Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி -  அலை ஒசை >  பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை  > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23  > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
kalki -  alai Ocai: Part IV - piraLayam
[also in pdf ]


Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

©  Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 உள்ளுறை -அத்தியாயங்கள்

4.024 என் சொர்க்கம் மின்பதிப்பு
4.025 அடுத்த ஆண்டு மின்பதிப்பு
4.026 தந்தியின் மர்மம் மின்பதிப்பு
4.027 இருளில் ஒரு குரல் மின்பதிப்பு
4.028 நரக வாசல் திறந்தது! மின்பதிப்பு
4.029 சீமந்த புத்திரி மின்பதிப்பு
4.030 "மரணமே! வா!" மின்பதிப்பு
4.031 பிழைத்த அகதி மின்பதிப்பு
4.032 ராகவன் துயரம் மின்பதிப்பு
4.033 ராகவன் கோபம் மின்பதிப்பு
4.034 சீதாவின் ஆவி மின்பதிப்பு
4.035 பானிபத் முகாம் மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை: பாகம் 4- 'பிரளயம்'
இருபத்து நான்காம் அத்தியாயம்
என் சொர்க்கம்

சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, "அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!" என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான்.

குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். "உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?" என்றான். "முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!" என்றாள் சீதா. "அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றான் ராகவன். "வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை" என்றாள் சீதா. "என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!" என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், "சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?" என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், "ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!" என்றாள். "ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!" என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், "நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?" என்றாள்.

"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்." "தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?" "நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்." "நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்." "ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!" "பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?" ராகவனுடைய முகம் சுருங்கியது. "சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!" என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள்.

"ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!" என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், "சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்." "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் `பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்' என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு `வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்' என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார்.

உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது.

பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: "என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்...." இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். "இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!" என்றாள் சித்ரா. "எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா" என்றாள் சீதா. "இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!" என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். "கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?" என்றான் அமரநாத்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஐந்தாம் அத்தியாயம்
அடுத்த ஆண்டு

நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இ்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன!

சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். "இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?" என்றாள் தாரிணி. "நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!" என்று சொன்னான் சூரியா. "இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?" என்றாள் தாரிணி. "நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?" என்றான் சூரியா.

"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?" என்றாள் தாரிணி. "அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!" என்றான் சூரியா. "இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!" என்றாள் தாரிணி. "அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!' 'பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!" என்றான் சூரியா. "சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?" "வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்."

"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?" "இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?" என்றான் சூரியா. "அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது." "அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?" "அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?" "அதுதான் சந்தேகம், சூரியா! 'டான்' பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!" "'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" "நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்திய்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்." "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது.

மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்....?" "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?" என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். "முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!" "கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே...." "சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?" என்றாள் தாரிணி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஆறாம் அத்தியாயம்
தந்தியின் மர்மம்

தாரிணியும் சூரியாவும் டில்லி டவுன்ஹாலுக்குப் பின்னால் உள்ள பூந்தோட்டத்துக்குச் சென்று அங்கே போட்டிருந்த சலவைக்கல் பெஞ்சி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். டவுன் ஹாலின் தீபாலங்கார ஒளி நிலா வெளிச்சத்தைப் போல் நாலாபுறமும் கவிந்து பரந்திருந்தது. நகரத்தின் பல பகுதிகளிலும் நடந்த சுதந்திரக் கொண்டாட்டங்களின் கோலாகல சத்தம் சில சமயம் குறைவாகவும் சில சமயம் அதிகமாகவும் கேட்டது. அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடத்தை ஒட்டிச் சென்ற நடைபாதைகளில் குறுக்கும் நெடுக்கும் ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டும் சென்றார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அன்று நடந்த சுதந்திர விழா வைபவங்களிலே ஈடுபட்டிருந்தபடியால் சூரியாவும் தாரிணியும் அங்கே தனித்து உட்கார்ந்திருப்பதை அவர்களில் யாரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. சூரியா ஆர்வத்துடன் கூறினான்:- "தாரிணி! இங்கே அக்கம்பக்கத்தில் நம்முடைய பேச்சை ஒட்டுக் கேட்கக் கூடியவர்கள் யாரையும் காணோம். நாம் தாராளமாக மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? உண்மையில் நம்முடைய கலியாண விஷயத்தை ஆயிரம் பேருக்கு மத்தியில் சாட்சி வைத்துக்கொண்டு பேசி முடிவு செய்வதே விசேஷமாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் முன்னொரு சமயம் நாம் இப்படித்தான் தனிமையாக உட்கார்ந்து பேசினோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்...." தாரிணி குறுக்கிட்டு, "கொஞ்சம் தவறாகச் சொல்கிறீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்!" என்றாள். "அப்படியே இருக்கட்டும், இப்போது அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு வேறு தடை ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா.

அந்தச் சமயத்தில் வெள்ளி வீதியிலிருந்து, "மகாத்மா காந்திக்கும் ஜே!" "பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே!" என்று ஜனங்கள் பலத்த குரலில் கோஷமிடும் சத்தம் கேட்டது. "கோஷத்தைக் கேட்டீர்களா? இத்தனை ஜனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நம்பிக் குதூகலப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் நம்பிக்கை உண்டாகவில்லை!" என்று சூரியா சுட்டிக் காட்டினான். "எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் என் மனது மட்டும் எதனாலோ நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறது." "அப்படியானால் அது என்னுடைய தவறில்லை; காந்தி மகாத்மாவின் தவறு. அந்தத் தவறைத் திருத்துவதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. தாரிணி! நம்முடைய கலியாணத்துக்குத் தடையாக இருப்பது வேறு ஏதாவது உண்டா?" என்று சூரியா கேட்டான். "இன்னும் ஒரு தடை இருக்கிறது. என்னுடைய தாயார் தகப்பனாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை! என் தாயார் தகப்பனார் யார் என்று தெரியாவிட்டால் எந்தச் சம்பிரதாயப்படி நாம் கலியாணம் செய்து கொள்வது?" "இது என்ன, சீர்திருத்த ஆவேசமுள்ள புரட்சித் தலைவியான தாரிணி திடீரென்று வைதிகச் சம்பிரதாயத்தில் பற்று கொண்ட அதிசயம்! குருட்டு நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற பழைய ஆசாரங்களையும் தகர்த்தெறிந்து காதல் தெய்வத்தின் சந்நிதியில் கலியாணம் செய்து கொள்வது என்று நாம் எத்தனையோ தடவை பேசி முடிவு செய்யவில்லையா?"

"பேசும்போது அதெல்லாம் சரியாகத் தோன்றியது. காரியத்தில் வரும்போது தயக்கமாயிருக்கிறது. சூரியா! என் பெற்றோர்கள் யார் என்று தெரியாத வரையில் என் மனம் நிம்மதி அடையாது. இதுவரையில் இந்தியா தேசத்தின் சுதந்திர இயக்கத்தில் கவனம் சென்று கொண்டிருந்தது, இனிமேல் அதுவும் இல்லை. என் தாய் தகப்பனார் யார் என்ற விசாரம் என் மனதை ஓயாமல் வாட்டிக் கொண்டிருக்கும். இந்த விசாரம் தீரும்வரை இல்வாழ்க்கையில் என்னால் உங்களுக்குச் சுகமும் நிம்மதியும் ஏற்படாது." "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீ படுகிற விசாரத்தை நானும் பகிர்ந்துகொண்டு அநுபவிப்பேன். உன் காரணமாக எனக்கு ஏற்படுகிற கஷ்டம் எல்லாம் உண்மையில் சுகமென்றே தோன்றும். ஆனாலும் உன்னுடைய மன நிம்மதி மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வேண்டிய பிரயத்தனம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாரிணி! உன்னுடைய பெற்றோர்கள் யார் என்பதைப்பற்றி உன் மனதில் எந்தவிதமான சந்தேகமோ, ஊகமோ தோன்றியதில்லையா?" "தோன்றாமல் என்ன? பல தடவை தோன்றித்தானிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் என் ஊகம் பொய்யாய்ப் போயிருக்கிறது. முதலில் ரஸியா பேகத்தை என் தாயார் என்றும் சீதாவின் தகப்பனார்தான் எனக்கும் தகப்பனார் என்றும் எண்ணியிருந்தேன் அது பிசகு என்று ஏற்பட்டது. ரஸியா பேகம் உண்மைத் தாயார் அல்லவென்றும் வளர்ப்புத் தாயார் என்றும் வெளியாயிற்று. பிறகு என் உண்மைத் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முயன்றேன். ரஸியா பேகத்தின் சகோதரி கங்காபாய் என் தாயார் என்றும், அவள் அபாக்கியவதியாக அற்பாயுளில் இறந்தாள் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனார் யார் என்று கண்டுபிடிக்க முயன்று வருகிறேன் இன்றுவரை அது தெரிந்தபாடில்லை." "தாரிணி! நிச்சயமாக நீ ரஜினிபூர் ராஜாவின் புதல்வி அல்லவா?"

"நான் எப்படிச் சொல்ல முடியும்? ரஜினிபூர் பெரிய ராண நான் ராஜகுமாரிதான் என்று சொல்லுகிறாள். முதலில் அதை மறுதளித்த ரஸியா பேகமும் இப்போது அதுதான் உண்மையென்று சொல்லுகிறாள். காலஞ்சென்ற ராஜாவின் சொந்த சொத்தில் நான் பங்கு கேட்கவேண்டும் என்றுகூட ரஸியாபேகம் விரும்புகிறாள். ஆனால் என் மனத்திற்குள் மட்டும் ஏதோ ஒன்று நிச்சயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது; நான் ஒரு சுதேச ராஜாவின் குமாரியாக இருக்க முடியாது என்று." "தாரிணி! என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கிறது. உன் உள் உணர்ச்சி எப்போதும் சரியாயிருப்பது வழக்கம். இது விஷயத்திலும் அது சரியாகத்தானிருக்க வேண்டும்." "ஆனாலும் என்ன உண்மை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சூரியா! சில சமயம் ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் உண்டாகிறது. சீதாவை நான் என்று எண்ணிக் கொண்டு ரஜினிபூர் ஆட்கள் பிடித்துக்கொண்டு போனார்கள் அல்லவா? இது ஏன் என்று சில சமயம் தான் சிந்தனை செய்வதுண்டு. நீங்கள் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு போன பிறகு நான் சீதாவின் கதியை அறிந்து கொள்வதற்காக ரஜினிபூருக்குப் போனேன். ராஜமாதாவும் ராஜகுமாரரும் வற்புறுத்தியதின் பேரில் சில நாள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் பல தடவை சீதாவின் முகஜாடை என் முக ஜாடையைப் போல் இருந்ததாகவும் அதனால்தான் அந்தப் பிசகு நேர்ந்ததாகவும் சொன்னார்கள். இது உண்மையா? அப்படியானால் இதன் காரணம் என்னவாயிருக்கக்கூடும்? உங்களால் ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தாரிணி கேட்டாள்.

சூரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். ரஜினிபூர் ஆட்கள் அத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? ஒருவேளை அவர்கள் செய்த தவறில் தாரிணியின் பிறப்பைக் குறித்த இரகசியம் இருக்குமோ? அது என்னவாயிருக்ககூடும்? - சூரியாவுக்கு விளங்கவில்லை. "எனக்கு அத்தகைய காரணம் ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லையா, தாரிணி!" "இல்லாமல் என்ன? ரஸியா பேகத்துக்கும் மௌல்வி சாகிபுக்கும் அது நிச்சயம் தெரியும். ஒரு நாளைக்கு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மௌல்வி சாகிபு என்னிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ரஸியா பேகம் கூடாது என்று சொன்னாள். இருவருக்கும் இது விஷயமாகப் பெரிய சண்டையே நடந்தது. அது ஒன்றும் என் காதில் விழாதது போல் நான் நடந்துகொண்டேன். ஏனெனில் வற்புறுத்திக் கேட்டால் உண்மை வெளி வராது. சந்தர்ப்பம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்." "மௌல்வி சாகிபு என்று யாரைச் சொல்லுகிறாய்? ஜும்மா மசூதிக்கு எதிரில் நீ சில காலம் வசித்த சந்து வீட்டில் குரான் வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரையா?" "ஆமாம், சூரியா! அவரைத்தான் சொல்கிறேன்." "அவர் யார், தாரிணி? அந்த மௌல்வி சாகிபு யார்?" "இது என்ன கேள்வி? மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவர்!" என்றாள் தாரிணி. "அது தெரியும், மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவராவதற்கு முன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்டேன்."

தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினாள்: "உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டியதுதான். நீங்களே ஊகித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அதை மறைத்து வைப்பதில் இனி உபயோகமும் இல்லை சூரியா! அந்த மௌல்வி சாகிபு, சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர்தான்." சூரியா மௌனமாக இருந்தான்; தாரிணி கூறியதை அவன் மனம் ஜீரணம் செய்து கொண்டிருந்தது. "என்ன? ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போலக் காணப்படுகிறது!" என்றாள் தாரிணி. "அப்படி ஒன்றும் இல்லை, சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். சீதா தன்னை ஆக்ரா கோர்ட்டில் ஒரு முஸ்லிம் வந்து சாட்சி கூறிக் காப்பாற்றியதாகச் சொன்னாள். எனக்கு உடனே உங்கள் வீட்டில் பார்த்த மௌல்வியின் ஞாபகம் வந்தது. இரண்டையும் இரண்டையும் கூட்டி நாலு என்று ஊகம் செய்து கொண்டேன். தாரிணி! அந்தச் சாகிபுவை நான் உடனே பார்க்க விரும்புகிறேன்." "எதற்காக? அவரிடம் சண்டை பிடிப்பதற்காகவா?" "ஆமாம்." "ரஸியா பேகத்தைக் கலியாணம் செய்து கொண்டதற்காகவா? அல்லது அவர் ஹிந்து மதத்துக்குத் துரோகம் செய்ததற்காகவா?" "அதற்கெல்லாம் இல்லை, அவர் எங்களையெல்லாம் மறந்துவிட்டிருப்பதற்காக ஒரு முக்கிய விஷயம் அவரைக் கேட்டு நான் தெரிந்து கொள்ள வண்டும். சீதாவின் கலியாணத்தன்று அவர் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்திருந்தார். அதன் காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன் என்றார். பிறகு அவரைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. தாரிணி! இப்போது உடனே போய் நான் அவரைப் பார்த்தாக வேண்டும்."

"அது முடியாத காரியம், மௌல்வி சாகிபும் ரஸியா பேகமும் கொஞ்ச நாளாக இந்த ஊரில் இல்லை. போகிற இடமும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தந்தியின் காரணத்தை நானே சொல்லிவிடக்கூடும், சூரியா! கஷ்டமான விஷயந்தான்; ஆனால் சொல்லி விடுகிறேன். அந்தச் சமயம் வரையில் உங்கள் மாமாவை நான் என் தகப்பனார் என்றும், ரஸியா பேகத்தைத் தாயார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். சௌந்தரராகவனுக்கும் எனக்கும் இருந்த நட்பைக் குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த நட்பில் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்து பீகார் பூகம்ப விபத்தில் சேவை செய்வதற்காக நான் புறப்பட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் குத்த முயன்று சிறை சென்றாள். இந்தச் செய்தியை எனக்குக் கூறி ஆறுதல் சொல்லுவதற்காகத் துரைசாமி ஐயர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். செய்தியைச் சொல்லிவிட்டு எனக்கு ஆறுதலாக ரஸியா பேகம் உண்மையில் என் தாய் அல்ல என்றும் சொன்னார். கலியாணம் செய்துகொண்டு சுகமாய் வாழும்படி எனக்கு போதித்தார். அப்போதுதான் நான் வரித்திருந்த புருஷனுக்கே சீதாவை மணம் செய்யப் பேசியிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. பாவம்! என்னிடம் அவருக்கு ரொம்பவும் அபிமானம் உண்டு. ஆகையினாலேதான் 'கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று அவர் தந்தி கொடுத்தார். அவர் தந்தி கொடுத்தது அப்போது எனக்குத் தெரியாது. வெகுகாலத்துக்குப் பிற்பாடுதான் தெரிந்தது."

"தாரிணி! அந்தத் தந்தியின் மர்மம் இன்னதென்பது வெகுகாலமாக என் உள்ளத்தை வருத்தி வந்தது; அதை இன்று வெளியிட்டதற்காக வந்தனம். அந்தத் தந்தி விஷயமாக நான் மிக்க மூடத்தனமாக நடந்து கொண்டேன். அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்தேன்; தந்தியில் கண்டிருந்தபடி கலியாணத்தை மட்டும் நிறுத்தி விட்டிருந்தால்?.... அடாடா! சீதாவின் வாழ்க்கை இவ்வளவு துன்பமயமாகியிராதல்லவா? நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் சில சமயம் எவ்வளவு கெடுதலாய் முடிந்துவிடுகிறது!" "நல்ல எண்ணத்துடன் செய்கிற காரியம் ஒரு நாளும் கெடுதலாய் முடியாது. இப்போது சீதாவும் சௌந்தரராகவனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் பரவசமடை வீர்கள்." "அவர்கள் சந்தோஷமாயிருப்பது உனக்கு எப்படித் தெரியும், தாரிணி? நேரில் பார்த்ததைப் போலச் சொல்லு கிறாயே?" "ஆமாம்; பஞ்சாபுக்குப் போய் நேரில் அவர்களைப் பார்த்தபடியினால்தான் சொல்லுகிறேன்." "ஆகா! அது எப்போது? பஞ்சாபுக்கு எப்போது போயிருந்தாய்? சீதா நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறாளா?" என்று சூரியா அடங்காத ஆர்வத்துடன் கேட்டான். "அத்தங்காளைப்பற்றிச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்!" என்றாள் தாரிணி. "எனனைவிடச் சீதாவின் விஷயத்தில் உனக்கு அக்கறை அதிகமாயிருப்பது நன்றாய்த் தெரிகிறதே? நான் போய் அவர்களைப் பார்க்கவில்லையே? நீதானே பார்த்திருக்கிறாய்? இத்தனைக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுவதினால் அவர்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது என்று நாம் இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்திருந்தோமே!...."

"சீதாவின் விஷயத்தில் எனக்கு ஏன் இத்தனை பாசம் என்பது எனக்கே விளங்கவில்லைதான்....." "தாரிணி! நிஜமாகச் சீதாவின் மேல் உள்ள பாசத்தினாலே தான் நீ பஞ்சாபுக்குப் போனாயா?" "இல்லை! பஞ்சாபுக்குப் புறப்பட்டபோது அவர்களைப் பார்க்கும் உத்தேசம் எனக்கில்லை. இந்த வருஷ ஆரம்பத்தில் மறுபடியும் என்னுடைய சரித்திர ஆராய்ச்சி வேலையை நான் ஆரம்பித்தேன். ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள தட்சசீலத்துக்கு நானும் என் தோழி நிர்மலாவும் போனோம். அங்கே நாங்கள் பார்த்த அற்புதங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். திரும்பி வரும்போது சீதா வசிக்கும் ஹௌஷங்காபாத் வழியாக வரவேண்டியிருந்தது. இறங்கி அவளைப் பார்க்காமல் வருவதற்கு என் மனம் கேட்கவில்லை. இறங்கியதும் நல்லதாய்ப் போயிற்று. சீதாவும் சௌந்தரராகவனும் குழந்தை வஸந்தியும் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறார்கள் தெரியுமா? வஸந்தியின் கன்னங்கள் காஷ்மீர் ரோஜாப் புஷ்பங்களைப் போல இருக்கின்றன. அந்தக் குழந்தையின் முகம் என் மனதைவிட்டுப் போகவேயில்லை. சீதாவும் உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறாள்...." "சௌந்தரராகவனும் நன்றாய்த்தானிருக்கிறார்! போன வருஷம் இந்த நாளில் யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு யாதொரு அடையாளமும் இல்லை!" என்று சூரியா சொன்னதும் தாரிணி வியப்படைந்தாள். "நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, என்ன? எப்போது எங்கே?" என்று கேட்டாள். "சௌந்தரராகவன் பெயரைச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்" என்றான் சூரியா. "எங்கள் பழைய சரித்திரத்தை நானும் மறந்துவிட்டேன். அவரும் அடியோடு மறந்துவிட்டார்; சீதாவுங்கூட மறந்து விட்டாள். நீங்கள் மட்டும் மறக்கவில்லை போலிருக்கிறது!" என்றாள் தாரிணி. "மன்னிக்க வேண்டும், நானும் அந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துதான் இருந்தேன்.

