Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Gnanakoothan


ஞானக்கூத்தன் கவிதைகள்

I Tightened The Screw, English Translation

Gnanakoothan

அன்று வேறு கிழமை


தவளைகள்

தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்
ஆயிரம் வருஷம் போச்சு
போயிற்றா தவளைக் கூச்சல்

மாதத்தில் ஒன்றைக்
கண்ணன்
மட்டுமா பிடிக்கும் என்றான்
தவளைக்கும் பிடித்த மாதம்
ஒன்றுண்டு பன்னிரண்டில்

குளத்திலே இலைத்தண்ணீரில்
குதூகலத் தவளைக கூட்டம்
குதித்திடும் கூச்சல் போடும்
படித்துறை ஏறித்தாவும்

நீர்மட்டத் தளவு தோன்றித்
தாமதித்து நீரில் மீளும்
தவளையின் வயிற்றைப் பார்த்தால்
சந்தனக்கட்டி தோற்கும்

கண்மறைவாக எங்கோ
கதிரவன் தேர்க்கால் சிக்கி
உருள்கிற சப்தம் கேட்டுத்
தவளைகள் போலி செய்யும்

தவளைகள் இரவில் தங்கள்
சுகங்களை உரத்துப் பேச
அனைத்தையும் ஒட்டுக் கேட்டேன்
அப்புறம் உனக்கும் சொல்றேன்
கம்பனைக் கார்காலத்தைச்
சொல்லென்றேன் அவனும் சொன்னான்
ஏனெனில் தவளைப் பேச்சு
அடிபடும் கொஞ்சம் அங்கே

கொல்லையில் க்ராக் க்ராக் க்ராக் கராக்
சாக்கடையிலே மூடியாச்சா?
படுக்கையில் அப்பா கேட்டார்

தூங்கிடும் சமயம்
சோம்பல்
எழுந்து போய் ஒன்று செய்ய

சிறுவர்கள் சொன்னோம். ஆச்சு
ஆதரித்து அம்மா
தானும்
ஆயிற்று என்றபோது
முற்றத்தின் நடுவில் க்ராக் கராக்

தவளைகள் --
நன்றாய்ப் பார்த்தால்
தாவர ஜீவ்யக் காய்கள்
தவளைகள் பிடிக்கும்
இந்தத்
தவளைகள் ருசி அலாதி

சாப்பாட்டுச் சமயத்தில் மனைவியோடு
சச்சரவு பேய்க்கூட்டம் பிள்ளைக் கூட்டம்
கடன் தொல்லை. ஒருபிடுங்கி உத்தியோகம்
எல்லாமும் வெறுப்பேற்ற பிய்த்துக்கொண்டு
படிக்கட்டில் வந்தமர்ந்தான் சுப்பராமன்

வீட்டுவரி கட்டலியா? இல்லையென்றால்
படிக்கட்டை அவன் பெயர்த்துப் போட்டுப் போவான்
இருவர்க்கும் அவமானம்
யாரோ சொல்லத்
தான் திரும்பிப் பார்க்கச்சே தவளைக்குட்டி

கொல்லையிலே என்ன சப்தம் என்றாள் அம்மா
போய்ப்பார்த்து வரச்சொன்னாள். இரவு நேரம்
சரியென்று நான்போனேன் லாந்தர் ஏந்தி
கொல்லையிலே ஒன்றுமில்லை சூனியம் தான்

திரும்பிடக் காலெடுத்து வைத்தபோது
தோள்மீது ஒரு குதிப்பு தள்ளப்பட்டேன்
கிசுகிசுத்துப் பலபேர்கள் சூழ்ந்து கொண்டார்
என்றெண்ணி நான் பார்த்தேன் தவளைக கூட்டம்

ஒவ்வொன்றும் ஆளுயரம் முன்கால் தூக்கிப்
பின்காலில் நின்றிருக்கும் வயிறு மூட்டை
ஒவ்வொன்றும் விரகத்தால் என்னைத் தீண்டி
முத்தமிடக் கூச்சலிட்டு ஓடப்பார்த்Eதன்

ஒரு தவளை பாடிற்று. ஒன்றென் தோளைத்
தட்டிற்று. மற்றொன்று ஆடை நீக்கி
அதிசயமாய்த் தேடிற்று. கூச்சலிட்டேன்
அம்மாவின் காதுகளில் விழவே இல்லை.
 


நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள்நடவாத் தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கெண்டன
ஊர்துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்று\ர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்று|ர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித்தொடராய்க் குறைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
 


யெதிரெதிர் உலகங்கள்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில்
திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று
ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு

தன்னாளைத் திருப்பியதும் விஸ்வாமித்ரன்
கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத்
தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம்
ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று
முனிவர்களில் மாமணியைக கெஞ்சிக் கேட்டார்

சினம்தணிந்தான் தவஞானி, ஆனால் அந்தக்
கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும்
இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான்

அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர
மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து
வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு

மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்
யோசனை

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு

தலையணை

விழுவதால் சேதமில்லை
குலுக்கினால் குற்றமில்லை
மூலைகள் முட்களல்ல
உருவமோர் எளிமை யாகும்

வாழ்க்கையில் மனிதன் கண்டு
பிடித்ததில் சிறந்ததாகும்
தலையணை. அதற்குள் ஒன்றும்
பொறி இயற் சிக்கல் இல்லை

பாயில்லை என்றால் வேண்டாம்
தலையணை ஒன்றைப் போடும்

கொள்ளிடத்து முதலைகள்

ஒன்றிரண்டு நான்கைந்து....
பத்துப் பத்தாய்....
ஒரு நு|றா? ஆயிரமா?
கணக்கில் வாரா....

கொள்ளிடத்தில் மணல்வெளியில்
நடுச்சாமத்தில்
கரைமரங்கள் தூக்கத்தில்
ஆடும் போதில்
ஒன்றிரண்டு நான்கைந்து....
பத்துப் பத்தாய்....
ஒரு நு|றா? ஆயிரமா?
கணக்கில் வாரா....

சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம்

சற்றும்
அமைதி குலையாமல் அவை
பேசிக்கொள்ளும்

சில நொடிக்குள் முடிவெடுத்துக்
கலையும் முன்னே
குறுங்காலால் மணலிலவை
எழுதிப்போட்ட
மரும மொழித் தீர்மானம்
என்ன கூறும்?

 


ஓட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

குரூபி என்றால் மோவாய்
மடிப்புகள் மூன்று கொண்ட
அத்தையும் குரூபி தானே?

அத்தையும் குரூபி என்றோ
ஒருவரும் சொல்வதில்லை
சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது
மற்றவர் அழகில் குற்றம்
பார்ப்பது உலகநீதி
ஓட்டகம் குரூபி என்றால்
அதனுடன் உலகுக் கேதும்
நிரந்தரச் சண்டை உண்டோ?

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க
ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப்போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக்குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு.அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

அத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சென்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
 


தோழர் மோசிகீரனார்

மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதென்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்
 


உயர்திரு பாரதியார்

ஆறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளமபெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப
பாட்டென்று நான்கேட்டேன் உம்மைச்சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக்கூட்டத்தில்
சூடுள்ள வரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல்மயங்கிக் கேட்குமின்றும்
நீர்மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு.

