உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம்
ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக இன்று (ஆகஸ்ட் 16
2008) அன்று மதுரையில் நடைபெற்றது.
மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற
இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த
எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற
இம்மாநாட்டில் தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்கள்
தி.க. சிவசங்கரன், கி.இராஜநாராயணன், எஸ்.பொன்னுதுரை (எஸ்.பொ), ஜே.வி கண்ணன்,
வே. தங்கவேலு (நக்கீரன்)ஆகியோருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.
இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சி. மகேந்திரன், இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், கவிஞர்கள் காசி. ஆனந்தன்,
இன்குலாப், மணியரசன், தியாகு, முனைவர் க. நெடுஞ்செழியன், பேரா. ஜெயராமன்,
முனைவர் தமிழண்ணல், பேரா. பர்வீன் சுல்தானா, எழுத்தாளர்கள் சூரியதீபன், அழகிய
பெரியவன், மரு. இந்திரக்குமார் (இலண்டன்), கலைச் செல்வன் (மியான்மர்),
திருமாவளவன் (மலேசியா), ஜான் மோசஸ், பொன்னீலன், நாடோடித்
தமிழன்(மராட்டியம்), புகழேந்தி (கர்நாடகம்), பேரா. இராமமூர்த்தி (கர்நாடகம்),
அரணமுறுவல், முனைவர் இராம சுந்தரம், மு. பாலசுப்பிரமணியம், சா. சந்திரேசன்,
இராசேந்திரசோழன், மெல்கியோர், பசுபதிபாண்டியன் உட்பட பல்வேறு கட்சிகளையும்
அமைப்புகளையும் சேர்ந்த எழுத்தாளர்களும் தலைவர்களும் கலந்து கொண்டு
உரையாற்றினர்.
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சியூட்டும் இசை நிகழ்ச்சியும்
நடைபெற்றது.
மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழின உணர்வாரள்கள் பெருந்திரளில்
கூடியிருந்தனர்.
|
தீர்மானங்கள்
1. இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியங்களின் விளைவாக அங்கு வாழ முடியாத
நிலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியா
உட்பட உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேற்கு நாடுகளில் அகதிகளாகக்
குடியேறி உள்ள ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பிடப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு
அந்நாடுகளின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன் பேரில் அவர்கள் அந்நாட்டின்
குடிமக்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சொந்தமாகத் தொழிலும், வணிகமும்
நடத்தும் உரிமைகளும், வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களின்
குழந்தைகளுக்குக் கல்வி உரிமைகள் அளிக்கப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு
மேலாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் நமது சகோதர ஈழத்தமிழர்களுக்கு
குடியுரிமை அளிக்க முன் வந்து தனது மனித நேயக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுமாறு
இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் இங்கு அரசுகளால் வேண்டாத
விருந்தாளிகளாகக் கருதப்படுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்தும்
குடியுரிமையும் மறுக்கப்படுகிறது. தொழல் வணிகம் செய்யும் உரிமைகளும் கிடையாது.
வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான
குறைந்தபட்ச உதவிகள் கூடக் கிடைப்பதில்லை. அவர்களின் வாழ்விடங்கள் சீர்கேடான
நிலைமையிலும், சுகாதார வசதிகள் குறைவாகவும் உள்ளன. குழந்தைகளுக்குப் போதுமான
கல்வி வசதிகளும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய சீர்கேடுகளை
உடனடியாகக் களைவதற்கு உதவும் வகையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் அகதி
முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை அய். நா. அகதிகள் ஆணையத்திடம்
ஒப்படைக்கும்படி இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
3. தமிழ்நாட்டில் நூலகத்துறை முற்றிலுமாகச் சீரழிந்து கிடக்கிறது.