ஆனால் இன்று காலையில் ராகவனைப் பார்த்தபடியால் பழைய கதை நினைவு வந்தது...." இத்தனை நேரமும் சாவதானமாக உட்கார்ந்திருந்த தாரிணி சட்டென்று எழுந்து நின்றாள். "இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் இந்த டில்லியில் தான் பார்த்திருக்க வேண்டும். அவரை மட்டுமா? சீதாவும்கூட இருந்தாளா?" "அவரை மட்டும்தான் பார்த்தேன், சீதாவை அழைத்து வரவில்லையாம். உத்தியோக சபலம் அவரை மறுபடியும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் புதுடில்லியில் சுதந்திர அரசாங்கம் ஏற்படப் போகிறதே? தம்முடைய உத்தியோகத்தை திருப்பிக் கொடுக்கமாட்டார்களா என்று பார்ப்பதற்காக வந்தாராம். டில்லிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்றாம்." "ஐயோ! இது என்ன விபரீதம்? இரண்டு நாளாக அடிக்கடி எனக்குச் சீதாவின் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது. சூரியா! சௌந்தரராகவன் எங்கே தங்கியிருக்கிறார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும்." "அவரை உடனே பார்க்க முடியாது, இன்று காலையிலேயே அவர் கல்கத்தாவுக்கு ரயில் ஏறிவிட்டார். அவருடைய உத்தியோக சம்பந்தமான பழைய ரிகார்டுகள் கல்கத்தாவில் தங்கிவிட்டனவாம். அவற்றை எடுத்து வருவதற்காகப் போகிறாராம். தமக்கு மறுபடி உத்தியோகம் வந்துவிடும் என்றும் டில்லிக்கே திரும்பி வந்துவிடப் போவதாகவும் எக்களிப்புடன் சொன்னார். அதைக் குறித்து நீ ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும், தாரிணி!" "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியா! என்னுடைய உள் உணர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சொன்னீர்கள். சீதாவுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என் உள் உணர்ச்சி சொல்லுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்கு நாம் உடனே கிளம்பியாக வேண்டும்." "இது என்ன பைத்தியம்?" "எனக்கு பைத்தியம் இல்லை; ராவல்பிண்டி கலவரத்தின் போது நான் பஞ்சாப்பில் இருந்தேன்.

அந்தப் பயங்கரங்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. ராவல்பிண்டியைப்போல் ஆயிரம் ராவல்பிண்டிகள் பஞ்சாப் முழுதும் நடக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிநேகிதர்கள் பலர் பஞ்சாபில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டார்கள்." "அப்படியிருந்தால் சௌந்தர ராகவனுக்குத் தெரிந்திராதா? அவர் ஏன் சீதாவை விட்டுவிட்டு வருகிறார்?" எனக்குப் பைத்தியம் என்று சொன்னீர்கள் அல்லவா? பைத்தியம் எனக்கில்லை; அவருக்குத்தான். பஞ்சாப் சீக்கியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் ஒரே திட நம்பிக்கையில் இருக்கிறார். அதனாலேயே சீக்கியர் வசிக்கும் பகுதியில் அவர் வீடு எடுத்துக் கொண்டு வசிக்கிறார். ஆனால் அவருடைய நம்பிக்கை பைத்தியக்கார நம்பிக்கை. சூரியா! நீங்கள் என்னுடன் வரப்போகிறீர்களா? இல்லையா? வரா விட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன். ஒருவேளை நீங்கள் இங்கே இருப்பதே நலமாயிருக்கும்." "ஒரு நாளும் இல்லை தாரிணி! உன்னுடன் நரகத்துக்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பல தடவை நான் சொல்லி யதுண்டு. அவசியமானால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். ஆனால் இது அவசியமா, உசிதமா என்று மறுபடியும் யோசிக்க வேண்டும். நாம் சீதாவின் விஷயத்தில் தலையிட்ட போதெல்லாம் அவளுக்குக் கஷ்டந்தான் நேர்ந்திருக்கிறது....." "அதெல்லாம் பிராயசித்தம் செய்யும்படியான சந்தர்ப்பம் இப்போது ஒருவேளை ஏற்படுமோ, என்னமோ? யார் கண்டது?" என்று சொல்லிக்கொண்டே தாரிணி விரைவாக நடக்கத் தொடங்கினாள். சூரியா அவளைத் தொடர்ந்து சென்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஏழாம் அத்தியாயம்
இருளில் ஒரு குரல்

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது; கடிகாரத்தின் முட்கள் பன்னிரண்டு எண்ணிக்கையைச் சமீபித்துக் கொண்டிருந்தன. சீதா கையில் 'டிரிப்யூன்' பத்திரிகை வைத்திருந்தாள். கொஞ்சம் பத்திரிகை படிப்பதும் பிறகு ஏதோ யோசிப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதும் மறுபடி படிப்பதுமாயிருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் சீதா ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ படிப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும். ஆனால் அன்றைக்கு வெகுநேரம் படித்தும் தூக்கம் வரவில்லை. பல காரணங்களால் அவளுடைய மனம் ஏற்கனவே கலக்கமுற்றிருந்தது. பத்திரிகையில் படித்த செய்திகள் அந்தக் கலக்கத்தை அதிகப்படுத்தின. ஹௌஷங்காபாத் நகரத்தின் கோடியில் அது ஒரு தனி வீடு. சுற்றிலும் சிறு தோட்டமும் காம்பவுண்டு சுவரும் இருந்தன. வீட்டின் மச்சு அறையில் சீதா தன்னந் தனியாக இருந்தாள். இல்லை, 'தன்னந்தனியாக' என்று சொல்வது தவறு. பக்கத்துக் கட்டிலில் குழந்தை வஸந்தி படுத்துத் தூங்கினாள். ஆனால் குழந்தை வஸந்தியைத் துணை என்று சொல்ல முடியாதல்லவா? சீக்கிய காவற்காரன் தினம் தினம் இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் திரும்பி வந்து விடுவது வழக்கம். அன்றைக்கு எதனாலோ அவன் திரும்பவில்லை. இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்திகளுக்கும் அவன் வராததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வஸந்தியின் மீது சீதாவின் பார்வை செனறது. குழந்தையின் கன்னங்கள் உப்பி இரண்டு அழகிய ஆப்பிள் பழங்களைப்போலக் காணப்பட்டன. மூடிய கண்களுடன் தூங்கிய குழந்தையின் முகத்தில் களை சொட்டிற்று. பஞ்சாபுக்கு வந்த பிறகு குழந்தைக்கு உடம்பு நன்றாய் ஆகியிருக்கிறது. ஒரு வருஷத்தில் எவ்வளவு நல்ல வளர்த்தி! நம்முடைய ஊர்ப் பக்கமாயிருந்தால், குழந்தைக்கு இப்போது மேலாக்குப் போட வேண்டும் அல்லது சித்தாடை உடுத்த வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் பக்கத்திலேதான் பெரிய பெரிய ஸ்திரீகள் எல்லாரும் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு அங்கவஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விடுகிறார்களே? இங்கே தேச ஆசாரம் அப்படி! குழந்தைக்கு மேலாக்கு, சித்தாடை வாங்குவது பற்றி என்ன கவலை?

சுவரிலே மாட்டியிருந்த வஸந்தியின் போட்டோ படத்தைச் சீதா பார்த்தாள். பஞ்சாப் பெண்களைப் போல் கால் சட்டை, மேல் சட்டை, அங்கவஸ்திரத்துடன் விளங்கிய வஸந்தியின் படம் அது, அந்த உடை குழந்தைக்கு அழகாய்த் தானிருக்கிறது. ஆனால் சில வருஷம் போன பிறகு நன்றாயிருக்குமா? ஒருவேளை இந்தப் பக்கத்திலேயே நாம் நெடு நாள் இருந்துவிட்டால் வஸந்தி வயதான பின்னரும் இப்படித்தான் உடை தரிப்பாளோ, என்னமோ? இந்த ஊரிலேயே இருப்பதற்கு ஆட்சேபம் என்ன? ஒன்றுமேயில்லை, பஞ்சாபைப் போன்ற தேசமே கிடையாது. எந்த விதத்தில் பார்த்தாலும் சரிதான். கள்ளிச் சொட்டைப் போலக் கனமான பால், ரூபாய்க்கு இரண்டரைப் படி. ஆப்பிளும் ஆரஞ்சும் திராட்சையும் வாதாமியும் கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கின்றன; மற்ற சாமான்களும் அப்படித்தான். ஏன் எல்லாருக்கும் உடம்பு நன்றாய் ஆகாது? இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நல்ல ஆஜானுபாகுவாக வளர்ந்திருப்பதற்குக் கேட்பானேன்? ஆகா! இந்தப் பக்கத்தின் இயற்கை அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஏதோ நம்முடைய பக்கங்களிலும் 'வஸந்த காலம்' என்று சொல்கிறார்கள். அங்கேயெல்லாம் வசந்த காலத்தைக் கண்டது யார்? புத்தகங்களிலே படிப்பதுதான். இங்கேயோ சரியாகப் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வஸந்த காலம் பிறப்பதைக் கண்ணாலே காணலாம். முதல் நாள் வரையில் மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாய் நிற்கும். பிப்ரவரி மாதம் 15-ந் தேதியன்று பார்த்தால் மரங்களில் எல்லாம் சின்னஞ்சிறு சிவந்த மொட்டுக்களைக் காணலாம். முதலில் மொட்டுக்கள் மலரும்; பிறகு இலைகள் தளிர்க்கும். பிப்ரவரி 14-ந் தேதி வரையில் வாசற் பக்கமெல்லாம் வெறுங் கட்டாந் தரையாகக் காணப்படும். சரியாக 15-ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமாதேவி திடீரென்று குதூகலித்துச் சிரிப்பது போன்ற அக்காட்சியை எப்படி வர்ணிப்பது? இவ்வளவு அழகான நாட்டை விட்டு ஏன் போகவேண்டும்? கோடைகாலத்தில் இங்கே வெயில் என்னமோ கடுமைதான்; சந்தேகம் இல்லை; ஆனால் பக்கத்தில் காஷ்மீர் இருக்கிறது; சிம்லா இருக்கிறது; இன்னும் பல மலை வாசங்களும் இருக்கின்றன.

மே, ஜுன் மாதங்களில் மலைக்குப் போய்விட்டு வந்தால் மற்ற மாதங்களைப் பற்றிக் கவலையே இல்லை. பஞ்சாபுக்கு வந்தபிறகு, ஏறக்குறைய இந்தப் பத்து மாத காலமும் சீதாவின் வாழ்க்கை ஒரே ஆனந்தமயமாக இருந்தது, வம்பு இல்லை, தும்பு இல்லை, அசூயை இல்லை, ஆத்திரம் இல்லை, பொறாமை இல்லை, புழுங்குவதும் இல்லை, சிநேகிதர்கள் இல்லை, விரோதிகளுமில்லை. தான் உண்டு, தன் கணவனின் அன்பு உண்டு, தன் குழந்தையின் மழலை உண்டு, வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்? இத்தகைய ஆனந்தமயமான வாழ்வு இன்னும் எத்தனை காலம் நிலைத்து நிற்குமோ தெரியவில்லையே? மறுபடியும் அந்தப் பாழும் டில்லிக்குப் போக வேண்டிவருமோ, என்னமோ, தெரியவில்லையே? இவருக்கு என்னத்துக்காகத் திடீரென்று சர்க்கார் உத்தியோக மோகம் மறுபடியும் பிடித்துக் கொண்டது? என்ன இருந்தாலும் புருஷர்களுடைய போக்கே விசித்திரமானதுதான். வீட்டில் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருந்தால் அவர்களுக்குப் போதுவதில்லை. கூட்டமும் கூச்சலும் அதிகாரமும் ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருந்தால்தான் புருஷர்களுக்கு வாழ்க்கை ரஸிக்கும் போலும். கிளப்புகள், பார்ட்டிகள், விருந்துகள் இல்லாமல் அவர்களால் அதிக காலம் உற்சாகமாக இருக்க முடியாது போலும்! இல்லாமற் போனால், பஞ்சாபுக்கும் வந்த புதிதில் இருந்த உற்சாகம் அவருக்கு இப்போது ஏன் இல்லாமற் போயிற்று? சிரிப்பும் குதூகலமும் களிப்பும் விளையாட்டும் ஏன் வர வர குறைந்து போய்விட்டன?

பத்து நாளைக்கு முன்புதான் திடீரென்று அவர் இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "சீதா! ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப் போகிறது. நம்முடைய சொந்த சர்க்கார் ஏற்படப் போகிறது. புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் வீட்டில் இடம் கொடுத்தேன் என்பதற்காகத்தானே எனக்கு உத்தியோகம் போயிற்று? போன உத்தியோகம் ஆகஸ்டு 15-ந் தேதி எனக்குத் திரும்பி வந்துவிடும்!" என்றார். "அப்படியானால் இந்த ஊரைவிட்டு டில்லிக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் தொனித்த கவலையைத் தெரிந்து கொண்டு ராகவன், "டில்லிக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று அவசியம் இல்லை. இஷ்டமிருந்தால் டில்லிக்குப் போகலாம். இஷ்டம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு 'ஆப்ட்' செய்து கொண்டு பஞ்சாபிலேயே உத்தியோகம் பார்க்கலாம். சீதா! உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே! என்னதான் இருந்தாலும் சர்க்கார் உத்தியோகத்தைப் போல கம்பெனி உத்தியோகம் ஆகாது. ஆயிரம் ரூபாய் சம்பளம் குறைவாயிருந்தாலும் சரி, சர்க்கார் உத்தியோகத்தின் மவுஸே வேறுதான்" என்றான் சௌந்தரராகவன். இதற்குப் பிறகு சீதா ஆட்சேபம் சொல்ல விரும்பவில்லை. "அதற்கென்ன சந்தேகம்? சர்க்கார் உத்தியோகம் திரும்பி வந்தால் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?" என்றாள். "ஆனால் சர்க்கார் உத்தியோகம் நம்மைத் தேடிக் கொண்டு வராது. நாம் அதைத் தேடிக் கொண்டு போகவேண்டும். டில்லிக்குப் போய் அதற்காகக் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும். உடனே புறப்பட்டுப் போனால்தான் கைகூடும். திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாள் பிடிக்கலாம். நீ இங்கேயே இருக்கிறாயா, சீதா? அல்லது என்கூட நீயும் வருகிறாயா?" என்று கேட்டான் ராகவன். "நான் உங்களுடன் வந்தால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "அப்படிப் பிரமாத இடைஞ் சலாயிராது. கொஞ்சம் இடைஞ்சலாயிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்!"

இதன் பிறகு சீதா டில்லிக்கு ராகவனுடன் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள். அடிக்கடி ராகவன் வெளியூர் களுக்குக் கம்பெனி காரியமாகப் போவதுண்டு. அதுபோல இப்போது போய்விட்டு வருகிறார். தான் எதற்காகப் பரபரப்பு அடைய வேண்டும்? டில்லிக்குத் தானும் போனால் அதிக நாள் அங்கே தங்கும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். அவர் மட்டும் தனியாகப் போனால் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார்! இவ்விதம் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ராகவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் போய் இரண்டு நாளைக்குப் பிறகு சிறிதும் எதிர்பாராத விதமாகப் பாமா என்பவள் வந்து சேர்ந்தாள். முன்னொரு காலத்தில் அவள்பேரில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம் இருந்தது. ஆனால் இப்போது சீதாவின் மனதில் கோபத்துக்கோ ஆங்காரத்துக்கோ அசூயைக்கோ சிறிதும் இடம் இருக்கவில்லை. அப்படி எப்போதேனும் சிறிது ஆங்காரம் தோன்றினாலும் தேவபட்டணத்திலிருந்து தான் நள்ளிரவில் புறப்பட் அன்று காந்தி மகாத்மாவின் படத்தின் முன்னிலையில் செய்த பிரதிக்ஞையை நினைவுபடுத்திக் கொள்வாள். உடனே ஆங்காரம் அடங்கிச் சாந்தம் குடி கொள்ளும். எனவே, பாமாவைச் சீதா அன்புடன் வரவேற்றாள். அவளுடைய குணமும் இப்போது நல்ல விதத்தில் மாறியிருந்தது கண்டு மகிழ்ந்தாள். ராகவன் டில்லிக்குப் போக நேர்ந்தது பற்றி இன்னொரு காரணத்தை பாமாவிடமிருந்து சீதா அறிந்தாள். ராகவன் எந்தக் கம்பெனியில் உத்தியோகம் பார்த்தானோ அந்தக் கம்பெனியார் பஞ்சாபில் தங்களுடைய கடையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். பஞ்சாப் பாகிஸ்தானில் சேரப் போவதுதான் அதற்குக் காரணமாம். ஆகையால், "இனி பஞ்சாப்பில் உனக்கு வேலை இல்லை! மதராஸுக்குப் போகிறாயா?" என்று ராகவனைக் கேட்டிருந்தார்களாம். இதனால் வெறுப்படைந்துதான் ராகவன் திரும்பவும் சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிப்போயிருக்க வேண்டும் என்று பாமா சொன்னாள்.

லாகூரில் கம்பெனியின் காரியங்களை முடிவு செய்வதற்காகப் பாமாவின் தகப்பனார் லாகூருக்கு வந்திருந்தாராம். அவருடன் வந்திருந்த பாமா, ராகவன் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு போவதற்காக ஹொஷங்காபாத்துக்கு வந்தாளாம். இதையெல்லாம் கேட்ட சீதாவுக்கு கொஞ்சம் மனக் கலக்கம் அதிகமாயிற்று. பஞ்சாப் பாகிஸ்தானில் சேர்வதற் காகக் கம்பெனியை எதற்காக மூடவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ராகவன் மதராஸுக்குப் போக விரும்பாதது இயற்கைதான் என்பதை உணர்ந்திருந்தாள். ஆகையால் டில்லியிலே உத்தியோகம் பார்க்க வேண்டியிருந்தாலும் நான் தடை சொல்லுவதில்லையென்று எண்ணிக் கொண்டாள். பாமா மேலும் சில தினங்கள் சீதாவுடன் அங்கே இருந்தாள். பஞ்சாபின் நிலைமைகளைப் பற்றி ஏதேதோ பயங்கரமான விஷயங்களைக் கூறினாள். அந்த நிலைமையில் ராகவன் சீதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போனது பற்றிக் குறை கூறினாள். சீதா அதை மறுக்கவே, "அப்படியானால் நானும் ராகவன் வரும் வரையில் இங்கே இருக்கின்றேன்!" என்றாள். ஆனால் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதியன்று "அப்பா என்னைப் பற்றிக் கவலைப் படுவார்; நான் இனி இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். பாமா போன பிறகு சீதா தன்னுடைய தனிமையை அதிகமாக உணர ஆரம்பித்தாள். மனதில் கலக்கம் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆயினும் தைரியத்தை அடியோடு இழந்துவிடவில்லை. 'உலகத்தில் பார்க்க வேண்டிய பயங்கரங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அநுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அநுபவித்தாகிவிட்டது. புதிதாக இனிமேல் எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?' என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

பாமா சென்று இன்றைக்கு நாலு தினம் ஆகிவிட்டது. ராகவனிடம் இருந்தோ கடிதம் ஒன்றும் வரவில்லை. ஏன் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் தானும் போகவில்லையென்று தோன்றியது. பாமாவை வற்புறுத்தித் தன்னுடன் இருக்கும்படி சொல்லாமற் போனதும் பிசகுதான். பத்திரிகையிலே போட்டிருக்கும் செய்திகளையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது! எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று குமுறிக் கொண்டிருக்கிறதாமே? இப்படியெல்லாம் பத்திரிகையில் எழுதியிருப்பதில் அர்த்தந்தான் என்ன? விளக்கை அணைத்துவிட்டுச் சீதா படுத்துக்கொண்டாள். கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தது பன்னிரண்டாவது தடவை மணி அடித்ததும், நிசப்தம் குடிகொண்டது, ஒரு நிமிஷ நேரத்துக்குத்தான். அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வர வர அது பெருகி கொண்டும் அருகில் நெருங்கிக் கொண்டும் வந்தது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருந்தது. சீச்சீ! இது என்ன பிரமை? அந்தப் பழைய உபத்திரவம் மறுபடியும் திரும்பி வருகிறது போலிருக்கிறதே! ஐந்தாறு மாதமாகவே இவ்விதம் அடிக்கடி காதில் ஓசை மாதிரி கேட்கிறது. ஆரம்பிக்கும்போது மெதுவாயிருக்கிறது; வர வர சத்தம் அதிகமாகிறது. காதிலே ஏதோ கோளாறு என்று ராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்! அடுத்த தடவை லாகூருக்குப் போகும்போது நல்ல காது வைத்தியரைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இருக்கிற இடைஞ்சல் எல்லாம் போதாது என்று காது வேறே செவிடாகித் தொலைந்துவிட்டால் என்னத்தைச் செய்கிறது?

காதிலே கேட்ட அலை ஓசை வர வர அதிகமாகி வரவே அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் படுத்திருந்த மச்சு ஹாலின் ஒரு பக்கத்துக்குப் போய் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இராத்திரியில் எந்த நேரத்திலும் ஹௌஷங்காபாத் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு ஒரு விளக்கையும் காணோமே? இது என்ன அதிசயம்! ஒருவேளை 'கரண்ட்' தடைப்பட்டு விட்டதா என்ன? ஆனால் இந்த வீட்டில் விளக்கு 12 மணி வரையில் எரிந்ததே! அப்புறம் கரண்ட் நின்று போயிருக்குமோ? ஸ்விட்சைப் போட்டுப் பார்க்கலாமா? எங்கேயோ ஒரு விஸில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்குப் பதிலாக இன்னொரு விஸில் சத்தம் கேட்டது. நாய் ஒன்று ஊளையிட்டது. 'தம்' 'தம்' என்று எங்கேயோ ஒரு முரசு பயங்கரமாகத் தொனி செய்தது. சீதாவுக்கு உடம்பு சிலிர்த்தது, சீ! இது என்ன பைத்தியக்காரப் பயம்? போலீஸார் விஸில் ஊதினால் அது ஒரு ஆச்சரியமா? நாய் ஊளையிடாமல் வேறு என்ன செய்யும்? எங்கேயோ சீக்கியரின் குருத்வாரத்தில் முரசு முழங்குகிறது. இன்று ஏதாவது உற்சவமாயிருக்கலாம். இதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? திடீரென்று அர்த்தமில்லாத ஒரு புது பயங்கரமான எண்ணம் சீதாவின் மனதில் தோன்றியது. இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை எங்கிருந்து பார்க்கின்றன என்று தெரியவில்லை. அறைக்குள்ளிருந்தா, வெளியிலிருந்தா என்று தெரியவில்லை. மனிதருடைய கண்ணா, காட்டு மிருகத்தினுடைய கண்ணா, கோட்டானுடைய கண்ணா, கொள்ளிவாய்ப் பிசாசின் கண்ணா என்றும் தெரியவில்லை.

