Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > The Tamil Heritage > Tamil Militarism > தமிழர் போரியல்

Tamil Militarism

தமிழர் போரியல்

போர்க் காரணங்கள் - போர் வகைகள் - படை வகைகள் - சிற்றரசரும், படைகளம் - பல்தரப் படைகள் பதினாறு - தமிழ் நாட்டுப் போர்க்களங்கள் சங்க காலம்



போர்க் காரணங்கள்

நாடு பிடிக்கும் வேட்கை போருக்கு ஒரு காரணம்
ஒரு தமிழரசன் மற்ற இரு தமிழரசரை வென்று அனைத்து நாடுகளையும் வெல்ல வேண்டும் எனும் ஆவல்.
ஓர் அரசன் மகளை மன முடிக்க இயலாது ஏமாற்றம் அடைந்தால் அரசர்கள் அப்பெண்ணின் நாட்டின் மீது போர் தொடுத்தனர்.
தனது ஆட்சிக்குப்பட்ட சிற்றரசர்கள் கப்பங்கட்டத் தவறியபோது அரசன் போர் புரிய நேரிட்டது.
தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை அரசர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் போர்கள் மூண்டன.
போர் வகைகள்

ஒரு நாட்டின் மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது "வெட்சித் திணை" எனப்பட்டது. இம்முயற்சியில் ஈடுபட்டவர்கள் 'வெட்சி' மலர்களைச் சூடினர்.

'கால்நடை' கவர்தலை எதிர்த்து நிற்பது "கரந்தைத் திணை" எனப்பட்டது. அவர்கள் 'கரந்தை' மலர் சூடி போரிட்டனர். இது வஞ்சித் திணை எனப்பட்டது.

இப்படையெடுப்பை எதிர்த்து நிற்பது காஞ்சித் திணை என்றும், கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத் திணை என்றும், கோட்டைக்குள் இருந்து எதிர்த்தல் நொச்சித் திணை என்றும், கோட்டைக்கு வெளியே நடைபெறும் போர் 'தும்பைத் திணை' என்றும் அழைக்கப்பட்டது.

போரில் வெற்றி பெறல் "வாகைத் திணை" எனப்படும்.
ஒவ்வொரு திணைச்செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அந்தந்த திணைகளுக்குரிய மலர்களைச் சூடினர்.

இத் திணைப் போர்கள் ஒவ்வொன்றும் பல்வேறு படிநிலைகளைக் கொண்டிருந்தன. அவை "துறை" எனப்பட்டன. இப்போரியல் குறித்து தொல்காப்பியம் - புறத்திணை விரிவாகக் கூறியுள்ளது.

அரசன் அல்லது அவன் நம்பிக்கைக்குரிய படைத்தலைவன் படைகளுக்குத் தலைமை தாங்கி போருக்குச் செல்வது வழக்கம்.

போர் நிகழ்ச்சிகள்:
போருக்குச் செல்லுமுன் அரசர் சிலர் 'சூள் செய்ததை' சிலப்பத்திகாரம் கூறுகிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெருஞ்செழியன், "இப்பகைவரை யான் வெல்லேனாயின், என்னைக் கொடுங்கோல் அரசன்' என்று என் குடிகள் தூற்றுவராக" என்று சூள் உரைத்தான்.

படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர், பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த இழிவுகளைப் புறநானூறு கூறுகிறது. பிற்கால அழிவுகள் கலிங்கத்துப் பரணியிலும் கூறப்பட்டுள்ளன.

"நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே" என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இப்பாடல்கள் "கொற்ற வள்ளை" என்று பெயர்பெறும்.

அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந் நிலம் கழுதைகளால் உழப்படும்; கவடி விதைக்கப்படும். வென்ற அரசர் வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர் அல்லது தங்கள் இலச்சிணையைப் பொறிப்பர்; வென்ற அரசர், தோற்ற அரசர் கடியிலிருந்து தம் காலுக்குரிய கழலைச் செய்து கொள்வர்: வீர கங்கணமும் செய்து கொள்வர். இவை சங்க நூல்களில் காணப்படுகின்றன.

வென்ற அரசன் போர்க்களத்தில் செய்யும் வேள்வி "களவேள்வி" எனப்படும்.

