Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> Tamil Nadu > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle > லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன் > Tamils: a Trans State Nation - Tamil Nadu

Tamils - a Trans State Nation

"ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது
எனது கடமை மட்டுமல்ல உரிமையும் கூட"

லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன்

Courtesy: Tamil Information Service, 1 September 2008

‘‘ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எனது கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. ஈழப் பிரச்னையில் எந்த இயக்கங்களுக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பயணம் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப் போகிறேன். வேறு மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மத்திய அரசோ அந்த மாநில மக்களோ அமைதியாக இருந்து விடுவார்களா? அடிபடுவது தமிழன் என்பதால் இந்த அவமதிப்பா?’’


இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன் பரபரப்பாக இருக்கிறார். காஞ்சீபுரத்தில் டி.ஆர்., கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் மேடையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசியதாக தே-.மு.தி.க. காஞ்சீபுரம் ஒன்றியக் குழு ஏழாவது வார்டு கவுன்சிலர் உமாபதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வரும் டி.ஆரை குறிவைத்தே இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்கின்றனர், ல.தி.மு.க.வினர். இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ஆரை ஹிந்தி பிரசார சபா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகப் போராடி வரும் ‘மனிதம்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் அக்னி சுப்ரமணியனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

கே:பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு யார் காரணம்?

:‘‘இந்தச் சம்பவத்துக்கு முழுக்க முழுக்கக் காரணம், குமுதம் ரிப்போர்ட்டர் தான் என்று சொன்னால் நம்புவீர்களா? ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், ‘ஆட்சியில் இருப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று பேசியதை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியிட்டிருந்தீர்கள். ‘அப்படி பேசவில்லை’ என்று மறுத்தார் விஜயகாந்த். ‘அவரது பேச்சைப் பதிவு செய்திருப்பதாகவும் தேவைப்பட்டால் அதை வெளியிடத் தயார்’ என்ற ரீதியில் குமுதம் ரிப்போர்ட்டர் பதிலடி கொடுத்ததும் எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாகி விட்டார் விஜயகாந்த்.

இந்தச் சம்பவத்தை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த எங்கள் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய நான், ‘வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக காடுவெட்டிக் குருவைக் கைது செய்த அரசு, சுட்டுத் தள்ள வேண்டும் என்ற பேசிய விஜயகாந்தை விட்டு வைத்திருப்பது ஏன்?’ என்று கேட்டேன். இந்த விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல், என்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள்’’

கே:விஜயகாந்தைக் குறி வைத்தே தொடர்ந்து விமர்சனம் செய்கிறீர்கள். இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா?

:‘‘ஜெயலலிதாவுக்கு ‘பெரு வியாதி’ என்று தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தார் விஜகாந்த். ஆனால் தன்னை யாராவது விமர்சனம் செய்தால் தாக்கிக் கொள்ள முடிவதில்லை இவரால். ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய பேச்சுக்கு கன்னடர்களிடம் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் நழுவி வருகிறார். தமிழர்களைப் பற்றிய எந்த அக்கறையும் இவருக்குக் கிடையாது. வீட்டில் மனைவி, மகன்களுடன் தெலுங்கில் பேசிவிட்டு வெளியே வந்து ‘தமிழ், தமிழ்’ என்று கத்தும் விஜயகாந்த் டபுள் ஆக்டிங் போடுகிறார். ஈழத்தில் தினந்தோறும் அடிபடும் தமிழர்கள் பற்றியெல்லாம் இந்த விஜயகாந்துக்கு எந்த அக்கறையும் கிடையாது’’

கே:இப்போது திடீரென்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருக்கிறீர்களே?

:‘‘சரித்திரத் தெரியாமல் பேசாதீர்கள். 1984ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் தி.மு-.க.வில் இணைந்தவன் நான். மாநில சிறுசேமிப்புத் துறை தலைவர் பதவியைக் கூட இலங்கை அரசுக்கு உதவி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, ராஜினாமா செய்தேன். அந்தக் காரணத்தை எனது ராஜினாமா கடித்தத்திலும் பதிவு செய்திருக்கிறேன். சுப.தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டபோது இரங்கல் பா வாசித்த கலைஞர் ஏதோ கொலை குற்றம் செய்து விட்டதைப் போல் காங்கிரஸாரும் ஜெயலலிதாவும் கூச்சலிட்டனர்.

ஆறரைக் கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையில் தினமும் வீடு, வாசல்களை இழந்து அகதிகளாகி வரும் புறநானூற்றுச் சரித்திர நாயகர்களான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீண்ட யாரும் இல்லை. ஈழத் தமிழர்கள் விசயத்தில் மயான அமைதியே தமிழகத்தில் நிலவுகிறது. எதிர்க்கட்சியில் இருந்தால் தமிழீழத்துக்குக் குரல் கொடுப்பதும், ஆளும் கட்சியில் இருந்தால் வசதியாக ஈழத் தமிழர்களை மறந்து விடுவதும் கலைஞரின் நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களின் காயத்துக்கு மருந்து தடவும் நோக்கத்தில் அவர்களுக்கு ஆதரவுக் குரலைப் பதிவு செய்து வருகிறேன்’’

கே:ஈழப் பிரச்னையில் நீங்கள் என்ன சாதித்துவிட முடியும்?

:‘‘சிம்பு என்ற தன்னம்பிக்கை இளைஞனை உருவாக்கிய நான், தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞர்கள் மத்தியில் தமிழுணர்வை வளர்க்கிறேன். இதற்காகவே எனது கூட்டங்களுக்குத் தடை விதிக்கிறது இந்த அரசு. மன்மோகன் சிங் அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது ஈழத் தமிழர்களின் நலனை கோரிக்கையாக வைக்க கலைஞர் தவறியது ஏன்? அரசியலில் எந்தப் பதவியையும் யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், விஜயகாந்த் போன்றவர்களால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்ய முடியாது என்று’’

கே:ஈழப் பிரச்னையில் குரல் கொடுப்பதே, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்ற நிலை இங்குள்ளதே?

:‘‘ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எனது கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. ஈழப் பிரச்னையில் எந்த இயக்கங்களுக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பயணம் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப் போகிறேன். வேறு மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மத்திய அரசோ அந்த மாநில மக்களோ அமைதியாக இருந்து விடுவார்களா? அடிபடுவது தமிழன் என்பதால் இந்த அவமதிப்பா?’’

கே:அரசியலில் உங்கள் அடுத்த மூவ்மெண்ட் என்ன?

:‘‘எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் செய்தவன் நான். அண்ணாநகர், மயிலாடுதுறை, உப்பிலியாபுரம் இடைத் தேர்தல்களில் என் மீது ஏவப்பட்ட வன்முறைகள் பயங்கரமானவை. அ.தி.மு.க.வின் நெகமம் கந்தசாமியை எதிர்த்து, அவரது ஊரிலேயே பிரசாரம் செய்தவன் நான். எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் கலைஞர் கைது செய்யப்பட்டபோது நான் காட்டிய எதிர்ப்பை யாரும் மறந்திருக்க முடியாது.

பழனி தொகுதியில், தி.மு.க.,வையும் அ.தி.மு.க.வையும் ஒரே சமயத்தில் எதிர்த்தவன் நான். இதுபோன்ற பெட்ரோல் குண்டு பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்துவிடுவேன் என்று விஜயகாந்த் போன்றவர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தமிழர்களை உணர்வுள்ள மாவீரர்களாக உருவாக்குவதே இனி எனது அரசியல் பணி’’ என்று தன் தலை முடியை லாவகமாக கோதியபடி முடித்துக் கொண்டார் விஜய டி.ராஜேந்திரன்.
 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home