ஒரு சமயம் அந்தக் கண்கள் பின்னாலிருந்து பார்ப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அந்தக் கண்கள் பக்கவாட்டிலிருந்து பார்ப்பதாகத் தோன்றியது. ஜன்னலுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் இருந்தது. இருட்டில் அந்த மரம் நெடிதுயர்ந்த ஒரு கரிய பூதம் எனக் காணப்பட்டது. அதிலிருந்து இரண்டு கண்கள் சீதாவை உற்று நோக்கின. முதலில் சாதாரணக் கண்களாக அவை தோன்றின. பிறகு நெருப்புத் தணலைப்போல் அக்கண்கள் பிரகாசித்தன. சீதா தலையை ஒரு ஆட்டம் ஆட்டி அந்த மரத்திலிருந்து பார்வையைத் திருப்பி அடுத்த வீட்டின் பக்கம் நோக்கினாள். அடுத்த வீட்டுக் கூரை மேலிருந்து இரண்டு கண்கள் அவளை நோக்கின. வெளியிலிருந்து தன் பார்வையைத் திருப்பி அறைக்குள்ளே செலுத்தினாள். அறையின் சுவரிலிருந்து அவளை இரு கண்கள் நோக்கின, மறுபடியும் வெளியில் பார்த்தாள். வீட்டைச் சுற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான கண்களின் ஜோடிகள் அக்னிமயமாக ஜொலித்துக் கொண்டு அவளை உற்று நோக்கின. "நம்முடைய மூளை குழம்பி வருகிறது! சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்துவிடுமோ, என்னமோ! அவர் எப்போது வருவாரோ, தெரிய வில்லையே! அவர் வரும் வரையிலாவது நாம் பைத்தியமாகாமல் இருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே ஜன்னல் பக்கமிருந்து திரும்பி வந்து படுக்கையில் படுத்துக்கொண்டாள். தலையணைக்கு அப்பால் கையினால் துளாவினாள். டார்ச் லைட்டும், ரிவால்வரும் கையில் தட்டுப்பட்டன. "இருங்கள ஜாக்கிரதையாக!" என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். ராகவன் இந்த பத்து மாத காலமாகத் தினந்தோறும் டார்ச் விளக்கும் கைத்துப்பாக்கியும் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் படுப்பது வழக்கம். அவன் வெளியில் போகும்போது சீதாவும் அந்தமாதிரியே செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தான்.

சீதா அந்தக் கட்டளையை நிறைவேற்றி வந்தாள். ஆனால் கைத்துப்பாக்கியினால் தனக்கு என்ன பிரயோஜனம்? தன்னுடைய சத்துரு வெளியிலே இல்லையே? கைத்துப்பாக்கியினால் தன்னுடைய மூளை குழம்பாமல் தடுத்துக் கொள்ள முடியுமா? தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அப்படித் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போவதில் என்ன பயன்? குழந்தை வஸந்தியின் கதி என்ன ஆவது? முன்னொரு தடவை இதே மாதிரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் எண்ணம் தனக்கு உதித்திருந்ததும் அதைச் சூரியா வந்து தடுத்ததும் சீதாவுக்கு நினைவு வந்தன. சூரியா இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? அவனுக்கும் தாரிணிக்கும் கலியாணம் எப்போது நடக்கும்? தனக்குக் கலியாண அழைப்பு வருமா?.... ஆஹா! இது என்ன சத்தம்? வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மரத்தில் கரகரவென்று சத்தம் கேட்கிறது. யாரோ மரத்தில் ஏறும் சத்தந்தான்; சந்தேகமில்லை, அது யாராயிருக்கும்? திருடனா கொலைகாரனா? அல்லது ஒருவேளை காவல்காரச் சீக்கியனா? காவல்காரன் வாசலில் வந்து படுத்துக்கொள்ளாமல் பக்கத்து மரத்தின்மேல் எதற்காக ஏறி வருகிறான்? மரத்தில் ஏறியவன் யாராயிருந்தாலும் அவன் மாடி வராந்தாவில் குதித்துவிட்டான்! குதித்த சத்தம் நன்றாய்க் கேட்டது. அடுத்தபடி என்ன செய்வான்? ஹாலுக்குள் எப்படி நுழைந்து வருவான்? வராந்தா ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல் தோன்றியது. ஒரு கரிய பயங்கர உருவம் நின்றது. அந்த உருவத்தின் அங்க அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. ஆகா! ஸ்திரீகள் புருஷர்களைப் பிரிந்து தனியாக இருக்கிறதென்பது எவ்வளவு அபாயகரமான விஷயம்? இந்தத் தடவை பிழைத்தால் இனி இத்தகைய பிசகை என்றைக்கும் செய்யக் கூடாது! ஆனால் இன்றைக்குத் தப்பிப் பிழைப்பது எப்படி? சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்ட வேகத்தைச் சொல்ல முடியாது. காதில் அலை ஓசை கேட்பது நின்று தன்னுடைய இருதய அடிப்பின் ஓசை கேட்கலாயிற்று. கடிகாரத்தின் டிக், டிக்கோடு இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் சேர்ந்து கொண்டன.

அவளுடைய உடம்பும் வியர்த்து, கால் முதல் தலை வரையில் நடுநடுங்கிற்று. நடுங்கிய கையினால் துளாவிச் சீதா கைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டாள். துப்பாக்கியைத் தொட்டதும் கைநடுக்கமும் நின்றது. ஒரே வினாடி ரிவால்வரை ஜன்னல் பக்கம் குறிபார்த்துச் சுடவேண்டியதுதான்; வந்திருப்பவன் செத்து விழுவான்! ஆனால் அந்தச் சமயத்தில், சீதா ரிவால்வரைக் கையில் பற்றிக்கொண்ட அடுத்த நிமிஷத்தில், அவள் மனக் கண்ணின் முன்னால் காந்தி மகாத்மாவின் திரு உருவம் தோன்றியது. சுவரில் மாட்டிய படத்திலிருந்து அவர் திருமுகம் தனியாக வெளிக்கிளம்பிக் கருணை ததும்பும் கண்களால் சீதாவைப் பார்ப்பது போல இருந்தது. "சீதா இதை நான் ஒப்பவில்லை, இது ஜீவஹிம்சை! சுடாதே! உன்னால் உயிரை வாங்கமுடியும்; உயிரைக் கொடுக்க முடியுமா?" என்று மகாத்மாவின் கருணைக் கண்கள் கேட்டன. இவன் எதற்காக வந்திருக்கிறானோ என்னமோ? ஒருவேளை ஏழைப்பட்ட மனிதனாயிருக்கலாம். சாப்பாட்டுக்கு இல்லாமல் வயிற்றுப் பசியின் கொடுமை காரணமாகத் திருட வந்திருக்கலாம் பாவம்! அவனை ஏன் கொல்ல வேண்டும்? ஜீன்வால்ஜீன் கதையில் என்ன வருகிறது? திருடனைக் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாரே, அந்தப் பிஷப்? நாம் மட்டும் எதற்காக இந்தப் பாதகத்தைச் செய்ய வேண்டும்? எப்படியும் ஜன்னல் வழியாக அவன் உள்ளே நுழைந்து வர முடியாது. என்னதான் செய்யப் போகிறான், பார்க்கலாமே? இவ்வளவு எண்ணங்களும் ஒரே நிமிஷ நேரத்துக்குள் சீதாவின் மனதில் குமுறிப் பாய்ந்தன. அந்தக் குமுறலுக்கு மத்தியில் சீதாவின் காதில் ஒரு குரல் கேட்டது. "சீதா! சீதா! எழுந்திரு! சத்தம் போடாமல் எழுந்திரு!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. ஆகா! அது யாருடைய குரல்! அந்தக் குரலைக் கேட்டதும் உடம்பு ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? இருளில் வந்த அந்தக் குரல் யாருடையது? ரிவால்வரை வைத்துவிட்டு, டார்ச் லைட்டை எடுத்துச் சீதா ஸ்விட்சை அமுக்கினாள். ஜன்னலுக்கு வெளியே வராந்தாவில் நின்ற உருவத்தின் மீது அதன் வெளிச்சம் விழுந்தது!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து எட்டாம் அத்தியாயம்
நரக வாசல் திறந்தது!

டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் தெரிந்த உருவம் சீதாவின் மனதில் பயத்தை உண்டாக்கவில்லை; ஆனால் வியப்பை உண்டாக்கியது. அந்த தாடிக்கார முஸ்லிமை அவள் ஏற்கெனவே இரண்டொரு தடவை பார்த்ததுண்டு. ஆக்ரா கோர்ட்டில் வந்து அவளைக் காப்பாற்றிய மனிதர் அவர்தான். முன்பின் தெரியாத அந்த மனிதர் எதற்காகத் தனக்கு அவ்வளவு பெரிய உதவியைச் செய்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவள் மனதில் அமுங்கிக் கிடந்தது. இப்போது அது பொங்கி எழுந்தது. "சீதா! விளக்கை அணை! கதவைத் திற! நேரம் அதிகம் இல்லை! சீக்கிரம்!" என்று உருவம் சொல்லிற்று. சீதா டார்ச் லைட்டை அணைத்தாள். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்ததும் அவளுடைய நெஞ்சில் மீண்டும் பதை பதைப்பு உண்டாயிற்று. அதைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் பக்கம் சென்றாள். "கதவைத் திற, சீதா, கதவைத் திற!" என்றது இருளில் வந்த குரல். அவ்வளவு அவசரமாகக் கதவைத் திறக்கச் சீதா தயாராயில்லை. "நீங்கள் யார்? எதற்காகக் கதவைத் திறக்க வேண்டும்?" என்று கூறி, "இங்கே புருஷர் யாருமில்லை!" என்று சேர்த்துக் கொண்டாள். "எனக்குத் தெரியும், அதனாலேதான் வந்தேன். என்னைத் தெரியவில்லையா, உனக்கு?" "ஆக்ரா கோர்ட்டில்..." "ஆமாம்; அது நான்தான், வேறு நினைவு ஒன்றும் உனக்கு வரவில்லையா? என்னுடைய குரல்...." "அப்பா!...." "ஆமாம்! நான்தான், சீதா! உன் அப்பாதான்!" "இந்த வேஷம்..." "அதையெல்லாம் பற்றிக் கேட்க இதுதானா சமயம்? சீதா! இன்னும் அரைமணி நேரத்தில் இந்த ஊரில் நரகத்தின் வாசல் திறக்கப் போகிறது. இரத்த வெறி கொண்ட பேய்களும் பிசாசுகளும் வந்து பயங்கரத் தாண்டவம் புரியப் போகின்றன.

"ஐயோ! அது யார்?" என்று அலறினாள் சீதா. பக்கத்துச் சுவர் மறைவிலிருந்து ஒரு பெண் உருவம் வெளிப்பட்டு வந்தது. "சத்தம் போடாதே! காரியம் கெட்டுவிடும். இவள் உன் சித்தி உன்னைக் காப்பாற்றத்தான் இவளும் வந்திருக்கிறாள்." இதற்குள் அந்த ஸ்திரீ, "இல்லை! இவளைக் காப்பாற்ற நான் வரவில்லை. இவள் நன்றி கெட்ட நிர்மூடம். என் பேத்தியை! வஸந்தி கண்மணியைக் காப்பாற்ற நான் வந்தேன். உங்கள் புத்தியற்ற பெண்ணைக் கட்டிக் கொண்டு நீங்களே அழுங்கள்! அடி பெண்ணே, உடனே கதவைத் திறக்கிறாயா! இந்தக் கத்தியால் உன்னைக் குத்திக் கொன்று விடட்டுமா?' என்றாள். அவள் யார் என்பது சீதாவுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. இனிமேல் கதவைத் திறக்கத் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. ஏதோ பெரிய விபத்து வரப்போகிறது என்றும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்றவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் சீதாவின் உள் மனதுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. நடுங்கிய கைகளினால் கதவின் தாளைத் திறந்தாள். மறுகணம் கதவைத் தள்ளிக் கொண்டு இருவரும் உள்ளே வந்தார்கள். "அப்பா! உங்களை இந்த நிலைமையில் இந்த வேஷத்திலா நான் பார்க்க வேண்டும்?" என்றாள் சீதா. அப்போது ரஸியா பேகம் குறுக்கிட்டக் கூறினாள்:- "பின் எப்போது பார்க்க வேண்டும்? உலகத்தில் எல்லாத் தகப்பன்மார்களும் பெண் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்து பாராட்டுவார்கள், சீராட்டுவார்கள் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. உன் அப்பா உன்னிடம் வைத்திருக்கும் அன்பை இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறாய்! அடி பெண்ணே! உன்னைப்பற்றிய கவலையினால் இந்தக் கிழவர் எத்தனை நாளாகத் தூங்கவில்லை தெரியுமா? டில்லியிலிருந்து என்னையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தப் பாழாய்ப் போன ஊரில் ஒரு மாதமாக உட்கார்ந்திருக்கிறார்!" "இவள் சொல்வதை நீ நம்பாதே, சீதா! என்னைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்தவள் இவள்தான்!" என்றார் மௌல்வி. "நம்முடைய சண்டையை அப்புறம் தீர்த்துக்கொள்ளலாம். இவளிடம் சொல்ல வேண்டியதை உடனே சொல்லுங்கள்!" என்றாள் ரஸியா பேகம்.

சீதாவின் தந்தை கூறினார்: "ஆமாம்; வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதமாக வீண் பொழுது போக்கி விட்டோ ம். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நேற்று வரையில் நான்கூட எதிர்பார்க்கவில்லை. சீதா! நேற்றுமுதல் பஞ்சாப் முழுவதும் பயங்கரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனுஷ்யர்கள் செய்வார்கள் என்று எண்ணக்கூடாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். இந்த ஊரில் இன்னும் அரைமணி நேரத்தில் நரகத்தைத் திறந்துவிடப் போகிறார்கள். ஆயிரம் பதினாயிரம் பிசாசுகள் வந்து கூத்தாடப் போகின்றன. அந்தப் பிசாசுகள் இன்னது செய்யும், இன்னது செய்யாது என்று சொல்ல முடியாது. இந்த ஊரிலுள்ள ஹிந்துக்கள் - சீக்கியர்களில் ஒரு குஞ்சு, குழந்தையாவது தப்பிப் பிழைக்குமா என்பது சந்தேகந்தான். நீயும் உன் குழந்தையும் தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எங்களை நம்பி உடனே புறப்பட வேண்டும். முதலில் உன் குழந்தையை இவளோடு அனுப்பிவிட வேண்டும்; பிறகு நீ என்னோடு...." "அப்பா! நான் வரமுடியாது; குழந்தையை வேண்டுமானால் உங்களுடன் அனுப்பிவிடுகிறேன். அவர் இங்கே என்னைத் தேடினால்?..." "பைத்தியக்காரப் பெண்ணே! 'அவர்' என்று உன் புருஷனைத்தானே சொல்லுகிறாய்? அவன் பரம முட்டாள்! இப்பேர்ப்பட்ட சமயத்தில் உன்னைத் தனியாக விட்டுப் போயிருக்கிறான் பார்!" "அம்மா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்ததற்காகச் சந்தோஷம். ஆனால் என் புருஷனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்வதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது...." "சரி, சரி! நீ ஆச்சு, உன் புருஷன் ஆச்சு, உன் அப்பா ஆச்சு! எப்படியாவது போய்த் தொலையுங்கள், உன் குழந்தையை அனுப்புவதாகச் சொன்னாயே? அதையாவது செய்! சீக்கிரம் அவளை எழுப்பு!...அதோ...!" "ஆகா நரக வாசல் திறந்தாகி விட்டது!" என்றார் மௌல்வி. தூரத்தில் திடீரென்று பயங்கரமான கூச்சல்... ஊளைச் சத்தங்கள் கேட்டன.

கரிய உருவங்கள் கையில் தீவர்த்திகளைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவது தெரிந்தது. "சீதா! இனி ஒரு நிமிஷமும் தாமதிப்பதற்கில்லை; வஸந்தியை உடனே எழுப்பு!" என்றார் மௌல்வி. சீதா தயங்கித் தத்தளித்து நின்றாள். "குழந்தையை எப்படிக் கொடுப்பேன்? அவர் வந்து கேட்டால்...." என்றாள். "சீதா நான் உன்னைப் பெற்று வளர்த்த தகப்பன். என்னைக் காட்டிலும் உன்னிடம் அதிக அன்புள்ளவள் இந்த ரஸியா பேகம். இவளை நம்பி உன் குழந்தையைக் கொடு! ஒன்றும் கெடுதல் வராது!" "நீயும் இவரும் இந்த ஊரிலேயே இருந்து அழிந்துபோய் விட்டால்கூட நான் எப்படியாவது உன் புருஷனைத் தேடிப் பிடித்துக் குழந்தையைப் பத்திரமாய் அவனிடம் ஒப்புவித்து விடுகிறேன்" என்றாள் ரஸியா பேகம். சீதாவின் பார்வை சுவரில் மாட்டியிருந்த காந்தி மகான் படத்தின்மீது விழுந்தது. ஜன்னல் வழியாக வந்த மங்கலான வெளிச்சத்தில் காந்திஜியின் முகத் தோற்றம், "நம்பிக் கொடு உனக்கு அதனால் கெடுதல் வராது!" என்று சொல்லுவது போலிருந்தது. சீதா, கால், கைகள் பதற ஓடிச் சென்று, கட்டிலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கிய குழந்தையைத் தட்டி எழுப்பினாள். வஸந்தி எழுந்து உட்கார்ந்துகொண்டு மிரண்ட கண்களால் தனக்கு முன்னால் நின்றவர்களை விழித்துப் பார்த்தாள். குழந்தையைத் தட்டி எழுப்பிய அதே நிமிஷத்தில் சீதா அவளிடம் என்ன சொல்லவேண்டும் என்பது பற்றித் தீர்மானித் திருந்தாள். "வஸந்தி! டில்லியில் அப்பாவுக்கு உடம்பு சரிப்படவில்லையாம். நாம் உடனே டில்லிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும்!" என்றாள்.

"சரி, அம்மா! இதோ நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே கட்டிலிலிருந்து வஸந்தி குதித்து வந்தாள். ரஸியா பேகம், "என் கண்ணே!" என்று அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள். "ஓகோ! இந்த மாமியை எனக்குத் தெரியும், அன்றைக்கு மார்க்கெட்டில் ஆப்பிள் பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு முத்தம் இட்டீர்களே?" என்றாள் வஸந்தி. "ஆமாண்டி கண்ணே! உனக்கு ஞாபகம் இருக்கிறதே!" "நீங்களும் டில்லிக்கு வரப் போகிறீர்களா?" என்று கேட்டாள் வஸந்தி. "ஆமாம்; நானும் டில்லிக்குத்தான் போகிறேன்!" என்று சொன்னாள் ரஸியா பேகம். "வஸந்தி! நீ அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதானே? நீ இந்தப் பாட்டியுடன் இப்போதே புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். நான் வீட்டுக் கதவுகளையெல்லாம் பூட்டிக்கொண்டு இந்தத் தாத்தாவுடன் பின்னால் வந்து சேருகிறேன்!" என்றாள் சீதா. "நான் அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதான். ஆனால் நீ மட்டும் இனிமேல் பொய் சொல்லாதே!" என்றாள் வஸந்தி. மூவரும் திகைத்து நின்றார்கள். "நான் முன்னாடியே விழித்துக்கொண்டு விட்டேன். நீங்கள் பேசிக் கொண்டி ருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன்" என்றாள் வஸந்தி. சீதாவுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது. "சரி; இப்போது என்ன சொல்கிறாய்? இந்தப் பாட்டியுடன் போகிறாயா, மாட்டாயா?" "நான் போகிறேன், அம்மா! கட்டாயம் போகிறேன். நீயும் வந்துவிடு என்றுதான் சொல்லுகிறேன். அப்பா நம்மை இங்கே விட்டுவிட்டுப் போனது பெரிய பிசகு! நீ இங்கே இருக்கிறேன் என்று சொல்வது அதைவிடப் பெரிய பிசகு!" என்றாள் வஸந்தி. "அப்படிச் சொல்லடி, என் கண்ணே!" என்று ரஸியாபேகம் குழந்தையை முத்தமிட்டாள்.

