"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
கண்ணகி
கோயில் தமிழ் அன்னையின் கால் சிலம்பாக விளங்கும் சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி. காப்பியங்கள், தம்முடன் வாழ்ந்து மறைந்தவர்களுள், சிறப்பானவர்களைப் பற்றி வாய்மொழியாக வழங்கப்பட்டுப் பின்னர் காவியமாக எழுதப்பட்டவைகளாகும். அத்தகைய கதைகளில், ஒன்றின் நாயகிதான் கண்ணகி. கண்ணகி பத்தினித் தெய்வமாகப் போற்றப்படுவதற்குக் காரணம், சேர அரசன் செங்குட்டுவன், கண்ணகியின் கதையைக் கேள்வியுற்று வடதிசை சென்று இமயத்திலிருந்து (வடநாட்டு அரசர்களை வெற்றி கொண்டு) கல்லெடுத்து அவளுக்குப் படிமம் வடித்த செயலால்தான் எனக் கருதப்படுகின்றது. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில், கண்ணகி தன் கணவனுடன் வானுலகு சென்றதைக் கண்ணாரக் கண்டவர்கள் குன்றவர்கள் ஆவார்கள். கண்ணகி 'மதுரையோடு அரசு கேடுற வல்வினை உருத்த காலை கணவனை அங்கு இழந்த கடுவினையேன் நான்" எனக் கூறக்கேட்டவுடன், அவளைக்கண்டு அஞ்சி, அவர்கள் இருகரம் குவித்துக் கை கூப்பித் தொழுகின்றனர். அப்போது கோவலன் வானவர்களுடன் வந்து மலர்மழை பொழிந்து அவளை வானவூர்தியில் அழைத்துச் சென்றனர். கண்ணகி வானுலகம் சென்றதைக் கண்டு வியந்த அவர்கள், இவளைத் தெய்வமாக வழிபடத் தொடங்குகின்றனர். இக்குன்றக் குரவர்கள், கண்ணகியின் தோற்றத்தினால் ஏற்பட்ட அச்சத்தினாலோ, அல்லது அது உண்டாக்கிய ஒரு பக்தி உணர்ச்சியாலோ, அல்லது வானவர்கள் அவளை வானுலகு அழைத்துச் சென்றதைக் கண்டவுடனோ, கண்ணகியைத் தெய்வமாக பத்தினிக் கடவுளாக வழிபடத் தொடங்கினர் எனக் கொள்ளலாம். இப்பத்தினி வழிபாட்டால் தங்களின் மலைவளம் செழிக்க வேண்டும் எனப்பாடுகின்றனர். இதிலிருந்து, தமது நலனையும், அதனுடன் இணைந்த தம் நாட்டு நலனையும், கருத்தில் கொண்டு, பல தெய்வங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட சங்க இலக்கியங்களான நற்றிணையிலும், யாப்பருங்கல விருத்தி என்ற ஒரு வெண்பாப் பாடலிலும், கண்ணகியின் வரலாறு போன்ற செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே, முன்னர் மக்களிடம் பரவலாக வழக்கத்தில் இருந்த ஒரு கதை இளங்கோவடிகள் மூலம் காப்பியமாக உருப்பெற்றது. சிலப்பதிகாரத்தில்தான் பத்தினித் தெய்வ வழிபாடும், அவளுக்குக் கோயில் எழுப்பப்பட்டச் செய்தியும் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்களிலும், பத்தினித் தெய்வ வழிபாடு பற்றிய செய்தி காணப்படவில்லை. தற்போது பத்தினிக்கு எனப் பல கோயில்கள் உள்ளன. பல இடங்களில் கண்ணகி, பகவதி என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகின்றாள். இலங்கையிலும், கண்ணகி வழிபாடு நடைபெற்றுள்ளது. இதற்குச் சான்றாக, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ராஜாவளி' என்ற நூலில், கஜபாகு என்ற இலங்கை அரசன், சோழ அரசனை வென்று, 2400 குடிகளையும், பத்தினி தேவியின் காலணிகளையும், நான்கு தெய்வங்களின் ஆயுதங்களையும், இலங்கைக்குக் கொண்டு சென்றான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கி.பி. 16-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு சோழ நாட்டில் பத்தினி வழிபாடு இருந்துள்ளது எனத் தெரிகின்றது. இலங்கையில் நிகவேவா விஹாரத்துக் குகையில் இரண்டு மரப்படிமங்கள் கண்ணகி கோவலன் எனக் கருதப்படுகின்றது. மேலும் இலங்கையில் கிடைத்த செப்புச் சிலை ஒன்று தற்போது இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதும் பத்தினிக் கடவுளாகவே கருதப்படுகின்றது. கண்ணகி கோயில் தற்போதைய கேரளாவில் உள்ள கிரங்கனூரில் உள்ளது என்றும், தற்போதைய மங்கலாதேவி கோயிலே கண்ணகி கோயில் என்றும் பல்வேறு கருத்துக்கள் அறிஞர்களிடம் நிலவுகின்றன. திரு பி.அனந்தபிள்ளை என்ற, மலையாள மொழி அறிஞர், தெற்குக் கிரங்கனூரில் வசந்த விழாக் கொண்டாட்டத்தின் போது பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டில் கண்ணகியின் கதை கூறப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அப்போது நாட்டுப்புறப் பாடல்களான மணிமங்கா தோட்டம் மற்றும் முடிப்புரைப்பாட்டு என வழங்கப்படும் பாடல்களில் கண்ணகியைப் பத்ரகாளியாகவும், கோவலன் பாலகர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். "தெக்கும் கோலாட்டு
