Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation without a State> Tamil Nadu > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle > இந்திய நலனை புறக்கணித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடாது - தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி  

 
tamil nadu
& Tamil Eelam freedom struggle

இந்திய நலனை புறக்கணித்து
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடாது

- தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி

[see also New Delhi's Policy on Sri Lanka will be Tamil Nadu's Policy says Karunanidhi, Times of India, 6 June 2006 together with Comment by tamilnation.org ]

Thinakkural, 24 February 2007


இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின்  உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்கும் தொழிற்சாலையொன்றை மதுரையில் தமிழகப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதனையடுத்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இந்தியக் கடற்படை, எல்லைக் காவற்படை, தமிழக மாநில பொலிஸார் ஆயுதங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த பெப்ரவரி 13 இல் கடலில் ஏ.கே.-56 ரக துப்பாக்கி, எறிகுண்டு, இரசாயனப் பொருட்கள், தற்கொலைத் தாக்குதல் அங்கி போன்றவற்றுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இலங்கையில் கொந்தளிப்பான நிலைமை உள்ள இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டை ஆயுத விநியோகம் செய்யும் இடமாக புலிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாதென சென்னையிலிருந்து வெளியாகும் `இந்து' ஆங்கில நாளேடு வியாழக்கிழமை (22.02.2007) ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கருணாநிதி தெரித்திருப்பதாவது;

இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொடுமைப்படுத்தப்படுகின்ற அல்லது கொல்லப்படுகிற அப்பாவி தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசு முன்வர வேண்டுமென்று தமிழ் நாட்டிலே உள்ள கட்சிகள் குறிப்பாக பா.ம.க., தி.மு.க. போன்றவை கேட்டுக் கொள்வதற்கும் அதற்காக `இந்து' பத்திரிகை எழுதியிருப்பதைப் போல நடைபெறுகின்ற புலிகளுக்கான ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை.

`இந்து' தலையங்கத்திலே குறிப்பிடிருப்பதைப் போல அத்தகைய செயலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கண்காணிக்கப்படுகிறார்கள். அத்தகைய ஆயுதங்களை தாங்கி வருகிற படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. இந்து குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழகத்து அரசியல்வாதிகளுடைய இரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயற்படக் கூடாது.

இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளி விட்டு, இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் விபரம் கணக்கெடுப்பு

இதேவேளை, தமிழகப் பொலிஸார் ஈழத் தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் கணக்கெடுப்பு பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதுதவிர தமிழகம் முழுவதும் வசிக்கும் ஈழத்தமிழர்கள் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடக்கிறது. அவர்கள் தமிழக அரசிடம் முறையான ஆவணங்கள் பெற்றுள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக 133 முகாம்கள் உள்ளன. இங்கு தங்கி இருப்பவர்களில் யார், யார்? எங்கு செல்கிறார்கள் என்று கேட்கப்படுகிறது. சந்தேகப்படும் வகையில் இருப்பவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்களின் 133 முகாம்களில் செங்கல்பட்டு முகாம் மட்டுமே கட்டுப்பாடு மிகுந்தது. அங்கு புலிகளுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு முகாமில் இருப்பவர்கள் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற முகாம்களில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலைகள் செய்து சுயமாக வாழ அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் ஈழப்போரை பயன்படுத்தி சில தொழில்களை செய்கிறார்கள். அப்படி தொழில் செய்யும் அனைவரும் பொலிஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். சமீபத்தில் வந்த இவர்கள் மீது பொலிஸார் கூடுதல் சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டின் முகாம்களில் சுமார் 75 ஆயிரம் ஈழத் தமிழர்களும் வெளியில் சுமார் 45 ஆயிரம் ஈழத் தமிழர்களும் வசித்து வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க அடுத்தடுத்து வெடி பொருட்கள் கடத்தும் படகுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து உஷாரான இந்திய உளவுத் துறையினரும், பொலிஸாரும் கடலோரப் பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் முகவர்கள் சிலர் தமிழ் நாட்டில் தங்கி இருந்து அலுமினிய கட்டிகள், இரும்புக் குண்டுகள், இரசாயன கலவைகள் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து அவற்றை தமிழக மீனவர்கள் மூலம் எளிதில் கடத்தி வருவது விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக பலர் கைதானார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் தற்கொலை படகு பிடிபட்டதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

2 ஆயிரம் கிலோ டி.என்.டி. வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்த அந்தப் படகு காங்கேசன்தறை துறைமுகத்தை தாக்கி அழிக்க வடிவமைக்கப்பட்டிருந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த படகில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் நாட்டில் எங்கு இருந்தெல்லாம் வெடி பொருட்கள் கிடைக்கிறது. அவற்றை கடத்துவது யார்-யார் என்பன என்ற தகவல்கள் கிடைத்தன.

இதுவரை கைதானவர்களிடம் நடந்த விசாரணைகள் மூலம் ஆயுதம், வெடி பொருட்கள் கடத்துவதில் `மூளை"யாக இருந்து செயற்படுவது கிருபா என்ற கிருபாகரன் எனத் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் அடிக்கடி விமானத்தில் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளார். மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சி, சென்னையில் உள்ள சிலரை சந்தித்து பேசி உள்ளார்.

வெடி பொருட்கள் சேகரிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பார். பிறகு விமானத்தில் கொழும்பு சென்று விடுவார். அவரது புகைப்படம் தமிழக பொலிஸாரிடம் சிக்கி உள்ளது.

தற்போது அவர் தமிழ் நாட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த நேரத்திலும் அவர் விமானத்தில் தப்பக் கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன என்று `இந்து' நேற்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

கிருபாகரனுக்கு கண்ணன் வலது கரம் போல் இருந்து வெடி பொருட்களை படகுகளில் ஏற்றி அனுப்பும் வேலையை செய்துள்ளார். கிருபாகரனுக்கும், கண்ணனுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் மதுரை மாவட்டம் கொடை வீதி அருகே உள்ள அம்மையா புரத்தைச் சேர்ந்த வேலுசாமி செய்து கொடுத்துள்ளார்.

கண்ணன், வேலுசாமியும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தமிழகம் முழுக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home