TAMIL NATIONAL FORUM
Selected
Writings
Father Jegath Gaspar
அந்த இறுதி யுத்த நாளில்...!
14 August 2009
Courtesy
Nakkheeran
"...இன்று செல்வ ராசா
பத்மநாதன் செய்த தவறு வேறொன்றுமில்லை. பேரழிவின் இடர்பாடுகளின்று
தமிழர் உரிமைகளுக்கான குரலை உலகத் தமிழரிடையே உருவாக்க முயன்றார்.
அவரது முயற்சிகள் நற்பயன் தருவதற் கான அடையாளங்கள் தெரிந்தன.
அதனாலேயே அவர் கடத்தப்பட்டார். எவரும் இப்பயங்கரவாதச் செயலை
கண்டிக்கவில்லை..."
தமிழர்களாக இன்று நாம்
எதிர்கொள்வது சாதாரண நெருக்கடியல்ல. மிகவும் அசாதாரணமானதும், தாங்கொணா சோகமும்
நிறைந்த நெருக்கடி. கடந்த இதழ் "நக்கீரன்' இந்த வரலாற்றுப் பெரு நெருக்கடியை
மிகச்சரியாகத் தலைப்பிட்டிருந்தது. ஆம், தமிழரின் குரல், தமிழருக்கான குரல் கூட
எங்கும் இருக்கக்கூடாதென எகத்தாளமிட்டு நிற்கிறது சிங்களப் பேரினவாதம். நடுங்க
வைக்கும் இக்கொலைவெறியையும் கடந்த பேரினவாதப் பயங்கரவாதத்திற்கு ஜனநாயகம்,
சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசும் உலக நாடுகளும்
துணை நிற்கின்றன.
செல்வராசா குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுப்
பிரிவிற்குப் பொறுப்பாயிருந்தவர்தான். அதற்காக அவரை அனைத்துலக காவல் அமைப்பு
தேடலாம், கைது செய்யலாம், சட்டங் களின்படி நீதிக்கு உட்படுத்தலாம். ஆனால்
தாய்லாந்து நாட்டு குடியுரிமை கொண்ட அவர், மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டு, இலங்கை
ராணுவத்தின் வதை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பாங்கு சட்ட தார்மீகத்தின் பெயரால்
இயங்கும் நாடுகள் செய்துள்ள அப்பட்டமான ரவுடித்தனம்.
மலேசியாவில் அவரை கைது செய்தது, அல்லது கடத்தியது யார்? ஏன் அங்கு அவர்மீது
வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? அப்படியே மலேசிய காவல்துறை அவரை கைது
செய்திருந்தாலும் ஏன் அவரை குடியுரிமை கொண்டி ருந்த தாய்லாந்து நாட்டிடம்
ஒப்படைக்கவில்லை? தாய்லாந்து நீதிமன்றத்தின் அனுமதியின்றி எப்படி அவர் இலங்கைக்கு
கடத்தப்பட்டார்? இக்கேள்விகளுக்கெல்லாம்
விடையில்லை. இலங்கை-மலேசியா-சீனா நாடுகளின் உளவு அமைப்புகள் இணைந்து
செல்வராசா பத்மநாதன் அவர்களை ஆட்கடத்தல் செய்திருக்கிறார் களென்பது
தெரிகிறது. இந்தியாவின் ரா உளவு அமைப்பு இதில் சம்பந்தப்பட்டதா என்பது
தெரியவில்லை.
நடந்த நிகழ்வுக்கும் சில ஆயுதம் தாங்கிய குழுக்கள் நடத்தும்
தயக்கமில்லா பயங்கரவாதச் செயல்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
சட்டங்களை மதித்து இயங்க வேண்டிய அரசமைப்புகளே பயங்கரவாதிகளாக
மாறும்போது நிர்கதி நிலையின் விளிம்பில் நிற்கும் தமிழன் எப்படி நடந்து
கொள்ள வேண்டுமென இந்த உலகம் எதிர்பார்க்கிறதாம்?
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, இன அழித்தல் பயங்கரத்தின் சிறுகறை
கூட உலகிற்கும், வரலாற்றிற்கும் தெரிந்து விடாதபடி ஆதாரங்கள்
அனைத்தையும் அழித்துவிட வேண்டுமென்பதிலும், தமிழருக்கான -தமிழர்
உரிமைகளுக்கான குரல் உலகில் எந்த வடிவத்தில் எழுந்தாலும் அதை நசுக்கி
அகற்ற வேண்டுமென்பதிலும் சிங்களப் பேரினவாதம் தெளிவாக இருக்கிறது
-இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் யாவுமே இரக்கமும் ஒழுக்கமுமில்லா இவ்வின
அழித்தல் திட்டத்திற்கு தாங்கு தூண் களாகவும், நள்ளிரவுக்
காவலர்களாகவும் நிற் கின்றன.
இன்று செல்வ ராசா பத்மநாதன் செய்த தவறு வேறொன்றுமில்லை. பேரழிவின்
இடர்பாடுகளின்று தமிழர் உரிமைகளுக்கான குரலை உலகத் தமிழரிடையே உருவாக்க
முயன்றார். அவரது முயற்சிகள் நற்பயன் தருவதற் கான அடையாளங்கள்
தெரிந்தன. அதனாலேயே அவர் கடத்தப்பட்டார். எவரும் இப்பயங்கரவாதச் செயலை
கண்டிக்கவில்லை.
