"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State> Tamil Nadu > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle > ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்
tamil nadu
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிடும் 20 August 2009 [also in PDF]
தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம், மிகப்பெரும் நெருக்கடியையும், அறைகூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுக்காலம் அறவழியிலும் 30 ஆண்டுக்காலம் மறவழியிலும் போராடினார்கள். கடந்த 60 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள். உள்நாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களின் தாயக மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இராணுவச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுப் போதுமான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இளம் பெண்களும், சிறுமிகளும், சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள். தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகளும், சிங்கள குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் இப்போது புத்த பிட்சுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இவ்வாறு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான போர்க் குற்றமாகும். இன அழிப்பு (Genocide), போர்க்குற்றங்கள் (War Crimes), மனித உரிமை மீறல்கள் (Human Rights Violations) என்ற கொடும் குற்றங்களை வரைமுறையற்ற அளவில் - ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தொழிக்கும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் - சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது என்பதை உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டுகிறோம். இட்லரின் ஜெர்மனி யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரசுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கிழக்கு அய்ரோப்பாவில் மட்டும் யூத மற்றும் சிலாவிய இன மக்கள் ஏறத்தாழ 120 இலட்சம் பேர் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப் போல இலங்கையில் இராசபக்சேவின் அரசு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைக்கப்பட்ட நூரம்பர்க் - டோக்கியோ சர்வதேச நீதிமன்றங்கள் இனப்படுகொலை தண்டிக்கத்தக்க மிகப்பெரிய குற்றம் என கூறியுள்ளன. "இனப்படுகொலை" என்ற பெருங்குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்துள்ளது. - தமிழின மக்கள் இரண்டு இலட்சம் பேரை இதுவரை படுகொலை செய்துள்ளது. மே 16 முதல் 18
வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்டு, வன்னி மண்ணே
பிணக்காடாக்கப்பட்டது. இவை அனைத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிக்குழுவினால் (International Penal Tribunal) விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள். இச்செயல்பாடுகள் அனைத்தும் இனப் படுகொலை பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்தின் 3-வது கூறுபடி, (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide - Adopted by Resolution 260 (III)A of the United Nations General Assembly on 9 December 1948) தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும். அய்.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், இனப்படுகொலைத் தடுப்பு - தண்டித்தல் குறித்த சிறப்பு மாநாட்டில் (1948) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உலகத் தமிழர்களாகிய நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அய்.நா. பேரவை கூடி மனித குலத்தின் வாழ்வுரிமையையும், தேசிய இன உரிமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. 90 நாடுகள் இந்த பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏகாதிபத்திய நுகத்தடியில் பிணைக்கப்பட்டுத் தவித்த காலனிய ஆதிக்க நாடுகளுக்கும், மக்களுக்கும் விடுதலை வழங்குவது பற்றிய இந்தப் பிரகடனம் அடிமைப்பட்ட மக்களுக்கான விடுதலைப் பட்டயமாகக் கருதப்பட்டது. அது வருமாறு: அய்.நா. பிரகடனம் (Declaration on Granting Independence to Colonial Countries and Peoples, 1960: General Assembly Resolution 1514 (XV), 14 December 1960) 1. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, சுரண்டுவது ஆகியவை அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். அய்.நா. பட்டயத்திற்கு முரணானதாகும். உலக அமைதிக்கும் கூட்டுறவிற்கும் எதிரானதாகும். 2. அனைத்து மக்களுக்கும் (All Peoples), சுய நிர்ணய உரிமை (Right to Self-determination) உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களது அரசியல் அமைப்பையும், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியையும் குறித்துச் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளலாம். 3. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதைக் காரணமாகக் காட்டி எந்த மக்களுக்கும் சுதந்திரம் அளிப்பதைத் தாமதப்படுத்தக்கூடாது. 4. அடிமைப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து இராணுவ நடவடிக்கைளும் மற்றும் சகலவிதமான ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும். அம்மக்கள் அமைதியாக வாழவும், முழுமையான சுதந்திர உரிமைகளைப் பெறவும் அவர்களின் தாயக மண்ணின் ஒருமைப்பாடு மதிக்கப்படவும் வேண்டும். 5. சுதந்திரம் பெறாத அனைத்து நாடுகளுக்கும், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள முடியாத நாடுகளுக்கும் உடனடியாகவும் எவ்வித நிபந்தனையும் இல்லாமலும் அம்மக்கள் சுதந்திரமாக வெளியிடும் விருப்பப்படி அதிகார மாற்றம் செய்யப்பட வேண்டும். முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க யாருக்கும், இனம், சமயம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தகைய வேறுபாடும் காட்டப்படக்கூடாது. 6. ஓர் தேசிய இனத்திற்குச் சொந்தமான நாட்டின் நில ஒருமைப்பாட்டினையோ, தேசிய ஒற்றுமையையோ முழுமையாக அல்லது பகுதியாகச் சீர்குலைக்கச் செய்யப்படும் முயற்சிகள் அய்.நா. பட்டயத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிரானதாகும். 7. அனைத்து அரசுகளும் நேர்மையாகவும் கண்டிப்பாகவும் அய்.நா. பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், மனித உரிமைக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு ஏற்பவும், இந்தப் பிரகடனத்தின் அடிப்படையிலும் அனைத்து மக்களின் இறைமையான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் தாயக ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். அய்.நா. பேரவை வெளியிட்ட மேற்கண்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென உலகத் தமிழர்களாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம். சிங்கள இனவெறிப் படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து நின்று அய்.நா. அமைப்பினையும் உலக நாடுகளையும் பன்னாட்டு சமுதாயத்தையும் வற்புறுத்திச் செயல்பட வைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக்கோடி தமிழ் மக்களுக்கு பெரும் பொறுப்பும் வரலாற்றுக் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும், ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை நெஞ்சார உணர்ந்து உலகத் தமிழர் பிரகடனத்தை பன்னாட்டு சமுதாயத்தின் முன் வெளியிடுகிறோம். உலகத் தமிழர் பிரகடனம் 1. ஈழத் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும் அதற்கேற்ற அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவை திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். 2. தங்கள் தாயகத்திலும் உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களிலும், வீடுகளிலும், மீண்டும் குடியேறவும் அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம். 3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டுமென அய்.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம். 4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும் அவர்களை ஏவி விட்ட சிங்கள அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம். 5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணைநிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம். 6. அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும் வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும், அந்த மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு, எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம். உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத்தமிழர் சிக்கலுக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்வதற்காக தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி இப்பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற்கொள்வதற்காகவே நாம் கூடி உலகறிய செய்துள்ள இப்பிரகடனம், ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத்தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட முன்வருமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
|