது. திரிகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையி னருக்கு தேவையான எண்ணெய் கிட்டங்கி கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா அந்தப் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தானும் போட்டியிட்டுத் தோற்றது என்பது வெட்கக்கேடானதாகும். இலங்கையில் இனப்பிரச்சினைப் பற்றிய இந்தியக் கொள்கைளில் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்ஆசியப் பகுதி அமெரிக்காவின் நோக்கங்களுக்கு துணைபுரிந்தன. தென் ஆசியப் பகுதியில் இந்தியாவை பலவீனப்படுத்துவது என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். ஏற்கனவே பாகிஸ்தான் அமெரிக்காக் வின் கூட்டாளியாக மாறியுள்ளது. இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வாரி வழங்கி அதையும் தனது கூட்டாளியாக மாற்றுவதற்கு அமெரிக்கா துணிந்ததற்கு ராஜிவ் காந்தியின் தவறான கொள்கையே காரணமாகும். ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு மூன்று ஆண்டு காலத்தில் 20இ000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பிரதமர் இந்திரா காலத்தில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் உருவாக்கப்பட்டு இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனெக்சர் சி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மறுத்துவிட்ட நிலையில் அவரை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதில் அவர் விதித்த நிபந்தனைகளை ராஜிவ் காந்தி ஏற்றுக் கொண்டது வரலாற்றில் பெரும் சோகம் ஆகும். இந்திய அரசின் பிரதிநிதியாக ஜி. பார்த்தசாரதி அனுப்பப்படுவாரானால் அவருடன் பேசமாட்டேன் என ஜெயவர்த்தனா விதித்த நிபந்தனையை ராஜிவ் காந்தி அப்படியே ஏற்றுக் கொண்டார். சின்னஞ்சிறிய நாடான இலங்கையுடன் பேசுவதற்கு வல்லரசான இந்தியா யாரை அனுப்ப வேண்டும் என்பதை ஜெயவர்த்தனா முடிவு செய்த வெட்கக்கேடு ராஜிவ்காந்தி காலத்தில் நடந்தது. 1985ம் ஆண்டு பூட்டான் தலை நகரமான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் ஒரு மாநாடு நடத்தப் பட்டது. தமிழர் பிரதிநிதிகளும் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகல போராளி இயக்கங்களும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து கூட்டாக தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். சிங்கள அரசு இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. திம்பு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே போர்நிறுத்தத்தை மீறி தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழர் பிரதிநிதிகள் இதைச் சுட்டிக்காட்டி பிரதமர் ராஜிவுக்குத் தந்தி அனுப்பினார்கள். ஆனால் குற்றவாளியான ஜெயவர்த்தனாவை கண்டிப்ப தற்குப் பதில் குற்றம் சாட்டியவர்களை ராஜிவ் காந்தி தண்டித்தார். எவ்விதக் காரணமும் கூறாமல் தமிழர் பிரதிநிதிகளான பாலசிங்கம், சந்திரகாசன், சந்தியேந்திரா ஆகியோரை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி உத்தர விட்டார். இதற்கு எதிராக தமிழகம் கொதித்தது. கிளர்ச்சிகள் வெடித்தன. இதன்விளைவாக வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தனா டில்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலான பராசரனும் இலங்கை சட்ட நிபுணர்களும் கூடி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கி ராஜிவ் காந்தியின் சம்மதத்தையும் ஹெக்டர் ஜெயவர்த்தனாவின் சம்மதத்தையும் பெற்றனர். உண்மையில் இத்திட்டத்தின்படி தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது. ஆனால் இந்தத் திட்டத்தைக் கூட ஏற்பதற்கு ஜெயவர்த்தனா மறுத்துவிட்டார். ஆனாலும் அவரை எதுவும் செய்ய ராஜிவ்காந்தியினால் முடியவில்லை. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பது குறித்து போராளி இயக்கங்களு டன் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரி பேச்சுவார்த்தை நடத்திக்கொண் டிருந்தபோது கொழும்புவில் ஜெயவர்த்தனா தன்னிச்சையாக கண்காணிப்புக் குழுவை அறிவித்துவிட்டார். இந்திய அரசை அவர் கொஞ்சமும் மதிக்கத் தயாரில்லை என்பதையே இது எடுத்துக்காட்டியது.