 


இரட்டை நிஜங்கள்

குலத்துக்குத் தெய்வம் வேறாய்க்
கொள்கிற தமிழர் தங்கள்
வழிகாட்டித் தலைவரென்று
பற்பல பேரைச் சொன்னார்

என்றாலும் மனசுக்குள்ளே
இன்னொருவர் இருப்பாரென்று
ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும்
தலைவர்கள யார் யாரென்று

இருந்தவர் இரண்டு பேர்கள்

அவர்களின் அடையாளங்கள்

நடப்பவர் பார்க்க மாட்டார்
பார்ப்பவர் நடக்க மாட்டார்
 


சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர் கமலம சைக்கிள பழகினாள்

தம்பியைக் கொண்டுபோய்ப்
பள்ளியியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒருதரம்
மிளகுக்காக ஒருதரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒருதரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழங்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப்படிக்குத் தெருவில் விட்டாள்

 


பவழமல்லி

கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா, மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதைமுடித்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடீ?
பரிசில் வாழ்க்கை

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல்பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்கவேண்டும்

புகையூதி ரயில்வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய்திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார்தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல்முதலாய்க் கேட்டதனால் திணறிப்போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வனம்திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச்சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில்வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம்புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறுகூட்டம். தலைமையேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்
அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்.

கும்மியடி தமிழ் நாடு முழுதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி.......
காணிக்கை கொண்டு வாருங்கடி கு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சனைப் பாருங்கடி - மவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி ...
சென்மம் எடுத்தது தீருதடி - இந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி.
ழழழ
விட்டுப்போன நரி

குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ

மேற்படிக்
குரலைக் கேட்டார்
மாதொரு
பாகர். குற்றம்
ஏற்பட
வியந்தார். தேவி
ஏளனம்
செய்தாள் சற்று.

வாதவூரடிகட்காக
நரிகளைத் தேர்ந்தபோது
நீதியோ என்னை மட்டும்
விலக்கிய செய்கை சாமீ

திருவருட்
திட்டம் பொய்த்த
தற்கொரு
ஊளைச் சான்றாம்
நரி எதிர்
உதித்துக் கீற்று
நிலாத்திகழ்
ஈசர் சொன்னார்

நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா.

தொழுநோயாளிகள்

ஐயா உம் விரல்கள் மூன்று
கிடந்தன. பெற்றுக்கொள்ளும்
அம்மணி உனதும் கூட

கால்களின் செதில்கள் அங்கே
கிடப்பதைக் கண்டேன், உங்கள்
உடம்பினை ஏனிவ்வாறு
உதிர்க்கிறீர் தெருவிலெங்கும்?

கங்கையில் விருப்பைக் கொஞ்சம்
கைவிடச் சொன்ன நூல்கள்
கேணியில் உடம்பைக் கொஞ்சம்
கைவிடச் சொன்னதுண்டா?

வெள்ளிக்கு முதல்நாள் ஊரை
வலம் வரும் தங்கட்கின்னும்
உடைமையில் கவனம் வேண்டும்

அம்மணி தங்கள் மேனி
சிந்தினால்
யாருக்காகும்?
 


நாள்

கொட்டிக் கொண்டு போயேன்டா
தட்டு கொண்டு வாயேன்மா
தொட்டுக் கொள்ளப் போடேன்மா
கட்டை விரலைத் தொட்டுக்கொள்
பள்ளிக் கூடம் போறேன்மா
பாதை பார்த்துப் போய் வாடா
கையில் கட்டித் தருவாயா
கையைக் கனக்கும் வேண்டாம்டா
மத்தியானம் வருவேன்மா
வெயிலில் வெந்து சாகாதே
மத்தியானம் வருவேன் நான்
பத்துப்பானை தேய்ப்பதற்கா?


அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப்போச்சு நாயொன்று

பதுங்கிச்சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அதுவிலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில் -
பதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர்மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்

 


விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சில பேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உறை அனுப்பும்
வயிற்றில் உன்னை அடிப்பேனென்று
இந்தப் பேச்சை அதுகேட்டால்.

