Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி -  அலை ஒசை >  பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23  > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
kalki -  alai Ocai: Part IV - piraLayam
[also in pdf ]


Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

©  Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 உள்ளுறை -அத்தியாயங்கள்

4.036 ஜனவரி 31ம் தேதி மின்பதிப்பு
4.037 ராகவனும் தாரிணியும் மின்பதிப்பு
4.038 மணி அடித்தது! மின்பதிப்பு
4.039 கடவுளின் கருணை மின்பதிப்பு
4.040 "பாக்கியசாலி சீதா!" மின்பதிப்பு
4.041 சூரியாவின் இதயம் மின்பதிப்பு
4.042 லலிதாவின் மன்னி மின்பதிப்பு
4.043 பாமா விஜயம் மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை: பாகம் 4- 'பிரளயம்'
முப்பத்தாறாம் அத்தியாயம்
ஜனவரி 31ம் தேதி

சீதாவின் துர்ப்பாக்கியமானது அவளுடைய கடைசி மனோரதம் நிறைவேறுவதற்கும் குறுக்கிடவே செய்தது. அவர்கள் இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் பிரயாண வசதி செய்து கொண்டு டில்லிக்குப் புறப்படுவது என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால், அதற்குள்ளே, அதாவது ஜனவரி மாதம் 30ம் தேதி மாலையில், பேரிடி போன்ற செய்தி ரேடியோவின் மூலம் உலக மெல்லாம் பரவியதுபோலப் பானிபத் பட்டணத்துக்கும் வந்துவிட்டது. முதலில் யாருக்குமே அந்தச் செய்தியில் நம்பிக்கை பிறக்கவில்லை. 'உண்மைதானா, உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். "மகாத்மாவையாவது, மனிதனாகப் பிறந்த ஒருவன் சுடவாவது?" என்றார்கள். ரேடியோவில் நேரில் கேட்டவர்கள்கூட அதில் ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். பாகிஸ்தான் ரேடியோ டில்லி ரேடியோவைப் போல் பாசாங்கு செய்து ஏமாற்றி அந்தப் பயங்கரமான செய்தியை விஷமத்துக்காகப் பரப்பியிருக்கிறது என்று எண்ணினார்கள். இன்னும் சிலர் டில்லி நகரில் உள்ள முஸ்லிம்கள் டில்லி ரேடியோவைக் கைப்பற்றி அவ்விதம் பொய்ச் செய்தியை வெளியிடுவதாகச் சந்தேகித்தார்கள். வேறு சிலர், "அப்படியே மகாத்மாவை ஒரு பாதகன் சுட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மகானுடைய உயிர் பிரிந்திருக்குமா? ஏதோ அவசரப்பட்டுச் செய்தி சொல்லிவிட்டார்கள். 'பிழைத்து விட்டார்' என்ற சந்தோஷச் செய்தி சீக்கிரத்தில் வந்து விடும்!" என்று நினைத்தார்கள். இரவு 8-30க்கு எல்லாச் சந்தேகமும் தீர்ந்துவிட்டது. பண்டித ஜவஹர்லால்ஜியும், சர்தார் படேலும் அவர்களுடைய சொந்தக் குரலில் தெள்ளத் தெளிய பேசிய பிறகு, தொண்டை அடைக்க விம்மிக் கொண்டே மகாத்மா கொல்லப்பட்ட செய்தியைச் சொன்ன பிறகு, வேறு சந்தேகம் என்ன இருக்க முடியும்?

அகதி முகாமில் அந்தக் கொடூரமான செய்தியைக் கேட்ட சூரியா தன்னுடைய சொந்த ஜாகைக்கு ஓடினான். துரைசாமி ஐயர் அச்சமயம் சீதாவை மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார். சுமார் ஐந்தரை மணிக்குச் சீதா 'வீல்' என்று கத்திவிட்டு உணர்வை இழந்து ஢ழுந்ததாகத் துரைசாமி ஐயர் சொன்னார். பிறகு சூரியா ரேடியோ மூலம் வந்த கொடிய செய்தியைத் தெரிவித்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மன வேதனை ஒருபுறமிருக்க சீதாவுக்குத் தெரிவிப்பதா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியதாயிற்று. தெரிவித்தால் அதனால் அவளுடைய இருதயம் பாதிக்கப் படலாம். ஆனால் தெரிவிக்காமலே இருந்து விட முடியுமா? வருங்காலத்தில் என்றென்றைக்கும் அவளுடைய மனம் வேதனைப்படாதா? அதைக் காட்டிலும் அவளை டில்லிக்கு அழைத்துப் போய் மகாத்மா காந்தியின் புனிதத் திருமேனியை யாவது தரிசனம் செய்து வைப்பது நல்லதல்லவா? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு உணர்வு வந்தது. வழக்கத்தைக் காட்டிலும் அவளுடைய ஆயாசமும் பிரமிப்பும் அதிகமாயிருந்தன. தான் இனி அதிகம் காலம் பிழைத்திருக்க முடியாது என்றும், ஆகையால் காந்திஜியைத் தரிசிக்க உடனே டில்லிக்குப் போகவேண்டும் என்றும் அவள் சமிக்ஞையினால் வற்புறுத்திச் சொன்னாள். இதன் பேரில் மற்ற இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காலையில் சூரியா அவளை டில்லிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியதுதான். சமயோசிதம் போல் காந்திஜியின் மரணத்தைப் பற்றி அவன் அவளுக்குத் தெரிவிக்க வேண்டியது. அல்லது அவளே பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டியது. அந்தச் சந்தர்ப்பத்தில் டில்லிப் பிரயாணம் போய் வருவதற்கு வேணடிய தெம்பு துரைசாமி ஐயருக்கு இல்லையாதலால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சீதாவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் ஜாக்கிரதையாகத் திரும்பி வரும்படி ஆயிரந்தடவை சூரியாவுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

சீதாவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு தடவை கனவில் நடப்பவை போன்ற சம்பவங்கள் நடந்தன. பானிபத்தி லிருந்து டில்லிக்குப் போகும் சாலையில் அன்று போன ஜனக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. சூரியாவோ அவளுடைய கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தலையை அசைத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவர்கள் டில்லியை அடைந்தார்கள். பழைய டில்லியிலிருந்து ஒரு பெரிய ஜன சமுத்திரம் புதுடில்லியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். கனவில் நடப்பவளைப் போல் நடந்து சீதாவும் சென்றாள். கூட்டத்தில் தவறிப் போய் விடாமல் சூரியா கண்ணுங் கருத்துமாக அவளைத் தொடர்ந்து போய்க்கொண்டி ருந்தான். அவனுடைய நெஞ்சை ஒரு பெரிய பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது. சீதாவுக்குச் செய்தியைச் சொல்லும் தைரியம் இன்னமும் அவனுக்கு வரவில்லை. இனிமேல் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவே காந்தி மகாத்மாவின் திருமேனியைப் பார்த்துத் தெரிந்து கொள்வாள். ஆனால் அவ்விதம் பார்த்த உடனே அவளுக்கு ஏதாவது நேராமல் இருக்க வேண்டுமே? இத்தனை கூட்டத்துக்கு மத்தியில் அவள் உணர்விழந்து விழாமல் இருக்கவேண்டுமே?...... சூரியாவும் சீதாவும் போய்ச் சேர்ந்த சமயம், மகாத்மா திருமேனியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும் சமயமாயிருந்தது. எப்படியோ படாதபாடுபட்டு அந்த ஜன சமுத்திரத்துக்குள் இடித்துப் புடைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் காந்தி மகாத்மாவின் திருமுகத்தைப் பார்க்கக்கூடிய சமீபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோ ஒரு மகத்தான முக்கியமான சம்பவத்தை தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற பரபரப்போடு சீதாவும் கூட்டத்துக்குள் புகுந்து விரைந்து சென்றாள். புஷ்பங்களைக் கொட்டி அலங்கரித் திருந்த மோட்டார் ரதத்தில் மகாத்மாவின் திருமேனி கிடந்த நிலையையும் அவருடைய திருமுகத்தின் தோற்றத்தையும் பக்கத்தில் மாபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியையும் சுற்றிலும் நின்ற மக்கள் கூட்டத்தின் சோக முகங் களையும் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்ததும் சீதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.

லட்சக்கணக்கான ஜனங்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் காது செவிடுபடும்படியான ஓலம் எழுந்துகொண் டிருந்தது. சீதாவின் காதில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அலை ஓசையானது ஜனசமுத்திரத்தின் இரைச்சலோடு ஒன்றாகக் கலந்தது. காந்திஜியின் நிலை இன்னதென்று அறிந்ததும் அவளுடைய நெஞ்சு விம்மி எழுந்து தொண்டையை அடைத்தது. பின் கழுத்துக்கு மேலே இரு செவிகளுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நரம்பு, வீணையின் மந்திரத் தந்தி அறுந்தாற்போல், படீரென்று வெடித்து அறுந்தது. அந்த ஓசை மேற்கூறிய இருவகைப்பட்ட அலை ஓசையையும் பிளந்து கொண்டு சென்று அவளுடைய மண்டைக்குள்ளேயே பாய்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பிரமிப்பு நீங்கி மனம் தெளிவுற்றது, சிந்தனா சக்தி திரும்ப வந்தது. ஆகா! இந்த மகா புருஷரைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தடவை நெருங்கியிருந்தும் பல காரணங்களினால் அப்போதெல்லாம் தவறிப் போய்விட்டது. அவருடைய உயிர் பிரிந்த பிறகு நடக்கும் இறுதி ஊர்வலத்தின் போதுதானா காந்திஜியின் திருமேனியைப் பார்க்கும்படி நேரவேண்டும்? எத்தனை தடவை மகாத்மாவின் ஆசிரமத்துக்கே போய்விட வேண்டும் என்றும், அவருடைய தொண்டுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிடவேண்டும் என்றும் எண்ணியிருப்பாள்? தன் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களையெல்லாம் அவரிடம் கழற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்று எவ்வளவு முறை ஆசைப்பட்டிருப்பாள்? அந்த ஆசையெல்லாம் இனிமேல் நிறைவேறப் போவதில்லை. சீதா! நீ இந்த உலகத்தில் எதற்காகப் பிறந்தாய்? உன்னுடைய உள்ளத்தின் ஆசை ஒவ்வொன்றும் இவ்விதம் அவலமாகப் போவதற்குத்தானா பிறந்தாய்? உற்றார் உறவினருக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவேயா பிறந்தாய்? காந்தி மகாத்மாவிடம் பாவியாகிய நீ பக்தி வைத்திருந்தாயே? அது காரணமாகவே இவருடைய முடிவு இப்படி ஆயிற்றோ? நூற்றிருபத்தைந்து வயது வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே? அவரை உயிரோடு நீ தரிசிக்கக் கூடாது என்பதற்காகவே போய் விட்டாரோ?....

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சீதா ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்தாள். சில சமயம் ஜனக் கூட்டத்தின் நெருக்கமும் அவளை அந்தப் புஷ்ப ரதத்துக்கு வெகுதூரத்துக்கு அப்பால் கொண்டு வந்து தள்ளிவிடும். மறுபடியும் அவள் முண்டியடித்துக் கொண்டு புஷ்பரதம் போகும் இடத்தை நோக்கி நெருங்கிச் செல்வாள். காந்திஜியின் திருமேனியை, அவருடைய திருக்கரத்தை, அல்லது பாதகமலத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் அடக்க முடியாமல் எழுந்தது. இது காரணமாகவே அவள் புஷ்ப ரதத்தை நெருங்குவதற்கு அவ்வளவு பெருமுயற்சி செய்தாள். இதற்கிடையில் சூரியா அவளைப் பிரிந்துவிடும்படி நேர்ந்தது. காந்திமகானைப் பார்த்த பிறகு சூரியாவைப் பற்றிச் சீதா ஒரு கணமும் நினைக்கவில்லை. சூரியாவோ அவளைப் பிரிந்ததினால் ஏற்பட்ட பீதியுடனும் எப்படியாவது அவளைத் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் கூட்டத்தில் அங்குமிங்கும் இடித்துப் பிடித்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தான். கடைசியாக, பிற்பகல் சுமார் நாலுமணிக்கு யமுனை நதிக்கரைக்கு வந்து ஊர்வலம் முடிவடைந்தது. சிதையும் அடுக்கப்பட்டது, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. அப்போது அங்கே திரண்டிருந்த ஜன சமுத்திரத்தின் வெளி வரம்புக்குச் சீதா வந்து விட்டாள். அவளால் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே போக முடியவில்லை. சிதையில் நெருப்பு வைத்தாகிவிட்டது! செந்தழலின் கொழுந்து அதோ கிளம்பி வானை எட்டப் பார்த்தது. ஏழு கடல்களும் கொந்தளித்தாற் போன்ற ஒரு பெரும் ஓலக்குரல் அப்பெருங் கூட்டத்தில் எழுந்தது. அதற்குமேல் சீதாவினால் அங்கே நிற்க முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது; உலகமே முடிந்து விட்டது. தன்னுடைய ஆசைகள் மனோரதங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கிப் பஸ்மீகரமாகிப் பிடி சாம்பலாய் மாறிவிட்டன; இனி அங்கே நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்?

சீதா திரும்பிச் சென்றாள்; எங்கே செல்வது என்று தெரியாமல் கால்போன வழியே அவளும் போய்க்கொண்டிருந்தாள். அப்போதும் சூரியாவின் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. வேறு எந்த ஞாபகமும் அவளுக்கு வரவில்லை. உலகத்துக்கு ஒளி தந்த ஜோதி மறைந்துவிட்டது. இனி என்றைக்கும் இந்த உலகத்தில் காரிருள் சூழ்ந்திருக்கும் என்ற ஒரே எண்ணம் அவள் மனதில் குடிகொண்டிருந்தது. வாழ்க்கையில் இத்தனை துன்பங்களை அனுபவித்த பிறகும் யாரிடம் அடைக்கலம் புகுந்து யாருக்குத் தொண்டு செய்வதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்று இதய அந்தரங்கத்தில் அவள் நம்பிக் கொண்டிருந்தாளோ, அந்த மகான் போய் விட்டார் என்ற நினைவு ஒன்றே மேலோங்கியிருந்தது. இனிமேல் அவள் எங்கே போனால் என்ன? என்ன செய்தால் என்ன? வருகிற யமன் வந்தே தீருவான்! வரட்டும்! அதைப் பற்றி என்ன கவலை? யாரைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும்? குழந்தை வஸந்தி! ஆம், அவளைப் பற்றி என்ன! அவள் உயிரோடிருக் கிறாளா? இருந்தால் அவளை யார் காப்பாற்றுவார்கள்? ஏன்? கடவுள் காப்பாற்றுகிறார். கடவுள்! கடவுள் என்று ஒருவர் இருந்தால் உலகத்தில் இத்தனை கொடுமைகளையும் துன்பங்களையும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருப்பவர் கடவுள் ஆவாரா? அவரைக் கடவுள் என்று சொல்ல முடியுமா? ஆனால் காந்திஜி அத்தகைய கருணைக் கடலான கடவுளைப் பற்றி ஓயாது சொல்லிக்கொண்டிருந்தது ஏன்? அந்த மகானுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும்! இப்படி எண்ணிக்கொண்டே நடந்து, நடந்து, நடந்து, சீதா போய்க் கொண்டிருந்தாள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடைசியாக ஓரிடத்துக்கு வந்ததும் கால் ரொம்ப வலிக்கிறதென்று தெரிந்தது. உடம்பு தள்ளாடிற்று; காலையிலிருந்து உணவு இல்லையல்லவா? ஒரு பங்களாவின் வெளி மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். வீட்டுக்குள்ளேயிருந்து கீதம் ஒன்று கேட்டது. வானொலியின் மூலம் வந்த கீதம்? உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் வருவிக்கும் கீதம்! உடலையும் உயிரையும் நெகிழச் செய்யும் கீதம்!