அதிகார மமதை
1985ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவர அர்ஜென்டினா தயாராக இருந்தது. இத்தீர்மானத்தை கூட்டாக கொண்டுவர இந்தியா மறுத்துவிட்டதினால் இத்தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. ராஜிவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே நடந்து கொண்டார். 20-10-85 அன்று நாடாளுமன்றத் தில் தி.மு.க. உறுப்பினர்களான டாக்டர் கலாநிதிஇ என்.வி.என். சோமு ஆகியோர் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பேசியபோது பிரதமர் ராஜிவ் காந்தி ஆத்திரத்துடன் இடைமறித்து 'நீங்கள் ஈழத்தமிழர்கள் சார்பில் பேசுவதற்கா இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதுமட்டுமல்ல நாடாளுமன்ற மேலவையில் தி.மு.க. உறுப்பினராக அப்போதிருந்த வைகோ ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அந்நிய விமானம் ஒன்று இலங்கை செல்லும் வழியில் பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியபோது சட்டப்படி அதை அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள். ஆனால் பிரதமர் ராஜிவ்காந்தி தலையிட்டு அந்த விமானங்களுக்குத் தேவையான பெட்ரோல் போட்டு பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி உத்திரவிட்டார். இதைச் சுட்டிக்காட்டிய வைகோ 'இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காகத்தான் இந்த ஆயுதங்கள் என்று தெரிந்தபிறகும் அவற்றை அங்கு அனுப்பலாமா என்று வேதனையோடு கேட்டார். அதற்குப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆணவமாக பதிலளித்தார். 'அந்த ஆயுதங்களில் தமிழர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை. ஆகவே அனுப்பினோம் என்றார். 1986ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தெற்காசிய மாநாட்டில் ஜெயவர்த்தனேயும் ராஜிவ் காந்தியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே நடைபெற்றது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேசுவரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி பெறாத உடன்பாடு
1987ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக இந்த உடன்பாடு அமைந்தது. இந்த உடன்பாடு இந்திய அரசியல் சட்டத்தை மீறியதாகவும் மரபுகளை மீறியதாகவும் செய்யப்பட்ட உடன்பாடு ஆகும். இந்த உடன்பாடு குறித்து இந்திய அமைச்சரவையின் ஒப்புதலை பிரதமர் ராஜிவ்காந்தி பெறவில்லை. ஜூலை 29ம் தேதியன்று கொழும்பு சென்று உடன்பாட்டில் கையெழுத்துஇட்டுவிட்டு டில்லிக்குத் திரும்பியபிறகே அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டத்தில் அதனுடைய ஒப்புதலை பெற்றார். அதைப்போலவே ஜெயவர்த்தனாவும் தன்னுடைய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. ஈழத்தமிழர்களின் சம்மதத்தையும் பிரதமர் ராஜிவ் பெறவில்லை. ஈழத்தமிழர்கள் சார்பில் உடன்பாட்டில் கையெழுத்திட இவருக்கு உரிமையோ தகுதியோ நிச்சயமாக இல்லை. இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு நடுவராக விளங்கி வந்த இந்தியா தானே ஒரு சார்பாளராக மாறி உடன்பாட்டில் கையெழுத் திட்டது என்பது உலகவரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாகும். இந்த உடன்பாட்டின் சொல்லப்பட்ட எதையும் ஜெயவர்த்தனா அமுல் நடத்தவில்லை. இதன் விளைவாக விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயவர்த்தனா எதை விரும்பினாரோ அது நடந்தது. ராஜிவ் காந்தியின் முதிர்ச்சியற்ற அரசியலின் காரணமாக இந்தியாவின் மரியாதை மட்டுமல்லஇ ஈழத்தமிழர்களின் உரிமைகளும் இந்த உடன்பாட்டின் மூலம் பறிக்கப்பட்டன. 1. முதன்முறையாக இந்திய இராணுவம் அந்நிய நாட்டு குடியரசுத் தலைவரின் கீழ் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் படி இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மலையகத் தமிழர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்ள ராஜிவ் காந்தி ஒப்புக்கொண்டார். 2. உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்தை அழைக்கும் உரிமை ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த உடன் பாட்டின் முக்கிய அம்சங்களை நிறைவேற்ற மறுத்தபோது அவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுப்பதற்கு இந்த உடன்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லை. இந்திய மக்கள் மத்தியில் கீழ்கண்ட கேள்விகள் எழுந்தன.