இன அழித்தலின் கொடூர இறுதி நாட்களைக் கண்ட முல்லைத்தீவு யுத்தம்
முடிந்து 88 நாட்கள் ஆகிவிட்ட பின்ன ரும் உலக அமைப்புகளோ, ஊடகங்களோ
இன்றுவரை அங்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. வதை முகாம்களில் உயிர்
வாழும் தமிழரின் உண்மையான எண் ணிக்கை என்னவென்ற விபரம் இதுவரை
தருவிக்கப்பட வில்லை. குறியிடப்பட்ட விலங்குகளாய் அத் திறந்த
வெளிச்சிறைச்சாலையில் கிடக்கும் தமிழர்களை சந்தித்து உரையாட முழுமையான
அனுமதி எவருக்கும் இல்லை.
கடந்த வாரம் சென்னை வந்திருந்த மதிப்பிற்குரிய ஆன்மீகத் தலைவர் ஒருவர்
தனியாக அழைத்துக் கூறினார், ""ஃபாதர்... முகாமில் விடுதலைப்புலிகள்
என்று சந்தேகிக்கப்படுவோரையும் உடல் வலுவாக உள்ள வாலிபர்களையுமாக
சுமார் 20,000 இளைஞர்களை இலங்கை ராணுவம் பிரித்தெடுத்து கொடூரமான
சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள். வாரம் நூறு இளைஞர்கள் கொல்லப்
படுகிறார்கள். ""ஏதாவது செய்யுங்களேன்'' என்று நெஞ்சுருகி வேண்டினார்.
அக்டோபர் மாதம் அங்கும் மழைக்காலம். வன்னி, வவுனியா பகுதியெங்கும்
பெருமழை பெய்யும். திறந்த வெளியில் மூன்று லட்சம் தமிழர்கள் படப்போகும்
கொடுமை நினைக்க நெஞ்சம் பதறுகிறது. காலரா, மலேரியா, மஞ்சள்காமாலை என
அந்த மக்களை காவு வாங்க கால நோய்கள் காத்திருக்கின்றன. மனசாட்சியுள்ள
தமிழர்களே, தன்னார்வ அமைப்புகளே, மத நிறுவனங்களே, சுயநோக்கில்லா
லட்சோபலட்சம் அரசியல்கட்சித் தொண்டர் களே... அக்டோபர் வருமுன்
அம்மக்களை விடுதலை செய்து தம் வாழ்விடங்களுக்கு அனுப்பிட இந்திய அரசு
வலியுறுத்தி அழுத்தம் தரக்கேட்டு உங்களாலான செயற்பாடுகளை விரைந்து
செய்திடுங்கள். குறைந்தபட்சம் அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்காவது
அம்மக்களை சந்தித்து பணி செய்யும் அனுமதியை பேரினவாத சிங்கள அரசு வழங்க
வேண்டும். உலகில் இன்று அம்மக்களுக்கென எவரும் இல்லை, நம்மைத் தவிர.
இனியும் நம்பிக்கைக்கு இடமிருக்கிறதா? -உணர்வாளர் கள் பலரும் கேட்கிற
கேள்வி இது. உண்மையில் நாம் உண்மையான உணர்வாளர்களென்றால் இக்
கேள்விக்கு இடமே இல்லை. நீதி, உண்மைக்கான போராட்டமென்பது போர்க்கள
வெற்றிகளுக்கு அப்பாற்பட்டது.
ராஜபக்சே கொடுங்கோலர்களைப்
போல் எத்தனையோ பேரை மனித வரலாறு பார்த்திருக்கிறது. எழுதி வைத்துக்
கொள்ளுங்கள். ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா, டக்ளஸ், கருணா அனைவரும்
இன்னும் சில ஆண்டுகளில் வரலாற்றின் குப்பைமேடுகளில் கிடப்பார்கள்.
இனஅழித்தலின் பாவிகள் என வரலாறு அவர்கள் மீது எச்சில் உமிழும். மானுடம்
வெல்லும். நம் கடமை இன அழித்தலின் உண்மைகளை பதிவு செய்வதும்,
மானுடத்திற்கான குரலை இழக்காது தொடர்ந்து போராடுவதும்.
எனவேதான் சிவரூபன் அவர்களின் பதிவு முக்கியமானதாகிறது. மே-17 வரை
நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். அவரது
கடிதத்தின் முக்கிய பகுதிகளை வரலாற்றிற்காகவும், நக்கீரன்
வாசகர்களுக்காகவும் இங்கே பதிவு செய்கிறேன். இதோ சிவரூபன் பேசுகிறார் :
""ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது
போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற
தமிழ்நாட்டு உறவுகளே!
நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும்
கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல.
கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில்
பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும்
மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான்
எழுதுவதற்கு முக்கிய காரணம்.
பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும்,
வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும்
முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம்
முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு
நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். "தாய் தமிழ்நாட்டு உறவுகள்
எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்'
அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு
நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.
இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே!
உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக்
குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல்,
தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல்
சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள்
ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை
எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால்
இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு,
குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது
சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.
இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட
உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான
உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான்
எழுதுகிறேன்.
அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள்
கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும்
சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று
ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி
முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல்
திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள்
அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி
ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை
தொடங்கின.
வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார
ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம்
தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, "தமிழரை அழித்து தீர்த்த பின்னரே
அடுத்த வேலை' என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல்
மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ
முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும்
ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க
பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று.
ஏன் தெரியுமா...?
|