"ஹரி! தும் ஹரே ஜனஜீ பீரு!" ("ஹரீ! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!") ஆகா! இது என்ன? நமக்குக் காது கேட்கிறதே! பாட்டுக் கேட்க முடிகிறதே! அமுத வெள்ளத்தைப்போல் காதில் பாய்கிறதே! இத்தனை நாள் கேட்ட அலை ஓசை எங்கே போயிற்று? அந்த இடைவிடாத பயங்கரச் சத்தம் எப்படி மறைந்தது? காந்தி அடிகளே! கருணாநிதியே! தங்களுடைய மரணத்திலே எனக்கு வாழ்வு அளித்தீர்களோ! காந்தி மகானுக்கு மிகவும் பிரியமான அந்த மீரா கீதத்தை, அவருடைய திருமேனி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், வானொலி நிலையத்தார் ஒலிபரப்பினார்கள். பாட்டு மேலும் சீதாவின் காதில் கேட்டது:- "ஹரி! மக்களின் துன்பத்தை நீ போக்குவாயாக! "நீ முன்னம் துரோபதையின் ஆடையை வளர்த்து அவள் மானத்தைக் காக்கவில்லையா? "பாலன் பிரஹ்லாதனுக்குக் கருணை புரிந்து காப்பாற்றவில்லையா? "கிழவனாகிய கஜ ராஜனுடைய மரண பயத்தைப் போக்கி அருள்புரியவில்லையா? "துன்பம் எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவன் அல்லவா நீ? "ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!" பாட்டைக் கேட்டுக்கொண்டு சீதா மெய்மறந்து நின்றாள் பாட்டு நின்றது. நாலா பக்கமும் மோட்டார் ஹாரன்கள் அலறும் ஓசை கேட்டது; மற்றும் பல சத்தங்கள் கேட்டன. சுற்றுமுற்றும் பார்த்தாள் நன்றாக இருட்டிவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனி மூடிய மரங்கள் சோகமே உருவாகக் காட்சி அளித்தன. ஜனங்கள் காந்திஜி காலமான சம்பவத்தைக் குறித்துப் பற்பல பாஷைகளில் பேசிக்கொண்டு சாலையோடு போய்க்கொண்டிருந்தார்கள். சுற்றுமுற்றும் சீதா பார்த்தபோது, தான் பிடித்துக் கொண்டு நின்ற மதில் சுவரையும் கவனிக்க நேர்ந்தது. ஆகா! இது என்ன? இது யாருடைய வீடு? நம்முடைய வீடு போலிருக்கிறதே! நாம் பல வருஷ காலம் நமக்குச் சொந்தம் என்று எண்ணி வாழ்ந்த வீடுதான் இது! இந்த வீட்டில் இப்போது யார் இருப்பார்கள்? ஏன் அவர்தான் இருக்க வேண்டும். அவர்தான் ரேடியோ கேட்கிறார் போலிருக்கிறது. கடவுளே நம்மை இந்த இடத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறார். உள்ளே போய் ஏன் அவரைப் பார்க்கக்கூடாது? "போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்வு தொடங்குவோம்!" என்று ஏன் சொல்லக்கூடாது? இதையெல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடியுமா? காது கேட்கச் செய்த பகவான் பேசும் சக்தியையும் கொடுத்துத்தான் இருப்பார் அல்லவா?- சீதாவின் நாக்கு முன்னெல்லாம் போல் நன்றாகப் புரண்டது போலத் தோன்றியது. நன்றாகப் பேச முடியும் என்று தோன்றியது! மதில் சுவரின் வாசல் திறந்துதான் இருந்தது. சீதா உள்ளம் நடுங்க, கால் தள்ளாட, அந்தப் பங்களாத் தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்தேழாம் அத்தியாயம்
ராகவனும் தாரிணியும்

,dd>தோட்டத்துக்குள் பிரவேசித்த சீதா தயங்கித் தயங்கி நடந்து வீட்டு வாசற்படியோரமாக வந்து நின்றாள். உள்ளேயிருந்து கீதம் வருவது நின்று விட்டது. ரேடியோவில் யாரோ பேசுவது கேட்டது. வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. ஆயினும் உட்புறம் தாளிடவில்லையென்று தெரிந்தது. வீட்டுக்குள்ளே அவர்தான் இருக்கிறார்; சந்தேகமில்லை. வாசலில் வேலைக்காரன் யாரும் இல்லை. திடீரென்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் நின்றால் அவர் என்ன நினைப்பார்? திடுக்கிட்டுப் போவாரோ, என்னமோ? அவர் பேச்சு தன் காதில் விழும். ஆனால் அவருடன் பேசுவதற்குத் தனக்குத் தைரியம் வருமா? பேசும் சக்தி நாக்குக்கு இருக்குமா? நாக்குப் புரண்டாலும், தொண்டை அடைத்துக்கொண்டு விடாதா? இவ்விதம் எண்ணிச் சீதா வீட்டு வாசற்படியில் தயங்கிக் கொண்டு நின்றபோது, இன்னும் யாரோ வெளி மதில் கேட்டின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. தன்னுடைய செவிப்புலனின் சக்தி முன்னைக் காட்டிலும் எவ்வளவு அதிக கூரியதாயிருக்கிறது என்பதைச் சீதா நினைத்து வியந்தாள். ஆனால் வியப்பைத் தொடர்ந்து பயம் வந்தது. யார் வருகிறார்களோ, என்னமோ? தன்னைக் கண்டதும் என்ன சொல்வார்களோ, என்னமோ? - வாசற்படியிலிருந்து உடனே சென்று வீட்டுச் சுவருக்கு அப்பால் மறைந்துகொண்டு நின்றாள். வருகிறது யார் என்பதை உன்னிப்பாகக் கவனித்தாள். வந்தவள் - ஆம், வந்தவள் ஸ்திரீதான், - தலையோடு கால் வரையில் மூடிய முஸ்லிம் பர்தா உடை தரித்துக்கொண்டு வந்தாள். இரண்டு கண்களினாலும் பார்ப்பதற்கு மட்டும் அந்த உடையில் இரண்டு துவாரங்கள் இருந்தன. ஐயோ! இவள் யார்? எதற்காக இந்த நேரத்தில் இங்கே வருகிறாள்? கடவுளே! இந்த வீட்டில் இப்போது யாரோ முஸ்லிம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தெரியாத்தனமாகவல்லவா இங்கே வந்துவிட்டோ ம்? நல்ல வேளை, வீட்டுக்குள்ளே நுழையாமல் தப்பினோம். இந்த ஸ்திரீ வீட்டுக்குள்ளே பிரவேசித்ததும் நாம் தப்பி ஓடிப்போய் விட வேண்டும்! தப்பி எங்கே ஓடுவது? எங்கே? எங்கே? யமுனைக்கரைக்கா? காந்தி மகாத்மாவினுடைய புனிதத் திருமேனி இன்னும் அங்கே எரிந்து கொண்டிருக்குமா? அல்லது எரிந்து அடங்கிச் சாம்பலாகியிருக்குமா? அத்தனை கூட்டமும் இதற்குள் கலைந்து போயிருக்குமா? நாம் தனியாக அவ்விடத்தில் பக்கத்திலே சென்று நின்று அவருடைய திருமேனியின் சாம்பலையாவது தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?.......

,dd>அந்த முஸ்லிம் பர்தா ஸ்திரீ மெள்ள மெள்ளச் சத்தம் கேட்காதபடி அடி எடுத்து வைத்து நடந்து, வீட்டு வாசற்படிக் கருகில் வந்தாள். சீதாவைப் போலவே அவளும் சிறிது நேரம் தயங்கினாள். எதற்காகத் தயங்குகிறாள்? இவள் இந்த வீட்டுக்கு உரியவளானால் ஏன் தயங்கி நிற்க வேண்டும்? அந்த ஸ்திரீ படிகளில் ஏறித் தாழ்வாரத்தில் நின்றாள். மறுபடியும் தயக்கத்துடன் நடந்து சென்று வீட்டின் வாசற் கதவை நெருங்கி விரல்களின் பின் கணுக்களினால் கதவைத் தட்டினாள். 'டண், டண்' என்று கதவில் விரல் கணுக்கள் தட்டிய சத்தம் சீதாவின் காதில் நன்றாகக் கேட்டது. அதிசயம் அதிசயம்! கேட்கும் சக்தி எவ்வளவு கூர்மையாகியிருக்கிறது! காந்தி மகாத்மாவினுடைய அருள்தான் இது! வீட்டுக்குள்ளே யிருந்து ஆங்கில பாஷையில் "கெடின்!" (உள்ளே வருக) என்ற குரல் வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் தேகம் சிலிர்த்தது. பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே அந்தக் குரல் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையும் எல்லையற்ற துன்பத்தையும் அளித்திருக்கிறது. சொல்ல முடியாத ஆர்வத்தை அந்தக் குரல் அவள் மனதில் எழுப்பிவிட்ட காலம் உண்டு. அளவில்லாத வெறுப்பையும் கோபத்தையும் எழுப்பிய நாட்களும் உண்டு. அவர்தான்: தன்னைக் கைப்பிடித்து மணந்து கொண்ட மன்னர்தான்; தன் கழுத்தில் தாலி கட்டித் தாரமாக்கிக் கொண்ட மணவாளர்தான். வீட்டுக்குள்ளே இருப்பவர் அவர்தான். இந்தப் பர்தா அணிந்த ஸ்திரீக்கு அவரிடம் என்ன வேலை? இவள் யார்? இவளை முன்னாலே அவருக்குத் தெரியுமா? இன்றைக்கு இவள் வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? அதிலும் காந்தி மகாத்மாவின் உடல் தீக்கிரையான இந்தப் புண்ணிய தினத்திலா? இவளால் அவருக்கு ஏதேனும் தீங்கு வருவதாயின் அதைத் தான் தடுக்க வேண்டாமா?...... இப்படி ஆயிரம் எண்ணங்கள் சீதாவின் மனதில் உதித்தன.

,dd>அந்தப் பர்தா ஸ்திரீ கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனதைச் சீதா பார்த்தாள். தானும் உள்ளே போகவேண்டும், போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற அதிதீவிரமான ஆவல் சீதாவைப் பற்றிக் கொண்டது. அவளுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அந்த ஆவல் தோன்றி அவளைச் சித்திரவதை செய்தது. சீதா பல்லைக் கடித்துக் கொண்டு யோசனை செய்தாள். வாசற்புறமாக அவளும் போவதில் பயனில்லை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் பெரிய அறையிலேதான் ரேடியோ இருக்கிறது. அங்கேதான் அவரும் உட்கார்ந்திருக்கிறார். தான் வாசற் பக்கமாகப் போனால் உடனே பார்த்து விடுவார். தெரிந்து கொள்ள விரும்பிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியாமற் போகலாம். கொல்லைப் புறமாகப் போனால் என்ன? கதவு திறந்திருந்தால் மிக்க சௌகரியம். யாருக்கும் தெரியாமல் பக்கத்து அறைக்குப் போய் நின்று அவளுடைய பேச்சைக் கேட்கலாம். அந்த ஸ்திரீயை இன்னார் என்பதாகவும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொல்லைக் கதவு தாளிட்டிருந்தால் படுக்கையறையின் ஜன்னல் ஓரத்தில் நின்று அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்கலாம். அதிலிருந்து ஒருவாறு நிலைமை இன்னதென்று தெரிந்துகொள்ளலாம்..... சீதாவின் கால்கள் அவளை வீட்டின் பின் பக்கத்துக்கு இழுத்துச் சென்றன. பின் பக்கத்துக் கதவு தாளிடவில்லை தொட்டதும் அக்கதவு திறந்து கொண்டது. 'கிறீச்' சத்தம்கூடப் போடவில்லை. அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்து சீதா உள்ளே சென்றாள். ரேடியோ வைத்திருந்த முக்கிய அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அந்த அறையிலிருந்து ரேடியோ அறைக்குள் போவதற்காக ஏற்பட்ட வாசற்படியின் பாதிக் கதவுகள் இலேசாகத் திறந்திருந்தன. அவசியமானால் அந்தக் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. முதலில் பேச்சைக் கவனித்துத் தெரிந்து கொள்ளலாம். சீதாவின் கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. சுவர் ஓரமாகக் கிடந்த சோபாவில் சத்தமின்றி உட்கார்ந்து கொண்டாள்.

,dd>"யார் நீ? இங்கே எதற்காக வந்தாய்? வேறு யார் வீடோ என்று நினைத்துக் கொண்டு வந்தாய் போலிருக்கிறது. போ! போ சீக்கிரம்! நான் இங்கே தனியாக இருக்கிறேன். வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று ராகவனுடைய கடுமை மிக்க குரல் கூறியது. அவனுடைய குரலில் தொனித்த கடுமை சீதாவின் செவிகளுக்கு மிக இனிமையாயிருந்தது. "வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை!" என்ற வார்த்தைகள் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தன. ஒரு நிமிஷம் மௌனம் குடிகொண்டிருந்தது. ரேடியோவை முன்னமேயே ராகவன் மூடியிருக்க வேண்டும். மறுபடியும் ராகவன் கடுங்குரலில் கூறினான்:- "ஏன் சும்மா நிற்கிறாய்? போகிறாயா? போலீஸைக் கூப்பிடட்டுமா? வேலைக் காரத் தடிப்பயல்கள் இரண்டு பேரும் போய்த் தொலைந்து விட்டார்கள். அவர்கள் வரட்டும் சொல்கிறேன் கதவைத் தாளிடாதது தப்பாய்ப் போயிற்று. பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதிச் சனியன்போல அல்லவா இருக்கிறது!....." இந்தச் சமயத்தில் ராகவனுடைய பேச்சுத் தடைப்பட்டது. "ராகவன்! மன்னிக்க வேண்டும்! உங்களுக்கு அதிக நேரம் தொந்தரவு கொடுப்பதாக உத்தேசமில்லை, சீக்கிரம் போய் விடுகிறேன்!" என்று ஒரு பெண்ணின் குரல் கூறியது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் உடம்பு முழுதும் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்தது. அது தாரிணியின் குரல் தான். எழுந்து ஓடிப்போய், "அக்கா!" என்று அலறி அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அந்த ஆசையை மிகவும் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். ஆவலை அடக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் இருந்தது. தான் இருப்பது - தான் உயிரோடிருப்பது - தன் கணவருக்குத் தெரியவே கூடாது! அந்த மன உறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். "தாரிணி! தாரிணி! நீயா இந்த வேஷத்தில் வந்திருக்கிறாய்? எதற்காக இந்த பயங்கரமான முகமூடி? உட்காரு, தாரிணி! உட்காரு! உன்னை நான் அப்படிப் போகச் சொல்லுவேனா? எத்தனை நாளாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கிறேன்! தயவு செய்து உட்காரு!" என்றான் ராகவன். "ஆகட்டும், ஐயா! எனக்கும் மிக்க களைப்பாயிருக்கிறது. நான் சொல்ல வந்ததை உட்கார்ந்தே சொல்லிவிடுகிறேன். அதிக நேரம் இவ்விடத்தில் இருக்க மாட்டேன். ஐந்து நிமிஷத்தில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன்!" என்றாள் தாரிணி.

,dd>"ஐந்து நிமிஷமா? ஐந்து நிமிஷத்தில் நீ போனால் நான் விட்டு விடுவேனா உன்னை?" என்றான் ராகவன். "சற்று முன்னால் 'வீட்டில் பெண்பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று சொன்னீர்களே?" "அது உனக்காகச் சொன்னேனா! யாரோ அகதிச் சனியனாக்கும் என்று நினைத்துக்கொண்டு சொன்னேன்." "நானும் ஒரு அகதிச் சனியன்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரத்தில் நான் போகவும் வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை வஸந்தி கவலைப்படத் தொடங்கி விடுவாள்...." "தாரிணி! வஸந்தி எங்கே? ஏன் இப்போதே அவளையும் அழைத்து வரவில்லை? குழந்தை சௌக்கியமா யிருக்கிறாளா?" "சௌக்கியமாயிருக்கிறாள் அவளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்காகவே இன்றைக்கு வந்தேன். எப்போது குழந்தையைக் கொண்டு வந்து விடும்படி சொல்கிறீர்களோ, அப்போது கொண்டு வந்து விட்டு விடுகிறேன்....." "கொண்டு வந்து விடுகிறேன் என்றா சொல்கிறாய்? சரி, கொண்டு வந்துவிடு! அந்தத் தாயில்லாக் குழந்தையை இந்தச் சூனியமான வீட்டில் அழைத்து வைத்துக்கொண்டு நான் திண்டாட வேண்டியதாயிருக்கும். அதனால் என்ன?" "ஐயா! தாயில்லாக் குழந்தை என்று ஏன் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நிச்சயமாக உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?" "தெரியும், தாரிணி! என்னைப் போன்ற அபாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சீதா சேனா நதியில் முழுகி இறந்துவிட்டாளாமே. சூரியா நேரில் பார்த்தானாம்!" இந்தச் சமயத்தில் விம்முகிற சத்தம் கேட்டது. விம்முகிறது யார் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவனாகவும் இருக்கலாம்! தாரிணியாகவும் இருக்கலாம். உள்ளே பாய்ந்து ஓடிச் சென்று தான் உயிரோடு இருப்பதைத் தெரிவித்து விட்டால் என்ன? இல்லை, கூடவே கூடாது! சீதா பிடிவாதமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்திராமல் உட்கார்ந்திருந்தாள். "சூரியா நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன், இன்னமும் தேடிக்கொண்டு தானிருப்பேன். ஹௌஷங்காபாத்தில் அவளையும் குழந்தையையும் தனியாக விட்டு விட்டு நான் இந்தப் பாழும் உத்தியோகத்துக்காக ஓடி வந்ததை நினைத்தால் எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அப்படித் திடீரென்று பேய் பிசாசுகளாவார்கள் என்று என்கு என்ன தெரியும்?...."

,dd>"ராகவன்! போனதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சீதா உண்மையில் பாக்கியசாலி; நதி வெள்ளத்தில் மூழ்கி இறந்து போய்விட்டாள். உயிரோடிருக்கும் நாம்தாம் துர்பாக்கியசாலிகள். உலகத்துக்கே ஓர் உத்தமராயிருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்தோம் கேட்டோ மல்லவா? இந்த மனவேதனையை அநுபவிக்காமல் போய்விட்டவள் அதிர்ஷ்டசாலிதானே!" "நேற்று இராத்திரி இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவளுடைய நினை வாகவே இருந்தது. சீதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு துக்கப்பட்டிருப்பாள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சீதாவுக்கு மகாத்மாவிடம் ஒரு தனி பக்தி. அதிலும் நாங்கள் ஹௌஷங்க பாத்தில் ஒரு வருஷம் இருந்த காலத்தில் அவள் மகாத்மா காந்தியைப் தெய்வமாகவே நினைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தாள்....." சீதா புண்ணியம் செய்தவள், நான் போய் வருகிறேன் மிஸ்டர் ராகவன்! நாளைக் காலையில் தங்கள் குமாரியை அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் விட்டு விடுகிறேன்." "இதென்ன சொல்லுகிறாய், தாரிணி! முன் பின் தெரியாதவர்கள் பேசுவது போலப் பேசுகிறாயே? எங்கே போக வேண்டும் என்கிறாய்? நீ எங்கே தங்கியிருக்கிறாய்? குழந்தையை எங்கே விட்டு விட்டு வந்திருக்கிறாய்? இரண்டு மாதத்துக்கு முன்னாலே சீதா பெயருக்கு நீ கடிதம் எழுதியிருந்தாயே? உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டு தானிருந்தேன். இத்தனை காலமும் என்ன செய்தாய்? எங்கே இருந்தாய்?" என்று ராகவன் படபடவென்று பல கேள்விகளைக் கொட்டினான்.