ராஜிவ் காந்தி - ரொமேஷ் பண்டாரி - ஜே.என். தீட்சித் ஆகியோர் வகுத்த இலங்கை இனப்பிரச்சினை பற்றிய கொள்கையின் மிக மோசமான விளைவுகளை உலகம் அறியும். ராஜிவுக்குப் பின்னால் பிரதமரான வி.பி. சிங் பதவியேற்றபோது இந்தக் கொள்கையைத் திருத்தி அமைக்க முயற்சி செய்தார். இந்திய அமைதிப்படையை உடனடியாகத் திரும்பப் பெற்றார். மேற்கொண்டும் அவர் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன்பாக அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. அவருக்குப் பின்னால் பதவியேற்ற தேவகவுடேஇ ஐ.கே. குஜ்ரால்இ பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் காலங்களில் ராஜிவின் தவறான கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் காலத்திலும் அதே கொள்கை தொடர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் அந்தக் கொள்கையிலிருந்து விலகிச் செல்லத் துணியவில்லை. இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த சந்திரிகாஇ ரணில்இ ராசபக்சே ஆகியோர் சிங்களப் பேரினவாத கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். தமிழர் களுடன் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள கொஞ்சமும் தயாராக இல்லை. சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரிலும் நார்வே நாட்டின் முயற்சியிலும் பேரிலும் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானபோதிலும் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. நார்வே நாட்டின் முன்னிலையில் இருதரப்பு பிரதிநிதிகளும் பல சுற்றுப் பேச்சுவாத்தைகள் நடத்தியபிறகு சிங்கள அரசு 2003ம் ஆண்டு சூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழு திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம் காவல்துறை பாதுகாப்பு வரிஅறவிடல் ஆகியவைத் தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படாது. இந்த அதிகாரம் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும். புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடி யேற்றம் தொடர்பான அதிகாரங்கள் மட்டும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படும். இவைதான் சிங்கள அரசு தர முன்வந்த அதிகாரங்களாகும். விடுதலைப்புலிகள் இதை ஏற்க மறுத்தபோது மாற்றுத் திட்டம் அளிக்கும்படி சர்வதேச சமுதாயம் கூறியது. அதற்கிணங்க உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களின் பிரதி நிதிகள் பிற நாடுகளைச் சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றும் பல்வேறு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் பேசியும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம் என்ற பேரில் புலிகள் ஒருதிட்டத்தை உருவாக்கி அளித்தனர். ஆனால் அதன்மீது விவாதம் நடத்த சிங்கள அரசு முன்வரவில்லை. மாறாக மீண்டும் புதியத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு குழு அமைத் துள்ளது. இது காலம் கடத்து:ம் தந்திரமாகும். இதை சர்வதேச சமுதாயம் குறிப்பாக இந்தியா உணர்ந்துகொள்ளவேண்டும். கடந்த 50 ஆண்டுகாலமாக திரும்பத் திரும்ப உடன் பாடுகள் கையெழுத்திடப்படுவதும் கிழித்தெறியப்படுவதும் புதியத் திட்டங்கள் உருவாக்கப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறதே தவிர அவற்றுக்குச் செயல்வடிவம் தர எந்தச் சிங்கள அரசும் முன்வரவில்லை. ஒப்புக்கொள்ளப்பட்டவற்றை நிறைவேற்ற மறுக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகளை அவரச அவசரமாக தடைச் செய்கின்றன. குற்றவாளியைத் தண்டிப்பதற்குப்பதில் குற்றம் சாட்டியவரைத் தண்டிக்க முற்படுகின்றன. சர்வதேச சமுதாயத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றம் வரவேண்டும் அதைப்போல இந்திய அரசும் கடந்த காலத் தவறானப் போக்கில் இருந்து விடுபடவேண்டும். ராஜிவ் காந்தியின் தவறானக் கொள்கையைப் பின்பற்றுவதை கைவிட்டு யதார்த்தப்பூர்வமான உண்மைகளை உணர்ந்து அதற்கேற்ப ஈழத்தமிழர் பிரச்சினையில் புதிய அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்க முன்வரவேண்டும். அவ்வாறு செய்வது இந்தியாவுக்கும் நல்லது ஈழத்தமிழருக்கும் நல்லது.
|