"சீதா! நாங்கள் சொன்னதைத்தான் கேட்கவில்லை; குழந்தை சொல்வதையாவது கேட்கிறாயா?" என்றாள். "அம்மா வராவிட்டால் நானும் வரமாட்டேன்!" என்றாள் வஸந்தி. "சரி! வேறு வழியில்லை, கடவுள் விட்ட வழியாகட்டும்! நானும் வருகிறேன்" என்றாள் சீதா. தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பயங்கரமான குழப்பச் சத்தங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. அப்போது மௌல்வி சாகிபு வஸந்தியைப் பார்த்து, "நீ ரொம்ப சமர்த்துக் குழந்தை, வஸந்தி! நாம் எல்லோரும் சேர்ந்து தப்பித்துச் செல்லப் பார்ப்பது அபாயம். நீயும் இந்தப் பாட்டியும் முதலில் போங்கள்; கால் மணி நேரத்துக்கெல்லாம் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு நான் வருகிறேன்" என்றார். "சரி" என்றாள் வஸந்தி. அடுத்த நிமிஷம் ரஸியா பேகமும் வஸந்தியும் மச்சுப் படியில் இறங்கித் துரிதமாகச் சென்றார்கள். "அப்பா!" "சீதா!" "சற்று முன்னால் ஒரு பெரிய பாதகத்தி லிருந்து தப்பிப் பிழைத்தேன். நீங்கள் வந்து மாடித் தாழ்வாரத்தில் ஜன்னல் ஓரத்தில் நின்றபோது கைத்துப்பாக்கியால் உங்களைச் சுட்டுவிட நினைத்தேன். அவர் எனக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்..." "ஏன் சுடவில்லை, அம்மா!" "காந்தி மகானுடைய திருமுகம் என் மனக்கண் முன்னால் தோன்றிச் சுடாமல் தடுத்தது. சுட்டிருந்தால் எப்படிப்பட்ட பாதகத்தைச் செய்திருப்ேன்! பெற்ற தகப்பனாரை...." "பெற்ற தகப்பனாயிருந்தாலும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு அது தகுந்த தண்டனையாயிருந்திருக்கும். ஆனால் அத்துடன் அது போயிராது. இந்த வீட்டின் பேரில் சிலர் கண் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவர்கள் ஓடிவந்திருப்பார்கள், நீயும் குழந்தையும்...." "அப்பா! இப்போது நாம் என்ன செய்யலாம்? நாமும் புறப்பட வேண்டியதுதானே?"

"இல்லை, சீதா! நாம் உடனே புறப்படுவதற்கில்லை. கொஞ்ச நேரம் இங்கே இருந்தாக வேண்டும். யாரும் தப்பித்துப் போகாதபடி இந்த ஊரைச் சுற்றிக் காவல் போட்டிருக்கிறார்கள். காவல் வேலை ஒப்புக்கொண்டிருப்பவர்களில் நான் ஒருவன். என்னுடைய இடத்துக்குப் போய் நான் காவல் இருக்கிறேன். துவேஷப்பிசாசுகள் இந்த வீட்டையும் தாக்குவதற்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் முதலில் நான் வருவேன். அந்தச் சமயத்தில் நான் எப்படி நடந்துகொண்டலும் நீ அதிசயப்படக் கூடாது; பயப்படவும் கூடாது. நான் கத்தியினால் உன்னைக் குத்துவதற்கு வந்தால்கூடப் பயப்பட வேண்டாம். முடியுமானால் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்! இதெல்லாம் எதற்காக என்று என்னை இப்போது கேட்காதே! தப்பிப் பிழைத்த பிற்பாடு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்தச் சமயம் நம்முடைய யுக்தி புத்திகளினால்தான் பிழைக்கவேண்டும்...." குழப்பமும் கூச்சலும் மேலும் நெருங்கி வந்து விட்டன. ஆங்காங்கே வீடுகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. எரியும் வீடுகளிலிருந்து உண்டான கோரமான வெளிச்சத்தில் கையில் கத்தி, கோடாரி, அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் கரிய உருவங்கள் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு ஓடிய காட்சி தென்பட்டது. "சீதா! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். கடவுள் உன்னை நிச்சயமாகக் காப்பாற்றுவார்!" என்று சொல்லி விட்டு மௌல்வி சாகிபு விரைந்து கீழே சென்றார். சீதா காத்துக் கொண்டிருந்தாள். காத்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக நீண்டு அவளை வேதனைப்படுத்தியது. குழப்பமும் கூச்சலும் தீயும் புகையும் அழுகையும் பிரலாபமும் நெருங்கி வந்து கொண்டிருந்தன. சீதாவுக்குத் தான் குழந்தைப் பிராயத்தில் பம்பாயில் ஆனந்தமாகக் கழித்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அம்மாவும் அப்பாவும் தன்னை மடியில் வைத்துக் கொஞ்சிய நாட்கள் நினைவு வந்தன. அந்தத் துரைசாமி ஐயர்தானா இப்போது இப்படி இருக்கிறார்? நம்ப முடியவில்லையே! ஆயினும் நம்பித்தான் ஆகவேண்டும்.

திடீரென்று ராஜம்பேட்டை ஞாபகம் வந்தது. சாலையில் வண்டி குடை கவிழ்ந்து தான் ஓடையில் விழுந்ததும் சூரியா தன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்து கரையில் நின்ற தோற்றமும் மனக் கண்முன் தோன்றின. அந்தச் சூரியா இப்போது எங்கே இருக்கிறான்? தாரிணியின் காதலில் மதிமயங்கிக் கிடக்கிறானா? ஆகா! காதல் என்ற ஒரு வார்த்தை! எந்த மூடனோ சிருஷ்டி செய்தது! அதை வைத்துக்கொண்டு கதை எழுதுகிறவர்கள் புத்தகம் புத்தகமாய் எழுதித் தள்ளுகிறார்கள். என்ன பொய்! என்ன ஏமாற்றம்! ஆனால் அடியோடு பொய் என்றும் ஏமாற்றம் என்றும் சொல்லிவிட முடியுமா? ராஜம்பேட்டையில் லலிதாவைப் பார்க்க வந்த சௌந்தரராகவனைத் தான் பார்த்ததும் காதல் கொண்டதும் பொய்யாகுமா?- இருந்தாலும் லலிதாவுக்கு அப்படி ஒரு துரோகம் தான் செய்திருக்கக் கூடாது. அந்தத் துரோகத்தின் பலன்தான் பிற்பாடு வாழ்க்கை முழுதும் தான் கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி ஆயிற்று! வாழ்க்கை முழுதும் எத்தனை கஷ்டப்பட்டால்தான் என்ன? சென்ற ஒரு வருஷ காலம் இந்த அழகான பாஞ்சால நாட்டில் தான் வாழ்ந்த இன்ப வாழ்வுக்கு உலகத்தில் வேறு என்ன இன்பம் இணையாக முடியும்? அத்தகைய இன்ப வாழ்வுக்கு இப்போது இறுதி வந்துவிட்டது போலிருக்கிறதே!... இதோ சமீபத்தில், வீட்டண்டை யில் நெருங்கி வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே!...அப்புறம் நடந்த சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன. அவையெல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய சொந்த அநுபவங்களாகவே தோன்றவில்லை. அதிதுரிதமான 'டெம்போ'வுடன் எடுக்கப்பட்ட சினிமாவில் பார்க்கும் காட்சிகளைப் போலவே தோன்றின. ஒரு நிமிஷம் அந்த வீட்டு வாசலில் பயங்கரமான கூச்சல் கேட்டது. மறு நிமிஷமே வாசற் கதவைக் கோடரிகளால் பிளக்கும் சத்தம் கேட்டது. திடு திடுவென்று பலர் உள்ளே நுழைந்தார்கள். மச்சுப்படிகளின் பேரில் தடதடவென்று ஏறி வந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் முதலில் மௌல்வி சாகிபு வந்தார். அவர் கையில் ஒரு கூரிய கத்தி பளபளவென்று மின்னியது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் பக்கத்தில் வந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். பிறகு அவளை ஒரு காலால் மிதித்துக் கொண்டு திரும்பி நின்றார். பின்னால் வந்தவர்களைப் பார்த்து "இவள் என்னுடையவள்" "இவள் என்னுடையவள்" என்று கூச்சலிட்டார். பின்னால் வந்த பயங்கர ராட்சஸர்கள் சிறிது தயங்கி நின்றார்கள். ஒருவன் சிரித்தான்; இன்னொருவன் "கிழவனுக்கு வந்த கேட்டைப் பார்!" என்றான். மற்றொருவன் அருகில் பாய்ந்து வந்து கிழவனைக் குத்திப் போடுவதாகச் சொல்லிக்கொண்டு கத்தியை ஓங்கினான். அவனைத் தடுப்பதற்காக வந்த இன்னொருவன் காலால் சீதாவை ஒரு மிதி மிதித்தான். ஆயினும் சீதாவின் தகப்பனார் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதற்குள்ளே ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்றான். "ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று மௌல்வி சாகிபு கத்தினார். வெளியிலிருந்து அதே சமயத்தில் புகை திரள் திரளாகக் கிளம்பி மேலே சுழன்று வரத் தொடங்கியது. அறைக்குள் வந்த மனிதர்கள் திரும்பி ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவருடைய கண்ணில் சுவரில் மாட்டியிருந்த மகாத்மாவின் படம் தென்பட்டது. அதை அவன் எட்டி எடுத்துத் தரையில் ஓங்கி எறிந்தான். படத்தின் கண்ணாடி உடைந்த சத்தம் படார் என்று கேட்டது. ஒரு கண்ணாடித் துண்டு மௌல்வி சாகிபுவின் முழங்காலுக்குக் கீழே சதையில் பாய்ந்தது. அந்த இடத்திலிருந்து குபு குபுவென்று இரத்தம் பெருகியது. மனிதர்கள் தடதடவென்று மச்சுப்படியில் இறங்கி ஓடினார்கள். வெளியே புகைத்திரளுக்கு மத்தியில் தீயின் ஜீவாலை தென்பட்டது. இந்தச் சமயத்தில் சீதா தன் பிரக்ஞையை இழக்கத் தொடங்கினாள். 'ஓ' என்ற ஓசை மட்டும் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. இது கடலின் அலை ஓசையை நினைவூட்டியது. அந்தக் கடைசி நினைவோடு சீதா மூர்ச்சையடைந்தாள்.

நரகத்தில் எல்லாத் திசையும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திரள் திரளாகப் புகை கிளம்பி நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தது. பேய்களும் பூதங்களும் யம கிங்கரர்களும் ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள். வயது சென்ற ஸ்திரீகளையும் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து எரிகிற தீயில் தள்ளினார்கள். இந்த நரகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வெகு விசித்திரமானவர்கள்! அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். நெருப்பில் விழாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குறி பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்கள். இப்படிப்பட்ட நரகத்தில் நல்ல பூதம் ஒன்று சீதாவைத் தூக்கிக் கொண்டு இருண்ட சந்துகள் - பொந்துகள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஆங்காங்கு நின்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு ஜாக்கிரதையாகச் சென்றது. சில சமயம் மிக மெள்ள மெள்ள நடந்தது; சில சமயம் ஒரே தாண்டாகத் தாண்டி ஓடிற்று. சில சமயம் சுவரில் ஒட்டிக்கொண்டு சென்றது; சில சமயம் மரங்களின் பின்னால் ஒளிந்து மறைந்து பாய்ந்து சன்றது. இவ்விதம் அந்த பூதம் நீண்ட நேரம் பாய்க்கொண்டேயிருந்தது. நரக லோகத்தில் உள்ள இருண்ட சந்துகளுக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றும்படியாக அந்த நல்ல பூதம் சீதாவைத் தோளில் போட்டுக் கொண்டு நெடுநேரம் நடந்தது. ஆகா! கடைசியில் நரகத்தைத் தாண்டியாயிற்று போலும்! வெப்பமான புகையும் தீயின் அனலும் இப்போது முகத்தில் வீசி எரிச்சல் உண்டாக்கவில்லை. குளிர்ந்த காற்று முகத்தில் பட்டு இதம் தருகிறது. நரகத்தின் கோர சத்தங்களும் இப்போது வெகுதூரத்திலேதான் கேட்கின்றன! நரக வாசலைக் கடந்து சொர்க்கத்துக்குள் புகுந்தாயிற்று போலும்!

சீதாவுக்கு நினைவு வரத் தொடங்கியது. மூடியிருந்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். எண்ணிறந்த வெள்ளி நட்சத்திரங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஆகா! வான வெளியில் சொர்க்க பூமியை நெருங்கி இப்போது போய்க்கொண்டிருக்கிறோம் போலும்! புஷ்பக விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் போலும் தன் நெற்றியை மிருதுவாகத் தடவிக் கொடுக்கும் கை, தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதனின் திருக்கரமாகவே இருக்க வேண்டும்! இதெல்லாம் வீண் பிரமை என்று சீக்கிரத்திலே சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. கடகடவென்று கட்டை வண்டியின் சத்தமும் வண்டி ஆட்டத்தினால் உடம்பு ஆடி உண்டான வலியும் பூமியிலேதான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைச் சீதாவுக்கு உண்டாக்கின. நெற்றியைத் தடவிக் கொண்டிருக்கும் கை மௌல்வி சாகிபுவின் கை; அதாவது தன் தந்தையின் கை. "அப்பா!" "சீதா! விழித்துக் கொண்டாயா?" "ரொம்ப நேரம் தூங்கி விட்டேனா?" "பொழுது விடியப் போகிறது" "குழந்தை வஸந்தி...?" "குழந்தை பத்திரமாக இருப்பாள்; கவலைப்படாதே; உன் சித்தி ரொம்பக் கெட்டிக்காரி. இதைப்போல எத்தனையோ சமாளித்தவள்." சீதா சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு, "அப்பா இது என்ன வண்டி?" என்று கேட்டாள். "இது பாஞ்சால நாட்டின் புராதன வண்டி, சீதா! கோவேறு கழுதை பூட்டிய வண்டி!" "வண்டி ஓட்டுகிறவன் யார்?" "ஒரு மாதமாக என்னிடம் வேலை செய்த பையன்." "அவனை நம்பலாமா?" "இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்!" "இந்த வண்டி ஏது?" "விலைக்கு வாங்கினேன், இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு உபயோகமாயிருக்கட்டும் என்றுதான்!" "இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன?" "ஒரு மாதிரி தெரியும், ஆனால் இவ்வளவு பயங்கரமாயிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை."

சற்றுப் பொறுத்துச் சீதா, "இந்த வண்டியில் இன்னும் ரொம்ப நேரம் போக வேண்டுமா?" என்று கேட்டாள். "ஏன் உடம்பு வலிக்கிறதா?" "ஆமாம்; உடம்பு வலிக்கிறது." "வலிக்காமல் என்ன செய்யும்? அந்த ராட்சஸர்களும் நானும் உன்னை எப்படி மிதித்து விட்டோ ம்? கொஞ்சம் பொறுத்துக்கொள், சீதா! சீக்கிரத்தில் வண்டியை நிறுத்தச் சொல்கிறேன். அதோ தெரிகிறதே, அந்தப் பாறை மறைவில் வண்டியை நிறுத்தலாம்!" என்றார் மௌல்வி சாகிபு. சீதா எழுந்து உட்கார்ந்தாள், அது மேலே கூண்டு இல்லாத திறந்த வண்டி. ஆனால் நாலு பக்கமும் ஒரு முழ உயரம் அடைப்பு இருந்தது. அடைப்புக்கு மேலாகப் பார்த்தாள். சாலையின் இரு புறமும் குட்டையான ஈச்ச மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. சற்று தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை பிரம்ம ராட்சதனைப் போல் நின்றது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சீதா தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் மனத்திற்குள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வி அப்போது வெளியில் வந்தது. "அப்பா! நீங்கள் எதற்காக முஸ்லிம் மதத்தில் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள், தந்தை மௌனமாயிருந்தார். "நான் கேட்டது தவறாயிருந்தால் மன்னியுங்கள். எதற்காகக் கேட்டேன் என்றால், உங்களுக்குக் கடவுளிடத்தில் நம்பிக்கை உண்டா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். கடவுள் ஒருவர் இருந்தால் இந்த மாதிரி கஷ்டங்களையெல்லாம் ஜனங்களுக்கு எதற்காகக் கொடுக்கிறார்?" என்றாள் சீதா! "இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கடவுள் உண்டா என்ற சந்தேகம் யாருக்கும் தோன்றக் கூடியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி நீ ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முதலில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறேன். எப்படி ஆரம்பிப்பது என்றுதான் யோசித்தேன். முதலிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். சீதா! என் கதையைத் தவிர முக்கியமான இரகசியம் ஒன்றையும் சொல்லப் போகிறேன். எப்போதாவது தாரிணியைச் சந்திக்கும்படி நேர்ந்தால்...." "அப்பா! தாரிணிக்கும் எனக்கும் ஏதாவது உறவு உண்டா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். "அதைத்தான் சொல்லப் போகிறேன்" என்றார் சீதாவின் தந்தை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஒன்பதாம் அத்தியாயம்
சீமந்த புத்திரி

சாலைக்கு இருபுறத்திலும் குட்டையான ஈச்ச மரங்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன. ஒரு பக்கத்தில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. வண்டியை ஓட்டிய பையனிடம் மௌல்வி சாகிபு என்னமோ சொன்னார். பையன் வண்டியைச் சாலையை விட்டுக் காட்டுக்குள் ஓட்டினான். ஈச்ச மரங்களுக்கு மத்தியில் இடங்கிடைத்த வழியாக ஓட்டிச் சென்று பாறைக்குப் பின்புறத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான். தந்தையும் மகளும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து ஒரு கம்பளத்தை எடுத்து விரித்தார். "அம்மா! இதில் உட்கார்! பகலெல்லாம் நாம் இங்கேதான் கழிக்க வேண்டியிருக்கும்!" என்றார். சீதா உட்கார்ந்து, "ஏன், அப்பா! பகலில் பிரயாணம் செய்யக்கூடாதா?" என்று கேட்டாள். "பகலில் பிரயாணம் செய்தால் இரண்டு வகையில் ஆபத்து வரலாம். சீக்கியர்களாவது ஹிந்துக்களாவது நம்மைப் பார்த்தால் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிம் கிழவன் அடித்துக்கொண்டு போகிறான் என்று எண்ணி என்னைக் கொல்லப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நம்மைப் பார்த்தால் உன்னை என்ன பண்ணுவார்களோ தெரியாது" என்றார். இப்படி சொல்லிவிட்டு மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து தண்ணீர்ப் பையையும் ஒரு சிறு பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். "சீதா! இந்தப் பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப் நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும் சொல்வதற்கில்லை!" என்றார். "பஞ்சாபை நரகம் என்கிறீர்களே? ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது? ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள்? கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது?"

"ஒரு வருஷத்துக்குள் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஜனங்கள் பைத்தியமாகிவிட்டார்கள்; அவ்வளவுதான். கல்கத்தாவுக்கு நவகாளியில் பழி வாங்கினார்கள். நவகாளிக்குப் பீஹாரில் பழி வாங்கினார்கள். பீஹாருக்கு இப்போது மேற்கு பஞ்சாபில் பழி வாங்குகிறார்கள். இதன் பலன் என்ன ஆகுமோ கடவுளுக்குத் தான் தெரியும். இத்தனை பைத்தியங்களுக்கு மத்தியில் அந்த மகான் ஒருவர் இருந்து அன்பு மதத்தைப் போதித்து வருகிறார்; அவர் உண்மையி் மகாத்மாதான்!" "உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டா அப்பா?" "செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்தி உண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன்? உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மா காந்தியிடம் பக்தி உண்டு 'மகாத்மாதான் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படி ஆகியிராது." "அப்பா! நான் கேட்கிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்ப நாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன். அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா?" என்றாள் சீதா. "நீ இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா! இந்த மட்டும் கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாக இருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றி என் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன்! தான் செய்த குற்றங்களைத் தான் பெற்ற பெண்ணிடம் சொல்லுவதென்பது கஷ்டமான காரியம் தான்.

ஆனாலும் இந்தச் சந்தர்ப்பம் தவறினால் மறுபடியும் கிடைக்குமோ என்னமோ!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா? துரைசாமி ராஜம்மாளைக் கலியாணம் செய்து கொண்டு பம்பாயில் புதுக்குடித்தனம் தொடங்கிய சில காலம் அவர்களுடைய வாழ்க்கை இன்ப மயமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்தத் திருநாளாயிருந்தது. ராஜம்மாள் முதல் தடவை கர்ப்பமானாள். தம்பதிகள் களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். வாழ்க்கைச் சக்கரம் ஒரு முறை சுழன்று வந்தது. இன்பக் கிரஹம் பெயர்ந்து துன்பக்கிரஹம் தோன்றியது. 'மூன்று சீட்டு' என்னும் சூதாட்டத்தில் துன்பத்தின் சிறிய வித்து துரைசாமி அறியாமலே விதைக்கப்பட்டு முளைத்து எழுந்தது. சொற்ப சம்பளக்காரரான துரைசாமி ரங்காட்டத்தில் தோற்ற பணத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்துவிட விரும்பினார். இதற்காகக் கடன் வாங்கிக்கொண்டு குதிரைப் பந்தயத்துக்குப் போனார். ஒரு தடவை போன பிறகு மனதைத் தடுக்க முடியவில்லை. லாபமும் நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. தம்முடைய யுத்தி சாமர்த்தியத்தால் இழந்த பணத்தையெல்லாம் எடுத்து மேலும் லாபமும் சம்பாதித்துவிடலாம் என்றும் ஒரு நல்ல தொகை கிடைத்ததும் பந்தயத்தை விட்டொழித்து விடலாம் என்றும் எண்ணினார். ஏதோ பொய்க் காரணங்களைச் சொல்லி ராஜம்மாள் அணிந்திருந்த சில நகைகளையும் வாங்கிக் கொண்டுபோய் அடகு வைத்துப் பணம் கடன் வாங்கினார். மேலும் மேலும் சேற்றில் அமுங்கிக் கொண்டிருந்தார், கடைசியில் அடியோடு அமுங்கிப்போக வேண்டியதுதான் என்ற நிலைமை ஏற்பட்டிருந்த சமயத்தில் ராஜம்மாளின் பிரசவ காலமும் நெருங்கியிருந்தது. வீட்டில் வசதியில்லாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். வண்டி வைத்து ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவதற்குக்கூட கையில் பணம் இல்லாமலிருந்தது. இந்த நிலைமையை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரமாமணிபாய் தன் சகோதரியுடன் வந்து சேர்ந்தாள்.