,dd>அந்தக் கடிதம் எழுதிய அடியோடு இந்த ஊருக்கு வந்து விட்டேன். ஜும்மா மசூதிக்கும் அருகில் நானும் என் பெற்றோர்களும் முன்னொரு சமயம் வசித்த வீட்டுக்குப் போனேன். அன்றைக்கே அந்தப் பிரதேசத்தில் கலகம் தொடங்கி விட்டது. இரண்டு மாதமாக வீட்டை விட்டு வெளியே புறப்பட முடியவில்லை. குழந்தையை அழைத்து வரப் பயமாயிருக்கிறது. அதனாலே தான் இத்தனை நாள் தாமதம். இன்றைக்கு இந்த டில்லி நகர் முழுவதும் மகாத்மாவின் இறுதி ஊர்வலத்துக்குப் போய்விட்டது. நானும் தைரியமாகப் புறப்பட்டு வந்தேன்" என்றாள் தாரிணி. "இன்றைக்கு இந்த நகரத்தில் வெளியில் புறப்படாமல் வீட்டிலேயே இருந்தவன் நான் ஒருவன்தான் போலிருக்கிறது. இந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள்கூட மகாத்மா காந்தியின் கடைசி தரிசனத்துக்குப் போய்விட்டார்கள். நான் வீட்டிலேயே இருந்து ரேடியோ மூலம் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் நீ இங்கே வந்து என்னைக் காணாமல் திரும்பிப் போயிருக்கலாமல்லவா?" "ஆமாம்; நீங்கள் வீட்டில் இருந்தது நல்லதாகத்தான் போயிற்று. நான் போய் வருகிறேன். நாளைக்கு......." "நாளைக்கு என்கிற பேச்சு வேண்டாம். இப்போதே நான் கார் எடுத்துக்கொண்டு வருகிறேன். போய் வஸந்தியை அழைத்து வருவோம். ஆனால் அந்தத் தாயில்லாக் குழந்தையை என் தலையிலே கட்டிவிட்டு நீ தப்பிப் போய்விடலாம் என்று நினைக்காதே! என்னால் அந்தப் பொறுப்பை வகிக்க முடியாது. நீ இந்த வீட்டில் சீதாவின் ஸ்தானத்தில் இருந்து வஸந்தியையும் வளர்ப்பதாக ஒப்புக் கொண்டால்தான் அந்தப் பொறுப்பை நான் ஒப்புக்கொள்ள முடியும்." "ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சீதாவின் ஸ்தானத்தில் நான் இருக்க வேண்டும்' என்று சொல்வதின் அர்த்தம் என்ன? இன்னும் உங்களுக்கு அந்தப் பழைய பைத்தியம் விடவில்லையா?" "பழைய பைத்தியம் விடவில்லைதான். இந்த உடம்பிலே உயிர் உள்ள வரையில் என்னை அப்பைத்தியம் விடாது தாரிணி!" "உங்களுக்கு ஓர் இரகசியம் தெரியாது. அதனாலேதான் இன்னமும் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா என் சொந்தத் தங்கை; என் உடன் பிறந்த சகோதரி."

,dd>"அது எனக்குத் தெரியாத இரகசியம் அல்ல. நீ சீதாவின் சொந்தத் தமக்கை என்பதைச் சூரியா சொன்னான். இன்னொரு விஷயமும் அவன் கூறினான். நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டால் அதைக் காட்டிலும் சீதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி அளிக்கக்கூடியது வேறொன்றுமிராது என்று சொன்னான். நீயே யோசித்துப் பார், தாரிணி! இந்த வீட்டிலிருந்து வஸந்தியை வளர்ப்பதற்கு உன்னைக் காட்டிலும் தகுதியுடையவள் உண்டா? நீ மட்டும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டால்... வேண்டாம்; இன்றைக்கு இந்தப் பேச்சு உனக்குப் பிடிக்காது. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு நம் எல்லோருடைய மனமும் கலங்கிப் போயிருக்கிறது. நாம் இப்போது போய்க் குழந்தையை அழைத்துக் கொண்டு வரலாம். ஆனால் நீ உன்னுடைய முகமூடியை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும். இன்னும் இந்தப் பயங்கரமான உடையை நீ தரித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை." "ஆகட்டும், ஐயா! இந்தப் பர்தா உடையை எடுத்து விடுகிறேன்; எடுக்கத்தான் வேண்டும். ஆனால் கலியாணம் பேச்சைத் தள்ளிப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை இப்போதே பேசி முடித்துவிட்டால் என் மனது நிம்மதியடையும்....." "எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை, தாரிணி! பேஷாக இப்போதே பேசி முடிவு செய்யலாம். ஆனால் பேசுவதற்குத் தான் என்ன இருக்கிறது? நீ உன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியதுதான். நானோ பதினாறு வருஷ காலமாகத் தவம் செய்கிறேன்." "என்னுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

,dd>என் தங்கை சீதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்....." "என்ன சத்தியம் செய்து கொடுத்தாய்? எதற்காக?" "உங்களுக்குச் சம்மதம் என்றால் நான் உங்களை மணந்து கொள்கிறேன் என்று சீதாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். "அதை நிறை வேற்றுவதாக உத்தேசமா? காற்றிலே பறக்க விட்டு விடுவதாக உத்தேசமா?" "சீதா உயிருடன் இருந்தபோது என்னால் அவளுக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்தன. கடைசியில் அவளைப் பாதுகாக்க நான் செய்த ஏற்பாடும் பயனில்லாமற் போயிற்று. சீதாவின் ஆவியாவது நிம்மதி அடைய வேண்டாமா? ஆகையால் அவளுக்கு நான் கொடுத்த வாக்கை மீறப் போவதில்லை. நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்தால் எனக்கும் அதில் சம்மதம். ஆனால் நீங்கள் யோசித்துச் சொல்ல வேண்டும்....." சீதா இதுவரை தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து நின்றாள். பேதைப் பெண்ணே! ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? போய்விடு! உடனே ஓடிப் போய்விடு! உன் மனம் நன்றாயிருக்கும்போதே இங்கிருந்து போய்விடுவது நல்லது. ஒருவேளை உன் புத்தி மாறிக் கெட்டுப் போய்விடலாம் அல்லவா? இவ்வாறு சீதாவின் உள்மனம் அவளுக்கு அறிவுறுத்தியது. சிறிதும் சத்தம் செய்யாமல் அடிமேல் அடி வைத்து நடந்தாள். கொல்லை வழியாகவே வெளியில் வந்து வீட்டைப் பிரதட்சணம் சுற்றிக் கொண்டு வாசற்பக்கம் வந்தாள். மதில் சுவரின் வாசற்படியைத் தாண்டி வீதியை அடைந்ததும் அதிவேகமாக நடந்தாள். நாலாபுறமும் இருண்டு கொண்டு வந்தது. சீதா! என்ன காரியம் செய்து விட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷம் நீ அந்தப் பக்கத்து அறையிலேயே இருந்திருக்கக் கூடாதா?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


முப்பத்தெட்டாம் அத்தியாயம்
மணி அடித்தது!

இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மிகவும் தயக்கமாயிருக்கிறது. மனம் வேதனைப்படுகிறது; கையும் கூசுகிறது. எனினும் எழுதியேயாகவேண்டும் கதையை முடிக்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா? இம்மாதிரியான வரலாற்றுத் தொடர்கதை எழுதுவதில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கறது. ஆசிரியனோடு சேர்ந்து வாசகர்களும் கதையைக் கற்பனை செய்துகொண்டு வருகிறார்கள், மேலே இப்படித்தான் நடக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள். கதாநாயகி இறந்து விடக் கூடாதென்று சிலரும் கதாநாயகி இறந்துதான் ஆகவேண்டும் என்று சிலரும் வற்புறுத்துகிறார்கள். கதாநாயக னுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென்று சிலரும் அவனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று சிலரும் எதிர்பார்க் கிறார்கள். கதை ஆசிரியன் பெரிய தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். கதாபாத்திரங்களுக்கு உண்மையாக நிகழ்ந்த முடிவை உண்மையுடன் கூறுவதா, அல்லது வாசகர்களின் விருப்பத்தையொட்டி மாறிச் சொல்லுவதா என்ற கடினமான பிரச்னை ஏற்படுகிறது. எவ்வளவு கசப்பான உண்மையாயிருந்தாலும், அது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எவ்வளவு மன வருத்தம் தருவதாயிருந்தாலும், நடந்தது நடந்தபடி சொல்லி விடுவதே கதை ஆசிரியனுடைய தர்மமும் கடமையும் ஆகுமல்லவா? இங்கே இவ்வளவு நீண்ட பீடிகை போடுவதற்குக் காரணம் என்னவென்பதை வாசகர்கள் ஊகித்தறிந் திருப்பார்கள். மேலே வருவதை எழுதுவதற்குத் தயக்கந்தான் காரணம்.ஆனால் எத்தனை நேரந்தான் தயங்கவும் தள்ளிப் போடவும் முடியும்?

தாரிணி சௌந்தரராகவனைப் பார்த்து "நீங்கள்தான் நன்றாக யோசித்துச் சொல்ல வேண்டும்" என்று கூறியது, ராகவன் சிறிது எரிச்சலுடன், "மறுபடியும் 'யோசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்டான். "நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆயினும் நான் என்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும். உங்களுடைய தாயாரும் தகப்பனாரும் உற்றார் உறவினரும் என்ன சொல்லுவார்கள் என்று யோசியுங்கள்." "சுத்தப் பைத்தியக்காரத்தனம்! அவர்களையெல்லாம் நான் மறந்து எத்தனையோ நாளாயிற்று. என்னுடைய பெற்றோர்கள் தற்சமயம் அவர்களுடைய மூத்த பிள்ளையுடனும் மூத்த மாட்டுப் பெண்ணுடனும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். என்னை அவர்கள் கவனிப்பதில்லை அவர்களை இப்போதெல்லாம் நானும் நினைப்ப தில்லை....." "இப்போது நினைப்பதில்லையென்றால் எப்போதும் விட்டுப் போய்விடுமா? இரத்த பாசம் ஒரு நாளும் விடாது அதற்கு என்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?" "நல்ல தகப்பனார் உன் தகப்பனார்! பெற்ற பெண்கள் இருவருக்கும் சத்துருவாயிருந்தார்......." "உங்கள் பெற்றோர்களை நீங்கள் கவனிக்காவிட்டால் போகட்டும். இந்தப் புது டில்லியில் நீங்கள் உத்தியோகம் செய்து வாழ்க்கை நடத்த வேண்டுமல்லவா? என்னை நீங்கள் கலியாணம் செய்து கொண்டால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?" "ஒன்றும் நினைக்கமாட்டார்கள், அப்படி ஏதாவது நினைத்தால் என்னைக் கொடுத்துவைத்த அதிர்ஷ்டசாலி என்று நினைப்பார்கள். தாரிணி! இந்தப் புது டில்லியில் உன்னைப் போன்ற அழகி ஒருத்தி உண்டா? நாகரிகத்திலும் நடை உடை பாவனையிலும் உன்னை மிஞ்சக் கூடியவள் எவளேனும் உண்டா? கிளப்புகளுக்கும் பார்ட்டிகளுக்கும் உன்னை என்னுடன் அழைத்துக்கொண்டு போவதைப் போல் பெருமை தரும் விஷயம் வேறு உண்டா....?"

தாரிணியை மூடியிருந்த உடைக்குள்ளிருந்து அமுங்கி ஒலித்த சிரிப்பின் சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் ஏனோ சௌந்தர ராகவனுக்கு உடல் சிலிர்த்தது; விவரமில்லாத பீதி ஒன்று உண்டாயிற்று. "தாரிணி! இது என்ன சிரிப்பு! இந்த வேளையில்தான், இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பது என்பது கிடையாதா?" என்றான். தாரிணி எழுந்து நின்றாள். "சிரித்தது பிசகுதான்; மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் இன்னும் ஒருநாள், - இருபத்தினாலு மணி நேரம் - உங்களுக்கு யோசிக்கச் சாவகாசம் கொடுக்கிறேன். நாளைக்கு இதே நேரத்துக்குக் குழந்தையை அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொன்னாள். "உன்னுடைய பிடிவாத குணம் முன்னைப் போலவேதான் இன்னும் இருக்கிறது. தாரிணி! போனால் போகட்டும், உன் இஷ்டப்படியே நாளைச் சாயங்காலம் வஸந்தியை அழைத்துக் கொண்டுவா! ஆனால் போவதற்கு முன்னால் இந்தப் பயங்கரமான பர்தா உடையை எடுத்துவிட்டு உன் முகத்தையாவது காட்டி விட்டுப்போ! இல்லா விட்டால் உன்னைப் போக விடமாட்டேன். நானே பலாத்காரமாக உன் முகமூடியை அகற்றி விடுவேன்!" என்றான். இந்தக் கடைசி வார்த்தையைச் சொல்லும்போது ராகவனுக்கு சீதா அடிக்கடி பாடும் வழக்கமான ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்ற பாரதியாரின் கண்ணன் பாட்டு சீதாவுக்கு தெரியும். டில்லியில் முகமூடி தரித்த பர்தா முஸ்லிம் ஸ்திரீகளைப் பார்க்கும்போதெல்லாம் சீதா அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுவாள். ராகவனும் அதை ரசித்துக் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பான்.

அந்தப் பாட்டு இப்போது ராகவனுக்கு நினைவு வந்ததும் அவனுடைய உடம்பு மீண்டும் சிலிர்த்தது. ராகவனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட தாரிணி சிறிது நேரம் நின்ற இடத்திலேயே நின்றாள். அவளுடைய மனதுக்குள் ஏதோ போராட்டம் நடந்தது போலும். ஒரு நிமிஷம் தயங்கி நின்ற பிறகு, "தங்கள் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன். என் பேரில் குற்றம் சொல்ல வேண்டாம்!" என்று தாரிணி சொல்லிவிட்டு அவளை மூடியிருந்த பர்தா உடையைக் கழற்றிக் கீழே நழுவி விழச் செய்தாள். உல்லாசமாக இயற்கை வனப்புகளைப் பார்த்துக்கொண்டு மலைச்சாரல் வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவனுடைய தலையில் திடீரென்று பாராங்கல் விழுந்து, கண்ணிலே கொள்ளிக் கட்டை குத்தி, காலிலே ஆயிரம் தேள்கள் கொட்டி, எதிரே பயங்கரமான பிசாசு ஒன்று தோன்றி அவனுடைய கழுத்தைப் பிடித்து அமுக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது ராகவனுக்கு. பர்தா உடையைக் கழற்றியதும் எதிரில் தோன்றிய உருவம், சௌந்தரராகவன் பலமுறை பார்த்து இதயத்தில் பதித்து வைத்துக் கொண்டிருந்த தாரிணியின் மோகன உருவம் அல்ல; அவன் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த சௌந்தரிய வடிவம் அல்ல! சீதாவுக்கு உடன் பிறந்த சகோதரியின் பூரண சந்திரனையொத்துப் பொலிந்த முகம் அல்ல. அவன் பார்த்தது ஒரு கோர ஸ்வரூபம். ஒரு கை துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம். ஒரு கண் இருந்த இடத்தில் வெறுங்குழி இருந்த உருவம். வலது நெற்றிப் பொட்டிலிருந்து இடது கன்னத்தின் ஓரம் வரையில் ஒரு நீண்ட பெரிய பிளவு ஓடியிருந்த பயங்கர வடிவம். மகா சிற்பி ஒருவன் அமைந்திருந்த தெய்வீகச் சிலையை வெறிகொண்ட கஜினி முகம்மது தாக்கி உடைத்த பிறகு சிதைந்துபோன சிலை எப்படி இருக்குமோ அப்படித் தோற்றமளித்த பரிதாப உருவம்.

சௌந்தரராகவன் பீதியினாலும் பயங்கரத்தினாலும் பரிதாபத்தினாலும் அருவருப்பினாலும் கதிகலங்கியவனாய் திகைத்து நின்றான். சற்று நேரம் திறந்த கண்கள் திறந்தபடி, திறந்த வாய் திறந்தபடி, பார்த்துக்கொண்டே நின்றான். அப்புறம் நிற்க வலிவற்றவனாய்த் தொப்பென்று ஸோபாவில் விழுந்தான். அந்த உருவம் வாய் திறந்து பேசியது. முன் பல் இரண்டு இல்லாதபடியால் வாயைத் திறந்தபோது அந்த கோர ஸ்வரூபம் மேலும் பயங்கரமாகக் காட்சி தந்தது. "ஐயா! மன்னிக்க வேண்டும், தங்களுக்கு இந்தத் துன்பத்தை இன்று தரவேண்டாம் என்றுதான் நினைத் தேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை உடையை எடுக்கும்படி பிடிவாதம் பிடித்தீர்கள்!" என்று தாரிணி கூறினாள். ஆம், அது தாரிணியின் குரல்தான்! சந்தேகமில்லை. எவ்வளவு சின்னாபின்னமடைந்திருந்த போதிலும் அந்த முகம் தாரிணியின் மகந்தான்! ஆனாலும் சௌந்தரராகவன் அதை நம்புவது எளிதாக இல்லை. இது வேறு யாராகவாவது இருக்கலாகாதா என்றும் தன்னை இந்தப் பயங்கர ஏமாற்றத்துக்கு உள்ளாக்க யாரோ செய்த சூழ்ச்சியாக இருக்கக்கூடாதா என்றும் எண்ணினான். "நான் போய் வருகிறேன், ஒரு நாள் முழுதும் யோசித்துப் பதில் சொல்லுங்கள். ஒரு நாள் என்ன? ஒரு வாரம் வேண்டுமானாலும் யோசித்துச் சொல்லுங்கள்!" என்றாள் தாரிணி. சௌந்தரராகவனுடைய தலைக்கு உட்புறம் நூறு குட்டிப் பிசாசுகள் புகுந்து கொண்டு 'ஹஹஹஹஹஹா!" என்று பரிகசித்துச் சிரித்தன. "போகாதே, தாரிணி! போகாதே! ஏதாவது சொல்லி விட்டுப் போ! இல்லாவிட்டால் எனக்கு இப்போதே பைத்தியம் பிடித்துவிடும்!" என்று ராகவன் அலறினான். தாரிணி உட்கார்ந்தாள், "தயவு செய்து பதறாதீர்கள்; வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். நான் என்ன சொல்ல வேண்டும்? கேளுங்கள், சொல்கிறேன்!" என்றாள். ராகவன் தாரிணியை ஒரு தடவை காலோடு தலை வரை உற்றுப் பார்த்துவிட்டு மேஜைமீது தன் முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு விம்மினான். "ஐயா! தாங்கள் எத்தனையோ தத்துவங்கள் படித்தவர். படித்த தத்துவங்களையெல்லாம் இப்போது தயவு செய்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். விதியை வெல்ல யாரால் முடியும்? நடந்து போனதை நினைத்துத் துக்கப்பட்டு ஆவதென்ன?" என்று சொன்னாள் தாரிணி.

