Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > The Tamil Heritage - History & Geography > மனித இனம் முதலில் தோன்றிய கடல் கொண்ட குமரிக் கண்டம் - கதிரவன்

மனித இனம் முதலில் தோன்றிய
கடல் கொண்ட குமரிக் கண்டம்

கதிரவன், 16 April 1998


'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று சொல்வார்கள். இப்படி வந்தவர்களை வாழ வைத்ததனால் தானோ என்னவோ தமிழன் தனது இனம், மொழி, கலாச்சார பெருமைகளை மறந்து விட்டான். அதைவிட தான் இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான் என்றால் என்ன சொல்வது ?

தமிழனின் நாகரீகம்

தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு இந்திய வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும்
பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.

ஆம்! குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.

சிவா நடனம்

குமரியில் கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.

ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.

குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி, கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

பாட்டி / அவல்

அதுபோல் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் 'பாட்டி' என்று
அழைக்கிறார்கள். அவல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். நமது மீனவர்கள் நாட்டு படகை தெப்பம், மிதப்பு என்று சொல்வது போல் ஆப்பிரிக்க பழங்குடியினரும் சொல்வது அந்த நாட்களில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்ததற்கான அடையாளம் என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தாய்மாமன் / அம்மி, உரல்

எனவே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம்
கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும், உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக
இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்தி ருக்கிறது.

ஆடு மேய்ச்சான் பாறை

ஆடு மேய்ச்சான் பாறை உள்ள இப்போதைய குமரி மாவட்டத்திலும் கூட பல உதாரணங்களை சொல்லலாம். குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் 'திரைகாணும் முன் தேரை காணனும்' என்பது மரபு. அதாவது கடலை பார்க்கும் முன்பு சுžந்திரம் தேரை
பார்க்க வேண்டும். இதற்கு காரணம் தங்களது முன்னோர்களை கடல் கொண்டு விட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் என்பது வரலாறு.

குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம்
தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது.

பக்ரூளி ஆறு

குமரிக் கண்டத்தில் பக்ரூளி ஆறு ஓடியதாக வரலாறு. குமரி மாவட்டத்தில் பரளி ஆறு ஓடுகிறது. பக்ரூளி தான் பரளியாக மருவி இருக்கிறது. அதுபோல் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
முதல் அணைக்கட்டில் பக்ரூளி ஆறு அணைக்கட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் ஓடியதன் நினைவாக பரளி ஆறு என்று பெயரிட்டிருக்கலாம். அல்லது இந்த ஆறே அங்கும் ஓடி இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.

காரணம், 1960-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி செய்யும் போது குளச்சல் பகுதி கடலுக்கு அடியில் மலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே அது மேற்கு தொடர்ச்சி மலைதான். கடல் கொள்ளுவதற்கு முன் மலை ஆஸ்திரேலியா வரை பரவி இருந்தது என்று கூறப்படுகிறது.

குமரிகோடு

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல
கண்டங்களில் இருப்பது. குறிப்பாக, ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல்
என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நாம் குமரி அம்மனை வணங்குகிறோம். 6-வது நூற்றாண்டில் கம்போடியாவில் குமரி அம்மனை வழிபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம்

குமரிக் கண்டத்தை கடல் கொண்டதற்கான ஆதாரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. 'பக்ரூளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று தொல்காப்பியர் எழுதுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழனுக்கே உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் சங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் தென் மதுரையில் இருந்ததாக வரலாறு. அதை கடல் கொள்ளவே கபாட புரத்தில் 2-ம் தமிழ்ச் சங்கம் இயங்கியது. இங்குதான் சிலப்பதிகார சம்பவங்கள் நடந்தன. இதை எழுதிய தொல்காப்பியர், அரங்கேற்ற உதவிய அதங்கோடு ஆசான்,
தற்போதைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவேதான் கடல் கொண்டு பல ஓலை சுவடிகள் அழிந்தாலும் 2-ம் தமிழ்ச் சங்க கடைசி காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் நமக்கு கிடைத்தது.

ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமா?

இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.

இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன.

கடலாய்வு செய்வதினால் பல அற்புதங்களை பூம்பூகார் நகரம் வெளிப்படுத்தியுள்ளது. அதை விட பல மடங்கு அற்புதங்கள் குமரிக் கண்டத்தில் உள்ளன. இதை கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்காக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எஸ். பத்மநாபன் 30 ஆண்டுகளாக கடலாய்வு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.


Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home