Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > கங்கை அமரன்

கங்கை அமரன்

in the Ananda Vikatan, 29 September 2002

காவடிச் சிந்தில் பாட்டெழுத வேண்டுமா... 'கரகாட்டக்காரன்' படம் இயக்க வேண்டுமா... இசையமைக்க வேண்டுமா... இப்படி எந்தப் பந்தை எறிந்தாலும் எதிர்த்தடிக்கிற ஒரு சகலகலா வல்லவர் கங்கை அமரன். செல்லமாக ஜாலிஅமரன்.

இப்போது பாண்டிச்சேரி அரவிந்த அன்னையின் பக்தராகிக் கண்களில் சாந்தம் தவழ, ஆன்மீகம் பேசுகிறார். அடித்துத் துவைத்து அலசிப் போட்ட அங்கவஸ்திரம் மாதிரியிருக்கிற தாடியைக் கோதிக்கொண்டு 'என்னம்மா, என்னம்மா' என்று அன்பு பீறிடப் பழகும் அமரன் எல்லார்க்கும் இனியர். மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து...

''ஏற்கெனவே அண்ணன் பாவலர் வரதராஜன் குழுவில் பாடியதும் பாட்டுக்கள் எழுதியதுமான அனுபவம் இருந்தது. தவிர இளையராஜா, நான், பாரதி ராஜா எல்லாரும் நண்பர்கள். பாரதிராஜாவின் முதல் படமான 'பதினாறு வயதினிலே' தான் என் பாட்டுப் பயணத்துக்கும் முதல் தடம்.

செந்தூரப் பூவே
செந்தூரப் பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம்
சொல்லாயோ...

இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது.

ஆண்-பெண் உறவை இலைமறைகாயாக எழுதவேண்டும் என்பார்கள். சிறுவர்களுக்குத் தெரியாத அர்த்தம், வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும். அந்தப் பாணியில் நான் எழுதிய பாடல் 'பூந்தோட்டக் காவல்காரன்' படத்தில் இடம்பெற்ற,

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா
செந்நிற மேனியில் என்மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா...
பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த
யாகம்
கண்மூடிப் பார்த்தேன்
எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும்
என்னும்...

என்ற பாடல். இல்லற வாழ்வின் அற்புதங்களில் ஒன்று பிள்ளைப்பேறு. இன்றும் என் நினைவலைகளில் நின்றாடுகிற ஒரு பாட்டு அது.

அண்ணன்களோடு ஊர் ஊராகச் சுற்றி, ஏழை எளிய மக்களுக்காகப் பாட்டுகள் பாடி, அவர்களுடன் கலந்து பழகிக் கற்றுக் கொண்டதுதான் என் தமிழ். அதைப் புதிது புதிதாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற ஆசைதான் 'புதிய வார்ப்புகள்' படத்தில் வந்த -

தம்தன தம்தன தாளம் வரும் - புது
ராகம் வரும் - அதில்
சந்தன மல்லிகை வாசம் வரும்
என்கிற பாட்டு. முடியவே முடியாமல் தொடரும் அந்த மெட்டு. ஒரு சவாலாக அண்ணன் போட்ட அந்த மெட்டுக்குக் கடவுள் எனக்குத் தந்த பாட்டு அது.

அந்தக் காலத்தில் எட்டிப்பிடிக்க முடியாத உயரமாக, கனவுச் சிகரமாக இருந்த கவியரசு கண்ணதாசன் பாணியில் எழுத வேண்டும் என்று முடிவு செய்தே எழுதிய பாட்டு ஒன்று இருக்கிறது.

சீர் கொண்டுவா வெண்மேகமே -
இது
இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும்
கோலம்...
ஒரு சந்தர்ப்பத்தில் வாலியண்ணன் என்னிடம், 'அமரா, நீ எழுதின ஒரு வார்த்தையை நான் எடுத்துக்கி றேண்டா' என்றார். பெரிய மகிழ்ச்சியோடு 'சரி' என்றேன். அப்போது அவர் எழுதி 'மௌன ராகம்' படத்தின் 'நிலாவே வா' பாடலில் வருகிற,

எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
என்கிற வரி, அதற்கு முன்னதாக நான் 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் எழுதினதொரு எண்ணம்தான் -

நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதைதான் எழுதுவேன்
காற்றில் நானே...
என்று எழுதியிருந்தேன்.

அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதியது போல ஒரு பாட்டு வேண்டும் என்றதும் நான் அவரை தியானித்து எழுதியதுதான் 'கேளடி கண்மணி' படத்தில் எஸ்.பி.பி. பாடிய,

'மண்ணில் இந்தக் காதல் இன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவை இன்றி
ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில்
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும்
மானுடா...'