சௌந்தரராகவன் தலை நிமிர்ந்தான். "தாரிணி! அந்த விதி என்னை எதற்காக உயிரோடு வைத்திருக்கிறது? இந்தக் கோரக் காட்சியைக் காண்பதற்காகத்தானா? கல்கத்தாவில் சுரம் அடித்துக் கிடந்தபோதே நான் இறந்து போயிருக்கக் கூடாதா?" என்று கதறினான். "விதியை வெல்லும் சக்தியை நமக்குக் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் துக்கத்தையும், வெல்லும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இன்றைக்குக் காந்தி மகான் இறந்ததை நினைத்து இந்தத் தேசமெல்லாம் வருத்தப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் போனால் எல்லோரும் மகாத்மாவை மறந்துவிடப் போகிறார்கள். அவரவர்களின் காரியத்தைப் பார்க்கப் போகிறார்கள் இந்த உலகத்தில் எந்தவிதமான சுகமும் இன்பமும் சாசுவதமல்ல; அதுபோலவே கஷ்டமும் துன்பமும் சாசுவதம் அல்ல. துன்பத்தை மறந்துவிடும் சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்" என்றாள் தாரிணி. "கடவுள் என்று சொல்லாதே! கடவுள் இல்லை என்று நான் சத்தியம் செய்வேன். உன்னை இந்தக் கோலத்தில் பார்த்த பிறகு கடவுளிடம் எப்படி நம்பிக்கை உண்டாகும்?" என்றான் ராகவன். "நான் இந்தக் கோலமான பிறகுதான் கடவுளிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. ஐயா! என்னை வளர்த்த தாயையும் உங்கள் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றினேன். நல்ல சமயத்தில் கடவுள் என்னை அவர்கள் இருந்த இடத்தில் கொண்டு போய் விட்டார்; அந்தப் பிரயத்தனத்திலேதான் என்னுடைய ஒரு கை போயிற்று; ஒரு கண் போயிற்று; முகத்தில் இந்தக் கத்திக் காயம் ஏற்பட்டது. ஆனால் என்னை வளர்த்த தாயை நான் காப்பாற்ற முடிந்தது; என் உயிருக்குயிரான சகோதரியின் குழந்தையை நான் காப்பாற்ற முடிந்தது. இது கடவுளின் கருணை அல்லவா?" பிறகு ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு முஸ்லிம் மசூதியில் பல ஸ்திரீகள் அடைக்கப்பட்டிருந்ததையும், அந்த மசூதியைக் கொளுத்திவிட்டு அதில் இருந்தவர்களையெல்லாம் கொன்று விடச் சில வெறியர்கள் முயன்றதையும், தான் தன்னந்தனியாக அவர்களை எதிர்த்து நின்றதையும், அதற்குள் ரஜினிபூர் மகாராணி படைகளுடன் வந்து தன்னையும் மசூதியில் இருந்த ஸ்திரீகள் எல்லாரையும் காப்பாற்றியதையும் பற்றித் தாரிணி கூறினாள். சௌந்தரராகவன் ஏற்கனவே அந்த விவரங்களையெல்லாம் பத்திரிகையில் படித்திருந்தான். அப்போது அந்த முஸ்லிம் மசூதியை இந்த ரஜினிபூர் மகராணி எதற்காக காப்பாற்றினாள் என்று ஆத்திரப்பட்டான். இப்போது தாரிணி கூறிய செய்தி அவனுடைய உள்ளத்தில் சொல்லமுடியாத குழப்பத்தை உண்டு பண்ணியது. கடவுளே! அந்த மசூதியில் இருந்தல்லவா தன்னுடைய குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறாள்? ரஜினிபூர் மகாராணி நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றி யிராவிட்டால்? அரைமணி நேரம் கழித்துச் சென்றிருந்தால்?- ஒருவேளை இது கடவுளின் கருணைதானா?.... அந்தச் சமயத்தில் 'கண கண கண'வென்று டெலிபோன் கருவியின் மணி அடித்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்தொன்பதாம் அத்தியாயம்
கடவுளின் கருணை

,dd>மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் பெரியோர்கள் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கடவுளுடைய செயல்களையும் அச்செயல்களின் காரணங்களையும் நாம் அறிய முடிவதில்லை. அறிந்தால் நாம் மனிதத் தன்மையைக் கடந்து தெய்வத்தன்மைக்கே உரியவர்களாகி விடுவோம் அல்லவா? உலகத்தில் பிறப்பவர்கள் பலர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் துன்பப்பட்டே மடிந்து போகிறார்கள். ஒரு சுகத்தையும் காணாமல் கண்ணை மூடிவிடுகிறார்கள். அக்கிரமக்காரர்களின் அநியாயக் கொடுமைகளுக்கு ஆளாகிச் சாகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு நெஞ்சு கொதிக்கிறது. கடவுள் ஒருவர் இருந்தால் அவர் இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார் என்று எண்ணுகிறோம். கடவுள் ஒருவர் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவரைத் 'தீனபந்து' என்று சொல்வது பெரும் பொய் என்று முடிவு செய்கிறோம். இதே உலகத்தில் பிறக்கும் வேறு சிலர் என்றைக்கும் சுக போகிகளாய் இருந்துவிட்டுப் போவதைப் பார்க்கும்போது, "ஆஹா! கடவுள் ஒருவர் இருந்தால் அவர் எத்தகைய பாரபட்ச முடையவராயிருக்க வேண்டும்?" என்று வியப்புறுகிறோம். இவையெல்லாம் நம்முடைய சிற்றறிவைக்கொண்டு பேரறிவாள னாகிய இறைவனுடைய செயல்களைக் கணிக்கப் பார்ப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் என்று பெரியோர்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அன்னை ஒருத்திக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் சுகமாயிருக் கின்றன. ஒரு குழந்தை மட்டும் நோய்ப்பட்டு மெலிந்து போயிருக்கிறது. அதன் ஜீரண சக்தி குன்றியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கும் முடியாமல் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாயிருக்கிறது. தாயார் மற்ற மூன்று குழந்தைகளுக்கும் நல்ல வளமான உணவு கொடுக்கிறாள். சோறும் கறி வகைகளும் பட்சணங்களும் பழமும் அக்குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள். மெலிந்த நோயாளிக் குழந்தைக்கு அத்தகைய நல்ல உணவு கொடுக்காமல் வெறும் கஞ்சி கொடுக்கிறாள். நோயாளிக் குழந்தை என்ன நினைக்கிறது? "பார்! நம்முடைய தாயாருக்குத்தான் எத்தனை பட்சபாதம்? நான் மெலிந்தவன்; எனக்கு நல்ல போஷாக்கு வேண்டும்; ஆயினும் எனக்கு வெறும் கஞ்சியைக் கொடுக்கிறாள். என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களா யிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்னை நல்ல புஷ்டியான உணவைக் கொடுக்கிறாள்! இது என்ன அநியாயம்? இது என்ன பட்சபாதம்!" என்று எண்ணமிடுகிறது.

,dd>குழந்தை சிற்றறிவு படைத்தது, அதனால் அதற்குத் தன் தாயின் செயல் அர்த்தமாகவில்லை. தன்பேரில் உள்ள அன்பினாலேதான் அன்னை அவ்விதம் தனக்குப் பத்தியமாகக் கஞ்சி கொடுக்கிறாள் என்பதை அக்குழந்தை அறிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் தன் தாயார் மற்ற மூன்று குழந்தைகளையும் விடத் தன்னைப் பற்றியே ஓயாக் கவலை கொண்டி ருக்கிறாள் என்பதை அக்குழந்தை அறியவில்லை. கடவுளைப் பற்றிப் புகார் கூறும் மாந்தர்கள் அந்தக் குழந்தையின் நிலையில் உள்ளவர்களே! கடவுளின் கருணையையோ, அக்கருணையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல் களையோ அறிந்துகொள்ளும் சக்தி தம்முடைய சிற்றறிவுக்குக் கிடையாது. ஆகையினாலேயே குறைப்படுகிறோம்; குற்றம் கூறுகிறோம். அது காரணமாகவே நம் துன்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். நோய்ப்பட்ட குழந்தைக்குத் தன் அன்னையிடம் பூரண நம்பிக்கையிருந்தால், அது மேற்சொன்னபடியெல்லாம் எண்ணி மனம் வெம்ப வேண்டியதில்லை. குழந்தை யின் உடல் நோய்ப்பட்டிருந்தாலும் அதன் மனமாவது நிம்மதியாயிருக்கும். அதுபோலவே கடவுளுடைய செயல்களின் காரண காரியங்களை அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய அறிவு நமக்கில்லாவிட்டால் பாதகம் இல்லை. கடவுளிடம் நம்பிக்கை யிருந்தால் போதும். அந்த நம்பிக்கையானது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்திருக்கும் போதும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிய தைரியத்தை அளிக்கிறது. மன நிம்மதியைக் காட்டிலும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேண்டிப் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது?....

,dd>இந்த வேதாந்த விசாரணைகளையெல்லாம் இவ்விடத்தில் நாம் நுழைத்திருப்பதற்கு அவ்வளவு முக்கியமான காரணம் ஒன்றுமில்லைதான். இனிச் சொல்லவேண்டியிருப்பதைச் சொல்லுவதில் நமக்கு ஏற்படும் தயக்கந்தான் உண்மையான காரணமாகும். வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கும்படி கோருகிறோம். தாரிணி சொன்னதையெல்லாம் கேட்டு அளவில்லாத மனக்குழப்பத்துக்கு உள்ளாகியிருந்த சௌந்தரராகவனுக்கு அந்த டெலிபோன் அடித்த மணி ஒரு வரப்ரசாதமாகத் தோன்றியது. பேச்சை மாற்ற அது ஒரு சாதனம் ஆகுமல்லவா! "இந்த வேளையில் யார் டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்!" என்று எரிச்சலாகச் சொல்லிக்கொண்டே சௌந்தரராகவன் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, "யார் அது?" என்று கேட்டான். டெலிபோனில் அவனுக்கு கிடைத்த செய்தி மிக அதிசயமான செய்தியாயிருக்க வேண்டும். அவனுடைய முகத் தோற்றத்தில் அவ்வளவு மாறுதல் காணப்பட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தாரிணியைத் திரும்பிப் பார்த்து, "கேட்டாயா, தாரிணி! சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்பது பெரும் பொய். சூரியா அந்த மாதிரி என்னிடம் எதற்காகப் புளுகினான் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமே, மாஜி திவானுடைய மகள் பாமாவை! அவளுடைய வீட்டில் இப்போது சீதா இருக்கிறாளாம். அங்கே சூரியாவும் இருக்கிறானாம். பாமா என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லுகிறாள்! நீயும் வரு.....?" என்று சொன்னவன், சொல்ல வந்த வார்த்தையைப் பூர்த்தி செய்யாமல் சட்டென்று நடுவில் நிறுத்தினான். அவனுடைய குரலில் தொனித்த குதூகலத்தைத் தாரிணி நன்றாக அர்த்தம் செய்து கொண்டாள். சீதா உயிரோடிருக்கிறாள் என்பதனால் மட்டும் ஏற்பட்ட குதூகலம் அல்ல அது. ஒரு கையும் ஒரு கண்ணும் இழந்த இந்தக் கோரஸ்வரூபத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இனி அவனுக்கு இல்லையல்லவா? தாரிணி கேட்ட கலியாண சம்பந்தமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லையல்லவா?

,dd>"ஆமாம், நானும் வருகிறேன்!" என்றாள் தாரிணி. அவளைத் தன்னுடன் அழைத்துப் போக ராகவனுக்கு அவ்வளவு ஢ருப்பமில்லையென்பது தாரிணிக்குத் தெரிந்துதானிருந்தது. ஆயினும் சீதா உயிரோடிருக்கும் செய்தியை அறிந்த பிறகு அவளை உடனே போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ராகவன் விரைந்து சென்று காரை எடுத்தான். தாரிணி பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். வண்டி போய்க் கொண்டிருந்தபோது ராகவன், டெலிபோன் பேச்சில் தான் அறிந்த சில விவரங்களைக் கூறினான்;- "சீதாவும் அவள் தகப்பனாரும் இத்தனை நாளும் பானிபத்தில் இருந்தார்களாம். இன்றைக்குக் காந்திஜியின் கடைசி ஊர்வலத்துக்காகச் சீதாவைச் சூரியா அழைத்து வந்தானாம். கூட்டத்தில் இருவரும் பிரிந்து போய் விட்டார்களாம். கூட்டம் கலையும் சமயத்தில் சூரியா பாமாவைத் தற்செயலாகச் சந்தித்துச் சீதாவைப் பிரிந்தது பற்றிச் சொன்னானாம். போலீஸுக்கு டெலிபோன் பண்ணித் தேடச் செய்யலாம் என்று இருவரும் பாமாவின் வீட்டுக்கு வந்தார்களாம். அங்கே அந்த வீட்டு வாசலிலேயே சீதா பிரக்ஞையற்றுக் கிடந்தாளாம். உள்ளே எடுத்துப் போய்ச் சிகிச்சை செய்து வருகிறார்களாம், டாக்டரும் ந்திருக்கிறாராம். இந்தச் சூரியா எதற்காக என்னிடம் அவ்வளவு பெரிய பொய்யைச் சொன்னான் என்று தெரியவில்லை. சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்று சொன்னானே? எவ்வளவு பெரிய அயோக்கியன் அவன்?...." தாரிணி அப்போது, "வீணாக ஏன் வைகிறீர்கள்? அவரைக் கேட்டால் அல்லவா உண்மை தெரியும்? ஒருவேளை உங்களைச் சந்தித்தபோது சீதா உயிரோடிருப்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்கலாம்!" என்றாள். "இருந்தாலும் இருக்கலாம், ஆனாலும் என்ன அதிசயம் பார், தாரிணி! சீதா இன்றைக்கு அகப்பட்டது ஓர் அற்புதம் இல்லையா? கடவுளுடைய கருணை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்!" என்றான் ராகவன்.

,dd>வண்டி பாமா வீட்டு வாசலில் போய் நின்றது. வண்டிச் சத்தம் கேட்டதும் பாமாவும் சூரியாவும் தயாராக வாசற்பக்கம் வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய ராகவனைப் பாமா கையைப் பிடித்து, "சீக்கிரம் வாருங்கள்!" என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். போகும்போதே ராகவன், "சூரியா! நன்றாக என்னை ஏமாற்றினாய், போனால் போகட்டும்! வண்டியில் தாரிணி இருக்கிறாள் அவளைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். தாரிணியின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்ததும் சூரியாவின் மனப்போக்கு எப்படியிருக்கும் என்று சௌந்தரராகவனுடைய மனம் அச்சமயம் எண்ணமிட்டது. பரபரப்புடன் மோட்டார் வண்டியை அணுகி வந்த சூரியாவைப் பார்த்துத் தாரிணி, "என் அருகில் நெருங்க வேண்டாம், சூரியா! நான் அசுத்தமானவள்!" என்றாள். "அதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். தாரிணி! எது எப்படி யிருந்தாலும் உன்னைப் போல் புனிதமான பொருள் இந்த உலகில் வேறொன்று இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்!" என்று சொன்னான் சூரியா. "அதைப்பற்றி அப்புறம் பேசலாம். சீதாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று தாரிணி கேட்டாள். "பிழைக்க மாட்டாள் என்று டாக்டர் சொல்கிறார். இப்போதுதான் கொஞ்சம் பிரக்ஞை வந்திருக்கிறது. பிரக்ஞை வந்ததும் உன் பெயரையும் வஸந்தியின் பெயரையும் சொன்னாள்" என்றான் சூரியா. "ஐயோ! அப்படியானால் உடனே போய்க் குழந்தையை அழைத்து வரவேண்டும். நம்முடைய பழைய வீட்டிலே இருக்கிறாள்! நீங்கள் என்னுடன் வருவீர்களா?" என்றாள் தாரிணி. "அவசியம் வருகிறேன், பாவம்! ராகவன் சீதாவின் அந்திய காலத்திலாவது அவளுடன் சிறிது நேரம் தனியாக இருந்து அவளுடைய மனம் குளிரச் செய்யட்டும்" என்றான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


நாற்பதாம் அத்தியாயம்
"பாக்கியசாலி சீதா!"

