"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
TAMIL NATIONAL FORUM
Selected Writings - P.Nedumaran - பழ. நெடுமாறன்
தவறான எச்சரிக்கை
1 March 2006 [courtesy
தென் செய்தி]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரச்சினையிலும் அதற்குத் தலைமை தாங்கி நடத்தும் விடுதலைப் புலிகள் குறித்த அணுகுமுறையிலும் ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு ஒருவிதமாகவும் பேசுவது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மட்டுமே உரிய கலையாகும். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய படகொன்று இந்திய கடலோரக் காவல்படையினால் பிடிக்கப்பட்டிருப்பது குறித்து "இந்து' போன்ற பத்திரிகைகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போன்றவர்களும் எழுப்பிய கூச்சலுக்குப் பயந்து முதலமைச்சர் கருணாநிதி மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆனால் அவரது அரசில் பணியாற்றும் தமிழகக் காவல்துறைத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் "விடுதலைப் புலிகளின் படகு தமிழ்நாட்டை நோக்கி வந்ததல்ல அவர்களுடைய இலக்கு வேறு ஆகும், வழி தவறி நமது கடல் பகுதிக்குள் வந்துவிட்டார்கள்' என்று அறிவித்துள்ளார். இந்த நிலைமையில் இத்தகைய எச்சரிக்கை விடவேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 24 ஆண்டுகாலமாக சிங்கள கடற்படை எல்லை மீறி நமது கடற் பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொலை செய்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கணக்கானவர் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நமது மீனவர்களின் படகுகளும், வலைகளும் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை சிங்கள கடற்படையின் இந்த அத்துமீறல் அட்டுழியங்களுக்கு எதிராக இந்தியக் கடற்படை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் படகுகளை வேட்டையாடும் இந்திய கடற்படை எல்லைத் தாண்டி வந்து நமது மீனவர்களைச் சுடும் சிங்கள கடற்படையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடிக்கவோ அந்த பீரங்கிப் படகுகளை வளைத்துப் பிடிக்கவோ இதுவரை எவ்வித முயற்சியும் செய்ததில்லை. நமது மீனவர்களைக் காப்பாற்றவேண்டிய இந்தியக் கடற்படை செயலற்றிருப்பதைக் கண்டிக்கவேண்டிய நமது முதலமைச்சர் வாய் முடி மவுனம் சாதிக்கிறார். "தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடும் சிங்கள கடற்படையினருக்கு எதிராக இந்தியக் கடற்படை நடவடிக்கை எடுக்கத் தவறினால் தமிழக காவல் படையினரை மீனவர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த நேரிடும் என இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடவேண்டியவர் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். 1971ஆம் ஆண்டில் வங்க தேசப் பிரச்சினை முற்றி வெடித்தபோது வங்க மக்களுக்கு உதவியாக இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் மேற்கு வங்க காவல்படையை அனுப்ப நேரிடும் என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் முதலமைச்சரான சித்தார்த்த சங்கர் ரே எச்சரிக்கை விடுத்தார். பிரதமர் இந்திரா அதை ஏற்று இந்திய இராணுவத்தை அனுப்பினார் என்பது வரலாறு. நமது முதலமைச்சரின் கவனத்திற்கு இதை நினைவுபடுத்துகிறோம். விடவேண்டிய எச்சரிக்கையை விடுக்காமல் தமிழ் இன எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்த தமிழ் உணர்வாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது வேண்டாத விளைவுகளுக்கு வழிவகுத்துவிடும்.
|