Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் > பட்டுக்கோட்டை பாடல்கள் - பொருளடக்கம் >   அரசியல் அறம் > நாட்டு நலம்இயற்கை > தெய்வம் தேடுதல் > சிறுவர் சீர்திருத்தம் > காதல் சுவைநகைச்சுவை > தத்துவம் > தனிப்பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959

 பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
 சிறுவர் சீர்திருத்தம்

5.1 சின்னப்பயலே சின்னப்பயலே
5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!
5.3 காலம் மாறும்
5.4 அடக்கம் வீரமும்!
5.5
தூங்காதே தம்பி
5.6 கொஞ்சும் குரல்!
5.7 இதய ஒளி!
5.8 உயர்ந்த நினைவு
5.9 பெண்ணரசு!
5.10 உன்னை நம்பு!
5.11 நல்லவனாக
5.12
திருடாதே! பாப்பா திருடாதே!
5.13 துன்பம் வெல்லும் கல்வி!


5.1  சின்னப் பயலே, சின்னப் பயலே

    சின்னப்பயலே சின்னப்பயலே
    சேதி கேளடா (சின்னப்)
    நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
    எண்ணிப் பாரடா-நீ
    எண்ணிப் பாரடா சின்னப்

    ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
    தரும் மகிழ்ச்சி (ஆசை)

    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி-உன்
    நரம்போடுதான் பின்னி வளரணும்
    தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்

    மனிதனாக வாழ்ந்திட வேணும்
    மனதில் வையடா-தம்பி
    மனதில் வையடா (மனிதனாக)
    வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
    வலது கையடா-நீ
    வலது கையடா (வளர்ந்து)

    தனியுடமைக் கொடுமைகள் தீரத்
    தொண்டு செய்யடா-நீ
    தொண்டு செய்யடா! (தனி)
    தானா எல்லாம் மாறும் என்பது
    பழைய பொய்யடா-எல்லாம்
    பழைய பொய்யடா!


    வேப்பமர உச்சியில் நின்னு
    பேயொன்னு ஆடுதுன்னு
    விளையாடப் போதும்போது
    சொல்லி வைப்பாங்க-உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட
    நம்பி விடாதே-நீ
    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே-நீ
    வெம்பி விடாதே!-சின்னப்

    [அரசிளங்குமரி,1957]

5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!

    சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
    சிந்திடும் மலரே ஆராரோ!
    வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே!
    ஆரிரரோ....அன்பே ஆராரோ!

    ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ?
    எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ?
    நாளை உலகம் நல்லோரின் கையில்,
    நாமும் அதில் உய்வோம் உண்மையில்,
    மாடி மனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம்
    வளரும் பிறையே நீ போதும் (வண்ண)

    பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ?
    பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் தூக்கமோ?
    தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
    தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
    குப்பைதனில் வாழும் குண்டுமணிச் சரமே!
    குங்குமச் சிமிழே ஆராரோ.... (வண்ண)


    [பதிபக்தி,1958]

5.3 காலம் மாறும்

    அழாதே பாப்பா அழாதே!
    அழாதே பாப்பா அழாதே!
    அம்மா இருந்தால் பால் தருவாங்க!
    அனாதை அழுதா யார் வருவாங்க? (அழாதே)

    என் தாயுமில்லை உன் தாயுமில்லை
    என் செய்வேன் கண்ணே ஆராரோ!-உன்னை
    அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை
    அன்பை என் கண்ணே ஆராரோ!

    என்ன நினைந்தே நீ ஏங்கி அழுதாயோ
    இன்பத்தேனே ஆராரோ!
    பேசாத நீதி நமக்காகப் பேசும்
    கலங்காதே செல்லப் பாப்பா! (அழாதே)

    மாறாத காலம் உனக்காக மாறும்
    வருந்தாதே செல்லப் பாப்பா!
    தாலாட்டும் மாதா தலைசாய்த்த பின்னே
    துணையேது சின்னப் பாப்பா
    தாங்காத துன்பம் தனில்வாடும் தந்தை
    மனம்நோகும் முன்னே தூங்கம்மா-அவர்
    பெருந்தூக்கம் தூங்கும் வேதாவைப் பார்த்தே
    வருவார் என்கண்ணே தூங்கம்மா!


    [பெற்ற மகனை விற்ற அன்னை,1958]

5.4 அடக்கம் வீரமும்!
பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

பெண்: ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன?...சொல்லு!

சிறுவர்கள்: வள்ளுவன்!

பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும்
பொருளென்ன?...

சிறுவர்கள்: அன்பு!

பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன?...சொல்லு!

சிறுவர்கள்: காந்தித் தாத்தா!

பெண்: ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா

பெண்: அன்பாய்ப் பழகும்
கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன?...

சிறுவர்கள்: மாடு!

பெண்: சொன்னதைச் சொல்லும்
கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன?...

சிறுவர்கள்: கிளி!...

