Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன்பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? >  புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

TAMIL LANGUAGE & LITERATURE

Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - டிரெடில் (1958)

'டிரிங்... டிரிங்... டிங்...'
- மை பிளேட் சுற்றுகிறது.
மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன.
'டங் - டட்டங்க்!'
- இம்ப்ரஷன்!
'டடக்... டடக்... டடக்... டடக்...'

- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது!

இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்!

அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது?

ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.

கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்!

மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை!

வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..?

'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'

இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.

'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...'

வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...

- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது!

அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.

'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்."

இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார்.

"ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..."

"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.

"ஆவட்டும், சார்!"

- இது அவனது வழக்கமான பதில்.

காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்.

2

ஒரு நாள் -

பிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.

அன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.

'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.

செஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...

- 'சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.

'சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கும்...'

- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.

- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நெளிந்தது.

அவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.

- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்!

'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

- 'சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன!

ஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.

காகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்!

அடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.

- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.

'கி. வினாயகமூர்த்திக்கும் - செளபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

பத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை!

"சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே..."

- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.

"இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க?... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே! அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்!" என்று முதலியார் இரைந்தார்.

"ஆவட்டும், ஸார்" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.

"மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்..."

- இது முதலியாரின் உத்தரவு.

3

மணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.

கரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...

'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்..."
சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.

ஹீம்... பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்?...'

- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! சிரித்துவிட்டான்!

"இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே" என்றார் முதலியார்.

"நீதான் பாரு ஸார்...!" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.

அதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...

- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல?...

தரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

"சிரிப்பு இன்னடா, சிரிப்பு? காலிப்பயலே! வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கெளரவம்' குரல் கொடுத்தது.

"ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது!

 

 

 

4

இரவு மணி ஏழு!

டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.

'டடக்... டடக்... டடக்.. டடக்..'

கால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.

'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்!' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், "இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்!" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.

- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.

"ஸார்...!" என்று பல்லைக் காட்டினான்.

"இன்னாடா, சும்மா சொல்லு!" என்று முதலியார் சிரித்தார்.

"ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்..."

அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்!

'அடடே, கலியாண சமாச்சாரமா?... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்!" என்று முதலியாரும் குதூகலித்தார்.

"அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா..."

"உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி!" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.

வெளியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்!

'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு? - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்!'


------------------

5

பிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது!

'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '

திடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...

- "ஆ!" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.

கால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது!

வினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீது சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.

- வலி குறைந்தது; ஆனால், வலித்தது!

'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே?...'

முக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான்.

டிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை...

- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான்.

நடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது...

வயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல...

"அம்...மா"

- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.

பக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான்.


------------------

6

வினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

அவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்...

- நோய்... வேதனை... அவமானம்!

நாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது.

'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே!.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...'

- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை!


------------------

7

வினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்..

- மனசில் என்ன தோன்றியதோ? - டிரெடிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்...

"அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா!... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே?" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார்.

அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று -

அழுதானா?...

"பயலுக்கு ரொம்ப வெக்கம்!" என்று சிரித்தார் முதலியார்.

அவன் மெளனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்...

-'டடக்... டடக்...'

அவனது கால் பெடலை மிதித்தது.

'டங்... டட்டங்..!'

- இம்ப்ரஷன்...

அச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்!

மிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்...

கி.வினாயகமூர்த்திக்கும் - செளபாக்கியவதி அனுசூயாவுக்கும்...

- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்...

அன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்...

அதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன!..

- "இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்!" என்றார் முதலியார்.

"ஆவட்டும் ஸார்..."

"டடக்... டடக் - டடக்... டடக்..."

- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன!

(எழுதப்பட்ட காலம்: 1958)
நன்றி: ஒரு பிடி சோறு (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: பிப்ரவரி, 1990 -
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home