டாக்டர் இஞ்செக்ஷன் செய்வதற்காக மருந்து தயாரித்துக் கொண்டிருந்தார். பாமா அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ராகவன் சீதாவின் தலையைத் தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி அவன் விம்முகிற சத்தம் கேட்டது. சீதா தட்டுத் தடுமாறிச் சொன்னாள்:- "நீங்கள் ஏன் அழ வேண்டும்? எனக்கு இதைவிட வேறு பாக்கியம் கிடைக்குமா? கஸ்தூரிபாய் தெய்வத்தைப்போல நானும் தாலி கட்டிய புருஷன் மடியில் படுத்துச் சாக வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன் அந்தத் தவம் பலித்துவிட்டது. என்னைப் போலப் பாக்கியசாலி யார்? நீங்கள் அழவேண்டாம்!" என்றாள். சௌந்தரராகவனைத் துக்கம் ஒரு பக்கமும் வெட்கம் இன்னொரு பக்கமும் பிடுங்கித் தின்றன. "சீதா! இந்த மாதிரியெல்லாம் பேசாதே! உனக்கு உடம்பு ஒன்றுமில்லை. சீக்கிரம் சுகமடைந்து பிழைத்து எழுந்திருப்பாய்!" என்றான். "அதெல்லாம் இல்லை, நான் இனி வெகு நேரம் உயிரோடிருக்க மாட்டேன். அதென்னமோ அப்படி எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. தாரிணி அக்காவும் நீங்களும் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டேன். அதற்காகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். 'உங்களை மணந்துகொள்ளச் சம்மதம்' என்று தாரிணி அக்கா சொன்னதை என் காதால் கேட்டேன். உடனே புறப்பட்டு வந்துவிட்டேன், எனக்கு இனி ஒரு குறையும் இல்லை. அக்கா இப்போது எங்கே? அவளைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கள். அவளுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேணும்." "வஸந்தியை அழைத்துக்கொண்டு வரத் தாரிணி போயிருக்கிறாள். நீ நினைப்பது போலெல்லாம் ஒன்றும் நடவாது, சீதா! என்னைப் பரிதவிக்க விட்டு நீ போவது கடவுளுக்கே பொறுக்காது!" என்றான் ராகவன். அதே சமயத்தில் கடவுளை நினைத்து, "பகவானே! இந்த ஒரு தடவை மட்டும் சீதாவைக் காப்பாற்றி விடு. அப்புறம் நான் யோக்கியமாய் நடந்து கொள்ளுகிறேன் இனிமேல் ஒரு பிசகும் செய்யமாட்டேன். சுயநலத்துடன் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்!" என்று மனமாரப் பிரார்த்தனை செய்தான். ராமேசுவரம் முதல் காசி வரையில் உள்ள கோயில் தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டான். அந்த நிமிஷத்துக்கு முன்னால் ராகவன் எந்த நாளிலும் அவ்வளவு தீவிர ஆஸ்திகனாக இருந்ததில்லை.

இஞ்செக்ஷன் மருந்து ஏற்றிய ஊசியுடன் டாக்டர் வந்தார். ஊசி குத்திவிட்டு, "சரி, நான் போய் வருகிறேன். காலையில் நிலைமை எப்படியிருக்கிறது என்று டெலிபோன் செய்யுங்கள்!" என்றார். டாக்டருடன் வாசல் வரையில் சென்ற பாமா திரும்பி வந்ததும் ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவிக்கு உங்களிடம் ஏதாவது சொல்லிக்கொள்ள வேணுமா, மனதில் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டு விடுவது நல்லது" என்றாள். ராகவன் கோபமுற்று, "இது என்ன நான்ஸென்ஸ்? நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நலமாயிருக்கும்!" என்றான். அப்போது சீதா, "அவர் மேல் எதற்காக வீணில் கோபித்துக் கொள்கிறீர்கள்? அவர் கேட்கச் சொல்வது நியாயந்தான், என் மனதில் ஒரு ஆசை இருக்கத்தான் இருக்கிறது. நான் கண்ணை மூடிய பிறகு நீங்கள் தாரிணி அக்காவைக் கட்டாயம் கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அக்கா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள், அதை மீறமாட்டாள்" என்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் தாரிணியும் சூரியாவும் வஸந்தியுடன் வந்து சேர்ந்தார்கள். எத்தனை எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்திருந்த வஸந்திக்குத் தன் தாயாரின் நிலைமை எந்தவித உணர்ச்சியையும் தரவில்லை. பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். "இத்தனை நாள் எங்கே அம்மா ஒளிந்து கொண்டிருந்தாய்?" என்றாள். சீதா தன்னுடைய துவண்ட கைகளைத் தூக்கிக் குழந்தையைத் தன் முகத்தோடு சாத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளுடைய கையில் அதற்கு வேண்டிய பலம் இல்லை. அதைப் பார்த்த தாரிணி குழந்தையின் முகத்தைத் தாயின் முகத்தோடு சேர்த்து வைத்தாள். சீதா அண்ணாந்து நோக்கினாள், முகமூடி தரித்த உருவத்தைப் பார்த்து, மிக மெல்லிய குரலில், "இது யார்?" என்று கேட்டாள். "என்னை உனக்குத் தெரியவில்லையா, சீதா!" என்றாள் தாரிணி. அவள் யார் என்பதைக் குரலிலிருந்து சீதா தெரிந்து கொண்டாள்.

"வந்து விட்டாயா, அக்கா! ரொம்ப சந்தோஷம் என் மனது குளிர்ந்து விட்டது. நீ இவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு இனிமேல் ஒரு கவலையும் இல்லை. ஆனால் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? திறந்து விடு! அக்கா! நான் சாவதற்கு முன்னால் உன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கவேணும். பார்த்துவிட்டால், அந்த ஞாபகமாகவே மேல் உலகத்துக்குப் போவேன். போகும்போது வானத்தில் பூரண சந்திரனைப் பார்த்து அக்காவின் முகத்தைப் போல் அழகாயிருக்கிறதா என்று ஒத்துப் பார்த்துக் கொண்டு போவேன்!....." இப்படி பேசிக் கொண்டேயிருக்கையில் சீதாவின் கண்கள் தாமாக மூடிக்கொள்ளத் தொடங்கின. தாரிணி சீதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்தாள். மிக மெலிவாயும் அதிவேகமாயும் அடித்தது. கூண்டிலிருந்து கிளி பறந்து செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்பதைத் தாரிணி உணர்ந்தாள். "சீதா! இதோ என் முகத்திரையை எடுக்கிறேன். கண்ணைத் திறந்து ஒரு தடவை என்னைப் பார்! பயந்து போய் விடாதே! உன்னுடைய குழந்தை வஸந்தியை நான் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போது இந்த மாதிரி ஆயிற்று. ஆனால் இதற்காக நீ சிறிதும் வருத்தப்பட வேண்டாம்......." இந்த வார்த்தை ஒன்றும் சீதாவின் காதில் விழவில்லை. திரை விலகி தாரிணியைப் பார்த்தவுடன் சீதாவின் முகம் அணையுந் தறுவாயில் தீபம் சுடர் விடுவதுபோல் காந்தி வீசிப் பிரகாசித்தது. முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில், வியப்பும் ஆனந்தமும் ததும்பிய குரலில் கூறியதாவது; "அக்கா! உன் முகந்தான் என்ன அழகாயிருந்தது? முன்னே நான் பார்த்த போது இருந்ததைக் காட்டிலும் இப்போது உன் முகத்தில் களை சொட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அழகை இந்த உலகத்தில் நான் பார்த்ததேயில்லை. தேவலோகத்திற்குப் போனால் அங்கேயும் உன்னைப் போன்ற ரூபவதியைப் பார்ப்பேனா என்பது சந்தேகந்தான். உன்னைப் பார்த்துக் காதலித்த என் கணவர் என்னைக் காதலிக்கவில்லையென்றால் அதில் அதிசயம் என்ன இருக்கிறது? நான் பாக்கியசாலி, அக்கா! ஒரு குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் நான் போகிறேன், ஒருவரும் எனக்காகத் துக்கப்பட வேண்டாம்! சூரியா எனக்காக ரொம்ப வருத்தப்பட்டு உருகுவதாய்ச் சொல்வான். அவனை வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லு."

சீதா தன்னுடைய பெயநச் சொன்னது காதில் விழுந்ததும் சூரியா அருகில் வந்து அவள் முகத்துக்கு அருகில் குனிந்து, "சீதா! நான் இதோ இருக்கிறேன்" என்றான். அச்சமயம் சௌந்தரராகவன் கூடச் சூரியாவைத் தடுக்க முயலவில்லை. சீதா மிக மெல்லிய குரலில், "லலிதாவுக்கு கடிதம் எழுது; என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டதாக எழுது!" என்றாள். "இவ்வளவுதானா, சீதா! எனக்கு நீ சொல்ல வேண்டியது வேறொன்றுமில்லையா?" என்றான் சூரியா! "இல்லை, வேறொன்றும் இல்லை சூரியா! நான் பாக்கியசாலி! சீக்கிரம் கலியாணம் செய்துகொள்!" என்றாள் சீதா. சீதா பாக்கியசாலிதான்; இல்லை என்று யார் சொல்ல முடியும்? சூரியா விம்மினான், சௌந்தரராகவன் கதறினான். தாரிணியும் வஸந்தியும் பாமாவும்கூடத் துயரத்தின் மிகுதியால் அலறி அழுதார்கள். ஆனால் சீதாவின் காதில் அதெல்லாம் விழவில்லை. அவளுடைய உணர்விலும் தோன்றவில்லை. சீதாவின் உயிர் அநித்தியமான உடலை விட்டுப் பிரிந்தது. ஆகாய வெளியில் மிதந்து சென்றது. மேலே மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. வானவில்லின் வண்ணங்களிலே தோய்ந்து சென்றது. வெள்ளிய மேக மண்டலங்களின் வழியாகப் புகுந்து சென்றது. மந்தமாருதம் ஏந்திக் கொண்டு வந்த சுகந்த பரிமளத்தை முகர்ந்துகொண்டு சென்றது. இனிமையின் எல்லை என்று சொல்லக்கூடிய இசை இன்பத்தை அநுபவித்துக் கொண்டு சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் தேவலோகத்துப் பாரிஜாத மந்தார விருட்சங்களின் மலர்கள் பொலபொலவென்று உதிர்ந்தன. அவை சீதாவின் உயிரைச் சுற்றிச் சுழன்று கொண்டே வந்தன. தங்க நிறமும் ரோஜா நிறமும் மாந்தளிரின் நிறமும் கொண்ட மேனிகளுடனே கந்தர்வ கின்னரர்கள் வான வெளியில் ஆங்காங்கே நின்று "வருக! வருக! என்று இன்னிசையுடன் வரவேற்றார்கள். சீதாவின் உயிர் மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. அற்புத சௌந்தர்யம் வாய்ந்த தேவகணங்களின் உருவங்கள் மெல்லிய மேகத் திரைக்குள்ளே மறைந்து காணப்பட்டது.

ஆகா! அந்த உருவங்களின் சிலவற்றைச் சீதாவுக்குத் தெரியும்; நன்றாகத் தெரியும். அதோ லைலாவும் மஜ்னுவும் ஆடிப் பாடிக்கொண்டு போகிறார்கள். அதோ சத்தியவானும் சாவித்திரியும் கைகோத்துக்கொண்டு உலாவுகிறார்கள். இதோ உல்லாசமாய் அன்னப் படகில் மிதந்து செல்கிறவர்கள் ரோமியோவும் ஜுலியத்துமாகவே இருக்க வேண்டும். நளனுக்கும் தமயந்திக்கும் என்ன அவசரமோ தெரியவில்லை! இறகு கட்டிக்கொண்டு அவர்கள் பறக்கிறார்கள். பறந்தால் பறக்கட்டும்; இவர்களையெல்லாம் பார்த்து இப்போது என்ன ஆகவேண்டும்? நாம் பார்க்க விரும்பியது அன்னை கஸ்தூரிபாயை அல்லவா? அவர் எங்கே இருப்பார்? சொர்க்கலோகங்களிலெல்லாம் மேலான சொர்க்கலோகத்திலேதான் இருப்பார்? - இன்னும் மேலே மேலே போக வேண்டியதுதான். ஆகா! இது என்ன பிரகாசம்? இது என்ன ஜோதி? தேஜோமயமான உருவம் ஒன்று எங்கிருந்தோ வருகிறதா? அடடா! அதோ போகிறதே? இவர்கள், - நம்மைச் சுற்றி நிற்கும் தேவ கந்தர்வ கின்னரர்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள்? மின்னலைப் போல் தோன்றி, கோடி சூரியர்களைப்போல் பிரகாசித்து, ராமபாணத்தைப்போல் விரைந்து செல்லும் வடிவத்தைச் சுட்டிக்காட்டி என்ன சொல்லிக் கொள்கிறார்கள்?- "தெரிகிறது. தெரிகிறது!" "காந்தி மகாத்மாவின் ஜோதி" என்றல்லவா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்?- வான வெளியிலே பொழிந்த நறுமலர்களும் வீசிய மந்த மாருதமும், மிதந்து வந்த தேவகானமும் தேவர் தேவியரின் உபசரிப்பு, - எல்லாம் காந்தி மகாத்மாவுக்காகத்தான் போலும்! நான் பாக்கியசாலிதான்; சந்தேகமில்லை, மகாத்மாவின் ஆவி வானுலகம் செல்லும் அதே நாளில் நாமும் இங்கே வரும்படியான பேறு கிடைத்ததல்லவா? ஆனால் அவரை விடக்கூடாது! விட்டுப் பிரியக்கூடாது அந்த ஜோதி போன வழியே போனால் அன்னை கஸ்தூரிபாயைக் காணலாம். காந்திஜியின் ஆத்மா கஸ்தூரிபாயின் ஆத்மா இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு போகாமல் வேறு எங்கே போகும்? ஜோதி போன வழியிலேயே சீதாவின் ஆவியும் சென்றது. மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. ஆனால் விரைவில் அந்த ஜோதி போன வழி தெரியாமல் போய் மறைந்துவிட்டது.

ஆயினும் சீதாவின் ஆசை நீங்கவில்லை; நம்பிக்கை குன்றவில்லை. வானவெளியிலேயே போய்க் கொண்டேயிருந்தால் எப்படியும் அந்த ஜோதியைக் கண்டுபிடிக்காமலா போவோம்? சீதாவின் ஆவி பற்பல உலகங்களையும் தாண்டிக்கொண்டு சென்றது. நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு சென்றது. ஆகா! எத்தனை உலகங்கள்! எத்தனை சூரியர்கள்! எத்தனை சந்திரர்கள்! எத்தனை நட்சத்திரங்கள்! 'அகிலாண்ட கோடி' என்று சொல்வது எவ்வளவு உண்மை? இவ்வளவையும் தாண்டி அப்பாலே போக முடியுமா? 'அப்பாலுக்கு அப்பாலே' என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உண்டா? உண்டு; அவசியம் உண்டு, அத்தனை அண்டங்களையும் புவனங்களையும் சூரிய சந்திரர்களையும் கணக்கில்லா நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி ஒரே நீல நிறத்து வானவெளிதான்! முடிவில்லாத வானவெளி; எல்லையில்லாத நீல நிறம்; ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்த வெள்ளம். சீதா பாக்கியசாலி என்பதைக் குறித்துச் சந்தேகம் என்ன?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
சூரியாவின் இதயம்

சூரியா அடிக்கடி ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதுண்டு. தன்னுடைய வெளி மனம் என்ன நினைக்கிறது. தன்னுடைய அறிவு என்ன முடிவு சொல்கிறது. தன்னுடைய இதய அந்தரங்கத்தில் எத்தகைய ஆசை குடிகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்ப்பான். எந்த விஷயத்திலேனும் மனதில் குழப்பமிருந்தால், மனத்திற்கும் அறிவுக்கும் இதயத்துக்கும் வேற்றுமை இருப்பதாகத் தோன்றினால், அந்த விஷயத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தனை செய்வான். தன்னுடைய உணர்ச்சிகளில் உள்ள குழப்பத்தைப் போக்கித் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டுச் சில சமயம் அவன் 'டைரி' எழுதுவதும் உண்டு. பிப்ரவரி மாதம் 10-ம் தேதியன்று சூரியா தன்னுடைய 'டைரி'யில் பின்வருமாறு எழுதத் தொடங்கி னான். இன்று சீதாவின் பத்தாவது நாள் கிரியைகள் முடிவடைந்தன. அவளுடைய கணவன் சௌந்தரராகவன் பக்திசிரத்தை யுடன் வைதிகக் கிரியைகளைச் செய்தான். இத்தனை நாளும் வைதிகத்தில் இல்லாத பற்றுத் திடீரென்று ராகவனுக்கு ஏற்பட்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ராகவனுடைய சிரத்தையைக் காட்டிலும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் புண்ணியவதி பாமா காட்டிய வைதிக சிரத்தைதான். சீதாவின் சரமக் கிரியைகளையெல்லாம் அவள் தான் நடத்தி வைத்தாள் என்று சொல்ல வேண்டும். ராகவனுக்கு அது விஷயத்தில் கொஞ்சங்கூடக் கஷ்டமோ கவலையோ ஏற்படாமல் பாமா தன்னுடைய வீட்டிலேயே சகலவசதிகளும் செய்து கொடுத்தாள். சீ! இது என்ன வெட்கக்கேடு! இதுவும் ஒரு மானிட ஜன்மமா? பெண்டாட்டியைப் பறிகொடுத்தவன் கொஞ்ச நாளைக்காவது காத்திருக்கக் கூடாதா? அதற்குள்ளே இப்படி நாலு பேர் பார்த்துச் சிரிக்கும்படி நடந்து கொள்ள வேண்டுமா?