கண்ணகியும்
என்றும், எனக் கண்ணகி பாண்டிய மன்னனின் தலையை வெட்டிய செய்தியும், பொற்கொல்லன் கொலை செய்யப்பட்ட செய்தியும் முடிப்புறத் தோட்டம் பாட்டில் கூறப்பட்டுள்ளது. தனியாக அமைக்கப்பட்ட தோட்டத்தில் ஏழு நாட்கள் விழாக் கொண்டாடப்பட்டது. இவ்விழா அறுவடை முடிந்தவுடன் கொண்டாடப்படுகின்றது. அறுவடை வயலில் இத்தகைய ஏழு நாள் கொண்டாட்டத்தில் கண்ணகி கதையுடன் இணைக்கப்பட்ட பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏழாம் நாள் 'குருதி' எனப்படும் நிகழ்ச்சியில், பல தீயசத்திகளுக்கு உயிர் பலி இடப்பட்டு பின்னர் கிரங்கனூர்க்கு இறைவி கொண்டு செல்லப்படுகின்றாள். இங்கு பத்ரகாளி கோயிலின் உள்ளே இரண்டு தெய்வங்களுக்கு வெவ்வேறு முறையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிரங்கனூரில் அனைத்து சாதி மக்களும் வழிபாடு செய்கின்றனர். குறிப்பாகச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்கின்றனர். இவை அனைத்தினையும் நோக்கும்போது இக்கோயில் முதல் கண்ணகி தேவி கோயிலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. மேலும் சேரநாடாகிய, கேரளாவில் எடக்கல் என்ற இடத்தில் சங்க காலத்திய சேர அரசர்களின் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது பற்றி திரு. ஐ.மகாதேவன் என்ற கல்வெட்டு அறிஞர் "இது வரை சங்ககாலச் சேரர் பற்றிய தொல்லியல் தடயங்களே கிடைக்காமலிருந்த கேரளத்தில் இப்பொழுது அவர்களது கல்வெட்டுக்கள் கிடைத்தது மனநிறைவைத் தருவதாகக்" குறிப்பிட்டுள்ளார். எனவே கிரங்கனூரில் எல்லாச் சமூகத்தினரும் வழிபாடு செய்யும் பத்ரகாளி கோயிலும் கண்ணகி கோயிலாக இருப்பதற்கு இச்சான்று துணை புரிகின்றது. சில அறிஞர்கள், பாண்டிய நாட்டில் உள்ள மங்கலா தேவி கோயிலே கண்ணகி கோயில் என்றும் கருதுகின்றனர். திண்டுக்கல் அருகில் பழனி மலையில்,செங்குன்றம் என்ற மலையின் வழியாக கேரளாவிற்குள் நுழைந்தாள் என்றும், இக்கோயிலையே கண்ணகி கோயில் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீலகிரியிலும் 'கண்ணகி மந்து' என்ற ஊர் உள்ளது. மேலும் சென்னையை அடுத்த திருவொற்றியூரில், சிவாலயத்தின் உட்கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் கோயில் கொண்டுள்ள துர்க்கா தேவியை, கண்ணகி தேவியாகவே கொண்டு 15 நாள் வரை பெரிய திருவிழாவும், பலிகளும் நடத்தி மக்கள் வழிபடுகின்றனர். இவ்விழாவின் இறுதி நாள் அன்று, கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், பந்தல் ஒன்று கட்டி அதனைக் கொளுத்தி விழா நடத்தி வருகின்றனர். முன்பு இக்கண்ணகி அம்மனுக்கு கம்மாள இனத்திலிருந்து ஒருவரை பலியிடும் வழக்கம் இருந்த தென்றும், இவ்வம்மனைத் தமிழ்ப் பதிகங்களால், இதே இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் பாடி வேண்டிக் கொண்டதால் நரபலி நிறுத்தப்பட்டதாகச் செவிவழிச் செய்தி கூறுகின்றது. இதே போன்ற வரலாறு "கோவலன் கதை" என வழங்கும் நாட்டுப்புறப் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. இத்துர்க்கை அம்மன் கோயிலின் முன்பு ஒரு பெரிய கிணறு இருந்ததாகவும், மதுரையை எரித்த கண்ணகி தண்�ர் தாகத்துடன் இவ்வூருக்கு வந்ததாகவும் திருவொற்றியூர் மக்கள், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் இருந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளுமாறு கூறி, அவளைக் கிணற்றின் அருகில் வரச் செய்து கிணற்றினுள் தள்ளி, பெரிய பாறையைக் கொண்டு மூடியதாகவும் கருத்து நிலவுகின்றது. இத்தேவியைக் கல்வெட்டுக்கள் "திருவட்டப்பிறைப் பிடாரியார்" "துர்க்கையார்" என வழங்குகின்றன. திருவொற்றியூர்ப் புராணத்தில் "வீர மாகாளியுங் காத்திட வட்ட மாஞ்சிலையுய்த் தான்" என இவ்வம்மன் வட்டப் பாறை அம்மன் என அழைக்கப்பட்டுள்ளது. எனவே, கண்ணகியின் கதையுடன் தொடர்புடைய பல இடங்கள் தமிழகத்திலும், கேரளாவிலும் இலங்கையிலும் வழிபாட்டில் இன்றும் உள்ளன. முன்பு சிறு தெய்வ வழிபாட்டின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த பத்தினித் தெய்வ வழிபாடு பின்னர் சக்தி வழிபாட்டினுள் இணைந்து, கண்ணகியும் காளியின் ஒரு அம்சமாகக் கருதப்பட்டுப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றாள். நன்றி : கலைமகள் இதழ் |