பெண்: கருப்பாய் இருக்கும்
குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன?...

சிறுவன்: காக்கா!...

சிறுமி: இல்லை,குயில்!...

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா...

பெண்: அன்பும் அறமும்
அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்)

பெண்: ஆளும் திறமையும்
வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்!
(ஆனா ஆவன்னா)

[அன்பு எங்கே,1958]

5.5 தூங்காதே தம்பி

    தூங்காதே தம்பி
    தூங்காதே-நீயும்
    சோம்பேறி என்ற பெயர்
    வாங்காதே! (தூங்)

    நீ-தாங்கிய உடையும்
    ஆயுதமும்-பல
    சரித்திரக் கதை சொல்லும்
    சிறைக்கதவும்,
    சக்தியிருந்தால்
    உன்னைக்கண்டு சிரிக்கும்
    சத்திரந்தான் உனக்கு
    இடம் கொடுக்கும் (தூங்)

    நல்ல பொழுதையெல்லாம்
    தூங்கிக் கெடுத்தவர்கள்
    நாட்டைக் கெடுத்ததுடன்
    தானுங்கெட்டார்; சிலர்
    அல்லும் பகலும்
    தெருக்கல்லா யிருந்துவிட்டு
    அதிர்ஷடமில்லையென்று
    அலட்டிக் கொண்டார்
    விழித்துக் கொண்டோரெல்லாம்
    பிழைத்துக்கொண்டார்-உன்போல்
    குறட்டை விட்டோரெல்லாம்
    கோட்டைவிட்டார்! (தூங்)

    போர்ப் படைதனில் தூங்கியவன்
    வெற்றியிழந்தான்-உயர்
    பள்ளியில் தூங்கியவன்
    கல்வியழந்தான்!
    கடைதனில் தூங்கியவன்
    முதல் இழந்தான்-கொண்ட
    கடமையில் தூங்கியவன்
    புகழ் இழந்தான்-இன்னும்
    பொறுப்புள்ள மனிதரின்
    தூக்கத்தினால்-பல
    பொன்னான வேலையெல்லாம்
    தூங்குதப்பா! (தூங்)

    [நாடோடி மன்னன்,1958]

5.6 கொஞ்சும் குரல்!

    குழந்தை வளர்வது அன்பிலே-நல்ல
    குணங்கள் அமைவது பண்பிலே(குழந்தை)

    ஆடிகடந்திடும் ஆசையிலே-அது
    ஓடித் தவழ்வது மண்ணிலே!
    ஆகாயநிலவின் அசைந்தாடும் மலரின்
    அழகையும் காண்பது கண்ணிலே-பெரும்
    ஆனந்தம் அடைவது பண்ணிலே! (குழந்தை)

    கொஞ்சும் குரலும்,பிஞ்சு விரலும்
    குளறிப் பேசும் நிலையும் மாறி
    அஞ்சும் மனமும் நாணமும் வந்து
    ஆடையணிந்திடும் அறிவும் வந்து
    நாளும் நகர்ந்ததுமே ஓடவே-கல்வி
    ஏடும் நகர்ந்திடும் கூடவே! (குழந்தை)
    காலத் தாமரை போலத் தோன்றும்
    நிறமாகியே
    வானத் தாரகை நாணத் தோன்றும்
    முகமாகியே
    வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும்
    வடிவாகியே
    வண்ணத் தங்கம் மங்கத் திகழும்
    வயதாகியே
    அறிவாகியே ஒளியாகியே தௌிவாகியே! (குழந்தை)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

5.7 இதய ஒளி!

    அன்புத் திருமணியே
    அகமலரே!அருள் மணமே!
    அறமே போற்றி!

    புண்பட்டு உழலுகின்ற
    புவிதிருத்த அவதரித்த
    பொருளே போற்றி!

    கண்பெற்றும் பார்வை பெறா
    வம்பர்க்கும் வாழ்வளித்த
    வாழ்வே போற்றி!

    இன்புற்றிட மாந்தர்
    இதயம் ஒளியாக எழுந்த
    புத்தமுதே போற்றி!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

5.8 உயர்ந்த நினைவு

    அமுதமே என் அருமைக் கனியே
    ஆசை பொங்கும் கண்ணே
    அன்பு தவழும் பொன்னே
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    கொடியிலாடும் மலரும் நாணும்
    கலையின் வெள்ளமே...ஓ....
    மடியிலாடி மழலைபேசி மணக்கும்
    மதுரத் தேனே
    மனதைக் கவரும் பொன்னே
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    அழகு வானின் நிலவை ஓடித்
    தழுவ வேண்டுமோ...ஓ...
    உலகம் தூங்கும் இரவில் நீ
    உறங்கிடாததும் ஏனோ?
    உயரும் நினைவு தானோ?
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    [உலகம் சிரிக்கிறது,1959]

5.9 பெண்ணரசு!