வென்ற அரசன் தோற்ற அரசன் மனைவியருடைய தலைமயிரைக் கடயிறாக்கி அதனைத் தன் தேரை இழுக்கப் பயன்படுத்துவதும் உண்டு. தோற்ற அரசனுடைய பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதிய வைத்தலும் உண்டு. இவை பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, புறநானூறில் உள்ளன.

போர் வீரருள் சிலர் தமது தனிப்போர் முறையால் சிறப்புப் பெறுதல் வண்டு.

அத்தகைய வீரன் போரில் உயிர்விட்டால், அரசனும் பிறரும் அவன் நினைவாக "வீரக்கல்" நட்டு வழிபாடு செய்வர். வீரர் முகத்தில் அல்லது மார்பில் புண்பட்டால் வெட்கப்படுவர் - அவற்றைக் கிழித்து விரைவில் இறந்துபடுவர். இது 'மறக்காஞ்சி' எனப்படும்.

"ஒரு தாய் தன் ஒரே மகனைப் போர்க்கோலம் கொள்ளச் செய்து போருக்கு அனுப்பினாள்; அவளுடைய தந்தை, தமையன்மார், கணவன் ஆகியோர் முன்பு நடைபெற்ற போர்களில் இறந்தனர். இறுதிப் போரில் மகனும் இறந்தான். அவன் உடல் முழுவதும் அம்புகள் தைக்கப் பெற்றதைக் கண்ட தாய் மகிழ்ச்சிக் கண்­ர் விட்டாள்" என்று புறப் பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

போர்க்களத்தில் உயிர்விட்ட வீரனுக்காக அவன் குடும்பத்தாருக்கு நிலங்கள் வழங்குவது உண்டு. அங்ஙனம் வழங்குதல் உதிரப்பட்டி (உதிரம்-இரத்தம்) எனப்படும். சிறப்பு முறையில் தம் ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்கள் ஏனாதி, மாராயன் என்ற பட்டங்களைப் பெற்றனர்.

படை வகைகள்

"படைகுடி கூழ் அமைச்சர் நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"

என்னும் குறளில் படை முதற்கண் கூறப்பட்டிருத்தல் படையின் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும். இந்த உண்மையைத் தமிழரசர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

தொல்காப்பியம் - புறத்திணை இயலில் படைகளைப் பற்றிய விவரங்களும், போர்களைப் பற்றிய விவரங்களும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. படை பல பிரிவுகளாகப் பிரிந்து பல பெயர்களைப் பெற்றிருந்தன. அது அணி, உண்டை, ஒட்டு எனப்பல பெயர்கள் பெற்றன.

முதல் வரிசைப் படைகள் ஆக்கம், தார் (கொடிப்படை), தூசி, நிரை என்றும்,

பின்வரிசை கூழை என்றும் பெயர் பெற்றன. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று படை பல பிரிவுகளாக இருந்தன.

யானைப்படை:

அரசன் ஏறிச் செல்லும் யானை நெற்றிப்பட்டம் உடையது; வேறு பல ஆபரணங்களை உடையது; தந்தத்தில் பூணை உடையது. யானை மீது அரசனது கொடி காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அரசன் யானை மீது அமர்ந்து பகைவர் கோட்டைக் கதவுகளை அதன் கொம்பால் குத்தச் செய்வான்; கோட்டைக் கதவுகள், கணைய மரத்தை யானைகள், முறித்தன.

யானைப் படை வீரர் வேல்களைத் தாங்கிப் போரிட்டனர். பல்லவர்களும் யானைப்படை வைத்திருந்ததை கூரம் பட்டயங்களும், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்களும் உணர்த்துகின்றன.

சௌ-ஜூ-குபிபா என்ற žனா யாத்திரிகர் சோழ மண்டலக் கரையிலிருந்த போர் யானைகளைக் குறிப்பிடும் போது, "அரசாங்கத்திடம் அறுபதாயிரம் போர் யானைகள் இருக்கின்றன. அவற்றின் உயரம் ஏழு அல்லது எட்டு அடி இருக்கும். ஒவ்வொரு யானையின் மீதும் ஓர் அம்பாரி உண்டு. அதில் வீரர் பலர் இருந்து கொண்டே நீண்ட தொலைவு வரையிலும் அம்புகளை எய்வர்; பகைவரை நெருங்கியவுடன் ஈட்டிகளை எறிவர். போரில் வெற்றி பெற்றால், யானைகளுக்குச் சிறப்புப் பயெர் இடப்படும்" என்கிறார்.