சீதா! இப்பேர்ப்பட்ட இதயமற்ற கிராதகனிடமிருந்து விடுதலையடைந்து நீ போய்ச் சேர்ந்தாயே? யமன் கருணையில்லாதவன் என்று சொல்லுவது எவ்வளவு அறிவீனம்? உன்னை யமன் கொண்டு போனதைப் போல் கருணையுள்ள செயல் வேறு என்ன இருக்க முடியும்?.... சீதா விஷயத்தில் என்னுடைய கடமையைச் சரிவரச் செய்துவிட்டேனா? என் அத்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேனா? இந்த எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். வாழ்நாள் உள்ள வரையில் அந்தக் கேள்விகள் மனதில் உதயமாகிக் கொண்டுதானிருக்கும். ஆயினும் என்னாலியன்றவரை என் கடமையைச் செய்துதானிருக்கிறேன். என் உயிரைத் திரணமாக மதித்துச் சீதாவைக் காப்பாற்றி யிருக்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம்! சீதாவுக்காக நான் செய்த ஒவ்வொரு உதவியும் அவளுக்கு அபகாரமாகவே முடிந்திருக்கிறது. உண்மையில் அவளுடைய துயர வாழ்க்கைக்குக் காரணமானவன் நானே. அத்திம்பேரின் தந்தியை மட்டும் அன்று நான் மறைத்திரா விட்டால்.... சீதாவின் தகப்பனார், - அத்திம்பேர் துரைசாமி ஐயரின் - வாழ்க்கையும் முடிந்து விட்டது. பரிதாபம்! பரிதாபம்!- சீதா பல தடவை சொன்னாளே? அந்தத் துப்பாக்கியை அவர் தூர எறிந்திருக்கக் கூடாதா? அந்தத் துப்பாக்கியினால் அவருக்கு சாவு என்று ஏற்பட்டிருக்கும்போது எப்படித் தூர எறிந்திருக்க முடியும்! ஒருவிதத்தில் பார்த்தால் அவருக்கு இது நல்ல முடிவுதான்! அவருடைய இரு புதல்விகளில் ஒருத்தி செத்துவிட்டாள். இன்னொரு பெண் சாவைக் காட்டிலும் பயங்கரமான கதியை அடைந்திருக்கிறாள். இத்தகைய கொடூரத்தை எந்தத் தகப்பனார்தான் சகிக்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய தீச்செயல்களே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். பாவம்! நான் பானிபத் பட்டணத்துக்குப் போவதற்குள்ளே அனாதைப் பிரேத சம்ஸ் காரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். மனிதருக்கு இறந்த பிறகு நல்ல யோகம். காந்தி மகான் காலமான செய்தியைக் கேட்டுத் துக்கம் தாங்க முடியாமல் சுட்டுக்கொண்டு செத்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. இதுவும் ஒரு விதமான யோகந்தானே!.....

சீதா இறந்துவிட்டாள்; துரைசாமி ஐயரும் போய்விட்டார் ஆனால் தாரிணி உயிரோடிருக்கிறாள். செத்துப் போனவர்களை மறந்துவிட்டு உயிரோடிருப்பவர்களைப் பற்றி கவனிக்க வேண்டும். தாரிணி விஷயத்தில் நான் என்னுடைய கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறேனா? என்னுடைய இதயத்தின் உணர்ச்சியும் உள்ளத்தில் ஆசையும் என் அறிவு சொல்லும் முடிவும் ஒன்றாயிருக்கின்றனவா? தாரிணியிடம் இன்றைக்கு நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்தியமானவை தானா? என் இதயத்திலிருந்து உண்மையாகச் சொன்னவைதானா? அல்லது வீம்புக்காகவோ ஜம்பத்துக்காகவோ அவசரப் பட்டுச் சொல்லி விட்டேனா? இன்று தான் சொன்ன வார்த்தைகளுக்காகப் பிறகு எக்காலத்திலேனும் வருத்தப் படுவேனா?.... காந்தி மைதானத்தில் பழைய இடத்தில் இன்று மாலை நாங்கள் சந்தித்தோம். எங்கள் வருங்கால வாழ்வைப் பற்றிப் பேசினோம். அந்தச் சம்பாஷணையை ஒருவாறு இங்கே எழுதப் பார்க்கிறேன். எழுதிய பிறகு படித்துப் பார்த்தால் ஒருவேளை என்னுடைய பிசகை நானே தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? முதலில் கொஞ்ச நேரம் சீதா, துரைசாமி ஐயர் - இவர்களுடைய பரிதாப மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி விம்மினாள்! அழுதாள், அவளுடைய கண்ணிலிருந்து கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எழுந்தது. ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை. ஏனெனில் அவள் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தாள். எதற்காக என்றுதான் எனக்குத் தெரியுமே? அன்றைக்கு - சீதாவின் உயிர் பிரிந்த அன்றைக்கு, - ஒரு நிமிஷம் பார்த்தேன். ஐயோ! அதை நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. ஆயினும் அதனாலே தாரிணியின் விஷயத்தில் என்னுடைய மனம் சிறிதாவது சலித்ததா? ஒரு நாளும் இல்லை. அவளுடைய முகத்தை விகாரப்படுத்துவனவென்று மற்றவர்கள் நினைக்ககூடிய காரியங்கள் அவளுடைய சௌந்தர்யத்தை அதிகமாக்குகின்றன என்றே நான் எண்ணுகிறேன். சீதா உயிர் விடும் தருவாயில் அவளுடைய கண்களுக்கு அப்படித்தானே தோன்றியது?

என்றாலும், தாரிணியின் முகமூடியை நீக்குவதற்கோ கண்களைத் துடைப்பதற்கோ எனக்குத் தைரியம் வரவில்லை. ஒருவாறு விம்மலும் அழுகையும் நின்ற பிறகு 'எத்தனை நேரம் போனதைப் பற்றியே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது? வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா? என்ன செய்வதாக உத்தேசம்?' என்று நான் கேட்டேன். பேச்சை அப்படித் திருப்பினால் அவளுடைய அழுகை நிற்கும் என்பதற்காகத்தான் அவ்விதம் கேட்டேன். 'எனக்கு ஒரு உத்தேசமும் இல்லை. யோசனை செய்யும் சக்தியும் இல்லை, நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்களுடைய வருங்காலத் திட்டம் என்ன?' என்று தாரிணி கேட்டாள். 'என்னுடைய திட்டத்தை இப்போது எப்படிச் சொல்ல முடியும்? உன்னுடைய உத்தேசம் தெரிந்த பிறகுதான் என்னுடைய திட்டம் தயாராகும்' என்றேன். 'எந்த விஷயத்தில் என்னுடைய உத்தேசம் தெரியவேண்டும்? என் தந்தையைப்போல் உயிரை விட்டுவிட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை!' என்றாள் தாரிணி. 'உயிரை விடுவதற்குத் தைரியம் வேண்டாம்; உயிரோடிருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும்' என்று நான் சொன்னேன். 'அந்தத் தைரியம் எனக்கு வேண்டிய அளவு இருக்கிறது. மேலும், வஸந்தி விஷயமான பொறுப்பு ஒன்றும் எனக்கு இருக்கிறதல்லவா?' என்றாள் தாரிணி. 'வஸந்தி விஷயமான பொறுப்பும் இருக்கிறது. சீதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. தாரிணி! அந்த வாக்குறுதியின்படி ராகவனைக் கலியாணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்!' என்றேன். தாரிணி சிரித்தாள், அந்த நேரத்தில் அவள் அவ்விதம் சிரித்தது எனக்குப் பிடிக்கவில்லை. 'என்னத்திற்குச் சிரிப்பு' என்று கேட்டேன். 'நான் விரும்பினால் மட்டும் என்ன பிரயோசனம்? அதற்குச் சௌந்தரராகவன் அல்லவா இஷ்டப்பட வேண்டும்' என்றாள். 'இது என்ன பேச்சு? உன்னை விரும்பி மணந்து கொள்ள இஷ்டப்படாத மூடன் இந்த உலகத்தில் யார் இருக்க முடியும்? என்றேன்.

'சூரியா! நீங்கள்கூட இப்படிப் பொய் வார்த்தை சொல்லுவது எனக்கு அதிசயமாயிருக்கிறது. இந்த முகமூடியை நீக்கி என் முகத்தின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்த யார்தான் என்னை மணந்து கொள்ளத் துணிவார்கள்?' என்றாள் தாரிணி. 'மன்னிக்க வேண்டும், தாரிணி! ராகவனுடைய சுபாவம் தெரிந்ததும் நான் அவ்விதம் எதிர்பார்த்தது பிசகுதான்!' என்றேன். 'அவரை மட்டும் சொல்வானேன்! இந்த உலகத்தில் பிறந்த எந்தப் புருஷனும் இப்படிப்பட்ட கோர முகம் உடையவளைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டான்' என்றாள். 'அப்படிச் சொல்ல வேண்டாம், சௌந்தரராகவனோடு எல்லோரையும் சேர்த்துவிட வேண்டாம். ராகவனுக்கு முகத்தின் அழகு ஒன்றுதான் தெரியும்; அகத்தின் அழகைப்பற்றி அவன் அறிய மாட்டான். உண்மைக் காதல் என்பது இன்னதென்று அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆக்ரா கோட்டையில் அக்பர் சக்கரவர்த்தியின் அரண்மனையில் முதன் முதலில் பார்த்ததிலிருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன். உன் முகத்தை நான் காதலிக்கவில்லை; உன்னைக் காதலிக்கிறேன்!' என்று ஆவேசமாகப் பேசினேன். தாரிணி சற்று மௌனமாயிருந்தாள். பிறகு, 'சூரியா! உங்களுடைய காதலைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் இல்லை. ஆனால் காதல் வேறு; கலியாணம் வேறு. கலியாணம் என்றால் புருஷன் மனைவியின் கரம் பிடிக்க வேண்டும் அல்லவா? பிடிப்பதற்கு கை இல்லாவிட்டால்.....?' என்றாள். நான் குறுக்கிட்டு, 'ராகவனுக்கு அது ஒரு தடையாயிருக்கலாம். கை கோத்துக் கொண்டு 'பார்ட்டி' களுக்குப் போக முடியாததை எண்ணி அவன் கலியாணம் வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் என் விஷயத்தில் அது ஒரு தடையாகாது. கரம் பிடிப்பதுதான் கலியாணம் என்று நான் கருதவில்லை, மனம் பிடிப்பதுதான் கலியாணம். நம் இருவருடைய மனமும் ஒத்திருப்பதுபோல் வேறு எந்தத் தம்பதிகளின் மனமும் ஒத்திருக்கப் போவதில்லை.

வேறு என்ன தடை? நீ முடிவு சொல்ல வேண்டியதுதான்; உடனே கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட்டு விடலாம்!' என்றேன். உணர்ச்சி மிகுதியினால் தொண்டை அடைக்க, ஆனந்த மிகுதியினால் நாத் தழுதழுக்க, தாரிணி, 'சூரியா! உங்களைப் போன்ற உத்தமர் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கும் இந்த உலகத்தில் உயிரோடிருக்கலாம் என்ற ஆசை உண்டாகிறது. உங்களுடைய உயர்ந்த நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். ஆயினும் யோசனை செய்வதற்கு எனக்குச் சில நாள் அவகாசம் கொடுங்கள்!' என்று சொன்னாள். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் இன்னொரு தடவை படித்துப் பார்த்தேன். தாரிணியிடம் நான் கூறிய வார்த்தையெல்லாம் உண்மைதானா என்று சிந்தித்தேன். என் இதயத்தின் ஆழத்தை எட்டிச் சோதனை செய்து பார்த்தேன், சந்தேகமே இல்லை. தாரிணியிடம் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான். அவளிடம் நான் கொண்ட காதலுக்கு ஆதி அந்தமில்லை; அழிவில்லை; முடிவில்லை. அது உடம்பைப் பற்றிய காதல் அல்ல? முகத்தையோ நிறத்தையோ பற்றிய காதல் அல்ல; மனதுக்கு மனம் கொள்ளும் காதல் அல்ல, இரண்டு ஆத்மாக்கள் இதயாகாசத்தில் ஒன்று சேரும்போது ஏற்படும் புனிதமான தெய்வீகக் காதல். எங்களுடைய காதலுக்கு ஒப்புமில்லை; உவமையும் கிடையாது. சீதாவின் பேரிலும் முதல் தடவை அவளை நான் பார்த்த நாளிலிருந்து எனக்குப் பாசம் ஏற்பட்டது உண்மைதான். அதற்கும் இதற்கும் எவ்வளவோ வித்தியாசம். சீதாவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தேன். ஆனால் என் இதயத்தை அவளுக்குக் கொடுக்கத் தயாராயில்லை.

சௌந்தரராகவனிடம வந்த கோபத்தினால் சில சமயம் சீதாவின் விடுதலைக்கு நான் விசித்திரமான சாதனங்களை எண்ணியதுண்டு. 'விவாகப் பிரிவினை செய்வித்துச் சீதாவை நான் கலியாணம் செய்து கொண்டால் என்ன?' என்று அசட்டு எண்ணம்கூட ஒரு தடவை உண்டாயிற்று. அதை மனம் விட்டு அத்திம்பேரிடங்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன். ஆனால் என் மனதில் ஒரு லவலேசமும் சீதா விஷயத்தில் களங்கம் ஏற்பட்டதில்லை. இது சௌந்தரராகவனுக்கும் நன்றாய்த் தெரியும். ஆகையினால்தான் அவனுக்குச் சீதாவும் நானும் நெருங்கிப் பழகுவதில் கோபம் உண்டாவதேயில்லை. தாரிணிக்கும் எனக்கும் சிநேகம் என்பது பற்றித்தான் அவன் குரோதம் கொண்டான். அந்தக் கோபத்தினால் என்னைக் கொன்றுவிடவும், போலீஸாரிடம் என்னைப் பிடித்துக்கொடுத்து விடவும், ராகவன் யத்தனித்தான். அவனுக்கு இப்போது படுதோல்வி தெய்வாதீனமாக நேர்ந்துவிட்டது. உடலழகு ஒன்றையே கருதும் அந்தச் சுயநலம் பிடித்த தூர்த்தன், இனி என்னுடன் போட்டியிட முடியாது. அவனுடைய காதல் எல்லாம் வெறும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவன் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். அந்தப் பாமாவையே அவன் கட்டிக்கொண்டு அழட்டும்! தாரிணி இனிமேல் என்னுடையவள்; எனக்கே அவள் முழுதும் உரியவள். என்னிடமிருந்து இனி யாரும் அவளை அபகரிக்க முடியாது. இதை நினைத்தால் எனக்குக் குதூகலமாய்த் தானிருக்கிறது. சீதா இறந்துவிட்டதையும் அவள் தகப்பனார் சுட்டுக் கொண்டு செத்ததையும் நினைக்கும்போது கஷ்டமா யிருந்தாலும், இனித் தாரிணி எனக்கே உரியவள் என்பதை நினைத்தால் உற்சாகமாயிருக்கிறது. கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட வேண்டும்; காஷ்மீருக்குப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
லலிதாவின் மன்னி

தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் எதிர் எதிராக நின்ற இரு மச்சு வீடுகளின் வாசலிலும் இப்போது போர்டு பலகைகள் தொங்கவில்லை. அட்வகேட் ஆத்மநாதய்யரைப் பின் தொடர்ந்து அவருடைய நண்பர் தாமோதரம்பிள்ளையும் தேவலோக நீதிமன்றத்தில் வழக்காடுவதற்குச் சென்றுவிட்டார். "ஆத்மநாதய்யர், பி.ஏ. பி.எல்." என்ற போர்டு தொங்கிய இடத்தில் சில காலம் "ஏ. பட்டாபிராமன், சேர்மன், முனிசிபல் கௌன்சில்" என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதைச் சீக்கிரத்திலேயே எடுத்துவிட வேண்டியதாயிற்று. ஏனெனில், பட்டாபிராமனுக்குப் போட்டியாக நின்ற கள்ள மார்க்கெட் முதலாளி பட்டாபிராமனுடைய தேர்தலில் ஊழல் நடந்ததாகவும் அந்தத் தேர்தல் செல்லுபடியாகாதென்றும் வழக்குத் தொடர்ந்தார். பணத்தின் பலத்தினால் கள்ள மார்க்கெட் ஆசாமியின் பக்கம் தீர்ப்பாயிற்று. பட்டாபிராமனுடைய சேர்மன் பதவி போயிற்று. அப்பீல் பண்ணும்படி சிலரும் மறுபடியும் தேர்தலுக்கு நிற்கும்படி சிலரும் பட்டாபிராமனுக்கு உபதேசித்தார்கள். லலிதா மட்டும், "போதும், போதும், ஒரு தடவை தேர்தலுக்கு நின்று பட்டதெல்லாம் போதும்!" என்று சொன்னாள். அவளுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு, பட்டாபிராமன் அப்பீல் செய்யவும் மறு தேர்தலுக்கு நிற்கவும் கண்டிப்பாக மறுதளித்து விட்டான். தாமோதரம்பிள்ளையின் மரணத்தறுவாயில் ஊருக்கு வந்து சேர்ந்த அமரநாதன் திரும்பக் கல்கத்தாவுக்குப் போக விரும்பவில்லை. நண்பர்கள் இருவரும் சுதந்திர இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்கு ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது காந்தி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்து அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தி விட்டது. நாள்கணக்காக அந்தச் சம்பவத்தைப் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்தனை செய்ய ஓடவில்லை.

இந்த நிலைமையிலேதான் சீதாவின் மரணத்தைப்பற்றிய செய்தியும் வந்து அவர்களுடைய கலக்கத்தை அதிகமாக்கியது. கல்கத்தா சாலையில் மூர்ச்சையடைந்து கிடந்த சீதாவை எடுத்துச் சென்று உயிரளித்துக் காப்பாற்றியவனான அமரநாத், அவளுக்கு முடிவில் நேர்ந்த கதியை அறிந்து பெரிதும் பரிதாபப்பட்டான். பட்டாபிராமனோ சீதா தன் வீட்டில் தங்கியிருந்தபோது வாழ்க்கை எவ்வளவு குதூகலமாயிருந்தது என்பதையும், உணர்ச்சி வசப்பட்டுத் தான் செய்த சிறு தவறினால் அவளுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வருந்தினான். சீதாவிடமிருந்த நல்ல குணங்களையும் துர்க்குணங்களையும் பற்றி அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு ஒத்துப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய தர்ம பத்தினிகளான லலிதாவும் சித்ராவும் சீதாவிடம் எந்தவிதமான துர்க்குணமும் இருந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. லலிதா எல்லாத் தவறுகளையும் தன் பேரிலேயே போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட்டாள். சீதாவுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் தானே காரணம் என்று சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விட்டாள். சௌந்தரராகவன் தன்னைப் பார்க்க வந்த இடத்திலேதான் சீதாவைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டான்? தான் பட்டிருக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அவனைக் கலியாணம் செய்து கொண்டு சீதா அல்லவா அனுபவித்தாள்? அப்படிப்பட்டவள் தன்னுடைய சொந்த மனக் கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இங்கே இருந்த சமயம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்? அவள் இருந்தபோது தன் வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்தது? வாழ்க்கையே ஒரு புது மெருகு பெற்று ஆனந்த கோலாகலமாக மாறியிருந்ததே! அப்படிப்பட்டவளை அநாவசியமாகச் சந்தேகித்து வீண் பழி சொல்லி நடுராத்திரியில் வீட்டை விட்டு ஓடும்படி செய்தேனே? அந்தப் பாவத்துக்காகக் கடவுள் என்னை என்னமாதிரி தண்டிப்பாரோ தெரியவில்லையே? - இப்படியெல்லாம் ஓயாது புலம்பிய லலிதாவுக்கு அவளுடைய தோழி சித்ரா பலவிதமாக ஆறுதல் சொன்னாள்.

