Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > மகா கவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை

Spirituality & the Tamil Nation

மகா கவி பாரதியாரின
விநாயகர் நான்மணிமால


வெண்பா
சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா- அத்தனே!
நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
இன்றிதற்குங் காப்பு நீயே.

கலித்துறை
நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம்
செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;
சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையு முன் படைத்தவனே!
ஐயா, நான் முகப் பிரமா,
யானைமுகனே, வாணிதனைக்
கையாலணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே.

அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு என திதயத் தொளிர்வான்
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;
அமரத் தன்மையு மெய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே.

வெண்பா
உணர்வீர், உணர்வீர் உலகத்தீரிங்குப்
புணர்வீர் அமரருறும் போகம் கணபதியைப்
போதவடி வாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.

கலித்துறை
காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே.

விருத்தம்
எனக்கு வேண்டும் வரங்களை
யிசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல்,
மதியிலிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம் நூறு வய
திவையுந்தர நீகடவாயே.

அகவல்
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி,
அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே.

வெண்பா
களியுற்று நின்று கடவுளே யிங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமை யெலா நன்காற்றித்
தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து.

கலித்துறை
துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

விருத்தம்
தவமே புரியும் வகை யறியேன்,
சலியா துற நெஞ்சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்துந்
தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனைந்த முடி
நாதா, கருணாலயனே, தத்
துவமாகியதோர் பிரணவமே,
அஞ்சேல் என்று சொல்லுதியே.

அகவல்
சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்
பல்லுருவாகிப் படர்ந்த வான் பொருளை,
உள்ளுயிராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய்,
வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை
ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறி, நான் சித்திபெற்றிடவே,
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னா லுனக் கொரு கோயில் புனைவேன்;
மனமே, எனை நீ வாழ்த்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா,
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே.

வெண்பா
புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபை கோன் தந்த வரம்.

கலித்துறை
வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலமை விருப்பமுமையமுங் காய்ந்தெறிந்து
சிரமீது நங்கள் கணபதி தாண்மலர் சேர்தெமக்குத்
தரமேகொல்வானவர் என்றுளத்தேகளிசார்ந் ததுவே

விருத்தம்
சார்ந்து நிற்பா யெனதுளமே,
சலமுங்கரவுஞ் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவானந்தர்
பேற்றை நாடி,நாடோறும்
ஆர்த்த வேதப் பொருள் காட்டும்
ஐயன்,சக்திதலைப்பிள்ளை,
கூர்த்த விடர்கள் போக்கிடு நங்
கோமான் பாதக் குளிர் நிழலே.

அகவல்
நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து
மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத்தோங்க நோக்குறும் விழியும்
மௌன வாயும் வரந்தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவுந்
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
ஏழையர்க் கெல்லாம் மிறங்கும் பிள்ளை
வாழும்பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே

வெண்பா
முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே,
இறையேனும் வாடா யினிமேல் - கறையுண்ட
கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன்
தொண்டருக் குண்டு துணை.

கலித்துறை
துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும்
மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர் அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே, இணையே துனக்குரைப்பேன், கடைவானில் எழுஞ்சுடரே.

விருத்தம்
சுடரே போற்றி, கணத்தேவர்
துரையே போற்றி, எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்,
எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடுமண்டலங்க
ளிசைத்தாய், வாழி யிறைவனே.

அகவல்
இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ளொளியாகி யுலகெலந் திகழும்
பரம் பொருளேயோ! பரம்பொருளேயோ!
ஆதிமூலமே! அனைத்தையுங் காக்கும்
தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ,காளீ, மாமகளேயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே;
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்
வேண்டா தனைத்தையு நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

வெண்பா
கடமை தானேது கரிமமுகனே வையத்
திடநீ யருள் செய்தா யெங்க ளுடைமைகளு
மினங்களு மெல்லா மீந்தாய் நீ யாங்களுனக்
கென்புரிவோம் கைமா றியம்பு.