 


எழுதக் குவிந்த கைபோல
இருக்கும் குன்றில் ஒருபாதை
மூட்டுதோறும் நீர்க்கசிவு
மணிக்கட்டோரம் விளைசகதி
சகதிப் பக்கம் ஒரு சப்தம்
உளியின் சப்தம் செவியில் விழும்
தாவும் அணிலின் முதுகின் மேல்
இராமபிரானின் கைவிரல்கள்
இடைவானத்தில் துணையாகும்
உளியின் சப்தம் மலை முழைஞ்சில்
உதிக்கும் போது ஓராண்டு
கேட்கும் போது நூறாண்டு.

 


1.
ஒருவனைக் கனவில் கண்டேன்
உதடுகள் பற்கள் கண்கள்
தலைமயிர் நகங்கள் கைகால்
அனைத்துமே மனிதன் போல
இருந்திடும் அவனைக் கண்டேன்
கனவிலும் மனிதன் போலத்
தோன்றினான் மனிதன்தானா?

2.
சூத்திரர் தெருக்களென்று
சொல்லுவார்
ஏற்றாற் போல
மாட்டுத் தோல் உலரும்
ஆடு
கோழிகள் நாய்கள் வாழும்

முருங்கைகள்
பிள்ளை வாதக்
கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு
தெரிந்திடும் விட்டு விட்டுக்
குடிசையின் வாசற்பக்கம்

பசுபதி
ஆறாம் பாரம்
என்கிற சாக்குக் கட்டி
எழுத்துக்கள் தெரியும் குச்சு
இடச்சாரி
பெரிய குச்சு

மல்லிகை, முல்லை
சாணிமுட்டைகள்
முருங்கைக் காயகள்
விற்கிற பழக்கமுள்ள
வீடுகள் ஆங்காங்குண்டு

தனிப்பட வரமாட்டாமல்
கடவுளின் துணையில்
அங்கே
வருகிறான் பார்ப்பான்
சாமி
வலம்வர வேதம்பாடி

 


நேற்று யாரும் வரவில்லை

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை
வைத்தியர் சொற்படி ஒருநாள்
கவனம் கருதி மற்றும் ஒரு நாள்

உடல்நலம் கேட்டு யாரும் வருவார்
திரும்பும்போது
தயவு செய்தெனக்காகச்
சந்துவிடாமல் கதவை மூடெனக்
கேட்கணும்

பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல்விளக்காகத்
தெரிந்திடும் நீல வானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது.

 


தேரோட்டம்

காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
சூரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம்புடிச்சு
அய்யன் தேரு நின்னுடுச்சி
கற்கண்டு வாழெ வெச்சு
விருட்சிப் பூவ வெச்சுப்
பொங்கல் மணக்க வெச்சு
வடக்கன் சாமிகிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம்புடிச்சு
அய்யன் தேரு நின்னுடுச்சி
இளநீ சீவி வெச்சு
இரும்பாக் கரும்ப வெச்சு
குளிராப் பால வெச்சு
குமரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே

காலோயும் அந்தியிலே
கண்தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சு
அய்யன் தேரு நின்னுடிச்சு
பட்டிப்பூ

தையற்காரன் புறக்கணித்த - புது
வெள்ளைத் துணியின் குப்பைகள் போல்
பட்டிப் பூவின் வெண்சாதி =- அதைப்
பார்த்தால் மனசு நெக்குவிடும்

காய்ச்சல் நீங்கிக் கண்விழிக்கும் - ஒரு
கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய்
பட்டிப் பூவின் கருநீலம்-அந்தப்
படுகை எங்கும் மிகவாகும்

எங்கும் வளரும் பட்டிப்பூ-தன்
குடும்பத்தோடும் சூழ்ந்திருக்கும்
செவியில் மீதில் ரோமம்போல்=அது
தனித்தும் வளரும் இப்போது

முலைகள் அசையத் தான் அசையும் -ஒரு
புடவைத் தலைப்பை நினைவூட்டிப்
பட்டிப்பூக்கள் குலை அசையும - அதன்
பக்கம் எங்கும் புல்பூமி

