"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள்
சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள்
திருவாரூர். வி. கல்யாணசுந்தரனார், 1930
"சைவம் அருணெறி. அருளாளர்களே ! உலகை உற்று நோக்குங்கள்; உலகில் எந்நெறி பெருகி இருக்கிறது; அருணெறியா ? மருணெறியா ? உன்னுங்கள் ! கொலைச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! கொலைக் கருவிச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! அந்தோ ! உள்ளம் நடுங்குகிறது ! இக்கொலைப் பெருக்கிற்குக் காரணம் யாவர் ? சீவகாருண்யத்தை மூலதர்மமாகக் கொண்டுள்ள சைவர்களாகிய நீங்களல்லவா ? சைவர்களே ! உங்கள் சமயம் யாது ? நீரில் மூழ்குவதா ? நித்தம் நித்தம் துணி தோய்ப்பதா ? நீறிடுவதா ? அனுட்டானஞ் செய்வதா ? கோயில் வலம் வருவதா ? அன்று; அன்று. இவை யாவும் புறவொழுக்கங்களாகும். சீவகாருண்ய நெறியே உங்கள் நெறி. அ�தில்லையேல், குளித்தலும் பூசனையும் பிறவும் என்னாம் ? நீங்கள் உங்கள் அருள் தொண்டை ஆற்றி இருப்பின் உலகில் உயிர்க்கொலை நிகழுமா ? புலைப் புசிப்பு நிகழுமா ? உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் மடங்களையுந் தீண்டுமளவு பரவியிருப்பதைக் கவனிக்கின்றீர்களா ? சைவ உலகின் கவலையீனமென்னே ! என்னே ! இனி அருள் உலகம் மறையுமோ என்னும் அச்சம் உண்டாகிறது. உங்கள் ஒற்றுமை இன்மை, உழைப்பின்மை, சித்தாந்த ஞானத்தை உலகுக்கு அறிவுறுத்த முன் வராத 'தன்னலம்' உலகைத் துன்புறுத்துகின்றன. "நஞ்சமயம் தமிழர்க்கே உரித்து - அது தமிழ் நாட்டளவிலே கட்டுப்பட்டுக் கிடத்தல்வேண்டும்" என்னும் குறுகிய நோக்கத்தை உதறித்தள்ளுங்கள்; நானாபக்கங்களிலும் அருணெறியோம்ப முயலுங்கள். பரந்த நோக்குடைய ஒரு
கொள்கையை - மன்பதைக்குரிய ஒரு சமயத்தைப் பிறர்க்குப் பயன்படுத்தாது
அதைச் சிறைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் அறமாமோ ? எத்துணையோ
உயிர்கள் அருளுணர்வு பெறுவதை மறிப்பது மறச்செயலன்றோ ? அதனினும் வன்கண்
- கொடுமை - கொலை - வேறொன்றுண்டோ ? தானத்திற் சிறந்த தானம் எது ? ஞான
தானமன்றோ ? அதையா தடுப்பது ? ஆண்டவன் அருள் அமுதைப் பருகச் 'சேரவாருஞ்
செகத்தீரே' என்று உங்கள் ஆன்றோர் உலகை நோக்கிக் கூவி அழைத்திருப்பதைக்
கருதுங்கள். |