உலகுக்கு உயிர்தந்த உத்தமர்
18 June 2006
அருகனின் �அநுபூதி�
என்னும் 173 பக்கங்கள் கொண்ட பல்தலைப்பு நூலில் இருந்து
பிரித்தெடுக்கப்பட்டு ஒவ்வொன்றாக இங்கே மீழ் வெளியீட்டுக்கா
தளத்துக்கு வழங்கப்படுகிறது. இத்தலைப்பு அதில் ஒன்று.
(அவையடக்கம்)
அகில மெல்லா மடிதழுவு மற்புதரை யருகணைத்துப் பிடிதழுவ லெத்துணையோ!
அடியேன் நான்ஞ் செய்து விட்ட வரும்பணியைச் சபையோர்தாம் பொறுத்தருளச் சிரந்
தாழ்ந்தேன் சின்ன மகன்!!
(ஆரம்பம்)
அளவிற் பெருஞ்சோதி யகிலத்திற் படரவிட்ட
அற்புதமான பொன்னாளாம் மின்னாளே!
குறையோடு கறைசூழ்ந்த சிறை வாழ்வை
சுமையோடு தான்தாங்கி சுகமாக்கிச் சென்றவரை
சுவைக்காமல் இனிக்குமோ என்வாழ்வு!
மார்கழித் திங்களிருளில் ஒளிச்சுடராந்தாரகை
மின்னும் பொன்னாய் மேலுங்கீழும் மிதந்ததுவே
மனுமகனார் மனிதனாகி மண்ணில் மின்ன
மீன்வானில் நீள்வாலோடு தனுமின்னுந் துவித்தாரகை
கன்னியன்னை மடியினிலே புண்ணியமாய் வந்துதித்து
பூமிதன்னில் பாவங்களைக் கண்ணியமாய்க் களைபிடுங்கி
கடையெல்லைத் தடைநீக்கி குடைபோலக் காக்கவந்த
கோமானாம் மழலையாகி மலர்ந்தாரே மாடிடைக்குடிலில்
அரசாளும் மேரோதுக்கெதிராக பாராள வந்தாரென்று
வேரோடுபிணமாக்க குத்தியே குவித்தான் குழந்தைகளை
கத்திச் சிதறிய கத்திக் காயங்களோடு குத்துயிராய்க்
கிடந்ததந்த பிணங்களிடையே இரத்தக்குளமாய்க் கொப்பளிக்க
கடந்து சென்று வளர்ந்துவந்து மறக்காது தரித்துக்கொண்டார்
குருதிக்கிடையி லூறிக் கொண்ட ஆடைகளைக் கிடையாக
வளர்பிறையாக வளர்ந்தவர் வாயில் தேய்பிறைக்கென்று மிடமேயில்லை
வலைஞரோடும் அறிஞரோடும் வேதத்தைப்பற்றியே ஞானமாய்ச் சொல்லி
ஞான தீட்சை நதிக்கரைதன்னில் நன்னீரூற்றி நலமாய்ப்பெற்று
பாவம்போக்கும் புதுப்பிறப்பொன்றை ஆவியோடுந் தீயோடுந் தந்தார்
மாங்கல்யங் காண மன்னவன் சென்றான் அன்னையோடு
மதுரசம் முடிந்து மனமுடைந்திட்ட மணவீட்டாரை மரியுங்கண்டு
மனமுண்டானால் மகனால் முடியும் மென்பதையுணர்ந்து
மணவீட்டாரை முடக்கி ப்பணியாள்தன்னைப் பணியவேவைத்தார்.
அன்னையின் சொல்லை மன்னவன் மதித்து
ஆணையிட்டுச் சாடியை நிரப்பி அற்புதமாக ஆசீர்வதித்து
அள்ளிப்பருக மதுரசமாக்கி மன்னவன் தந்தான் மணவிழாதன்னில்.
அதிசயமென்று அனைவரு முண்டு மயக்கத்தில் வந்து மகிழ்ச்சியைச் சொன்னார்.
அதிசயமென்று அனைவரு முண்டு மயக்கத்தில் வந்து மகிழ்ச்சியைச் சொன்னார்.
மகத்துவமான மருத்துவரென்றும் மாறியே வந்தார்
அகத்துவமான வைத்தியங்கூட முகத்தவமாகக் கண்டதும் போகும்
ஊன்தன்னை விட்ட உயிர் தனைக்கூட கூட்டியே வந்து பூட்டியேவைத்தார்.
சோம்பிப்போன கைகளைக்கூட சுகமாய் மாற்ற மருத்துவஞ் செய்தார்.
தீராத வாதம் திமிர் வாதங்கூட வாயாரக்கூறின் விட்டேயோடும்
நோகாமல் நோயைத் தேகத்தில் நீக்கும் மாயையைப்பாரீர்
பூதங்கள் ஐஞ்சும் தஞ்சமென் றஞ்சும்
பாதங்கள் கொண்ட பரமனின் நெஞ்சம்
படகினில் செல்லப் புயலதைத் தள்ள
பயந்து படகி லிருந் தோரைக் கண்டு
புஜங்களைத் தூக்கிக் கரங்களை நீட்டி
புயல்தனையடக்கிப் புதுமைகள் செய்தார்.