ஜார்டன்ஸ் எனும் அயல் நாட்டவர், "ஒரு யானை முப்பது வீரர்களைச் சுமந்து செல்கிறது. ஒரு போர் யானை ஏறத்தாழ 1500 மனிதர்களுக்குச் சமமென்று சொல்லலாம். யானைகளின் தந்தங்களில் கூர்மையான போர்க் கருவிகள் கட்டப்படும். யானைகள் அவற்றைப் பகைவர் மீது பாய்ச்சிப் பெருங் குழப்பத்தை உருவாக்குவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

குதிரைப்படை

சங்ககால அரசர் தேர்களில் காற்றைப் போலக் கருதி லுடத்தக்க குதிரைகள் வைத்திருந்தனர். அரசனது ஆட்சி மன்றக் குழுவினருள் "இவுளி மறவர்" எனும் குதிரைப் படைத் தலைவரும் இருந்துள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டைப் பார்வையிட்ட மார்க்கோ போலோ எனும் வெளிநாட்டவர்

"பாண்டியன் ஆண்டு தோறும் இரண்டாயிரம் குதிரைகளை வாங்கி வந்தான். ஒவ்வொரு கப்பலிலும் பிற பொருள்களோடு குதிரைகளும் வந்தபடி இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.

காலாட்படை

சங்ககாலப் போர்வீரர் மறவர் எனப்பட்டனர். மறம்-வீரம். அவர்கள் வில், வேல், வாள் முதலிய போர்க்கருவிகளைக் கொண்டு போரிட்டனர்.

அவர்கள் பசுக்களைக் கவர்தலும், அகழி தாண்டிக் கோட்டையைப் பிடித்தலும், வெட்ட வெளியில் போரிடல் போன்றவற்றில் பங்குபெற்றனர்.

அவர்கள் முன்படை வீரர், பின்படை வீரர், துணைப்படை வீரர் எனப் பல பெயருடன் இருந்தனர்.

தமிழரசர்கள் முக்கியமான எல்லைப்பகுதிகளில் கோட்டைகளை அமைத்து அங்கு நிலைப்படைகளை வைத்திருந்தனர்.

பிற்காலச் சோழர் காலத்தில் நாட்டுப்படை, கைக்கோளப் பெரும் படை, வேளைக்காரப் படை என பலவாறு இருந்தன.

வேளைக்காரப் படை என்பது, அரசனுக்கு ஆபத்து வரும் வேளையிலும், நாட்டுக்கு ஆபத்து வரும் வேளையிலும் தம் உயிரையும் மதியாமல் போர் புரியும் வீரர்களைக் கொண்டது.

சோழர் காலத்தில் மலையாளப் படை, வடுகர் படை, நாட்டுப்படை முதலியன இருந்தன.

கப்பற்படை

தமிழ்நாடு பல நூற்றாண்டுகளாகக் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது. எனவே மூன்று தமிழரசர்களும் கடற்படையை வைத்திருந்தனர். கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்து ஒரு தீவில் வாழ்ந்து வந்த "கடம்பரை" நெடுஞ்சேரலாதன் வென்றான்; அவ்வாறே செங்குட்டுவனும் வென்றதை "கடல்பிறக்கோட்டிய" செங்குட்டுவன் எனப் பதிற்றுபத்தில் கூறப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் முதலாம் நரசிம்மன் மாமல்லபுரத்திலிருந்து கடற்படையை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பினான். இராசசிம்மன் இலட்சத் தீவுகளை வென்றான்.

பிற்காலச் சோழரிடம் பெரிய கடற்படை இருந்தது. அக்கடற்படையின் துணையால் முதலாம் இராசராசன் இலங்கையையும், முந்நீர்ப்பழந்தீவு, பன்னீராயிரத்தையும் வென்றான்; கங்கை கொண்ட சோழன் மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், நிகோபர்த் தீவுகள் முதலியவற்றை வென்றான்.

படை அமைப்பு

அரசனுடைய ஒவ்வொரு படைக்கும் பெரிய தலைவன் உண்டு. ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு சிறிய தலைவன் இருந்தான். இப்பல படைகளுக்கும் சேர்ந்த அமைப்புக்குப் பெருந்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் சேனாதிபதி, தண்ட நாயக்கன், மகாதண்ட நாயக்கன், தளவாய் எனப் பல காலங்களில் பலவாறு பெயர் பெற்றான். அவன்-சிற்றரசனுக் குரிய தகுதியில் வாழ்ந்தான். முதலாம் இராசேந்திரன் போன்ற இளவரசர்களே சில காலங்களில் அப்பதவிகளில் இருந்தனர். சில சமயங்களில் தண்ட நாயகப் பதவி மட்டும் தனித்து இருந்தது.