"நீயும் நானும் என்னடி செய்யக் கிடக்கிறது? அவரவர்கள் தலைவிதிப்படியல்லவா எதுவும் நடக்கிறது?" என்றாள் சித்ரா. "அழகாயிருக்கிறது நீ சொல்லுகிறது! எல்லாம் தலைவிதி என்றால் பாவ புண்ணியமே கிடையாதா? காந்தி மகாத்மா இறந்ததும் அவருடைய தலைவிதிதானா? அவரைச் சுட்டுக் கொன்ற மகாபாவியின் பேரில் குற்றம் ஒன்றும் இல்லை என்றுகூடச் சொல்வாயோ?" என்றாள் லலிதா. "எதற்கும் எதற்கும் உவமானம் சொல்கிறாய், லலிதா! காந்தி மகாத்மா இறந்தது அவருடைய தலைவிதி என்றால், அவரைக் கொன்றவனைத் தண்டித்தால் அதுவும் அவன் தலைவிதிதானே? நாம் செய்யும் காரியங்களில் பாவ புண்ணியம் பார்த்துச் சரியான காரியத்தைச் செய்யவேண்டும். அப்புறம் நடக்கிறது அவரவர்களின் தலைவிதிபோல் நடக்கும்!" என்றாள் சித்ரா. "சில பேர் இந்த உலகத்தில் பாவ புண்ணியம் பார்த்து நல்ல காரியங்களையே செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையெல்லாம் சந்தோஷமே யில்லாமல் கஷ்டப்பட்டு சாகிறார்கள். இது அவர்கள் தலைவிதியா? பகவானுடைய செயலா? உன்னுடைய தத்துவம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றாள் லலிதா. "முதலாவது நீ சொல்கிறதே தப்பு. வாழ்க்கையெல்லாம் சந்தோஷமில்லாமல் கஷ்டப்பட்டுச் சாகிறார்கள் என்கிறாய், ஏன் அப்படிச் சாகிறார்கள்? வெளிப்பார்வைக்கு நமக்கு அப்படித் தோன்றலாம்; எல்லாருடைய வாழ்க்கையிலும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறித்தான் வருகின்றன!" "இல்லவே இல்லை! சீதாவையே பாரேன்! வாழ்க்கையெல்லாம் அவள் கஷ்டப்பட்டுக் கடைசியில் செத்தும் போனாளே?" "சீதா சந்தோஷமென்பதையே அறியாமல் செத்துப் போனாள் என்றா சொல்லுகிறாய்? சுத்தத் தவறு, லலிதா! நானும் சீதாவுடன் கொஞ்சம் பழகியிருக்கிறேன். அவள் சந்தோஷப்பட்டதும் அதிகம்; துக்கப்பட்டதும் அதிகம். இந்த உலகத்தில் சிலருடைய வாழ்க்கை சந்தோஷமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் எப்போதும் சப்புச் சவுக்கென்று இருந்து கழிந்து விடுகிறது. அவர்கள்தான் இந்த உலகத்தில் பாக்கியசாலிகள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

வங்காளத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'ஆண்டவனே? எனக்கு வேறு ஒரு பாக்கியமும் இந்த உலகத்தில் வேண்டாம்; கண்ணீர் பெருக்கி அழும் பாக்கியத்தைக் கொடு!' என்று கடவுளை வரம் கேட்கிறார். துக்கமும் சந்தோஷமும் கலந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. காவியங்கள், இதிகாசங்கள், கதைகள், - எல்லாவற்றையும் பார்! கதாநாயகர்கள்- கதாநாயகிகளில் கஷ்டப்படாதவர்கள் யார்?" "சீதாவின் வாழ்க்கையும் ஒரு கதையாகத்தான் முடிந்து விட்டது. சித்ரா! உனக்குத் தெரியுமோ என்னமோ? சீதாவுக்கு அந்த நாளிலிருந்தே கதை என்றால் ரொம்பப் பிரியம். ராஜம்பேட்டைக் குளத்தங்கரையில் முன்னிலவு எரிக்கும் இரவுகளில் அவளும் நானும் கதைபேசிக் கழித்த நாட்களை நினைத்தால் எனக்குப் பகீர் என்கிறது. எத்தனை எத்தனை கதைகள் சொல்வாள்? லைலா மஜ்னுன் கதை, ரோமியோ ஜுலியட் கதை, அனார்கலியின் கதை, - தமயந்தி நளன் கதை, சகுந்தலை துஷ்யந்தன் கதை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டிருப்பாள். கதை சொல்லும் போதெல்லாம் தானே அந்தக் கதாநாயகி என்று நினைத்துக்கொண்டுவிடுவாள். பாவம்! அவளுக்கா இப்படிப்பட்ட கதி வரவேண்டும்? அவள் எத்தனை எத்தனையோ கனவு கண்டாள்! ஒரு கனவும் பலிக்காமல், ஒரு சுகத்தையும் அநுபவிக்காமல் போய் விட்டாளே?" என்று சொல்லிவிட்டு லலிதா 'ஓ'வென்று அழுதாள். சித்ரா அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள். நல்ல வார்த்தை சொல்லிப் பயன்படாமற் போகவே கோபமாகவும் பேசினாள். கடைசியாக, சீதாவுக்காக இவ்வளவு வருத்தப்பட்டுக் கண்ணீர் விடுகிறாயே? அவளுடைய தமக்கையைப் பற்றிக் கொஞ்சம் அநுதாபங் காட்டக் கூடாதா? செத்துப் போன சீதாவைக் காட்டிலும் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்து உயிரோடு இருக்கிறாளே, அவளுடைய கதி இன்னும் பரிதாபம் இல்லையா?" என்றாள். லலிதாவின் அழுகையும் கண்ணீரும் நின்றன. "அதை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாய்த்தானிருக்கிறது. என் மூத்த அத்தங்காளை நான் பார்த்ததேயில்லை. முதன் முதலில் பார்க்கும்போது இப்படிப் பார்க்க வேண்டுமா என்று கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள் லலிதா.

"இதிலேகூட உன்னுடைய மனக் கஷ்டத்தையே பார்க்க வேண்டுமா, லலிதா! அடுத்தாற்போல் உன் தமையன் சூரியாவைப் பார்! தீரன் என்றால் அவன் அல்லவா தீரன்? அப்படி அங்கஹீனமானவளைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்! உன் அகத்துக்காரரும் சரி, என் அகத்துக்காரரும் சரி, பத்துக் காத தூரம் ஓடிப் போவார்கள். சீதாவின் கணவன் இருக்கிறானே, அந்த மகராஜன் அவனைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை! கல்கத்தாவிலே அவன் சுரம் வந்து படுத்தபோது எனக்குக் கொஞ்சம் இரக்கமாயிருந்தது. இப்போது என்ன தோன்றுகிறது, தெரியுமா? அவன் எதற்காகப் பிழைத்தான், கல்கத்தாவிலே செத்துப் போன அத்தனை ஆயிரம் பேரோடு அவனும் தொலைந்து போயிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது." "அதெல்லாம் சரிதான், சித்ரா! அவர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாகவே இருக்கட்டும். சூரியா இந்த விஷயத்தில் செய்கிற காரியம் சரியா? எனக்கென்னமோ சரியாகத் தோன்றவில்லை. அப்படியாவது என்ன கலியாணம் வேண்டிக் கிடந்தது! ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லாதவளைக் கலியாணம் செய்து கொள்ளவாவது? ஊருக்கெல்லாம் பரிகாசமாய்ப் போய்விடும்?" என்றாள் லலிதா. "அது உனக்கும் ரொம்ப அவமானமாகத்தான் இருக்கும்! ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லாதவளை மன்னி என்று அழைக்க உனக்கு வெட்கமாயிராதா? ஆனால் லலிதா! உன்னை அப்படியெல்லாம் சூரியா அவமானப்படுத்த மாட்டான். இங்கே தாரிணியை அழைத்துக்கொண்டு வரவே மாட்டான். அப்படி வருவதாயிருந்தால் நீ ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு! வந்தவர்களை நான் நன்றாய்த் திட்டித் திருப்பி அனுப்பி விடுகிறேன். அந்த வெட்கங்கெட்ட மூளிகள் இங்கே எதற்காக வரவேண்டும்?" என்று சித்ரா லலிதாவை ஏசுகிற பாவத்தில் பேசினாள். "அவ்வளவு கொடுமையானவள் அல்ல நான். இருந்தாலும் சூரியாவுக்கு இப்படியா ஒரு கலியாணம் என்று நினைத்தால் வருத்தமாய்த்தானிருக்கிறது. அம்மாவுக்கு இது தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்."

"உயிரை விட்டால் விடட்டுமே! உலகத்தில் எத்தனையோ பேர் செத்துப் போகிறார்கள்! நிமிஷத்துக்கு லட்சம் பேர் சாகிறார்கள்! காந்தி மகானே போய்விட்டார். உன் அம்மா இருந்து என்ன ஆகவேணும்? சூரியாவைப் போன்ற பிள்ளையைப் பெறுவதற்கு உன் அம்மா தபஸ் செய்திருக்க வேண்டும். அதை அவள் தெரிந்து கொள்ளாவிட்டால் யாருடைய தப்பு? நீயும் அவளோடு சேர்ந்து ஏன் அழ வேண்டும்? நானாயிருந்தால் இப்பேர்பட்ட தமையனைப் பெற்றதையெண்ணி இறுமாந்து போவேன். 'என் அண்ணனுக்கு நிகர் இல்லை' என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பேன். எங்கே லலிதா! சூரியாவின் கடிதத்தில் அந்தப் பகுதியை மட்டும் எனக்கு இன்னொரு தடவை வாசித்துக் காட்டடி!" கீழே கிடந்த கடிதத்தை லலிதா எடுத்து ஒரு தடவை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கடிதத்தில் பின் வரும் பகுதியைப் படிக்கத் தொடங்கினாள்: "அருமைத் தங்கையே! உனக்கும் சீதாவுக்கும் ஒரே பந்தலில் இரட்டைக் கலியாணம் நடந்ததே ஞாபகமிருக்கிறதா? இது என்ன கேள்வி? உன் கலியாணம் உனக்குக் கட்டாயம் ஞாபகம் இருக்கும். கலியாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னால் நமக்குள்ளே ஒரு விவாதம் நடந்தது. சீதாவும் நீயும் நானும் குளத்தங்கரைப் பங்களாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் 'கலியாணத்தின் போது அம்மி மிதிப்பதற்கு முன்னால் அக்கினி வலம் வருகையில் மாப்பிள்ளை மணப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டுமே, - எந்தக் கையினால் எந்தக் கையைப் பிடித்துக் கொள்வது?' என்ற கேள்வி ஏற்பட்டது. மாப்பிள்ளையின் வலது கரத்தினால் மணப்பெண்ணின் இடது கரத்தைப் பிடிப்பதா? அல்லது வலது கரத்தைப் பிடிப்பதாயிருந்தால் இரண்டு பேரும் நடந்து எப்படிப் பிரதட்சணம் வரமுடியும் என்று வெகுநேரம் தர்க்கம் செய்தோம். தலைக்கு ஒரு அபிப்பிராயம் சொன்னோம். கலியாணம் நடந்தபோது அந்த விஷயத்தை நான் கவனிக்கவில்லை; அதைப் பற்றிப் பிறகு பேசவும் இல்லை.

லலிதா! அத்தங்காள் தாரிணியை நான் கலியாணம் செய்து கொள்ளும்போது அந்தக் கஷ்டமான பிரச்னை ஏற்படவே ஏற்படாது. அவளுக்கு இருப்பது ஒரே ஒரு கைதான். அதைத்தான் நான் பிடித்துக்கொண்டாக வேண்டும். இன்னொரு கை இல்லை என்பது பற்றி எனக்கு வருத்தம் கிடையாது. அதை நினைக்கும்போதெல்லாம் நான் பூரித்து மகிழ்வேன். தாரிணி இழந்துவிட்ட அந்த ஒரு கை இருநூறு ஸ்திரீகளைக் காப்பாற்றியது என்பதையும், சீதாவின் குழந்தையைக் காப்பாற்றிய கை அதுதான் என்பதையும் நினைத்து நினைத்துக் கர்வம் அடைவேன். நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன், இத்தனை நாள் கலியாணம் செய்து கொள்ளாமல் நான் காத்துக்கொண்டிருந்தது வீண் போகவில்லை! இனி என் வாழ்நாளில் என்றென்றைக்கும் ஆனந்தந்தான்!.... லலிதா! தாரிணியின் அழகைப்பற்றி முன் இரண்டொரு தடவை உனக்குச் சொல்லியிரக்கிறேன். ஆனால் முன்னேயெல்லாம் அவளுடைய அழகு மனித உலகத்துக்குரிய அழகாயிருந்தது. இப்போதோ தெய்வீக சௌந்தர்யம் பெற்று விளங்குகிறாள், என் கண்களுக்கு, வேறு யார் என்ன நினைத்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? யார் என்ன வம்பு பேசினால்தான் எனக்கு என்ன?...." கடிதத்தைப் படிக்கும்போது லலிதாவுக்கு தொண்டையை அடைத்தது. சித்ராவுக்கோ கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. கொஞ்சம் உணர்ச்சி அடங்கிய பிறகு சித்ரா கூறியதாவது:- "லலிதா! நம்முடைய தேசத்து மகான்கள் 'உலகத்தில் துன்பம் என்பதே இல்லை; துன்பம் என்பது வெறும் மாயைதான்' என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில மகான்கள், 'துன்பத்திலே தான் உண்மையான இன்பம் இருக்கிறது' என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் இத்தனை நாளும் எனக்கு விளங்காமலிருந்தது, இன்றைக்குத்தான் விளங்குகிறது. பிறருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக நாம் கஷ்டப்பட்டோ மானால் அதைப் போன்ற இன்பம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை; மறு உலகத்திலும் கிடையாது. உனக்கு மன்னியாக வரப் போகிறவள் அந்த ஆனந்தத்துக்கு உரியவளாயிருக்கிறாள். அதை அறிந்த அதிர்ஷ்டசாலி உன் தமையன் சூரியா! அவர்கள் இரண்டு பேரையும் மணம் புரிந்த தம்பதிகளாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மிக்க ஆவலாயிருக்கிறது!" என்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
பாமா விஜயம்

ராஜம்பேட்டை கிராமச்சாலை முன்போலவே இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் படர்ந்து விளங்கியது. தபால் சாவடியும் பதினைந்து வருஷத்துக்கு முன்னால் அளித்த தோற்றத்துக்கு அதிக மாறுபாடில்லாமல் காட்சி அளித்தது. ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்துக்கொண்டு வந்தான். 'ஜிங் ஜிங்' என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது. ராஜம்பேட்டை அக்கிரகாரம் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருந்தது. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நம்முடைய கிராமங்களில் அவ்வளவாக மாறுதலைக் காண முடிவதில்லை. அப்படி மாறுதல் இருந்தால் முன்னே வீடாயிருந்த கட்டிடங்கள் இப்போது குட்டிச்சுவர்களாக மாறியிருக்கலாம். வேறு பிரமாத மாறுதலைப் பார்த்துவிட முடியாது. ராஜம்பேட்டை முன்னைப்போல அவ்வளவு கலகலப்பாயில்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில், இப்போது அங்கே பட்டாமணியம் கிட்டாவய்யர் இல்லை. அவர் பார்த்த பரம்பரைக் கிராம முனிசீப் உத்தியோகத்தைச் 'சுண்டு' என்கிற சியாமசுந்தர் பார்த்து வந்தான். சினிமா டைரக்டர் ஆகும் ஆசையையெல்லாம் அவன் விட்டு விட்டான். 'படம் எடுத்தால் சீதாவைக் கதாநாயகியாக வைத்து எடுக்க வேண்டும்; இல்லாவிடில் என்ன பிரயோஜனம்?' என்பது அவன் கருத்து. கொஞ்ச நாள் முன்பு வரையில்கூட அந்த ஆசை அவனுக்குச் சிறிது இருந்தது. சீதா இறந்த செய்தி வந்தபின் அடியோடு போய்விட்டது. பின்னர் நிம்மதியாகக் கிராம முனிசீப் வேலையைப் பார்த்து வந்தான். ஊரில் கலகலப்புக் குறைந்திருந்ததற்கு இன்னொரு காரணம் "என்ன ஓய்?" சீமாச்சுவய்யர் ஊரில் இல்லாதது. அவர் இப்போது சிறைச்சாலையில் இரண்டு வருஷம் கடுங்காவல் அநுபவித்துக் கொண்டிருந்தார். கள்ள மார்க்கெட் கேஸில் அசல் முதலாளி தப்பித்துக் கொண்டு சீமாச்சுவய்யரை மாட்டி வைத்துவிட்டான். அதைப் பற்றி ஊரில் யாரும் அனுதாபப்படவில்லை. நடுவில் பணம் அதிகமாக வந்தபோது சீமாச்சுவய்யர் யாரையும் இலட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் நடந்து கொண்டார். ஆகவே அவர் சிறைப்பட்டபோது கிராமத்தார், "என்ன ஓய்? சீமாச்சு உயிரோடு திரும்பி வருவானா?" என்று கேட்டுக் கொள்வதுடன் திருப்தியடைந்தார்கள்.