நாளை மறுநாள் ரயிலேறி - என்
வீட்டை அடைந்து பைவீசி
படுக்கைப் பக்கம் நான்போவேன் -என்
பட்டிப் பூவைப் பார்த்துவர

காலவழுவமைதி

தலைவரார்களெங்
தமிழ்ப்பெருமக்களேங்.. வணக்கொம்

தொண்ணூறாம் வாட்டத்தில் பாகம் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த்தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க காண்கின்றோங் நாம்

வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ

வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யென்ற
பொற நான்ற்றுத் தாயெய்நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொணக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவ்ரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்

இன்னுமிரு வர்பேச இருக்கிறார்கள்
அமைதி..... அமைதி ....

 உள்ளோட்டம்

பூமியின் பிச்சைக்கார
முகத்திலே ஒரு வெள்ளோட்டம்
வயல்களில் தண்ணீரோட்டம்
விளையாட்டுப் பிள்ளை ஓட்டம்

புளியன் பூ வைத்தாயிற்று
காவிப்பல் தெரிந்தாற் போல
கிளைகளில் அக்கா பட்சி
கூவின வெட்கத்தோடு

தானொரு முதலை போலப்
புதுப்புனல் ஆற்றில் ஓடும்
ஊர்க்கூட்டம் கரையில் ஓட

போகிறார் தலைக்குடத்தில்
ஆற்றுநீர் துள்ளத்துள்ள
நீர்மொண்ட குருக்கள் வர்ணக்
குடையின்கீழ் ஈரத்தோடு

கச்Eசரி ஆசை உள்ள
கோயிலின் மேளக்காரன்
உற்சாகம் ஒன்றில்லாமல்
தொடர்கிறான் ஊதிக்கொண்டு

 


உதைவாங்கி அழும் குழந்தைக்கு

என்ன கேட்டாய்?
உன்வீட்டில்
என்ன செய்தாய்?
ஏதெடுத்து
என்ன பார்த்தாய்?
எதைக் கிழித்து
வாங்கிக் கொண்டாய்
அடி உதைகள்?

கெட்டுப்போன
பிள்ளைக்கு
வெளியில் கிடைக்கும்
அடிஉதைகள்
கெட்டுப்போகாப்
பிள்ளைக்கு
வீட்டில் கிடைக்கும்
முன்கூட்டி

அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற் போல்
சின்னக்கண்ணா
அலட்டாதே.

 


யோஜனை

அம்மிக்கல் குழவிக்கல்
செதுக்கித் தள்ளும்
ஒரு சிற்பக் கூடத்தில்
மைல்கல் ஒன்று
வான் பார்த்துக் காட்டிற்று
நாற்ப தென்று.
ழழழ

ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே

செங்கமலம் குளிச்சுப்புட்டு
அங்கிருந்தாளாம்

ஈரச்சேலை கொம்பில் கட்டி
காத்திருந்தாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்
அங்கே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்
எந்திரிச்சாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்
கிட்டே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்
சிரிச்சிக்கிட்டாளாம்

ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே

போராட்டம்

கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்க்
கதவுமுன் குவித்துப்போட்டு

காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக

காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்

உள் உலகங்கள்

வயல்களைக் குளங்களென்று
நினைத்திடும் மீனும் நண்டும்
குசலங்கள் கேட்டுக் கொள்ளும்

கொய்கிற அரிவாளுக்குக்
களைவேறு கதிர்வேறில்லை
என்கிற அறிவை இன்னும்
வயல்களோ அடையவில்லை

மீனுடன் நண்டும் சேறும்
நாற்றிசைக் கரையும் பார்த்துக்
குளத்திலே இருப்பதாகத்
தண்ணீரும் சலனம் கொள்ளும்

பறைக்குடிப் பெண்கள் போல
வயல்களில் களைத்துத் தோன்றும்
பெருவிரல் அனைய பூக்கள்
மலர்த்து சஸ்பேனியாக்கள்

படுத்தவை கனவில் மூழ்கி
நிற்பவையாகி எங்கும்
எருமைகள். அவற்றின்மீது
பறவைகள் சவாரி செய்யும்
சரி
மனை திரும்பும் எருமைமேலே
எவ்விடம் திரும்பும் காக்கை?