பேரரசன் படைகள்

பேரரசன் படைகள் பெருநாட்டின் எல்லைப் புறங்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் கோட்டைகளை அமைத்துக் கொண்டு நிலையாக இருந்து வந்தன. சில படைகள் உள்நாட்டுப் பகுதிகளில் இருந்த கோட்டைகளில் ஆங்காங்கு இருந்தன. சில பகுதிகள் தலைநகரத்தில் இருந்தன. பேரரசனது படைகள் பயிற்சி பெற்ற பண்பட்ட படைகளாகும்.

சிற்றரசரும், படைகளம்

பேரரசுக்குட்பட்ட சிற்றரசர்களிடம் படைகள் இருந்தன. பேரரசனுக்குத் தேவைப்படும் பொழுது சிற்றரசர்கள் தங்கள் படைகளை அனுப்பி உதவ வேண்டும். இவர்களுள் பலர் போர்க்காலத்தில் மட்டும் வீரராக இருப்பர்; எஞ்சிய காலங்களில் பயிர்த்தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பர்.

ஒற்றர் பிரிவு :

ஆட்சி முறையிலும், படைப் பிரிவிலும் குறிப்பிடத்தக்க துறை ஒற்றுத்துறை, ஒற்றர் இலக்கணம் குறித்து திருக்குறளில் தெளிவாக விளக்கப்பட்டது.

தூதுவர் பிரிவு:

ஒற்றரைப் போலவே தூதுவரும் அரசர்களுக்கு இன்றியமையாத உதவியாளர் 'தூதர்' எனப்பட்டனர். தூதுவர்களைப் பற்றியும் திருக்குறளின் பத்துப் பாக்களில் கூறப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் அவ்வையார் எனும் பெண்பாற் புலவர், அதியமானிடமிருந்து காஞ்சி அரசனான தொண்டைமானிடம் அரசியல் தூதுவராகச் சென்றார், தமது பேச்சுத் திறமையால் அதியமானின் போர்த்திறனை விளக்கினார். நடக்க இருந்த போரைத் தடுத்தார் என புறநானூறு தெரிவிக்கிறது.

சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து பத்தினியின் உருவம் பொறிக்கத்தக்க சிலையைக் கொண்டு வருவதற்கு தன் படையுடன் புறப்பட்டு வழியில் நீலகிரியில் தங்கினான். சேரனின் நண்பர், நூற்றுவர் கன்னரால் அனுப்பப்பெற்ற சஞ்சயனைத் தலைவனாகக் கொண்ட தூதுக்குழு அப்பொழுது அவனைக் கண்டது.

"சஞ்சயன், சேரனைப் பணிந்து கண்ணகியின் உருவத்தைப் பொறிக்கத்தரும் கல்லைக்கொண்டு வரவே நீங்கள் யாத்திரை செய்வதாயிருப்பின், அந்த வேலையை நாங்களே செய்வோம். இச்செய்தியை எம் அரசர் சொல்லியனுப்பினார்" என்று சஞ்சயன் தெரிவித்தான்.

செங்குட்டுவனோ," வடநாட்டு மன்னனோ கனகன், விசயன் இருவரும் தமிழரசர் வீரத்தை இழித்துக் கூறினர். அதனையும் மனதில் வைத்தே இச்சேனை வடக்கு நோக்கிச் செல்கிறது. நீ உன் அரசரிடம் சொல்லி நாங்கள் கங்கையாற்றைக் கடக்கும் முறையில் படகுகளை உதவச் செய்க," என்று கூறி அனுப்பினான்.

சங்ககாலத்தில் பாண்டியன் உரோமப் பேரரசனான அகஸ்ட்ஸ் என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பினான்.

பல்லவர் காலத்தில் இராசசிம்ம பல்லவன் பல்லவன் ஒரு தூதுவனை žனத்துக்கு அனுப்பினான்.

முதலாம் இராசராசன் முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் என்ற சோழ மன்னர்கள் žனத்துக்கு தூதுக்குழுவை அனுப்பினர்.

முதற் குலோத்துங்கள் அனுப்பிய தூதுக்குழுவில் 72 பேர் இருந்தனர்.