    செங்கோல் நிலைக்கவே
    செல்வம் செழிக்கவே
    சிந்தையெல்லாம் மகிழவே,
    மங்கையர் குலக்கொடி
    வந்தே பிறந்தனள்
    வளர்நீதி தழைத் தோங்கவே!

    மகுடம் காக்கவந்த
    மகள் வாழி-குல
    மகள் வாழி-ஒளி
    மங்காத வெண்குடைப்
    புகழ் வாழி!-அன்பு
    நிழல் வாழி! (மகுடம்)

    அகிலம் போற்றும்
    தமிழறம் வாழி!
    அள்ளி வழங்கும்
    மணிக்கரம் வாழி!
    அன்பு நிறைந்திடும்
    மனம் வாழி!-கதிர்
    ஆடி விளைந்திடும்
    நிலம் வாழி!-நீர்
    வளம் வாழி!

    ஆளப் பிறந்தது பெண்ணரசு-அது
    வாழ நினைத்துக் கொண்டாடுவோம்!
    காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்-நன்றி
    கலந்திட கும்மி பாடிடுவோம்!

    துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்-அதைக்
    சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்!
    செல்லக் குமாரி தெரிசனம் காணவே
    தேடித் திரியுது கண்களெல்லாம்!

    கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
    சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
    சிந்துகின்றாளிவள் விழியாலே!
    எத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த
    முத்திரைத் தங்கம் இனி முறைபோலே-நலம்
    பெற்றிடவளர்வாள் பிறைபோலே!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

5.10. உன்னை நம்பு!

    இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
    உந்தன்-வாழ்க்கைதனை உணர்வாய் மகனே-இளம்
    மனதில் வலிமைதனை ஏற்றடா-முக
    வாட்டமதை உழைப்பால் மாற்றடா! (இந்த மாநில)

    துயர்தனைக் கண்டே பயந்து விடாதே
    சோர்வை வென்றாலே துன்பமில்லை
    உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்
    உதவி செய்வார் யாருமில்லை (இந்த மாநில)
    பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும்

    பித்தருமுண்டு-அவர்
    பக்தருமுண்டு
    லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்
    நண்பருமுண்டு-வெறும்
    வம்பருமுண்டு (இந்த மாநில)

    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

5.11 நல்லவனாக

    உன்னைக்கண்டு நானாட
    என்னைக்கண்டு நீயாட
    உல்லாசம் பொங்கும்
    இன்பத் தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து
    ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா-ஆ...
    உறவாடும் நேரமடா

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
    வல்லமை சேர, நல்லவனாக,
    வளர்ந்தால் போதுமடா - ஆ...
    வளர்ந்தாலே போதுமடா

    சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
    முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு?
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு!
    மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
    வேறென்ன வேணுமடா-ஆ...
    வேறென்ன வேணுமடா (உன்னைக்)

    [கல்யாணப் பரிசு,1959]

5.12  திருடாதே! பாப்பா திருடாதே! audio presentaion by Karaikal Raseena also in Video

    திருடாதே! பாப்பா திருடாதே!
    வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே

    சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
    சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
    திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)

    திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
    திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
    சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது
    திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

    கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
    எடுக்கிற அவசியம் இருக்காது
    இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்கிற வேலையும் இருக்காது
    ஒதுக்கிற வேலையும் இருக்காது
    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
    கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
    கீழும் மேலும் புரளாது! (திரு)
    [திருடாதே,1961]

5.13 துன்பம் வெல்லும் கல்வி!

    ஏட்டில் படித்ததோடு
    இருந்து விடாதே!-நீ
    ஏன்படித்தோம் என்பதையும்
    மறந்துவிடாதே (ஏட்டில்)

    நாட்டின் நெறிதவறி
    நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
    நல்லவர்கள் தூற்றும்படி
    வளர்ந்துவிடாதே! நீ (ஏட்டில்)

    மூத்தோர்சொல் வார்த்தைகளை
    மீறக்கூடாது-பண்பு
    முறைகளிலும் மொழிதனிலும்
    மாறக்கூடாது
    மாற்றார் கைப்பொருளை நம்பி
    வாழக்கூடாது-தன்
    மானமில்லாக் கோழையுடன்
    சேரக்கூடாது! நீ
    துன்பத்தை வெல்லும் கல்வி
    கற்றிடவேணும்
    சோம்பலைக் கொல்லும் திறன்
    பெற்றிடவேணும்
    வம்புசெய்யும் குணமிருந்தால்
    விட்டிடவேணும்-அறிவு
    வளர்ச்சியிலே வான்முகட்டைத்
    தொட்டிடவேணும்! நீ (ஏட்டில்)

    வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
    பெருமைவர
    மேதைகள் சொன்னதுபோல்
    விளங்கிடவேணும்
    பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
    மண்ணின் புகழும்
    வற்றாமல் உன்னோடு
    வளர்ந்திடவேணும்! நீ (ஏட்டில்)

    [குமார ராஜா,1961]

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home