"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
TAMIL NATIONAL FORUM
Selected Writings - P.Nedumaran - பழ. நெடுமாறன்
டக்ளஸ் தேவானந்தா டில்லி உயரதிகாரிகள் சந்திப்பு
- சட்டம் செத்துவிட்டதா?
16 July 2006 [courtesy தென் செய்தி]
தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவரை படுகொலை செய்த குற்றவாளியும், ஆட்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருமான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து 15-04-06 நாளிட்ட தென்செய்தியில் விரிவானச் செய்தி வெளி யிட்டிருந்தது. இவர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக இவர் சென்னை நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடிக்கடி இவர் தமிழ்நாட்டுக்கு வந்து செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பொறுத்தவரையில் சட்டம் செத்துவிட்டதா? ஏன் இவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? தமிழகக் காவல்துறை தூங்குகிறதா? என்பதுபோன்ற கேள்விகளைக் எழுப்பியிருந்தோம். 13-07-06 அன்று தினமணியில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறப்புப் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளையும் தலைவர் களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார். தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் 'இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அங்குள்ள தமிழர்களின் நிலைக் குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் தலைவர்களிடம் எடுத்துரைத்தேன். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறைச் சாத்தியமான மூன்று அம்சத் திட்டங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளேன். இலங்கை அரசின் சார்பில் நான் அளித்தத் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.' மேலே கண்டச் செய்தி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக சென்னை செசன்சு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா 1986ம் ஆண்டிலிருந்து இதுவரை 20 ஆண்டுகாலமாக கைதுசெய்யப்படவில்லை. அவரை தேடும் முயற்சியிலும் தமிழகக் காவல்துறை ஈடுபடவில்லை. அப்படியானால் இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்குகிறார் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டுக் காவல்துறை அவரை கைதுசெய்ய முடியாதபடி டில்லி தடுக்கிறது என்பதும் தெரிகிறது. தேடப்படும் கொலைக் குற்றவாளி ஒருவர் பகிரங்கமாக டில்லிக்கு வந்து பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை சந்திக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார் என்று சொன்னால் இதைவிடக் கேலிக் கூத்து எதுவும் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழன் படுகொலையானாலும் கவலையில்லை. டக்ளஸ் தேவானந்தாவைப் பாதுகாக்க வேண்டும் என்று டில்லி நினைக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படை சுட்டுத் தள்ளியபோதும். பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், குறைந்தபட்சம் இலங்கை கடற்படைக்கு எச்சரிக்கை கூடவிடுக்காமல் டில்லி மெளனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் டில்லியின் உண்மை உருவத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
|