கலித்துறை
இயம்பு மொழிகள் புகழ் மறை யாகு மெடுத்தவினை
பயன்படும் தேவர்இருபோதும் வந்து பதந்தருவார்
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே.

விருத்தம்
மேன்மைப் படுவாய் மனமே கேள்
விண்ணி னிடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே,
பயத்தா லேதும் பயனில்லை,
யான் முன் னுரைத்தேன் கோடிமுறை
இன்னுங்கோடி முறைசொல்வேன்
ஆன்மாவான கணபதியின்
அருளுண் டச்ச மில்லையே.

அகவல்
அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்;
யார்க்கு மஞ்சோம்,எதற்கு மஞ்சோம்;
எங்கு மஞ்சோம்,எப்பொழுது மஞ்சோம்;
வான முண்டு மாரி யுண்டு,
ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும்
தீயு மண்ணுந் திங்களு மீன்களும்
உடலு மறிவு முயிரு முளவே;
தின்னப்பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டுங் காண நல்லுலகும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்று மிங்குளவாம்; சலித்திடாய், ஏழை
நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ'
தஞ்ச முண்டு, சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.

வெண்பா
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.


கலித்துறை
செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங்காண்
வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்திலுந் துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே.

விருத்தம்
பக்தி யுடையார் காரியத்திற்
பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மை போல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே யனைத்து மெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா,
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

அகவல்
எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமியாள்வார்;
யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல்
செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்;
மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையா ளாசை மகனே.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி
ஆள்வதும் பெரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம்
கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா, போற்றி!
சங்கரன் மகனே தாளினைப் போற்றி.

வெண்பா
போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
ஆற்ற லருளி யடியேனைத் தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
வீணையொலி என்னாவில் விண்டு.

கலித்துறை
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி
யென்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடலொரு கோடி
மேவிடச் செய்குவையே.

விருத்தம்
செய்யா ளினியாள் ஸ்ரீ தேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்
கையா ளெனநின் றடியேன் செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்; புகழ்சேர்வாணியு
மென்னுள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள், சக்தி துணைபுரிவாள்,
பிள்ளாய், நின்னைப் பேசிடிலே.

அகவல்
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை
அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரண மிங்குனக்கே.

வெண்பா
உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி-எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

கலித்துறை
விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

விருத்தம்
வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணி மலரே;
ஆழ்க வுள்ளஞ் சலனமிலா
தகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக;
தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகந்தான் மேவுகவே.

அகவல்
மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்கு மினியஞ்சேல்;
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான்
அபய மிங்களித்தேன்.. நெஞ்சே
நினக்கு நானுரைத்தன நிலை நிறுத்திடவே
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன். மேதினி யழிப்பேன்;
மூடநெஞ்சே, முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னுமொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே;
ஏது நிகழினு 'நமக்கேன்' என்றிரு;
பராசக்தி யுளத்தின்படி யுலக நிகழும்;
நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்'
என்றான் புத்தன்; இறைஞ்சுவோ மவன்பதம்.
இனி யெப்பொழுது முரைத்திடேன். இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
கவலைப்படுதலே கரு நரகம்மா!
கவலையற்றிருத்தலே முக்தி;
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

வெண்பா
செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.

கலித்துறை
இயல்பு தவறி விருப்பம் விளைத லியல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே பயிலு நல்லன்பை யியல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர் முயலு வினகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

விருத்தம்
மொய்க்கும் கவலைப் பகை போக்கி,
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி
யுடலை யிருப்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று,
பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியி·தே.

அகவல்
விதியே வாழி, விநாயகா வாழி,
பதியே வாழி, பரமா வாழி,
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கு மன்னே, போற்றி!
இச்சையுங் கிரியயு ஞானமு மென்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமாள் வாழி,
நிறைவினைச் சேர்க்கு நிர்மலன் வாழி,
கால மூன்றையுங் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம் கண்டீர், பாரிடைமக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரத நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home