அவளுடைய கண்ணில் துளித்திருந்த கண்ணீரும் அவள் தன் தங்கையைப்பற்றிச் சொன்ன வரலாறும் துரைசாமியின் உள்ளத்தை இளக்கிவிட்டன. அதோடு அவர்களுக்கு உதவி செய்வதால் தன்னுடைய தரித்திரம் தீரலாம் என்ற ஆசையும் கூடச் சேர்ந்து கொண்டது. தன் மனைவியைப் பிரசவத்துக்காக விட்டிருந்த அதே பிரசவ ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் சேர்த்தார். துரைசாமி பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தமது மனைவியைப் பார்ப்பதற்காகப் போனபோதெல்லாம் ரமாமணிபாயையும் பார்க்கும்படி நேர்ந்தது. வறுமை வலையில் சிக்கியிருந்த அம்மனிதர் மீது ரமாமணிபாய் தன் மோகவலையையும் விரித்தாள். துரைசாமியின் மனம் தத்தளித்தது. நல்லபடியாகத் தன் மனைவிக்குப் பிரசவம் ஆகி வீடு திரும்பிய பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவது என்று ஒரு சமயம் எண்ணுவார். அடுத்த நிமிஷம் அவருடைய மன உறுதி பறந்து போய்விடும். ரமாமணியுடன் காதல் வாழ்க்கை நடத்துவதுபற்றி அவருடைய உள்ளம் ஆகாசக் கோட்டைகள் கட்டத் தொடங்கிவிடும். ஒருவேளை ராஜம்மாள் பிரசவத்தின் போது இறந்து போய்விட்டால் ரமாமணியைத் தாம் கலியாணம் செய்துகொண்டு ஏன் சுகமாக இருக்கக்கூடாது, என்னும் படுபாதக எண்ணங்கூடத் துரைசாமியின் மனதில் ஒவ்வொரு சமயம் எழுந்து அவரையே திடுக்கிடச் செய்யும். ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இரவில் குழந்தை பெற்றெடுத்தார்கள். அன்றிரவு துரைசாமிக்கு ஸ்டேஷனில் 'டியூடி' இருந்தது. ஆகையால் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியவில்லை. இராத்திரி ஒரு தடவை டெலிபோன் பண்ணி விசாரித்தார். ராஜம்மாளுக்குச் சுகப்பிரசவம் ஆனதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பதில் வந்தது. காலையில் 'டியூடி' முடிந்ததும் துரைசாமி பரபரப்புடன் மருத்துவச் சாலைக்குப் போனார். நர்ஸின் அனுமதி பெற்று ராஜம்மாளைப் போய்ப் பார்த்தார். அளவில்லா வேதனையும் வலியும் அனுபவித்துச் சோர்ந்து போயிருந்த ராஜம்மாளின் முகத்தில் புன்னகை மலர்ந்து பெருமிதம் குடிகொண்டிருந்தது. "நான் சொன்னதுதான் பலித்தது!" என்றாள் ராஜம்மாள்.

"என் வாக்குப் பொய்யாகுமா? பாரத்வாஜ மகரிஷியின் வம்சத்தில் பிறந்தவனாயிற்றே நான்!" என்றார் துரைசாமி. "பொய்யாகிவிட்டதே!" என்றாள் ராஜம்மாள். "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம்! பெண்ணை ஆணாக்க முடியுமா!" என்றார் துரைசாமி. ராஜம்மாள் பரிகாசத்துக்காகவே அவ்விதம் பிடிவாதமாய்ச் சொல்கிறாள் என்று அவர் நம்பினார். "நீங்கள் வேணுமானால் பாருங்களேன்!" என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை. உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து, 'டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்?" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்; உங்களுக்கு ஏதோ பிரமை!" என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, "ஒருவேளை கங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவது சொல்லியிருக்கலாம்" என்றாள். "கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா?" என்று துரைசாமி கேட்டதற்கு, "ஆமாம் பெண் பிறந்திருக்கிறது!" என்றாள் நர்ஸ். உடனே துரைசாமி ரமாமணியைப் போய்ப் பார்த்து அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். இத்துடன் ஒருவாறு அவர் மனம் ஆறுதல் அடைந்தது. கங்காபாயையும் அவரே ஆஸ்பத்திரியில் சேர்த்தபடியால் அவளுடைய பெண் குழந்தையைப் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தயது இயற்கையே என்று தோன்றியது.

ராஜம்மாளையும் குழந்தையையும் துரைசாமி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். சில காலத்துக்கெல்லாம் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ராஜம்மாளுக்கும் துரைசாமிக்கும் இதனால் ஏற்பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய குழந்தை இறந்த துயரத்தை மறப்பதற்காகத் துரைசாமி கங்காபாயின் குழந்தையை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார். கங்காபாய் இறந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையை ரமாமணிபாய் வளர்த்து வந்தாள். துரைசாமி ஏற்படுத்திக்கொடுத்த ஜாகையில்தான் அவள் வசித்தாள். ஒரு நாள் ரமாமணியின் ஜாகைக்குத் துரைசாமி போனபோது உள்ளே யாருடனோ அவள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தப் பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடவே துரைசாமி கவனமாகக் கேட்டார். அதிலிருந்து ஒரு விபரீதமான மோசடி வேலையைப்பற்றி அறிந்து கொண்டார். பிரசவங்கள் நிகழ்ந்த அன்று இரவில் ராஜம்மாளின் குழந்தை கங்காபாயின் குழந்தையாகவும், கங்காபாயின் குழந்தை ராஜம்மாளின் குழந்தையாகவும் மாற்றப்பட்டன என்று தெரிந்து கொண்டார். உடனே கதவை இடித்துத் திறந்து கொண்டு போய் நர்ஸையும் ரமாமணியையும் சண்டை பிடிக்கவேண்டும் என்று முதலில் தோன்றியது. அப்புறம் அதனால் என்ன பலன்கள் நிகழுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மனக் குழப்பம் மாறிய பிறகு நன்றாக யோசித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். நர்ஸ் வெளியில் போகும்போது அவளுடைய கண்ணில் படாமல் மறைந்திருந்து விட்டுப் பிறகு அறைக்குள் போனார். ரமாமணியைப் பார்த்ததும் அவருடைய பொறுமையெல்லாம் பறந்து விட்டது. அவளைத் திட்டிச் சண்டை பிடித்தார். ரமாமணி ஓவென்று அழுது விட்டாள். ஒரு கத்தியை எடுத்து நீட்டி "இதனால் என்னைக் குத்திக் கொன்றுவிட்டு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றாள். "என் தங்கை மேல் என் அன்பையெல்லாம் வைத்திருந்தேன், அவளும் போய்விட்டாள். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு உயிர் வாழலாம் என்று எண்ணியிருந்தேன்.

குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு போனால் எனக்கு அப்புறம் இந்த உலகத்தில் வேலை ஒன்றுமில்லை" என்று கத்தினாள். முடிவில் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். அதாவது "குழந்தையை எடுத்துக் கொண்டு போவதில்லை" என்று துரைசாமியிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். குழந்தைகளை மாற்றும் காரியத்தை எதற்காகச் செய்தாள் என்று துரைசாமி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரஜினிபூர் ராஜ்யத்துக்கு அந்தக் குழந்தை வாரிசு ஆகும் என்று ரமாமணிபாய் நம்பினாள். அக்காரணத்தாலேயே ரஜினிபூர் ராஜாவின் துர்மந்திரிகள் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள். குழந்தை வேறிடத்தில் வளர்ந்தால் அந்த அபாயம் இல்லை என்றும், பின்னால் தக்க சமயத்தில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தாள். ஆனால் கங்காபாய் இறந்து போவாள் அவளுடைய குழந்தையும் செத்துப் போய்விடும் என்று ரமாமணிபாய் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமாக, மாற்றி எடுத்து வந்து வளர்த்த ராஜம்மாளின் குழந்தை தன்னுடைய உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்து விடும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்தபோது துரைசாமிக்கும் குழந்தையை ரமாமணியிடம் அப்போதைக்கு விட்டுவைப்பதே நலம் என்று தோன்றியது. இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ராஜம்மாளிடம், "இதுதான் உன் குழந்தை!" என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே? ஏற்கனவே அவள் கொஞ்சம் சந்தேகப் பிரகிருதி.

இதைப்பற்றி ஏதாவது விபரீதமான சந்தேகம் அவள் மனதில் தோன்றிவிட்டால் துரைசாமிக்கு வேறொரு காதலியிடம் பிறந்த குழந்தை என்று அவள் எண்ணிவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நாசமாகிவிடுமே? - இம்மாதிரி மனக்குழப்பத்துடன் துரைசாமி வீடு திரும்பினார். "பம்பாயில் எத்தனையோ லட்சம் ஜனங்கள் இருக்கிறார்களே? இந்த மாதிரி ஒரு ஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும்?" என்று எண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விபரீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித் தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப் பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. "சீதா! ராஜம்மாளுக்குப் பிறந்து ரமாமணியிடம் வளர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர்தான் தாரிணி. அவள்தான் என்னுடைய சீமந்த புத்திரி, நீ அவளுடைய தங்கை. நீங்கள் இரண்டு பேரும் குழந்தை களாயிருந்தபோது நான் பட்ட சங்கடத்தை உன்னால் கற்பனை செய்துகூட அறிய முடியாது. உலகத்தில் யாரும் அத்தகைய சங்கடத்தை அநுபவித்திருக்க மாட்டார்கள். முற்காலங்களில் கொடுமையான அரசர்கள் ஒருவித தண்டனை அளிப்பார்களாம்.

ஒரு மனிதனை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் இரண்டு யானையை நிறுத்தி வலது கையை ஒரு யானையும் இடது கையை ஒரு யானையும் பிடித்து இழுக்கும்படி செய்வார்களாம். அதே மாதிரியாக ஒரு பக்கத்தில் தாரிணியின் மேல் உள்ள பாசமும் இன்னொரு பக்கத்தில் உன்மேல் உள்ள பாசமும் என்னைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தன. நடுவில் அகப்பட்டுக் கொண்டு நான் திண்டாடினேன்! ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது!" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின் காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின் காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த பாசந்தான்; சந்தேகம் என்ன? தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சை பொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையை அமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன? விசால இருதயம் என்ன? தன்னுடைய ஈருஷை நிறைந்த சின்ன மனது என்ன? கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால்?...

"அப்பா! தாரிணி அக்காவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?" என்று கேட்டாள். "இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய்? நான் இப்போது சொன்னவற்றில் சில தெரியும்; சில தெரியாது." "நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா?" "தெரியாது, என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா! பல தடவை அவளிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்." "எதற்காக அப்பா?" "பைத்தியக்காரத்தனந்தான்! உண்மையைச் சொல்லி விட்டால் அவள் பேரில் தாரிணிக்குப் பாசம் இல்லாமல் போய்விடும் என்று பயம். அது மட்டுமல்ல; ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு பாதியாவது தாரிணிக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற சபலம் உன் சித்தியின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. உலகம் தலைகீழாகப் போகிறது என்பதையும் சுதேச ராஜ்யங்கள் எல்லாம் இன்னும் சில காலத்தில் இருந்த இடந்தெரியாமல் போய்விடும் என்பதையும் அவள் உணரவில்லை!" சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு, "அப்பா! எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயே இருந்து விட்டீர்களே, ஏன்?" என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறாயா?" என்று கேட்டார். "உங்கள் இஷ்டம்! சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!" "உண்மையைச் சொல்ல வேண்டியதுதான், சீதா! இப்போது சொல்லாவிட்டால் பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது? சொல்லுகிறேன் கேள்! உனக்குக் கலியாணம் ஆன புதிதில் உன் பேரில் எனக்குக் கோபமாகவேயிருந்தது. உன் தமக்கை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள விரும்பிய புருஷனை நீ கலியாணம் செய்து கொண்டாய். தாரிணிக்கு நீ பெரிய துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன்.

ஆனால் உண்மையில் நீ அவளுக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அம்மா! சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டு நீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவு கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே? நீ அந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய்?" என்றார் மௌல்வி சாகிபு. "அப்பா! அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும் அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது!" என்றாள் சீதா. "இல்லை, பேசவில்லை, மன்னித்துக்கொள்!" என்றார் மௌல்வி. "நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு நாசமாக்கினேன்!" "அப்படிச் சொல்லாதே, சீதா! இந்த உலகில் எல்லாம் அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் நாசமாக்க முடியாது." "தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா! தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன். அதற்கெல்லாம் பிராயசித்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக் கிடைக்கும்!" "நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா! எல்லாம் விதி வசமாக நேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே!" "அப்பா! எனக்கு நீங்கள் ஒரு வரம் கொடுக்க வேண்டும்." "நான் என்ன கடவுளா, உனக்கு வரம் கொடுப்பதற்கு?" "கடவுளைப் போலத்தான் வந்திருக்கிறீர்கள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா? அன்னை போய் விட்டாள். நீங்கள்தான் பாக்கியிருக்கும் கடவுள்.

இந்தப் பிரயாணத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டு நான் இறந்துவிட்டால், நீங்கள் கட்டாயம் தாரிணி அக்காவைப் பார்த்து நான் சொல்லும் செய்தியைச் சொல்ல வேண்டும். நான் அக்காவுக்குச் செய்த துரோகத்துக்காக மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்ல வேண்டும்!..." "இது என்ன பேச்சு?" "ஒருவேளை நான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லை என்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்!" "இது என்ன பைத்தியம்? என்னுடைய தவறுதான்! உன்னிடம் நான் ஒன்றுமே சொல்லியிருக்கக் கூடாது." "நான் இப்போது சொன்னதை நீங்கள் தாரிணி அக்காவிடம் சொல்வதாக வாக்களித்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்? இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்." "உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா! ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை." "எதற்கு?" "தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம். அப்போது நீயே சொல்லிவிடலாம்." "வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள்?" "எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லி நிரூபிக்கிறேன், பார்! நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான் அல்லவா?" "ஆமாம், அவனுக்கு என்ன?" "அதோ பாடுகிறான், கேள்? என்ன பாடுகிறான் என்று தெரிகிறதா உனக்கு?"

சற்றுத் தூரத்திலிருந்து 'சல் சல் நவ் ஜவான்!' என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். "பையன் ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது! அதனால் என்ன?" "அந்தப் பையன் நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட உத்தேசித்திருக்கிறான். கவனித்துக்கொண்டிரு." இரண்டு நிமிஷத்துக்குப் பிறகு கோவேறு கழுதையை வண்டியிலே பூட்டும் சத்தம் கேட்டது. "நீங்கள் சொல்வது உண்மைதான், வண்டியைப் பூட்டிக் கொண்டு பையன் ஓடிவிடப் பார்க்கிறான் போலிருக்கிறது. அப்புறம் நம்முடைய கதி என்ன ஆகிறது?" "கவலைப்படாதே, சீதா! அவனுடைய நோக்கம் நிறைவேறாது!" "அது எப்படிச் சொல்கிறீர்கள்?" "ஜோசியந்தான் சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு!" சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம் உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும் கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். 'டுமீர்' என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின் காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, "மரணமே! வா!" மரணமே! வா!" என்று சீதாவின் காதில் ஒலித்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பதாம் அத்தியாயம்
"மரணமே! வா!"

மௌல்வி சாகிபு சுட்ட துப்பாக்கி குண்டு குறி தவறி தப்பிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் வண்டி போவது அதனால் தடைப்படவில்லை. கோவேறு கழுதை மிரண்டு வேகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஓடிய வண்டியிலிருந்து பையன் ஏதோ உரத்த சத்தமிட்டுத் திட்டிக் கொண்டு போனது காதில் விழுந்தது. "சீதா! என்னுடைய ஜோசியம் தவறிவிட்டது. சகுனம் கெட்டுவிட்டது, இந்த இடத்தில் இனித் தங்குவதற்கு இல்லை; புறப்படு உடனே!" என்றார் மௌல்வி சாகிபு. அடுத்த ஏழெட்டு தினங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே தோன்றவில்லை. சில சமயம் பல பூர்வ ஜன்மங்களிலே நடந்த சம்பவங்களாகத் தோன்றின. சில சமயம் கனவிலே காணும் தெளிவில்லாச் சம்பவங்களைப் போலத் தோன்றின. பற்பல கதைகளிலும் இதிகாச புராண்களிலும் படித்த நிகழ்ச்சிகளாகத் தோன்றின. எப்பொழுதோ யாரோ சொல்லிக் கேட்ட சம்பவங்களைப் போலிருந்தன. அந்தச் சம்பவங்களி லெல்லாம் அவளும் ஒரு பாத்திரமாக இருந்த போதிலும், அவளுடைய உடம்பிலிருந்து ஆவியானது தனியே பிரிந்து போய் நின்று அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம் காண்பது போலிருந்தது. வெளியிலே நிகழ்ந்த காரியங்களையும் காட்சி களையும் தவிர சீதாவின் மனதிலும் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லலிதாவின் காலில் விழுந்து அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். சௌந்தரராகவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். வஸந்தியைக் கட்டித் தழுவி ஆசி கூறினாள். மாமனாரையும் மாமியாரையும் வணங்கினாள். தாரிணியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். சூரியாவிடம் கோபித்துக் கொண்டு திட்டினாள். தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சினாள். ரஸியா பேகத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். காந்திமகானைத் தன் இதய பீடத்தில் அமர்த்திக் கும்பிட்டாள். இடையிடையே அவளுடைய பேதை உள்ளம், "மரணமே! வா!" என்று கூவிக்கொண்டிருந்தது. அவளுடைய காதில் அடிக்கடி அலை ஓசை முழங்கிற்று.

பகல் வேளைகளில் சீதாவும் அவளுடைய தந்தையும் மலை குகைகளிலும் காட்டுப் புதர்களிலும் பாழடைந்த மசூதிகளிலும் மறைந்து கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு பீதி நிறைந்த உள்ளத்துடன் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தார்கள். வழியிலே அவர்கள் தீப்பிடித்து எரிந்த கிராமங்களையும் பட்டணங்களையும் தாண்டிப் போகவேண்டியிருந்தது. எரிந்த வீடுகளிலிருந்து எழுந்த ஜுவாலைகள் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு இரவைப் பகலாக்கின. அந்த ஜுவாலைகளின் வெளிச்சத்தில் கரிய பயங்கர உருவங்கள் யமகிங்கரர்களைப் போல் கையில்கொடிய ஆயுதங்களுடனே ஊளையிட்டுக் கொண்டு அலைந்தன. அம்மாதிரி இடங்களுக்கு அருகிலும் நெருங்காமல் தந்தையும் மகளும் நெடுந்தூரம் சுற்றி வளைத்துக் கொண்டு போனார்கள். இரவு நேரங்களில் சாலையோடு போய்க் கொண்டிருக்கும் போது முன்னால் காலடிச் சத்தம் கேட்டாலும் அவர்கள் நெஞ்சு திடுக்கிடும்; பின்னால் காலடிச் சத்தம் கேட்டால் உள்ளம் பதைக்கும். சில சமயம் திடுதிடுவென்று ஜனங்கள் பெரும் கூட்டமாக ஓடி வரும் சத்தம் கேட்கும். இருவரும் பக்கத்துக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். பயந்து ஓடும் ஜனங்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ராட்சதக் கூட்டத்தினர் ஓடி வருவார்கள். அவர்கள் போடும் பயங்கரமான சத்தத்துடன் ஸ்திரீகள் குழந்தைகளின் பரிதாப ஓலக் குரலும் சேர்ந்து ஒலிக்கும். ஓலக் குரல் அடங்கி வெகு நேரமான பிறகும் சீதாவின் காதில் அலை ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய நெஞ்சம் "மரணமே! வா!" என்று அழைக்கும். நடந்து நடந்து சீதாவின் கால்களில் வலி எடுத்து இரத்தம் கட்டியது பின்னர் வீக்கமும் கண்டது. "இனி நடக்க முடியாது" என்று அவளுடைய கால்கள் கெஞ்சின. "அப்பா! என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் போய்விடுங்கள்!" என்று சீதா தந்தையிடம் கெஞ்சினாள். "முடியாது, தாயே முடியாது!" என்று மௌல்வி சாகிபு தலையை அசைத்தார். "எப்படியும் நான் சாகப்போகிறேன்; உங்கள் கையினால் சாகிறேனே? எதற்காகச் சித்திரவதை?" என்றாள் சீதா.