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

மாணவர்காள் மனிதர்களின் எலும்புக்கூட்டைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்

மன்னார்சாமி
ஆணியிலே அதைப்பொருத்து. பயப்படாமல்
ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்
ஏணியைப்போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்
குறைவில்லை

இது கபாலம்
மார்புக்கூடு...
போணிசெய்த பெருங்கைகள்...
கைகால் மூட்டு
பூறான்போல் முதுகெலும்பு .. சிரிக்கும் பற்கள்...

சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்
புதுசு புதுசாய்ப் பார்ப்பான். இல்லையாடா?

மாணவர்கள் சிரித்தார்கள விலாவெடிக்க
ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக்காட்டி
அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு.

 

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக்கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் ஸார்.

 


பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

 


வில்லைத்தகர எழுத்துகளால்
வெட்டுப்பட்ட விளம்பரம் போல்
நிலத்தின் மீது வயல் பரப்பு

விடிந்த நாளின் முதல் சிகரெட்
நெருப்பைத் தவிர மற்றெல்லாம்
பச்சை பொலியும் செழும்பூமி

தோப்புப் பனைகள் தொலைவாக
தாழைப்புதர்கள் உரசாமல்
நடக்கும் அவரைத் தெரிகிறதா?

கையில் கொஞ்சம் நிலமுண்டு
ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல
உமக்கும் இருந்தால் தஞ்சையிலே
நீரும் நடப்பீர் அது போல

மஹான் காந்தி மஹான்

எழுந்ததும் கனைத்தார் மெல்ல
சொற்பொழிவாற்றலானார்

வழுக்கையைச் சொறிந்தவாறு
வாழ்க நீ எம்மான் என்றார்

மேசையின் விரிப்பைச் சுண்டி
வையத்து நாட்டில் என்றார்

வேட்டியை இறுக்கிக் கொண்டு
எவிடுதலை தவறிஎ என்றார்.

பெண்களை நோட்டம் விட்டு
பாழ் பட்டு நின்ற என்றார்

புறப்பட்டு நான் போகச்சே
பாரத தேசம்எ என்றார்

வாழ்விக்க வந்த என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள.

1.
சாத்துயர் கேட்டுப் போகும்
சுற்றத்தார் சாயல் காட்டிக்
கழன்றது ரத்த வெள்ளம்
குத்துண்ட விலாப்புறத்தில்

அவர் பெயர் ஒன்றினோடு
என்பெயர் ஒன்றிப்போச்சாம்
படுக்கையில் தூங்கும் என்னைக்
காந்தர்வர் கொன்று போனார்

பெயரையே சொல்லிப் பார்த்துத்
திகைக்கிறேன் எனக்கென் பேரே
எப்படித் துரோகமாச்சு.

2.
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்.

ரத்தக்களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்

3.
மூட்டைகள்
அனுப்பக் காத்த
மூட்டைகள்
அவற்றைப் போலப்
பயணிகள்
தூங்கினார்கள்
ஆடைக்குள்
சுருட்டிக்கொண்டு

காரணம்
இல்லாமல் நெஞ்சம்
உணர்த்திய பயத்தைப் போலத்
தொலைவிலே
இரவினோடே
ரயில் முகம்
வைர ஊசி

கிணறுகள்
கால்முளைத்த
கிணறுகள்
இங்குமங்கும்
மூத்திரம்
நின்று பெய்யும்
வியாபாரிப்
பெண்ணைப் போல

ஏணியை
நிமிர்த்துப் போட்டு
ஏறுவார்
அன்றைக் குண்டு
ஏணியைப்
படுக்கப்போட்டு
ஏறுவார்
இன்றைக்குண்டு

4
விழிக்கிறான்
முழங்காலொன்று
காணலை

பொசுக்கப்பட்டு
சதைகளும் எலும்புமாகக்
கிடப்பதைத்
தெரிந்து கொண்டான்.