படைக்கருவிகள்:

சங்க காலத்தில் வேல், வாள், வில், அம்பு முதலியன சிறந்த போர்க்கருவிகளாக இருந்தன.

மதுரைகோட்டை மதில்மீது இருந்த போர்க்கருவிகளாக சிலப்பதிகாரம் கூறுவன:

வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கரியவிரலையுடைய குரங்கு போல் இருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி, கல்லை உமிழும் கவண், காய்ந்து இறைத்தலால் சேர்ந்தாரை வருத்தும் நெய், செம்பை உருக்கும் மிடா, உருக்காய்ச்சி அறிவதற்கு எஃகு பட்டிருக்கும் உலைகள், கல் இட்டு வைக்கும் கூடை, தூண்டில் வடிவாகச் செய்து விடப்பட்டு வைத்து மதில் ஏறும் எதிரிகளைக் கோத்து வலிக்கும் கருவி, கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கலி, ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி வரிசைகள், மதில்மேல் ஏறுவோரை மறியத் தள்ளும் இருப்புக்கவை, கழுக்கோல், அம்புக்கட்டு, ஏவறைகள், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்திரம், மதிலின் உச்சியைப் பிடிப்பவர் கைகளைக் குத்தும் ஊசிப் பொறிகள், பகைவர் மேல் சென்று கண்ணைக் கொத்தும் சிச்சிலிப்பொறி, மதில் உச்சியில் ஏறினர் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பால் செய்து வைத்த பன்றிப் பொறி, மூங்கில் வடிவாகப் பண்ணி அடிப்பதற்கு அமைத்த பொறி, கதவுக்கு வலிமையாக உள் வாயிற்படியில் நிலத்தில் விழவிடும் மரங்கள், கணைய மரம், விட்டேறு, குந்தம், ஈட்டி, நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப் பொறி, தகர்ப் பொளி, ஞாயில் (குருவித்தலை)

விஜய நகரத்தால் காலத்தில் வெடி மருந்து, பீரங்கி பயன்படுத்தப்பட்டன.

(தமிழக ஆட்சி - டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூலிலிருந்து)

கூடுதல் தகவல்களுக்கு:

பண்டைத் தமிழர் போர் நெறி
-புலவர் கா. கோவிந்தன்.

படைக்கருவிகள் குறித்த கூடுதல் தகவல்கள் தமிழர் போர்க்கருவிகள் பகுதியில் இடம்பெறும்.

பல்தரப் படைகள் பதினாறு


1. மூலப் படை = தினம் பயிற்சி செய்து கொண்டு நெடுங்காலமாக நிலைத்துள்ள சேனை.
2. உரிமைப் படை = மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
3. கூலிப் படை = போர்க்காலத்தில் மட்டும் கூலிக்காகப் பணியாற்றும் சேனை.
4. துணைப் படை = நட்புக் காரணமாகப் போரில் உதவும் சேனை.
5. அமயப் படை = அவசர நிலையில் சேர்க்கப்படும் சேனை. இது புதுப்படை எனவும் படும்.
6. வன் படை = நாட்டுப்பற்றால் ஏற்பட்ட மன எழுச்சி காரணமாக அமையும் சேனை.
7. பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
8. பயிற்சியில் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.
9. குழுப்படை = மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
10. தனிப்படை = தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
11. கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
12. தற்கருவிப் படை = தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.
13. ஊர்திப் படை = காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
14. தன் ஊர்திப் படை = தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
15. கானப் படை = வேடர் முதலிய வன மக்களைக் கொண்ட சேனை.
16. பகைவிடு படை = பகைவனை விட்டு வந்து தம்பாற் கூடிய சேனை.


இருநிலைப் படை
1. அகப் படை - Internal Defensive Force
Akhap padai
2. மறப் படை - Expeditionary Force
Marap padai

படை வகை நான்கு
FOUR KINDS OF ARMY
1. காலாள் படை - Infantry
Kalal padai
2. பரிப் படை - Cavalry
Parip padai
3. யானைப் படை - Elephant Brigade
Yanaip padai
4. தேர்ப் படை - Chariots Brigade
Terp padai

படை உறுப்பு ஐந்து
FIVE KINDS OF ARMY
1. தூசி Thusi - Vangurd
2. கூழை Kulai - Rearguard
3. நெற்றி Nerri - Van of an army
4. கை Kai - Wings
5. அணி Ani - Columns