அதற்கும் மௌல்வி சாகிபு இணக்கம் காட்டவில்லை. தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு சீதா மெள்ள மெள்ளத் தடுமாறி நடந்தாள். அவளுடைய உள்ளம் "மரணமே! வா!" என்று அழைத்தது. அவளுடைய காதில் அலை ஓசை அதிகமாகிக் கொண்டிருந்தது. சாலையில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய புழுதிப் படலம் கிளம்பி ஆகாசத்தை மறைத்தது. ஒரு பெரும் இரைச்சல் கேட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகச் சீதாவும் அவள் தந்தையும் சாலையைவிட்டு ஒதுங்கி ஒரு பாழடைந்த 'குருத்வார'த்துக்குள் ஒளிந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு மாபெருங் கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தாரைக் காப்பதற்குத் துப்பாக்கிப் பிடித்த சீக்கிய சோல்ஜர்கள் உடன் சென்றார்கள். வயோதிகர்கள், குழந்தைகள், ஸ்திரீகள், புருஷர்கள், நோயாளிகள், கர்ப்ப ஸ்திரீகள், ஒட்டகை வண்டிகள், கழுதை வண்டிகள், மாட்டு வண்டிகள், இரண்டொரு லாரிகள், மூட்டை முடிச்சுக்கள், பெட்டி பேழைகள் இவை அடங்கிய நீண்ட ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது. சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம். "இந்தக் கூட்டத்தோடு நாமும் போய்விடலாமா?" என்று மௌல்வி சாகிபு கேட்டார். "வேண்டாம் அப்பா! இந்தப் புழுதியையும் நாற்றத்தையும் கூச்சலையும் என்னால் தாங்க முடியாது! பைத்தியம் பிடித்துவிடும்?" என்றாள் சீதா. ஊர்வலம் சென்ற வழியில் பயங்கரமான துர்நாற்றம் கிளம்பி வான வெளியின் காற்றையெல்லாம் விஷமாக்கி விட்டது. சீதாவும் அவளுடைய தந்தையும் வேறொரு குறுக்குச் சாலையைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷனை அவர்கள் அடைந்தார்கள். வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். யாராவது வந்து வெயிட்டிங் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் சீதாவுக்குப் 'பகீர்' என்னும். ரயிலுக்காகக் காத்திருந்த நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருந்தது. சீதா உட்கார்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தாள். பெரும் அலை ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். கேட்டது ரயில் வரும் சத்தம் என்று தெரிந்து கொண்டாள். இருவரும் பிளாட்பாரத்துக்குள் போனார்கள். ரயிலில் கூட்டம் சொல்லமுடியாது. எல்லா வண்டிகளும் உட்புறம் பூட்டப்பட்டிருந்தன. சீதாவுக்கு அந்த ரயிலில் ஏறுவதற்கே பிடிக்கவில்லை. ஆனால் மௌல்வி சாகிபு வற்புறுத்தினார். வண்டி வண்டியாகச் சென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு கடைசியில் ஒரு வண்டிக் கதவைத் திறக்கச் செய்தார். இரண்டு பேரும் ஏறிக் கொண்டார்கள். வண்டியிலிருந்தவர்கள் தாங்கள் வந்த வழியில் பார்த்த பயங்கரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரயில் மெள்ள மெள்ளப் போய்க்கொண்டிருந்தது. ரயிலில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் சீதாவின் காதில் அலை ஓசையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. "மரணமே! வா!" என்று அவளுடைய உள்ளம் கூவிக் கொண்டிருந்தது. ஒரு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றது, நின்ற ரயில் மறுபடி லேசில் கிளம்புகிற வழியாக இல்லை. நேரமாக ஆக ரயிலிலிருந்தவர்களின் கவலை அதிகமாயிற்று. ரயில்வே ஸ்டேஷனிலும் வெளியிலும் ஏகக் கூச்சலும் குழப்பமுமாயிருந்தன.

மௌல்வி சாகிபு திடீரென்று "அதோ தாரிணி" என்றார். சீதா ஆவலுடன் அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். ஆம்; கொஞ்ச தூரத்தில் கூட்டத்துக்கு நடுவில் சூரியாவும் தாரிணியும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருகணம் அவர்களுடைய முகங்கள் தெரிந்தன. மறுகணம் கூட்டத்தில் மறைந்து விட்டன. "சீதா, கொஞ்சம் பொறு! அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்!" என்று அப்பா சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடினார். அடுத்த நிமிஷம் அவரும் ஜனக் கூட்டத்தில் மறைந்து விட்டார். பிறகு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சீதாவுக்கு அந்தமாதிரி பல யுகங்களுக்குப் பிறகு ஒரு பயங்கரமான கூச்சல் கேட்டது. அதைக் காட்டிலும் கோரமான காட்சி கண் முன்னால் தென்பட்டது. நூற்றுக்கணக்கான முரட்டு மனிதர்கள் கையில் கத்திகளுடன் பாய்ந்து வந்தார்கள். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் பலரைக் கொன்றார்கள். எங்கே பார்த்தாலும் இரத்தக்களறி ஆயிற்று. அந்த மனிதர்கள் ரயிலுக்குள்ளும் பாய்ந்து ஏறினார்கள். சீதா இருந்த வண்டியை நோக்கி ஐந்தாறு பேர் ஓடி வந்தார்கள். சீதா பீதியினாலும் அருவருப்பினாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனதில், "கடைசியாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது! மரணம் வந்து விட்டது!" என்ற நினைவு தோன்றியது. தடதடவென்று ரயிலுக்குள் நாலைந்து பேர் ஏறினார்கள். மூடிய கண்களுடனே அடுத்த கணத்தில் தன்னுடைய மார்பில் கத்தி பாயும் என்று சீதா எதிர் பார்த்தாள். ஆனால் கத்தி பாயவில்லை; கண்ணும் திறக்கவில்லை. மறுபடியும் வண்டிக்குள் தனக்கருகில் ஏதோ கலவரம் நடக்கிறதென்பதை உணர்ந்தாள். யாரோ அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மேல் ஏறி மிதித்துக் கொண்டு யாரோ ஓடினார்கள்.

"சீதா! சீதா!" என்ற இனிய குரலுடன் மெல்லிய மிருதுவான கரங்கள் அவளை எடுத்துத் தூக்கின. கண்ணை விழித்துப் பார்த்து அவை தாரிணியின் கரங்கள் என்பதை அறிந்தாள். தன்னைத் தூக்கிய கரங்களில் ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள், "அக்கா" என்று அலறினாள். அந்த மூன்று தினங்கள் சீதாவின் வாழ்க்கையில் மிகவும் ஆனந்தமான நாட்கள். ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒருவருடைய வீட்டின் மேல் மச்சில் ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு ஒளிந்திருந்த நாட்கள்தான். சாலையிலாவது வெளிச்சம் உண்டு; காற்று உண்டு இங்கே அது கூடக் கிடைக்காது. எனினும் தன்னுடன் பிறந்தவள் என்று தெரியாதபோதே தன் உள்ளத்தின் அன்பையெல்லாம் கவர்ந்து விட்ட தாரிணியுடன் வசித்தபடியால் அந்த நாட்கள் ஆனந்தமாயிருந்தன. ரயிலில் கொலை செய்யப்படாமல் சீதாவைக் காப்பாற்றிய தாரிணி அவளை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். சீதா தனக்கும் தாரிணிக்கும் உள்ள உறவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். "இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியாதா அக்கா?" என்று கேட்டாள். "இந்தச் சந்தேகம் எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது. ஆனால் நான் எவ்வளவு கேட்டும் அந்தக் கிழவரும் கிழவியும் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டார்கள்?" என்றாள் தாரிணி. "என்ன அநியாயம்? எதற்காக அப்படிச் செய்தார்கள்? அக்கா என்று தெரியாமலேயே உன்னிடம் என் பிராணனை வைத்திருந்தேனே! தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரியமாயிருந்திருப்பேன்? நாம் எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கலாம்." என்றாள் சீதா.

தன்னிடம் பொறாமை கொண்டு சீதா படுத்திய பாடெல்லாம் தாரிணிக்கு நினைவு வந்தது. ஆனால் அதை இப்போது சீதாவுக்கு ஞாபகப்படுத்தவில்லை. "போனதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயன் என்ன? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வட்டி போட்டு நாம் சந்தோஷமாயிருக்கலாம்!" என்றாள் தாரிணி. "அதற்கென்ன சந்தேகம்? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இனிமேல் எனக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைவு?" என்றாள் சீதா. எனினும் இருவருடைய இதய அந்தரங்கத்திலும் சந்தேகமும் பயமும் இல்லாமற் போகவில்லை. விழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் தாரிணியின் கழுத்தைச் சீதா கட்டிக்கொண்டு அந்தரங்கம் பேசினாள். தூங்கும்போது தாரிணியின் மேலே கையைப் போட்டுக் கொண்டு தூங்கினாள். எங்கே தன்னை விட்டு விட்டுத் தாரிணி போய்விடப் போகிறாளோ என்ற பயம் அவளுடைய மனதின் ஆழத்தில் குடி கொண்டிருந்தது. சீதாவின் பயம் சீக்கிரத்திலேயே உண்மையாயிற்று. தாரிணியிடமிருந்து அவள் பிரிய வேண்டிய சமயம் வந்தது. இதைப்பற்றி அறிந்ததும் சீதா முரண்டு பிடித்தாள். "நான் உன்னைவிட்டுப் போக மாட்டேன். நீ என்னை விட்டுப் போனால் குத்திக் கொண்டு சாவேன்!" என்றாள். தாரிணி பலவிதமாக அவளுக்குச் சமாதானம் கூறினாள். "நான் டில்லியில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் அதுவரையில் பொறுத்திரு, பெஷாவரில் என்னுடைய சிநேகிதி நிரூபமா இருக்கிறாள். அவளைப் பார்த்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்!" என்றாள். அந்தச் சகோதரிகளுக்குள் நெடுநேரம் விவாதம் நடந்தது. கடைசியாகச் சீதா, "அக்கா! நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால் நான் உன்னைப் பிரிந்து போகச் சம்மதிப்பேன்!" என்றாள். "கேள்! அம்மா!" என்றாள் தாரிணி.

"டில்லிக்குப் போகும் வழியில் நான் இறந்துவிட்டால் நீ அவரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி நீ சத்தியம் செய்து கொடுத்தால் நான் உன்னைப் பிரிவேன்!" என்றாள் சீதா. "இது என்னப் பைத்தியக்காரத்தனம்!" என்று தாரிணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சீதா கேட்கிறதாக இல்லை. தாரிணி மறுக்க மறுக்க சீதாவின் வெறி அதிகமாகி வந்தது! கடைசியில் தாரிணி, "அடியே! நீ செத்து நான் உயிரோடிருந்து உன் புருஷனும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தால் நான் கலியாணம் பண்ணிக் கொள்கிறேன்" என்றாள். முஸ்லிம் ஸ்திரீகள் பர்தா அணிந்து கொள்வது போன்ற புர்க்கா ஒன்றைச் சீதாவுக்குத் தாரிணி அளித்தாள். அந்த உடையில் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் துவாரம் இருந்தது. மற்றபடி தலையிலிருந்து கால்வரையில் சீதாவை அந்த அங்கி மூடிவிட்டது. நள்ளிரவில் மௌல்வி சாகிபும் சீதாவும் அந்த வீட்டு மெத்தை அறையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். வாசலில் தயாராக ஜீப் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஓட்டுவதற்கு ஒரு போலீஸ் டிரைவர் காத்திருந்தான். சீதா தாரிணியைக் கட்டிக் கொண்டு, "அக்கா வாக்குறுதியை மறந்துவிடாதே!" என்றாள். அவளுடைய தந்தை தாரிணியின் தலை உச்சியை முகந்து பார்த்துவிட்டு, "அம்மா! என்னுடைய குற்றங்களை மன்னித்துக் கொள்!" என்று சொன்னார். மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் தாரிணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன. "அப்பா! தங்களுக்கு நான் கொடுத்த தொந்திரவுகளையெல்லாம் மன்னியுங்கள்!அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்குமோ, என்னமோ?" என்றாள்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய ஜீப் வண்டி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வழியில் நேர்ந்த பல தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு சென்றது. சாலைகளில் சில இடங்களில் கூட்டமாக ஜனங்கள் போய்க்கொண்டி ருந்தார்கள். அந்த இடங்களில் ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஜீப் சென்றது. சில இடங்களில் சாலைகளில் மரங்களை வெட்டித் தள்ளியிருந்தார்கள். அந்த இடங்களில் சாலையிலிருந்து பக்கத்தில் இறங்கிக் கடந்து சென்றது. சில இடங்களில், ஐயோ! என்ன பயங்கரம்; சாலைகளில் கிடந்த மனித உடல்களின்மீது ஏறிச் சென்றது! அந்த உடல்களிலிருந்த உயிர்கள் எப்போதோ போய்விட்டன! இனி அவற்றின் பேரில் ஜீப் வண்டி ஏறினால் என்ன? ரோட் என்ஜின் ஏறினால்தான் என்ன? சாலையில் ஜீப் வண்டி வேகமாகப் போக ஆரம்பித்த புதிதில் சீதாவுக்குத் தான் அபாயங்களையெல்லாம் ஒருவாறு கடந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே அது பொய் நம்பிக்கை என்று ஏற்பட்டது.ஏனெனில் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு ஜீப் வண்டி கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது இந்த வண்டியைத் தொடர்ந்து வருகிறது என்று ஏன் நினைக்க வேண்டும்? தங்களைப் போலவே அபாயத்துக்குத் தப்பித்துச் செல்லும் மனிதர் களாயிருக்கலாமல்லவா? இருக்கலாம். என்றாலும் தங்களைப் பிடிப்பதற்காகவே அந்த வண்டி வருகிறது என்னும் எண்ணத்தைச் சீதாவினால் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டியில் யமன் தன்னைத் தொடர்ந்து ஓடி வருகிறான் என்றே எண்ணினாள். யார் கண்டது? முதலில் நினைத்தபடியே இந்தப் பிரயாணத்தில் தனக்கு மரணம் நேிடலாமோ, என்னமோ? "மரணமே! வா, சீக்கிரம் வா!" என்று அவள் உள்ளம் ஜபித்து அவளுடைய காதில் அலை ஓசையின் இரைச்சல் அதிகமாயிற்று.

ஒரு நதிக்கரையில் வந்து ஜீப் வண்டி நின்றது. நல்ல வேளை! கொஞ்ச நேரமாகப் பின் தொடர்ந்து வந்த வண்டியின் சத்தம் கேட்க வில்லை அது வெறும் பிரமைதான். என்ன அதிசயம்? இங்கே சூரியா வந்து நிற்கிறானே? நமக்கு முன்னால் எப்படி வந்தான்? அதோடு ஒரு படகையும் அமர்த்தி வைத்துக் கொண்டு தயாராயிருக்கிறானே? சூரியா சூரியாதான்! அம்மாஞ்சிக்கு இணை யாரும் இல்லை. தந்தையையும் மகளையும் சூரியாவிடம் ஒப்படைத்து விட்டுப் போலீஸ்காரன் ஜீப் வண்டியைத் திருப்பினான். அவனும் சூரியாவும் ஏதோ சமிக்ஞை பாஷையில் பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க அப்போது நேரம் இல்லை. பிற்பாடு கேட்டுக் கொண்டால் போகிறது. சூரியா அவர்களுடைய கையைப் பிடித்துப் படகிலே ஏற்றி விட்டான், தானும் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகை நதியில் செலுத்தினான். படகு நகர்ந்ததும் சீதாவின் பயம் அடியோடு நீங்கிற்று. உள்ளத்தில் உற்சாகமே உண்டாகிவிட்டது. அது பாஞ்சால நாட்டின் பஞ்ச நதிகளின் ஒன்றான 'சேனாப்' என்று அறிந்தாள். பிரவாகம் அலை மோதிக் கொண்டு சென்றது; காற்று விர்ரென்று அடித்தது. சீதா தன்னுடைய பர்தா உடையைக் கழற்றிப் படகில் வைத்தாள். மௌல்வி சாகிபுவைப் பார்த்து, "அப்பா! நீங்களும் உங்களுடைய வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பழையபடி ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றாள். "சீதா! இந்த வேஷத்தைப் பற்றிக் குறை சொல்லாதே! இதன் மூலமாய்த்தானே உன்னைக் காப்பாற்ற முடிந்தது?" என்றார் மௌல்வி சாகிபு. "அதுதான் காப்பாற்றியாகிவிட்டதே? இனிமேல் அபாயம் ஒன்றுமில்லையே?" என்றாள் சீதா. "அவசரப்படாதே, அம்மா; டில்லி போய்ச் சேர்ந்ததும் வேஷத்தை மாற்றி விடுகிறேன்!" என்றார் மௌல்வி சாகிபு. ஆனால் உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ, என்னதான் நடக்கிறது? அபாயத்துக்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் அது வராமல் போய் விடுகிறது. "இனி ஒரு பயமும் இல்லை" என்று எண்ணியிருக்கும் சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ பேரிடி வந்து விழுகிறது.

நதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் படகு சென்றிருக்கும். அப்போது அவர்கள் வந்த சாலையில் சற்றுத் தூரத்தில் ஒரு புழுதிப்படலம் தெரிந்தது. புழுதியைக் கிளப்பிய மற்றொரு ஜீப் வண்டி அடுத்த நிமிஷம் நதிக்கரையில் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மனிதன் கீழே குதித்ததைச் சீதா பார்த்தாள். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. நதியில் சென்று கொண்டிருந்த படகை அவன் உற்றுப் பார்த்தான். அடுத்த நிமிஷம் கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்துச் சுட்டான். இதையெல்லாம் பார்த்தவண்ணம் பிரமித்துப் போயிருந்த சீதாவின் காதில், "ஐயோ! செத்தேன்!" என்ற கூச்சல் பக்கத்திலிருந்து கேட்டது. சீதா திரும்பிப் பார்த்தாள், தன் தந்தையின் கன்னத்தில் இரத்தம் சொட்டுவதையும் அவர் படகின் ஓரமாகச் சாய்வதையும் பார்த்தாள். ஆற்றில் விழாமல் அவரைப் பிடித்துக் கொள்வதற்காகப் பாய்ந்து ஓடினாள். படகு ஆடிச் சாய்ந்தது; சீதா நதியின் பெருவெள்ளத்தில் விழுந்தாள். முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது, கண்கள் ஒருகணம் திறந்தன. சற்றுத் தூரத்தில் தன் தந்தை கன்னத்தில் இரத்தக் காயத்துடன் தத்தளித்து நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச தூரத்தில் சூரியா அதே மாதிரி நீந்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் யாரும் சீதா தலை தூக்கிய பக்கம் பார்க்கவில்லை. படகோ வெகு தூரத்தில் இருந்தது.

அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஒரு அடி உயர அலைதான். ஆனால் படகையும் மற்ற இருவரையும் மறைத்தபடியால் அது மலை அளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப்போல் ஓசை செய்து கொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது. சீதா பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டாள். மறுபடியும் தண்ணீரில் முழுகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இந்தத் தடவை முழுகினால் முழுகியதுதான்; மறுபடி எழுந்திருக்கப் போவதில்லை. "மரணமே! வா!" என்று அவள் அடிக்கடி ஜபம் செய்து கொண்டிருந்தது பலித்துவிட்டது. இந்தத் தடவை நிச்ச யமான மரணந்தான். அலை வந்து தாக்கியது, நீரில் முழுகும் தறுவாயில் சீதாவின் மனக்கண்ணின் முன்னால் ஒரு காட்சி புலப்பட்டது. தாரிணியும் சௌந்தரராகவனும் கைபிடித்துக் கலியாணம் செய்து கொள்ளும் காட்சிதான் அது. சீதாவின் மனதில் அந்த கண நேரக் காட்சி ஆனந்தத்தையும் அமைதியையும் உண்டு பண்ணியது. "ஆகா! அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!" என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் முழுகினாள். குழந்தை வஸந்தியின் பால் வடியும் முகமும், சூரியாவின் ஆர்வம் ததும்பிய முகமும், மௌல்வி சாகிபுவின் முகமும் வரிசையாகப் பவனி வந்தன. சுவரிலிருந்த படத்திலிருந்து காந்தி மகாத்மா வின் முகம் தனியாகத் தோன்றிப் புன்னகை செய்து மறைந்தது. பின்னர் சிறிது நேரம் காதில் 'ஹோ' என்ற அலை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லா நினைவும் அழிந்தது. ஆழங்காணாத அமைதி; எல்லைகாணாத இருள்; நிசப்தம்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து ஒன்றாம் அத்தியாயம்
பிழைத்த அகதி

குளிர் என்றால் இன்னதென்பதை அறிய வேண்டுமானால் டில்லியில் குளிர்காலத்தில் வசிக்க வேண்டும். கனமான கம்பளிச் சட்டைகளுக்குள்ளும் பஞ்சடைத்த ரஜாய் மெத்தைகளுக்குள்ளும் அந்தக் குளிர் புகுந்து, தோல், சதை, இரத்தம் இவற்றை ஊடுருவிக் கொண்டு சென்று எலும்புக்கு உட்புறத்திலும் புகுந்து பனிக்கட்டியைப்போல் சில்லிடச் செய்யும் சக்தியுடையது. 1948-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் டில்லியில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் குளிராயிருந்தது. நாட்டை விட்டு, ஊரை விட்டு வீட்டை விட்டு, உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்த இரண்டு லட்சம் அகதிகள் டில்லி மாநகரின் வீதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடந்தார்கள். அவர்கள் உடம்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே தவிர உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அகதியின் இருதயத்திலும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அந்தத் தீ டில்லி நகரிலுள்ள பத்து லட்சம் ஜனங்களின் இருதயத்தையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபத்தீயை அணைத்துச் சாந்தம் உண்டுபண்ண ஒரு மகான் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணிக்கு ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு மோட்டார் வண்டி மூடுபனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு விரைந்து சென்றது. சாலையின் வண்டிப் போக்கு வரவோ மனுஷர்களின் நடமாட்டமோ அதிகம் இல்லையாதலால் மோட்டார் ஓட்டுவதில் ஜாக்கிரதை தேவையாயிருக்கவில்லை. ஆனால் இது என்ன? திடீரென்று ஒருவன் குறுக்கே வந்து விழுகிறானே? கடவுளே! பலமாகப் 'பிரேக்'கைப் போட்டதில் 'கார்' 'கர்புர்ர்' என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்த மனிதன் ஒரு மயிரிழையில் தப்பினான்! அடப்பாவி! சாலை ஓரத்திலுள்ள நடைபாதையில் நடந்து போகக்கூடாதோ! பஞ்சாபிலிருந்து வந்து குவிந்திருக்கும் அகதிகளில் ஒருவனாயிருக்கவேண்டும். வேணுமென்று உயிரைப் போக்கிக் கொள்வதற்காக வந்து விழுகிான் போலிருக்கிறது.