வைக்கிறான்
கூறுகட்டி

அறுவையில்
எடுத்த ஈரல்ப்
பகலவன்
காய்வதற்குள்
பண்டமும்
விற்றுப்போச்சு

வயிற்றடி
ரோமக்காட்டில்
வருவாயைப்
பொத்தி வைத்துப்
படுக்கிறான்
கனவில் யாரோ
பாக்கியும்
எரிக்கிறார்கள்.

5.
பெயர் சொல்லிக் கூப்பிட்டான்
புரண்டு கூடப்
படுக்கவில்லை அஃதொன்றும்
கொள்ளிக கட்டை
கொண்டு வந்து ஒவ்வொன்றின்
காலைச் சுட்டான்

ஒவ்வொன்றாய் எழுந்திருந்து
என்ன என்ன
அப்பாவை எழுப்பென்றாள்
பந்தம் தந்தாள்

பந்தத்தால் அப்பாவின்
தாடி மீசை
எல்லாமும் கொளுத்திவிடப்
புரண்டெழுந்தான்
ஆயிற்றா உட்கார
லாமா என்றான்

அப்பாவும் பிள்ளைகளும்
உட்கார்ந்தார்கள்
உடுப்புகளைப் புறம்போக்கிப்
படுத்துக்கொண்டாள்

வள்ளிக்கிழங்கின்
பதமாக
வெந்து போன
அவள் உடம்பைப்
பிட்டுத் தின்னத்
தொடங்கிற்று
ஒவ்வொன்றாக
அவையெல்லாம்

எல்லாக் கையும்
முலைகளுக்குப்
போட்டிப் போட்டுச்
சண்டையிட
அப்பன் கொஞ்சம்
கீழ்ப்புறத்தில்
கிள்ளித் தின்றான்
அவ்வப்போ

6.
முகக்கண்கள் அழுதால் கண்ணீர்
விடுகிறான் என்னும் நீங்கள்
மயிர்க்கண்கள் அழுதால் மட்டும்
வியர்க்கிறான் என்று சொல்வீர்

வேலைசெய் என்னும் உங்கள்
வார்தைகள் குசுப்போல் நாறக்
கழிவறை உலகம் செய்தீர்

குருடுகள் காலு\னங்கள்
பித்துக்கள் பிறக்கும் போதே
வேலையைத் தவிர்க்கும் மார்க்கம்
தெரிந்ததால் பிழைத்துக் கொண்டார்

நானொரு குருடனாக
நானொரு முடவனாக
நானொரு பித்தனாகப்
பிறக்காமல் போய்விட்டேனே.

7.
உங்கள் எதிரே நான்வரும் பொழுது
என்னைப் பிடித்துக் கொல்லப் பார்க்கிறீர்
எப்படி உயிர்க்கலாம் எங்கள் காற்றை நீ?

காற்றை உண்டு வாழ்கிற வழக்கம்
உள்ளவன் இல்லை நான்எனக்கூறி
மூக்கில்லாத முகத்துக்குங்கள்
பார்வையைக் கொணரப் பீயாய்உணர்கிறீர்

நீங்கள் என்னை விட்டுப் போனதும்
ஒளித்து வைத்த மூக்கை எடுத்துப்
பொருத்திக்கொண்டு
உயிர்க்கத்தொடங்கினேன்
தொலைவில் நீங்கள் குலைகிறீர்
காற்றில்லாத பலு\னைப்போல

8

தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்
தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?
தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளு
தூக்கிக்காட்றேன் தெரியுதா பாரு

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home