படை வகுப்பு நான்கு
FOUR DIVISIONS OF ARMY
1. அணி - Order of an army
Ani
2. உண்டை - A form of array of an army
Undai
3. ஒட்டு - Division of an army
Ottu
4. யூகம் - Stratagic formation of an army for besieging enemy
Yukam

தமிழ் நாட்டுப் போர்க்களங்கள்
சங்க காலம்


வெண்ணிப் போர்: வெண்ணி, தஞ்சாவூரை அடுத்த ஓர் ஊர். கோயில் வெண்ணி என்ற பெயருடன் இப்பொழுது நிலவுகிறது. சோழ மன்னன் கரிகாலனுக்கும் பதினொரு வேளிர்கள் அல்லது சிற்றரசர்களுக்கும் நிகழ்ந்த போர். கரிகாலன் வென்றன்.

இரண்டாம் வெண்ணிப் போர்: சேர மன்னன் பெருஞ் சேரலாதனுக்கும் கரிகாலனுக்கும் நிகழ்ந்த போர். முதுகில் வேல் பாய்ந்ததால், சேர மன்னன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.

மூன்றாம் வெண்ணிப் போர்: கரிகால் வளவனுக்கும் பாண்டியர்க்கும் நிகழ்ந்த போர். கரிகாலன் இருபெரு வேந்தர்களை வென்றான்.

திருப்போர்ப்புறத்துப் போர்: சோழ மன்னன் பெருவிறல் கிள்ளிக்கும் சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனுக்கும் மூண்ட போர். இருவரும் களத்திலேயே மாண்டனர்.

குராப்பள்ளிப் போர்: இப்பொழுதுள்ள திருவிடைகழி என்னும் ஊராகும். சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கும் சோழன் பெருந் திருமாளவனக்கும் நடந்த போர். சோழ மன்னன் தோற்கடிக்கப்பட்டான்.

மோகூர்ப் போர்: சேர மன்னன் செங்குட்டுவனுக்கும் மோகூர்த் தலைவன் பழையனுக்கும் மூண்ட போர். பழையன் தோற்கடிக்கப்பட்டான்.

கங்கைப் போர்: சேர மன்னன் செங்குட்டுவனுக்கும் வடபுலத்து மன்னர்களான கொங்கர், கலிங்கர், ஆரியர் முதலானவர்களுக்கும் நடந்த போர்.

ஆவூர் முற்றுகை: சோழ மன்னர்கள் மாவளத்தானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஏற்பட்டபோர். நெடுங்கிள்ளி தோற்று விட்டான்

கூடற்பறந்தலைப் போர்: பழையன் மாறனுக்கும் கிள்ளிவளவனுக்கும் நிகழ்ந்த போர்.

தலையாலங்கானத்துப் போர்: தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த நன்னிலம் வட்டத்திலுள்ள ஓர் ஊர். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சேரன், சோழன் மற்றும் திதியன், எழினி, எருமையூரன் ஆகியோர்க்கும் நடந்த போர். பாண்டியன் பெருவெற்றி பெற்றான்.

திருக்கோவலூர்ப் போர்: தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூராகும். சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கும் மலையான் காரிக்கும் நடந்த போர். மலையமான் தோற்கடிக்கப்பட்டான்.

குளமுற்றத்துப் போர்: சேர நாட்டில் இருக்கும் ஊர். கிள்ளிவளவனுக்கும் சேர, பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போர். கிள்ளிவளவன் போரில் இறந்து விட்டான். இன்றுள்ள தருமபுரியாகும்.

தகடூர்ப் போர்: சேர அரசன் பெருஞ்சேரல் இரும்பொறையும், காரியும் ஒரு புறத்திலும் அதியமானும், ஓரியும், பாண்டிய, சோழ அரசர்களும் மற்றொரு புறத்திலும் நின்று போரிட்டனர். சேர அரசன் வெற்றி பெற்றான்.

கானப் பேரையில் போர்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் கானப் பெரெயில் தலைவன் வேங்கை மார்பனுக்கும் நிகழ்ந்த போர். வேங்கை மார்பன் தோற்கடிக்கப்பட்டான்.

கழுமலப் போர்: சோழன் செங்கண்ணானுக்கும் சேரன் கணைக்காலிரும்பொறைக்கும் மூண்ட போர். சேரன் தோற்கடிக்கப்பட்டான். குடவாயில் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான். சிறைக் காவலன் அவமதித்ததால் தன்மான உணர்ச்சி கொண்டு சிறையிலேயே உயிர் விட்டான்.