நின்ற மோட்டார் வண்டியிலிருந்து இருவர் இறங்கினார்கள்; ஒரு புருஷன்; ஒரு ஸ்திரீ. அவர்கள் சௌந்தரராகவனும் பாமாவுந்தான். விழுந்தவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவர்கள் முன்னால் சென்றார்கள். அதே சமயத்தில் கீழே விழுந்த மனிதன் எழுந்து நின்றான். அவன் உடையினாலும் தோற்றத்தினாலும் ஒரு பஞ்சாப் அகதியைப் போலவே காணப்பட்டான். ஆயினும் அவன் முகத்தின் தோற்றம் அவன் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டது. "அடே! இது என்ன கூத்து? சூரியா! நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? யாரோ பஞ்சாப் அகதி தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான் என்றல்லவா நினைத்தேன்?" என்றான் சௌந்தரராகவன். ராகவனையும் பாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியா பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கினது போலக் காணப்பட்டது. பிறகு மனதில் அவன் ஒரு முடிவு செய்து கொண்டது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. "நீங்கள் நினைத்ததில் பாதி சரிதான், மிஸ்டர் ராகவன்! நானும் ஒரு அகதிதான். ஆனால் நான் உயிரை விடுவதற்கு முயற்சி செய்யவில்லை. என் உயிரை வைத்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இந்த மட்டும் என்பேரில் உங்கள் வண்டியை ஏற்றாமல்விட்டீர்களே? அதற்காக மிக்க வந்தனம்!" என்றான் சூரியா. "அதற்காக வந்தனம் தேவையில்லை. இந்த மோட்டாரின் துரிதமான 'பிரேக்'குக் குத்தான் வந்தனம் செலுத்த வேண்டும். பரிகாசப் பேச்சு இருக்கட்டும், சூரியா! இப்போது நீ எங்கே போய்க்கொண்டி ருக்கிறாய்? இல்லாவிட்டால் என்னோடு கொஞ்சம் வந்து விட்டுப் போகலாமே? உன்னிடம் பல விஷயங்கள் கேட்க வேண்டும்; பல விஷயங்கள் சொல்லவேண்டும்!" என்றான் ராகவன். "எனக்கு அவசர வேலை இருக்கத்தான் இருக்கிறது. ஆனாலும் அரை மணி நேரம் பின்னால் போவதால் பாதகமில்லை" என்றான் சூரியா. அவனுக்கும் சௌந்தரராகவனிடம் பல விஷயங்கள் கேட்கவேண்டியிருந்தது; சொல்ல வேண்டியிருந்தது.

சௌந்தரராகவனுடைய பழைய வீட்டு வாசலில் வண்டி நின்றது. பாமா வண்டியிலிருந்து இறங்காமல் விடைபெற்றுக் கொண்டாள். மற்ற இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள்ளே நுழைந்தபோது சூரியாவின் உள்ளம் பதைபதைத்தது. முன்னே அந்த வீட்டுக்குள் பிரவேசித்தபோதெல்லாம் சீதா இருந்து தன்னை வரவேற்றாள். ஒருதடவை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளத் தயாராயிருந்த சீதாவைச் சூரியா காப்பாற்றினான். அந்தப் பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை உடைந்த வெள்ளம் போல் அவன் மனதில் புகுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. "சூரியா! இந்த வீடு எவ்வளவு சூனியமாயிருக்கிறது, பார்!" என்று ராகவன் கூறியபோது சூரியாவுக்கு அழுகையே வந்து விட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். "உங்களுடைய உத்தியோகம் மறுபடியும் கிடைத்து விட்டதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால், இந்த வீடு கிடைத்திருக்குமா? உத்தியோகம் கிடைத்த பிறகுகூட இந்த வீட்டைச் சம்பாதிப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதிலே ஒரு பஞ்சாபி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினேன். ஆனாலும் இந்தப் பஞ்சாபிகளைப்போல் கோழைத் தடியர்களை நான் பார்த்ததேயில்லை. பஞ்சாபியர் எல்லோரும் வீரர்கள் என்று ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். சுத்தப் பிசகு! இவர்கள் சென்ற வருஷம் ஆகஸ்டு மாதத்தில் மேற்குப் பஞ்சாபிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்களே, அந்தக் காட்சியை நீ பார்த்திருந்தாயானால்....." "நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம், பார்த்தேன்." "அதெப்படி? நீங்கள்தான் போன ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி கல்கத்தாவுக்குப் போயிருந்தீர்களே?" என்றான் சூரியா. "ஓகோ! நினைவு வருகிறது, நீ அப்போது இங்கேதான் இருந்தாயல்லவா? உன்னிடம்கூட நான் கல்கத்தா போகிறது பற்றிச் சொன்னேனே! சூரியா! அதுமுதல் நீ இங்கேதான் இருக்கிறாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று ராகவன் கேட்டான்.

"என்னத்தைச் செய்கிறது? அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அங்குமிங்கும் என்றால்....." "இந்த அகதி முகாம்களில்தான், ஏதாவது என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்." உடனே சௌந்தரராகவன் மிக்க ஆவலுடன், "சூரியா! எந்த அகதி முகாமிலாவது நமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்தாயா?" என்று கேட்டான். "நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" "தாரிணியை அல்லது வஸந்தியைத்தான்." "இல்லை, மிஸ்டர் ராகவன்! அவர்களைப்பற்றி நான் உங்களைக் கேட்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டு வந்தேன்." "இவ்வளவுதானா?" என்று ராகவன் பெருமூச்சு விட்டான். "அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தகவல் கிடைக்க வில்லையா?" என்று சூரியா கேட்டான். "அப்படியும் சொல்வதற்கில்லை, இரண்டு மாதத்துக்கு முன்னால் ஒரு அதிசயமான கடிதம் வந்தது. அது தாரிணியின் கையெழுத்தில் இருந்தது. தானும் குழந்தை வஸந்தியும் பத்திரமாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் வந்து சந்திப்பதாகவும் எழுதியிருந்தது. அதில் வேடிக்கை என்னவென்றால் கடிதம் சீதா பெயருக்கு எழுதப்பட்டி ருந்தது. அதிலிருந்து சீதாவின் கதி தாரிணிக்குத் தெரியாது என்று அறிந்து கொண்டேன்." "சீதாவின் கதி என்ன?" என்று சூரியா கேட்டான்.

அவன் முகம் அப்போது ஒரு பெரிய ஆச்சரியக் குறியாக நீண்டது. "அது ஒரு பெரிய சோகக்கதை, சூரியா! உலக வாழ்க்கையில் என்னைப்போல் துரதிர்ஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லை. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்ததுபோல் பல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்துவிட்டன. அதிலும் கடைசியாகச் சீதாவை நான் இழந்ததைப் போன்ற துரதிர்ஷ்டம் வேறு ஒன்றுமே இல்லை. ஆகா! பஞ்சாபில் ஹௌஷங்காபாத்தில் ஒரு வருஷ காலம் நாங்கள் எவ்வளவு ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண் டிருந்தோம் தெரியுமா? அது கடவுளுக்கே பொறுக்க வில்லை!..." "கடவுளை ஏன் இழுக்கிறீர்கள், ராகவன்! கடவுள் என்ன செய்வார்? என் தகப்பனார் கிட்டாவய்யரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் பிறகு 'உங்கள் இஷ்டம்போல வாழ்க்கை நடத்துங்கள்' என்று தண்ணீரைத் தெளித்து விட்டுவிட்டார். அது மாதிரிதான் கடவுளும் செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்துவிட்டு 'உலகத்தைச் சொர்க்கமாக்குவதோ நரகமாக்கு வதோ உங்கள் இஷ்டம்!' என்று மனிதர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டிருக்க வேண்டும்! ஆகையால் உலகத்தில் நடக்கும் காரியங்களுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல!... போகட்டும் சீதாவைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றான் சூரியா. "ஆகஸ்டு 14இல் உன்னை நான் இந்தப் புது டில்லியிலே பார்த்துக் 'கல்கத்தா போகிறேன்' என்று சொன்னேன் அல்லவா? அதிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்" என்றான் ராகவன்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து இரண்டாம் அத்தியாயம்
ராகவன் துயரம்

கல்கத்தாவுக்குச் சௌந்தரராகவன் போன அன்றைக்கு அங்கே சுதந்திரத் திருநாள் குதூகலமாகக் கொண்டாடப் படுவதைக் கண்டான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கட்டித் தழுவிக் கொள்வதைப் பார்த்தான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏகோபித்து ஒரே குரலில், "ஜே ஹிந்த்" என்றும், "வந்தே மாதரம்" என்றும், "ஹிந்து முஸ்லிம் ஏக் ஹோ!" என்றும் கோஷ மிடுவதைக் கேட்டான். சென்ற வருஷத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று இரத்த வெள்ளம் பெருகிய அதே கல்கத்தாவில்தானா இதெல்லாம் நடைபெறுகிறது என்று அதிசயித்தான். இனி இந்தியாவுக்கு அதிர்ஷ்ட காலந்தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அமரநாதனின் வீட்டில் சென்ற வருஷம் விட்டுவிட்டுப்போன தன் உத்தியோக சம்பந்தமான தஸ்தாவேஜிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். திரும்ப டில்லிக்கு வந்தபோது பஞ்சாப்பில் தீப்பிடித்து எரியும் விஷயம் தெரியவந்தது. ஸ்ரீ மதி பாமா அவனைத் தேடிக் கண்டுபிடித்துப் பஞ்சாப்பில் நடப்பதைப் பற்றியெல்லாம் சொன்னாள். அத்துடன் தான் ஹௌஷங்காபாத் சென்றிருந்ததையும், தன்னுடன் வந்து விடும்படி சீதாவை அழைத்ததையும், அவள் வர மறுத்ததையும் பற்றிக் கூறினாள். சௌந்தரராகவனுக்குச் சீதாவின் பேரில் சிறிது கோபமாகத்தான் இருந்தது. 'பாமாவுடன் அவள் புறப்பட்டு வந்திருந்தால் எவ்வளவு சௌகரியமாகப் போயிருக்கும்?" என்று எண்ணினான். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எப்படியாவது சீதாவையும் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றியாக வேண்டும். புலியின் குகைக்குள் நுழைவது போலவும், தீப்பிடித்து எரியும் பஞ்சாலைக்குள் பிரவேசிப்பது போலவும், பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போலவும் பஞ்சாப்புக்குள் சென்றாக வேண்டும்.

பாமாவின் தைரியமும் சாமர்த்தியமும் பலருடன் சரளமாகப் பழகும் இயல்பும் இச்சமயம் ராகவனுக்கு மிக்க உதவியாயிருந்தன. பாமாவின் பேரில் அவனுக்கு ஏற்கனவே இருந்த அருவருப்பெல்லாம் இப்போது மாறிவிட்டது. பெண்கள் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பேரும் ஆகாச விமானத்தில் இடம் பிடித்துக் கொண்டு லாகூர் போய்ச் சேர்ந்தார்கள். நல்ல வேளையாக லாகூரில் இன்னும் அவர்களுடைய கம்பெனியின் கிளை வேலை செய்து கொண்டிருந்தது. கம்பெனி உத்தியோகஸ்தன் என்ற முறையில் சௌந்தரராகவன் லாகூருக்குப் பிரயாண அநுமதிச்சீட்டுப் பெறுவது சாத்தியமாயிற்று. லாகூரில் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெருக்கள் எல்லாம் குத்தும் கொலையும் பிணக்காடுமாயிருந்தன. பஞ்சாப்பின் உள் பிரதேசங்களில் நிலைமை இன்னும் பயங்கரம் என்று சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாகச் சௌந்தரராகவனையும் பாமாவையும் நடை உடை பாவனைகளைக் கொண்டு ஹிந்து மதத்தினர் என்று உடனே தெரிந்து கொள்ளுதல் கஷ்டமாயிருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் என்றோ, பார்ஸிகள் என்றோ அவர்களைக் கருதும்படியிருந்தது. ஆகையால் உள் நாட்டில் அவர்கள் பிரயாணம் செய்வதில் அவ்வளவு அபாயம் இல்லை என்பதாகத் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களின் தயவினால் ஒரு ஜீப் வண்டி சம்பாதித்துக் கொண்டு பிரயாணமானார்கள்; வழியெல்லாம் அவர்கள் பார்த்த காட்சிகள் அவர்களுக்குச் சீதாவின் கதியைப் பற்றிய கவலையையும் பயத்தையும் உண்டாக்கின. ஆயினும் எப்படியோ கடைசியில் ஹௌஷங்காபாத் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் அந்த ஊரில் படுகொலைக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சீக்கிய சோல்ஜர்கள் வந்ததும் தப்பிப் பிழைத்தவர்களின் பிரயாணம் தொடங்குவதாயிருந்தது. அதிகாரிகளின் அநுமதியுடன் சௌந்தரராகவனும் பாமாவும் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து தேடித் தேடிப் பார்த்தார்கள்.

சீதாவையாவது குழந்தையையாவது காணவில்லை. பிறகு துணிச்சலாக ஊருக்குள்ளேயே புகுந்தார்கள். சௌந்தர ராகவன் குடியிருந்த வீட்டை நோக்கிச் சென்றார்கள். வீடு இருந்த இடத்தில் இடிந்து கரியுண்ட சில குட்டிச்சுவர்களும் கல்லும் கரியும் சாம்பலும் கலந்த கும்பல்களும் கிடந்தன! சில இடங்களிலிருந்து இன்னும் இலேசாகப் புகை வந்து கொண்டிருந்தது! ராகவன் அவனுடைய வாழ்நாளிலே என்றும் இல்லாத விதமாக அன்றைக்கு அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதான். பாமாவும் அவனுடன் சேர்ந்து 'ஓ'வென்று கதறினாள். இதற்குள்ளே அந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியது. பின்னோடு வந்திருந்து போலீஸ் அதிகாரி அவர்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தினார். கிளம்புகிற சமயத்தில் ஒரு பையன் அவர்களை நெருங்கி வந்தான். அவனை முன்னர் பார்த்திருந்த ஞாபகம் ராகவனுக்கு இருந்தது. அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கோவேறு கழுதை வண்டியுடன் அவன் ராகவனைப் பார்த்து, "சாகிப்! ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்!" என்றான். அவனை ஜீப் வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னான் ராகவன். வண்டி புறப்பட்ட பிறகு "என்ன விஷயம்?" என்று கேட்டான். அந்த வீட்டிலிருந்த அம்மாள் சாகவில்லையென்றும் அவளை ஒரு முஸ்லிம் கிழவர் அழைத்துக்கொண்டு போனதாகவும் தன்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டுதான் அவர்கள் போனதாகவும் பையன் கூறினான். குழந்தையைப் பற்றி யாதொரு தகவலும் தெரியாது என்று சொன்னான். இரவெல்லாம் அவர்கள் பிரயாணம் செய்து விடியும் சமயத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் தங்கினார்கள் என்பதையும் சொல்லி அந்த இடத்தைக் காட்ட முடியும் என்று கூறினான். அந்தப் பையனையும் ஜீப் வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். பையன் காட்டிய இடத்தில் கட்டை வண்டியின் சக்கரச் சுவடுகள் தெரிந்தன. அது மட்டுமல்லாமல் சீதா வழக்கமாக அணியும் கண்ணாடி வளையல் ஒன்று அங்கே உடைந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் ராகவனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று.

துயரம் விரைவில் கோபமாக மாறியது. யாரோ ஒரு முஸ்லிம் கிழவன் சீதாவைக் கொண்டுபோய் விட்டதாக எண்ணினான். அவளை எங்கே கொண்டு போய் விற்கப் போகிறானோ, அல்லது என்ன செய்யப் போகிறானோ? அதைக் காட்டிலும் சீதா செத்துப் போயிருந்தால், எரிந்து போன வீட்டிலேயே இருந்து மாண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமே! சீதாவுக்கு நேரக்கூடிய கதியை நினைக்க நினைக்க ராகவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. இதற்கு யார் பேரிலாவது பழிக்குபழி வாங்கவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. பையனை இறக்கி விட்டுவிட்டு ராகவனும் பாமாவும் ஜீப் வண்டியை ஓட்டிக்கொண்டு விரைந்து சென்றார்கள். வழியில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் தனியே போவதைக் கண்டால் அவனை ராகவன் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போனான். இதைப் பாமா தடுக்கப் பார்த்தும் பயன்படவில்லை. வழியில் ஒரு ஊரில் அவர்கள் இராத்திரி தங்கும்படி நேர்ந்தது தங்கிய வீடு ஒரு பிரபல ஹிந்து வக்கீலின் வீடு. ஏற்கெனவே கம்பெனி உத்தியோகம் சம்பந்தமாக அவருடன் சௌந்தரராகவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஊரில் ஹிந்துக்கள் அதிகமாதலால் அதுவரை அபாயம் ஏற்படவில்லை. ஆனால் எந்த நிமிஷம் அபாயம் வருமோ என்று எதிர்பார்த்துத் தயாராயிருந்தார்கள். ராகவன் அவருடைய வீட்டில் தங்கிய இரவு ஒரு செய்தி வந்தது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் ஸ்திரீகள் அணியும் பர்தா உடையைப் போட்டு ஒரு முஸ்லிம் கிழவன் ஜீப் வண்டியில் வைத்து அழைத்துப் போகிறான் என்பது அந்தச் செய்தி. சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவர்கள் வைத்திருந்த துப்பறியும் ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்டதும் சௌந்தரராகவனுக்கு ஒருவேளை அந்தப் பெண் சீதாவாயிருக்கலாம் என்ற சந்தேகம் உதித்தது.

இல்லாவிட்டால்தான் என்ன? ஒரு ஹிந்து ஸ்திரீககு அபாயம் நேர்ந்திருக்கிறது என்றால், அதைத் தடுக்காமல் தான் உயிர் வாழ்ந் திருப்பதில் என்ன பிரயோஜனம்? பழைய காலத்து ராஜபுத்திர வீரர்கள் தங்களுடைய குலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீர சாகஸச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் ராகவனுக்கு அப்போது நினைவு வந்தது. உடனே அந்த ஜீப் வண்டி எந்தச் சாலையில் போகிறது என்று தெரிந்து கொண்டு அதே சாலையில் சௌந்தரராகவன் தன் வண்டியையும் விட்டான். வழியில் பல தடங்கல்கள் நேர்ந்தன. ஆயினும் முன்னால் போன வண்டியை விட்டுவிடாமல் தொடர்ந்து போனான். ஒரு இடத்தில் முன் வண்டி தப்பிப் போய் விட்டதாகவே தோன்றியது. பிறகு அது பெரிய சாலையிலிருந்து, பிரிந்து குறுக்குச் சாலையில் திரும்பியிருக்க வேண்டும் என்று ஊகித்து அதே குறுக்குச் சாலையில் தானும் திரும்பினான். சிறிது நேரத்துக்கெல்லாம் 'சேனாப்' நதியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகு ஏறக்குறைய நடு ஆற்றில் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு முஸ்லிம் கிழவனும் ஒரு ஹிந்து ஸ்திரீயும் இருப்பதை ராகவன் பார்த்து விட்டான். அதற்கு மேல் பார்ப்பதற்கோ யோசிப்பதற்கோ என்ன இருக்கிறது? வேறு எந்த விதத்திலும் அந்தப் படகைப் பிடிக்கவோ தடுக்கவோ முடியாது. துப்பாக்கியை எடுத்துக் கிழவனைக் குறி பார்த்துச் சுட்டான். குறி தவறாமல் குண்டு பட்டது. கிழவன் படகிலிருந்து சாய்ந்து தண்ணீரில் விழுந்தான். அதற்குப் பிறகு நடந்ததை ராகவன் எதிர்பார்க்கவில்லை. படகிலிருந்த பெண்ணும் இன்னொரு மனிதனும் தண்ணீரில் குதித்தது போலத் தோன்றியது. படகில் படகோட்டி மட்டுமே பாக்கியிருந்தான். ராகவனுக்கு அப்போது வெறியே பிடித்திருந்தது. அந்தப் படகோட்டி மனிதனையும் நோக்கிச் சுட்டான். படகு குண்டுபட்டு ஓட்டையாகியிருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் படகு கவிழ்ந்து விட்டது. இந்தச் சம்பவம் ராகவனுடைய வெறியைத் தணித்தது. தான் செய்தது நியாயமோ என்னமோ என்ற ஐயம் எழுந்தது. நியாயந்தான் என்று மனதை உறுதி செய்து கொண்டான். ஒருவேளை படகில் இருந்தது சீதாவாக இருக்கலாமோ என்ற சிறு சந்தேகம் எழுந்தது.

