பொங்குதமிழ்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின்
முன்முகிழ்ந்த தமிழன்னையே!
சுதந்திர வேட்கையுடைய ஈழத்தமிழர்
இதயமதில் குடிகொள்ளும் தமிழணங்கே
பொதுத் தேர்தல் வந்தாலே
பொங்கிவரும் அகழ்வார் மத்தியில்
ஆழமாக அயராது ஆட்சிசெய்யும் அமிழ்தினுமனிய நற்றமிழே
பொங்கி யெழுவாய் பொங்குதமிழே.
ஆக்கம்
இரட்ணசபாபதி மயூரன்
தரம் - 8
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
பொங்கு தமிழ்
- 2005
பொங்கு தமிழ் அமுதினிலுமினிய எமதின்பத் தமிழ்
பாரெல்லாம் வியந்து போற்றப் பொங்கு தமிழ்
உறவுகழிந்தும் உடமைகழழிந்தும் - சுதந்திர
வேட்கை யெனும் உணர்வினை யிழக்காத
நற்றமிழினம் ஈழமதில் நாமெனப் பொங்கு தமிழ்!
வெகு தூரத்திலில்லை விடியலெனப் பொங்கு தமிழ்,
பொங்கு தமிழ், வீரமுரசறைந்து, பொங்கு தமிழ்
இரண்டாயிரத் தைந்து, ஒன்பது, முப்பதினில்
ஊரெலா முவந்துகூடி, கரைதெரியா சனசமுத்திரம்
நாமெனவே பொங்கு தமிழ் தமிழுணர்வலையுடனே
பொங்கு தமிழ், பொங்கு தமிழ், பொங்குக தமிழ்
பொங்கு தமிழ்
ஆக்கம்
கனக இரத்தினசபாபதி
ஊழியர்
நிர்வாகப்பிரிவு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
அன்னை தமிழுக்கு
- இங்கு
அரசொன்று வேண்டும்!
ஆதித்தமிழ் மண்ணிங்கு அரசொன்று இன்றியே
நாதியற்றுப் போய் படுந்துயரை நீக்கிடவே! - ஏதிலிகள்
என்ற நிலை மாறி நிதம் எங்களை நாங்களாளும்
தன்னாட்சி அரசமைப்பதே திடம்!
மூத்த தமிழின்று
முக்காடு போடலாமோ1
பூத்த மலர்களின்று
பொலிவிழந்து போகலாமோ!
ஆத்தையும் அப்புவுமாய்
ஓடியுலாவிய மண்ணின்று
கொத்தடிமை கூடமாய்
கொடியவர் வயப்பட்டு
எத்தனை காலம்தான்
ஆட்சிக்கொரு அரசின்றி
அங்கீகரிப்பார் யாருமின்றி
அவலங்கள் படலாமோ!
நீர்வளம் நிறையவுண்;டு
நிலவளம் அதுவுமுண்டு
ஏர்வளம் நிறைவுகண்டு
எத்தனையோ வருடமாச்சு!
போர்க்களம் வந்ததனால்
போர்க்கலையும் பெற்றோமே!
போராட்ட வழிநடாத்தல்
பன்முகப் படுத்தப்பட்டு
அரசியல் அரங்கிலே
அந்தஸ்தும் வந்ததே!
உலக நாடனைத்தும்
உன்னிப்பாய் எண்ணிடவே
அலகொன்று வேண்டுமென்ற
ஆதங்கமும் அவசியமானதே!
ஆண்ட பரம்பரை
மீண்டும் ஆளவேண்டும்!
வேண்டி நிற்பதெல்லாம்
விரும்பியொருதனியரசே!
சர்வதேசமே! எங்களை
சாதாரணமாக எடைபோடாதே!
சர்வதேச அரங்கிலே - நாங்களும்
சமபலமாய் நிற்கின்றோம்!
அன்னை தமிழுக்கு - இங்கு
அரசொன்று வேண்டும்! தமிழ்
மண்ணின் ஆட்சிக்கென்று
மகத்தான அரசொன்று
வேண்டும்! வேண்டும்!
எங்களை அங்கீகரிக்க
எங்களை ஆதரிக்க
தனியரசு மலர வேண்டும்!
தன்னாட்சியும் வரவேண்டும்!
ஆக்கம்
சி.கணேசலிங்கம்
ஊழியர்
மருத்துவபீடம்
யாழ்.பல்கலைக்கழகம்