Bharatha Natyam -
Classical Dance
of the Ancient Tamils
இங்கிருந்து எங்கே?
இளைய பத்மநாதன்
at a Bharatha Natya Arangetram in Sydney, Australia
27 Ooctober 2007
- a speech which inspired a Speech which inspired the
2007 Sydney Maveerar
Naal dance presentation
"..அகக்கூத்து,
புறக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் இருவகைக் கூத்துள், இவ்வகையான அகக்
கூத்துகளை ஆடியது இப்போதைக்குப் போதும். இன்றைய தேவை புறக்கூத்து. சங்ககாலப்
புறநானூற்றையும் விஞ்சிய வீர வரலாறு இன்று நிகழ்த்தப்படுகிறது. அந்த
அற்புதங்களை ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்..."
|
[Comment by
tamilnation.org
"Whilst Ilayan Pathmanathan's speech serves to right an
imbalance in some present day Tamil approaches to Bharathanatyam, it
may also be helpful to remind ourselves that
the inside and the outside
always go together. Without an outside, there is no inside - and
without an inside there is no outside. And the relationship between the two is
both intrinsic and dynamic. The reality to which great
art gives expression - an expression which moves and touches us
deeply - lies in the dynamic interplay between the inside and
the outside. The two are not two. |
அகமில்லாமல் புறமில்லை.
புறமில்லாமல் அகமில்லை. அகத்தினுள் புறமும், புறத்தினுள் அகம்தான் உண்மை.
அந்த உண்மைக்கு ஒரு வடிவம் கொடுக்கும் பொழுது, ஒரு
கலைஞரின் படைப்பு எங்கள் உள்ளங்களை ஆழமாகத் தொடுகின்றது.
இரண்டும் இரண்டல்ல" |
"பரதநாட்டியம|"
என்று பெயர் சூட்டப் பெற்ற இந்த செவ்வியல் ஆடலின் நீண்டகால இரசிகர்களில் நானும்
ஒருவன். தமிழகத்தில் இருந்த பத்தாண்டுகளில் மிகத் தரமான ஆடல்வல்லாரின் ஆடல்களை,
அவர்களின் உன்னதமான காலப்பகுதிகளில் பார்க்கும் பேறு கிடைத்தது.
அப்போதெல்லாம் இரு கேள்விகள்
என்னுள்ளே உறுத்தும். அந்தக் கேள்விகளை இத்தருணத்தில் கேட்பது சற்று இசகுபிசகாக
இருக்குமோ, என்ற மனக் கூச்சம் ஏற்படுகிறது.
ஆனால், இதுவே நல்ல தருணம் என்ற ஒரு மன
உந்துதலும் உண்டு. ஆகவே, இந்தக் கேள்விகளை நான் வேறு யாரிடமும் கேட்காமல்,
ஆடலாசிரியர்கள், கலைஞர்கள், இரசிகப் பெருமக்கள் முன்னிலையில், என்னிடமே உரக்கக்
கேட்கிறேன்;.
முதல் கேள்வி: ஏன்? தமிழர்களாகிய நாங்கள் 'பரதநாட்டியம்' என்று சொல்லப்படுகின்ற
இந்த ஆடலை ஏன் ஆடவேண்டும்? ஏன் என்றால், இதில் ஆடப்படும் ஆடல் தமிழர்களுடையது.
பெயர்தான் சற்று மாறிவிட்டது. இந்தப் பெயர் மாற்றம் எல்லாத் துறைகளிலும்
நடந்தேறியுள்ளது. பெயர் மாற்றத்திற்கூடாக உரிமைச் சாசனத்தையும் மாற்றி, வரலாற்றையே
மாற்றிவிட்டார்கள். இன்று தெருக்களின் பெயர்களையும், ஊர்களின் பெயர்களையும் மாற்றி,
புதிய கற்பனை வரலாறுகளைப் படைத்து, பேரின ஆக்கிரமிப்பு செய்வது போல, அன்றும்
நடந்துவிட்டது. ஆடலரங்கிலும் நடந்துவிட்டது. அது நீண்ட வரலாறு.