அப்படியிருக்க முடியாது என்றும், சீதாவாக இருந்தால் அந்த முஸ்லிம் கிழவன் நீரில் விழுந்ததைக் கண்டு அவளும் விழுந்திருக்க நியாயமில்லையென்று எண்ணி ஆறுதல் பெற்றான். ஒருவேளை அப்படிச் சீதாவாயிருந்தால் என்ன? ஒரு முஸ்லீம் வீட்டுக்குப் போய்ப் பலவந்தத்துக்கு ஆளாகி உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவள் நதியில் முழுகி இறப்பதே மேலல்லவா? பிறகு ராகவனும் பாமாவும் பல அபாயங்களைத் தாண்டி டில்லிக்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிற்பாடு ராகவனுடைய மனது கேட்கவில்லை. டில்லியில் உள்ள அகதி முகாம்களில் மட்டும் அல்லாமல் பானிபெத், கர்னால், குருக்ஷேத்திரம் முதலிய ஊர்களில் உள்ள அகதி முகாம்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தான். எங்கும் சீதாவைப் பற்றியாவது வஸந்தியைப் பற்றியாவது தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டிய தாயிருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு சீதாவின் பெயருக்குத் தாரிணியிடமிருந்து வந்த கடிதமானது சௌந்தர ராகவனுக்கு மறுபடியும் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. "சூரியா, இப்போது நீ எங்கே தங்கியிருக்கிறாய்?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "இன்னும் ஒரு இடம் என்று நிலையாக ஏற்படவில்லை. ஏற்பட்டதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்களுக்கும் பாமாவுக்கும் திருமணம் நடக்கும்போது எனக்குக் கட்டாயம் அழைப்பு அனுப்பவேண்டும் மறந்து விடக்கூடாது" என்று சூரியா கூறினான். அவனுடைய முகத்தில் வெறுப்பும் வேடிக்கையும் கலந்த குரூரமான புன்னகை காணப்பட்டது. "ஆகா! அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்ல வில்லையே?" என்றான் ராகவன். "சொல்லுவானேன்? ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதுதானே? பாவம்! நீங்கள் எத்தனை காலம் சூனியமாக இருக்கும் இந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியும்?" "ஆம், அப்பா! நீயாவது என்னுடைய நிலைமையைத் தெரிந்து அநுதாபப்படுகிறாயே? உலகத்தில் சுயநலம் அதிகமாகிப் போய்விட்டது?

பிறர் கஷ்டத்தைக் கவனித்து அநுதாபப்படுவாரே இல்லை. அதுவும் தியாகிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்களாகப் போயிருக்கிறார்கள், தெரியுமா? அவர்களை உத்தேசித்தால் நம்முடைய மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை!" என்றான் ராகவன். "ஆமாம்; உலக இயல்பே அப்படித்தான். நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள், கெட்டவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். தியாகிகள் சுயநலத்தை மேற்கொள்வார்கள். சுயநலம் பிடித்தவர்கள் பரோபகாரிகள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் காந்தி மகான் ஒருவர் மட்டும் மாறாமல் இருந்து கொண்டு திண்டாடுகிறார்!" ஆம், உன்னுடைய காந்தி மகானை நீதான் புகழ வேண்டும். காந்தி செய்கிற அநியாயத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவர் எதற்காக இந்தப் புது டில்லியில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது; கோபமாய்க் கூட இருக்கிறது. இவ்வளவு அகதிகளையும் இவர்கள் படுகிற துயரங்களையும் பார்த்துவிட்டுப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேச எப்படித்தான் மகாத்மாவுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. பட்டினி கிடந்து சர்தார்படேலைக் கட்டாயப்படுத்தியல்லவா பாகிஸ்தானுக்கு அறுபது கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தார்? அவரை 'மகாத்மா' என்று சொல்வதற்கே என் நாக்குக் கூசுகிறது." "கூசினால் சொல்ல வேண்டாமே! சொல்லாம லிருப்பதால் மகாத்மாவுக்கு நஷ்டமில்லை, உங்களுக்கும் கஷ்டம் இல்லை. நாங்கள் என்னமோ சில பைத்தியக்காரர்கள், மகாத்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனாலும் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. போகட்டும், உங்கள் கலியாணம் எப்போது?" என்றான் சூரியா.

"அதைப் பற்றித்தான் தயக்கமாயிருக்கிறது, சூரியா! நான் இப்படியே என் வாழ்க்கையை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஆனால் சீதாவைப் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. போதாதற்கு, தாரிணியின் கடிதம் வேறு என் மனதை அடியோடு குழப்பி விட்டிருக்கிறது..." "தாரிணியின் கடிதம் இந்த விஷயத்தில் உங்கள் மனதைக் குழப்புவானேன்?" என்றான் சூரியா. "உன்னிடம் சொன்னால் என்ன, ஒருமாதிரி உனக்கு முன்னமேயே தெரிந்த விஷயந்தான். தாரிணி என்னுடைய முதற்காதலி, சூரியா! சீதாவை இழந்ததினால் எனக்கேற்பட்ட மனத்துயரத்தை மாற்றக்கூடியவள் தாரிணி ஒருத்திதான். ஒருவேளை உனக்கு இந்த விஷயத்தில் ஆட்சேபணை இருக்கக் கூடும். ஆனாலும் நீ இதில் தலையிடாம லிருந்தால் நல்லது" என்றான் ராகவன். "மன்னிக்க வேண்டும், ராகவன்! நான் அப்படியெல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுகிறவன் அல்ல. ஒரு தடவை பிறர் காரியத்தில் தலையிட்டு விட்டு அதன் பலன்களை இன்றுவரை அநுபவித்துக் கொண்டிருக்கிறேன், போதும் போதும் என்றாகிவிட்டது. சீதா செத்துப் போயிருந்து ஒருவேளை ஆவி வடிவத்தில் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் நீங்களும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்து ஆனந்தமடைவாள். உங்கள் கலியாணத்துக்கு வந்திருந்து சீதா ஆசிகூடக் கூறுவாள்!" என்றான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து மன்றாம் அத்தியாயம்
ராகவன் கோபம்

ராகவனுக்கு திடீர் என்று கோபம் வந்துவிட்டது. சூரியா தன்னைப் பரிகாசம் செய்கிறானோ என்ற சந்தேகம் அவன் மனதில் உதித்தது. உடனே குதித்து எழுந்து, "அடே! உன்னுடைய அகம்பாவமும் கெட்ட சுபாவமும் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. இந்த க்ஷணமே எழுந்து போய்விடு! கெட் அவுட்!" என்று கூவினான். "நீங்கள் இன்னும், 'கெட் அவுட்' சொல்லவில்லையே என்றுதான் காத்திருந்தேன்!" என்று கூறிக் கொண்டே சூரியா எழுந்தான். அதற்குள் ராகவனுடைய கோபம் கொஞ்சம் தணிந்தது. "இல்லை, சூரியா! சற்று உட்காரு! நீ உண்மையாகவே அப்படி எண்ணுகிறாயா? அதாவது நான் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்வது சீதாவுக்கு..." என்று தயங்கினான். சூரியா நின்றுகொண்டே, "அதைப் பற்றி ஏன் தயங்கவேண்டும்? சீதாவின் ஆத்மாவுக்கு அது நிச்சயம் திருப்தி அளிக்கும். அதற்கு ஒரு விசேஷ காரணம்!" என்றான். "அது என்ன அவ்வளவு பொருத்தமான காரணம்?" "சீதாவும் தாரிணியும் சொந்தச் சகோதரிகள் என்பதுதான். அவர்கள் ஒரே தந்தையின் புதல்விகள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் வேண்டும்?" "என்ன உளறுகிறாய்! உன்னுடைய மூளை குழம்பி விட்டதா? புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா?" என்றான் ராகவன். "எப்படி வைத்துக் கொண்டாலும் சரிதான்! நான் போய் வருகிறேன்" என்று சூரியா புறப்பட்டான். "இல்லை, சூரியா போகாதே! திடீரென்று ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே? சற்றுமுன் நீ சொன்னது நிசந்தானா? தாரிணியும் சீதாவும் அக்கா தங்கைகளா? யார் சொன்னார்கள்? என்ன அத்தாட்சி?" என்று பரபரப்புடன் ராகவன் கேட்டான். "அவர்களைப் பெற்ற தகப்பனாரே சொன்னார்! அவருடைய வாய்மொழியாகவே தெரிந்து கொண்டேன்!" என்றான் சூரியா. பிறகு, துரைசாமி ஐயரின் இல்வாழ்க்கை ஆரம்பத்தில் நடந்த அதிசய சம்பவங்களைப் பற்றியும் சூரியா விவரமாகக் கூறினான். நம்புவதற்கு அரிய அபூர்வமான சம்பவங்கள்தான். ஆயினும் ராகவனுடைய மனதுக்குள் அவையெல்லாம் உண்மையாகத்தானிருக்கும் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்கெனவே நன்கு விளங்காமல் மர்மத் திரையினால் மறைக்கப்பட்டிருந்த பல சம்பவங்கள் இப்போது பிரகாசமாகத் துலங்கின.

"சூரியா! அவர் எங்கே? அந்தப் பிராமணர் துரைசாமி ஐயர் எங்கே? சீதாவின் கலியாணத்துக்குப் பிறகு அவர் ஏன் திடீரென்று மறைந்து போனார்? அவரை எங்கே பார்த்தாய்?" என்று கேட்டான். "ராகவன்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? தெரிந்து கொண்டால் உங்கள் மனம் கஷ்டப்படும்!" "எதற்காக என் மனம் கஷ்டப்படவேண்டும்? நீ பேசுவதெல்லாம் மர்மமாகவே பேசுகிறாயே?" "நீங்கள் வைதிக சிரேஷ்டர், உங்கள் மாமனார் ஒரு மௌல்வி சாகிப் என்று தெரிந்தால் உங்களுக்குக் கஷ்டமாயிராதா? உங்கள் தகப்பனார் பத்மலோசன சாஸ்திரிகளின் இருதயமே நின்றுவிடுமே?" "என் தந்தையை எதற்காக இதில் சம்பந்தப்படுத்துகிறாய்? என் அழகான மாமனார் உனக்கும் தாய் மாமன்தானே? அவர் எதற்காக மௌல்வி சாகிபு ஆகவேண்டும்? ஹிந்து மதத்தைவிட முஸ்லிம் மதம் சீக்கிரத்தில் மோட்சம் அளித்துவிடும் என்கிற நம்பிக்கையினாலா?" "அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய மதக் கொள்கையைப் பற்றித் தெரியாது. என்னுடைய அபிப்பிராயம், அவர் ஊரை ஏமாற்றுவதற்கே அப்படி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தார் என்பதுதான். ஆனால் அந்த வேஷம் அவர் எதிர்பாராத முறையில் அவருக்குத் திடீர் என்று மோட்சத்தை அளித்து விட்டது!" ராகவனுடைய இருதயத்தில் இனந்தெரியாத ஏதோ ஒருவித பயம் ஏற்பட்டது. பயங்கரமான பாவம் ஒன்று கரிய முகமூடி போட்டுக்கொண்டு தன் முன்னால் வந்து நிற்பதாகத் தோன்றியது. அந்த முகமூடியைக் கிழித்து அந்த உருவத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. ஆகையால் உடனே அவன் பேச்சை மாற்றிவிட விரும்பினான். "கிரகசாரந்தான்! துரைசாமி ஐயர் மௌல்வி சாகிபு ஆவதாவது? அதைப்பற்றி நினைக்கவே எனக்கு அருவருப்பாயிருக்கிறது வேறு ஏதாவது விஷயமிருந்தால் பேசு!"

"வேறு ஒன்றும் இல்லை" என்று கூறிவிட்டுச் சூரியா மறுபடியும் புறப்பட்டான். "ஒருவேளை நீ தப்பித் தவறிச் சீதாவை எங்கேயாவது பார்க்கும்படி நேர்ந்தால்...." "சீதாவின் ஆவியைப் பார்த்தால் என்று சொல்லுங்கள்." "நீ பேசுவதைக் கேட்டால் சீதா இறந்துவிட்டாள் என்று உறுதியாக நம்புகிறாய் போலிருக்கிறது!" "கண்ணால் கண்டதை நம்பாமல் என்ன செய்கிறது?" "என்னத்தை நீ கண்ணால் பார்த்தாய்!" என்று ராகவன் குரல் நடுக்கத்துடன் வினவினான். "நதியின் பிரவாகத்தில் சீதா முழுகுகிறதைக் கண்ணால் பார்த்தேன்" என்றான் சூரியா. "ஐயோ!" என்றான் ராகவன். "அந்தப் படகிலே நானும் இருந்தேன். நாங்கள் மூன்று பேருந்தான் இருந்தோம். கரையிலிருந்து படகைப் பார்த்துச் சுட்டது யார் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் உதித்திருந்தது; அது உண்மை என்று இன்றைக்குத் தெரிந்தது!" "என்ன சொல்கிறாய், சூரியா? என் மூளை குழம்புகிறது! படகில் நீங்கள் மூன்று பேரும் இருந்தீர்கள் என்றால்? யார் யார் இருந்தீர்கள்?" "நானும் சீதாவும், சீதாவின் தகப்பனாருந்தான் இருந்தோம். பஞ்சாப் நகரத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தோம். சீதாவின் தகப்பனார் என்ன நினைத்தார் என்றால், தம்முடைய மௌல்வி சாகிபு வேஷம் சீதாவுக்கு ஒரு பாதுகாப்பு என்று நினைத்தார். அவர் ஒன்று நினைக்க, அவருடைய மாப்பிள்ளை வேறொன்று நினைத்து விட்டார்!" "ஐயையோ! அப்படியென்றால் அந்த படகில் நான் குறிபார்த்துச் சுட்ட முஸ்லிம்..." "ஆமாம்; உங்களுடைய மாமனாரை நோக்கித்தான் சுட்டீர்கள். குறியும் தப்பவில்லை, ராகவன்! இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தை அறிந்திருப்பவன் நான் ஒருவன்தான்; இப்போது உங்களுக்கும் தெரியும். நான் இதை வேறு யாரிடமும் சொல்லப் போவதில்லை. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்."

ராகவன் திடீரென்று குதித்து எழுந்தான். கோபத்தினால் முகத்தில் நரம்புகள் புடைக்க, சூரியாவை நோக்கிக் கைகளை ஆட்டிக்கொண்டு, "அடமடையா! நீயும் ஒரு ஆண்பிள்ளையா? ஒரு பெண் ஆற்றுவெள்ளத்தில் விழுந்து முழுகி இறந்ததை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா? அவளைக் காப்பாற்ற முயலாமல் பெரிய வீரன் சூரன் தியாகி என்றெல்லாம் உன்னை நீயே புகழ்ந்து கொள்வாயே? மணலைக் கயிறாய்த் திரித்தேன், வானத்தை வில்லாய் வளைத்தேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்வாயே? வெள்ளத்தில் முழுகிப் போகாமல் ஒரு பெண்ணைக் கரை சேர்க்கக் கையினால் ஆகவில்லையா?" என்று நெருப்பை கக்கினான். சூரியா சாந்தமான குரலில், "ராகவன்! நான் அப்போது சீதாவைக் காப்பாற்றியிருப்பேன்? காப்பாற்றிக் கரை சேர்த்திருக்க முடியும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. முழுகிச் சாகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்! ஏன் தெரியுமா! பிழைத்து வந்தால் உம்மைப்போன்ற அயோக்கிய சிகாமணியோடு அவள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதி னால்தான்! முன்னொரு சமயம் நீர் என்னை மாடியிலிருந்து பிடித்துத் தள்ளியபோது பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்தேன். பழி வாங்கியாகிவிட்டது! போய் வருகிறேன்," என்று சொல்லி விட்டு நடந்தான். ராகவன் திகைத்து உட்கார்ந்து விட்டான். சூரியாவின் கடைசி வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் கூரிய அம்புகளைப் போலத் தைத்தன. சூரியா கூறிய செய்திகளின் பலா பலன்களைப் பற்றி யோசிக்கும் சக்தியே அவனுக்கு இல்லை. இந்த விஷயம் ஒன்றும் தாரிணிக்குத் தெரியக்கூடாதே என்ற கவலை மட்டும் அவனுடைய மனதில் தோன்றியது. சூரியா வீட்டு வாசலை அடைந்ததும் விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். அவனுடைய நடையின் வேகம் அவனுடைய உள்ளப் பரபரப்புக்கும் அறிகுறியாக இருந்தது. "நான் சொன்னதில் அவ்வளவாகப் பொய் அதிகம் இல்லைதானே? சீதாவின் ஆவியைத்தான் இப்போது நான் பார்க்கப் போகிறேன். சௌந்தரராகவனைப் பொறுத்தவரையில் சீதா இறந்தவள் மாதிரிதானே?" என்று எண்ணமிட்டுக் கொண்டே நடந்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து நான்காம் அத்தியாயம்
சீதாவின் ஆவி

தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன. இல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை! அப்பாடா! கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை. இது என்ன? எங்கே இருக்கிறேன்? என்னத்தைப் பார்க்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன்? செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா? இதுதான் மறு உலகமா? மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும்! நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும்? பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும்? அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு? ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்?

இதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார்? யமனா? யமதூதனா? இல்லை தெரிந்த முகமாயிருக்கிறதே? எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே?... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்? இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார்? ஆகா எத்தனை இதமாயிருக்கிறது? இந்த மனிதர் யார்...... சீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பதும் தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா? அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ? - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்!

சீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். "நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே? எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம்? சூரியா எங்கே?" குழந்தை வஸந்தி எங்கே? இவர் - என் அகத்துக்காரர் எங்கே?" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்ததும் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. அப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும்? வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே! இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. "எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா?" என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே! ஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது.

இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! காந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமா ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள். அடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவிட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார்.

சூரியா டில்லிக்குப் போயிருக்கிறான், ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக் கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய மனோரதம் இவ்வளவு தான். இதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், "சூரியா எங்கே? இன்னும் வரவில்லையா?" என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் "இன்னும் வரவில்லை!" என்று தெரிவித்தார்.சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்? நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே? பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே? எல்லா ஆபத்துக் களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே? சீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள். "பாபுஜீ! என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா? என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா?" என்று இரங்கி வேண்டினாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்தைந்தாம் அத்தியாயம்
பானிபத் முகாம்

பானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன. பட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்ப மாயிற்று. பின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத் தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று.

இத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். சூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் "டில்லியில் என்ன நடக்கிறது? இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா? காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா? முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும்? டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே? இது என்ன அநீதி? பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார்களா? டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலிசெய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே? இது சரியா? முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையு் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே! அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்து விட்டால் மோசம் என்ன?

அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, "டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல் கிறார்களே! அது நிஜந்தானா? நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே? அதுவும் உண்மை தானா?" என்று கேட்டாள். "ஆமாம்; ஆமாம்" என்றான் சூரியா. "அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா?" என்று வினவினாள் அந்த ஸ்திரீ, அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான். பானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பானிபத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களா யிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

இப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்! ஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன. சுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட் டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க் களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக் குருடர்கள் பார்ப்பதைப் போல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்!

இவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித் தார்கள். சீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். "சூரியா, வா! என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை?" என்று கேட்டார். சூரியா சும்மா இருந்தான். "ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய்? டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார் துரைசாமி ஐயர். "வழக்கமான விசேஷந்தான்; வேறொன்று மில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி?- யார் மனதிலும் நிம்மதி கிடையாது." "காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா? பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே!" "போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்." "இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி! மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது?" "எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரா, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்து கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை."

"பெரியவர்கள் 'யதார்த்தவாதி பஹுஜன விரோதி' என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது." "சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா?" "தெரியாமல் என்ன? பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன?" "அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது." "மகாத்மா பயப்படா விட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா! டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா? ஏதாவது செய்தி உண்டா?" என்று துரைசாமி ஐயர் கேட்டார். "பார்த்தேன்! உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்!" என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது. "நீ அவனை எதற்காகப் பார்த்தாய்? நான்தான் பார்க்க வேண்டா மென்று சொல்லி யிருந்தேனே?" "நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்! சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்."

"நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே!அப்புறம் என்ன? உன்னோடு அவன் பேசினானா? ஏதாவது உன்னைக் கேட்டானா?" "பேசாமல் என்ன? கேட்காமல் என்ன? என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்." "நீ என்ன பதில் சொன்னாய்?" "சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்!" "அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்?" "பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள்! உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்!" "அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா? அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்?" "அத்திம்பேரே! அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே?அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்." இத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். "சூரியா! தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா?" என்று கேட்டார். தாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, "தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்!" என்றான். "தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா! நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி. "தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்" என்றான் சூரியா.

"அப்படியே செய்யலாம்! நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்." "அத்திம்பேரே! நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா?" என்று சூரியா நயமாகக் கூறினான். "அது என்ன யோசனை? புதிதாக என்ன சொல்லப் போகிறாய்? சொல், கேட்கலாம்!" என்றார் துரைசாமி. "யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்." "அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்!" என்றார் கிழவர். "அத்திம்பேரே! நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா? கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா?" "காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள்? நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்?"

"அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா? அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று." "உனக்கென்ன பைத்தியமா, சூரியா! அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்?" "எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளுக்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்!....." "அவன் விடுதலை கொடுத்துவிட்டால்?...." என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. "தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே! உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்."

துரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்; சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். "சூரியா! முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றார். சூரியா சற்று நேரம் தலைகுனிந்த வண்ணமிருந்தான்; பிறகு நிமிர்ந்து பார்த்தான். "அத்திம்பேரே! எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்" என்றான். "பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா? அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு! டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய்!" "டில்லிக்குப் போக வேண்டியதுதான், ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்ேரே! பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம்! சுதந்திரம்!' என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை!" என்றான் சூரியா. "மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது?" என்றார் கிழவர். துரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள். சூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.

அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது. துரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, "சூரியா! சூரியா!" உன் அத்தங் காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்!" என்றார். சூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக் கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான். சீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் 'சரிதான்' என்று சமிக்ஞை செய்தார். உடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. பேதைப் பெண்ணே! வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா? பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home