Maha Kavi Subramaniya Bharathy - Short Stories
சி. சுப்ரமணிய பாரதி - சிறு கதைகள்
ஆனைக்கால் உதை
ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி
கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்த தெருவின் வழியாகச் சில
பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு. போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப்
பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம்
உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமானக் காலைக்
காட்டிப் பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன் ஜாக்கிரதை! என்பான்.
சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, அந்த ஆனைக்காலால்
அடிப்பட்டால் நாம் செத்தே போவோம் என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.
இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம்
பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கடையிலிருந்து ஒரு பழத்தைக்
கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரியக்
காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடிஅடித்தான். பஞ்சுத் தலையணையால்
அடித்தது போலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு
முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும்
சதை எலும்பில்லை என்றான். மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப்
போலவே காணப்படுகிறhர்கள். வெறும் சதையாக இருக்கும் கஷ்டங்களைத்
தூரத்திலிருந்து எலும்புள்ள கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம்
பார்த்தது இல்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?
|