நூலகங்களுக்குத் தேவையான நூல்களை வழங்குவதில் விருப்பு வெறுப்புகள்
காட்டப்படுகின்றன. தரமான நூல்களுக்குப் பதிலாகத் தரமில்லாத நூல்கள்
வாங்கப்படுகின்றன. போதுமான நூலகர்கள், உதவியாளர்கள் நியமக்கப்படாமல் நூலகங்கள்
சரிவர இயங்காத நிலைமை c;ளது. இந்த சீர்கேடுகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் நூலக
ஆணைக் குழுவில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், e}ல் திறனாய்வாரள்களையும்
நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
4. உலகத்தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய இலக்கியப் பரிசுத்
திட்டம் ஒன்றிளை அறிவிக்க முன்வருமாறு தமிழக அரசை இம்மாநாடு
வேண்டிக்கொள்கிறது.
5. 1974-ஆம் ஆண்டு இந்திய அரசினால் இலங்கை அரசுக்குக் கச்சத்தீவு தாரை
வார்க்கப்பட்டதன் விளைவாக தமிழக மீனவர்கள் சொல்லொணாத துன்பங்களுக்கும்,
இழப்புகளுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே கச்சத்தீவை உடனடியாகத் திரும்பப் பெற்றுத்
தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு
வற்புறுத்துகிறது.
6. கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக நமது கடல் எல்லைக்கு உள்ளாகவே 400க்கும்
மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் பெறுமான படகுகளும்,
வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும்,
சேதமாக்கப்பட்ட படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கும் உரிய இழப்பீட்டினை சிங்கள
அரசிடம் பெற்றுத் தருமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
7. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுடன் மொழி, பண்பாட்டு உறவு
உடையவர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு அவர்களுக்கு விசா
மறுக்கப்படுகிறது. இதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகத்தமிழர்
பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பிரான்சு நாட்டில் நகராட்சி உறுப்பினராக
பதவி வகிப்பவரும், பிரெஞ்சு குடிமகனுமான திரு. அலன் ஆனந்தன் உலகத்தமிழர்
பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வந்தபோது விமான நிலையத்திலேயே அவரை
இந்தியக் குடியேற்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இது போன்ற கசப்பான
அனுபவங்கள் இதற்கு முன் வெளிநாட்டுத் தமிழர்கள் பலருக்கு நேர்ந்துள்ளனது.
இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகள்
ஒருபோதும் நிகழவில்லை. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இத்தகைய அவமதிப்புகள்
தொடர்ந்து நிகழ்த்தப்படுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
8. உலகெங்கும் பரந்து வாழ்ந்து தம் தமிழ்மொழி மூலமான படைப்பாற்றலை அந்நியச்
சூழலிலும் தொய்ய விடாது வளர்த்துத் தாமாகவே கவிதை, கதை, கட்டுரை படைத்தும்
தாம் வாழும் நாட்டின் மொழி நூல்களைத் தமிழாக்கியும் அவ்வவ்நாடுகளிலும்
இந்தியாவின் அவ்வவ் மாநிலங்களிலும் பதிப்பித்து வெளியிடும் நூல்களையும் பருவ
இதழ்களையும், தமிழ்நாட்டு நூலகங்களிலும் கிடைக்குமாறு தமிழக அரசு அந்த
நூல்களையும் இதழ்களையும் ஆண்டு தொறும் வாங்கிடல் வேண்டும் என இம்மாநாடு
வேண்டிக் கொள்கிறது.
9. உலகங்கெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைப் பேணுமாற்றான் தத்தம்
மழலைகளுக்கும் சிறார்களுக்கும் இளவல்களுக்கும் வார இறுதியில், பள்ளிகள்
நடத்தித் தமிழ்மொழி, தமிழ் இசைமற்றும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப்
பயிற்றுவிக்க, நிதி உதவி வழங்கித் தமிழ் அடையாளப் பேணலை ஊக்குவிக்கின்ற
அய்ரோப்பிய, வட அமெரிக்க, ஆசுதிரேலிய பசிபிக் நாடுகளின் அரசுகளுக்கு இந்த
மாநாடு நன்றி தெரிவிக்கின்றது.
|