பரதமுனி என்ற ஒருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்ற நாட்டிய சாஸ்திரம் என்பது,
சமஸ்கிருத நாடகங்களை எழுதுவதற்கும், தயாரித்து அரங்கேற்றுவதற்குமான ஒரு சமஸ்கிருத
நாடக இலக்கணத் தொகை நூல். அன்று நாடகமும் ஆடப்பட்டதால், நடன விபரங்களும் இதில்
அடங்கும். நாடகர்களுக்கும், நர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நூல்.
அவர்களால் கட்டாயம் படிக்கப்படவேண்டிய நூல். இங்கு எழும் கேள்வி: இந்த நாட்டிய
சாஸ்திர நூல்தான் தமிழர் ஆடலின் தோற்றுவாயா?
இறந்துபட்டுப்போயின என நாடகத்தமிழ் இலக்கண நூல்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று உண்டு.
ஆனால், இன்றுவரை அந்த நூல்கள் கிடைக்க வில்லை. தமிழரின் ஆடல் பாடல்கள்பற்றிப்
பெயரளவில்தானும் அறிந்து கொள்வதற்கு, எம்மிடம் எஞ்சியுள்ள தொன் நூல் சிலப்பதிகாரம்
என்னும் காப்பியம் மட்டும்தான்.
இருவகைக் கூத்தி னிலக்கண மறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க வறிந்தாங்
காடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும்
கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை யாடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
என, சிலப்பதிகாரம்
நாடகத்தமிழ்பற்றியும், இசைத்தமிழ்பற்றியும் மேலும் பல கூறும். பாடல் அடிகளை
விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம். தவறான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஆய்வு
செய்து அவற்றை அறிந்து கொள்ளவேண்டும். கூத்த நூல், பஞ்சமரபு என இரு இலக்கண நூல்கள்
உள்ளன. அவற்றிலும் ஆடல்பற்றியும், இசைபற்றியும் பல விளக்கங்களைக் காணலாம்.
சிலப்பதிகாரம் கூறும் ஆடல்வகைகள், நாட்டிய சாஸ்திர நூலில் இல்லை. சிலவற்றில்
ஒற்றுமை இருந்தாலும், இரண்டு நூல்களுக்கும் இடையில் ஆடல் பாடல் பல்லியம்பற்றி
நிறையவே வேறுபாடுகளும் உள்ளன. ~காலவகையினானே| பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.
அவைபற்றி இங்கு விவரிக்கில் விரியும். இச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான ஒன்றை
மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
நாட்டிய சாஸ்திர நூலில், நாடக மாந்தர் அரங்கில் தோன்றுமுன் நிகழ்த்தப்படவேண்டிய
பூர்வரங்கச் சடங்குகளின் விபரங்கள் உள்ளன. ஆனால், ஓரு தலைக்கோலியின் தலை
அரங்கேற்றம்பற்றி இதில் எதுவும் கிடையாது. தலை அரங்கேற்றம்பற்றி சிலப்பதிகாரம்
பரக்கக் கூறும். இந்த அரங்கேற்ற மரபு தமிழருக்கு சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை|
ஊடாகத்தான் தொடர்கிறது. அதைத்தான் சில மாற்றங்களுடன் அரங்கேற்றங்களில் இன்றும்
பார்க்கிறோம்.
சங்ககாலத்தில் விறலியர் ஆடல் என்றும், சிலப்பதிகாரம் கூறும் பலவகைக் கூத்துள்
சாந்திக் கூத்து என்றும், பின்பு சதுர் என்றும், மீண்டும் பரதம் என்றும், அறுபடாத
ஒரு மரபின் தொப்பூழ் கொடித் தொடர்ச்சி இந்தப் பரதக்கூத்து. ~கூவி ஆடல் கூத்தெனப்
படுமே|. பாடி ஆடப்படுகின்ற எல்லாமே தமிழில் கூத்து என்ற பொதுச் சொல்லால்
குறிக்கப்படுவன. பரதமும் கூத்துள் அடங்கும்.
பரதம், பரதர் என்ற ஒருவரால்
இயற்றப்பட்டதாகக் கூறப்படுவதால் பெற்ற பெயரும் அல்ல. பாவ, ராக, தாளம் என்ற தவறான
விளக்கத்தால் கொண்ட பெயரும் அல்ல. விறல், சதுர் என்பவற்றின் தொடர்ச்சி பரதம்.
