Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > தமிழ்தான் தமிழருக்கு முகவரி!

தமிழ்தான் தமிழருக்கு முகவரி!

- அக்னிப்புத்திரன் in http://www.dinamalar.com/
Contributed by A.Thangavelu from Canada, 22 February 2005

"...தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம். ..தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது. ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை ...(ஆனால்) ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம்.."


கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு ஏராளமான மின்னஞ்சள்கள் குவிந்து விட்டன. போற்றியும் தூற்றியும் எண்ணற்ற கருத்துக் குவியல்கள்.

அனைவருக்கும் தனித் தனியே பதில் எழுத விருப்பமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதுவதை விட ஒட்டு மொத்தமாக எனது கருத்தை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையாகப் படைப்பதே சிறந்தது என்று கருதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

முதலில் பாராட்டியும் ஆதரித்தும் எனது கருத்தை ஏற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து நல்ல தமிழ் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.

அடுத்ததாக வன்மையாகவும் மென்மையாகவும் புழுதி வாரித் தூற்றியும் அவதூறாகவும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் என் நன்றி ஏனென்றால் அவர்களுக்காகத்தானே மீண்டும் இந்தக் கட்டுரை.

சரி இவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளின் பட்டியல் இதோ:

1 திருமாவளவன் ஏன் மேற்கத்திய உடை அணிந்து கொள்கிறார்?

2 டாக்டர் இராமதாஸ் அவர்களின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் ஆங்கிலம்தானே? அவரின் மகன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்?

3 உங்கள் பெயர் (அடியேன்தான் . அக்னிப்புத்திரன்) தூய தமிழ்ப் பெயரா?

4 தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்களா இல்லை தமிழ் வழியிலாவது படிக்கிறார்களா?

5 நீங்கள் ஏன் யாகூ மெயில் பயன்படுத்துகிறீர்கள் அது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே? (உண்மையாக சத்தியமாக நம்புங்கள்! இப்படியும் ஒருவர் கேட்டு எழுதியிருந்தார்)

6 சினிமா வியாபாரம் அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?

7 கமல் தனது படங்களுக்கு எப்போதும் தமிழில்தான் பெயர் வைப்பார் இந்த ஒரு முறை மட்டும் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தப்பு? (நல்லவேளை சூரியா படத் தலைப்புக்கான பி.எப்பை யாரும் ஆதரித்து எழுதவில்லை அந்த வகையல் கொஞ்சம் ஆறுதல்தான்)

8 ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் நம்மால் பேச முடியுமா.?

9 தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரீகம் அடைந்திருக்கின்றான் இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல் கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான் (கவனிக்கவும், வேட்டிக் கூட இல்லை . தமிழன் கோவணத்துடன் திரிவானாம்)

10 சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை? (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார் சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை . என்ன செய்வது?)

ஆக கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் இவர்களின் உள் மனதின் ஆசை ஒன்றுதான் அது தமிழ் தழைக்கக் கூடாது செழிக்கக் கூடாது வளரக் கூடாது அதை வாழ விடக் கூடாது அதற்காகத்தான் இத்தனை உருட்டுப் புரட்டுவாதங்கள்.

இந்த சந்தடிச் சாக்கில் மும்பையில் இருந்து ஒருவர் இந்தியையும் தமிழகத்தில் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார் (இவர் மும்பைக்குப் பிழைக்கச் சென்றபோது இந்தி தெரியாமல் மிகவும் திண்டாடினாராம் இவர் மும்பை போய் இந்தி பேச தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (நல்ல காலம் கொரியாவில் இருந்து ஒரு மின்னஞ்சலும் வரவில்லை இல்லாவிட்டால் கொரியன் மொழியைத் தமிழ்நாட்டில் கற்பிக்க கேட்டு அவர் எழுதியிருப்பார் அந்த வகையில் நாம் தப்பித்தோம்)

தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம் அது இம்முறையும் வெளிப்பட்டு இருக்கிறது தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது.

ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை இந்தியா போன்ற நாடுகளில் பல மொழிகள் இனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் நாங்கள் கூறுவது எல்லாம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதை அங்கு அப்போது பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.

ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம் ஆங்கிலப் படங்கள் எடுத்து ஆங்கில் பெயர் வைக்கட்டும் யார் தடுத்தார்கள் இவர்களை? பாலிவுட் படம் எடுத்து இந்தியில் பெயர் வைக்கட்டும் ஹாலிவுட் படம் எடுத்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கட்டுமே யார் இவர்களின் கையைப் பிடித்து இழுத்தது?

தமிழ் மொழியில் படத்தைத் தயாரித்து விட்டு ஏன் ஆங்கில மொழியில் பெயர் வைக்க வேண்டும்? தமிழ் தெரிந்தவர்களுக்குத்தானே அப்படம்? இல்லை அமெரிக்கர்களுக்கா அப்படம்? ஒரு வாதத்திற்குக் கேட்கின்றேன் ஆங்கிலப் படம் எடுத்து அதற்குத் தமிழில் பெயர் வைப்பார்களா?

தமிழைப் பயன்படுத்துங்கள் என்று கூறினால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாதே அது தேவையில்லை என்று பொருள் இல்லை நாங்கள் யாரும் எந்த மொழிக்கும் விரோதியில்லை எந்த மொழியும் அவரவர்களுக்குச் சிறப்புடையதுதான் உலகின் பழமையும் பெருமையும் வாய்ந்த செந்தமிழ் மொழி சிதைக்கப்படுவதையும் சீர்குலைக்கப்படுவதையும்தான் தடுக்க முற்படுகின்றோம் சிறப்புடைய தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றைப் போற்றாதே என்றுதான் கூறுகின்றோம்.

தமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்து விட்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் கூறவில்லை சக்தி வாய்ந்த அதே சமயம் மக்களின் உள்ளத்தைக் கவரும் ஊடகமாகத் திரைப்படம் விளங்குவதால் அதில் கவனம் செலுத்தப்படுகின்றது படிப்படியாகத்தான் முயல வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் தலைப்புகளில் முப்பத்தி ஐந்து பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள்தான் என்று தட்ஸ்தமிழ்.காம் இணையத்ததளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றால் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பெயரையே எங்கும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் எனவேதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கமல் அல்லது ஆபாச இயக்குனர் சூரியா என்ற சிலருக்கு மட்டுமல்ல இந்த வேண்டுகோள் அனைவருக்கும் பொதுவாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது ஆங்கில மோகம் அதிகரித்து தமிழைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தமிழன் தள்ளப்படுவதைத் தவிர்க்க எடுக்கப்படும் இந்த முயற்சி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே ஆங்கிலப் பெயர்கள் வைத்த (சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி) எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தற்போது மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு அவர்களாகவே முன்வந்து விரும்பி பெயரை மாற்றினால் மெத்த மகிழ்ச்சியே எனவேதான் இனிமேலாவது தமிழைப் பயன்படுத்தித் தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகின்றது.

சினிமா ஒரு வியாபாரம் என்கிறீர்கள் எல்லாமே வியாபாரம்தான் அதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றோம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவால் ஏற்கனவே கலாச்சாரச் சீரழிவு மின்னல் வேகத்தில் பரவுகின்றது மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும் ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலைக் கலாச்சாரப் புயல் வேகத் தாக்கத்தாலும் நம்மவர்களின் அடிமை மோகத்தாலும் தமிழைத் தமிழரே புறக்கணிக்கும் நிலை தற்சமயம் தமிழ் மொழிக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ளது தமிழுக்கும் தமிழின் பெருமைக்கும் தமிழனிடமே யாசித்து நிற்கும் அவல நிலைக்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் ஆங்கில ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் ஒரு வசனம் பேசுவார் அந்த வசனம்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றது அந்த வசனம் இதுதான்:

வீரபாண்டிய கட்டபொம்மன்:(கடும் கர்ஜனையுடன்) இந் நாட்டில் பிறந்த எவனும் யாருக்கும் எங்களைக் காட்டி கொடுக்க மாட்டான்!

ஜாக்சன் துரை . ம்ம்ம் (ஏளனத்துடன் எட்டப்பனை மனதில் நினைத்துக் கொண்டு) அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் .. யார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் (சீறும் எரிமலையாக) இந் நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான்.

இவ் வசனம் நாட்டிற்கும் பொருந்தும் மொழிக்கும் பொருந்தும் தாய் மொழியாம் தமிழைப் போற்று என்றால் ஏன் இத்தனைக் கோபம் ஆத்திரம் எரிச்சல் எல்லாம் ஒரு சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன? ஏன் விதண்டாவாதம் செய்கின்றீர்கள்?

தமிழ் படித்தால் அடிமையாகத்தான் வாழ வேண்டும் நாகரீகம் தெயாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று மடத்தனத்துடன் தமிழனே பேசும் அறியாமை நிலைக்குத் தமிழன் தள்ளப்பட்டுள்ள இழிநிலையை நினைத்தால் மகாகவி பாரதி கூறுவது போல நெஞ்சு பொறுக்குதில்லையே.

தமிழ் பேசு தமிழ் படி என்றால் மற்ற மொழிகளைப் பேசாதே மற்ற மொழிகளைப் படிக்காதே என்று ஏன் பொருள் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நம் செந்தமிழ்க் கவி பாரதி பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர்தான் விருப்பம் உள்ளவர்கள் சுய முயற்சியாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும் ஆனால் அதை அவர்கள் மற்றவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் தாய் மொழியை நாம் இகழ்ந்தால் எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும் மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான் தாய் மொழி வாயிலாக கலை கலாச்சாரம் மற்றும் அற நெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் nநிஞ்சத்தில் நன்கு ஆழமாகப் பதியும் தன் தாய் மொழியை இழந்தவன் விழி இழந்த குருடனுக்கு ஒப்பாவான் இந்த மொழிக் குருடர்களின் கருத்தைப் பாருங்கள் சினிமா இல்லாவிட்டால் இன்றைய தமிழனுக்கு உலக நாகரீகம் தெரியாதாம் இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே என்னால் முடியும்.

உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த ஒரு உன்னத நாகரீகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன் முடிந்தால் தமிழக வரலாறு அதன் பண்பாடு பற்றிய நூல்களை வாங்கிப் படிக்கவும் உங்கள் விருப்பப்படி ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்றால் வுhந டயபெரயபந pசழடிடநஅ ழக வுயஅடையெனர.. யுரவாழச:னுநஎயநெலயியஎயயெச என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.

ஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது நம் தமிழ் மொழி தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாடும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால் மிக்க சிறந்த அரசியல் பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உன்னத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய தமிழனிடமா நாகரீகம் இல்லை? ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரீக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.

உங்கள் சினிமாவைப் பார்த்துத்தான் நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை எல்லாத் திரைப்படங்களையும் குறை கூறவில்லை ஒரு சில தற்கால சினிமா காட்டும் கேடு கெட்ட எந்த நாகரீகமும் நமக்குத் தேவையில்லை.

தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை ஆங்கில மொழி இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலோ சாக்சன் காலத்தில் அது வெறும் இரு நூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது அது பிற்காலத்தில் பிற மொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.

ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளத்துடன் உயர் தனி செம்மொழியாக விளங்கியது எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம் சொன்னால் சொல்லி மாளாது எழுதினால் ஏடு கொள்ளாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி.


Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home