பல்லவர் காலம்
புள்ளலூர்ப் போர்: சுமார் கி.பி.620. காஞ்சிபுரத்துக்குப் பத்து கல் தொலைவிலுள்ள ஊர். பல்லவ அரசன் மகேந்திர வர்மனுக்கும் சளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் நிகழ்ந்த போர். சளுக்கிய மன்னன் தோற்கடிக்கப்பட்டான்.

மணிமங்கலப் போர்: கி.பி.642. காஞ்சிக்கு இருபது கல் தொலைவிலுள்ள ஓர் ஊர். பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனுக்கும் சளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் நடந்த போர். சளுக்கிய மன்னன் தோற்றோடிப் போனான். நரசிம்மன் வாதாபி வரை படையெடுத்துச் சென்றான். வாதாபியில் வெற்றித் தூண் நிறுவினான்.

பெருவளநல்லூர்ப் போர்: சுமார் கி.பி. 699. திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே, பத்துக்கல் தொலைவிலுள்ள ஊர். முதலாம் பரமேச்சுவர வர்மனுக்கும் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கும் நிகழ்ந்த போர். பல்லவன் வெற்றி பெற்றான்.

நந்திகிராமப் போர்: சுமார் கி.பி.731. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாதன் கோவிலாகும். இரண்டாம் நந்திவர்மன் வல்லவ மல்லனுக்கும் முதலாம் இராசசிம்ம பாண்டியனுக்கும் மூண்ட போர். முதலில் நந்திவர்மன் சிறை வைக்கப்பட்டான். படைத் தலைவன் உதய சந்திரன் முயற்சியால் பாண்டியர் தோற்கடிக்கப்பட்டு, பல்லவன் சிறை மீட்கப்பட்டான்.

பெண்ணாகடப் போர்: சுமார் கி.பி.767. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ் சடையனுக்கும் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் நிகழ்ந்த போர். பல்லவன் முறியடிக்கப்பட்டான்.

விழிஞப் போர்: சுமார் கி.பி.768. திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள ஊர். பராந்தக நெடுஞ்சடையனுக்கும் ஆய்வேளுக்கும் மூண்ட போர். ஆய்வேள் தோற்கடிக்கப்பட்டான்.

தெள்ளாற்றுப் போர்: சுமார் கி.பி.845. வடாற்காடு மாவட்டத்தில் வந்தவாசிக் கருகிலுள்ள ஊர். பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மனுக்கும் பாண்டியன் žமார žவல்லபனுக்கும் ஏற்பட்ட போர். நந்தி வர்மன் வெற்றி பெற்றான்.

அரிசிலாற்றுப் போர்: சுமார் கி.பி.860. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள அரிசிலாறு. பாண்டிய மன்னன் žமார žவல்லபனுக்கும் நிருபதுங்கனுக்கும் நிகழ்ந்த போர். நிருபதுங்கன் வாகை சூடினான்.

திருப்புறம்பியப் போர்: கி.பி. 885. கும்பகோணத்திற்கருகிலுள்ள ஓர் ஊர். பாண்டிய மன்னனாகிய இரண்டாம் வரகுணனுக்கும் பல்லவ மன்னன் நிருபதுங்கன், சோழ மன்னன் ஆதித்தன் ஆகியவர்களுக்கும் நடந்த போர். பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். ஆதித்த சோழனுக்கு தஞ்சையைச் சூழ்ந்த பகுதி பரிசாக அளிக்கப்பட்டது. விஜயாலய சோழனை முதல்வனாகக் கொண்ட சோழப் பேரரசு தலைதூக்க ஆரம்பித்தது.

சோழர் காலம்
வெள்ளூர்ப் போர்: சுமார் கி.பி.910. மதுரைக்கருகிலுள்ள ஓர் ஊர். பாண்டிய மன்னன் மூன்றாம் இராஜசிம்மனுக்கும் சோழ மன்னன் பராந்தகனுக்கும் நிகழ்ந்த போர். பராந்தகன் வெற்றி பெற்றான்.

வல்லம் போர்: சுமார் கி.பி.916. வடாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவலம் என்னும் ஊரேயாம். சோழ மன்னன் பராந்தகனுக்கும் வானகப் பாடியை ஆண்ட வாணனுக்கும் ஏற்பட்ட போர். வாணன் தோற்கடிக்கப்பட்டான்.

