Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > கைதி எண் 253 - சிற்பி

கைதி எண் 253

சிற்பி

என் இயல்பே அது
யாரென்று பார்க்காமல்
எவரென்று கருதாமல்
பட்டது நெஞ்சில் என்றால்
வெட்டும் வாள் ஆகும்
என் நாக்கு
அரவிந்தர் மகாஞானி
யோகியும் கூட
வேத விற்பன்னர்
உபநிடத வித்தகர்
எனக்குள் இதிகாச
சாரங்கள் வடித்தவர்
'ஞானச் சுடர்'
'தரும சூரியன்'
அலிப்பூர் சிறையில்
ஆத்ம தரிசனமாய்க்
கண்ணனைக்
காட்சி யனுபவமத்தில்
கண்ட தேவன்
புதுவைக்கு நான்சென்ற
இரண்டாம் ஆண்டில்
பாபுவும் வந்தார்
உடுத்த உடையும்
அடுத்த வேளை உணவும்
எங்கே என்று
அறியா நிலையில்
கலவைச் சங்கரன் செட்டியார்
மாளிகை மாடியில்
குடி இருத்தினோம்
ஆறு மாதங்கள்
அரவிந்தர் புதுவையில் இருப்பதை
அரசும் கூட
அறிந்திருக்கவில்லை
ஆத்ம ஞானியோடு
என் அறிவு கை குலுக்கிக் கொண்டது
மெல்லத் தனித்தார்
யோகம் எத்தனித்தார்
எழுதிக் குவித்தார்
அய்யரும் புதுவை வர
நாங்கள் மூவரும்
மெய்யியல் பயணங்களில்
சக யாத்திரிகர் ஆனோம்
பதஞ்சலி யோகமும் வேதமும்
எனக்குப் பருகும் நீராயின
ஆண்டாளும் ஆழ்வாரும்
அரவிந்தருக்கு உண்ணும் சோறாயின
ஒரு கலாசார மடை மாற்றம்
என் கவிதையிலும் திசை மாற்றம்
யாக சத்தியும்
யோக சித்தியும்
என் பனுவல்களில்
குறியீடும் யதார்த்தமும் ஆயின
யோகியை மதித்தேன்
ஆயினும்,
'காலில் விழுந்து
பிறர் வணங்கும்
கெளரவத்தை
நீரும் பெறலாமே'
என்றவர் சொன்னபோது
பிம்பம் நொறுங்கிப்
பொடிப் பொடியானது
நம்பிக்கை எங்கோ
விரிசல் கண்டது
தெய்வீக மனிதனாய்
நான் தேர்ந்து வைத்திருந்த
காந்தியிடமும்
கருத்து வேறுபட்டேன்
விதவைத் திருமணம் குறித்து
'இளைய இந்தியா' இதழில்
விவாதம் எழுந்த போது
அவர் வைத்த அளவு கோல்
அந்தோ கோணலாய் இருந்தது
மறுமணம் நல்லதுதான்
எனினும்
என் வீட்டுப் பெண்கள்
இசைய மாட்டார்கள்
நானும் அப்படியே
என அவர் எழுதினார்
கடுமையாக நான்
காந்தியை மறுத்தேன்
விவேகானந்தப் பரமஞானி
என் குருவின் குரு
எனவே என் பரமகுரு
சுயாதீனக் கிளர்சிகளுக்கு
அவரே ஆதிமூலம்
'மாசில்லாத குரவன் அச்சங்கரன்'
மறுபடியும் இந்த
மண்ணுக்கு வந்தது போல்
தேக மிகும் சோதியாய்
தேசம் உய்ய வந்த மகான்
விவேகானந்தர்
அவருக்கு வாய்த்த
சென்னை நண்பர்கள்
அழகிய சிங்கரும்
சுப்பிரமணிய அய்யரும்
என்னை வளர்த்த சுடர்கள்
ஆயினும்
முரண்பாடு அவரிடம்
முகிழ்த்த போது
என் எழுத்தில் கோபம்
கொப்பளித்தது
விதவை மறுமணம்
அவருக்கு வேப்பங்காய்
ஸ்மிருதிகளின் காலத்தில்
கீழ்குடிகளில்
மறுமணம் இருந்ததாம்
உயர்குடியில்
அது ஏற்கப்படவில்லையாம்
காரணம்
உயர்குடிகளில்
ஆண்கள் குறைவாம்
பெண்கள் மிகுதியாம்
கூத்து ... கூத்து
பெருங்கூத்து!
ஸ்மிருதிக் காலத்தில்
மக்கள் தொகைக் கணக்கு
இருந்ததா என்ன?
மறுமணம் என்றதும்
மனம் ஒப்பவில்லை
நொண்டிச் சாக்குகள்'
நூற்றெட்டு அடுக்குகிறார்
சின்ன வயதில்
காவி அணிந்ததால்
வந்த கோளாறு!
தவறிழைப்பவர்
எவராய் இருந்தால்
எனக்கென்ன?
...'நேர்படப் பேசு'
பொய்மையை இகழ்
சீறுவோர்ச் சீறு
என்னும் என்
ஆத்திசூடி வரிகள்
வெறும் வாக்கியங்கள் அல்ல
வாழ்க்கையின் நெறிகள்
எதையும்
பிம்பமாக்குவதில்
எனக்குச் சம்மதமில்லை'
பிம்பங்கள் விக்கிரகங்களாகும்
சடங்கும் சம்பிரதாயங்களும்
அதன் சாபல்யத்தைக் குலைக்கும்
நான் லட்சிய மனிதன்
லட்சியங்கள் விண்மீன்கள்
ஒன்றை அடைந்தால்
இன்னொன்று அழைக்கும்
தேக்கம் அல்ல
இயக்கம் என் வாழ்வியல்

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home