"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State> Tamil Nadu > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle > மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? - Janasakthi
tamil nadu
மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா?
Editorial in Janasakthi - Indian Communist Party Official Daily
[see also
Kottum Mazhaiyil Makkalai Muttaal Akkiya Thalaivan
|
மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? DMK கட்சியின் கோரிக்கை அல்ல மக்களின் வேண்டுகோள்.
29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள். இது தமிழக முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளது. கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால், இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன. நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா? தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோதர சகோதரிகளுக்கு, இயன்ற உதவிகள் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை. விடுதலைப்புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாகப் பயன்படுத்துவதாகக் கூறுவோர். விமானக் குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணைபோகலாமா? இலங்கைத் தமிழர்களான - சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது. எனவே தான், தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள், இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன் வைத்தனர்.
மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள ‘இக்கட்டான நேரம்’ - அதற்குரிய காரணம் தெரியும். தெரிந்தும், எந்த முடிவையாவது நடவடிக்கையாவது எடுத்ததா? சர்வ கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக நேரிடும் என்ற எச்சரிக்கைக்குப் பின் வெளி விவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார். போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற விமானிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்றே கூறினார். எனவே, மத்திய அரசு, தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை. எனவே தான் முதல்வரின் நம்பிக்கை, மக்களுக்கு ஏற்படவில்லை. இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்று தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது? மத்திய அரசு, இலங்கைக்குத் தொடர்ந்து ராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் துணை புரியும், டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை. ஆனால், தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஜபக்சே பிரகடனம் செய்துவிட்ட பிறகு, நீங்கள் கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சாகத் தானே வேண்டும். பட்டினி கிடந்து, குண்டடிபட்டுச் சாகாதே! நன்கு சாப்பிட்டு விட்டுச் சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது. முதலில் குண்டுபோரை நிறுத்தச் சொல்லுங்கள், இல்லையேல் இதுவும் கொடை மடம் என வருணிக்கப்பட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம். இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல்.
|