தக்கோலப் போர்: கி.பி.949. அரக்கோணத்துக்கு அருகிலுள்ள ஊர். சோழ மன்னன் இராஜாதித்தனுக்கும் இராட்டிர கூட மன்னன் மூன்றாம் கிருட்டினனுக்கும் நடைபெற்ற போர். இராஜாதித்தன், கங்க மன்னன் பூதுகனால் அம்பெய்யப்பட்டு களத்திலே உயிர் துறந்தான்.

இரண்டாம் சேவூர்ப் போர்: சுமார் கி.பி.964. சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும் பாண்டிய அரசன் வீர பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட போர். வீர பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான்.

தேனூர் போர்: கி.பி 1003. பீஜப்பூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊர். சோழ மன்னன் முதலாம் இராசராசனுக்கும் சளுக்கிய மன்னன் சத்தியாசிரயனுக்கும் நடந்த போர். சளுக்கிய மன்னன் தோற்கடிக்கப்பட்டான்.

பூண்டூர்ப் போர்: சுமார் கி.பி.1048. கிருஷ்ணை ஆற்றங்கரையிலுள்ள ஊர். சோழ மன்னன் இராசாதிராசனுக்கும் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனுக்கும் ஏற்பட்ட போர். ஆகவமல்லன் தோற்றோடிப் போனான்.

கொப்பத்துப் பெரும் போர்: கி.பி.1053-54. பம்பாய் மாகாணத்திலுள்ள ஓர் ஊர். சோழ மன்னன் இராசாதிராசனுக்கும் சாளுக்கிய மன்னன் சோமேசுவரனுக்கும் நிகழ்ந்த போர்.

கூடல் சங்கமப் போர்: கி.பி.1061-62. துங்கபத்திரையாற்றுக்கும் கிருஷ்ணை ஆற்றுக்கும் இடையில் உள்ள ஓர் ஊர். இரண்டாம் இராசராச சோழனுக்கும் சளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுக்கும் நிகழ்ந்த போர். சோழ மன்னன் வெற்றி பெற்றான்.

கலிங்கப் போர்: சுமார் கி.பி.1110. முதற் குலோத்துங்க சோழனுக்கும் கலிங்க மன்னன் அனந்தவர்மனுக்கும் ஏற்பட்ட போர். குலோத்துங்க சோழன் வெற்றி வாகை சூடினான்.

திருவேடகப் போர்: சுமார் கி.பி.1172. சோழ மன்னன் இரண்டாம் இராசாதிராசனின் படைத்தளபதி சம்பூவராயனுக்கும் வீரபாண்டியனுக்கும் நிகழ்ந்த போர். பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான்.

நெட்டூர்ப் போர்: சுமார் கி.பி.1182. வீரபாண்டியனுக்கும் மூன்றாம் குலோத்துங்கனுக்கும் ஏற்பட்ட போர். வீரபாண்டியன் தோற்றோடிப் போனான்.

தஞ்சைப் போர்: சுமார் கி.பி. 1217. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் இராசாதிராசனுக்கும் மூண்ட போர். பாண்டியன் வாகை சூடினான். சோழனின் தலைநகர்களான தஞ்சையும், உறையூரும் வெந்தழலுக்கு இரையாயின.

தெள்ளாற்றுப் போர்: சுமார் கி.பி.1226. திருச்சியிலிருந்து 30 கல் தொலைவிலுள்ளது. கோப்பெருஞ் சிங்கனுக்கும் மூன்றாம் இராசராச சோழனுக்கும் மூண்ட போர். சோழ மன்னன் சேந்தமங்கலம் என்னும் இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

மகேந்திர மங்கலப் போர்: சுமார் கி.பி.1230. போசள வீரன் நரசிம்மனுக்கும் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் நிகழ்ந்த போர். பாண்டியன் தோல்வியுற்றான்.

கண்ணனூர்ப் போர்: சுமார் கி.பி.1262. திருச்சிக்கு அருகில் உள்ள ஊர். ஒய்சால மன்னன் சோமேசுவரனுக்கும் முதலாம் சடையவர்மன் சந்தரபாண்டியனுக்கும் நிகழ்ந்த போர். ஒய்சால மன்னன் தோற்கடிக்கப்பட்டான்.ற்கடிக்கப்பட்டான்.

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home