என்கிற பாட்டு.

மேலோட்டமான அர்த்தம் தவிர, பாட்டுக்குள் இன்னொரு அர்த்தமும் இருந்துவிட்டால், மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 'பொண்ணு ஊருக்குப் புதுசு' பட பூஜை. இயக்குநர் செல்வராஜுக்கு அது முதல் படம். பூஜை அன்றே ஒரு பாடல் பதிவு செய்கிறார்கள். 'இன்னிக்கு நான் டைரக்டராகி இருக்கேன். விரைவிலேயே நம்பர் ஒன் ஆயிடுவேன். நீங்க எல்லாம் எனக்கு உதவி செய்யணும். தொந்தரவு செய்யக் கூடாது' என்றெல்லாம் இயக்குநர் செல்வராஜையே மனதில் வைத்து எழுதினேன். கதாபாத்திரத்துக்கும் அது பொருத்தமாகவே இருக்கும். அந்தப் பாட்டுதான்,

ஓரம் போ... ஓரம் போ...
ருக்குமணி வண்டி வருது..
ரோட்டுல எல்லாம் மேடு ரொம்ப
இருக்கு
ஏத்தி விடுங்க கொஞ்சம்
தூக்கிவிடுங்க
ஏறினபின்னே எனக்குப் பின்னே
நீங்க வரவேணும்
பலமாகத் தள்ளாதீங்க
தள்ளாதீங்க தள்ளாதீங்க
குறுக்காலே போகாதீங்க
போகாதீங்க போகாதீங்க...

இப்படி எழுதுவதில் சமயங்களில் சிக்கல் வந்துவிடுவதும் உண்டு. 'கோழி கூவுது' படத்துக்காக,

அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்ப ரொம்பக்
கெட்டுப்போச்சுண்ணே...
ஒண்ணரை அணா காய்கறியை
ஒண்ணரை ரூபா ஆக்கிப்புட்டாங்க
சொல்லுறதெல்லாம்
சொல்லிப்புட்டேன் நான்
செய்யிறதைச் செஞ்சுப்புடுங்க!
என்று எழுதியிருந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் இந்தப் பாட்டைக் கேட்டு ரொம்பக் கோபமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பிற்பாடு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது, 'என்னப்பா, இப்பிடி எழுதிட்டே? சரி இனி எதை எழுதினாலும் கவனித்து எழுது' என்று சொல்லி மன்னித்து விட்டு விட்டார். அதன் பிறகும் என் மீது அன்போடும் கனிவோடும் இருந்தார்.

மிக இயல்பான, எளிமையான தாள அதிர்வுகளால் தமிழ்நாட்டையே தாலாட்டின அண்ணனின் இசையில் 'கரகாட்டக்காரன்' படத்துக்காக நான் எழுதிய -

இந்த மான் உந்தன் சொந்த
மான் - பக்கம்
வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
இன்றும் எனக்குப் பிடித்த பாடல் களில் ஒன்று.

இளையராஜா மெட்டுச் சொல்லும் போதே பல்லவிக்கான வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்வார். 'சின்ன தம்பி' படப்பாட்டுக்கு எனக்கு மெட்டுக் கொடுக்கும்போது -

அரண்மனைக்கிளி அழகுப் பைங்கிளி
அரங்கில் வந்ததம்மா
என்று பாடிக் காட்டினார். அந்தப் பாட்டின் பல்லவியை நான் எழுதும்போது -

அரைச்ச சந்தனம் மணக்கும்
குங்குமம்
அழகு நெத்தியிலே...
என்று எழுதினேன். இந்த மெட்டில் அரண்மனைக்கிளி என்று பிரியும்போது நன்றாக இருக்காது என்று தோன்றியதால் மாற்றி எழுதினேன்.

இதையெல்லாம்விட, நான் எழுதி தினம்தினம் நானே பாடி நெகிழ்கிற பாடல் என்றால்...

மலர்போல மலர்கின்ற
மனம் வேண்டும் தாயே
பலர் போற்றிப் பாராட்டும்
குணம் வேண்டும் தாயே...
அரவிந்த அன்னைமீது நான் இயற்றிய இந்தப் பாடல்தான் இன்றும் என் ஆன்மீக வாழ்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

எங்கும் இருப்பது பாட்டு. அண்ட வெளியே இசைமயமானது. அதில் நானும் என் பங்கைச் செலுத்தியிருக்கிறேன் என்பது சந்தோஷமானது.''

சந்திப்பு: ரமேஷ் வைத்யா

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home