விறல், சதுர், பர என்பவற்றின் பொருள் உயர்ந்த என்பதாகும். இவைபற்றி விரிவாகப் பேச
இதுவல்ல நேரம். உயர்ந்த ஆடலாகிய பரதத்தின் ஆடல் வகை தமிழ் நாட்டில் தோன்றி, தமிழ்
நாட்டில் வளர்வது. பரதம் தமிழர்களுடைய மரபு. தமிழர்களுடைய அடையாளங்களுள் ஒன்று.
ஆகவே தொடர்ந்து பரதம் ஆடுவோம். தமிழோடிசை பாடி ஆடுவோம்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோம் - என்று
ஆடுவோமே ...
இங்குதான் இரண்டாவது கேள்வி எழுகிறது. என்ன? இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில்; என்ன
ஆடப்போகின்றோம்? ஆடல்களின் ஊடாக என்ன சொல்லப் போகின்றோம்?
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதை
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே
என்று, விடுதலை கிடைக்குமுன்பே விடுதலைக் கீதம் இசைத்தானே
பாரதி, இதை ஆடுவோமே பள்ளு
பாடுவோமே என்றானே. இது ஒரு முன் உதாரணமாக வேண்டாமா? பயிற்சி, பயிற்சி, சிறப்பு,
உச்சம், உன்னதம், ஆகா, ஓகோ, அற்புதம், அழகு - இந்த அழகுணர்வு மட்டும்தான் கலையின்
கடமையா? அறிவூட்டல் என்ற ஒரு கடமையும் உண்டே. இன்றும், அரைத்த மாவையே அரைத்துக்
கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது, இன்றைய வரலாற்றுக் கடமையைச் செய்யப்போகின்றோமா?
பரதத்தின் இன்றைய வரலாற்றுக் கடமை என்ன? கதைகளில் கதைப்புலம் மாறிவிட்டது, கரு
மாறிவிட்டது. குறும்படங்களில் இன்றைய வரலாறு பதியப்படுகிறது. கவிதைகள் புறம்
பாடுகின்றன. மெல்லிசைப் புறப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் இறுவட்டுகளில்
வெளிவந்துவிட்டன. ஆனால், பரதத்திலும் அதற்கான இசையிலும் கடவுள்களின் பெயரால்
சம்போக, விப்ரலம்ப சிருங்கார நிலைகளை ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறோம்!
இன்னும் எவ்வளவு காலத்திற்கு சந்தணம்
அரைப்பதும், தலை முடிப்பதும், பூச்சூடுவதும், முந்தானை திருத்துவதும், கடைவாயில்
பார்ப்பதும்? அகக்கூத்து, புறக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் இருவகைக்
கூத்துள், இவ்வகையான அகக் கூத்துகளை ஆடியது இப்போதைக்குப் போதும். இன்றைய தேவை
புறக்கூத்து. சங்ககாலப் புறநானூற்றையும் விஞ்சிய வீர வரலாறு இன்று
நிகழ்த்தப்படுகிறது. அந்த அற்புதங்களை ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில புற நடனங்கள் ஆடப்படுகின்றன. இல்லை என்று
சொல்லவதற்கில்லை. ஆனால், அவை மெல்லிசை இறுவட்டுப் பாடற் சொற்களுக்குப்
பிடிக்கப்படுகின்ற பதார்த்த (பத+அர்த்த) அபிநயங்களாக அரங்கில் எஞ்சிவிடுகின்றன.
பரதம் வேறு, அதற்கான இசை வேறு. அதன் கனதியே வேறு. அதிலும் இன்று வேண்டப்படுவது அகம்
அல்ல, புறம் - புதிய புறம். அதற்கேற்பப் பரதம் புதிய கோலம் கொள்ள வேண்டும். உடலும்
உள்ளமும் இரண்டறக் கலந்து தகிக்கும் புதிய தாண்டவங்கள் வேண்டும். புதிய பரதர்களிடம்
காலம் வேண்டிநிற்பது இதைத்தான். |