மச்சங்கள் மிச் சமாய்ச் சிக்கிய வலையினை
அச்சமே கொண்டு அள்ளியேயெடுக்க
கூச்சல் போட்டே துணைக்காய்க் கூவியேயழைத்து
காவிச்சுமக்கக் கரைசேரா வள்ளம் ஆடியே அலையில் அவதியில் கிடக்க
ஆணைக்கடங்கி அகப்பட்ட மீன்கள் ஆயிரமாயிரம்
முற்றுந்துறந்த முனிவராக முக்குணமறிந்த ஞானியாக
பின்னை நடப்பதைத் திட்டமாக முன்னே சொன்னார்!
பாறையென்றுன்னைப் பேர்சொல்லி அழைப்பேன்
போ வென்றோதிப் புறப்படச் சொன்னார் இராயப்பாவை
பின்னாள் அதுவென்றால் முன்னா ளென்னை மூன்றுதடவை
சீ யென்று ஓதிப்புறந்தள்ளிக் கண்ணீர் சொரிவாயே கனலாய் என்றார்!
அதுவும் நடந்தது நலமாக இதுவும் நடந்தது இதமாக
(குன்றில் வந்தகோபுரக் கருத்து)
ஏழையுள்ளம் பேறுபெற்றதென்று ஏறியே சென்று மலையில்ச் சொன்னார்
ஏனென்று கேட்டால் இறைவனினரசு அவர்களுக்கென்றார்
பசியாய்ப் பொழுதைக் கழிப்பவர்கூடப் பெற்றனர் பேறு என்பதைச்சொன்னார்
புசித்துப் பின்னர் பெறுவார் நிறைவை என்றதைச்சொன்னார்
புலம்பி ப்புலம்பி அழுபவர்எல்லாம் போதும் போதும் என்று
புன்னகை செய்வார் பூமியில் பேறு அவர்களுக்கென்றார்.
கேடுகிடைக்கும் கோடீஸ்வரர்களுக்கு ஐயோ ஐயோ . . .
கிடைத்துவிட்ட ஆறுதலை முடித்துவிட்டீர், குடித்துவிட்டீர்
புசித்துப் புசித்து முடித்தவருக்கையோ பின்னாளில்
பசித்துப் பசித்து பார்த்திருப்பீர் அன்னாளில்.
புன்னகைக் கூச்சலிட்டோரே உங்களுக்கையோ. . . . .
புலம்பிப் புலம்பித் துயருற்றழுவீர் இது பொய்யோ?!
பெருமை கொள்ளும் மானிடர்களுக் கையோ. . . .
போலிப் புகழால் பொலிவிழந்து போவீர்கள்
பொழிந்த மலைப் பிரசங்கமிது போற்றற் குரிய பேருரையும் இது
இனி பொற்காலம் முடிந்தது போல் மடிந்ததுவேயந்த மானுடல்!!
ஆவிதுறக்குங் காலமும் வந்தது அடையாளச் சின்னமாய்ச் சிலுவையும் வந்தது
அடிக்கு மேலே அடியும் வீழ்ந்தது இடிக்கு மேலே இடியும் வீழ்ந்தது
ஆவிதுடிக்க அறைந்தனர் ஆணியை பூமி நடுங்கிப் பொழிந்தது மாரியை
ஆகாயம் நோக்கித் தாகமாய் என்றார் கடல் காளானைக் கட்டி
அதரத்தையொட்டிக் காடியை நீட்டி ஏய்த்துக் கொண்டே ஏளனஞ் செய்தனர்
ஆத்மாவைக் கையளிக்க அழைத்துக் கொண்டார் ஆண்டவனை
இரக்கமற்ற ஈனர்களின் அரக்கத்தனத்தால் இளைப்பாறியது தேகம்
இரத்தமுற்ற தேகங்களின் உறக்கத்தினால் களைப்பாறியது தேகம்
இறுக்கமுற்ற பேயர்களின் கோரத்தினால் உருமாறியது மேகம்
இறக்கமற்ற ஆவியதன் காரணத்தால் ஈட்டி யேறியதும் தாகம்
இறந்து விட்டால் இன்பம் மென்று எண்ணுமளவிற்குத் துன்பம்
மறைந்து விட்டால் என்ன? என்றளவிற்கு எண்ணம்
கீறுண்ட காயங்களில் பீறிட்ட குருதிகளால் நீர் வடிந்த கன்னம்
பார்க்கப் பார்க்கப் பதறுகின்ற சுற்றத்தார் சுற்றிவருந் திண்ணம்
சோகத்தின் சாயலால் பூவுதிர்ந்து வாடுகின்ற வண்ணம்
ஆவிதுறக்கும் ஆணைக்காய் ஆண்டவனைப் பார்த்த கண்ணும்
போதுமெல்லாம் முடிந்ததென்று பாவிமக்கள் பாவம் போக்க
சாதுதன்னைக் காலன் கையின் பாசக்கயிற்றில் மாட்டிக்கொண்டார்
மோது மெங்கள் மனத்தை எல்லாம் சாதுவாக்க மீண்டும் வந்து
ஊது குழல் ஊது வென்று ஒற்றுமையை வேண்டுகின்றார்
ஓதும் வேதம் நேயமுடன் உள்ளமொன்றாய் உருக்கெடுக்க
சோதியாகும் தூயவரை கவிதையாலே பாடிட்டேன் பரம்பொருளே!!
பழுது பொறுத்துப் பொழிந்திடுவாய் யிறையருளை!!
ஆமேன் அல்லேலூயா!
|