கிட்டாவய்யர் வீட்டுக் கூடத்தில் லலிதா உட்கார்ந்து குழந்தை பட்டுவின் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். சரஸ்வதி அம்மாள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பாலசுப்பிரமணியன் ஏதோ வாரப் பத்திரிகையில் வந்திருந்த காந்தி மகான் கதையை எழுத்துக் கூட்டி இரைந்து படித்துக் கொண்டிருந்தான். தபால் ரன்னர் வரும் 'ஜிங் ஜிங்' சத்தம் கேட்டதும் லலிதாவுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாகிக் கண்கள் ஈரமாயின. "லலிதா! பட்டுவின் வயதில் நீ தபால் கட்டு வரும் சத்தம் கேட்டதும் எழுந்து தபாலாபீஸுக்கு ஓடுவாயே; ஞாபகமிருக்கிறதா?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "ஞாபகம் இல்லாமல் என்ன? நன்றாய் இருக்கிறது. இப்போது கூடத் தபாலாபீஸுக்குப் போய் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரத் தோன்றுகிறது!" என்றாள் லலிதா. "நீ அப்படிப் போனாலும் போவாய்! உன் நெஞ்சுத் தைரியம் யாருக்கு வரும்?" என்றாள் தாயார். அரை மணி நேரத்திற்குப் பிறகு வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்து ஓடினாள். ஒரு கணம் ஒருவேளை தபால்கார பாலகிருஷ்ணனாயிருக்குமோ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலேயே அந்தப் பழைய பாலகிருஷ்ணன்தான்! "நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, அம்மா! ரொம்ப சந்தோஷம், எனக்கும் டவுன் வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு வழியாக இங்கேயே வந்துவிட்டேன்" என்றான் பாலகிருஷ்ணன். "கொஞ்ச நாளாக உன்னை தேவபட்டணத்தில் காணோமே என்று பார்த்தேன்! குழந்தைகள் சௌக்கியமா?" என்றாள் லலிதா. "கடவுள் புண்ணியத்திலே சௌக்கியந்தான். ஆனால் என்ன சௌக்கியம் வேண்டிக் கிடந்தது? அப்பேர்ப்பட்ட காந்தி மகாத்மாவையே சுட்டுக்கொன்று விட்டார்கள். இனிமேல் யார் சௌக்கியமாயிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?" என்றான் பாலகிருஷ்ணன்.

பிறகு, "இந்தாருங்கள் தபால்!" என்று ஒரு கடிதத்தை லலிதாவிடம் கொடுத்துவிட்டுப் போனான். லலிதா கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். அவளுடைய கணவனிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர் குழந்தைகளின் ஷேம லாபங்களை விசாரித்த பிறகு எழுதியிருந்ததாவது:- "ஒரு அதிசயமான சமாசாரம் சொல்லப் போகிறேன். ஆச்சரியப்பட்டு மூர்ச்சையாகி விழுந்து விடாதே! உன் தமையன் சூரியா வந்திருக்கிறான். அவனுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனுடைய மனைவியைப் பார்த்ததும் உனக்கு ஒருவேளை ஏமாற்றம் உண்டாகலாம். விஷயம் என்னவென்று கடிதத்தில் எழுத விரும்பவில்லை. நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள் மூன்று பேரும் நாளை ரயிலில் புறப்பட்டு அங்கே வருகிறோம்." இதைப் படித்ததும் லலிதா மிக்க கலக்கம் அடைந்தாள். அவள் முக்கியமாக ராஜம்பேட்டைக்கு வந்தது தன் தாயாரிடம் சூரியாவின் கலியாணத்தைப் பற்றிச் சொல்வதற்காகத்தான். ஆனால் இன்றுவரை அவளுக்குத் தைரியம் வரவில்லை. இனிமேல், தள்ளிப்போட முடியாது. அவர்கள் நாளைக்கு வந்துவிடுவார்களே! சரஸ்வதி அம்மாளிடம் லலிதா மாப்பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது பற்றி முதலில் சொன்னாள். சூரியாவையும் அவர் அழைத்து வருவது பற்றிப் பிறகு சொன்னாள். சூரியா கலியாணம் செய்து கொண்டு மனைவியையும் தன்னுடன் அழைத்து வருவதைப் பற்றிக் கடைசியாகக் கூறினாள். சரஸ்வதி அம்மாள் வியப்படைந்தாள்; மகிழ்ச்சியடைந்தாள்; பிறகு திடுக்கிட்டுப் போனாள். "கலியாணமா? அது என்ன? நம் ஒருவருக்கும் சொல்லாமலா? இப்படியும் உண்டா? பெண் யாரோ, என்னமோ, தெரியவில்லையே?" என்று புலம்பி அங்கலாய்த்தாள். "அதென்னமோ, போ, அம்மா! நானும் முன்னாலேயே கேள்விப்பட்டேன், உண்மையிராது என்று நினைத்தேன். இப்போது வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது" என்றாள்.

"என்னடி உண்மை? நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்றாள். "சூரியா கலியாணம் செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏதோ அங்கஹீனம் என்று கேள்வி. சிலர் 'ஒரு கண்ணில்லை' என்கிறார்கள். சிலர் 'ஒரு கையில்லை' என்கிறார்கள். சூரியாவின் காரியமே இப்படித்தான். என்னமோ, போ, அம்மா! ரொம்ப விசாரமாயிருக்கிறது!" "இதென்னடி அநியாயம்? இப்படியும் ஒரு பிள்ளை செய்வானா? அது நிஜமாயிருக்குமாடி? நிஜமாயிருந்தால் நாலு பேர் முகத்தில் எப்படி விழிப்பேன்!" என்று சரஸ்வதி அம்மாள் புலம்பினாள். பட்டாபிராமனும், சூரியாவும், சூரியாவின் மனைவியும் ஜல்ஜல் என்று சதங்கை சப்தித்த மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். லலிதா பரபரப்புடன் ரேழிக்குப் போனாள். தாரிணியைப் பார்ப்பதற்கு அவள் மனது துடிதுடித்தது. எவ்வளவுதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் சமயத்தில் கேட்கவில்லை. நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது. தாரிணியைப் பார்த்ததும் அம்மா என்ன ரகளை செய்யப் போகிறாளோ என்ற பீதி வேறு இருந்தது. முதலில் பட்டாபியும் சூரியாவும் இறங்கினார்கள், பிறகு ஒரு ஸ்திரீ இறங்கினாள். இது என்ன விந்தை? எதிர்பார்த்தபடி இல்லையே! இரண்டு கையிலும் இரண்டு கைப் பெட்டியுடன் இறங்குகிறாளே? கண்களிலும் ஊனம் இல்லையே? கொஞ்சம் நவநாகரிகத்தில் அதிகம் மூழ்கினவளாகக் காணப்பட்டாள். மற்றபடி அங்கஹீனம் ஒன்றும் தெரியவில்லை. பின்னால் ஒருவேளை தாரிணி இறங்குகிறாளோ என்று பார்த்தாள். அப்புறம் யாரும் இறங்கவில்லை. வந்தவர்களை முகமன் கூறி க்ஷேமம் விசாரித்து உள்ளே அழைத்துப் போனாள். "சூரியா இந்த லேடி யார்? நீ எழுதியிருந்தாயே?...." "நான் எழுதியிருந்தது வேறு, இந்தப் பெண்ணரசிதான் என்னை மணக்க முன்வந்த என் மனைவி திவான் ஆதிவராகாச்சாரியார் மகள்; இவள் பெயர் பாமா. எங்களுக்குக் கலியாணம் ஆகி இரண்டு வாரம் ஆகிறது. 'ஹனிமூன்' வந்திருக்கிறோம்" என்றான் சூரியா. லலிதாவின் மனம் நிம்மதி அடைந்தது. லலிதாவின் தாயாரும் தன் மாட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒரு மாதிரி பரட்டைத் தலைப் பிசாசு மாதிரி இருந்தாலும் லலிதா சொன்னதுபோல் அங்கஹீனமாயில்லை என்பது குறித்து மனதிற்குள்ளே திருப்தி அடைந்தாள்.

பிறகு லலிதா சூரியாவை தனியாக சந்தித்துப் பேசியபோது அவன் கூறியதாவது:- "உனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தானிருக்கும். எனக்கோ அதைவிட ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஏமாற்றியவள் அத்தங்கா தாரிணி அல்ல! சௌந்தரராகவன்தான். அவனுடைய சுபாவத்தை அறிந்திருந்த அனைவரையும் ஏமாற்றிவிட்டான். தாரிணியைத் தான் கலியாணம் செய்து கொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லை என்றும் சத்தியம் செய்தான். மேலும் சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும் தன்னிடமும் அதே விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள் என்றும் வற்புறுத்தினான். தாரிணி அநேக ஆட்சேபங்களைச் சொல்லியும் கேட்கவில்லை. 'டில்லியில் உங்களுடைய உத்தியோக வாழ்க்கைக்கு இடைஞ்சலாயிருக்கும்' என்று தாரிணி சொன்னபோது, உத்தியோகத்தை விட்டுவிட முன்னமே தீர்மானித்து விட்டதாகப் பதில் சொன்னான்! லலிதா! உண்மையில் தாரிணிக்கும் ராகவன் பேரில் இருதய பூர்வமான அன்பு என்று தெரிந்து கொண்டேன். ஆகவே நான் விட்டுக் கொடுத்து அவர்களுடைய திருமணத்தையும் கூட இருந்து நடத்தி வைத்தேன். சௌந்தரராகவன் உண்மையாகவே உத்தியோகத்தை விட்டுவிட்டான். இருவரும் வஸந்தியை அழைத்துக்கொண்டு ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். ரஜினிபூர் ராஜ்யம் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட்டாலும், ரஜினிபூர் ராணியம்மாளுக்கு ஏராளமான சொந்த சொத்து இருக்கிறது. தாரிணியின் பேரில் அவளுக்கு மிக்க பிரியம். இரண்டு பேரும் ரஜினிபூருக்கு வந்து பஞ்சாப் அகதிகளுக்கு உதவி செய்து குடியும் குடித்தனமுமாக்க முயலவேண்டும் என்றும், அதற்காகத் தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைப்பதாகவும் ரஜினிபூர் ராணியம்மாள் சொன்னாள். அதனால் இருவரும் ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். குழந்தை வஸந்தியையாவது நான் என்னுடன் ராஜம்பேட்டைக்கு அழைத்துப் போவதாகச் சொன்னேன். அந்தக் குழந்தையும் கண்டிப்பாக வர மறுத்துவிட்டாள்!"

இந்தக் கடைசி வாக்கியங்களை மட்டும் கேட்டுக் கொண்டு வந்த சரஸ்வதி அம்மாள், "ரொம்ப நல்லதாய் போயிற்று. அவளுடைய தாயார் இங்கே படுத்திய பாடெல்லாம் போதாதா பெண் வேறே வந்து கலகம் பண்ண வேண்டுமா?" என்றாள். அம்மாவின் சுபாவம் தெரிந்தவர்களானதால் மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டார்கள். பிறகு லலிதா, "இந்தப் பெண்ணை எப்படிப் பிடித்துக் கலியாணமும் செய்து கொண்டாய்?" என்று கேட்டாள். "முதலில் இவள் பேரில் எனக்கு மிக்க வெறுப்பு இருந்தது. இவளுடைய குணாதிசயங்களைப் பற்றி மிகவும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். தாரிணிதான் இவளைப்பற்றி எனக்குச் சொன்னாள். முதன் முதலில் என்னைப் பார்த்ததிலிருந்து இவளுக்கு என் பேரில் பிரியம் என்றும் சொன்னாள். அது மட்டுமல்ல; 1942 - இயக்கத்தின் போது இவள் சர்க்கார் உத்தியோக கோஷ்டியுடன் வெளிப்படையாகப் பழகிக் கொண்டே உள்ளுக்குள் இயக்கத்துக்கு மிக்க உதவி செய்தாளாம். தாரிணியைப் போலீஸார் கைது செய்யாமல் இவள்தான் ரொம்ப நாள் பாதுகாத்து வந்தாளாம். என்னைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்கும் இவள்தான் உதவி புரிந்தாளாம். இவ்வளவுக்கும் மேலே, இவள் பஞ்சாபுக்கு முன்னதாகவே போய்ச் சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வர முயன்றாளாம். இதையெல்லாம் கேட்டதும் என் மனம் அடியோடு மாறிவிட்டது. பேசிப் பார்த்ததில் என்னுடைய இலட்சியமும் இவளுடைய இலட்சியமும் ஏறக்குறைய ஒன்று என்று தெரிந்தது. இவளுடைய வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒன்றும் முடிவு செய்யாதே, லலிதா! உன் மன்னியுடன் பழகிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லு!" வெளியே சென்றிருந்த சியாமசுந்தர் திரும்பிவந்து அண்ணாவையும் மன்னியையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சூரியாவின் கலியாணம் ஆகிவிட்டதால், தன்னுடைய கலியாணத்துக்குத் தடை நீங்கி விட்டதல்லவா? "அண்ணா! ரிடர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தாயா அல்லது கொஞ்சநாள் இங்கே இருப்பதாக உத்தேசமா?" என்று கேட்டான். "நீ எங்களை விரட்டியடித்தாலொழிய ரொம்ப நாள் இங்கே இருப்பதாக உத்தேசம்.

தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. காந்தி மகாத்மா இறுதியாக ஆத்மத் தியாகம் செய்து நாட்டில் அமைதியையும் ஢லைநாட்டிவிட்டார். இனிமேல் தேசத்தில் செய்யவேண்டியதெல்லாம் பொருள் உற்பத்தியும் உணவு உற்பத்தியும்தான். முதலில் நம்முடைய சொந்த கிராமத்திலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்திருக்கிறேன். உழுது பாடுபடுகிறவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்..." "இப்போது இங்கேயெல்லாம் அவ்வளவு கிஸான் தொந்தரவு இல்லை. கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவன் கிஸான் சங்கத்தின் பணம் ஐயாயிரத்தைச் சூறையிட்டுக் கொண்டுபோய் விட்டான். அதிலிருந்து இயக்கம் படுத்துவிட்டது. இனிமேல், நீ ஆரம்பித்தால்தான் உண்டு!" "கிஸான் இயக்கம் இல்லை என்று திருப்திப்படுவதில் பயனில்லை, சுண்டு! உழவர்கள் மனத்திருப்தியும் உற்சாகமும் அடைய வேண்டும், தாங்கள் உற்பத்தி செய்வதில் தங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறது என்று அவர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் என்றைக்கிருந்தாலும் கலகமும் குழப்பமும்தான். உணவு உற்பத்தியும் தடைப்படும். ஆகையால் முதலில் உழைப்பாளிகளைச் சரிக்கட்டிக்கொள்ளப் போகிறேன். பிறகு விவசாயததில் நவீன முறைகளைக் கையாண்டு காட்டப் போகிறேன். என்னுடைய மனைவி பாமாவும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்லுகிறாய், சுண்டு?" "சொல்லுவதென்ன அண்ணா? நம்முடைய நிலம் முழுவதையும் பிரித்து, உழவர்களுக்குக் கொடுத்துவிட்டாலும் எனக்குச் சம்மதந்தான். நீ ஊர் ஊராக அலையாமல் இந்த ஊரிலேயே இருந்தால் போதும்! நான் எங்கேயாவது போய் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்!" என்றான் சுண்டு. "அப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய காலமும் வரும். அதற்கும் நாம் தயாராகத்தானிருக்கவேண்டும். வேறு வேறு தொழில்கள் செய்து பிழைக்க இப்போதிருந்தே நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்!" என்றான் சூரியா. சுண்டு, 'சினிமா டைரக்ஷன் வேலை இருக்கவே இருக்கிறது' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

அவர்களுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் அங்கு வந்து, "நான் கண் மூடும் வரையில் பொறுத்திருங்கள்; அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள்" என்றாள். "நாங்கள் காத்திருக்கலாம், அம்மா! ஆனால் பூகம்பமும் புயலும் எரிமலையும் பிரளயமும் காத்திருக்குமா?" என்றான் சூரியா. லலிதா, "பூகம்பம், பிரளயம் என்றெல்லாம் நீ சொல்லும் போது, அத்தையும் சீதாவும் அடிக்கடி 'காதில் அலை ஓசை கேட்கிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. அவர்களுக்கு என்ன சித்தப் பிரமையா அல்லது அவர்களுடைய காதில் ஏதாவது கோளாறா?" என்று கேட்டாள். "பிரமையா, காதில் ஏதேனும் கோளாறா என்று எனக்குத் தெரியாது; அல்லது ஏதேனும் ஒரு தெய்வீகச் சக்தியினால், வரப்போகும் பயங்கர விபத்துக்களின் அறிகுறி அவர்களுடைய மனசில் தோன்றியதா என்றும் தெரியாது. பஞ்சாபிலிருந்து தப்பி ஓடிவந்து நதியில் முழுகியபோது சீதாவின் காது அடியோடு செவிடாகி ஒன்றுமே கேட்காமல் போய்விட்டது. உரத்த பயங்கரமான அலை ஓசை போன்ற சத்தம் மட்டும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்ததாம். ஆனால் காந்திஜியின் புனித உடல் தகனமான அன்று சீதாவின் காது கேட்கத் தொடங்கியது. 'ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக' என்ற மகாத்மாவின் மனதுக்கு உகந்த கீதந்தான் முதலில் அவள் காதில் கேட்டதாம். இது ஒரு சுப சூசகம் என்று எனக்குத் தோன்றுகிறது. மகாத்மாவின் மகா தியாகத்துக்குப் பிறகு இந்தப் பெரிய தேசத்துக்குப் பெரும் விபத்து ஒன்றும் கிடையாது! இனிமேல் சுபிட்சமும் முன்னேற்றமுந்தான்!" என்றான் சூரியா. அந்தத் தேசபக்தத் தியாகியின் விருப்பம் நிறைவேறுமாக!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

கல்கியின் அலை ஒசை (கடைசி பாகம்-4 : 'பிரளயம்') முற்றிற்று

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home